கிரேக்கத்தின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையில் தொழிற்சங்கங்களும் சிரிசாவும் இணைகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாய்க்கிழமை கிரேக்கத்தில் மொத்தம் 3,565 புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்கள் பதிவாகின. இது, கடந்த வாரம் பதிவான உச்சபட்ச எண்ணிக்கை 3,109 ஐ விஞ்சிவிட்டதுடன், ஒவ்வொரு நாளும் 2,500 க்கும் மேற்பட்ட புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகி வரும் இந்த மாதத்தில் பதிவான உச்சபட்ச எண்ணிக்கையாகவும் உள்ளது. தலைநகரம் ஏதென்ஸை உள்ளடக்கிய நாட்டின் மக்கள்தொகை மிகுந்த பிராந்தியமான அட்டிகாவில் (Attica) மூன்றில் ஒரு பங்கு நோய்தொற்றுக்கள் ஏற்பட்டன. ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து முதல் 15 நாட்களில் மட்டும் 26,000 க்கும் அதிகமான புதிய நோய்தொற்றுக்கள் இங்கு பதிவாகியுள்ள நிலையில், நோய்தொற்றுக்கள் அதிவேகமாக அதிகரித்து வருகின்றன.

மாதத்தின் தொடக்கத்திலிருந்து ஒரு நாளைக்கு சராசரியாக 10 இறப்புக்கள் நிகழும் நிலையில், தற்போது இறப்புக்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், புதிய நோய்தொற்றுக்களின் அதிகரிப்புக்கும் புதிய இறப்புக்களின் அதிகரிப்புக்கும் இடையில் இரண்டு முதல் எட்டு வாரங்கள் பின்னடைவு இருக்கும் என்பதால், இதுவும் அதிகரிக்கத் தொடங்கும். மருத்துவ செய்தி தளமான iatronet.gr திங்களன்று வெளியிட்ட உத்தியோகபூர்வ தரவுகளின் பகுப்பாய்வின்படி, ஜூலை மாத தொடக்கத்திலிருந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் கோவிட்-19 நோயாளிகளின் நாளாந்த எண்ணிக்கை 247.3 சதவீதமாக அதிகரித்துள்ளது, அதேவேளை அரசாங்கத்தின் சொந்த புள்ளிவிபரங்களின்படி, 28 சதவீதத்திற்கு சற்று அதிகமாகவே கோவிட்-19 படுக்கைகள் தற்போது நிரம்பியுள்ளன.

மே 13, 2021, வியாழக்கிழமை, கிரேக்கத்தின் ஏஜியன் தீவான ஈராக்லியாவில் ஒரு தடுப்பூசி மையத்திற்கு வெளியே கோவிட்-19 நோயெதிர்ப்புக்காக இரண்டாவது அளவு Pfizer-BioNTech தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளூர்வாசிகள் வரிசையில் காத்திருக்கின்றனர் (AP Photo/Thanassis Stavrakis)

மிகவும் தொற்றக்கூடிய மற்றும் மிகக் கொடிய புதிய டெல்டா திரிபு வகை வைரஸ் கண்டம் முழுவதிலும் பரவிக் கொண்டிருக்கையில், முழு பொருளாதாரமும் திறக்கப்பட்டு, கொலைகார “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்,” கொள்கை பின்பற்றப்படுவதன் விளைவாகவே ஐரோப்பாவின் பிற பகுதிகளைப் போல இந்நாட்டிலும் நோய்தொற்றுக்கள் அதிகரிக்கின்றன. Skai தொலைக்காட்சியில் ஜூலை 16 அன்று பேசுகையில், கிரேக்க தொற்றுநோயியல் நிபுணர் கிகாஸ் மாகியோர்கினிஸ் (Gkikas Magiorkinis), “டெல்டா திரிபு வகை தற்போது கிரேக்கத்தில் 60 சதவீத அளவிற்கு வியாபித்திருக்கிறது என்பதால், இது ஆதிக்க திரிபு வகையாக மாறுவதற்கு வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.

நாளாந்தம் சராசரியாக 2,000 நோய்தொற்றுக்கள் உருவாகிக் கொண்டிருந்தபோதும், மே மாதம் தொடக்கத்திலிருந்து கிரீஸ் படிப்படியாக அதன் கட்டுப்பாடுகளை தளர்த்தத் தொடங்கியது. மே 13 அன்று, புதிய ஜனநாயகக் கட்சி சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரிஸ் தியோஹரிஸ் (Haris Theoharis), ஏதென்ஸூக்கு வெளியே Cape Sounion பகுதியில் உள்ள Poseidon கோவிலுக்கு முன்னால், ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தின் முன்னிலையில், ‘நாம் நமது சுற்றுலாத் துறையை உலகிற்கு திறக்கிறோம்’ என்று உலகத்திற்கு அறிவித்தார். அரசாங்கம் வெளியிட்ட விதிமுறைகளின்படி, சுற்றுலா பயணிகள், தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான, அல்லது சமீபத்தில் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டதற்கான, அல்லது நோய்தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டதற்கான ஆதாரத்தை வழங்கிவிட்டு மே 14 முதல் கிரேக்கத்திற்கு செல்ல முடியும். இந்த விதிமுறைகள், கண்டம் முழுவதுமான நடமாடும் சுதந்திரத்தை எளிதாக்க இந்த மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய அளவிலான டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழுக்கு முன்னோடியாக இருந்தன.

டெல்டா திரிபு வகை வைரஸ் ஐரோப்பாவின் பிற பகுதிகள் எங்கிலும் பரவிக் கொண்டிருந்தபோதும், 18 வயதுக்கு மேற்பட்ட வயது வந்தவர்களில் பாதிக்கும் குறைவானவர்களுக்கே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பதுடன், அரசாங்கம் ஒட்டுமொத்த வணிகங்களை திறப்பதற்கான அதன் திட்டத்தை முன்னெடுத்தது. இந்த மாத தொடக்கத்தில், மதுபானகங்களும், இரவுநேர மனமகிழ் மன்றங்களும் திறக்கப்பட்டன, அதே நேரத்தில் திருமணங்கள், கிறிஸ்துவ மத விழாக்கள் மற்றும் ஏனைய விருந்து விழாக்களில் பங்கேற்கும் விருந்தினர் வரம்பு 300 ஆக உயர்த்தப்பட்டது.

ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் மற்றும் சர்வதேச அளவிலும் நடப்பது போல, தொற்றுநோயை தடுக்க தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என்று கூறினாலும், இந்த அரசாங்கத்தின் நடவடிக்கையும் ஆளும் உயரடுக்கின் இலாப நலன்களைப் பாதுகாக்க வைரஸை தடையின்றி பரவ அனுமதிப்பதாக உள்ளது. நோய்தொற்று அதிகரிப்புக்கு அரசாங்கத்தின் முக்கிய பதிலிறுப்பு என்னவென்றால், உள்ளூர் உணவகங்கள், மனமகிழ்மன்றங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளுக்குள் மக்கள் நுழைய தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அல்லது தொற்றுநோயிலிருந்து மீண்டதற்கான ஆதாரத்தை வழங்கினால் போதும் என்கிறது. மதுபானச்சாலைகள் மற்றும் இரவுநேர மனமகிழ்மன்றங்களுக்கும் இது பொருந்தும், இங்கு கூடுதலாக வாடிக்கையாளர்களை அமர வைக்க வேண்டும்.

தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கும் நோய்தொற்று ஏற்படக்கூடும் என்பது மைக்கோனோஸ் தீவில் உருவான ஒரு நோய்தொற்றால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சுற்றுலாப் பருவத்தின் உச்சத்திற்கு முன்னதாக ஜூன் மாத இறுதிக்குள் கிரேக்க தீவுகளில் உள்ள அனைத்து வயது வந்தவர்களுக்கும் தடுப்புமருந்து வழங்குவதற்கான அரசாங்க முனைப்பின் ஒரு பகுதியாக, மைக்கோனோஸில் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தும், இங்கு செயலிலுள்ள மொத்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை கடந்த வாரம் நான்கு மடங்காக அதிகரித்தது.

பயன்பாட்டிலுள்ள டிஜிட்டல் கண்காணிப்பு பொறிகளும் கூட நோய்தொற்று பாதிப்புள்ள பல சுற்றுலா பயணிகளை நழுவ விட்டுவிடும் அளவிற்கு சீரற்று இருப்பதாக கூறப்படுகிறது. மைக்கோனோஸின் துணை மேயர் அலெக்ஸாண்ட்ரோஸ் கவுகாஸ் (Alexandros Koukas) மாநில ஒளிபரப்பு நிறுவனம் ERT க்கு பேட்டியளிக்கையில், “நாங்கள் சற்று பாதுகாப்பில்லாமல் பிடிபட்டோம்” என்று ஒப்புக்கொண்டார்.

சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, மைக்கோனோஸில் தற்போது 100,000 பேருக்கு 365 பேர் வீதம் நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, இது நாட்டின் அதிகபட்ச நோய்தொற்று வீதமாகும். இதேபோல நோய்தொற்றின் முக்கிய மையங்களாகவுள்ள சாண்டோரினி (Santorini) தீவில் 100,000 பேருக்கு 307 என்ற வீதத்திலும், பரோஸ் (Paros) தீவில் 100,000 பேருக்கு 227 என்ற வீதத்திலும் நோய்தொற்றுக்கள் உள்ளன.

புதிய தடுப்பூசி-எதிர்ப்பு திரிபு வகை வைரஸ்கள் அபிவிருத்தி அடைவதற்கான சாத்தியம் அதிகரிக்கையில், மக்கள்தொகையில் பெரும்பகுதியினரை ஆபத்தில் ஆழ்த்தும் வகையில் வைரஸ் பரவ அனுமதிக்கப்படுகிறது. ஆனால் ஜூலை 16 அன்று Antenna தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அபிவிருத்தி மற்றும் முதலீட்டு அமைச்சர் அடோனிஸ் ஜியோர்ஜியாடிஸ் (Adonis Georgiadis), பொருளாதார நடவடிக்கைகள் மீதான எந்தவொரு வரம்பும் மிக அதிகப்படியானதாக கருதப்படுகிறது என்பதை தெளிவுபடுத்தினார்.

“இந்த கோடையில் வைரஸின் பெரும் எழுச்சியுடன் நாம் வாழ்வோம்,” என்று அறிவித்தார்.

தொழிற்சங்க அதிகாரத்துவம் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைக்கு ஆதரவளிப்பதால் மட்டுமே அரசாங்கம் தண்டனையின்றி செயல்பட முடிகிறது. தனியார் துறை தொழிற்சங்க கூட்டமைப்பான GSEE, மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கி முடிக்கப்படும் வரை, மக்களை பாதுகாக்கவும் மற்றும் வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் போதுமான பொது சுகாதார நடவடிக்கைகளை அமல்படுத்த கோருவதற்கு நூராயிரக்கணக்கான உறுப்பினர்களை அணிதிரட்ட மறுத்துவிட்டது. அதற்கு மாறாக, ஜூலை 13 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தடுப்பூசி எடுத்துக் கொள்வதன் அவசியத்தை பெரும்பாலான மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதால், “‘பாதுகாப்பு சுவரை’ முழுமையாக எழுப்பும் வரை நமது சக குடிமக்களுக்கு தேவையான அளவு தடுப்பூசிகளை வழங்கி முடிப்பது தொடர்புபட்ட தகவல் வழங்கும் முன்முயற்சிகளை” எடுக்க அர்த்தமற்ற முறையில் அழைப்பு விடுத்தது.

சிரிசா கட்சி (தீவிர இடது-முற்போக்கு கூட்டணியின் கூட்டணி) ஏப்ரல் மத்தியில் பொருளாதாரத்தைத் திறப்பதற்கு அதன் சொந்த திட்டங்களை முன்வைத்தபோது, அதனுடன் இணைந்த போலி இடது கட்சிகளின் பங்கும் குறைந்த தீங்குடன் இல்லை. கட்சியின் வணிக சார்பு தன்மை என்பது இதுதான், கிரேக்க நாளிதழ் Ta Nea சமீபத்தில், கட்சியின் பழைய இடதுசாரி தோரணை இல்லாதது குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்தது:

“பொதுவாக, பொது சுகாதார நடவடிக்கைகளின் விளைவாக உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட இத்தகைய ஆழ்ந்த நெருக்கடிக்கும், அத்துடன் பெருந்தொற்று போன்ற இத்தகைய அதிர்ச்சிகரமான அனுபவத்திற்கும் பின்னர், ஒரு தீவிர இடதுசாரி கட்சி எனப்படுவது, சந்தைக்கான வரம்புகள் பற்றி பேசுவது, மாநில தலையீட்டின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பது, ஏற்றத்தாழ்வுகளின் கடும் அதிகரிப்பை குறைப்பது, மற்றும் கொள்கையின் தீவிர மறுசீரமைப்பைக் கோருவது ஆகியவை உள்ளிட்ட பன்முக வேலைத்திட்டம் மற்றும் கருத்தியல் ரீதியான எதிர் தாக்குதலை முன்னெடுத்திருக்க வேண்டும் என்றே ஒருவர் எதிர்பார்த்திருப்பார். என்றாலும், சிரிசா இந்த திசையில் நகரவில்லை. இது தொற்றுநோயை கையாளும் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டதுடன், சமீபத்தில் தான் அதன் செய்தியை வேறுபடுத்தத் தொடங்கியுள்ளது.”

“பொருளாதாரத்தை தொடங்குவதற்கான ஒரு திட்டம் இல்லாதது குறித்தும் மற்றும் அரசாங்கத்தின் சார்பிலிருந்து ஒரு வழிகாட்டுதல் இல்லாதது குறித்தும் கவலையை” வெளிப்படுத்தி, மே மாதத்தில் பொருளாதாரத்தை மீளத் திறப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை சிரிசா விமர்சித்ததன் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நிலையில், அத்தகைய “வேறுபடுத்தல்” என்பது முற்றிலும் தந்திரோபாயமான மற்றும் முகஸ்துதியான தன்மையினதே.

Loading