1983-86 ஃபெல்ப்ஸ் டொட்ஜ் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் தலைவர் ஜோர்ஜ் ஓ'லேரி DSA ட்ரொட்ஸ்கியின் படுகொலையை வரவேற்றதை கண்டித்தார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாயன்று உலக சோசலிச வலைத் தளம் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) பல முக்கிய தலைவர்கள் ஆகஸ்ட் 20, 1940 அன்று மெக்ஸிகோ நகரில் லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையைக் கொண்டாடும் ஒருங்கிணைந்த ட்விட்டர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது பற்றி விபரித்திருந்தது. கிழக்கு அரிசோனாவில் 1983-86 பெல்ப்ஸ் டொட்ஜ் வேலைநிறுத்தத்தின் உலகப் புகழ்பெற்ற தலைவர் ஜோர்ஜ் ஓ'லேரி உடன், ட்ரொட்ஸ்கியின் படுகொலையை DSA பாராட்டியதைப் பற்றி உலக சோசலிச வலைத் தளம் உரையாடியது.

ஜோர்ஜ் ஓ'லேரிக்கு இப்போது 80 வயது

ஓ'லேரி கருத்துதெரிவிக்கையில், “ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பின் கைகளில் ட்ரொட்ஸ்கியின் மரணத்தைக் கொண்டாடுவது பற்றி நான் வெறுப்படைகிறேன். ஏனெனில், ட்ரொட்ஸ்கி ஒரு மேதை, அவர் எப்போதும் தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாள வர்க்கத்திற்காக உழைத்தார். 80 ஆண்டுகளுக்கு பின்னர், அதைப் பற்றி மகிழ்ச்சியடைபவர்கள் இருப்பதைக் கேட்டு அதிர்ச்சியாக இருக்கிறது” என்றார்.

DSA தலைவர்களின் பல ட்வீட்டுகள் ட்ரொட்ஸ்கியைக் கொலை செய்த ஸ்ராலினிச கொலையாளி ரமோன் மெர்காடர் பயன்படுத்திய ஆயுதமான பனிக்கோடாரி சித்தரிப்புகளுடன் விளக்கப்பட்டுள்ளன. "இது ஒருநாள் பயனுள்ளதாக இருக்கும்" என்று ஒரு DSA தலைவர் எழுதினார். மற்றொரு DSA உறுப்பினர் மெர்காடருக்கு ஒரு நினைவுச்சின்னத்தை அமைக்க முன்மொழிந்தார், "அவர் எங்களுக்கு வழி காட்டினார்" என்று கூறினார். DSA உறுப்பினர்களும் தலைவர்களும் இதேபோன்ற டஜன் கணக்கான ட்வீட்களை வெளியிட்டனர். அவை DSA தலைமையின் கணிசமான பகுதியினரால் "விரும்பப்பட்டன".

ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கு சற்று முன்னர் 1940 ஆம் ஆண்டில் மெக்ஸிகோவில் ஓ'லேரி பிறந்தார். ஒரு இளம் சோசலிஸ்ட் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க மாணவர் தலைவராக, ட்ரொட்ஸ்கிக்கு புகலிடம் வழங்குவதற்கான அப்போதைய மெக்சிகன் ஜனாதிபதி லாசரோ கார்டெனாஸின் முடிவுக்கு அவர் ஆழ்ந்த மரியாதை கொண்டிருந்தார். பின்னர் அவர் ஒரு வைத்தியரானார். அமெரிக்காவிற்குச் சென்று கிழக்கு அரிசோனாவில் பெல்ப்ஸ் டொட்ஜ் நிறுவனத்திற்கு சொந்தமான மருத்துவமனையில் மருத்துவம் பயின்றார். வேலைநிறுத்தத்தின் போது, வேலைநிறுத்தம் செய்தவர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் மருத்துவ உதவியை மறுக்க வேண்டும் என்ற நிர்வாக கோரிக்கைகளை பின்பற்ற மறுத்ததற்காக நிறுவனம் அவரை மருத்துவமனையில் இருந்து நீக்கியது.

ஓ'லேரி பின்னர் வேலைநிறுத்தக்காரர்களுக்காக ஒரு இலவச மருத்துவ சிகிச்சை நிலையத்தை அமைத்து, 3,000 தொழிலாளர்களை உள்ளடக்கியதும் மற்றும் மூன்று ஆண்டுகள் நீடித்த வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்களால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தற்போது அரிசோனாவின் டுக்சனில் வசித்து வருகிறார். ஏப்ரல் மாதத்தில், WSWS அவரை வேலைநிறுத்தம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பான தொழிலாளர் கழகம் மற்றும் அதன் அப்போதைய தேசிய செயலாளர் டேவிட் நோர்த் ஆற்றிய முக்கிய பங்கு குறித்து விரிவாக பேட்டி கண்டது. ட்ரொட்ஸ்கியின் படுகொலையைக் கொண்டாடுவதற்கான DSA இன் ஒருங்கிணைந்த முயற்சி குறித்து ஓ'லேரி பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்:

ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பின் கைகளில் ட்ரொட்ஸ்கியின் மரணத்தைக் கொண்டாடுவது பற்றி நான் வெறுப்படைகிறேன். ஏனெனில், ட்ரொட்ஸ்கி ஒரு மேதை, அவர் எப்போதும் தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாள வர்க்கத்திற்காக உழைத்தார். 80 ஆண்டுகளுக்குப் பின்னர், அதைப் பற்றி மகிழ்ச்சியாக இருப்பவர்கள் இருப்பதைக் கேட்டு அதிர்ச்சியாக இருக்கிறது. அவர்கள் அப்போது இருந்த நிலைமையை பற்றியோ அல்லது இன்றைய காலத்திலோ அதைப்பற்றி பகுப்பாய்வு செய்ய மாட்டார்கள்.

ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டபோது நான் ஒரு குழந்தையாக இருந்தேன். நான் மிகவும் இளமையாக இருந்தபோதும், என் தாயும் தந்தையும் நிலைமையைப் பற்றி விவாதித்ததையும், மெக்ஸிகன் ஜனாதிபதி லாசரோ கார்டனாஸ் ட்ரொட்ஸ்கியை மெக்ஸிகோவிற்கு வரவேற்றதில் அவர்கள் எவ்வளவு பெருமிதம் அடைந்தார்கள் என்பதையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். ஏனென்றால் மற்ற எல்லா நாடுகளும் ஸ்ராலினுக்கு பயந்தன. மெக்ஸிகோ ட்ரொட்ஸ்கியை வரவேற்று உயிருடன் இருக்க உதவியது.

ஆனால் மெக்சிகன் மக்கள் இந்த படுகொலை குறித்து மிகவும் குழப்பமடைந்தனர். மெக்சிகன் மக்களை பொறுத்தவரையில், யாரையாவது நீங்கள் வரவேற்றால் அவர்களைக் கொல்ல முடியாது. என் அம்மா ட்ரொட்ஸ்கியை கல்வித்துறை செயலாளர் கோன்சலோ வாஸ்குவேஸ் வேலாவின் வீட்டில் இரண்டு முறை சந்தித்தார். அவர்கள் ஒன்றாக இரவு உணவு சாப்பிட்டனர். அவர்கள் நடத்திய விவாதங்களில் என் அம்மா ஈடுபடவில்லை, ஆனால் அவர் அவரைச் சந்தித்தார். திரு. ட்ரொட்ஸ்கியை சந்தித்ததில் அவர் மகிழ்ச்சியடைந்தார். அவர் மிகவும் புத்திசாலி என்று அவர் கூறினார். அவரால் ஸ்பானிஷ் மொழி பேசக்கூடியதாக இருந்து பற்றி ஆச்சரியப்பட்டார். அத்தகைய முக்கியமான நபராக இருந்தபோதிலும் அவரைச் சுற்றியுள்ள மக்களுடன் அன்பாக இருந்தார். ரஷ்ய புரட்சியில் போராடிய ஒரு உலகத் தலைவர் நம் நாட்டில் வாழ்ந்ததில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.

ஸ்ராலின் கை மேலோங்கி ட்ரொட்ஸ்கி அவரின் கைகளில் அகப்பட்டுவிட்டார். ஸ்ராலின் ஒரு வகையில் மிகவும் முட்டாள். அவர் ஒரு கொலையாளி, அவர் படிக்காதவர். அவரை ட்ரொட்ஸ்கியுடன் ஒப்பிடுவது சிங்கத்தை ஒரு கோழியுடன் ஒப்பிடுவது போன்றது. ட்ரொட்ஸ்கி ஒரு சிங்கம். அவரது மரணம் குறித்து மகிழ்ச்சியாக இருப்பது அருவருப்பானது.

Loading