இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரானிய கப்பல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலையில் தீ விபத்து

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த இரண்டு நாட்களில் ஈரான் இரண்டு பெரிய தீ விபத்துக்களின் தாக்குதலுக்குள்ளானது. முதல் தீ விபத்து ஈரானிய கடற்படையின் மிகப்பெரிய கப்பல் கார்க் (Kharg) இல் ஏற்பட்டு அதனை மூழ்கடித்தது. தீயை அணைக்க 20 மணி நேரங்கள் போராடியதன் பின்னர், புதனன்று மூலோபாய ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) அருகே இக்கப்பல் மூழ்கியது.

இரண்டாவது தீ விபத்து தெற்கு தெஹ்ரானிலுள்ள ஒரு பெட்ரோ கெமிக்கல் ஆலையில் புதன்கிழமை அன்று வெடித்தது, இங்கிருந்து நகரம் முழுவதுமாக அடர்த்தியான புகை மண்டலம் பரவியது.

ஈரானிய கடற்படையின் மிகப்பெரிய போர்க்கப்பலான கார்க் இல் தீ பற்றி பின்னர் புதன்கிழமை ஓமன் வளைகுடா பகுதியில் மூழ்கியது (Source: Iranian Army via AP)

ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமாகவுள்ள கார்க் தீவின் பெயரிடப்பட்ட பின்னர் இந்த போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு மூழ்கிப்போனது பற்றி விசாரணை நடப்பதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். 40 ஆண்டுகள் பழமையான இந்த கப்பல் உதவி மற்றும் பயற்சி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. தீ பரவத் தொடங்கியபோது 400 கப்பல் பணியாளர் குழு உறுப்பினர்களும் பயிற்சியாளர்களும் கப்பலில் இருந்தனர். இதனால் இறப்புக்கள் அல்லது கடுமையான காயமடைதல் எதுவும் ஏற்படவில்லை.

தெற்கு தெஹ்ரானில் ஆலையில் ஏற்பட்ட தீ அதன் எரிவாயு குழாய்வழி ஒன்றில் தொடங்கி எரிவாயு கலனுக்கு பரவியது என்று ஈரானின் பெட்ரோ கெமிக்கல் ஆலையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதில் எவரும் காயமடையவில்லை என்று அவர்கள் தெரிவித்ததுடன், தீ விபத்திற்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என்பதையும் நிராகரித்தனர்.

இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாட் (Mossad), ஈரானிய இலக்குகளை மீண்டும் மீண்டும் குறிவைத்து தாக்கும் ஒரு பதட்டமான சூழலில் இந்த இரண்டு தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற தாக்குதல்களை இஸ்ரேல் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்பது அதன் நிலையான செயல்முறையாக உள்ளது. தெஹ்ரான் அதன் பங்கிற்கு, தனது சொந்த காரணங்களுக்காக, ஈரான் மண்ணில் அல்லது கடற்கரையில் இலக்குகளுக்கு எதிராக தீங்கின்றி தாக்கும் மொசாட்டின் திறனை ஒப்புக்கொள்வதற்கு இந்த சமயத்தில் வெறுப்படைந்துள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில், ஏப்ரலில் நடான்ஸில் உள்ள நாட்டின் பிரதான யுரேனியம் செறிவூட்டல் ஆலையில் குண்டு வெடிக்கச் செய்தது அடங்கும், இது பெருங்கேடான இரசாயன அல்லது கதிர்வீச்சு பேரழிவைத் தூண்டும் திறனைக் கொண்டிருந்தது.

இந்த ஆத்திரமூட்டல், கூட்டு விரிவாக்க செயல் திட்டம் (Joint Comprehensive Plan of Action-JCPOA) என முறையாக அறியப்படும் ஈரானுக்கும் முக்கிய வல்லரசுகளுக்கும் இடையிலான 2015 அணுசக்தி ஒப்பந்தத்திற்கு புத்துயிரூட்ட தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்படவுள்ள நேரத்தில் நடந்துள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் இந்த ஒப்பந்தத்தை 2018 இல் ஒருதலைப்பட்சமாக இரத்து செய்தது, பின்னர் ஈரானில் வறுமை விகிதம் கடுமையாக அதிகரிக்க வழிவகுத்த மற்றும் கொரோனா வைரஸின் அதிவேக பரவலை எதிர்கொள்ள முக்கிய மருத்துவ பொருட்களை பெறுவதற்கான நாட்டின் முயற்சிகளைத் தடுத்த “அதிகபட்ச அழுத்தமிக்க” பொருளாதாரத் தடைகளை விதித்தது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட, ஈரான், சீனா, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் ஜேர்மனி ஆகிய JCPOA இன் ஏனைய தரப்புகளுக்கிடையேயான சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்தவுடன் ஏற்பட்டுள்ள இந்த இரண்டு சமீபத்திய தீ விபத்துக்கள் வியன்னாவில் மூடிமறைக்கப்படுகின்றன.

பேச்சுவார்த்தைகளுக்கான ஈரானிய பிரதிநிதி, ஒப்பந்தத்தை புத்துயிரூட்டுவதற்கான முதன்மையான தடைகளை தீர்க்க முடியும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தினாலும், ஜனாதிபதி ஜோ பைடெனின் அமெரிக்க நிர்வாகம் இதுவரை இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது, அதாவது, ஒரு முன்நிபந்தனையாக, வாஷிங்டன் சட்டவிரோதமாக ஒப்பந்தத்தை மீறாமல் இருப்பதற்கும் மற்றும் பொருளாதாரத் தடைகளை மீளவிதிக்காமல் இருப்பதற்கும், ஈரான் அதன் யுரேனிய செறிவூட்டல் மற்றும் குவிப்பை அதிகரிப்பதை திரும்பப் பெற வேண்டும் என்பதாகும்.

தெஹ்ரான் அதன் வழமையான ஏவுகணைத் திட்டத்தில் தனக்கு கூடுதல் சலுகைகளை வழங்க வாஷிங்டன் அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது, அத்துடன் அமெரிக்க மேலாதிக்க நாட்டத்திற்கு தலைவணங்கி, பரந்த மத்திய கிழக்கில் அதன் செல்வாக்கை ஒப்படைக்கவும் கோருகிறது.

மேலும் ஏப்ரலில் கூட, ஈரானிய இராணுவக் கப்பலான சவிஸ் (Saviz) மீது மொசாட் பீரங்கித் தாக்குதல் நடத்தியது, இந்த கப்பலை இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினர் அவர்களது கப்பல் கொள்ளை எதிர்ப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக செங்கடலில் நிறுத்தியிருந்தனர். இந்த பீரங்கித் தாக்குதல் ஈரானியக் கப்பல்கள் மீது, அதிலும் குறிப்பாக எண்ணெய் இறக்குமதிக்கு ஈரானை சார்ந்திருக்கும் சிரியாவிற்கு செல்லும் கப்பல்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்.

இஸ்ரேல் நெருக்கடியின் பின்னணியில் இந்த பிராந்தியத்தில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன, இங்கு பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகுவின் 12 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் அரசாங்க மாற்றம் புதன்கிழமை உடனடியாக நடந்தது.

செவ்வாய்க்கிழமை, மொசாட்தில் கட்டளை மாற்றத்திற்கு தலைமை தாங்குகையில், நெத்தனியாகு ஈரானுக்கு எதிராக புதிய அச்சுறுத்தல்களை விடுத்தார், இது வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையில் எட்டப்பட்ட எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் இஸ்ரேல் கட்டுப்படாது என்பதை சமிக்ஞை செய்கிறது. “எங்களது சிறந்த நட்பு நாடான அமெரிக்காவுடனான உராய்வு மற்றும் [ஈரானிய அணுவாயுத] இருத்தலியல் அச்சுறுத்தலை நீக்குவது இரண்டில் ஒன்றை நாங்கள் தேர்வு செய்ய வேண்டியிருப்பின் – அது நடக்காது என்றே நான் நம்புகிறேன் - இருத்தலியல் அச்சுறுத்தலை நீக்குவது தான் முன்னுரிமை பெறும்,” என்றவர் கூறினார்.

கடந்த மாதம், முற்றுகையிடப்பட்ட ஆக்கிரமிக்கப்பட்ட காசா பிராந்தியத்தின் மீது இஸ்ரேல் நடத்திய 11-நாள் தாக்குதலுக்கு அது செலவு செய்த கையிருப்புக்களை மீளநிரப்ப மற்றொரு பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க இராணுவ உதவியைக் கோர வாஷிங்டனுக்கு பயணித்துக் கொண்டிருந்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ் (Benny Gantz), நெத்தனியாகுவின் கருத்து “ஆத்திரமூட்டுவதாகும்” என விவரித்தார்.

இருப்பினும், மொசாட் உளவு அமைப்பின் உள்வரும் தலைவர் டேவிட் பார்னியா (David Barnea) இன்னும் வெளிப்படையாக இருந்தார். “ஈரானிய திட்டம் மொசாட்தின் வலிமையை தொடர்ந்து உணரும்,” என்று கூறினார். மேலும், “அணுசக்தி திட்டம் மற்றும் அதன் பல்வேறு கூறுகள் பற்றி நாங்கள் நன்கு அறிவோம், மேலும் அதில் செயல்படும் காரணிகளையும் மற்றும் அவற்றை இயக்கும் சக்திகளையும் நாங்கள் தனிப்பட்ட முறையில் அறிவோம்,” என்றும் கூறினார்.

புதுப்பிக்கப்பட்ட ஈரானிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கு பணிந்து இஸ்ரேல் அதன் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தாது என்பதை மொசாட்தின் புதிய தலைவரும் சுட்டிக்காட்டினார். “பிரச்சினையில் உள்ளவர்களுக்கு தனிமை உணர்வு வலுப்படும் போது மட்டுமே உலக வல்லரசுகளுடனான ஒப்பந்தம் வடிவம் பெறுகிறது,” என்று கூறினார். “நான் இதை தெளிவாகச் சொல்கிறேன் – முடியாது, பெரும்பான்மை கருத்தின் படி செயல்பட நாங்கள் விரும்பவில்லை, ஏனென்றால் இந்த அச்சுறுத்தலை தவறாக மதிப்பிடுவதன் விளைவுகளை இந்த பெரும்பான்மை தாங்கிக் கொள்ளாது” என்றார்.

உண்மையில், ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு வாஷிங்டன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. பைடெனும் அவரது வெளியுறவுச் செயலர் ஆண்டனி பிளிங்கனும், “இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு” என்ற பல்லவியை முடிவின்றி மீண்டும் மீண்டும் பாடியுள்ளனர், அதிலும் காசாவில் குறைந்தது 253 பாலஸ்தீனியர்களைக் கொன்ற சமீபத்திய பாரிய வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தும் கூட.

காசா மீதான தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலின் பாலஸ்தீனிய குடிமக்களின் பரவலான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொது வேலைநிறுத்தங்களாலும், மற்றும் ஜெருசலேமில் இஸ்ரேலிய பொலிஸின் ஒடுக்குமுறைகள் மற்றும் “இன சுத்திகரிப்பு” நடவடிக்கைகளாலும் அம்பலப்படுத்தப்பட்ட படி, நாட்டின் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளிருந்து தான் வருகிறது என்றாலும், ஈரானின் அணுசக்தி திட்டத்தினால் தான் இருத்தலியல் அச்சுறுத்தல் இருப்பதாக இஸ்ரேலிய அரசியல்வாதிகள் கூறிய அனைத்தும் மழுப்பல்களே.

இந்த கிளர்ச்சியின் அடிப்படை ஒட்டுமொத்த இஸ்ரேலிய சமூகத்தின் மிகப்பரந்த உள் முரண்பாடுகளாகும். OECD நாடுகளிலுள்ள மிகுந்த சமமற்ற நாடுகளில் ஒன்றான இங்கு 20 சதவிகிதத்திற்கும் அதிகமான வறுமை உள்ளது, அதேவேளை உலகின் ஏராளமான கோடீஸ்வரர்கள் இங்கு குவிந்தும் உள்ளனர்.

இஸ்ரேலின் முதலாளித்துவ தன்னலக்குழுவிற்குள் நிலவும் மிகப்பெரிய பயம் என்னவென்றால், இந்நாட்டின் மக்கள்தொகையில் 20 சதவிகிதமாக உள்ள பாலஸ்தீனியர்கள் மத்தியில் எழுந்துள்ள பெரும் எதிர்ப்பு, யூத தொழிலாளர்களின் போராட்டங்களுடன் இணைந்து கொள்ளும் என்பது முழு சியோனிச திட்டத்தையும் அபாயகரமாக குறைமதிப்பிற்குட்படுத்தும் என்பதே.

இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள, நாட்டின் சூழ்ச்சி செய்யும் ஆளும் வர்க்கம், ஒருபுறம், வெறித்தனமான தேசியவாதத்தையும் அரபு எதிர்ப்பு பேரினவாதத்தையும் வளர்த்தெடுப்பதை நாடுகிறது, மற்றொரு புறம் வளர்ந்து வரும் சமூக பதட்டங்களை இடையறா இராணுவவாதம் கொண்டு வெளிநோக்கி திசைதிருப்ப முயற்சிக்கிறது.

நெத்தனியாகு இல்லாமல் ஒரு புதிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதில் இஸ்ரேலிய ஆளும் ஸ்தாபகம் வெற்றி பெற்றால், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களையும் ஆத்திரமூட்டல்களையும் தணிக்க அது ஒன்றும் செய்யாது என்பதுடன், முக்கிய சக்திகளை விரைந்து ஈர்க்கக்கூடிய ஒரு பிராந்திய போரை அவர்கள் துரிதப்படுத்துவார்கள் என்ற அச்சுறுத்தலும் உள்ளது.

Loading