தொற்றுநோயால் தூண்டப்பட்ட பூகோள அளவில் அதிகரித்துவரும் பசி மற்றும் சமூக நெருக்கடிக்கு மத்தியில் மே மாதத்தில் உணவு விலைகள் 40 சதவிகிதம் அதிகரிப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (Food and Agriculture Organization-FAO) மாதாந்திர உணவு விலைக் குறியீடு மே மாதத்தில் 40 சதவிகிதம் அதிகரித்தது, இது கடந்த தசாப்தத்தின் மிகப்பெரிய அதிகரிப்பாகும். கடந்த ஆண்டின் ஆண்டுரீதியிலான விலை அதிகரிப்பானது பரந்த விலை வீக்கத்திற்கான குறிகாட்டியாக பரவலாக விளக்கப்பட்டது.

FAO இன் வியாழக்கிழமை அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது: “மே மாத விலை அதிகரிப்பு அக்டோபர் 2010 க்குப் பின்னரான மிகப்பெரிய மாதாந்திர இலாபத்தைக் குறிக்கிறது. இது மேலும், தொடர்ச்சியான பன்னிரண்டு மாத விலை அதிகரிப்பு செப்டம்பர் 2011 க்குப் பின்னர் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உணவு விலைக் குறியீட்டில் (FAO food price index - FFPI) அதன் உச்சக்கட்ட மதிப்பை குறிக்கிறது. மே மாதத்தின் கூர்மையான அதிகரிப்பானது, இறைச்சி மற்றும் பால் உணவுகள் உட்பட, எண்ணெய், சர்க்கரை மற்றும் தானியங்களின் விலைகளும் கூட அதிகரித்திருந்தது.” FFPI என்பது, ஒரு கூட்டு உணவுப் பொருட்களின் சர்வதேச விலைகளின் மாதாந்திர மாற்றத்திற்கான ஒரு அளவீடாகும்.

மே 22, 2021, சனிக்கிழமை, பிரேசிலின், ரியோ டி ஜெனிரோ நகரின் ஜார்டிம் கிராம சேரிப் பகுதியில் Covid Without Hunger அமைப்பு தானம் செய்த உணவைப் பெற பெண்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள் (AP Photo/Silvia Izquierdo)

இந்த அறிக்கையின் படி, சோளத்தின் விலை ஓராண்டுக்கு முன்பு இருந்ததை விட 67 சதவீதம் அதிகமாகும், சர்க்கரை விலை அண்ணளவாக 60 சதவீதம் உயர்ந்துள்ளது, மேலும் சமையல் எண்ணெய் விலை இருமடங்காகியுள்ளது. கடுமையாக அதிகரித்து வரும் உணவு விலைகள், ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் பாரிய நிலைமைகளை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் எதிர்கொண்டிருக்கும் அதேநேரம் உலகின் மிக வறிய நாடுகளில் பசிக் கொடுமை வேகமாக அதிகரிப்பதானது பாரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.

ஐ.நா. உலக உணவுத் திட்டம் (UN World Food Program), அது செயல்படும் 79 நாடுகளில் தற்போது 270 மில்லியன் மக்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் அல்லது மோசமான நிலமைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது, இது 2019 ஆம் ஆண்டை விட இருமடங்காகும். தென்கிழக்கு ஆசியா, ஆபிரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா ஆகிய பகுதிகள் உணவு விலைகளின் அதிவேக அதிகரிப்பால் இப் பிராந்தியங்களில் பசிக் கொடுமையானது தலைவிரித்தாடுகிறது.

தொற்றுநோயின் விளைவாக 2020 ஆம் ஆண்டில் உலக சனத்தொகையில் 124 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே, அதாவது நாளொன்றுக்கு 1.90 டாலருக்கு குறைவான வருமானத்தில் வாழ்ந்ததாக உலக வங்கி மதிப்பிடுகிறது.இது 2021 ஆம் ஆண்டில் மேலும் 39 மில்லியன் மக்கள் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, இது பாரிய வறுமையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை 750 மில்லியனாக்கும்.

தொடர்ச்சியான உலகளாவிய காலநிலை மாற்றங்கள் மற்றும் பொருளாதார காரணிகளால் உணவு விலை அதிகரிப்புகள் நிகழும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, Bloomberg இவ்வாறு தெரிவிக்கிறது: “முக்கிய பிரேசிலிய வளர்ச்சிப் பிராந்தியங்களில் நிலவும் வறட்சி சோளத்திலிருந்து காபி(Coffee) வரையிலான பயிர் தொழிலை பாதிக்கின்றது, மேலும் தென்கிழக்கு ஆசியாவில் காய்கறி எண்ணெய் உற்பத்தி வளர்ச்சி குறைந்துள்ளது. இது கால்நடை உற்பத்தியாளர்களின் உற்பத்திச்செலவுகளை அதிகரிப்பதோடு, சீன தேவை அதிகரிப்பதன் மூலம் குறைந்துபோன உலகளாவிய தானிய கையிருப்புக்களை மேலும் பாதிக்கும் அபாயங்களையும் கொண்டுள்ளது.”

சீனாவின் பொருளாதார விரிவாக்கத்தால் உந்தப்படும் உணவு வழங்கல் சிக்கல்களில் பன்றி மந்தைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தேவை அதிகரித்துள்ளது, அவை சமீபத்திய ஆண்டுகளில் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. பன்றி உணவுகளில் சோளம் மற்றும் சோயாபீன்ஸ் போன்ற பிரதான உணவுப் பொருட்கள் உள்ளடங்கும், இவை மக்களாலும் நுகரப்படுகின்றன.

மற்ற ஆய்வாளர்கள், உலகளாவிய உணவு விநியோகத்தில் கோவிட்-19 தொற்றுநோய் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை சுட்டிக்காட்டியுள்ளனர், அதாவது இதன் காரணமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் விநியோக செலவுகளை அதிகரித்துள்ளன, அதேவேளை மக்களின் வருமானங்கள் குறைந்து வருவதானது விலை குறைந்த உணவுப் பொருட்களுக்கான நுகர்வை அதிகரித்துள்ளது என்கின்றனர்.

தொற்றுநோய் பரவலானது அதிகரிக்கும் அதேவேளை கோவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், உலகம் முழுவதும் உணவகங்கள் செயல்படத் தொடங்கியதால் விலை உயர்வுகள் அதிகரிக்கின்றன என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். FAO இன் மூத்த பொருளாதார நிபணர் அப்தோல்ரேஸா அப்பாசியன் (Abdolreza Abbassian), “வெளியில் சாப்பிடுவதால் ஏற்பட்ட விலைவீழ்ச்சி வீட்டில் சாப்பிடுவதால் முற்றிலும் மாறுபடவில்லை, என்றாலும் மக்கள் மீண்டும் உணவகங்களுக்குச் செல்லத் தொடங்கும்போது, உணவு விலைகள் உயர்வதை நீங்கள் காண்பீர்கள்” என்று கூறினார்.

தற்போதைய விலை அதிகரிப்புகளை 10 ஆண்டுகளுக்கு முன்னைய உணவு விலை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட தலைமை பொருளாதார நிபுணர் ஆரிஃப் ஹூசைன் (Arif Husain), “இந்த நேரத்தில் தனித்துவமானது என்னவென்றால், விலைகள் உயர்ந்து கொண்டிருக்கும் அதேவேளை மக்களின் வருமானங்கள் குறைந்து விட்டது. உயரும் விலைகள் மற்றும் கொள்வனவுசக்தியின்மை என்ற இந்த இரண்டின் கலவை என்பது மக்களால் சமாளிக்க முடியாத மிக ஆபத்தான சிக்கலாகும்” என்று கூறினார்.

தீவிர உலகளாவிய உணவு விலை உயர்வுகளும் மற்றும் அதிகரிக்கும் பசிக் கொடுமையும், முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியின் கூர்மையான வெளிப்பாடுகளில் அடங்கும், இது பரந்துபட்ட மக்களின் உடனடி வாழ்வா சாவா பிரச்சினை என்பதால், இதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சோசலிச புரட்சியும் அதன் பொருளாதாரத் திட்டமிடலும் அவசியம் என்பதையே இது காட்டுகிறது.

பூகோள அளவில் கொடிய தொற்றுநோய் பரவலுக்கு இணையாக கடந்த ஆண்டு முழுவதும் உணவு விலையின் உயர்வும் இருந்தது. ஏகாதிபத்திய சக்திகள் தடுப்பூசிகளை பதுக்கி வைத்து வறுமை நாடுகளுக்கு அவற்றை வழங்க மறுத்துள்ள நிலையில், வாழ்க்கையின் அடிப்படை தேவைகளின் விலைகள் அதிகரித்தமை அவற்றை பெற முடியாத நிலையும்,அத்தோடு இந்த மக்களிடையே தொற்றுநோய் அதிகரித்தும் வருகிறது.

உணவு விலை நெருக்கடிக்கு மத்தியில், சமூக ஸ்திரமின்மை, புலம்பெயர்வு மற்றும் அரசியல் அமைதியின்மை ஆகியவை குறித்து நிதிய பிரபுத்துவம் கவலையடைவதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டது. “உணவு விலைகள் உலகின் ஏழைகளின் துயரங்களை அதிகரிக்கின்றன,” என்ற வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் மே 20 ஆம் தேதிய கட்டுரை இவ்வாறு குறிப்பிட்டது: “உணவு மற்றும் எரிபொருட்களின் முன்னைய பாரிய விலை அதிகரிப்புக்கள் 2011 ‘அரபு வசந்த’(Arab Spring) புரட்சிகள் உட்பட, சமீபத்திய தசாப்தங்களில் அரசியல் ஸ்திரமின்மைக்கு பங்களித்தன. இந்த ஆண்டு அந்த அளவிற்கு எதுவும் எழவில்லை என்றாலும், இப்போது அமைதியின்மையை எதிர்கொள்ளும் பல நாடுகளின் துன்பங்களில் ஒன்றாக உணவுகளின் விலை அதிகரிப்புகளும் அடங்கும்.”

கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை குவாத்தமாலாவில் உடனடியாக 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது மற்றும் ஹோண்டுராஸில் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்ற வகையில் கொலம்பியா மற்றும் சூடான் நாடுகளின் பாரிய ஆர்ப்பாட்டங்களையும்,மற்றும் அமெரிக்க தெற்கு எல்லை எங்கிலுமான புலம்பெயர்வின் முதன்மை காரணமான அதிகரித்து வரும் பசிக் கொடுமையையும் சுட்டிக்காட்டி, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினரிடையே எச்சரிக்கைகளை எழுப்புகிறது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், உலகளாவிய தொண்டு நிறுவனம் Oxfam இன் மனிதாபிமான திட்டங்களுக்கான குவாத்தமாலாவுக்கான ஒருங்கிணைப்பாளர் Ivan Aguilar உடன் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்: “உணவுப் பாதுகாப்பின்மையைப் பொறுத்தவரை, குவாத்தமாலாவில் குறைந்தது 20 ஆண்டுகளாக நாம் படுமோசமான நிலையில் இருக்கிறோம். இது மிகுந்த கவலையளிக்கும் விடயமாகும், மேலும் சம்பவங்களை மோசமாக்குகிறது, அதாவது ஏழைகளுக்கு உதவுவதற்கான குறைவான வழிமுறைகளைக்கொண்ட பிராந்தியத்தில் உங்களிடம் பலவீனமான அரசாங்கங்களே உள்ளன.”

விலை வீக்கத்தின் பரந்த பொருளாதார தாக்கங்கள் பற்றி சமீபத்திய வாரங்களில் விவாதிக்கப்பட்டுள்ளன, மேலும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி போன்ற ஆளும் வட்டாரங்களுக்குள் வளர்ந்து வரும் கவலையாகவும் இவ் விடயம் உள்ளது.

பணவீக்கம் ஒரு கவலைப்பட வேண்டிய விடயமல்ல என்று பைடென் நிர்வாகம் உத்தியோகபூர்வமாக கூறியுள்ள அதேவேளை, கருவூல செயலாளர் ஜெனட் யெல்லன் (Janet yellen) மே 4 அன்று, வட்டி விகித உயர்வுகள் மூலம் எதிர்பாராத பணவீக்க வெடிப்புக்களை பெடரல் ரிசர்வ் எளிதில் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார். இருப்பினும், அதே நாளில் யெல்லன் (Yellen) அந்த கருத்துக்களை திரும்பப் பெற முயன்றார், ஏனென்றால் விலைகளின் அதிகரிப்புக்கள் சந்தைகளில் பணப்புழக்கத்தை சீர்குலைக்கும் என்பதால், அதாவது வோல் ஸ்ட்ரீட்டில் பங்கு மதிப்புகள் தற்போது பிரமிக்கத்தக்க வகையில் அதிகரிக்கிறது, மற்றும் தொற்றுநோய் காலம் முழுவதும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் செல்வமும் முன்னொருபோதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகின்றது.

Loading