கொடைப் பண்புடன் இருக்குமாறு பெருநிறுவன முதலாளிகளுக்கு சீன ஜனாதிபதி அழுத்தமளிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த மாதம் நிதிய மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான மத்தியக் கமிட்டியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உரையாற்றுகையில், 'பொதுவான செழிப்பு' மீதும் மற்றும் 'அதிக வருவாய்களை ஒழுங்குபடுத்த' வேண்டிய அவசியம் மற்றும் 'அதிக வருமானம் பெறுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் சமூகத்திற்கு அதிகமாக திருப்பிச் செலுத்துவதை ஊக்குவிக்க' வேண்டியதன் அவசியம் மீதும் அதிக வலியுறுத்தலுடன் அழைப்பு விடுத்தார்.

தொழில்நுட்ப பெருநிறுவனங்களான டென்சென்ட் மற்றும் அலிபாபா, உணவு விநியோக நிறுவனமான மெய்டுவான் (Meituan), இணையவழி வாடகை-வாகன நிறுவனமான Didi மற்றும் இணையவழி கல்வி நிறுவனங்களான TAL Education, New Oriental மற்றும் Gaotu Techedu உட்பட தனியாருக்கு சொந்தமான பெரிய நிறுவனங்களுக்குக் கடிவாளமிட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (சிசிபி) ஆட்சி மேற்கொண்ட நகர்வுகளை அடுத்து இந்த கருத்துக்கள் வந்தன.

China's President Xi Jinping speaks during the BRICS Business Council prior the 11th edition of the BRICS Summit, in Brasilia, Brazil, Wednesday, Nov. 13, 2019. (AP Photo/Eraldo Peres)

டென்சென்ட்டின் டோனி மா மற்றும் அலிபாபாவின் ஜாக் மா போன்றவர்கள் முறையே 53.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் 45.3 பில்லியன் டாலர்கள் என மிகப் பெரியளவில் தனிப்பட்ட செல்வ வளங்களைக் குவித்துள்ளனர், அதேவேளையில் அவர்களின் வணிக சாம்ராஜ்யங்களும் விரிவடைந்துள்ளன. வெறுப்பூட்டும் மட்டத்திலான இவர்களின் செல்வ வளம், சீனப் பிரதமர் லீ கெக்கியாங் கருத்துப்படி ஒரு நடுத்தர அளவிலான சீன நகரத்தில் மற்ற தேவைகள் ஒருபுறம் இருக்க வாடகை கூட கொடுக்க முடியாமல், மாதத்திற்கு 1,000 யுவான் அல்லது 154 டாலர்கள் சம்பாதிக்கும் 600 மில்லியன் சீனர்களுடன் கூர்மையாக முரண்படுகிறது.

ஜி இன் உரைக்கு விடையிறுத்து, டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் சுற்றுச்சூழல், கல்வி மற்றும் கிராமப்புற சீர்திருத்தம் தொடர்பான பல்வேறு முன்முயற்சிகளுக்கு 15 பில்லியன் டாலர்களைச் செலவிட உறுதியளித்துள்ளது, இந்த அறிவிப்பு 'சீனாவின் செல்வவள மறுபகிர்வு நடவடிக்கைக்கான' விடையிறுப்பு என்று அது கூறியது. அதில் பாதி 'நீண்டகால மதிப்பார்ந்த சமூக கண்டுபிடிப்புகளுக்காக' செலவிடப்படும் என்றும், மீதி தொகை 'பொதுவான செழிப்புக்கு' பங்களிக்க சமூகத் தொண்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அது கூறியது.

சீனாவில் 'பொதுவான செழிப்புக்கு' 2025 க்குள் இதே அளவிலான தொகையை வழங்குவதாக கடந்த வாரம் அலிபாபா உறுதியளித்தது. இந்த பணம் குறு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவியாக பயன்படுத்தப்படும், 'வளர்ச்சியடையாத பகுதிகளை டிஜிட்டல்மயமாக்க' உதவவும், குறைந்த வளர்ச்சியடைந்த பகுதிகளில் சுகாதார திறனை விரிவுபடுத்தவும் இந்த பணம் பயன்படுத்தப்படும் என்று அதன் அறிக்கை குறிப்பிட்டது.

சீனாவின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 73 நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசுடைமை நிறுவனங்கள் இரண்டுமே, 'பொதுவான செழிப்புக்கு' அவை பங்களிக்க இருப்பதாக தங்கள் பங்குதாரர்களுக்குத் தெரிவித்திருப்பதாக ப்ளூம்பேர்க் குறிப்பிட்டுள்ளது.

இந்த பெருநிறுவன அறிவிப்புகள், சமூக சமத்துவமின்மையை தீவிரமாக அணுகுவதற்கு பதிலாக, தெளிவாக அவற்றின் வணிகங்களில் கூடுதலாக அரசு தலையீடு பற்றிய கவலைகளாலும், அவற்றை கூடுதலாக விரிவாக்க உதவும் பகுதிகளை நோக்கியும் திரும்பி உள்ளன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இந்த முதலாளித்துவ மறுசீரமைப்பு நிகழ்முறைகள், சீனாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான விரிவடைந்து வரும் மிகப் பெரிய இடைவெளியைத் திறந்து விட்டது.

Credit Suisse ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல் படி, சீனாவின் 1 சதவிகித மிகப் பெரும் செல்வந்தர்கள் நாட்டின் செல்வ வளத்தில் கிட்டத்தட்ட 31 சதவீதத்தைக் கொண்டுள்ளனர், இது 2000 இல் 21 சதவீதமாக இருந்ததை அதிகமாகும். ஒரு HSBC அறிக்கை, $15,000 முதல் $75,000 வரை சம்பாதிக்கும் சீனாவின் நடுத்தர வர்க்கங்களின் அளவை வைத்து, 340 மில்லியன் மக்கள் பேர் இருப்பதாக குறிப்பிட்டது. இந்த $15,000 என்பது மேற்கத்திய தரங்களின்படி ஒப்பீட்டளவில் மிதமான வருமானம் என்றாலும், இது கடந்தாண்டு பிரதமர் லீ குறிப்பிட்ட 600 மில்லியன் பேர் சம்பாதித்த தொகையை விட எட்டு மடங்கு குறைவாகும்.

கடந்தாண்டில் அதிகரித்தளவில் அவர் பயன்படுத்தி ஒரு வார்த்தையான 'பொது செழிப்புக்கான' ஜனாதிபதி ஜி இன் அழைப்பு, பலமான சமத்துவமின்மையால் தோற்றுவிக்கப்பபட்டு வருகின்ற பெரும் சமூக பதட்டங்களைக் குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எந்திரத்திற்குள் நிலவும் ஆழ்ந்த அச்சத்தைப் பிரதிபலிக்கிறது. “பொது செழிப்பு' வெறுமனே ஒரு பொருளாதார பிரச்சினை அல்ல, மாறாக 'கட்சியின் ஆட்சி அஸ்திவாரத்தின் மீது தங்கியுள்ள ஒரு மிகப்பெரிய அரசியல் விஷயம்' என்று ஜனவரியில் தன் அதிகாரிகளுக்குத் தெரிவித்த அவர், “பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே இணைக்க முடியாத ஒரு இடைவெளி இருப்பதை நாம் விட்டு வைத்திருக்க முடியாது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஆனால் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றவாறு, இந்த இடைவெளி ஏற்கனவே இணைக்க முடியாததாக உள்ளது. பில்லியனர்களிடம் இருந்து வெகுதூரம் விலகிய ஓர் உலகில் நூறு மில்லியன் கணக்கானவர்கள் மாதத்திற்கு 1,000 யுவானுக்கும் குறைவான தொகையில் உயிர்வாழ போராடி வருகின்றனர். அந்நாட்டின் மிகப்பெரும் செல்வந்த தன்னலக் குழுக்கள் தியாகம் செய்ய வேண்டுமென ஜி அழைப்பு விடுக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளார் என்ற உண்மை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிணைத்திருக்கும் நூலிழைகளை மட்டுமல்ல மாறாக அது சோசலிஸ்ட் அல்லது கம்யூனிஸ்ட் என்று தொடர்ந்து கூறப்படும் வாதங்களையும் கேலிக் கூத்தாக்குகிறது.

பீக்கிங் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பேராசிரியரான யாவோ யாங், நியூ யோர்க் டைம்ஸிற்கு எழுதிய ஒரு மின்னஞ்சலில், சீனா 'நியாயத்தோடு நீதியோடு' இருந்து வருகிறது என்று கூறி ஜி இன் புதிய நோக்குநிலையை ஆதரித்தார். அவர் பின்வருமாறு ஒப்புக் கொண்டார்: 'ஒரு சோசலிச நாடாக இருந்தாலும், மறுபங்கீட்டின் அடிப்படையில் சீனா மிக மோசமான நாடுகளில் ஒன்றாக உள்ளது. பொது செலவினங்கள் பெருவாரியாக நகரங்கள், உயரடுக்கு பள்ளிகள் மற்றும் அவ்விதமானவற்றில் செலுத்தப்படுகின்றன.'

சீனாவின் பொருளாதார வளர்ச்சிக் குறைவால் உழைக்கும் மக்கள் மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. 10 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் ஆண்டுகள் இனி இருக்காது. சமூக பதட்டங்களைத் தடுக்க அவசியமான வேலைவாய்ப்பை வழங்குவதற்கு முன்னதாக 8 சதவீத வருடாந்திர வளர்ச்சி அவசியம் என்று CCP கருதியது. ஆனால் இப்போது வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாக வீழ்ச்சியடைந்து உள்ளதுடன், மீண்டு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

1978 இல் டெங் ஜியாவோபிங்கின் (Deng Xiaoping) சந்தை சார்பு நிகழ்ச்சி நிரலுடன் தொடங்கப்பட்ட முதலாளித்துவ மறுசீரமைப்பு செயல்முறைகளை மாற்றியமைக்கும் எண்ணம் எதுவும் ஜி க்கு இல்லை. 'பணக்காரராக இருப்பது கௌரவம்' என்று அவமானகரமாக அறிவித்த டெங், பொருளாதாரத்தை உயர்த்த முதலில் சிலரைப் பணக்காரர் ஆக அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அரசுத்துறை பத்திரிகையான ஜின்ஹூவா (Xinhua) பத்திரிகை செய்திகளின்படி, நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான கடந்த மாதம் மத்திய குழு கூட்டம், 'சிறந்த கல்வியைப் பெறுவதற்கும் வளர்ச்சி திறமைகளை மேம்படுத்துவதற்கும் அதிகமானவர்களை உள்ளடக்கிய மற்றும் நியாயமான நிலைமைகளை உருவாக்குவது' மற்றும் 'அதிகம் பேர் செல்வந்தர்களாக ஆவதற்கான வாய்ப்புகளை' வழங்குவது குறித்து விவாதித்தது.

மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் ஆணைய அலுவலகத்தின் துணை இயக்குனரான Han Wenxiu, அரசாங்கம் 'ஏழைகளுக்கு உதவ பணக்காரர்களைக் கொள்ளையடிக்காது' என்று செல்வந்தர்களுக்கு மறு உத்தரவாதம் அளித்தார். இந்த யோசனை 'சமத்துவவாதம்' அல்ல, மாறாக 'நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையிலான செல்வவள விநியோக இடைவெளியைக் குறைப்பதும் மற்றும் துருவமுனைப்படுத்தலை உறுதியாகத் தடுப்பதற்காகவும்' ஆகும் என்றார்.

ஹன்னின் கருத்துக்கள், பெருநிறுவன உயரடுக்கு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் எந்த பீதியும் ஏற்படுவதைத் தடுப்பதையும், இந்த மாற்றம் பெரும்பாலும் மேலோட்டமானது மற்றும் அவர்களின் இலாபங்களில் குறிப்பிடத்தக்க ஊடுருவல்கள் எதுவும் இருக்காது என்பதை அடையாளம் காட்டுவதையும் தெளிவாக நோக்கம் கொண்டிருந்தன.

இருப்பினும் சந்தை சார்பு அரசியல் விமர்சகர்கள் இதை திருப்பித் தாக்கியுள்ளனர். அலிபாபாவுக்குச் சொந்தமான ஹாங்காங்கை தளமாகக் கொண்ட சவுத் சீனா மார்னிங் போஸ்ட், கடந்த வெள்ளிக்கிழமை பீகிங் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் ஜாங் வெய்யிங்கை முன்னிறுத்தியது: 'நாம் சந்தை சக்திகள் மீது நம்பிக்கை இழந்து, அடிக்கடி அரசு தலையீட்டை நம்பினால், அது பொதுவான வறுமைக்கு வழி வகுக்கும்,' என்று வாதிட்டார்.

ஜி அவரின் 'பொதுவான செழிப்பு' திட்டத்திற்கான ஒரு முன்மாதிரி மண்டலமாக கிழக்கு கடற்கரை மாகாணமான ஜேஜியாங்கை தேர்ந்தெடுத்துள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட அதன் திட்டம், ஒவ்வொருவருக்கும் செலவுக்குரிய சராசரி வருமானமாக 11,500 டாலரை இலக்காக நிர்ணயித்துள்ளது, இது தற்போதைய மட்டங்களை விட 40 சதவீதம் அதிகமாகும். அந்த திட்டம் குறித்து மாகாண நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிய பொருளாதாரத்துறை பேராசிரியர் லி ஷி, ஒரு கட்டுரையில் குறிப்பிடுகையில், சம்பளப் பேரம்பேசல்களில் பணியாளர்கள் வலுவான குரல் கொடுக்கும் வகையில் இந்த மாகாணம் கூட்டு பேரம்பேசல்களை ஊக்குவிக்கலாம் என்று ஆலோசனை வழங்கினார்.

லி யின் ஆலோசனை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி எதிர் கொண்டிருக்கும் முரண்பாட்டை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ஆழமான சமூக சமத்துவமின்மை, வர்க்க பதட்டங்களைத் தூண்டி வருகிறது, அது வெடிக்க அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் வருமானத்தை உயர்த்துவதில் தொழிலாளர்கள் வலுவான குரல் கொடுக்க அனுமதிப்பதும் வளர்ச்சி குறைந்து வரும் பொருளாதார நிலைமைகளின் கீழ் தொழிலாள வர்க்க போராட்டங்களைத் தூண்ட அச்சுறுத்துகிறது. உலகெங்கிலும் உள்ளதைப் போலவே, சீனாவிலும் தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்துடனும் மற்றும் அதன் நலன்களைப் பாதுகாக்கும் சிசிபி அதிகாரத்துவத்துடனும் மோதலுக்குள் நகர்ந்து வருகிறார்கள்.

Loading