"தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுதல்" என்பதன் கீழ் இலங்கை அரசாங்கம் பொதுமக்கள் மீதான பொலிஸ் ஒடுக்குமுறையை அதிகரிக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜூன் 18 ஊடக அறிக்கைகளின் படி, கடந்த 24 மணி நேரத்தில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை போன்ற தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றத்திற்காக 1390 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 2020 அக்டோபர் 30 முதல் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றத்திற்காக 38,311 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கைகள் கூறுகின்றன.

அடுத்த வார இறுதியில் நாடு முழுவதும் விசேட நடமாடும் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தல் விதிகளை மீறுபவர்களைக் கைது செய்ய சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று, பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹானா தெரிவித்தார். அதே நேரம், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களின் நடத்தைகளை கண்காணிக்க ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எறாவூரில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியவர்கள் இராணுவத் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட விதம் [Facebook]

இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் கொடூரமான சரீர தாக்குதலுக்கும் சில சமயங்களில் மரணத்திற்கும் கூட ஆளாகிறார்கள் என்று அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன. மே 17, வெலிகம பகுதியில் மிடிகமவில் வசிக்கும் 49 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை டி. சுனில் இந்திரஜித் மற்றும் ஜூன் 7 அன்று பாணந்துறையில் சரிக்காமுல்லாவைச் சேர்ந்த மொஹமட் அலி என்ற 42 வயது தொழிலாளியும் 'தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக' அவர்களுக்கு எதிரான பொலிஸ் நடவடிக்கையின் போது கொல்லப்பட்டனர்.

கை மற்றும் கால்களை பிடித்து தூக்கிக்கொண்டு செல்லுதல் உட்பட, பொலிஸ் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படும் விதத்தை 'பயணக் கட்டுப்பாடுகள்' விதிக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் ஊடகங்களில் அடிக்கடி காணக்கூடியதாக இருந்தது. இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிரான பொதுமக்கள் விரோத கைதினை எதிர்கொண்டுள்ள நிலையில், அவ்வாறு 'துன்புறுத்தல் செய்யப்படவில்லை' என்று கூட கூறுவதற்கு பிரதி பொலிஸ்மா அதிபர் நிர்ப்பந்திக்கப்பட்டார்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் நடமாட்டத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்துவது உட்பட சுகாதார நடவடிக்கைகள் அவசியம். ஆனால், 'தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுதல்' என்ற சாக்குப் போக்கின் கீழ் அரசாங்கம் மக்களுக்குச் செய்யும் துன்புறுத்தல்களுக்கும் மக்களின் உயிரை தொற்று நோயில் இருந்து பாதுகாப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசாங்கத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஆர்வமே உள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே, இராஜபக்ஷ அரசாங்கம் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முதற்படியான அனைத்து அத்தியாவசியமற்ற உற்பத்திகளையும் மூடுவதையும், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான பரிசோதனைகளை பாரிய அளவில் அதிகரிப்பைதையும் குற்றவியல் தனமாக நிராகரித்தது. ஏனெனில், இத்தகைய நடவடிக்கைகள் முதலாளித்துவ இலாபம் ஈட்டும் செயல்முறைக்கு எதிரானவை ஆகும்.

கூட்டுத்தாபன இலாபங்களை மனித வாழ்க்கைக்கு மேலாக வைக்கும் இந்த கொலைகாரக் கொள்கையின் விளைவாக, இலங்கையில் இன்றுவரை 235,413 கொரோனா தொற்றாளர்கள் இருப்பதோடு 2,480 பேர் இறந்துள்ளனர்.

இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பத்மா குணரத்ன உட்பட தொற்றுநோயியல் நிபுணர்கள், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள போதிலும், பயணக் கட்டுப்பாடுகள் என்று அழைக்கப்படுவதைக் கூட நீக்குவதே இராஜபக்ஷ அரசாங்கம் பதிலளிப்பாக இருந்துள்ளது.

நேற்று தொற்றுநோய் தடுப்பு செயலணியின் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஒரே நாளில் 101 பேர் இறந்துவிட்டார்கள் என்ற 'தவறான' தகவல்களால், தான், தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், அதனால் அரசாங்கம் அகற்றவிருந்த 'பயண கட்டுப்பாடுகளை' மேலும் மற்றொரு வாரத்திற்கு நீடிக்க நேர்ந்ததாகவும், கூறியதுடன், உண்மையில் அன்று 14 பேர்தான் மட்டுமே இறந்திருந்தனர், என்று அவர் முதலாளிகளை சாந்தப்படுத்துவதற்காக கூறினார்.

'அந்த நாளில் 14 பேர் மட்டுமே இறந்தனர்' என்று துல்லியமாக தெரிவிக்கப்பட்டிருந்தால் அது அவ்வாறு இருக்காது என்று அவர் கோபமாக கூறினார். மனித உயிர்களை பற்றிய அவரது கொடூரமான அலட்சியத்திற்குப் பின்னால் இருப்பது பெரும் முதலாளிகளின் இலாப நோக்கமே ஆகும்.

தொற்றுநோய் பரவுவதற்கான மையங்களாக மாறியுள்ள ஆடைத் தொழிற்சாலைகள் உட்பட அனைத்து அத்தியாவசியமற்ற உற்பத்திகளையும் திறந்த நிலையில் வைத்திருக்கும் இந்தக் கொள்கையின் விளைவாக, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

தொற்றுநோயின் பேரழிவுகரமான பரவலை மூடி மறைக்க பி.சி.ஆர். பரிசோதனைகளை பாரியளவில் குறைத்திருக்கின்ற போதிலும், கிட்டத்தட்ட 2,500 அல்லது அதற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் தினமும் பதிவாகின்றனர். தினசரி தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மிகவும் சக்திவாய்ந்த கொவிட்-19 வைரஸ் விகாரங்களில் ஒன்றான டெல்டா வைரஸ், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பேரழிவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதற்கு அதனால் தண்டிக்கப்பட்டு வரும் இந்தியா உதாரணமாக உள்ளது.

இந்தச் சூழலில்தான், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் அரசாங்கம் பொலிஸ் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளது. இது இரண்டு நோக்கங்களைக் கொண்டுள்ளது: முதலாவது, தொற்றுநோயின் பேரழிவு பரவலுக்கு பொதுமக்களே பொறுப்பேற்க வேண்டும். சுகாதாரப் பாதுகாப்பு பரிந்துரைகளை பொதுமக்கள் புறக்கணித்ததன் விளைவாகவே தொற்றுநோய் பரவுகின்றது என்பதை தூக்கிப் பிடித்து காட்டுதவற்காக, இந்த கைதுகளுக்கு ஊடகங்களின் ஊடாக பெரும் பிரச்சாரம் வழங்கப்படுகிறது.

ஆனால் உண்மை அது அல்ல. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமற்ற 'அத்தியாவசிய சேவைகளின்' கீழ் முன்னெடுக்கப்படும் உற்பத்திகள் மற்றும் சேவைகளிலும், அதிகாரப்பூர்வமற்ற 'அத்தியாவசிய சேவைகளின்' கீழ் உள்ள ஆடை போன்ற தொழில்துறைகளிலும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தினமும் வேலைக்கு பயணம் செய்கிறார்கள்.

இந்த இடம்பெயர்வுகளாலேயே தொற்றுநோயின் முதன்மை பரவல் ஏற்படுகிறது. ஆகவே, அத்தியாவசியமற்ற உற்பத்திகள் மற்றும் சேவைகளை திறந்த நிலையில் வைத்திருப்பதன் மூலம், தொற்று நோயையை பரவச் செய்துள்ள அரசாங்கமே, இந்த பேரழிவிற்கு முழு பொறுப்பு ஆகும்.

'தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு' எதிரான துன்புறுத்தல்களின் மற்றொரு நோக்கம், பொதுமக்களை அச்சுறுத்துவதாகும். தொற்றுநோயால் தீவிரமாக்கப்பட்டுள்ளஃ பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதில், அரசாங்கம் முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கு எதிராக, மற்றும் தொற்றுநோய்க்கு குற்றவியல்தனமாக பிரதிபலிப்பதற்கும் எதிராக, தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் போராட்டங்களை, அச்சுறுத்துவதற்கும் முறியடிப்பதற்கும் இந்த பயங்கரம் பயன்படுத்தப்படுகிறது.

'தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களை' சிக்க வைக்க பயன்படுத்தப்படும் ட்ரோன் தொழில்நுட்பம் உண்மையில் பொது போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை உளவு பார்ப்பதற்கான நிச்சயமான பணிக்காக அமைக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் 'போலி செய்தி தணிக்கை' என்ற போர்வையில், சமூக ஊடக வலையமைப்புகளுக்கு கட்டுப்பாடுகளை திணிப்பது, அதன் கீழ் கைது செய்வது போன்ற அனைத்தின் கீழும், தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை நசுக்குவதற்கான தயாரிப்பில் இராணுவ அடிப்படையிலான ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான இராஜபக்ஷவின் நடவடிக்கைகளுடன் பிணைந்தவை ஆகும்.

Loading