யேல் பல்கலைக்கழகம் வெள்ளையினத்தவர்களை கொல்வது பற்றிய கற்பனைகளைப் பகிர்ந்து கொண்ட பேச்சாளருக்கு இடமளிக்கின்றது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளையினத்தவர்களை கொல்வது பற்றிய கற்பனைகளை பற்றி உரையாற்றுவதற்கு, ஒரு நியூ யோர்க் மனநல மருத்துவர் யேல் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவு ஆற்ற அழைக்கப்பட்டார். அவர் இனவெறி என்பது "வெண்மைத்தன்மையின்" உள்ளார்ந்த பகுதியாகும் என்று வலியுறுத்தினார். இந்த பின்தங்கிய கருத்துக்களை ஊக்குவிப்பதில் தங்கள் பங்கைக் குறைக்கும் முயற்சியில் இக் கருத்துக்களிலிருந்து தங்களை தூர விலக்கிக்கொண்ட பல்கலைக்கழக அதிகாரிகள் இப்பேச்சு பொதுமக்களுக்கு கிடைப்பதை தடை செய்துள்ளனர்.

ஏப்ரல் 6 இணையவழி விரிவுரை “வெள்ளையின சிந்தனையின் மனநோய் சிக்கல்” என்ற தலைப்பில் Yale School of Medicine’s Child Study Center இனால் ஒழுங்கமைக்கப்பட்டு, டாக்டர் அருணா கிலனானி (Aruna Khilanani) ஆல் வழங்கப்பட்டது. நிகழ்வை அறிவிக்கும் சுவரொட்டி பல "கற்றல் நோக்கங்களை" பட்டியலிட்டுள்ளது. அவற்றில்: "கறுப்பினத்தவரின் ஆத்திரம் தொடர்பான வெள்ளை மக்களின் அனுதாபம் இல்லாததை ஒரு பிரச்சினையாக முன்வைத்தல்" மற்றும் "வெள்ளையின மக்கள் எவ்வாறு கறுப்பினத்தவரின் ஆத்திரத்தை உளவியல் ரீதியாக சார்ந்து இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்" என்பவை அடங்கியிருந்தன.

டாக்டர் கிலனானி தனது அவதூறான வார்த்தைகள் உள்ளடங்கிய உரையில், இனவாதத்திற்கான மூல காரணத்தை "வெள்ளையின சிந்தனை" என்று அடையாளம் காட்டினார்.

யேல் பல்களைக்கழக வளாகம் [Credit: Pixabay]

"இது வெள்ளையின மக்களுடன் பேசுவதற்கான விலை" என்று அவர் அறிவித்தார். "அவர்கள் உங்களை உறுஞ்சியெடுக்கையில் நீங்கள் கொடுக்கும் உங்களது சொந்த வாழ்க்கையின் விலையாகும். அங்கே நல்லவர்கள் எவரும் இல்லை. வெள்ளையின மக்கள் என் இரத்தத்தை கொதிக்க வைக்கிறார்கள்”. அவர் தொடர்ந்தார், “என் வழியில் வரும் எந்த வெள்ளையின நபரின் தலையிலும் ஒரு துப்பாக்கியை அழுத்தும், அவர்களின் உடலை புதைப்பது, என் பாதையில் ஒரு துள்ளலுடன் ஒப்பீட்டளவில் குற்றமின்றி நான் நடந்து செல்லும்போது என் இரத்தக்கறை படிந்த கைகளைத் துடைப்பது போன்ற கற்பனைகள் எனக்கு இருந்தன. நான் உலகுக்கு ஒரு உதவி செய்தது போல” எனக் கூறினார்.

இனம் பற்றி வெள்ளையின மக்களிடம் பேசுவதன் பயனற்ற தன்மையைப் பற்றி அவர் மீண்டும் மீண்டும் பேசினார்: “வெள்ளை மக்கள் நீண்ட காலத்திற்கு முன்னரே இருந்ததுபோல் தங்கள் சிந்தனையை இழந்துவிட்டனர்… இனம் பற்றி நேரடியாகப் பேசுவது நம் சுவாசத்தை வீணாக்குகிறது என்பதை நாம் மறந்து கொண்டே இருக்கிறோம். தாங்கள் ஒரு துறவி அல்லது ஒரு மாவீரன் என்று நினைக்கும் ஒரு புத்திமாறாட்டமான, வன்முறைமிக்க வேட்டையாடுபவரை, பொறுப்பை ஏற்குமாறு கேட்கிறோம். அது நடக்காது. அவர்களின் மூளையில் ஐந்து துளைகள் உள்ளன. இது ஒரு செங்கல் சுவரின் மீது உங்கள் தலையை மோதுவது போன்றது. இது ஒரு நல்ல யோசனை அல்ல போல் இருக்கின்றது.”

மீண்டும், “வெள்ளையினத்தவர்களுடன் இனம் பற்றி நேரடியாகப் பேசுவது பயனற்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் தவறான உரையாடல் மட்டத்தில் இருக்கிறார்கள். இனவாதம் பற்றி பேசுவது, நாம் எதைப்பற்றி பேசுகின்றோம் என்பதை, வெள்ளையின மக்கள் பார்த்து புரிந்துகொள்ள முடியும் என்று கருதவைக்கின்றது. அவர்களால் முடியாது. அதனால்தான் அவர்கள் புத்திமாறாட்டமுள்ளவர்கள் போல் தெரிகின்றது. அவர்கள் முகமூடி அணிந்திருப்பது கூட அவர்களுக்குத் தெரியாது. இதுதான் அவர்களின் உண்மையான முகம் என்று வெள்ளையின மக்கள் நினைக்கிறார்கள். இந்த முகமூடியை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்”.

அவர் தனது வாழ்க்கையிலிருந்து அனைத்து வெள்ளையின மக்களையும் எவ்வாறு பிரித்தார் என்பதைப் பற்றி மகிழ்ச்சியுடன் பேசினார்: “நான் சில நடவடிக்கைகளை எடுத்தேன்… எனது வெள்ளை நண்பர்களில் பெரும்பாலோரை நான் முறையாக எனது பாதையிலிருந்து அகற்றிவிட்டேன். மேலும் என் குழுவினுள் புகுந்துகொண்ட சில வெள்ளையின BIPOC களை [கருப்பு, பழங்குடி மற்றும் வேறுநிற மக்கள்] அகற்றிவிட்டேன்".

அதிகரித்து வரும் சர்ச்சையை எதிர்கொண்டு, இந்த உரையிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள பல்கலைக்கழகம் செயல்பட்டுள்ளது. Yale School of Medicine உரையின் உள்ளடக்கங்களை "பள்ளியின் மதிப்புகளுக்கு முரணானது" என குறிப்பிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை தொடர்ந்தது, “ஒளிப்பதிவை வெளியிடலாமா என்பதை தீர்மானிப்பதில், கருத்துச் சுதந்திரத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு எதிராக பேச்சாளர் வெளிப்படுத்திய தீவிர விரோதப்போக்கு, வன்முறையை வெளிப்படுத்தல் மற்றும் தூற்றுதல்கள் பற்றிய எங்கள் கடுமையான கவலையை நாங்கள் எடைபோட்டோம். யேல் பல்கலைக்கழகத்தின் உரையில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே அணுகக்கூடிய வகையில் ஒளிப்பதிவை வெளியிட முடிவு செய்தோம்”.

ஒரு அப்பட்டமான வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் வன்முறையைத் தூண்டுவதற்காக இது கைதட்டலை பெறுகின்றது. முதலாளித்துவ ஆட்சியின் எதிர்கால தலைவர்களை வளர்த்தெடுக்கும் Ivy League நிறுவனமான யேல் பல்கலைக்கழகம் ஏன் தலைப்பு "வெள்ளையின சிந்தனை" இயல்பாகவே "மனநோயானது" என்பதைக் குறித்த ஒரு உரையை நடத்துகிறது என்ற கேள்விகள் எழுகின்றன. அடையாள அரசியல் பிரதானமான போக்காக மாறியுள்ள ஜனநாயகக் கட்சியால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஆளும் வர்க்கத்தின் அந்த பிரிவுகளைப் பற்றி இது வெளிப்படுத்தி காட்டுகிறது.

பேச்சாளரைப் பொறுத்தவரை, அவரது சமூக பின்னணி வசதியான நடுத்தர வர்க்க உறுப்பினர்களுக்கு பொதுவானது. வன்முறை, இனவெறி மற்றும் ஓரங்கட்டப்பட்ட அடையாளங்களில் நிபுணத்துவம் வாய்ந்த “தடயவியல் உளவியலாளர் மற்றும் உளவியல் ஆய்வாளர்” என்று தனது இணையதளத்தில் விவரிக்கப்பட்டுள்ள கிலனானி நியூ யோர்க் பல்கலைக்கழகம், கார்னெல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றார்.

அவரது சலுகை பெற்ற சமூக சூழலில் துண்டிக்கப்பட்ட, சமூக பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் அனைத்து வெள்ளையின மக்களுக்கும் ஒரு உள்ளார்ந்த “சலுகை” உண்டு. இது மற்ற இனங்களை விட அவர்களுக்கு ஒரு நன்மையை அளிக்கிறது என்ற அவரது முழு பகுத்தறிவற்ற உலகக் கண்ணோட்டம் அனைத்து இனங்களின் தொழிலாளர்களும் எதிர்கொள்ளும் கடுமையான யதார்த்தங்களிலிருந்து முற்றிலும் அந்நியப்பட்டதன் விளைவாகும். 2020 ஆம் ஆண்டில் டொனால்ட் ட்ரம்பிற்கு ஏன் பல கறுப்பினத்தவர்கள் மற்றும் ஹிஸ்பானியர்கள் வாக்களித்தார்கள் என்று ஒரு நேர்காணலில் கேட்டபோது, “இது உள்மயமாக்கப்பட்ட வெண்மை" (“It’s internalized whiteness”) என்று பதிலளித்தார். விஞ்ஞானரீதியான பகுப்பாய்விற்குப் பதிலாக, போலி-இடது அவர்களின் இனவெறி கோட்பாடுகளுக்கு முரணான எதையும் விளக்க "வெண்மை" என்ற போலிக்காரணத்தை அழைப்பது மிகவும் எளிதானது.

அவருடைய கருத்துக்கள் அவரது துறையில் கூட அசாதாரணமானவை அல்ல. அமெரிக்க மனோவியல் பகுப்பாய்வு சங்கத்தின் ஜேர்னலில் வெளியிடப்பட்ட டொனால்ட் மோஸின் மே 27 கட்டுரை, “வெண்மையாக்குதல்” என்ற தலைப்பில் “வெண்மையாக இருத்தல்” என்பது “வெள்ளையின” மக்கள் ஒரு குறிப்பிட்ட பாதிப்புக்குள்ளான ஒரு வீரியம் மிக்க, ஒட்டுண்ணி போன்ற நிலை என்று விவரிக்கிறது. இது தொடர்கிறது: “ஒட்டுண்ணித்தனமான வெண்மை அதன் உணவளிப்பவர்களின் பசியை பெருவேட்கையுள்ளதாக்கி, தீராததாக மற்றும் விபரீதமானதாக்குகின்றது. இந்த சிதைந்த பசி, குறிப்பாக வெள்ளையினத்தவர்கள் அல்லாத மக்களை குறிவைக்கிறது." இத்தகைய அடுக்குகளுக்கு, விஞ்ஞான எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவற்ற கருத்துக்கள் நாளாந்த நிகழ்ச்சிநிரலாக மாறிவிட்டன.

இந்த சூழலில், கிலனானியின் வார்த்தைகள் குறிப்பாக குழப்பமான ஒரு நபரின் சலசலப்பைக் குறிக்கவில்ல. ஆனால் இந்த செல்வந்த தட்டுக்களின் உலகக் கண்ணோட்டத்தின் வெளிப்பாடும், அடையாள அரசியலை அதிக செல்வத்தினையும் செல்வாக்கினையும் பெறுவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன.

இந்த வகையான வர்ணனையானது இன வெறுப்புகளைத் தூண்டுவதைத் தவிர வேறு எந்த நோக்கத்தையும் கொண்டிருக்க முடியாது. போலி-இடது கூறுகள் அனைத்து வெள்ளையின மக்களுக்கும் இனவெறி மற்றும் ஒடுக்குமுறைக்கு ஒரு உள்ளார்ந்த உணர்திறன் இருப்பதாகக் கூறும்போது, இதன் ஒரே தர்க்கரீதியான முடிவு பிரிவினை மற்றும் இனப் போரை நோக்கிய பாதையாகும். இதில் அவர்கள் தீவிர வலதுசாரிகளுடன் ஒரு வகையான கூட்டுறவு உறவை உருவாக்குகிறார்கள். உண்மையில், அவர்கள் ஒருவருக்கொருவர் உணவளிக்கிறார்கள். இனம் பற்றி வெள்ளையின மக்களிடம் பேசுவது “பயனற்றது” என்ற கிலனானியின் கூற்று-வேறுவிதமாகக் கூறினால், வெள்ளையினத்தவர்களுக்கும் பிற இனங்களுக்கும் இடையில் நல்லிணக்கம் இருக்க முடியாது. இக்கருத்தை நிச்சயமாக வெள்ளை மேலாதிக்கவாதிகள் மற்றும் நவ-நாஜிக்கள் ஒப்புக்கொள்வார்கள்.

பொலிஸ் மற்றும் இராணுவம் உட்பட சில பின்தங்கிய அடுக்குகளிடையே இனவெறி நிலவுகிறது மற்றும் வளர்த்தெடுக்கப்படுகின்றது என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், இது தொழிலாள வர்க்கத்தின் மீதான நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தின் குறிப்பாக இழிவான வெளிப்பாடாக உள்ளது.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் மீதான சுரண்டல்களுக்கு எதிராக பாரிய போராட்டங்களுக்குள் நுழைந்து கொண்டிருக்கும் ஒரு நேரத்தில், யேலில் பேச்சாளரால் குறிப்பாக நோயுற்ற வடிவத்தில் வெளிப்படுத்தப்படும் போலி-இடதுகளின் வர்க்கப் பாத்திரம் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை நாசமாக்குவதாகும். இது இன, பாலின மற்றும் பிற தன்னிச்சையான பிளவுகளைத் தூண்டி, அதன் இறுதி நோக்கம் முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதாகும்.

உண்மையான சோசலிஸ்டுகள் அனைத்து வகையான ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முதலாளித்துவ அமைப்பின் மீது தொழிலாள வர்க்கத்தின் ஒரு முன்னணி தாக்குதல் தேவை என்று வலியுறுத்துகின்றனர். இது வர்க்க எதிரியின் முகவர்களால் பிளவுபடுத்தும் ஆத்திரமூட்டல்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், தொழிலாள வர்க்கத்தின் அத்தியாவசிய ஐக்கியத்திற்கான தீவிரமான போராட்டத்தை அவசியமாக்குகிறது.

Loading