நோய்தொற்றின் புதிய எழுச்சியில் 104 நாடுகளில் டெல்டா திரிபு வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

“இந்த தொற்றுநோயினால் உலகம் ஒரு ஆபத்தான கட்டத்தில் உள்ளது. பதிவான கோவிட்-19 இறப்புக்களில் நான்கு மில்லியன் என்ற துயரமான மைல்கல்லை நாம் இப்போது கடந்துள்ளோம், என்றாலும் இது மொத்த எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுவதாகவே உள்ளது. ஏற்கனவே அதிகளவு தடுப்பூசி பாதுகாப்பை உருவாக்கிய நாடுகள் வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தி காட்ட திட்டமிட்டுக் கொண்டிருப்பதுடன், பொது சுகாதார சமூக நடவடிக்கைகளை கைவிட்டு வருகின்றன, மேலும் அவை தொற்றுநோய் ஏற்கனவே முடிந்துவிட்டது எனக் கூறி இயல்பு நிலைக்கு திரும்புகின்றன” என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) பொது இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவிக்கிறார்.

வரைபடத்தில் புதிய நோய்தொற்றுகளின் தொற்றுநோயியல் வளைவுகளின் கவலைக்குரிய போக்குடன் இணைந்ததாக, கொரோனா வைரஸின் டெல்டா திரிபு வகை கடந்த வாரம் குறைந்தது 104 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. WHO இன் கொரோனா வைரஸ் செய்தியாளர் சந்திப்பின் போது, கோவிட்-19 க்கான முன்னணி தொழில்நுட்ப நிபுணர் டாக்டர் மரியா வான் கெர்கோவ் (Dr. Maria van Kerkhove), இந்த மோசமான முன்னேற்றங்கள் குறித்து எச்சரித்தார். மேலும், “இன்று காலை நான் மீண்டும் மதிப்பிட்டேன். தொற்றுநோயியல் வளைவுகளைக் கொண்ட இரண்டு டஜனுக்கும் அதிகமான நாடுகள் இப்போது கிட்டத்தட்ட உச்சபட்ச அதிகரிப்பைக் கொண்டுள்ளமை,” தொற்றுநோய் அதிவேக விகிதத்தில் பரவி வருவதையே காட்டுகிறது என்றும் கூறினார்.

ஜூன் 21 அன்று, கோவிட்-19 நோய்தொற்றுக்களின் ஏழு நாள் போக்கு சராசரி ஒரு நாளைக்கு 360,000 க்கு சற்று குறைந்த வீதத்தை எட்டியுள்ளது. இது தற்போது ஒரு நாளைக்கு 425,000 நோய்தொற்றுக்களாக அதிகரித்துள்ளது அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்னைய வீதத்தை விட சற்று அதிகமாக 18 சதவீதம் அதிகரித்துள்ளது. பதிவான இறப்புக்களுக்கான தொற்றுநோயியல் வளைவும் மேல்நோக்கி சென்றுள்ளது. ஜூலை 10, 2021 நிலவரப்படி, உலகளவில் 187.2 மில்லியன் கோவிட்-19 நோய்தொற்றுக்களும், 4.04 மில்லியன் இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

ஜூன் 12, 2021, சனிக்கிழமை, கென்யாவின் நைரோபியில் ஒரு சுவரோவியம் சுவாஹிலி மொழியில் கொரோனா வைரஸ் பற்றி எச்சரிக்கிறது (AP Photo/Brian Inganga)

உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும், வாராந்திர புள்ளிவிபரங்கள் நோய்தொற்றுக்கள் அதிகரித்து வருவதை அல்லது தொடர்ந்து உச்சபட்சமாக இருப்பதை காட்டுகின்றன:

  • ஐரோப்பாவில், வாரத்திற்கு வாரம் மாறும் நோய்தொற்றின் போக்கு கடந்த மூன்று வாரங்களாக வேகமெடுத்துள்ளமை எச்சரிக்கையூட்டுவதாக உள்ளது. ஜூன் 28, 2021 தேதியில் தொடங்கிய வாரத்தில் 40.1 சதவீதம் அதிகரித்து அங்கு 543,584 நோய்தொற்றுக்கள் இருந்தன.
  • அமெரிக்காவில் கடந்த வாரம் 13 சதவீத வீழ்ச்சி இருந்த போதும், வாராந்திர புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை அண்ணளவாக ஒரு மில்லியனாக நிலைத்திருந்தது.
  • தென்கிழக்கு ஆசியா முழுவதுமாக நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை அண்ணளவாக 7 சதவீதம் அதிகரித்து, வாரத்திற்கு கிட்டத்தட்ட 613,000 என்றளவிற்கு மீண்டும் கடுமையாக அதிகரித்துள்ளது.
  • அதேபோல, கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிகளிலும் நோய்தொற்றுக்களின் எழுச்சி மீண்டும் ஏற்பட்டுள்ளது, அதாவது ஜூன் 28, 2021 தேதிதியல் தொடங்கிய வாரத்தில் 11.1 சதவீதம் அதிகரித்து கிட்டத்தட்ட 246,000 புதிய நோய்தொற்றுக்கள் அங்கு உருவாகியுள்ளன.
  • ஆபிரிக்காவிலும், நோய்தொற்று காலத்தில் இதுவரை இல்லாத உச்சபட்ச எண்ணிக்கையாக கடந்த வாரம் முதல் 14.8 சதவீதம் அதிகரித்து 204,000 புதிய நோய்தொற்றுக்கள் அங்கு பதிவாகியுள்ளன. பதிவு செய்யப்படும் புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் தோன்றுகிறது, என்றாலும் இதை தொடர்ந்து உன்னிப்பாக கவனிப்பது அவசியமாகும்.
  • மேற்கு பசிபிக் பகுதி தொடர்ந்து உச்சபட்ச சமூக பரவலை எதிர்கொண்டாலும், அங்கு பதிவு செய்யப்படும் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து நிலையானதாகவே உள்ளது. ஜூன் 28, 2021 தேதிதியல் தொடங்கிய வாரத்தில் 128,000 புதிய நோய்தொற்றுக்கள் உருவாகியுள்ளன.

பதிவான இறப்புகளுக்கான தொற்றுநோயியல் வளைவுகள் அந்தந்த பிராந்தியங்களின் நோய்தொற்றுக்களின் போக்குக்கு ஏற்ப மாறிக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவில் தற்போது டெல்டா திரிபு வகை வைரஸ் ஆதிக்கம் செய்கிறது, நாளாந்த புதிய நோய்தொற்றுக்கள் வெறும் 12,000 ஆக குறைந்து வந்த நேரத்தில், ஜூன் 21, 2021 தேதி முதல் நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி மீண்டும் அதிகரித்து வருகிறது. கடைசி நேரத்தில் அமெரிக்கா மார்ச் 26, 2020 தேதியில் பதிவானதையொத்த எண்ணிக்கைகளை எதிர்கொண்டன, அப்போதுதான் வெளிப்பட்டு வந்த தொற்றுநோய் முதலில் நியூயோர்க் மக்களைத் தாக்கியது.

நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 18,000 என்றளவிற்கு மீண்டும் உயர்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த வார முடிவில், ஒரு நாளைக்கு 27,000 க்கும் மேற்பட்ட புதிய நோய்தொற்றுக்களின் திடீர் அதிகரிப்பை அமெரிக்கா எதிர்கொண்டது. மேலும், நாளொன்றுக்கு சுமார் 220 பேர் இறக்கும் நிலையில், இறப்புக்களின் ஏழு நாள் சராசரி குறைவது நின்றுபோனது. ஜூலை 10, 2021 நிலவரப்படி, ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 622,819 ஆக இருந்ததுடன், 34.7 மில்லியன் நோய்தொற்றுக்கள் பதிவாகியிருந்தது.

ஜூன் நடுப்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை நாளாந்த நோய்தொற்றுக்கள் 1,000 ஆக இருந்தது ஜூலை 10, 2021 அன்று கிட்டத்தட்ட 5,800 என்றளவிற்கு கடுமையாக அதிகரித்த நிலையில், புளோரிடா புதிய தொற்றுநோய் மையமாக மாறியது. என்றாலும், ஒப்பீட்டளவில் தடுப்புமருந்து பாதுகாப்பு விகிதங்கள் குறைவாக இருந்த தென்கிழக்கு பிராந்தியங்களும் மத்தியமேற்கு பகுதிகளும் தொடர்ந்து நோய்தொற்று அதிகரிப்பை எதிர்கொண்டன. கடந்த இரண்டு வாரங்களாக, மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளின் சேர்க்கை விகிதங்கள் ஆர்கன்சாஸ், நெவாடா மற்றும் அயோவா மாநிலங்களில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

பள்ளிகள் மீளத்திறக்கப்படுவதை கடுமையாக எதிர்த்த, பிரவுன் பல்கலைக்கழக பொது சுகாதார பள்ளியின் தலைவர் ஆஷிஷ் ஜா (Ashish Jha), “டெல்டா எப்படி இவ்வளவு விரைவாக பரவலாகிவிட்டது என எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவுள்ளது. நாம் ஜூலை முதல் வாரத்திற்குள் நுழைகையில், அது எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. இது ஆல்பா திரிபு வகையை விட மிக மிக அதிக தொற்றும் தன்மை கொண்டது என்பதை அறிவுறுத்துகிறது. இது இந்தளவிற்கு தொற்றும் தன்மையை கொண்டுள்ளதும், இந்தளவிற்கு விரைந்து பரவிவிட்டதும் என்னை பதட்டப்படுத்துகிறது…” என்று Politico வுக்கு தெரிவித்தார்.

ஐரோப்பா முழுவதுமான நோய்தொற்றுக்களின் வாராந்திர போக்குகள் சர்வதேச பொது சுகாதார நிறுவனங்களை எச்சரித்தன. பல நாடுகள் செங்குத்தாக அதிகரிக்கும் பரவல் விகிதங்களை எதிர்கொண்டுள்ளன, இதன் பொருள் நோய்தொற்றுக்கள் தீவிர வேகத்தில் பரவுகின்றன என்பதே. ஏழு நாட்களில் 22,071 புதிய நோய்தொற்றுக்கள் உருவாகி, நெதர்லாந்தில் நோய்தொற்றுக்களின் வாராந்திர அதிகரிப்பு அண்ணளவாக 400 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோல, கிரீஸ், 163 சதவீதம்; ஸ்பெயின், 101 சதவீதம்; பெல்ஜியம், 66 சதவீதம்; பிரான்ஸ், 61 சதவீதம்; போர்ச்சுகல், 39 சதவீதம்; இங்கிலாந்து, ஒரே வாரத்தில் 203,159 புதிய நோய்தொற்றுக்களுடன் 31 சதவீதம்; ஜேர்மனி, 19 சதவீதம்; ரஷ்யா, 171,858 புதிய நோய்தொற்றுக்களுடன் 13 சதவீதம்; என்றளவிற்கு பிற நாடுகளிலும் நோய்தொற்று அதிகரிப்புக்கள் நிகழ்ந்துள்ளன.

இவ்வாறு நோய்தொற்றுக்கள் அதிகரித்து வருவது ஒருபுறமிருக்க, வெம்ப்ளி மைதானத்தில், யூரோ 2020 கால்பந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் மோதுவதை 60,000 க்கும் மேற்பட்ட தீவிர ரசிகர்கள் கண்டுகளித்தனர். இரு நாடுகளும் நோய்தொற்று காலத்தில் சுமார் 128,000 குடிமக்களின் இறப்பை சந்தித்தன. ஏராளமான உயிர்களை பலி கொள்ளும் இந்த உத்தரவாதமான நோய்தொற்று பரப்பும் நிகழ்வு, மக்களின் வாழ்க்கையோடு ஆளும் உயரடுக்கினர் விளையாடும் ஆபத்தான விளையாட்டு என்பதை இந்தப் போட்டி எடுத்துக்காட்டுகிறது.

ஆபிரிக்காவில், லிபியா, செனகல், நைஜீரியா, சாட் மற்றும் மொசாம்பிக் உள்ளிட்ட பத்து நாடுகள் ஒவ்வொரு வாரமும் நோய்தொற்றுக்கள் இரட்டிப்பாவதை காண்கின்றன. துனிசியா, வாராந்திரம் 44 சதவீத அதிகரிப்பை சந்தித்து, வாரத்திற்கு 49,000 புதிய நோய்தொற்றுக்களை பதிவு செய்தது. தெற்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் மிகக் கடுமையாக நோய்தொற்றுக்கள் வெடித்து பரவி வருகின்றன. ஜிம்பாப்வே இல், வாரத்திற்கு 12,403 நோய்தொற்றுக்கள் பரவி, புதிய நோய்தொற்றுக்களின் வாராந்திர அதிகரிப்பு 67 சதவீதமாக உயர்ந்தது. தென்னாப்பிரிக்காவில், இந்த வாரம் 137,861 புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகி, நோய்தொற்றுக்கள் 11 சதவீதம் அதிகரித்தது, அதேவேளை இறப்புக்கள் 46 சதவீதம் அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக ஏழு வாரங்களாக, கண்டம் முழுவதும் நோய்தொற்றுக்கள் அதிகரித்து வருகின்றன. முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை முதல் வாரத்தில் நோய்தொற்றுக்கள் 20 சதவீதம் அதிகரித்துள்ளன. இதேபோல இறப்புக்களும் அதிரடியாக அதிகரித்தன. WHO இன் ஆபிரிக்காவிற்கான பிராந்திய இயக்குநர், மாட்சிடிசோ மொயட்டி (Matshidiso Moeti), “ஆபிரிக்கா, முன்நிகழ்ந்திராத வகையில் கண்டத்திலேயே மிக மோசமான வாராந்திர நோய்தொற்று அதிகரிப்பை கொண்டிருப்பதைக் குறித்தது. வேகமெடுத்து பரவும் மூன்றாவது அலை, வேகத்தையும், நோய்தொற்று பரவுவதற்கான புதிய சூழலையும் தொடர்ந்து தக்கவைக்கும் பட்சத்தில், மோசமான நிலை இனி தான் உருவாகும்… நோய்தொற்றின் இந்த அதிவேக உயர்வு முடிவுக்கு வர, இன்னும் சில வாரங்கள் பிடிக்கும்” என்று கூறினார்.

இந்தோனேசியா, ஆசியாவில் தொற்றுநோய்களின் மையங்களில் மோசமான நிலையை எதிர்கொள்கிறது. 700 பிராந்திய மொழிகள் பேசக்கூடிய 270 மில்லியன் அளவிற்கு பலதரப்பட்ட மக்களைக் கொண்ட இந்த நாடு, 300 இனக்குழுக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றது. என்றாலும், தொற்றுநோய் நாட்டை பொருளாதார மந்தநிலைக்குள் வீழ்த்தியுள்ளது, மேலும் இது, தொற்றுநோய்களின் சுனாமி எழுச்சியால் உருவாகும் சமூக மோதல்களை மேலும் அதிகரிக்கிறது.

புதிய நோய்தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி தொடர்ந்து அதிகரித்து வந்ததால், ஒரு நாளைக்கு 33,000 க்கும் அதிகமாக நோய்தொற்றுக்கள் உருவாகின. இறப்புக்களும் திடீரென உயர்ந்து கொண்டிருக்கின்றன, மிக விரைவில் இறப்புக்களின் ஏழு நாள் சராசரி ஒரு நாளைக்கு 1,000 ஐ தாண்டக்கூடும். ஜூலை 7, 2021 அன்று மட்டும், நாட்டில் 1040 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. அதிக மக்கள்தொகை கொண்ட ஜாவாவில் இறந்தவர்களின் பெயர்கள் அருகிலுள்ள மசூதிகளில் பேச்சாளர்களால் அறிவிக்கப்பட்டு வருகின்றன, இது வைரஸ் இறப்புக்களின் கொடிய எண்ணிக்கையை கடுமையாக நினைவூட்டுகிறது.

இருப்பினும், ஆஸ்திரேலியாவின் Griffith பல்கலைக்கழகத்தின் டாக்டர் டிக்கி புடிமனின் (Dr. Dicky Budiman) கூற்றுப்படி, உத்தியோகபூர்வ இறப்புக்கள் உள்ளூர் அளவில் பதிவு செய்யப்பட்ட இறப்பு தரவுகளின் அடிப்படையில் கணிசமாக குறைத்து மதிப்பிடப்பட்டவையாகும். “ஒரு நாளைக்கு 100,000 க்கு அதிகமான இறப்புக்களை நாங்கள் ஏற்கனவே எட்டிவிட்டோம் என்பது எங்களுக்குத் தெரியும்,” என்று கார்டியன் நாளிதழுக்கு அவர் தெரிவித்தார். ஜகார்த்தாவில் உள்ள பொது கல்லறைகள் சடலங்களால் நிரம்பி வழிகின்றன. நகர அதிகாரிகளின் கூற்றுப்படி, அடக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மே மாதம் முதல் பத்து மடங்கு அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகள் நோயாளிகளின் பிரளயத்தை எதிர்கொள்வதால், மருத்துவர்களும் செவிலியர்களும் கூட நோய்தொற்றுக்கு பலியாகி வருகின்றனர், இது சுகாதார அமைப்பு முறையின் பலவீனமான உள்கட்டமைப்பை மேலும் திறனற்றதாக்குகிறது. சமூக பதட்டங்களும் குழப்பங்களும் பெருகும் நிலையில், ஆக்சிஜன் மற்றும் மருத்துவ வளங்கள் விரைவாக தீர்ந்து போகின்றன. இந்தோனேசிய மருத்துவ சங்கத்தின் இடர் குறைப்பு குழுத் தலைவர் ஆதிப் குமைதி (Adib Khumaidi), “மருத்துவமனைகளில் இப்போது நடந்து கொண்டிருப்பது ஒரு செயல்பாட்டு சரிவு,” என்று கருத்து தெரிவித்தார்.

கண்டம் மற்றும் குறிப்பிட்ட நாடுகள் வாரியாக தடுப்பூசி வழங்கப்பட்ட மக்கள் வீதம்

அண்ணளவாக 3.4 பில்லியன் கோவிட்-19 தடுப்பூசி அளவுகள் (ஒவ்வொரு 100 பேருக்கு 44 தடுப்பூசி அளவுகள் வீதம்) விநியோகிக்கப்பட்டு கூட, நோய் எதிர்ப்புத்திறனூட்டல் விகிதம் உலகளவில் குறையத் தொடங்கியுள்ள ஆபத்தான போக்கு நிலவுகிறது. பல்வேறு நாடுகளில் தடுப்பூசி வழங்கல் திட்டங்களில் தொடர்ந்து நிலவிய பாகுபாட்டினால் இது மேலும் அதிகரிக்கிறது.

தற்போது, உலக மக்கள் தொகையில் 25.2 சதவீதம் பேர் குறைந்தது முதல் அளவு கோவிட்-19 தடுப்பூசியை பெற்றுள்ளனர். இருப்பினும், குறைந்த வருமான நாடுகளில் ஒரு சதவீத மக்கள் மட்டுமே குறைந்தது முதல் அளவு தடுப்பூசியை பெற்றுள்ளனர். பார் (bar) வரைபடம் நிரூபிப்பது போல, உலகின் பெரும்பான்மை மக்கள் வசிக்கும் ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்கா ஆகிய கண்டங்கள் உயிர்காக்கும் சிகிச்சையின் மிகச்சிறிய பகுதியை மட்டும் பெற்றுள்ளன.

நோய்தொற்றுக்களின் அதிகரிப்பைத் தடுக்க அனைத்து பொது சுகாதார நடவடிக்கைக்களையும் எடுக்கும்படி உலக சுகாதார அமைப்பு (WHO) பலமுறை விடுத்த எச்சரிக்கைகளை அதிக வருமான நாடுகளின் அரசாங்கங்கள் கூட தொடர்ந்து புறக்கணித்துவிட்டன. அதற்கு பதிலாக, அதிகபட்ச தீங்கை தொடர்ந்து உருவாக்கும் புதிய திரிபு வகைகளின் வெளிப்பாடுகள் முன்வைக்கும் அச்சுறுத்தல்களை அலட்சியப்படுத்தி, பொருளாதார இயல்புநிலைக்கு விரைவாக திரும்புவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவே தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன.

Loading