ஈரானின் ஜனாதிபதித் தேர்தல் அழுத்தம் நிறைந்த அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் மோசடிக்குள்ளானது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஈரானின் பாதுகாப்பு சபை, ஜூன் 2018 ஜனாதிபதித் தேர்தலில் சீர்திருத்தவாத மற்றும் மிதவாத கன்னைகளாக அழைக்கப்பட்டனவற்றின் அனைத்து வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்துள்ளது. 81 வயதான உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei), மற்றும் ஈரானிய புரட்சிகர காவல்படை (Iranian Revolutionary Guards Corps-IRGC) உடன் இணைந்த பழமைவாத அல்லது தீவிரவாத கன்னையைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு மட்டுமே அரசியலமைப்பு கண்காணிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கூட்டு விரிவாக்க செயல் திட்டம் (Joint Comprehensive Plan of Action-JCPOA) என்றழைக்கப்படுவதான ஏகாதிபத்திய சக்திகளுடன் எட்டப்பட்ட 2015 அணுவாயுத ஒப்பந்தம் குறித்து அனைத்தையும் பணயம் வைத்த ஒரு மைய அரசியல்வாதியான ஜனாதிபதி ஹசன் ரூஹானி (Hassan Rouhani) அதிகபட்சம் இரண்டு முறை பதவி வகித்ததன் பின்னர் பதவியிலிருந்து விலகியாக வேண்டும். வாக்குறுதியளிக்கப்பட்ட பொருளாதார சலுகைகளை வழங்கத் தவறிய இந்த ஒப்பந்தம், 2018 இல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் ஒருதலைப்பட்சமாக இரத்து செய்யப்பட்டது. ட்ரம்ப், ஈரானை சீர்குலைக்கும் தனது “அதிகபட்ச அழுத்த” பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் குறைந்தது 200 பில்லியன் டாலர் பொருளாதார மதிப்பு கொண்ட எண்ணெய் ஏற்றுமதிகளை குறிவைக்கும் மிகுந்த பொருளாதார முடக்கத் தடைகளை மீளவிதித்தார், மேலும் இன்னும் அதிகரித்தார்.

Ebrahim Raisi Mehr (credit: News Agency, via Wikimedia Commons)

இது, ரூஹானியையும், பொருளாதாரத் தடைகள் மற்றும் தொற்றுநோயின் முழுச் சுமையையும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்திய சீர்திருத்தவாத மற்றும் மையவாத கன்னைகளையும் இழிவுபடுத்த உதவியது. பணவீக்கம் மே 2018 இல் 8.2 சதவிகிதமாக இருந்து தற்போது அண்ணளவாக 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது, அதே காலகட்டத்தில் ரியால் அதன் மதிப்பை நான்கு மடங்கு இழந்துள்ளது. ஒரே நேரத்தில் பல மணிநேரங்களுக்கு மின்சார இருட்டடிப்பு பரவலாக உள்ளது. தீவிர வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்து 20 மில்லியன் அளவிற்கு உயர்ந்துள்ளது.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரப்படி, தொற்றுநோயால் சுமார் 80,000 பேர் இறந்துள்ளனர், இதன் பெரும்பகுதி பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தால் நிகழ்ந்துள்ளது. இது சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடி இரண்டையும் மேலும் அதிகப்படுத்தியுள்ளது. புலனாய்வு பத்திரிகை பணியகத்தின் கூற்றுப்படி, கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் டசின் கணக்கான நாடுகளில் ஈரானும் ஒன்றாகும், ஏனென்றால் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் மார்ச் மாதத்திலிருந்து அங்கு குறைந்தது 20 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், சுகாதார அமைப்புமுறைகள் “முற்றிலும் சீர்குலைந்து” போகக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நாடுகள் அனைத்தும் தங்கள் மக்கள்தொகையில் 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே தடுப்பூசி வழங்கியுள்ளது. இந்நிலையில், 16 மில்லியன் கோவிட்-19 தடுப்பூசி அளவுகளை கொள்முதல் செய்ய 125 மில்லியன் டாலர் முடக்கிவைக்கப்பட்ட ஈரான் நிதியை ஐரோப்பிய வங்கிக்கு மாற்ற ஈராக் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில், நவம்பர் 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் பங்கீட்டு முறையை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்களின் போது 400 க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்களைக் கொன்றது உட்பட, இந்த ஆட்சி கருத்து வேறுபாட்டை மிருகத்தனமாக நசுக்கியுள்ளமை, முதலாளித்துவ மதகுரு ஆட்சியின் பிற்போக்குத்தன தன்மையை எடுத்துக்காட்டுகிறது, அதாவது இந்த ஆட்சி ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முனைவதற்கு தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை அதிகரித்துள்ளது. வாஷிங்டன் உடன் ஒருவித உடன்பாட்டை எட்டுவதில் அவர்கள் எவ்வளவு தூரம் செல்வார்கள் என்பது பற்றிய கன்னை மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், ஆளும் உயரடுக்கு சுதந்திர சந்தை பொருளாதாரக் கொள்கைகளுக்கும் மற்றும் தொழிலாள வர்க்க விரோதத்திற்கும் ஆதரவளிப்பதில் ஒன்றுபட்டுள்ளது.

அத்துடன் உள்நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் சமூக அமைதியின்மைக்கு மத்தியில், உயரடுக்கினர் அமெரிக்க ஏகாதிபத்தியம், பிராந்திய சுன்னி சக்திகள் மற்றும் இஸ்ரேலின் விரோதத்தை எதிர்கொள்கின்றனர். ஒப்பந்தத்தை இரத்து செய்ததிலிருந்து, வாஷிங்டன் ஈரான் மீது பல இராணுவத் தாக்குதல்களை நடத்தியுள்ளது, அத்துடன் IRGC தளபதி காஸ்ஸெம் சுலைமானி பாக்தாத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தபோது ஜனவரி 2020 இல் படுகொலை செய்யப்பட்டார். மேலும் அதன் பிராந்திய போட்டி நாடான இஸ்ரேலும், ஈரானுக்குள் அதன் அணுசக்தி வசதிகள் உட்பட அதன் உள்கட்டமைப்புக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது, தெஹ்ரான் அணுசக்தி திட்டம் தொடர்பாக தான் ஒப்புக் கொண்ட வரம்புகளை புறக்கணித்து, அணுகுண்டு தயாரிக்கத் தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மேம்பட்ட மையவிலக்கிகளை அது நிறுவுவதற்குத் தூண்டியுள்ளது.

எஞ்சிய ஏழு வேட்பாளர்கள் மக்களிடையே குறைந்த பிரபல்யம் உள்ளவர்களாகவும் மற்றும் வாக்காளர் அடித்தளம் இல்லாதவர்களாகவும் உள்ள நிலையில், கிட்டத்தட்ட 600 பேர் கொண்ட பட்டியலில் இருந்து, இந்த முடிவு 2017 இல் ரூஹானியிடம் தோற்ற இப்ராஹிம் ரைசியின் வெற்றிக்கு வழிவகுக்கிறது. ரைசி நாட்டின் தலைமை நீதிபதியும், IRGC உடன் தொடர்புபட்ட ஒரு முக்கிய பழமைவாதியும் ஆவார், IRGC, ஆட்சி அதன் பிழைப்புக்கு சார்ந்திருக்கும் முக்கிய ஆதரவு அமைப்பாக மாற, அதன் பரந்த வணிக சாம்ராஜ்யம் மற்றும் அதன் மிரள வைக்கும் உளவுத்துறை சேவை ஆகியவற்றின் அடிப்படையில் அதன் சக்தியை பெரிதும் அதிகரித்துக் கொண்டுள்ளது.

சீர்திருத்தவாதிகளின் புறக்கணிப்புக்கான அச்சுறுத்தலுடன் கூட, பாதுகாப்பு சபையின் முடிவு 1979 புரட்சிக்குப் பின்னர் மிகக்குறைந்த வாக்களிப்பை உருவாக்கும். 40 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்காளர்களே வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, இது தவிர்க்க முடியாமல் வெற்றிகரமான பழமைவாத கன்னையை சிறிதளவு சட்டபூர்வ தன்மை கொண்டதாக விட்டுவைக்கிறது.

12 உறுப்பினர்களைக் கொண்ட சபை, இவர்களில் ஆறு பேர் கமேனியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், ரைசியின் பிரதான போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் அலி லரிஜானி போன்ற முக்கிய அரசியல் பிரமுகர்களைக் கூட தகுதி நீக்கம் செய்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்றவர்களில் தற்போதைய துணைத் தலைவரும், ஜனாதிபதி ஹசன் ரூஹானியுடன் நெருக்கமாக இணைந்தவருமான எஷாக் ஜஹாங்கிரி (Eshaq Jahangiri), முன்னாள் ஜனாதிபதி அக்பர் ஹஷேமி ரப்சஞ்சனியின் (Akbar Hashemi Rafsanjani) மகன் மொஹ்சென் ஹஷேமி ரப்சஞ்சனி (Mohsen Hashemi Rafsanjani), மற்றும் முன்னாள் ஜனாதிபதி அஹ்மதிநெஜாட் (Ahmadinejad) ஆகியோர் அடங்குவர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்றொரு வேட்பாளர் மொஸ்தபா தாஜ்ஸாதே (Mostafa Tajzadeh) ஆவார், ஒரு முன்னாள் அரசியல் கைதியான இவர் பெண்களுக்கான தலையை மூடும் கட்டாயத்தை முடிவுக்குக் கொண்டுவர கோரியதுடன், உச்ச தலைவரின் முழுமையான அதிகாரத்திற்கு சவால் விடுத்தார்.

ஈரானுக்கும் சீனாவுக்கும் இடையில் சமீபத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட 25 ஆண்டுகால பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை வகிக்க கமேனி நியமித்த லரிஜானி ஒரு முக்கிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். இவரது சகோதரர்களில் ஈரானின் நீதித்துறை அமைப்பின் தலைவர், ஒரு முன்னணி அணுசக்தி விஞ்ஞானி, மற்றும் ஆய்வு செய்வதில் “உளவுத்துறை சேவையின் அதிகரித்து வரும் ஈடுபாட்டை” குற்றம்சாட்டி, இந்த பட்டியலை விவரிக்க முடியாது என்று பகிரங்கமாக எதிர்த்து குரல் கொடுத்த பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் ஆகியோர் அடங்குவர்.

எதிர்பார்க்கப்பட்ட வெற்றியாளரான ரைசி கூட கவலை தெரிவித்ததோடு, போட்டி இருப்பது போன்ற தோற்றத்தை வழங்க சில வேட்பாளர்களை மீண்டும் நியமிக்க அழைப்பு விடுத்தார். இஸ்லாமிய குடியரசின் ஸ்தாபகரின் பேரன் ஹசன் கோமெய்னி (Hassan Khomeini), தான் தேர்தலில் நின்றிருந்தால், எதிர்ப்பில் இருந்து அவர் ஒதுங்கியிருப்பார் என்று கூறினார். அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இருந்து லரிஜானி மற்றும் ஜஹாங்கிரியின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்த செய்திகள் கசிந்ததால், அதில் தலையிடுமாறு கமேனியிடம் ரூஹானி வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. கமேனியின் அடுத்த பட்டியல் அறிவிப்பு ஜனாதிபதியின் கோரிக்கையை அவர் நிராகரித்ததைக் குறிக்கிறது. தன்னை நீக்குவது குறித்த பாதுகாப்பு சபையின் முடிவை லரிஜானி ஏற்றுக்கொண்டார்.

பிப்ரவரியில் “வாய்வழி வரலாறு” ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக பதிவு செய்யப்பட்ட ஒரு கசிந்த நேர்காணலை அடுத்து இந்து முடிவு வெளி வந்தது, இந்த நேர்காணலில் வெளியுறவு அமைச்சர் ஜவாத் சரீஃப் ஆளும் உயரடுக்கிற்குள் நிலவும் அசாதாரண பதட்டங்களை வெளிப்படுத்தியிருந்தார். ஈரானிய இராஜதந்திரத்தில் படுகொலை செய்யப்பட்ட IRGC தளபதி சுலைமானியின் ஆதிக்கத்தை இவர் விமர்சித்தார், ஈரானிய வெளியுறவுக் கொள்கையில் தனது சொந்த செல்வாக்கு சில நேரங்களில் பூஜ்ஜியமாக இருப்பதை இவர் ஒப்புக் கொண்டு, சர்வதேச பிரமுகர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது என்ன செய்ய வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது பற்றி இவர் அவரிடம் கூறினார்.

சவூதி நிதியுதவியில் இயங்கும் Iran International தொலைக் காட்சியில் முதன்முதலில் ஒளிபரப்பப்பட்ட இந்த நேர்காணல், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தனது வெற்றிகரமான முயற்சியைத் தொடங்குவதற்கான வாய்ப்புக்களை உறுதிப்படுத்தும் வகையில், அணுசக்தி ஒப்பந்தத்தின் மறுமலர்ச்சிக்கு அழுத்தம் கொடுத்ததால், தேர்தலில் வெற்றி பெறுவார் என்று சீர்திருத்தவாத கன்னையின் சிறந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த சரிஃபை இழிவுபடுத்தவே மறைமுகமாக கசியவிடப்பட்டது. இந்த நிகழ்வில், அவருக்கு எதிரான பின்னடைவு அவரை ஒரு வேட்பாளராக முன்னோக்கிச் செல்ல விடாமல் தடுத்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ஈரானுடன் ஒரு பரந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முனைகிறார், இது இராணுவ நோக்கங்களுக்காக அல்ல, பொது மக்களுக்கானது என்று தெஹ்ரான் வலியுறுத்திய அணுசக்தி திட்டத்தை மட்டும் மட்டுப்படுத்தாது, மாறாக அதன் ஏவுகணை வளர்ச்சியை, மற்றும் பரந்த பிராந்திய செல்வாக்கை, குறிப்பாக ஈராக்கில் ஷியைட் ஆயுதக் குழுக்கள், சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல்-அசாத், லெபனானில் ஹெஸ்பொல்லா, காசாவில் ஹமாஸ் மற்றும் யேமனில் உள்ள ஹவுத்திகள் என அதற்குள்ள பரந்த ஆதரவை மட்டுப்படுத்தும். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஏனைய நாடுகளான ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றால் வியன்னாவில் தொடங்கப்பட்ட தெஹ்ரானுடனான மறைமுக பேச்சுவார்த்தைகளில் வாஷிங்டனும் பங்கேற்கிறது.

சில ஈரானிய அதிகாரிகள் ஒரு ஒப்பந்தம் எட்டப்படுவதற்கான வாய்ப்புகள் பற்றி பேசியிருந்தாலும், இஸ்ரேல் மீது பரவலாக குற்றம்சாட்டப்படும் விவரிக்கப்படாத தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்புக்களுக்கு மத்தியில் இது வெற்றி பெறுவதற்கான எதிர்பார்ப்புகள் குறைவாக உள்ளன. இதில், ஏப்ரலில் நடான்ஸில் ஈரானின் அணுசக்தி நிலையத்தின் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல், (காசாவில் உள்ள ஹமாஸூக்கு ஈரான் ட்ரோன்களை வழங்குவதாக இஸ்ரேல் கூறிய பின்னர்) ட்ரோன்கள் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் உள்ள நெரிசலான வீட்டு அமைப்பின் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டது, மற்றும் அசாலுயே இல் உள்ள ஒரு பெட்ரோ கெமிக்கல் ஆலையில் ஆக்ஸிஜன் குழாய் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு ஒரு தொழிலாளியைக் கொன்றது மற்றும் இரண்டு பேரை காயமடையச் செய்தது ஆகியவை அடங்கும்.

வெற்றி கொண்டாட்டத்தைக் காட்டும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு, கடந்த வாரம், ஜெருசலேமில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனுடன் அவர் நின்றபோது, “நாங்கள் பல பிராந்திய பிரச்சினைகள் பற்றி விவாதித்தோம், என்றாலும் ஈரானை விட பெரிய விவகாரம் எதுவுமில்லை” என்று கூறினார்.

2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையாது என்று நெத்தனியாகு நம்பினார், “ஏனென்றால் சர்வதேச சட்டபூர்வ அனுமதியுடன் அணுவாயுத தளவாட ஆலையை ஈரான் வைத்திருக்க அது வழிவகுக்கும் என நாங்கள் நம்புகிறோம்.” வியன்னா பேச்சுவார்த்தைகளின் வெற்றி அல்லது வேறு விளைவைப் பொருட்படுத்தாமல், “பேரழிவை விளைவிக்கும் ஆயுதங்களைப் பெறுவதற்கு உறுதியளித்த ஆட்சிகளை எதிர்த்துப் போராடும் உரிமை எப்போதும் இஸ்ரேலுக்கு உண்டு,” என்று வலியுறுத்தினார், அதாவது பிளிங்கனோ அல்லது பைடென் நிர்வாகமோ இந்த நிலைப்பாட்டில் இருந்து தங்களை விலக்கிக்கொள்ள முயற்சிக்கவில்லை என்றார்.

Loading