இலங்கை கவிஞர் அஹ்னப் ஜஸீமை விடுதலை செய்வதற்கான பிரச்சாரத்திற்கு விரிவான ஆதரவு கிடைக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

“அடிப்படைவாத கருத்துக்களைக் கொண்ட கவிதை புத்தகத்தை வெளியிடுதல்” மற்றும் “சிறுவர்களுக்கு அதிதீவிரவாதக் கருத்துக்களைக் கற்பித்தல்” என்ற பொய்யான குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளம் கவிஞரான அஹ்னவ் ஜஸீம் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. மே 20 வரை, ஜஸீம் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்காத அதேவேளை, அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் பதிவு செய்ய பொலிசால் முடியவில்லை.

அஹ்னப் ஜஸீம்

அஹ்னப் தனது பெற்றோரைச் சந்திப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, முறையான சட்டத்தரணியின் உதவி பெறுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. அவர் கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து, தெற்கில் உள்ள தங்கொல்லையில் உள்ள ஒரு தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். அவருக்கு, எந்த செய்தித்தாள் அல்லது புத்தகத்தைப் பெறுவதற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சராக ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணை பிரிவு (டிஐடி), பொலிஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளும் வரை அவரை தடுத்து வைப்பதாக அச்சுறுத்தியுள்ளது.

கடந்த மாதத்தின் நடுப்பகுதியில், அவரது வழக்கறிஞர்கள் கவிஞர் சார்பாக இலங்கை உயர் நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை வழக்கை தாக்கல் செய்தனர். இது கவிஞரின் கைது மற்றும் தடுப்புக்காவல் பற்றிய பல பாரதூரமான உண்மைகளை வெளிப்படுத்துகிறது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அல்லது அடிப்படைவாத சித்தாந்தங்களின் பிரச்சாரம் அல்லது கற்பித்தல் ஆகியவற்றுடன் கவிஞருக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், பொலிஸ் சுமத்தியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுக்கிறார் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு ஒரு வருடம் கழித்து, அஹ்னப் மீது எந்த நம்பகமான ஆதாரத்தையும் பொலிஸ் முன்வைக்கவில்லை., தமது பொய்யான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதன் பேரில், கட்டாயப்படுத்தி கவிஞரிடமிருந்து வாக்குமூலத்தைப் பெறும் முயற்சியில், பொலிசார் அவரை மேலும் தடுத்து வைத்திருக்கின்றனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள போது, நபர்களை சித்திரவதை செய்து பெற்றுக்கொள்ளும் வாக்குமூலங்களை அவர்களுக்கு எதிரான ஆதாரமாகப் பயன்படுத்த அனுமதிக்கின்ற பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சுமார் 700 முஸ்லிம்களும், அவர்களோடு மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாகவும், வடக்கில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட முப்பது ஆண்டு கால சிவில் யுத்த காலத்திலும் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பாகவும், இலங்கை பொலிசாரின் செயற்பாடுகள் மிகவும் பேர்போனவை ஆகும். போரின் போது கைது செய்யப்பட்ட சில தமிழ் இளைஞர்கள் சுமார் 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கவிஞருக்கு எதிரான வழக்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கவிஞருக்கு எதிராக விடயங்களை விளக்கிய பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, அஹ்னப் “முஸ்லிம் அடிப்படைவாத நடவடிக்கைகளுக்கு நபர்களை ஊக்குவித்தல், அதற்காக ஒத்துழைப்பு உதவி வழங்குதல், அத்தகைய தகவல்களை பாதுகாப்புப் படையினரிடமிருந்து மூடி மறைத்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம், இலங்கையில் நல்லிணக்கத்திற்கும் தடை ஏற்படுத்தி, பொதுமக்களின் அமைதிக்கும் ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறி, பயங்கரவத தடைச் சட்டத்தின் பிரிவு 3 அ), 3 (ஆ), 5 (அ), 5 (ஆ) பிரிவுகளின கீழும், மற்றொரு பேர் போன, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனச் சட்டத்தின் (ஐ.சி.சி.பி.ஆர்.) கீழ் 3 (1) (2) பிரிவுகளின் கீழும் குற்றம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேல் நீதிமன்றமொன்றில் நடக்கும் விசாரணையில் இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், அஹ்னப் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரும்.

சமூக வலைத்தள செயற்பாட்டாளரான ரம்ஸி ரஸிக், ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர், முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தின் முன்னெடுக்கப்பட்ட முஸ்லீம்-விரோத இனவாத ஆத்திரமூட்டல்களை முகநூல் சமூக ஊடகத்தில் விமர்சித்தமைக்காக, கைது செய்யப்பட்டு ஐ.சி.சி.பி.ஆர். இன் கீழ் ஐந்து மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டார். அவர் பிணையில் விடுதலையான போதிலும், அவர் மீதான குற்றச்சாட்டுகளை அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை.

கவிஞரின் தடுப்புக்காவல் குறித்து உலக சோசலிச வலைத் தளம் (WSWS) டிசம்பர் 20 அன்று வெளியிட்ட ஒரு கட்டுரை, அவர் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல் காரணங்களை விவரித்தது. “அஹ்னப்பை தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது, இராஜபக்ஷ அரசாங்கத்தின் தொடர்ச்சியான முஸ்லீம்-விரோத வேட்டையாடலினதும் கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்” என்று விளக்கியது.

'ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், முகமதிய நம்பிக்கை கொண்ட குடிமக்களுக்கு எதிரான ஒரு கொடூரமான இனவெறி பிரச்சாரத்தை ஊக்குவிப்பதும் அதன் மூலம் நாட்டு மக்களைப் பிளவுபடுத்துவதும்” அஹ்னப்பின் கைதுக்கான அரசியல் காரணங்கள் என்று அஹ்னாப்பின் அடிப்படை உரிமை மனுவில் கூறப்பட்டுள்ளது.

கவிஞரை உடனடியாக விடுதலை செய்யும் கட்டளையையும், அவரை தடுத்து வைத்த பின்னர் நடந்துள்ள சரீர மற்றும் உளவியல் தாக்கத்துக்காக, 100 மில்லியன் நட்ட ஈட்டை, பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் உட்பட பொறுப்பாளர்களிடம் இருந்து பெற்றுத் தருமாறும் கோரப்பட்டுள்ளது.

கவிஞர் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடந்த ஆண்டு காலத்துக்குள், இராஜபக்ஷ அரசாங்கம் முஸ்லீம் மக்கள் மீதான இந்த இனவாத தாக்குதலை தீவிரப்படுத்தி, பயங்பரவாத தடைச் சட்டித்தின் கீழ் பல பிரதான முஸ்லிம் தலைவர்களைக் கைது செய்துள்ளதோடு பல முஸ்லிம் அமைப்புகளுக்கும் தடை விதித்துள்ளது. முஸ்லிம் பெண்களின் பாரம்பரிய உடையான புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்ய இப்போது சட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.

கைது செய்யப்படும் முஸ்லிம்களை குறிவைத்து, ஜனாதிபதி இராஜபக்ஷ மார்ச் மாதம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு தீவிரமயமாக்கலைத் தடுக்க புதிய சட்டங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, இரண்டு ஆண்டுகள் வரை தங்களின் அரசியல் எதிரிகள் உட்பட கைதிகளை எதேச்சதிகாரமான முறையில் தடுத்து வைக்க ஒரு தந்திரோபாயம் இயற்றப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இழுபட்டு வரும் அரசாங்கம், பொது மக்களுக்கு எதிராக இராணுவமயமாக்கல், பொலிஸ் படுகொலைகள் மற்றும் தேடல் குழுக்களை விரிவாக்கும் திட்டங்களை அதிகரித்து வருகிறது. அத்துடன் 'போலி' செய்திகளை கட்டுப்படுத்தல் என்ற பெயரில் இலட்சக் கணக்கான பேஸ்புக் கணக்குகளை தடை செய்ய திட்டங்களை வகுத்துள்ளதுடன், பிரதேச மட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தும், தமிழ் மக்களுக்கு எதிராக கொடூரமான இனவாத ஆத்திரமூட்டல்களை முன்னெடுப்பதன் மூலமும் அதன் அடக்குமுறை இயந்திரங்களை பலப்படுத்தி வருகிறது.

மக்களின் உயிர் வாழ்க்கைக்கு மேலாக பெருவணிகத்தின் இலாபங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பாதுகாக்க உறுதிபூண்டுள்ள அரசாங்கம், அத்தியாவசியமற்ற பொருளாதாரத் துறைகளை நிறுத்தி, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களுக்கு முழுமையான சுகாதார சேவையை வழங்கும் ஒரு திட்டத்தை வகுப்பதற்கு முற்றிலும் எதிராக இருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த குற்றவியல் கொள்கைக்கு, வாழ்க்கை நிலைமை வெட்டுக்களுக்கு, துறைமுகங்கள் மற்றும் பிற நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு மற்றும் சுற்றுச்சூழல் அழிவுக்கும் விரோதமாக ஆழமான எதிர்ப்பு அதிகரித்து வருவதையே, தோட்டத் துறை, சுகாதாரம், கல்வி, புகையிரத் மற்றும் அஞ்சல் மின்சக்தி ஆகிய துறைகளில் வெடித்த போராட்டங்கள் காட்டியுள்ளன. ஜனாதிபதி சர்வாதிகாரத்தை வடிவமைக்க முயலும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் இனவாத மற்றும் இராணுவவாத தயாரிப்புகள், இந்த போராட்டங்களை நசுக்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் மேற்கண்ட தாக்குதல்கள் எதுவும், வெறுமனே அதற்கு மட்டும் உரியவை அல்ல, மாறாக அது ஒரு சர்வதேச போக்கு ஆகும். தொற்றுநோயால் ஆழமடைந்துள்ள உலகளாவிய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் மத்தியில், அமெரிக்கா, சிலி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள அரசாங்கங்கள், சர்வாதிகார ஆட்சிகளை நிறுவுவதன் மூலம் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளன.

கவிஞரின் சுதந்திரம், கருத்து சுதந்திரம் மற்றும் கலை சுதந்திரம் அல்லது வேறு எந்த ஜனநாயக உரிமையும், முதலாளித்துவ நீதிமன்றங்களால் உத்தரவாதம் செய்யப்படுவதில்லை. சர்வதேச சோசலிச முன்னோக்கினால் வழிநடத்தப்படும் தொழிலாள வர்க்கத் தலைமையை மையமாகக் கொண்ட ஒரு பரந்த அரசியல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மட்டுமே அவை அடையப்பட முடியும்.

இந்த பிரச்சாரங்களை ஒழுங்கமைக்க, சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) தலைமையிலும் வழிகாட்டுதலிலும் அமைக்கப்பட்ட கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைக் குழு, கடந்த சனிக்கிழமை முதல் கவிஞரை பாதுகாத்து தொடங்கியுள்ள ஒரு வெகுஜன மனுவுக்கு பரவலான ஆதரவைப் பெற்று வருகிறது. அஹ்னப், 2019 இல் ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தின் கீழ், சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் சக்திக சத்குமாராவை விடுவிப்பதற்கான சக்திவாய்ந்த பிரச்சாரத்தை சோ.ச.க. மற்றும் கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழுவினரும் முன்னெடுத்த பிரச்சாரத்தினை ஆதரித்திருந்தார்.

மனு அறிவிக்கப்பட்ட ஆரம்ப நாட்களிலேயே, 700 க்கும் மேற்பட்டோர் கையொப்பம் இட்டமை பரந்த ஆதரவு குவிவதை காட்டியது. அஹ்னப்பை உடனடியாக விடுவிக்கக் கோரி, பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபருக்கு முகவரியிடப்பட்ட ஒரு மனுவில் கையெழுத்திட கோரியும் கவிஞரை பாதுகாக்க கடிதங்களை அனுப்புமாறும் நடவடிக்கை குழு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த பிரச்சாரத்திற்கு இணையாக, சர்வதேச மன்னிப்புச் சபை, பென் அமைப்பு மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட 13 சர்வதேச அமைப்புகள், அஹ்னப்பை உடனடியாக விடுவிக்குமாறு கோரி இலங்கை 'அதிகாரிகளுக்கு' அழுத்தம் கொடுக்கும் பகிரங்க அறிக்கையை வெளியிட்டுள்ளன.

வேலைத்தளங்கள், தொழலாளர் குடியிருப்புகள், மற்றும் தங்கள் சொந்த துறைகளில் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதற்கு முன்னெடுக்கும் போராட்டத்தின் ஒரு இன்றியமையாத பகுதியாக, அஹ்னப் மற்றும் ஏனைய கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்களை பாதுகாக்கும், கருத்து சுதந்திரத்தை கலையின் சுதந்திரத்தை பாதுகாக்கும் போராட்டத்தை முன்னெடுக்குமாறு நாங்கள் கேட்கிறோம்.

சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில், இந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு ஐக்கியப் போராட்டத்தைத் முன்னெடுக்க முன்வருமாறு, ஜனநாயக உரிமைகளை மதிப்பவர்களுக்கும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, கவிஞரைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரு பொது மனுவில் கையெழுத்திடவும், கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கை குழுவை கட்டியெழுப்பவும் இணைந்துகொள்ளுமாறும் சோ.ச.க. கேட்டுக்கொள்கிறது.

இந்த இணைப்பு வழியாக இணையவழி மனுவைப் பார்வையிடவும்:

மனு · Secretary, Ministry of Defence of Sri Lanka: கவிஞர் அஹனப் ஜஸீமை பாதுகாத்திடுங்கள்! · Change.org

Loading