கோவிட்-19 பேரழிவு குறித்து பொதுமக்களின் கோபம் அதிகரித்து வருகையில், இந்திய அரசாங்கம் இராணுவத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்குகிறது

நேற்று, இந்தியா ஒரு நாள் உச்சபட்சமாக, 3,780 கோவிட்-19 இறப்புக்களை உத்தியோகபூர்வமாக பதிவு செய்தது, ஆனால் பல ஆய்வுகள் COVID-19 இலிருந்து இறக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட மிக அதிகம் என்று கூறுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 நோய்தொற்றுக்களின் சுனாமி எழுச்சியை கட்டுப்படுத்த அதிகாரிகள் முற்றிலும் தவறிவிட்டது குறித்து இந்தியா முழுவதும் பொதுமக்கள் கோபம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அதிவலது, இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சி (BJP) அரசாங்கமும், நோயைக் கட்டுப்படுத்தும் சாக்கில் இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்குகின்றனர். எவ்வாறாயினும், பாஜக வின் முக்கிய அக்கறை வைரஸை கட்டுப்படுத்துவதில் இல்லை. தொற்றுநோய் விவகாரத்தை இது குற்றகரமாக, தவறாக கையாள்வது குறித்த, மற்றும் “முதலீட்டாளர்-சார்பு” சீர்திருத்தங்களை மேம்படுத்துவதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை “புதுப்பிக்க” அழுத்தம் கொடுப்பது குறித்த சமூக எதிர்ப்பை நசுக்குவதற்கு தயாராக இது இராணுவத்தை வலுப்படுத்துவதோடு, அதன் பொது கௌரவத்தை அதிகரித்து வருகிறது.

நேற்று, இந்தியா ஒரு நாள் உச்சபட்சமாக, 3,780 கோவிட்-19 இறப்புக்களை உத்தியோகபூர்வமாக பதிவு செய்தது, அதே நேரத்தில் தொற்றுநோயின் ஆரம்பத்திலிருந்து இதுவரை பதிவான நோய்தொற்றுக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 20 மில்லியனை விஞ்சியது. இதில், 7.75 மில்லியனுக்கு அதிகமான அல்லது 40 சதவிகிதத்திற்கு நெருக்கமான நோய்தொற்றுக்கள் ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து தான் பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், நீண்டகாலமாக நிலவும் பரிசோதனை பற்றாக்குறை மற்றும் இந்தியாவின் மிகவும் பாழடைந்துபோன சுகாதாரப் பாதுகாப்பு முறை ஆகியவற்றின் காரணமாக கோவிட்-19 இறப்புக்கள் மற்றும் நோய்தொற்றுக்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கைகள் பேரழிவின் உண்மையான அளவை பரவலாக குறைத்து மதிப்பிடுவதாகவே தோன்றுகிறது.

மே 5, 2021, புதன்கிழமை, இந்தியாவின் பெங்களூருவின் புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு கிரானைட் குவாரியில் அமைக்கப்பட்ட ஒரு திறந்தவெளி தகன மையத்தில் கோவிட்-19 ஆல் இறந்தவர்களின் உடல்களை சிதையிலிட்டு இறுதி சடங்குகளை முடித்து அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வெளியேறுகின்றனர் (AP Photo/Aijaz Rahi)

கோவிட்-19 நோயாளிகளை தனிமைப்படுத்தி, சிகிச்சையளிக்க தேவையான வசதிகளையும் மருத்துவமனைகளையும் அமைத்து அவற்றை இயக்குவதற்கு ஏதுவாக ஆயுதப்படைகள் “அவசரகால நிதியை” அணுக பாஜக அரசாங்கம் அதற்கு ஏப்ரல் 30 அன்று அனுமதி வழங்கியது. அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைவர் (Chief of Integrated Defence Staff), பணியாளர் குழுவின் தலைவர்கள் (Chairman Chiefs of Staff Committee-CISC) மற்றும் கட்டளையக தலைவர்களின் அதிகாரி (Office Commanding-in-Chiefs-GOC-in-Cs) மற்றும் மொத்த முப்படை சேவைகளுக்கு சமமானவர்களும் உட்பட, ஆயுதப்படைகளின் துணைத் தலைவர்களுக்கு மே 1 முதல் இந்த அதிகாரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டின் கீழ், கோவிட் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சைக்கான வசதிகளை அமைக்க சைனியப் பிரிவு / பகுதி சார் தளபதிகள் ஒரு நோய்தொற்றுக்கு ரூபாய் 50 இலட்சம் நிதியை (அதாவது 67,675 அமெரிக்க டாலர்) மற்றும் பிரிவு/துணைப் பகுதி தளபதிகள் ஒரு நோய்தொற்றுக்கு ரூபாய் 20 இலட்சம் நிதியை தற்போது பெற்றுக்கொள்ள முடியும்,” என்று இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

இந்தியாவின் மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு கொண்ட மருத்துவமனைகளுக்கு கூடுதல் வளங்களை செலவிட மறுக்கும் அதேவேளை, இந்நாட்டின் அரசாங்கம் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான நிதியை ஆயுதப்படைகளின் வசம் ஒப்படைக்கிறது.

பாஜக அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கின் மீதான தொழிலாள வர்க்க கோபம் தொற்றுநோய்க்கு முன்னர் இருந்தே வளர்ச்சியடையத் தொடங்கியது. கடந்த ஆண்டு, ஜனவரி மற்றும் நவம்பர் மாதங்களில் நடந்த இரண்டு பொது வேலைநிறுத்தங்கள், மோடி தலைமையிலான பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான தாக்குதல் ஆகியவற்றை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை வீதியில் இறங்கி போராட வைத்தன. சமீபத்திய மாதங்களில், கர்நாடகாவில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் டொயோட்டா வாகனத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தங்கள், மற்றும் மோடி அரசாங்கத்தின் வேளாண்வணிக சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நூறாயிரக்கணக்கான விவசாயிகள் பல மாதங்களாக நீடிக்கும் போராட்டத்தை நடத்தி வருவது உட்பட, பல தொடர்ச்சியான போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்கள் நடத்தப்பட்டுள்ளன.

வேகம், வறிய ஊதியங்கள், தனியார்மயமாக்கம் மற்றும் ஆபத்தான ஒப்பந்த தொழிலாளர் முறை ஆகியவை குறித்து எழுச்சி காணும் தொழிலாளர்களின் போராட்டங்கள், சுகாதாரப் பாதுகாப்பு முறையின் சீர்குலைவு குறித்த கோபத்தால் அது தொடர்பாக தலையிடலாம், மேலும் அவை தீவிரமடையலாம் என்று பாஜக அரசாங்கமும் ஆளும் உயரடுக்கினரும் அதிக கவலை கொண்டுள்ளனர். 225 மில்லியன் குடியிருப்பாளர்கள் வசிக்கும் இந்தியாவின் மிகஅதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் (UP) பாசிச பாஜக முதலமைச்சரான யோகி ஆதித்யநாத், குறிப்பிட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதான ஏப்ரல் 25 ஆம் தேதிய காணொளி கூட்டத்தில், “ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி நோயாளிகளை வெளியேற்றும் அல்லது அத்தகைய நெருக்கடி குறித்து ஊடகங்களில் புகார் கூறும்” மருத்துவமனைகளை “நிர்மூலமாக்க” மூத்த நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார். இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் (சட்டம் ஒழுங்கு), பிரசாந்த் குமார், “பீதியை உருவாக்கும்” வகையில் சமூக ஊடகங்களில் “தவறான தகவல்கள்” பகிரப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டு மாநிலத்திலுள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பினார். மேலும், அவர்கள் “சமூகத்தின் கட்டுக்கடங்காத கூறுகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கோரினார்.

ஹிந்து செய்தியிதழின் கூற்றுப்படி, ஏப்ரல் 25 நிலவரப்படி, இதுபோன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் 42 பேரை உத்தரப்பிரதேச பொலிசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இவர்களில் ஒருவரான 26 வயது சஷாங்க் யாதவ், இறக்கும் நிலையிலுள்ள தனது தாத்தாவுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட வேண்டும் என்று ட்விட்டரில் வெளிப்படையாக தனது கோரிக்கையை பதிவிட்டிருந்தார். ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து “வதந்திகளை” பரப்பியதாக இவர் மீது உத்திரப்பிரதேச பொலிசார் குற்றம்சாட்டினர். இவர் மீது சுமத்தப்படும் இந்த குற்றம் “வேண்டுமென்றே குற்றம் சுமத்தும்… அச்சுறுத்தும் அல்லது எச்சரிக்கை விடுக்கும் நோக்கம் கொண்டது.”

“வதந்திகள்,” என்பதைத் தாண்டி, ஆக்ஸிஜன் பற்றாக்குறை பற்றிய அறிக்கைகள் அனைத்தும் இந்தியா முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களைப் பொறுத்த வரை மிகவும் யதார்த்தாமானது. காலம் கடந்த ஆக்ஸிஜன் விநியோகங்களால், சமீபத்திய வாரங்களில் மருத்துவமனை பிரிவுகளில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இறக்க நேரிட்டுள்ளது.

இந்த திகிலூட்டும் முன்னேற்றங்கள், மற்றும் தகன மைதானங்கள் நிரம்பிவழிவது மற்றும் வீதிகளில் இறந்த உடல்களை குவித்து வைப்பது போன்ற அவற்றின் கசப்பான விளைவுகளைப் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை தடுக்க பாஜக அரசு முயற்சிக்கிறது.

உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய நகரமான கான்பூரின் மாவட்ட நீதிபதி, உள்ளூர் இந்தி மொழி செய்தியிதழான அமர் உஜாலாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார், இது, ஏப்ரல் 23 அன்று நகரத்தில் அதிகப்படியான இறப்புக்கள் நேர்ந்ததாக இந்த இதழ் வெளியிட்ட அறிக்கை “தவறான வழிநடத்துதலாகும்” என்று கண்டித்தது. “இந்த கதைக்கு விளக்கம்” தரப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கோரினர். “ஏப்ரல் 22 அன்று மாவட்டத்தின் பல்வேறு தகன மைதானங்களில் 476 உடல் தகனங்கள் நடந்தன” என்று அமர் உஜாலா செய்தி வெளியிட்டிருந்ததாக Wire செய்தி தளம் விளக்கமளித்தது. இருப்பினும், மாநில அரசின் அன்றைய புள்ளிவிபரங்கள் “ஒன்பது கோவிட் இறப்புக்கள் மட்டுமே” ஏற்பட்டிருந்ததாகக் காட்டின.

வரிசையாக எரிந்து கொண்டிருக்கும் சிதைகள், நெரிசல் மிகுந்த தகன மையங்கள் மற்றும் துயரமடைந்தவர்களின் பெரும் கூட்டங்கள் பற்றிய ஏராளமான நகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலிருந்து வரும் செய்திகளும், அத்துடன் சுகாதார வல்லுநர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கணிசமான மற்றும் அதிகரித்து வரும் புள்ளிவிபர ஆய்வுகளும், வெளியிடப்படும் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை ஒரு கோரமான குறைமதிப்பீடு என்பதை தெளிவுபடுத்துகின்றன. பைனான்சியல் டைம்ஸின் ஒரு பகுப்பாய்வு, இந்தியாவின் “இரண்டாவது அலையின்” போதான கோவிட் இறப்புக்கள் உத்தியோகபூர்வ எண்ணிக்கையை போல எட்டு மடங்கு அதிகம் இருக்கலாம் என்று கூறியது. கடந்த மாதம், இந்தியா உத்தியோகபூர்வமாக 45,862 இறப்புக்களை பதிவு செய்தது, இது ஏப்ரல் 30 நிலவரப்படி தொற்றுநோய் காலம் முழுவதிலுமான இந்தியாவின் ஒட்டுமொத்த இறப்புக்களில் 22 சதவிகிதமாகும்.

ஏப்ரல் 28 ஆம் தேதி பிற்பகுதியில், பேஸ்புக் உலகெங்கிலுமுள்ள அதன் பயனர்கள் “ResignModi” ஹேஷ்டேக் உள்ளடக்கத்தை தேடுவதைத் தற்காலிகமாக தடுத்தது. பேஸ்புக் பயனர்களின் விமர்சனங்கள் அதிகரித்ததற்கு மத்தியில், இந்த பெரும் சமூக ஊடகம் தடையை நீக்கியது. இது குறித்து, செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் இது “தவறாக” நிகழ்ந்தது என்றும், மோடி அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லை என்றும் கூறினார். உலகெங்கிலுமுள்ள முதலாளித்துவ அரசாங்கங்களுடன் இணைந்து தணிக்கையில் ஈடுபடுவதில் பேஸ்புக்கின் மோசமான பங்கு ஒருபுறமிருந்தாலும், இந்த மறுப்பு அதன் மீதான நம்பகத்தன்மையை நீட்டிக்கச் செய்துள்ளது.

ஹரித்வாரில் மில்லியன் கணக்கான பக்தர்களை ஈர்க்கும் உலகின் மிகப்பெரிய மத விழாவான, கும்பமேளாவை பிரதமர் கையாண்ட விதத்தை விமர்சிக்கும் அனைத்து ட்வீட்களையும் நீக்குமாறு மோடி அரசாங்கம் ட்விட்டரை கேட்டதாக வெளி வந்த தகவல்களுடன் பேஸ்புக்கின் நடவடிக்கையும் ஒத்துப்போனது. மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கைகள் விடுத்திருந்தும், திருவிழாவை தொடர்ந்து நடத்த மோடி அனுமதித்தமை பெரியளவில் வைரஸ் வெடித்துப் பரவும் சூழலை விளைவித்தது.

பாஜக அரசாங்கம் இராணுவத்திற்கு வழங்கியுள்ள அதிகரிக்கப்பட்ட பங்கு, எதிர்க் கட்சியான காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் உட்பட, தொடர்ச்சியான அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட இந்திய ஆயுதப் படைகளின் பரந்த விரிவாக்கத்தை மேலும் தொடர்வதாக உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPM) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) போன்ற பிரதான ஸ்ராலினிச பாராளுமன்றக் கட்சிகளும் கூட, இந்தியா அதன் புவிசார் அரசியல் போட்டியாளர்களான பாகிஸ்தான், மற்றும் அனைத்திற்கும் மேலாக சீனாவை எதிர்ப்பதற்கு இந்தியாவின் இராணுவ வலிமை அதிகரிக்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளன.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் கருத்துப்படி, 72.9 பில்லியன் டாலர் மதிப்பிலான மிகப்பெரிய இராணுவ வரவு-செலவுத் திட்டத்துடன் 2020 ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பாதுகாப்பு செலவாளியாக இந்தியா இருந்தது. கோவிட்-19 க்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானாலும், கடந்த வசந்த காலத்தில் முழு அடைப்பின் போது அரசாங்கத்தின் நிதியுதவி எதுவும் கிடைக்காத காரணத்தால் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் கடும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையிலும் கூட, இந்தியா தனது பாதுகாப்பு செலவினங்களை 2.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

வாஷிங்டனுடனான சீன எதிர்ப்பு இராணுவ-மூலோபாய கூட்டணி உட்பட, இந்தியாவின் சூறையாடும் பிராந்திய மற்றும் பூகோள அளவிலான வல்லரசாகும் அபிலாஷைகளை உயர்த்தி பிடிப்பதற்கு அதிகரித்தளவிலான இராணுவச் செலவுகள் அவசியம் என்று அனைத்து ஸ்தாபகக் கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கு முரணாக, சுகாதாரப் பாதுகாப்புக்கான செலவினங்களை அவர்கள் போர் ஆயுதங்களை கொள்முதல் செய்யவோ அல்லது நிதிய உயரடுக்கை செழிப்பாக்கவோ பயன்படுத்தக்கூடிய வளங்களின் வடிகாலாக பார்க்கின்றனர். இதனால் தான், தேசிய மற்றும் அனைத்து மாநில அரசாங்கங்களும் சேர்ந்து, சமீபத்திய தசாப்தங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவிகிதத்திற்கும் குறைவான நிதியையே சுகாதாரத்திற்காக செலவிட்டுள்ளது.

இந்தியாவின் மில்லியன் கணக்கான மக்கள் தங்களது சொந்த விதியை அனுபவிக்கும் வகையில் மோடி அரசாங்கமும் இந்திய ஆளும் உயரடுக்கினரும் கைவிட்டுவிட்டனர் என்பதை அதிகரித்தளவில் உணர்ந்து வருகின்றனர். ஆக்ஸிஜன், செயற்கை சுவாச வசதிகள், படுக்கைகள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால் மருத்துவமனைகள் தங்களது கதவுகளை மூடிக்கொள்ளும் நிலையிலும், மற்றும் இறந்த தங்களது அன்புக்குரியவர்களை அடக்கம் செய்ய அல்லது தகனம் செய்ய எந்த வழியும் இல்லாமல் நம்பிக்கையிழந்து உறவினர்கள் தவிக்கும் நிலையிலும், மோடி மற்றும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் மீதான சமூக கோபம் ஒரு கொதிநிலையை எட்டிக் கொண்டிருக்கிறது.

பேரழிவை ஏற்படுத்தி வரும் பெருந்தொற்று எழுச்சியின் ஆபத்து குறித்த தொற்றுநோயியல் நிபுணர்களின் எச்சரிக்கைகளை மோடியும் பாஜக அரசாங்கமும் வேண்டுமென்றே புறக்கணித்துள்ளனர், ஏனென்றால் அப்போது தான் அவர்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை “திறந்து” வைத்திருக்க முடியும் என்பதுடன், பெருநிறுவன இலாபங்களையும், நாட்டின் 130 க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்களின் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்க முடியும் என்பது பற்றி அதிகரித்தளவில் புரிந்துகொள்ளப்படுகிறது.

ஜனவரி பிற்பகுதியில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில், “கொரோனாவை திறம்பட கட்டுப்படுத்தியதன் மூலம் மனித குலத்தை ஒரு பெரும் பேரழிவில் இருந்து இந்தியா காப்பாற்றியுள்ளது” என்று மோடி வலியுறுத்தினார். பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நோய்தொற்று விகிதங்கள் கடுமையாக அதிகரித்து வந்தும், பேரழிவு குறித்து அரசாங்கத்தின் சொந்த ஆலோசனை குழுக்களை சுகாதாரத்துறை நிபுணர்கள் அதிகரித்தளவில் எச்சரித்திருந்தும், எந்தவித புதிய பொது சுகாதார கட்டுப்பாடுகளையும் விதிக்க பாஜக அரசு தொடர்ந்து மறுத்துவிட்டது.

ஏப்ரல் 20 முதல் நாளாந்த இறப்பு எண்ணிக்கை 2,000 க்கு அதிகமாகவும் மற்றும் நாளாந்த நோய்தொற்றுக்கள் 300,000 க்கு நெருக்கமாகவும் பதிவான நிலையில், மோடி தேசத்திற்கு ஆற்றிய ஒரு உரையில், “இந்தியாவை பூட்டுதலில் இருந்து காப்பாற்ற வேண்டியது தான்” அவசியம், மாறாக கோவிட்-19 நோய்தொற்றிலிருந்து அல்ல என்று அறிவித்தார். இரண்டு வாரங்கள் சென்ற பின்னர், மேலும் மில்லியன் கணக்கில் நோய்தொற்றுக்கள் பரவியும், வைரஸின் பல்வேறு புதிய, அதிக தொற்றும் தன்மை கொண்ட, மற்றும் ஆபத்தான திரிபு வகைகள் பற்றி அறிக்கைகள் வெளி வந்தும் கூட, அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுவதற்கு அரசாங்கம் பிடிவாதமாக தொடர்ந்து மறுத்தது.

மோடி அரசாங்கம், மனித உயிர்களைப் பாதுகாப்பதை விட இந்தியாவின் தொழிலதிபர்கள் மற்றும் நிதிய உயரடுக்கின் இலாபங்களுக்கே முன்னுரிமை அளித்து வரும் அதன் கொலைகார மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒருசில வரையறுக்கப்பட்ட மேம்பாடுகளைக் கூட பெரும்பாலும் கைவிட்டுவிட்டது. ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள், தீவிர சிகிச்சைப் படுக்கைகள் மற்றும் செயற்கை சுவாச வசதிகள் ஆகியவற்றின் எண்ணிக்கைகள் குறித்த அரசாங்கத்தின் தரவை பகுப்பாய்வு செய்த இந்தியா டுடே இன் மே 4 ஆம் தேதிய அறிக்கை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும் (அதாவது இந்தியா கொரோனா முதல் அலையின் உச்சத்தைத் தொட்ட காலத்திற்கும்) மற்றும் ஜனவரி மாத இறுதிக்கும் (இரண்டாவது அலை தொடங்குவதற்கு சற்று முன்னைய காலத்திற்கும்) இடையில் இந்த மருத்துவ வசதிகளின் “கடுமையான குறைபாடு” ஏற்பட்டுள்ளது பற்றி சுட்டிக்காட்டியது.

Loading