இலங்கையில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட இளம் யுவதியின் துன்பியல் மரணமும் முதலாளித்துவத்தின் கபடத்தனமும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த 16 வயது சிறுமியான ஹிஷாலினி ஜூட்டின் துன்பகரமான தலைவிதி பரவலான வெகுஜன எதிர்ப்பைத் தூண்டிவிட்டுள்ளது. முதலாளித்துவ அரசாங்கம், எதிர்க்கட்சிகள், சில நடுத்தர வர்க்க அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களும் இந்த எதிர்ப்பை சுரண்டிக்கொள்ளவும் திசை திருப்பிவிடவும் முன்நிற்கின்றன. பிரதான ஊடகங்களில், உண்மையை வெளிப்படுத்துவதை ஓரத்தில் போட்டுவிட்டு எழுத்தாளர்களினால் பின்னப்படும் ஆத்திரமூட்டும் கதைகளே நிரம்பி வழிகின்றன.

ஹிஷாலினி ஜூட் [Source: Facebook]

தலவாக்கலை டயகம பகுதியில் வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த ஹிஷாலினி, கடந்த ஆண்டு தனது 15 வயதில் ஒரு தரகர் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டிற்கு வேலைக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார். ஹிஷாலினியின் தாய் ரூபா 30,000 கடனை செலுத்துவது உட்பட பொருளாதார பிரச்சனைகள் காரணமாக, தனது மகளை சிறிய வயதிலேயே வேலைக்கு அனுப்ப நேர்ந்ததாக பொலிசாரிடம் கூறியுள்ளார்.

சிறுமி தீக்காயங்களுடன் ஜூலை 3 அன்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார். பின்னர் வெளியான பிரேத பரிசோதனையின் தடயவியல் மருத்துவ அறிக்கையில், ஹிஷாலினி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்தது.

முதலாளித்துவ ஊடகங்களில் சில எழுத்தாளர்கள், வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டது போல் நடந்துகொண்டாலும், இன்னமும் இளம் யுவதியின் மரணம் குறித்து முழுமையான விசாரணை விபரங்கள் வெளிக்கொணரப்படவில்லை. பதியுதீனின் மைத்துனர் மற்றும் மனைவி உட்பட கிட்டத்தட்ட 35 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

பதியுதீன் குடும்பத்தார் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பேரினவாதிகள் மட்டுமின்றி அரசாங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் பல ஊடகங்களுக்கும் இனவெறியைத் தூண்டுவதற்கு முயற்சிப்பதற்கு அப்பால், குற்றம் சம்பந்தமாக பெரும் ஆர்வம் கிடையாது. பாராளுமன்ற உறுப்பினர் பதியுதீன் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று முஸ்லீம் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலோடு சம்பந்தப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் பேரில் மார்ச் மாதம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டு அமைச்சர் பியால் நிஷாந்த, நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் வைத்து ஹிஷாலினியின் பெற்றோரைச் சந்தித்த போது, குற்றம் செய்த எவரும் தப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள், என்று கூறினார். ஒரு அமைச்சர் என்ற வகையில், அவர்களின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும், படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் தேர்தல் துண்டு பிரசுரங்கள் இத்தகைய பொய்யான வாக்குறுதிகளால் நிறைந்து போயிருந்தன. செல்வந்த உயரடுக்கினர் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட சம்பவங்கள் பல நடந்துள்ளன.

இனவாத ஆத்திரமூட்டலில் முன்னணியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, விசேட நடவடிக்கையை முன்னெடுத்து சிறுவர்களை வீட்டு வேலைக்கு வைத்துக்கொள்ளும் வீடுகளை சோதனையிடுவதாக கடந்த வாரம் வாய்ச்சவடால் விடுத்தார்.

பாராளுமன்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, போராட்டத்தில் குதித்து, 'சிறுவர் உரிமைகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்' என்று அழைப்பு விடுத்தார்.

சிங்கள தேசியவாத மக்கள் விடுதலை மூன்னணியின் (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, “இந்த அப்பாவி சிறுமியின் மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பாக தாங்கள் திருப்தியடையவில்லை” என தெரிவித்தார். ஜே.வி.பி. யின் சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர, ஜூலை 27 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றி, 'ஹிஷாலினி சிறுமி மூலம் எழுந்த சமூக உரையாடலை அடக்காமல், உடனடியாக சட்டத்தை அமல்படுத்த வேண்டும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.

பெருந்தோட்ட பிரதேசத்தில் சிறுமியின் மரணம் சம்பந்தமாக பரவலான எதிர்ப்புக்கள் வளர்ச்சியடைகின்ற நிலைமையின் மத்தியில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உட்பட அமைப்புகள், அதை சுரண்டிக்கொண்டு, சமீபத்திய நாட்களில் இந்த சம்பவத்தைக் கண்டித்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர். சில அமைப்புகள் எதிர்ப்பு போராட்டங்களையும் ஏற்பாடு செய்தன. தோட்டத் தொழிலாளர்களை வறுமையில் ஆழ்த்தி வைப்பதற்காக அரசாங்கத்துடனும் கம்பனிகளுடனும் கூட்டாக செயல்படும் இந்த அமைப்புகளின் கீழ்த்தரமான பாசாங்குகளை தொழிலாளர்களும் இளைஞர்களும் நிராகரிக்க வேண்டும்.

பேர்போன இனவெறி அமைப்பான தேசிய அமைப்புகளின் கூட்டணி, ஒரு அறிக்கையை வெளியிட்டதுடன் மேலும் பல பேரினவாத கும்பல்கள் கூட்டுச் சேர்ந்துள்ள சிங்க லே அமைப்பு மற்றும் சிங்கள ராவய அமைப்பும், ஜூலை 22 அன்று, விசாரணையை 'துரிதப்படுத்த வேண்டும்' என்று கோரிக்கை வைத்து, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் முன் போராட்டம் நடத்தின.

சிங்க லே, சிங்கள ராவய மற்றும் தேசிய அமைப்புகளின் கூட்டணியும், நீண்டகாலமாக முஸ்லீம்-விரோத ஆத்திரமூட்டல்களைத் தூண்டிவிட்டு, அந்த இனக் குழு மீது வன்முறை தாக்குதல்களை நடத்தியமை தொடர்பாக பொறுபுச்சொல்ல வேண்டியவை ஆகும். 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர், முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் சிறுவர்கள் உட்பட ஏராளமான முஸ்லிம்கள் இடம்பெயர்ந்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும், சிறுமியின் மரணம் சம்பந்தமாக முன்னெடுக்கப்படும் இந்த மோசமான பிரச்சாரத்தை முற்றிலும் எதிர்க்கின்றன. குற்றத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதே போல், சோசலிச சமத்துவக் கட்சியும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் பாடசாலை வயது சிறுவர்களை வீட்டு வேலைக்கு வைத்து இரையாக்குவது சம்பந்தமாக, முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாப்பதன் பேரில் விஷமத்தனமான பிரச்சாரத்தை முன்னெடுப்பவர்கள் பொறுப்பாளிகள் என்றும் கூறி வைக்கின்றது. சிறுவர்களை வீட்டு வேலைக்கு வைப்பது உட்பட, சிறுவர் உழைப்பை சுரண்டுதலானது முதலாளித்துவ கட்டமைப்புடன் பிணைந்துள்ள ஒன்றாகும். அதை வெறும் சட்டத்தால் நிறுத்த முடியாது.

கொழும்பில் வாழும் ஏழை சிறுவர்கள் [Photo: WSWS media]

2019 இல், சர்வதேச தொழிலாளர் அமைப்பில் (ILO) இலங்கை சம்பந்தமாக பணிபுரியும் ஜிம்ரின் சிங், கிட்டத்தட்ட 40,000 சிறுவர்கள் தொழிலாளர்களாக வேலை செய்வதாகக் கூறினார். அந்த எண்ணிக்கை பாடசாலை செல்லும் சிறுவர்களில் ஒரு சதவீதம் ஆகும்.

2020 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சிறுவர் நிதியத்தின் அறிக்கையின் படி, 18 வயதிற்குள், 50 சதவீத சிறுவர்களும், 40 சதவிகிதப் சிறுமிகளும் பாடசாலையில் இருந்து இடை விலகுகின்றனர். 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் அநேகமானோர், குடும்பங்களின் பற்றாக்குறையான வருமானத்தை பூர்த்தி செய்ய, இவ்வாறு பாடசாலையை விட்டு வெளியேறுவதாக அது மேலும் சுட்டிக்காட்டியது.

இந்த கட்டுரையின் ஆசிரியர், உலக சோசலிச வலைத் தளத்தில் “இலங்கையில் சிறுவர் வறுமை உயர்ந்த மட்டத்தில் உள்ளது” என்ற தலைப்பில், 27 பிப்ரவரி 2018 அன்று எழுதிய கட்டுரையில், கொள்கை ஆய்வுக்கான நிறுவனத்தின் 2017 அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டி பின்வருமாறு குறிப்பிட்டார்:

“அறிக்கையின்படி, பெருந்தோட்ட, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வாழும் சிறுவர்களில் முறையே 27, 05 மற்றும் 11 சதவீதமானவர்கள் வறுமையால் பாதிக்கப்படுகின்றனர். அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளபடி, இலங்கையில் 5-14 வயதுடைய 3,647,261 சிறுவர்களில் நூற்றுக்கு 11.3 சதவீதம் பேர், வறுமையில் துன்பப்படுவதோடு, அவர்களில் நூற்றுக்கு 6.2 சதவீதம் பேர் பாடசாலைக்குச் செல்லவில்லை. இது கடந்த ஏழு தசாப்தங்களாக, முதலாளித்துவ அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட சமூக நிலைமை வெட்டுக்களின் நேரடி விளைவாகும்.

“தோட்டப் பகுதிகளில் வசிக்கும் 341,061 சிறுவர்களில் 92,438 அல்லது நூற்றுக்கு 27.1 சதவிகிதம் பேர் ஏழை குழந்தைகளாவர். இலங்கையின் வறுமையில் வாடும் நூற்றுக்கு 13 சதவீத சிறுவர்கள் இந்தப் பகுதியிலேயே வாழ்கின்றனர்.

“... தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் தொழிலாள வர்க்கத்தில் மிகவும் வறிய தட்டினர் ஆவர். அறிக்கைகளின்படி, இலங்கையின் ஏழைகளில் நூற்றுக்கு 8.8 சதவீத பேர் பெருந்தோட்டப் பகுதிகளிலேயே வாழ்கின்றனர். கடுமையாகச் சுரண்டப்பட்டு வருகின்ற இந்தத் தொழிலாளர்கள், நாளொன்றுக்கு 600 ரூபாய்க்கும் குறைவான ஊதியத்திற்காக தோட்டங்களில் வியர்வை சிந்துகிறார்கள். இந்த சம்பளம் எந்த வகையிலும் குழந்தைகளையும் அவர்களின் கல்வியையும் கவனிக்க போதுமானதல்ல.

“பல சிறுவர்கள் கல்விக்கான செலவை சமாளிக்க முடியாத காரணத்தால், பாடசாலை செல்லாமல் இருக்கின்ற அதே வேளை, பெற்றோரின் குறைந்த ஊதியம் காரணமாக, அவர்கள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்,”

தலவாக்கலை தோட்டத்தில் வீட்டு வாசலில் விளையாடும் சிறுவர்கள் [Photo: WSWS media]

இப்போது, நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக பெருந்தோட்ட, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறுமை நிலைமைகள் கூர்மையாக உயர்ந்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின்படி, உலகளவில் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை, மொத்த சிறுவர் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு ஆகும். தொற்றுநோய் காரணமாக, வரும் ஆண்டுகளில் அந்த நிலைமை மோசமடையும் என்று அவர்கள் மதிப்பிடுகின்றனர். இது இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் மட்டுமன்றி அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் இது வளர்ச்சியடைந்து வருகிறது.

நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ அமைப்பு, எல்லா இடங்களிலும் அதிகளவில் உழைப்பைச் சுரண்டுவதற்காக, மலிவு உழைப்பைத் தேடி செல்கிறது. இது குறைந்த ஊதியத்திற்கு வேலைக்கு பெறக் கூடிய சமூகத்தில் உள்ள மிகவும் ஒடுக்கப்பட்ட குழுக்களை சுரண்டுவதை அவசியமாக்குகிறது. சிறுவர்கள் அந்த குழுக்களில் முதலிடத்தில் உள்ளனர். இது உலகளாவிய நிகழ்வு ஆகும்.

இந்தச் சூழலில்தான் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் பிற பிரிவினரின் போராட்டங்களும் கிராமப்புற போராட்டங்களும் வெடித்துள்ளன. இந்த நிலைமையின் கீழேயே, சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம், அட்டன் மற்றும் தலவாக்கலையின் பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காகவும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காகவும் முஸ்லீம்-விரோத ஆத்திரமூட்டலை கட்டவிழ்த்து விடுவதன் பேரில், அரசாங்கம் இந்த சம்பவத்தை பயன்படுத்த சமயம் பார்க்கின்றது. சிங்கள-பௌத்த பேரினவாத கும்பல்கள், இனவாதத் தீயைத் தூண்டுவதற்கு அரசாங்கத்தின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன.

கல்வியை பெறவேண்டிய வயதில் உள்ள சிறுவர்கள் சுரண்டலுக்கு உள்ளாகின்ற நிலைமைகள் உட்பட, பொதுமக்கள் எதிர்கொள்ளும் சமூகப் பேரழிவு சம்பந்தமாக, அனைத்து அரசாங்க மற்றும் எதிர்க் கட்சிகளுமே முற்று முழுதாக பொறுப்பாளிகள் ஆவர். சிறுவர்கள் எதிர்கொள்ளும் மோசமான நிலைமைகளைப் பற்றி, இந்த அமைப்புகளுக்கு எந்தக் கவலையும் கிடையாது. அவர்கள் கல்விக்கு ஒதுக்கும் நிதியைக் குறைத்து, மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறுவதற்கான நிலைமைகளை உருவாக்கியுள்ளனர். ஹிஷாலினியின் மரணம் இந்த கசப்பான உண்மையை வெளிப்படுத்திய ஒரு சம்பவம் ஆகும்.

இந்த உண்மைகள், வீட்டு வேலை உட்பட சிறுவர் தொழிலாளர் நிலைமையானது, சமூக ஒழுங்கு சம்பந்தமான, அதாவது முதலாளித்துவ அமைப்பு முறை சம்பந்தமான பிரச்சனை என்பதைக் காட்டுகிறது. முதலாளித்துவ அமைப்பை தூக்கியெறிந்து சோசலிச அமைப்பை நிறுவுவதற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே, சிறுவரை வேலைக்கு அமர்த்துவது உட்பட சிறுவர் உழைப்பு சுரண்டல் என்ற குற்றவியல் யதார்த்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

மேலதிக வாசிப்புகளுக்கு,

“இலங்கையில் சிறுவர்களில் நூற்றுக்கு பத்து சதவீதமானோர் பாடசாலை செல்வதில்லை”: முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் மீது எதேச்சதிகாரமான ஊதிய வெட்டு திணிக்கப்படுகின்றது

Loading