இலங்கையில் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் கடுமையான மற்றும் மோசமான சமூக நிலமைகளை எதிர்கொள்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

சிறந்த சம்பளம் மற்றும் முன்னேற்றமான வாழ்க்கை நிலைமைகளை வெல்வதற்கான தொழிலாளர்களின் உறுதிப்பாட்டுக்கு பிரதிபலிப்பாக, மஸ்கெலியாவிற்கு அருகிலுள்ள ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக தற்போது நடந்து வரும் தோட்ட நிர்வாகத்தின் ஒடுக்குமுறை, இந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கியது. பெப்ரவரி 2 அன்று வேலை நிறுத்தத்தை ஆரம்பித்த ஓல்டன் தொழிலாளர்கள், மூன்று நாள் கழித்து, தோட்டத் தொழிலாளர்களின் தேசிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதுடன், தோட்ட முகாமையாளரின் துன்புறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்ச் 22 வரை வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர்.

இருபத்தி நான்கு தொழிலாளர்கள் மற்றும் இரண்டு இளைஞர்களும் தோட்ட முகாமையாளர்களை உடல் ரீதியாக தாக்கியதாக, தோட்டக் கம்பனியும் பொலிசும் சேர்ந்து போலியாக குற்றச்சாட்டின. இதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) ஒத்துழைத்தது. இந்த தொழிலாளர்கள் இப்போது நீதிமன்றத்தில் ஒரு குற்றவியல் விசாரணையை எதிர்கொள்கின்றனர். ஓல்டன் தோட்டத்தை நடத்தி வரும் ஹொரன பெருந்தோட்ட நிறுவனம், எந்தவொரு விசாரணையும் நடத்தாமல் அல்லது அதன் கட்டளைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான எந்தவொரு உரிமையையும் அனுமதிக்காமல், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தம் 38 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்துள்ளது.

ஹட்டன் ஃபுருட் ஹில் தோட்டத்தின் லயன் வீடுகள் (Soure: WSWS Media)

எவ்வாறாயினும், ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கொடூரமான நிலைமைகள் தனியானவை அல்ல, மாறாக நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களின் அவலநிலைக்கான எடுத்துக் காட்டு ஆகும். அவர்கள் போதுமான சுகாதாரம், கல்வி மற்றும் வீட்டுவசதி இல்லாமலும் வறுமை மட்டத்திற்குக் குறைவான ஊதியத்தில் வாழ்கின்றனர். இந்த சமூக பேரழிவு, அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களின் ஆசீர்வாதம் மற்றும் தொழிற்சங்கங்களின் தீவிர ஆதரவுடன், இலாபத்தை உறிஞ்சும் கம்பனிகளால் உருவாக்கப்பட்டதாகும்.

ஓல்டன் தோட்டத்தின் நான்கு பிரிவுகளில் தற்போது 500 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இப்பகுதியில் வேலையின்மை மற்றும் வேலை வாய்ப்புக்கான சந்தர்ப்பம் இல்லாமை மிகவும் மோசமானது. தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 200 இளைஞர்கள் கொழும்பு அல்லது பிற பகுதிகளுக்குச் சென்று வேலை தேட முயற்சிக்கின்றனர்.

அண்மையில் அரசாங்கம் ஒப்புதல் அளித்த ஊதிய உயர்வைத் தொடர்ந்து, அவர்களின் அன்றாட ஊதியத்தை 1,000 ரூபாயாக (900 ரூபாய் அடிப்படை சம்பளம் மற்றும் 100 ரூபாய் கொடுப்பனவமாக சுமார் 5 அமெரிக்க டாலர்) சட்டபூர்வமான 24 நாட்கள் வேலை செய்தால் சராசரியாக தோட்டத் தொழிலாளர்கள் தற்போது ஒரு மாதத்திற்கு குறைந்தது 24,000 ரூபாய் (100 அமெரிக்க டாலர்) மட்டுமே சம்பாதிக்க முடியும்.

மஸ்கெலியா டீசைட் தோட்டத்தின் லயன் வீடுகள் (Soure: WSWS Media)

எவ்வாறாயினும், ஓய்வூதிய நிதி கழிவுகள், பண்டிகை முற்பணம், சிறு கடன்கள் ஆகியவை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தை கணிசமாகக் குறைக்கின்றன. தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்பை திசைதிருப்பும் பொருட்டு அரசாங்கம் 1,000 ரூபாய் தினசரி ஊதியம் வழங்க உத்தரவிட்ட போதிலும், தொழிலாளர்களின் அன்றாட வேலை இலக்கை அதிகரிக்காத காரணத்தினால், பெரும்பாலான தோட்டக் கம்பனிகள் இந்த தொகையை வழங்க மறுத்துவிட்டன.

ஓல்டன் தோட்டத் தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் 19 நாட்கள் வேலை செய்ததால், அவருக்கு 19,000 ரூபாய் சம்பளம் சேர்ந்ததாக அண்மையில், உலக சோசலிச வலைத் தளத்திற்கு விளக்கினார். ஓய்வூதிய நிதி மற்றும் பண்டிகை முற்பணக் கடன் கழிவுகளுக்குப் பின்னர், அவர் வெறும் 13,570 ரூபாயையே பெற்றார். 1000 ரூபா நாள் சம்பளம் பெற வேண்டுமெனில் தொழிலாளர்கள் ஒரு நாளுக்கு 18 கிலோகிராம் தேயிலைக் கொழுந்து பறிக்க வேண்டும் என்று தொழிலாளர்களை ஓல்டன் தோட்ட நிர்வாகம் நிர்ப்பந்திக்கின்றது.

கணவர் நோய்வாய்ப்பட்டுள்ளதால், வேலை செய்ய இயலாது, அவரை ஒவ்வொரு வாரமும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும், என்று அவர் கூறினார். இந்த தம்பதியருக்கு உணவுக்காக மாதாந்தம் 15,000 ரூபாய் தேவைப்படுகின்றது.

கோவிட்-19 இலங்கை பொருளாதாரத்தில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையின் விளைவாக விலைவாசி உயர்ந்துள்ளது. தொழிலாள வர்க்கத்தின் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியினர் மத்தியில், பெருந்தோட்டத் தொழிலாளர்களும் ஒரு பிரிவினராவர்.

அநேகமான ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள், 12 அடி நீளம் 10 அடி அகலம் கொண்ட லயன் அறைகளிலேயே கூட்டமாக வாழ்கின்ற அதே நேரம், சுமார் 100 குடும்பங்கள் இத்தகைய வசதிகள் கூட இல்லாமல் வாழ்கின்றன.

மஸ்கெலியா டெல்ஹவுஸ் தோட்டத்தின் தொழிலாளர்கள் (Soure: WSWS Media)

ஓல்டன் தோட்டத்தின் கீழ் பிரிவு, ஆற்றின் அருகாமையில் அமைந்துள்ளது. இதனால் வருடா வருடம் மழைக் காலங்களில் ,ஆறு பெருக்கெடுத்து வீடுகள் நீரினால் மூல்கடிக்கப்படுவதனால், தொழிலாளர்கள் உடமைகளை இழந்து மேட்டு நிலத்தில் தற்காலிக முகாம்களுக்கு இடம்பெயரத் தள்ளப்படுகின்றனர். தோட்டத்தில் தண்ணீர் வசதிகள் மற்றும் மலசல கூட வசதிகளை தோட்ட நிர்வாகம் செய்து கொடுப்பதில்லை. அரச சார்பற்ற நிறுவனங்களே செய்து கொடுக்கின்றன.

தோட்டத்தில் வைத்தியசாலை இருக்கின்றது ஆனால் வைத்தியர் இல்லை. பெயார்லோன் தோட்டத்தை சேர்ந்த தோட்ட மருத்துவ உதவியாளர், சில நாட்களில் ஒன்று இரண்டு மணித்தியாலங்கள் தொழிலாளர்களை பார்வையிடுவதற்கு வருவார். இவர்களை தோட்டக் கம்பனிகளே நியமிக்கின்றன. இவர்கள் முழுமையான தகுதியுடைய வைத்தியர்கள் அல்லாததோடு இவர்களுக்கு மிகவும் குறைந்த சம்பளமே வழங்கப்படுகின்றது.

வைத்தியரை பார்க்கப் செல்வதாய் இருந்தால் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மஸ்கெலியா வைத்தியசாலைக்கோ அல்லது 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டிக்கோயா வைத்திய சாலைக்கோ செல்ல வேண்டும். இந்தப் பிரதேசத்தில் ஒழுங்கான பஸ்சேவை கிடையாது, அதனால் போக்குவரத்துக்கு 1,000 ரூபாய் செலவு செய்து, முச்சக்கர வண்டியிலோ அலுலது வேறு வாகனத்திலோ செல்ல வேண்டும்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சத்துள்ள உணவு மற்றும் சிறந்த வைத்திய வசதிகள் கிடைக்காததனால் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் போஷாக்கு இன்மையால் பாதிக்கப்படுகின்றார்கள். இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளிலேயே சிசு மரண வீதம் உயர் மட்டத்தில் உள்ளது,

வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒரு ஓல்டன் தோட்டப் பெண் தொழிலாளி, உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினார். அவருடைய குடும்பத்தில் 5 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். “என்னுடைய 7 வயது மகன் வாத நோயினால் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி நாம் வைத்திய சாலைக்கு செல்ல வேண்டும். கண்டியில் உள்ள ஒரு வைத்தியர் ,கொழும்பில் உள்ள சிறுவர் வைத்திய சாலைக்கு போகச் சொல்கிறார். கொழும்புக்கு போவது என்றால் முக்சக்கர வண்டி வாடகை 6,000 ரூபாய். இத்தகைய செலவுகளை எங்களால் தாங்க முடியாது.

மற்றுமொரு வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி, தனது மகன் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வரை அடிக்கடி வைத்திய சாலைக்கு பரிசோதனைக்காக கூட்டிச் செல்ல வேண்டும் என்றும் கூறினார். அவருடைய கணவன் கொழும்பில் வேலை செய்கிறார். “வேலை இழந்த எனது சக தொழிலாளர்கள் சிலர் மிகவும் தூரத்தில் உள்ள வேறு ஒரு தோட்டத்தில் தற்காலிகமாக வேலை செய்கிறார்கள். ஆனால் எனது மகனின் உடல் நிலை காரணமாக நான் அவர்களுடன் செல்ல முடியாமல் இருக்கின்றது.”

கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை நாடு பூராகவும் அதிகரிப்பதையிட்டு தோட்டத் தொழிலாளர்கள் கவலை கொண்டுள்ளனர். சுகாதார வசதிகள் இல்லாமை மற்றும் ஜன நெருக்கடியான லயன் அறைகளினால் சமூக இடைவெளியை பேண முடியாத நிலமையில், பெருந்தோட்டப் பகுதியில் வைரஸ் வேகமாக பரவும் ஆபத்து உள்ளது.

ஓல்டன் தோட்டத்தின் மேற்பிரிவில் பாடசாலை இருப்பதனால் ஏனைய பிரிவில் உள்ள மாணவர்கள் நீண்ட தூரம் நடந்தே பாடசாலைக்கு வர வேண்டும்.

தரம் 5 வரை மட்டுமே கட்டப்பட்ட பாடசாலை கட்டிடத்திலேயே இப்பொழுது தரம் 11 வரை கல்வி நடவடிக்கை நடைபெறுகின்றது. இது உகந்த கல்வி கற்றலுக்கு பொருத்தமானதல்ல. பெற்றோர்களின் பொருளாதார நிலமை பிள்ளைகளின் படிப்புக்கு போதாமையினால் பெரும்பான்மையான மாணவர்கள் 11ம் தரத்துக்கு போவதற்கு முன்னரே பாடசாலையை விட்டு விலகி விடுகின்றனர்.

உயர்கல்விக்காக மாணவர்கள் மஸ்கெலியாவுக்கே செல்லவேண்டும். அண்மைக் காலத்தில் மூன்று மாணவர்கள் மட்டுமே தோட்டத்தில் இருந்து பல்கலைக்கழகம் சென்றார்கள்.

கடந்த வருடம் 20 ஹெக்டயர் கைவிடப்பட்ட தேயிலைக் காணிகளை தொழிலாளர்களுக்கும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் தோட்டக் கம்பனி பிரித்து கொடுத்தது. தேயிலை பயிர் செய்கைகைக்கான செலவை தொழிலாளர்களே செய்ய வேண்டும். அறுவடையை நிர்வாகத்திற்கு விற்க வேண்டும். அண்மையில் நடந்த வேலை நிறுத்தத்தின் பின்னர் அந்தக் காணிகளை கம்பனி திரும்ப வாங்கிக்கொண்டது.

காணிகளை திரும்ப பெற்றதிற்கு எதிராக தாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதை தடுப்பதன் பேரில், கம்பனியுடன் ஓப்பந்தம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரதியை தங்களுக்கு வழங்கவில்லை என ஓல்டன் தோட்டத்தின் ஓய்வுபெற்ற தொழிலாளி பொன்னையா கூறினார்.

சோசலிச சமத்துவக் கட்சியும் ஓல்டன் தொழிலாளர் நடவடிக்கை குழுவும், கம்பனியும் பொலிசும் கூட்டாக ஓல்டன் தொழிலாளர்களுக்கு எதிராக சோடித்த குற்றச்சாட்டுக்களை விலக்கிக்கொள்ளுமாறும், வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை நிபந்தனையற்று மீண்டும் வேலைக்கு அமர்த்துமாறும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன.

ஓல்டன் தொழிலாளர்களை பாதுகாக்கும் பிரச்சாரத்திற்கான ஆதரவு அறிக்கைகளை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்: wswscmb@sltnet.lk.

அண்மையில் கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளன.

ஜோர்டானில் உள்ள ஐரிபியா ஆடை தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு புலம்பெயர் இலங்கை தொழிலாளி எழுதியாவது: “ஓல்டன் தோட்டத்தில் 38 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்கள் அநீதிக்கு முகம் கொடுத்துள்ளார்கள். வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துமாறு வலியுறுத்துகின்றோம். ஓல்டன் தொழிலாளர்கள் முகம் கொடுக்கும் கடினமான நிலமைகளையே ஜோர்டானில் நாமும் முகம் கொடுக்கின்றோம்.

புலம்பெயர் ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அநீதிகளில் இருந்து பாதுகாப்பு கோரி இலங்கை தூதரகத்திற்கு அவர் புகார் செய்யச் சென்ற போது, அங்குள்ள அதிகாரிகளோ அத்தகைய முறைப்பாடுகளை செய்ய வேண்டாம் என ஆலோசனை வழங்கியுள்ளனர்.

“எவ்வாறெனினும், தூதரகமானது முறைப்பாடு செய்தவரின் விபரங்களை அடுத்த நாளே தொழிற்சாலை முகாமையாளர்களுக்கு கொடுத்துவிடுகின்றது. அதைக்கொண்டு அவர்கள் தொழிலாளர்களை அச்சுறுத்துகிறார்கள்…” என அவர் கூறினார்.

“ஓல்டன் தொழிலாளர்கள் தொழிற்சங்களை எதிர்கின்றார்கள். அது நல்லது. ஆனால் ஏனைய தொழிலாளர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்காவிலிருந்து ஹார்வி எழுதியதாவது: “ஹொரன தோட்டக் கம்பனிக்கு சொந்தமான ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான, அப்பட்டமான சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விலக்கிக்கொள்ளவும் எல்லாத் தொழிலாளர்களுக்கும் நஷ்ட ஈட்டுடன் வேலையை திரும்ப பெறுவற்கும் என்னுடைய ஆதரவை சேர்த்துக்கொள்ளுங்கள்.

“நான் நியூ யோர்க் நகரத்தில் வசிக்கும் ஒய்வுபெற்ற ஆசிரியர். இலங்கையில் தொழிலாளருக்கு எதிரான தாக்குதல்களைப் பற்றி ஏன் எழுதுகின்றேன்? நான் தேனீர் அருந்தும் ஒருவர். நாளாந்தம் எனது கையில் இருக்கும் தேனீர் கடுமையாக உழைக்கும் தோட்டத் தொழிலாளர்களின் கரங்களுக்கூடாக வந்தவை. பூகோளத் தொற்று நோய் உலகம் முழுதும் வேகமாக பரவிவரும் நிலையில், முதலாளி வர்க்கத்தினால், உலகம் முழுதும் தொழிலாளர் தோழர்களான எமது உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலமைகள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகின்றது. இதில் பிரதானமாக அவர்களது கொள்கைகள் எம்மீது தொற்றுக்களையும் மரணங்களையும் விளைவித்துள்ளது. அது மட்டுமன்றி, இன்னும் கூடுதலான ஒடுக்குமுறை சுரண்டலை திணிப்பதற்கு அவர்கள் எங்களது கடினமான நிலைமைகளை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

“நியூ யோர்க்கிலும் கூட தொழில், சம்பளம், ஆதாயங்கள் மற்றும் வேலை நிலமைகள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகின்றது. மனித இனம் நாடுகள் ரீதியாக பிளவுபட்டிருப்பது, செல்வந்தர்களுக்கு மட்டுமே நன்மை பயக்கின்றது. அத்துடன் முதலாளித்துவவாதிகளால் கட்டுப்படுத்தப்படும் ஒவ்வொரு அரசாலும், அவர்களின் செல்வம் பாதுகாக்கப்பட்டு விரிவாக்கப்படுகிறது.

உலக சோசலிச வலைத் தளம் இந்த வழக்கின் விபரங்களையும் ஏனைய தகவல்களையும் தொழிலாள வர்க்கத்திற்கு வெளிப்படுத்தியதை நான் வரவேற்கிறேன். பொருளாதார மற்றும் அரசியல் அதே போல் சட்ட நியாயங்களுக்கான அவர்களின் போராட்டத்தை நசுக்குகின்ற இந்த முறைமைக்கு முடிவுகட்டுவதற்கான சர்வதேச போராட்டத்தில் நான் ஓல்டன் தொழிலாளர்களுடன் இணைந்துகொள்கிறேன்.

Loading