இலங்கையின் வடக்கில் ஆடைத் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வேலைக்கு அமர்த்த அரசாங்கம் இராணுவத்தைப் பயன்படுத்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் போலவே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் உள்ள ஆடைத் தொழிற்சாலைகள், கொரோனா தொற்றுநோய் பரவுவதற்கான முக்கிய மையங்களாக மாறியுள்ளன. அந்த சூழலில், தொற்று நோயிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக வேலைக்கு வர மறுக்கும் ஆடைத் தொழிலாளர்களை இராணுவ அச்சுறுத்தல்கள் மூலம் பலாத்காரமாக வேலைக்கு கொண்டுவரும் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த வாரம் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியான ஒரு அறிக்கையின்படி, வேலைக்கு வருகை தராவிட்டால் நிறுவனம் கொடுக்கும் எந்தவொரு கொடுப்பனவுக்கும் தகுதியற்றவர்கள் என்று அச்சுறுத்துவதன் மூலம், மருதங்கேனி பகுதியில் தொழிலாளர் குழுவினர் இராணுவத்தினால் வலுக்கட்டாயமாக வேலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 7, புத்துக்குடியிருப்பில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில், 1,500 தொழிலாளர்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னர், 261 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது. பொது சுகாதார ஆய்வாளர்கள் கூறுகையில், பல தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டபோதே தொழிற்சாலையை மூட அறிவுறுத்தப்பட்டாலும், அதை அலட்சியம் செய்து தொழிற்சாலை தொடர்ந்து செயல்பட்டு வந்தது என்றனர்.

கிளிநொச்சி மாஸ் தொழிற்சாலையில் ஜன நெரிசலான உணவகம் - நவம்பர் 2020

ஜூன் 8 அன்று, தனிமைப்படுத்தப்படாத தொழிலாளர் குழுவினரை புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் வேலைக்கு அழைத்துச் சென்றபோது, சுதந்திரபுரத்தில் வசிப்பவர்கள் தொழிலாளர்களை அழைத்துச் சென்ற பேரூந்தை மறித்து, அவர்களை பலாத்காரமாக வேலைக்கு கொண்டு செல்வதை தடுத்து நிறுத்தினர். பொலிசும் இராணுவமும் போராட்டக்காரர்களை விரட்டிவிட்டு தொழிலாளர்களை தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ததோடு, பின்னர் 5 போராட்டக்காரர்களை பொலிஸ் கைது செய்தது.

அதே நேரம், தொற்றுநோய் பரவல் காரணமாக மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபம் தடம்புரளும் சந்தர்ப்பங்களும் செய்திகளில் வெளி வந்துள்ளன. ஜூன் 13 அன்று, வவுனியாவின் முருகனூர் பிரதேசத்தில் ஆடைத் தொழிலாளர்களைக் கொண்டு செல்லும் பேருந்துக்கு முகமூடி அணிந்த ஒரு குழுவினர் பொல்லுகளால் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தினர். பஸ் சாரதி மற்றும் தொழிலாளர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். அதற்கு முன்னதாக, கொவிட் -19 வைரஸை பரப்பும் ஆடைத் தொழிலாளர்களை தங்கள் பகுதிக்கு அழைத்து வர வேண்டாம் என்று அந்த குழு பிரச்சாரம் செய்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், ஆடைத் தொழிலாளர்கள் வைரஸை பரப்புபவர்கள் அல்ல. முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளின் ஒத்துழைப்புடன் சமூகப்படுகொலைக் கொள்கையை நடைமுறைப்படுத்தியுள்ள இராஜபக்ஷ அரசாங்கமே, நோய் பரவுவதற்கு பொறுப்பாகும்.

மே மாதத்தில் மட்டும், கிளிநொச்சியில் உள்ள வானவில் மற்றும் விடியல் என்ற மாஸ் கோல்டிங் நிறுவனத்துக்கு சொந்தமான ஆடைத் தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் வைரஸால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இது தொற்றுநோய் பரவலின் பேரழிவை அறிவித்தது. இந்த தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த சாந்தபுரம் கிராமம், மே 29 அன்று தனிமைப்படுத்தப்பட்டது. ஜூன் 13 அன்று, தொழிலாளர்களின் கடுமையான எதிர்ப்பை சந்தித்த நிலையில், சுமார் 4,000 பேர் பணியாற்றும் இந்த தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டது.

கிளிநொச்சியில் இராணுவமும் பொலிசும் தங்களை பலாத்காரமாக வேலைக்கு அனுப்புவதற்கு எதிராக பேரூந்தை விட்டு இறங்கி நிற்கும் வானவில் தொழிலாளர்கள் [Photo credit: WSWS media]

கிழக்குமாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 3,000 பேர் பணியாற்றும் தலங்குடா பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில், பெருந்தொகையான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், மே 26 முதல் ஜூன் 6 வரை மூடப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் வெளிவரும் தினக்குரல் பத்திரிகை தெரிவித்துள்ளது.

பல பகுதிகளில் சிதறிக்கிடக்கும் இந்த தொழிலாளர்கள், அவர்களின் கிராமப்புறங்களுக்கு செல்லும் போது அங்கும் இந்த நோய் பரவும் அபாயம் உள்ளது. கிளிநொச்சியின் தர்மபுரத்தில் இரண்டு மாத குழந்தைக்கு, ஆடைத் தொழிலாளியான அவரது தந்தை மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டது.

கிளிநொச்சியில் தாங்கள் சிகிச்சையளிக்க வேண்டிய இடம் எத்தகையது என்பது பற்றி பரிசோதிப்பதற்காக, தொழிற்சாலைகளுக்குள் நுழைவதற்கு, பொது சுகாதார ஆய்வாளர்கள் அல்லது பிற சுகாதார அதிகாரிகளுக்கு தொழிற்சாலை நிர்வாகம் அனுமதி வழங்காத நிலையில், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பது எப்படி? என்று பெயர் குறிப்பிட விரும்பாத பொது சுகாதார ஆய்வாளர் ஒருவர்,கேட்டார். என சண்டே ரைம்ஸ் பத்திரிகை கூறுகின்றது.

வானவில் தொழிற்சாலையில் நிலவும் ஆரோக்கியத்திற்கு பாதகமான நிலைமைகள் மற்றும் அதனால் தொற்றுநோய் அபாயம் அதிகரிக்கும் நிலைமை குறித்து உலக சோசலிச வலைத் தளம் சிறப்பு அம்பலப்படுத்தல்களை செய்தது,. இதற்கு பதிலளிக்கும் வகையில், தொழிற்சாலை நிர்வாகமானது தொழிலாளர்களின் நிலைமைகள் குறித்த தகவல்களை வெளியிட வேண்டாம் என தொழிலாளர்களை அச்சுறுத்தியது.

கிளிநொச்சியில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு முன்னால், அந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளியான அவரது மனைவி தொற்றுக்கு உள்ளான போது, அவருக்கு உடனடி சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்று கூறி, ஒரு தந்தை தனது மூன்று பிள்ளைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் என சண்டே டைம்ஸ் மேலும் தெரிவிக்கிறது.

நோயாளர்களை சரியான நேரத்தில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்காமல், அவர்களிடம் தொடர்ந்து வேலை வாங்குவது சம்பந்தமான, ஒரு இழிவான வரலாறு இந்த ஆடை தொழிற்சாலைகளுக்கு உண்டு. கடந்த ஆண்டு, மினுவாங்கொடவில் உள்ள பிரண்டிக்ஸ் தொழிற்சாலையில் பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு கொவிட்-19 அறிகுறிகள் தெரிந்தபோதிலும், அவர்களுக்கு வலி நிவாரணி மருந்துகளை கொடுத்து, தொடர்ந்து வேலை வாங்கியிருந்தனர்.

தொற்று நோயை மேலும் பரப்பியவாறே இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தியை தொடர்வது குறித்து, பொதுமக்கள் மத்தியில் சீற்றம் அதிகரித்து வந்த நிலையில், தமிழ் முதலாளித்துவ அரசியல்வாதிகள், தொழிற்சாலைகளை மூடுமாறு கோரி, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதங்கள் அனுப்பும் மோசடியில் ஈடுபட்டனர். ஜூன் 9 அன்று, புதுக்குடியிருப்பு தொழிற்சாலை மீண்டும் திறக்கப்படுவதைக் கண்டித்து, வவுனியா பாராளுமன்ற உறுப்பினரும் டெலோ அமைப்பின் உறுப்பினருமான வினோநோதராதலிங்கம் ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையில் உள்ள கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபை, இப்பகுதியில் இயங்கும் இரண்டு ஆடை தொழிற்சாலைகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதாக பாசாங்கு செய்து வருகிறது. ஜூன் 5 அன்று, இந்த பிரதேச சபை, வானவில் மற்றும் விடியல் தொழிற்சாலைகளுக்கு திறந்த கடிதங்களை அனுப்பி, தொழிற்சாலைகளை மூடக் கோரி வழக்குத் தாக்கல் செய்தது.

எவ்வாறெனினும், ஜூன் 6 அன்று நடைபெற்ற 2021 இலங்கை முதலீட்டாளர் சபை மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ, தனது அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு ஆதரவானது என்றும், பெருவணிக சார்புடையது என்பதை உலக மூலதனத்திற்கு மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்த நோக்கத்திற்காக வர்க்கப் போராட்டத்தை கொடூரமான முறையில் நசுக்குவதற்காக தொழிலாளர் சட்டங்களையும் ஜனநாயக உரிமைகளையும் கீழறுக்கின்ற இராணுவ அடிப்படையிலான ஜனாதிபதி சர்வாதிகாரத்தை அவர் உருவாக்கி வருகிறார்.

தொழிற்சாலைகளைத் திறந்து வைத்து, தொழிலாளர்களை தொற்று நோய்க்கு பலியிடுவது, இலங்கையில் மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ ஆட்சியாளர்களின் கொள்கையே ஆகும். ஜூன் 2, மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாகாண ஆளுநர்களுடன் நடத்திய கூட்டத்தில், தொற்று நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார் என்பதற்காக தொழிற்சாலைகள் அல்லது மேம்பாட்டு திட்டங்கள் மூடப்படக்கூடாது என்று ஜனாதிபதி இராஜபக்ஷ கூறினார்.

பல அரசாங்க சேவைகளுக்கு அத்தியாவசிய சேவை ஆணைகளை விதித்துள்ள இராஜபக்ஷ, ஏற்றுமதி துறையில் பிரகடனப்படுத்தப்படாத அத்தியாவசிய சேவை ஒழுங்கை பராமரிக்கிறார். இதன்படியே பொலிஸ்-இராணுவத்தைக் கொண்டு தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக தொழிற்சாலைகளுக்கு கொண்டு வரப்படுகிறார்கள்.

சண்டே டைம்ஸ் செய்தியின் படி, ஈழ மக்கள் ஜனாயக கட்சியின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஜூன் 9 அன்று, வட மாகாண சுகாதார அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில், ஜனாதிபதி இராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில், தொழிற்சாலைகள் திறந்தே இருக்க வேண்டும் என்று கூறினார். தொற்றுநோயைக் கட்டுப்படுத்த, தொழிற்சாலைகளை மூடுவதற்குப் பதிலாக, மாவட்ட அளவில் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அங்கு அவர் தெரிவித்தார்.

தொழிற்சாலைகளைத் இயங்க வைப்பது குறித்த இராஜபக்ஷவின் கொள்கையுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்த முரண்பாடும் கிடையாது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தினக்குரல் செய்தியின் படி, ஜூன் 13, கிளிநொச்சியில் உள்ள இரண்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டபோது, மதியம் அந்தப் பிரதேசத்திற்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் தலைவர் வேளமாலிகிதன் ஆகியோருடன் தொழிற்சாலை நிர்வாகம் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருந்தது.

தொற்றுநீக்கி திரவங்களைப் பயன்படுத்தவும், தொழிலாளர்களை பரிசோதனைக்கு உட்படுத்தவும், சுகாதாரத் துறையின் ஒப்புதலுடன் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்ட நாட்களில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கவும் தொழிற்சாலை நிர்வாகம் ஒப்புக் கொண்டதாக வேளமாலிகிதன் ஊடகங்களுக்கு தெரிவித்த போதிலும், இது தொழிலாளர்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்தி, தொழிற்சாலைகளை மீண்டும் விரைவில் திறப்பதற்கான ஒரு தந்திரம் மட்டுமே. தொற்றுநோய்களின் போது, தொழிற்சாலை நிர்வாகங்கள் ஒருபோதும் சுகாதார வழிகாட்டுதல்கள் எனப்படுவதைப் பின்பற்றுவதில்லை மாறாக ஊதிய வெட்டுக்களை நடைமுறைப்படுத்தியுள்ளன.

வேலையின்மைக்குள் தள்ளப்பட்டுள்ள வறிய இளைஞர் யுவதிகளின் மலிவான உழைப்பிலிருந்து தங்கள் பொதியை நிரப்பிக்கொள்ளும் நோக்கிலேயே, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கிற்கு தொழிற்சாலைகள் மாற்றப்படுகின்றன. மாறாக அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அல்ல.

Loading