முன்னோக்கு

முன்னாள் UAW தலைவர் டென்னிஸ் வில்லியம்ஸின் தண்டனையும் மற்றும் சாமானியத் தொழிலாளர்கள் குழுக்களின் தேவையும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த வார தொடக்கத்தில் டெட்ராய்டில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில், 2014 முதல் 2018 வரை UAW தலைவராக இருந்த டென்னிஸ் வில்லியம்ஸ் தொழிற்சங்க நிதியை மோசடி செய்ததற்காக இரண்டு ஆண்டுகள் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று மத்திய அரசின் வழக்குத்தொடுனர்கள் வாதிட்டனர்.

பாம் ஸ்பிரிங்ஸ், கலிபோர்னியா மற்றும் பிற இடங்களில் நடைபெற்ற “தொழிற்சங்க மாநாடுகளுக்கான” செலவை திருப்பிபெறப்பட்டதன் மூலம் தொழிற்சங்க சந்தா பணத்தை வில்லியம்ஸ் மற்றும் பிற உயர் அதிகாரிகள் எவ்வாறு மறைத்தார்கள் என்பதை அரசு வழக்குத்தொடுனர்கள் தாக்கல் செய்த தண்டனை குறிப்பு விபரமாக குறிப்பிடுகின்றது. மூன்று முதல் ஐந்து நாட்கள் நீடிக்கும் மற்றும் உள்ளூர் தொழிற்சங்க தலைவர்களை பயிற்றுவிப்பதற்காக நடத்தப்பட்ட இந்த மாநாடுகள், வில்லியம்ஸ் மற்றும் அவரது சக நிர்வாகிகளால் "அனைத்து செலவுகளும் செலுத்தப்பட்ட விடுமுறையாக" பயன்படுத்தப்பட்டன. அவர்கள் நான்கு மாதங்கள் வரை தங்கள் வில்லாக்களில் தங்கியிருந்து, "கோல்ஃப் மைதானங்கள், உணவகங்கள் மற்றும் பிற இடங்களில் மாநாடுகளின்போதும், முன்னும், அதற்குப் பின்னரும் கணிசமான தொகை கட்டணங்களைக் குவித்தனர்."

ஜனாதிபதி ட்ரம்புடன் ஜி.எம். தலைமை நிர்வாக அதிகாரி மேரி பார்ரா, இடது, மற்றும் UAW தலைவர் டென்னிஸ் வில்லியம்ஸ், மார்ச் 15, 2017 (AP Photo/Evan Vucci)

இதில் டிசம்பர் 31, 2016, பாம் ஸ்பிரிங்ஸில் உள்ள LG இன் Prime Steakhouse புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. அங்கு உயர்மட்ட UAW அதிகாரிகள் “ஆயிரக்கணக்கான டாலர் மதுபானம், ஒயின் மற்றும் வில்லியம்ஸின் மனைவியின் விஷேட கோரிக்கையின் படி நான்கு பாட்டில்கள் ஷாம்பெயின் (இதற்கு மட்டும் $1,760 செலவாகும்) பயன்படுத்தப்பட்டது” என்று தண்டனை குறிப்பு கூறுகிறது.

வழக்குரைஞர்கள் அபராதம் மற்றும் 24 மாத சிறைத்தண்டனை பரிந்துரைக்கின்றனர், இது குறைந்தபட்ச பாதுகாப்பு “கிளப் ஃபெட்” வகை வெள்ளை காலர் வசதியில் இருக்கலாம். எந்தவொரு தண்டனையும் இறுதியில் ஒப்படைக்கப்பட்டாலும், அது முழு இரண்டு வருடங்களுக்கும் குறைவாகவே இருக்கும்.

வழக்குத்தொடுனர்கள் சற்றும் பொருத்தமற்ற சிறியளவிலாளன அபராதத்தையும் 24 மாத சிறைத் தண்டனையையும் பரிந்துரைக்கின்றனர். பெரும்பாலும் இது ஒரு வசதிபடைத்த அதிகாரிகளுக்கான “Club Fed” என்றழைக்கப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு கட்டுப்பாடுள்ள பொருளாதார குற்றவாளிகளுக்குரிய நிலையமாக இருக்கும். இறுதியில் வழங்கப்பட்ட தண்டனை எதுவாக இருந்தாலும், அவர் முழு இரண்டு ஆண்டுகளை விட மிகக் குறைவாகவே அதனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

வில்லியம்ஸின் தண்டனையானது முன்னாள் UAW தலைவர் கேரி ஜோன்ஸ் மற்றும் துணைத் தலைவர் நோர்வுட் ஜுவல் உள்ளிட்ட 15 நபர்கள் தண்டிக்கப்படுவதற்கு வழிவகுத்த உயர் UAW நிர்வாகிகள் பற்றி பல ஆண்டுகளாக நடந்த மத்திய அரசின் விசாரணையின் சமீபத்திய அத்தியாயமாகும். விசாரணையில் வெளிவந்தவற்றில், வாகன தொழிலாளர்களினால் நிர்வாகத்திற்கு விட்டுக்கொடுப்புகளை கொண்ட ஒப்பந்தங்களை திணிப்பதில் அவர்களின் பங்கிற்கு ஈடாக UAW இலஞ்சம் வாங்கியது. கடந்த ஆண்டு பிற்பகுதியில், நீதித்துறை ஒரு சில போலி சீர்திருத்தங்களுக்கு ஈடாக விசாரணையை நிறுத்துவதாக அறிவித்தது.

வாகன தொழிலாளர்கள் மீது ஏற்பட்ட பேரழிவோடு ஒப்பிடுகையில் வில்லியம்ஸ் மற்றும் சதித்திட்டத்தில் ஈடுபட்ட பிற நிர்வாகிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை மங்கிப்போகின்றது. மேலும், வில்லியம்ஸ், கேரி ஜோன்ஸ் மற்றும் ஒரு சில குற்றவாளிகள் வெளியேறுவது பெருநிறுவன நிர்வாகத்தின் நேரடி கருவியாக செயல்படும் UAW இன் தன்மையை மாற்ற எதுவும் செய்யாது.

வழக்குத்தொடுனர்கள் தண்டனைக் குறிப்பில் 2015 ஆம் ஆண்டில் ஒரு டெட்ராய்ட் தொழிலாளர் விழா உரையில் வில்லியம்ஸ் தொழிற்சங்க உறுப்பினர்களிடம் 'தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் வோல் ஸ்ட்ரீட்' ஆகியோருக்கு அவர்களுக்கு உரியதை பெறுவதில் எவ்வித பிரச்சனையும் இல்லை எனவே 'நாங்கள்' எங்களுக்கு உரியதை பெறுவதில் தவறாக எதையும் உணரக்கூடாது' என்று குறிப்பிட்டதாக எழுதியது.

"அவர்கள் அவர்களுக்கு உரியதை பெற உதவிய ‘நாங்கள்’ என்பது அவர் உட்பட உயர்மட்ட தொழிற்சங்க அதிகாரிகள்” என்று வழக்குத்தொடுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது உண்மை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது வில்லியம்ஸையும் இன்னும் சில ஊழல் அதிகாரிகளையும் உள்ளடக்கியது என்று தொழிலாளர்கள் நினைக்க வேண்டும் என்று நீதித்துறை கருதுகிறது. உண்மையில், UAW மற்றும் AFL-CIO நிர்வாகிகள் பல தசாப்தங்களாக தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும் வோல் ஸ்ட்ரீட்டிற்கும் செல்லும் வருமானத்தின் பங்கை அதிகரித்து அதில் தங்களுக்கு ஒரு பங்கினைப் பெற்றுள்ளனர். இந்த செயல்பாட்டில், "தொழிற்சங்கங்கள்" ஒரு வணிகமாக மாறியுள்ளன. இது அமெரிக்காவின் மேல்மட்ட 3 சதவிகிதத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மற்றும் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதால் பயனடைகின்ற கூட்டுழைப்புவாத அதிகாரிகளால் தலைமை தாங்கப்படுகின்றது.

1970 களின் நடுப்பகுதியில், தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மீது ஒரு அளவிலான செல்வாக்கை செலுத்த முடியும் என்றும் "தொழிற்சங்க அதிகாரத்துவத்தின்" வருமானம் மற்றும் வாழ்க்கை முறைகள் ஏதோ ஒரு வழியில் முன்னைய போரட்டங்களில் வென்ற தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் வாதிடக்கூடியதாக இருந்தது. இது 1979-80ல் கிறைஸ்லர் பிணை எடுப்பு மற்றும் UAW வின் தொழிற்துறை அழிப்பு செயல்பாட்டின் மூலம் அடிப்படையாகவே மாறியது. இது அடுத்த மூன்று தசாப்தங்களில் 1979 இல் 1.5 மில்லியனிலிருந்து 2009 இல் 300,000 ஆக தொழிற்சங்க உறுப்பினர்களின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

1980 களின் முற்பகுதியில் UAW முதலாளிகளுக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் கைவிட்டு, "தொழிலாளர்-மேலாண்மை கூட்டு" என்ற கூட்டுழைப்புவாத கோட்பாட்டை முழுமையாக ஏற்றுக்கொண்டது. பெருநிறுவன இயக்குநர்கள் குழுவில் பதவிகள், நிறுவன நிதியுதவி பெற்ற பயிற்சி நிதிகள், பங்குகள் மற்றும் பிற முதலீட்டு கருவிகளில் பில்லியன்கள், மற்றும் வேலைநிறுத்தங்களை தவிர்த்துவிட்டன வேலைநிறுத்த நிதியை கொள்ளையடிப்பது மூலம், உண்மையில் UAW பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிய தொழிலாளர்களில் இருந்து அவை முற்றிலும் துண்டிக்கப்பட்டு அவர்களின் ஊதியங்கள் மற்றும் சலுகைகளின் வீழ்ச்சிக்கு நேர்மாறான விகிதத்தில் உயர்ந்தன.

வில்லியம்ஸின் சொந்த வாழ்க்கை UAW இன் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. தண்டனையின் குறிப்பு, வில்லியம்ஸை UAW சர்வதேச நிர்வாகக் குழுவின் தரவரிசையில் உள்ள ஒரு "நிறுவனம்" என்று குறிப்பிடுகிறது. அவர் 2001 ஆம் ஆண்டில் சிகாகோவை தளமாகக் கொண்ட UAW பிராந்திய 4 இன் இயக்குநராக இருந்து 2010 இல் UAW இன் செயலாளர்-பொருளாளராக இருந்து, நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் தலைவர் பதவியைப் பெற்றார். 1983 முதல் 2014 வரை வில்லியம்ஸ் வென்ற ஒவ்வொரு தேர்தலிலும் அவர் எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1986-87 ஆம் ஆண்டில் UAW Local 806 இன் பேரம் பேசும் தலைவராக வில்லியம்ஸ் இருந்து கனரக உபகரண உற்பத்தியாளர் Case IH உடன் ஒரு ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்த உதவியபோது, இந்தியானா, அயோவா மற்றும் இல்லினோய்ஸில் உள்ள ஆலைகளை மூடுவதற்கும், 1,500 வேலைகளை அழிக்கவும் அனுமதித்தார். 2004 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில், அவர் Caterpillar உடன் ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தை நடத்தினார். இது முதலாளிகளால் செலுத்தப்படும் ஓய்வூதிய திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, தொழிலாளர்கள் மீது 20 சதவீத சுகாதாரப் பங்கை செலுத்துவதை விதித்து, ஆலை மூடல் அனுமதித்து மற்றும் புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதியத்தை "சந்தை அடிப்படையிலான" ஊதிய விகிதங்களுக்கு குறைத்தது. 2006 ஆம் ஆண்டளவில், டிரக் உற்பத்தியாளர் Navistar இயக்குநர்கள் குழுவில் ஆண்டுக்கு 120,000 டாலர் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டார். ஒரு தசாப்தத்திற்கு முந்திய ஒரு UAW ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், Navistar தொழிலாளர்களுக்கான தனது ஓய்வூதியப்பணம் பங்கை செலுத்தும் கடமைகளை கைவிட அனுமதித்தது.

UAW இன் உதவியுடன், GM, Ford மற்றும் Chrysler க்கான தொழிலாளர் செலவுகள் 1999 மற்றும் 2014 க்கு இடையில் பாதியாகக் குறைக்கப்பட்டன. மேலும் ஒரு வாகனத்திற்கான செலவு வரலாற்றில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இது பல்லாயிரக்கணக்கான வேலை இழப்புகள் மற்றும் இரண்டு அடுக்கு ஊதிய முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் நிறைவேற்றப்பட்டு, புதிய பணியாளர்களின் ஊதியத்தை 50 சதவிகிதம் குறைத்தது.

கிறைஸ்லர் தொழிலாளர்கள் ஆரம்பத்தில் 2 முதல் 1 என்ற வித்தியாசத்தில் நிராகரித்த வில்லியம்ஸ் மேற்பார்வையிட்ட 2015 ஒப்பந்தம், ஆரம்ப ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு 17 டாலருக்கும் குறைவாகவே தக்க வைத்துக் கொண்டது. மேலும் அதிக ஊதியத்தை அடைய புதிய பணியாளர்கள் எட்டு ஆண்டுகள் வேலை செய்ய தேவைப்பட்டது. மேலும் அதிக சுரண்டப்பட்ட தற்காலிக பகுதிநேர ஊழியர்களின் எண்ணிக்கையை பெரிதும் அதிகரித்தது (TPTs). அவர்களது வேலை பாதுகாப்பு இல்லாதிருந்தபோதும், அவர்கள் தொழிற்சங்க சந்தாப்பணத்தை செலுத்த வேண்டியிருந்தது.

ஜனநாயகக் கட்சியை சுற்றியுள்ள போலி-இடது அமைப்புகளிடையே உள்ள உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களுக்கான பல்வேறு வக்காலத்து வாங்குபவர்கள் ஒருபோதும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உண்மையான பங்கையும் அவற்றைக் கட்டுப்படுத்தும் சமூக நலன்களையும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் தொழிலாளர்களுடனான அவர்களின் உண்மையான உறவையும் ஆராய ஒருபோதும் கவனத்திற்கு எடுத்ததில்லை.

UAW என்றால் என்ன? ஒரு பழமொழி கூறுவது போல் பணத்தின் பின்னால் ஓடு என்றை அர்த்தப்படுகின்றது. அமெரிக்க தொழிலாளர் துறைக்கு சமீபத்தில் தாக்கல் செய்த தகவலின்படி, 2020 ஆம் ஆண்டில் UAW 1.12 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டிருந்தது. இதில் அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் 217 மில்லியன் டாலர் மற்றும் பெயரிடப்படாத முதலீடுகள் 727 மில்லியன் டாலர்கள் அடங்கும். இது தொழிலாளர்களிடமிருந்து 170 மில்லியன் டாலர் சந்தாப்பணத்தையும், 76.2 மில்லியன் டாலர் வட்டி. மற்றும் 30 மில்லியன் டாலர் "பிற வருமானங்களினால்" வசூலித்தது. அதன் திட்டமிடப்பட்ட வருமானத்தில் முறையே 5.2 மில்லியன் மற்றும் 2.4 மில்லியன் ஆகியவை GM பயிற்சி மையம் மற்றும் Ford பயிற்சி மையத்திலிருந்து பெறுவதும் அடங்கும்.

286.4 மில்லியன் டாலர் அதன் "செலுத்தமதிகளில்" 6.1 மில்லியன் டாலர்கள் மட்டுமே வேலைநிறுத்த உதவிகளுக்கு சென்றன. மேலும் 90 மில்லியன் டாலர் "பிரதிநிதித்துவ நடவடிக்கைகளுக்கு" மற்றும் 76 மில்லியன் டாலர் "முதலீடுகள் மற்றும் நிலையான சொத்துக்களை வாங்குவதற்காக" சென்றது. கூடுதலாக, தலைவர் ரோரி கேம்பிள் (244,772$), செயலாளர் பொருளாளர் ரேமண்ட் கூறி (236,608$), துணைத் தலைவர் டெர்ரி டிட்ஸ் (231,614$) மற்றும் துணைத் தலைவர் சிண்டி எஸ்ட்ராடா (220,506$) மற்றும் 9A பிராந்திய இயக்குநர் பெவர்லி பிரேக்மேன் ($218,445) உட்பட அதன் முதல் 14 அதிகாரிகளுக்கு இது கடந்த ஆண்டு 3 மில்லியனை செலுத்தியது.

அவர்களின் சலுகை பெற்ற பதவிகளைப் பாதுகாக்க, UAW நிர்வாகிகள் வர்க்கப் போராட்டத்தை அடக்க வேண்டும். அதனால்தான், கடந்த வாரம் 3,000 Volvo பாரவூர்தி தொழிலாளர்களின் இரண்டு வார வேலைநிறுத்தத்தை நிறுத்துமாறு ரேமண்ட் கூறி ஒப்பந்தம் மீது வாக்களிக்காமல் அல்லது விட்டுக்கொடுப்பு ஒப்பந்தத்தைக் கூட பார்க்காமல் வேலைக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்தினார். அதனால்தான், நியூயோர்க் பல்கலைக்கழக மாணவர்களுடன் கூட்டு வேலைநிறுத்தத்தைத் தடுக்க கொலம்பியா பல்கலைக்கழக பட்டதாரி மாணவர் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தத்திற்கு பிரேக்மேன் ஒரு "இடைநிறுத்தம்" விதித்தார்.

தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் குற்றவியல்மிக்க பிரதிபலிப்பு தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணத்தையும் தீவிரமயமாக்கலையும் துரிதப்படுத்தியுள்ளது என்பதை புரிந்துகொண்டே தொழிற்சங்கங்களை முன்கொண்டுவர பைடென் நிர்வாகம் எல்லாவற்றையும் செய்து வருகிறது. வர்க்கப் போராட்டத்தின் கட்டுப்பாடற்ற வெடிப்பைத் தவிர ஆளும் வர்க்கம் வேறெதையும் பற்றி அச்சம் கொள்வது இல்லை. இவ்வாறான வெடிப்பு வர்க்க ஆட்சியின் அமைப்புகளை மூழ்கடித்து முதலாளித்துவ அமைப்பின் உயிர்வாழ்விற்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.

பெருநிறுவன இலாபத்திற்காக உயிர்களை தியாகம் செய்வதை நிறுத்தவும், போர் மற்றும் சர்வாதிகாரத்தின் ஆபத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே தேவையாக உள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற சர்வதேச மே தின இணையவழி பேரணியில், நான்காம் அகிலத்தின் அனைத்துலக்க குழு, சாமானியத் தொழிலாளர்கள் குழுக்களது சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியை (IWA-RFC) உருவாக்க அழைப்பு விடுத்தது. "இந்த உலகளாவிய முன்முயற்சியின் நோக்கம், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் உண்மையான பரந்த அடித்தளம் கொண்ட ஒரு இயக்கத்தை உருவாக்குவதும், வலது-சாரி முதலாளித்துவ ஆதரவு நிர்வாகிகள் பதவியிலிருக்கும் அரசு-கட்டுப்பாட்டிலான ஜனநாயக-விரோத தொழிற்சங்கங்களின் மூலமாக இப்போது அடைக்கப்பட்டிருக்கின்ற சிறைச்சாலை போன்ற கைவிலங்குகளில் இருந்து முறித்துக் கொண்டு வெளிவருவதற்கு அத்தனை நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களை ஊக்குவிப்பதாகும்." என்று உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் கூறினார்.

சாமானியத் தொழிலாளர்கள் குழுக்களது சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணிக்கான எங்கள் அழைப்பைப் படித்து, wsws.org/workers இல் எங்களை தொடர்புகொள்வதன் மூலம் போராட்டத்தை முன்னெடுக்குமாறு தொழிலாளர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading