முன்னோக்கு

பாரிய மரணத்தின் பின்புலத்தில் ஒலிம்பிக் தொடங்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 பெருந்தொற்று பாரியளவில் அதிகரித்திருக்கும் பின்னணியில் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் வியாழக்கிழமை தொடங்கின. இரண்டாம் உலகப் போர் வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த பயங்கரங்களுக்கு முன்னர் 1936 பேர்லின் ஒலிம்பிக் நிகழ்வு போலவே, இந்த ஆண்டின் விளையாட்டுகளும் ஒரு அச்சுறுத்தும் மனித துயரத்தின் ஒளியைக் கொண்டுள்ளன.

இந்த பெருந்தொற்றின் முதல் அலைக்கு மத்தியில் கடந்தாண்டு 2020 ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்த விளையாட்டுகள் இப்போது, பெருந்தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது, விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களுக்கு உதவும் பணியாளர்களின் பாரிய ஒன்றுகூடல் பாதுகாப்பாக உள்ளது என்ற பாசாங்குத்தனங்களின் கீழ் நடத்தப்படுகின்றன.

டோக்கியோ பெருநகர அரசாங்க கட்டிடத்தின் அருகே டோக்கியோ 2020 ஒலிம்பிக்கை ஜூலை திறப்பதற்கு எதிராக ஜூன் 23 அன்று மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் [Credit: AP Photo/Eugene Hoshiko]

ஆனால் இந்த பிரமை —ஒலிம்பிக் கிராமத்திலும் மற்றும் உலகெங்கிலும்— கோவிட்-19 நோயாளிகளின் பாரியளவிலான எண்ணிக்கை அதிகரிப்பால் சிதைக்கப்பட்டு வருகிறது.

'இந்த கருத்துக்களைத் தெரிவிக்க எனக்கு தேவைப்படும் நேரத்தில், கோவிட்-19 க்கு 100 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பார்கள்' என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸ் (Dr. Tedros Adhanom Ghebreyesus) புதன்கிழமை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். 'ஆகஸ்ட் 8 இல் ஒலிம்பிக் சுடர் அணைக்கப்படும் நேரத்தில், 100,000 க்கும் அதிகமானவர்கள் மறைந்திருப்பார்கள்.'

உலகெங்கிலும் தினசரி புதிய கோவிட்-19 நோயாளிகள் கடந்த மாதத்தில் 47 சதவீதம் அதிகரித்து நாளொன்றுக்கு 523,000 க்கும் அதிகமான நோயாளிகளாக உயர்ந்துள்ளனர், அத்துடன் நாளாந்த இறப்புக்கள் 7,900 ஆக உள்ளன.

பத்தாயிரக் கணக்கான ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியிலும் நோயாளிகள் பரவி வருகிறார்கள். ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்காக நேரடியாக வேலை செய்து வரும் அல்லது பங்கேற்று வருபவர்களில் நூற்றி பத்து பேருக்கு இதுவரை நோய்தொற்று ஏற்பட்டுள்ளது, இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் விளையாட்டுகளுக்காக பணிபுரியும் ஜப்பானிய மக்கள் மற்றும் மீதமுள்ளவர்கள் வெளிநாடுகளில் இருந்து பயணம் செய்து வரும் தேசிய அணிகளின் விளையாட்டு வீரர்கள் அல்லது பணியாளர்கள் ஆவர். குறைந்தபட்சம் நான்கு நோய்தொற்றுகள் டோக்கியோவுக்கு வெளியே விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுத்து வந்த நகராட்சிகளில் ஏற்பட்டுள்ளன, இது பரவலின் அளவைக் காட்டுகிறது, இன்னும் டஜன் கணக்கானவர்கள் நோய்தொற்று ஏற்பட்டவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளனர்.

பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது பரந்தளவிலான மக்களிடம் இருந்து விளையாட்டு வீரர்களையும், விளையாட்டு வீரர்களிடமிருந்து மக்களையும் தனிமைப்படுத்தும் பெயரளவிலான நடவடிக்கைகள் தோல்வியடைந்து இருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. விளையாட்டு வீரர்கள் ஜப்பானுக்கு வருவதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன என்பதையும், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மத்தியிலும், வைரஸிற்கு எதிராக 'எல்லா முன்னெச்சரிக்கை எடுத்துக் கொண்டவர்களுக்கும்' ஏற்பட்டுள்ளது என்பதை ஃபோர்ப்ஸின் அவ்வபோது புதுப்பிக்கப்படும் எண்ணிக்கை எடுத்துக்காட்டுகிறது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் சுகாதாரம் மற்றும் விளையாட்டு பயிலகத்தின் ஒரு பேராசிரியர் ஹான்ஸ் வெஸ்டர்பீக் நியூஸ்வீக்கிற்கு அளித்த பேட்டியில், 'டோக்கியோவில் தடகள வீரர்களிடையே பதிவாகும் நோயாளிகள் எண்ணிக்கை பெரும்பாலும் பெரும்பரவல் நிகழ்வின் தொடக்கமாக ஆகக்கூடும்,” என்று எச்சரித்தார். “விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களது அணிகள் நெருக்கமாக இருப்பதை வைத்துப் பார்த்தால், தங்குமிடங்களில், உணவகங்கள் மற்றும் பயிற்சி இடங்கள் மற்றும் போட்டியிடங்களில் தொடர்ந்து இங்குமங்கும் நகர்வதும் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடுவதையும் வைத்து பார்த்தால், அந்த வைரஸ் வேகமாக பரவக் கூடும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒவ்வொரு விளையாட்டு வீரரும் இரண்டு வெவ்வேறு போட்டிகளை எதிர்கொள்கிறார்: ஒன்று, விளையாட்டைப் பின்தொடர்தல், மற்றொன்று மனித உடல் சார்ந்த சாதனையின் வரம்புகளைப் பின்னுக்குத் தள்ளுதல், என்றாலும் அதேநேரத்தில் நோய்தொற்றிலிருந்து தப்பிக்க ஒரு பயங்கரமான ஓட்டத்திலும் ஈடுபடுகிறார்.

இந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தி வரும் ஜப்பானில் நாளொன்றுக்கு 3,500க்கும் அதிகமான புதிய கோவிட்-19 நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள் என்பதோடு இது அதிகரித்தும் வருகிறது, இதில் டோக்கியோவில் மட்டும் அண்மித்து 1,400 பேர் உள்ளடங்குவர். மொத்தத்தில், ஜப்பானில் 852,000 க்கும் அதிகமானோரை இந்த நோய் பாதித்துள்ளது, 15,000 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் பெரும்பான்மை இந்தாண்டு தொடக்கத்திலிருந்து ஏற்பட்டதாகும்.

ஜப்பான் மக்களில் 83 சதவீதம் பேர் இந்தாண்டு ஒலிம்பிக் நடத்துவதை எதிர்ப்பதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. தொடக்க விழாவின் போது தேசிய விளையாட்டரங்கத்திற்கு வெளியே கூடிய போராட்டக்காரர்கள், “ஒலிம்பிக்கை இரத்து செய்! உடனடியாக அவற்றை நிறுத்து! இப்போதே தொடக்க விழாவை நிறுத்து!” என்று கோஷமிட்டனர்.

'எங்கள் உயிர்களைக் காப்பாற்ற டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்' என்று change.org இல் பதியப்பட்ட ஒரு இணைய மனுவில் இதுவரை 458,000 க்கும் அதிகமான கையெழுத்துக்கள் பதிவாகி இருப்பதுடன், “எங்கள் உயிரைப் பணயம் வைப்பதை விட ஒலிம்பிக் நடத்துவது மதிப்புடையதா?” என்று கூர்மையான கேள்வி கேட்கப்படுகிறது.

விளையாட்டு வீரர்கள், அவர்களின் பயிற்சியாளர்கள், விளையாட்டரங்க பணியாளர்கள் மற்றும் பரந்த மக்கள் உயிருக்கு மரண அச்சுறுத்தல்கள் இருந்தாலும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) தலைவர் தாமஸ் பாஹ் கூறுகையில் ஒலிம்பிக் 'பாதுகாப்பாகவும் ஆபத்தின்றியும்' இருப்பதாகவும், ஆகஸ்ட் 8 வரை தொடரும் என்றும் கூறியுள்ளார்.

இத்தகைய அறிக்கைகளுக்குள், குறிப்பாக விளையாட்டு வீரர்களைக் குறித்தே கூட அலட்சியமும் குரூரமும் ஒருபுறமும், மறுபுறம் அப்பட்டமாக வர்க்க நலன்களுமே பொதிந்துள்ளன.

நிச்சயமாக விளையாட்டுகளில் அளப்பரிய தொகை, சுமார் 15 பில்லியன் டாலர்கள், முதலீடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கைவசமிருக்கும் ஒளிபரப்பு மற்றும் வினியோக ஒப்பந்தங்களையும் அது பாதுகாக்க விரும்புகிறது, இதுவே 5.7 பில்லியன் டாலர் இருக்கலாமென மதிப்பிடப்படுகிறது.

ஆனால் இதை விட மோசமான நோக்கமும் இருக்கிறது. நோயாளிகள், மருத்துவமனை அனுமதிகள், இறப்புகள் அதிகரித்தாலும் கூட பொருளாதார நடவடிக்கையை மீட்டமைத்து 'முன்னோக்கி நகர்வதற்காக', விளையாட்டுக்களின் குறிக்கோளைக் கூறியவாறு, சாத்தியமா இல்லையா என்று ஒலிம்பிக் விளையாட்டுக்களைக் கொண்டு உலகின் ஆளும் வர்க்கங்களால் ஒரு மிகப்பெரிய பரிசோதனை நடத்தப்படுகிறது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் வார்த்தைகளில் கூறுவதானால், 'வேகமாக பரவும் இந்த வைரஸின் புதிய வகைகளை எதிர்கொண்டாலும் ஏதோவிதத்தில் இந்த பெருந்தொற்றுக்கு முந்தைய வாழ்வுக்கு நெருக்கமாக செல்வது' சாத்தியமா என்று உலகம் ஒரு 'பரிசோதனை முயற்சியை' நடத்துகிறது.

'பருவநிலைக்கு வரும் சமாளிக்கக்கூடிய சாதாரண சளிக் காய்ச்சல் அந்தஸ்துக்கு கோவிட்-19 ஐ ஒதுக்கி விட்டு, சமூக அடைப்பு மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை கடந்த காலத்திற்குரியதாக செய்துவிட இந்த பரிசோதனை ஒரு பலமான சமிக்ஞை வழங்க வேண்டும்,” என்றது குறிப்பிட்டது.

ஒலிம்பிக்கும் கூட, அத்தகைய ஒரு கொடூரமான பரிசோதனை தான், இதில் விளையாட்டு வீரர்கள், பணியாளர்கள் மற்றும் ஜப்பானிய மக்கள் ஆகியோர் 'சமூக அடைப்புகள் மற்றும் சமூக இடைவெளியை கடந்த காலத்திற்கு உரியதாக மாற்ற முடியுமா' என்ற பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார்கள்.

இத்தகைய ஒரு 'பரிசோதனையின்' தர்க்கம் இந்த ஒட்டுமொத்த புவியையும் கொரோனா வைரஸிற்கான பாக்டீரியா உணவாக மாற்றுகிறது, இது தவிர்க்க முடியாமல் மிக சமீபத்திய உலகளாவிய அதிகரிப்புக்குப் பொறுப்பான கடுமையான டெல்டா வகை வைரஸை விட ஏறத்தாழ 'வேகமாக, அதிக வலுவான' ஒரு வகையை உருவாக்கி, இப்புவியில் ஒவ்வொருவரின் வாழ்வையும் அந்தரத்தில் தொங்க விடப் போகிறது.

1936 இல் பேர்லின் ஒலிம்பிக்ஸ் பாசிச நாஜிக் கட்சியால் அதன் சித்தாந்த கருத்துருக்களான இன மேலாதிக்கம் மற்றும் யூத-எதிர்ப்புவாதத்தை முன்னெடுக்க பயன்படுத்தப்பட்டன. அதுபோல, 2020 ஒலிம்பிக்ஸும், மனித உயிர்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாது, அதற்காக என்ன செலவானாலும் சரி என்றவொரு சித்தாந்த சேதியை உலக மக்களுக்கு முதலாளித்துவ வர்க்கம் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய கொலைபாதகக் கொள்கைகளுக்கு எதிராகப் போராட எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். ஜப்பானிலும், உலகின் மற்ற இடங்களிலும் வெளிப்பட்டுள்ளவாறு மனித உயிர்களை ஈவிரக்கமின்றி ஆபத்திற்குட்படுத்துவதன் மீதான மக்கள் கோபம் முதலாளித்துவ சமூக ஒழுங்கிற்கு எதிராகவும் மற்றும் மனித உயிர்களை விட நிதியியல் தன்னலக்குழுவின் இலாப நலன்களுக்கு அது அடிபணிய வைப்பதற்கு எதிராகவும் சுயாதீனமான அரசியல் வழியில் திருப்பிவிடப்பட வேண்டும்.

Loading