கனடாவின் பெருந்தொற்று தேர்தலும், தொழிலாள வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியும், சோசலிசத்திற்கான போராட்டமும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கனடாவின் செப்டம்பர் 20 பெடரல் தேர்தல், ஆளும் முதலாளித்துவத் தன்னலக் குழுவுக்கும், அதன் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சுயநலமான வர்க்க நலன்களுக்கும் மற்றும் உழைக்கும் மக்களின் மிகவும் அடிப்படை தேவைகளுக்கும் இடையிலான சமசரத்திற்கிடமற்ற மோதலை எடுத்துக்காட்டியுள்ள ஓர் உலகளாவிய பெருந்தொற்றுக்கு மத்தியில் வருகிறது. இந்த பெருந்தொற்று நெடுகிலும், கனேடிய ஆளும் வர்க்கம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதன் சமதரப்புகளைப் போலவே, திட்டமிட்டு உயிர்களை விட அதன் இலாபங்கள் மற்றும் செல்வவளத்தைப் பெருக்குவதற்கும் பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளித்து வந்துள்ளது.

தற்போது கனடாவைச் சூறையாடி வரும் கோவிட்-19 நான்காம் அலை, குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய (இவர்களில் ஏறக்குறைய பாதி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்படவில்லை) குறிப்பாக மிகவும் கடுமையான டெல்டா வகையின் ஆபத்துடன் சேர்ந்து, இன்று வரையிலான மிகவும் குரூரமானதாக மற்றும் மிகவும் ஆபத்தானதாக நிரூபணமாகலாம். ஆகஸ்ட் 1 இல் இருந்து, தினசரி புதிய நோய்தொற்றுக்கள் நாளொன்றுக்கு 4,300 க்கும் அதிகமாக ஏறக்குறைய ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. கிராமங்கள் முதற்கொண்டு பள்ளிகளில் நேரடி வகுப்பறைகள் திறந்து விடப்பட்டிருப்பது இந்த வைரஸ் பரவலை இன்னும் கூடுதலாக தீவிரப்படுத்தும். ஏற்கனவே ஆல்பர்ட்டா மருத்துவமனைகள் அவற்றின் தீவிர கண்காணிப்பு பிரிவில் அதிகபட்ச கோவிட் நோயாளிகளைக் கொண்டுள்ளன.

வைரஸ் கட்டுக்கடங்காமல் இருந்தாலும் பொருளாதாரத்தை 'மீண்டும் திறந்து' விடுதவற்கான அவர்களின் இடைவிடாத முனைவில், கனடாவின் தாராளவாத கூட்டாட்சி அரசாங்கமும் உத்தியோகபூர்வ அரசியல் வட்டாரங்களில் உள்ள அதன் மாகாண சமதரப்பும் முதலாளித்துவ இலாப-திரட்சிக்கான பலிபீடத்தில் உழைக்கும் மக்களைத் தியாகம் செய்து வருகின்றன. அவை பெருவணிகத்திற்குச் சார்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றன, இந்த பெருந்தொற்றின் ஆரம்பத்தில் ட்ரூடோவின் தாராளவாத அரசாங்கமும் கனடா வங்கியும் (Bank of Canada) மிகப்பெரும் செல்வந்தர்களுக்குப் பிணை வழங்குவதற்காக நிதிய சந்தைகள் மற்றும் பெருநிறுவன கனடாவின் கஜானாக்களில் பாய்ச்சிய 650 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையைத் தொழிலாள வர்க்கம் செலுத்த வேண்டும் என்பதில் பெருவணிகம் விடாப்பிடியாக உள்ளது.

ஒரு தூண்டுதல் நிகழ்வாக செயல்படும் இந்த பெருந்தொற்று உலக முதலாளித்துவத்தின் அமைப்புரீதியான ஒரு நெருக்கடியையும் மற்றும் அதிலிருந்து எழும் எல்லா பிரச்சினைகளையும்—அதாவது, சமூக சமத்துவமின்மை, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் வல்லரசு மோதல் மற்றும் தொழிலாளர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீது முடிவின்றி விரிவாக்கப்பட்டு கொண்டே வரும் தாக்குதல்கள் என இவை அனைத்தையும் தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களுக்கு இட்டுச் சென்ற உலக முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளை அது கூர்மைப்படுத்தி உள்ளது. 1930களில் போலவே, கனடா உள்ளடங்கலாக, எதிர்விரோத தேசிய-அடிப்படையிலான முதலாளித்துவ குழுக்களாக பொறிந்து வரும் முதலாளித்துவ ஜனநாயகம், உள்நாட்டில் முதலாளித்துவச் சுரண்டலைத் தீவிரப்படுத்துவதன் மூலமும், வர்த்தகப் போர்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புகள் மூலம் சந்தைகள் மற்றும் ஆதார வளங்களை அணுகி தங்களது பலத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலமும் நெருக்கடிகளில் இருந்து வெளியேறும் வழியைக் காண முயல்கிறது.

இதே அமைப்புரீதியான நெருக்கடி உலகெங்கிலும் வர்க்கப் போராட்ட எழுச்சிக்கான புறநிலை உந்துதலையும் வழங்குகிறது. கடந்த நான்கு தசாப்தங்களாக கூலிகள், சலுகைகள் மற்றும் வேலைகள் மீதான தாக்குதல்களைத் திரும்பப் பெறுவதற்கும், கட்டுக்கடங்காத பெருந்தொற்று நிலைமைகளின் கீழ் தங்கள் ஆரோக்கியதையும் உயிரையும் கூட பாதுகாப்பதற்கும் தொழிலாளர்கள் கடுமையான மோதல்களில் இறங்க தூண்டப்பட்டு வருகிறார்கள். வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆசிரியர்கள் பிரேசிலில் இருந்து பிரிட்டன் வரையில் பொறுப்பற்ற முறையில் பள்ளிகளை மீண்டும் திறப்பதை எதிர்த்துள்ளனர், அதேவேளையில் சமீபத்திய மாதங்களில் சமூக சமத்துவமின்மை மற்றும் வறுமைக்கு எதிரான பாரிய போராட்டங்கள் கொலம்பியா, இந்தியா மற்றும் போலாந்தை உலுக்கி உள்ளன. வட அமெரிக்காவில், அமெரிக்காவின் வொல்வோ ட்ரக் ஆலை மற்றும் டேனா அலையின் வாகனத்துறை தொழிலாளர்களும், ஒன்ராறியோ சுட்பரியில் சுரங்கத் தொழிலாளர்கள், கியூபெக் வால்லே-ஜோன்க்சனில் (Vallée-Jonction) Olymel ஆலை இறைச்சி பதப்படுத்தும் தொழிலாளர்களும் அந்நிறுவனங்கள் கட்டளையிட்ட விட்டுக்கொடுப்புகளை எதிர்க்க தைரியமாக போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக அணிதிரட்டுவதும் மற்றும் சமூகத்தைச் சோசலிச முறையில் மறுஒழுங்கமைப்பதும் மட்டுமே அதிகரித்து வரும் சமூக, பொருளாதார, புவிசார் அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவில் இருந்து மீள்வதற்கான ஒரே முற்போக்கான வழியாகும். வளர்ந்து வரும் தொழிலாள வர்க்க எழுச்சிக்குள் ஒரு சோசலிச-சர்வதேச முன்னோக்கைப் புகுத்துவதும், ஒரு புரட்சிகரமான மூலோபாயம் மற்றும் தலைமையை அதற்கு வழங்குவதுமே சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் (ICFI) உள்ள அதன் சகோதர கட்சிகளின் பணியாகும்.

கோவிட்-19 பெருந்தொற்றும், முதலாளித்துவத்தின் தோல்வியும்

உத்தியோகபூர்வ எண்ணிக்கையின்படி 27,300 க்கும் அதிகமான கனேடியர்கள் கோவிட்-19 ஆல் உயிரிழந்துள்ளனர். ஆனால் கோவிட்-19 சம்பந்தப்பட்ட அதிகப்படியான மரணங்களை ஆய்வு செய்த கனடாவின் ராயல் சொசைட்டி அமைப்பின் ஆய்வு ஒன்று உண்மையான எண்ணிக்கையை 50,000 க்கு நெருக்கமாக கூறுகிறது. இது 1918 சளிக் காய்ச்சல் பெருந்தொற்று மற்றும் இரண்டு உலகப் போர்களை தவிர கனடாவின் வரலாற்றில் எந்தவொரு பாரிய உயிரிழப்பு சம்பவத்தை விடவும் அதிகமாகும்.

கியூபெக்கில் ஒரு ஓய்வு இல்லத்தில் பணிபுரியும் கனடிய ஆயுதப் படைகளின் உறுப்பினர் (கனேடிய பாதுகாப்பு அமைச்சகம்)

எதிர்பார்த்திருக்கக்கூடிய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பெருந்தொற்றுக்கு கனடா ஏன் பரிதாபகரமாக தயாரிப்பின்றி இருந்தது? பல தசாப்த கால கடுமையான செலவினக் குறைப்பு நடவடிக்கைகளால் பொது சுகாதார முறை சீர்குலைந்துள்ளது என்பது தெரிந்திருந்த நிலைமைகளின் கீழும், மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண அரசாங்கங்கள் மார்ச் 2020 இன் இரண்டாம் வாரம் வரையில் ஏன் குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை? அந்த உயிராபத்தான வைரஸை அகற்ற விஞ்ஞான அடிப்படையிலான மூலோபாயத்தை அவை ஏன் அமைப்புரீதியில் எதிர்க்கின்றன, மேலும் சமூக அடைப்புகள் மற்றும் ஏனைய முக்கிய பொது சுகாதார நடவடிக்கைகளை ஏன் ஒதுக்குகின்றன? என்ற இத்தகைய மிகவும் அடிப்படையான கேள்விகளுக்கு அவை பதிலளிப்பது ஒருபுறம் இருக்கட்டும், வருகிற திங்கட்கிழமை தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகளில் எதுவுமே அத்தகைய கேள்விகளை இதுவரையில் எழுப்ப கூட தயாராக இல்லை.

மாறாக, கட்சித் தலைவர்கள் அந்த பெருந்தொற்று குறித்து ஒரு போலியான விவாதத்தை நடத்தி வருகிறார்கள். நாட்டை ஒரு பெருந்தொற்று தேர்தலில் மூழ்கடிக்கும் பொறுப்பற்ற முடிவை ட்ரூடோ எடுத்திருப்பதாக எதிர்கட்சிகள் அவர் மீது குற்றஞ்சாட்டுகின்றன, அதேவேளையில் ட்ரூடோ, தடுப்பூசிக்கு எதிர்ப்பு மற்றும் முகக்கவசத்திற்கு எதிர்ப்பு என பிரத்யேக சமிக்ஞைகளுடன் அதிவலது முறையீடுகளைச் செய்வதாக பழமைவாத கட்சி தலைவர் எரின் ஓ' டூலேவை குறை கூறுகிறார். நெரிசலான பள்ளி வகுப்பறைகள் மூலம் குழந்தைகளுக்குச் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்குவதையும் மற்றும் நான்காம் அலை அதிகரித்து வருகையிலும் எஞ்சியுள்ள ஒரு சில சமூக இடைவெளி நடவடிக்கைகளை அகற்றுவதையும் ஆதரிக்க மொத்த ஐந்து கட்சிகளுக்கும் இடையிலான முக்கிய உடன்பாட்டை இவ்விதத்தில் அவர்கள் மூடிமறைக்கிறார்கள்.

அது என்ன என்று இந்த பெருந்தொற்றை ஆய்வு செய்து, உலகெங்கிலும், எல்லாவற்றுக்கும் மேலாக வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் மொத்த முதலாளித்துவ உயரடுக்கும் செய்த அந்த சமூக குற்றம் அம்பலப்படுத்தப்படுவதை தடுப்பதே கோவிட்-19 சம்பந்தமாக கட்சிகளிடையே நிலவும் போலி அரசியல் மோதல்களின் மேலோங்கிய நோக்கமாக உள்ளது.

ஏனென்றால் அவை இலாபக் குவிப்புக்கு ஒரு முட்டுக்கட்டையாக பார்க்கப்படுகின்றன, முதலாளித்துவ அரசாங்கங்கள் அந்த வைரஸைக் கட்டுப்படுத்தி அகற்றுவதற்கு, பாரியளவில் பரிசோதனைகள், தொடர்புகளின் தடம் அறிதல், பொது சுகாதார அமைப்பில் மிகப்பெரியளவில் ஆதாரவளங்களைப் பாய்ச்சுவது, அத்தியாவசியமற்ற வணிகங்கள் மற்றும் பள்ளிகள் அனைத்தையும் மூடி, வைரஸ் ஒழிக்கப்படும் வரையில் உழைக்கும் மக்கள் அவர்களின் வீடுகளிலேயே தங்கியிருந்து அவர்கள் குடும்பங்களைப் பார்த்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு சம்பளம் வழங்குவது என அவசியமான நடவடிக்கைகளை எடுக்க மறுத்துள்ளன. அதற்குப் பதிலாக சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கத்தைப் பின்பற்றியோ அல்லது 'குணப்படுத்தல் நோயை விட மோசமாக இருந்துவிடக் கூடாது' என்ற கொடூரமான உள்நோக்கத்தின் கீழ் அந்த வைரஸ் பரவலை வெறுமனே ஏதோவிதத்தில் குறைக்க நோக்கம் கொண்ட தணிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியோ, அவை பாரிய நோய்தொற்று மற்றும் மரணங்களுக்குப் பரிந்துரைக்கின்றன.

தடுப்பூசிகள் அதிமுக்கியம் தான். ஆனால் கோவிட்-19 ஐ இல்லாதொழிக்க விஞ்ஞானரீதியில் எடுக்கப்படும் ஒருங்கிணைந்த முயற்சியில் உலகின் ஆதாரவளங்களை அணித்திரட்டாவிட்டால், இந்த வைரஸ் தொடர்ந்து பரவும் என்பதோடு, குறிப்பாக அபிவிருத்தி அடையா நாடுகளில் மனித சடலங்களைக் குவித்து, தடுப்பூசியையே மீறும் புதிய உயிராபத்தான வேறு வகை வைரஸ்களை உருவாக்கக்கூடும்.

இந்த வைரஸுக்கு எதிரான போராட்டம் ஓர் அரசியல் போராட்டம் என்பதை கடந்த 20 மாதங்கள் தீர்க்கமாக எடுத்துக் காட்டியுள்ளன, அதை சர்வதேச தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே முன்னெடுக்க முடியும், முன்னெடுக்கும்.

கனேடிய ஏகாதிபத்தியத்தை மற்றும் கனேடிய-அமெரிக்க இராணுவ-மூலோபாய கூட்டணியை எதிர்ப்போம்

ஸ்தாபக கட்சிகள் மனித உயிர்களை விட இலாபங்களுக்கு முன்னுரிமைக் கொடுப்பதில் ஒன்றுபட்டுள்ளதைப் போலவே, அவை கனேடிய ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் நலன்களைத் தாங்கிப் பிடிப்பதிலும் மற்றும் கடந்த எட்டு தசாப்தங்களாக அதன் உலகளாவிய மூலோபாயத்தின் ஆதாரக் கல்லாக இருந்து வந்துள்ள பிற்போக்குத்தனமான கனேடிய-அமெரிக்க இராணுவ-மூலோபாய கூட்டணியைப் பலப்படுத்துவதிலும் ஒன்றுபட்டுள்ளன.

போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களின் புதிய படைத்தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கான மற்றும் வருடாந்தர இராணுவச் செலவுகளை பத்தாண்டுகளில் 70 சதவீதத்திற்கு அதிகரித்து 2026 க்குள் ஆண்டுக்கு சுமார் 33 பில்லியன் டாலராக உயர்த்துவதற்குமான தாராளவாதிகளின் திட்டங்களை அனைவரும் ஆதரிக்கின்றனர். NDP இன் தேர்தல் செயல்திட்டத்தில் குறிப்பிடப்பட்டவாறு, 'தாராளவாதிகள் மற்றும் பழமைவாதிகளின் வெட்டுக்களும் நிர்வாக முறைகேடுகளும்' “நமது இராணுவத்தை … காலாவதியான தளவாடங்களுடன், போதுமான ஆதரவின்றி, ஒரு தெளிவற்ற மூலோபாய தீர்மானத்துடன்' விட்டு வைத்துள்ளதாம், இதுவே அக்கட்சியின் ஒரே மனக்குறையாக உள்ளது.

ஓ' டூலே முதல் NDP இன் ஜக்மீத் சிங் வரை, கட்சி தலைவர்கள் அனைவரும் 2 ட்ரில்லியனுக்கும் அதிகமாக செலவிட்டு பத்தாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட ஒரு குரூரமான கிளர்ச்சி ஒடுக்கும் போராக நடந்த 20 ஆண்டு கால அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்புக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கைப்பாவை ஆட்சி தூக்கியெறியப்பட்டதை கண்டிக்க முண்டியடிக்கின்றனர். ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக அவர்கள் புலம்புவது எரிச்சலூட்டுவதாகவும் பாசாங்குத்தனமாகவும் எதிரொலிக்கின்றன. கனடாவின் ஆதரவுடனும் பங்கெடுப்புடனும் பரந்த மத்திய கிழக்கில் மூன்று தசாப்தங்களாக வாஷிங்டன் நடத்திய ஏகாதிபத்திய போர்களால் சீரழிக்கப்பட்ட ஒட்டுமொத்த சமூகங்கள் குறித்தோ, மில்லியன் கணக்கானவர்கள் இடம் பெயர்த்தப்பட்டதைக் குறித்தோ, பத்தாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதைக் குறித்தோ அவர்கள் இது போல் கண்ணீர் விட்டதில்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆப்கான் தோல்வி கனடாவின் அரசியல் ஸ்தாபகத்தை உலுக்கி கோபப்படுத்தி உள்ளது, அது ஏனென்றால் அது அதன் அமெரிக்க கூட்டாளியின் மிகப்பெரும் பலவீனத்திற்கு சாட்சியாக உள்ளது. அனைத்திற்கும் மேலாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அதன் மிகப்பெரிய மற்றும் நீண்டகால இராணுவ தலையீடாக விளங்கியதும் மற்றும் கனடா ஒரு 'போரிடும் நாடு' என்பதற்கு ஆதாரமாக அது கொண்டாடியதுமான ஆப்கான் போரில் கனேடிய ஏகாதிபத்தியம் பாரியளவில் முதலீடு செய்திருந்ததால் அதற்கு அதுவொரு இரட்டை அடியாக விழுகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புக்களைத் திரும்பப் பெற்றதன் மூலம், அமெரிக்க ஜனாதிபதி பைடென் பகிரங்கமாக சூளுரைத்ததைப் போல, வாஷிங்டனின் மிகவும் சக்தி வாய்ந்த விரோதிகளுடன், எல்லாவற்றிற்கும் மேலாக சீனா மற்றும் ரஷ்யாவுடன் 'மூலோபாய போட்டியில்' கவனம் செலுத்த விரும்புகிறார். இதே போல, NORAD ஐ 'நவீனமயப்படுத்துவது' மற்றும் ஆர்டிக்கை இன்னும் கூடுதலாக இராணுவமயப்படுத்துவது உட்பட உலக மேலாதிக்கத்தைப் பொறுப்பற்ற முறையில் பின்தொடர்வதில் வாஷிங்டனுக்கு உதவவும் மற்றும் கனடா அதன் அபிலாஷைகளைத் தொடரவும் ஒட்டாவா கனடாவுக்கு மிகப்பெரிய இராணுவ பலத்தைக் கொடுக்க வேண்டுமென கனேடிய ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகள் வாதிடுகிறார்கள்.

ட்ரூடோவின் தாராளவாத அரசாங்கம், ஹார்ப்பரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அணுஆயுதம் ஏந்திய சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவின் இராஜாங்க, பொருளாதார மற்றும் இராணுவ-மூலோபாய தாக்குதல்களில் கனடாவை இன்னும் கூடுதலாக முழுமையாக ஒருங்கிணைத்துள்ளது. ட்ரூடோ அரசாங்கம் பெய்ஜிங்கிற்கு மிகவும் 'சமரசமாக' இருந்து வருவதாக வேதனைகளை வெளியிடுவதில், NDP மற்றும் பசுமைக் கட்சிகள் உள்ளடங்கலாக கனடாவின் எதிர்க் கட்சிகள், அமெரிக்க காங்கிரஸ் சபையின் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி தலைவர்களுடன் இணைந்துள்ளன.

கனடாவின் முதலாளித்துவ உயரடுக்கு, மக்களின் முதுகுக்குப் பின்னால் கனடாவை வெடிப்பார்ந்த வல்லரசு மோதல்களுக்குள் இழுத்துக் கொண்டிருக்கிறது, இதன் தர்க்கம் ஓர் உலகளாவிய இராணுவ மோதல் என்பதைக் குறித்து தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பெருவணிகங்களுக்குக் கடமைப்பட்டுள்ள ஐந்து கட்சிகளின் பெருங்கூட்டம்

செப்டம்பர் 20க்குப் பின்னர் எந்தக் கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணி அரசாங்கம் அமைத்தாலும், அதன் கொள்கைகள் பிரச்சாரப் போக்கில் வழங்கப்பட்ட வாய்ச்சவுடால்கள் மற்றும் போலி வாக்குறுதிகளால் அல்ல, மாறாக பெருவணிகத்தின் கோரிக்கைகள் மற்றும் உலக முதலாளித்துவ நெருக்கடியால் தீர்மானிக்கப்படும்.

இந்த பெருந்தொற்றுக்கு மத்தியில் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதென அவர் எடுத்த முடிவை விளங்கப்படுத்த ட்ரூடோ போராடி உள்ளார். ஏனென்றால் அவ்வாறு செய்வது, அவரது தாராளவாத அரசாங்கம் பெருந்தொற்றுக்குப் பிந்தைய சிக்கன நடவடிக்கையை முன்னெடுப்பதில் முன்னோடியாக இருந்துள்ளதாலும், மேலும் கனேடிய முதலாளித்துவத்தின் 'உலகளாவிய போட்டித்தன்மை' நிலையை மேம்படுத்துவதற்கான அதன் உந்துதலை தீவிரப்படுத்தி வருவதுடன், வாஷிங்டனின் ஏகாதிபத்திய சூழ்ச்சிகள் மற்றும் போர்களில் இன்னும் அதிக ஆதரவு வழங்க வாஷிங்டனுக்கு அது வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற நிறைய செய்ய வேண்டியிருப்பதாலும் அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பை எதிர்நோக்கி அவர் நாடாளுமன்ற கரத்தை அவர் பலப்படுத்த விரும்புகிறார் என்பதை ஒப்புக் கொள்ள அவரை நிர்பந்திக்கும்.

பழமைவாதிகள் 'மையத்தை நெருங்கிவிட்டார்கள்' என்ற அவர்களின் மோசடி வாதங்களைப் பெருநிறுவன ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கியதில் இருந்து அவர்கள் ஆதாயமடைந்துள்ளனர். ஹார்பர் மந்திரிசபையில் முன்னாள் மந்திரியான ஓ' டூலே சமூக பழமைவாதிகள் மற்றும் ஏனைய அதிவலது சக்திகளை அணிதிரட்டி கட்சி தலைமையை வென்றிருந்தாலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை, ட்ரூடோ அரசாங்கம் அதிகமாக சமூக செலவு செய்கிறது என்றவர் கடிந்துரைப்பதுடன், சுகாதார கவனிப்பை ஒட்டுமொத்தமாக தனியார்மயப்படுத்த அறிவுறுத்தி வருகிறார். டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரிட்டிஷ் டோரி பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் 'தொழிலாளர் சார்பு' நிகழ்ச்சி நிரலை ஓ' டூலே சுட்டிக்காட்டுகிறார், அது சீன-விரோத போர் வெறியுடன் 'கனடா முதலில்' பொருளாதார பாதுகாப்புவாதத்தை இணைக்கிறது.

கியூபெக் இறையாண்மைவாத/ தேசியவாத இயக்கம் அனைத்துடனும் சேர்ந்து Bloc Québécois இன்னும் கூடுதலாக வலதுக்கு மாறியுள்ளது. அது பெருவணிக-சார்பில் இருப்பதையும், வலதுசாரி வெகுஜனவாத CAQ இன் மாகாண அரசாங்கம் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மத சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் அதன் பேரினவாத சட்டங்களையும் (சட்டமசோதா 9 மற்றும் 21) ஆதரிப்பதாக பகிரங்கமாக பிரகடனப்படுத்தி உள்ளது.

பசுமைக் கட்சியினரோ நீண்ட காலமாகவே தாராளவாதிகளுடன் ஒட்டி உறவாடி செயல்பட்டுள்ளதுடன், அவர்களைப் போலவே காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தைக் கனேடிய முதலாளித்துவத்திற்கான மிகப் பெரிய வியாபார சந்தர்ப்பமாக ஊக்குவிக்கின்றனர்.

பல அம்சங்களில் NDP இன் பிரச்சாரம் எல்லாவற்றையும் விட மிகவும் வஞ்சகமாக உள்ளது. இந்த பெருந்தொற்றிலிருந்து தப்பிக்க செல்வந்தர்களை 'ஆடம்பர சொகுசு படகுகளுக்கும்' அதேவேளையில் மற்றவர்களை 'உயிர்பிழைப்பதற்காக ஓட்டை படகுகளுக்கும்' அனுப்பியதால் ட்ரூடோ 'பணக்காரர்கள்' மற்றும் பெருநிறுவனங்களின் பேர்வழி என்று ஜக்மீத் சிங் கடந்த ஐந்து வாரங்களாக கடுமையாக அவரை சாடியுள்ளார். ஆனால் அதற்கு முந்தைய 20 மாதங்களாக, தாராளவாதிகள் உழைக்கும் மக்களை வறுமை மட்டத்திற்கும் குறைவான பெருந்தொற்று நிவாரணங்களை வழங்கி செல்வந்தர்களுக்குக் கொழுத்த தொகைகளை வழங்கிய போதும், வேலைக்குத் திரும்புவதற்கான மற்றும் பள்ளிக்குத் திரும்புவதற்கான கொலைபாதக பெருந்தொற்று முனைவை முன்னெடுத்த போதும், அவர்களைப் பதவியில் அமர்த்தி வைத்திருந்ததற்கு, தொழிற்சங்கங்களின் முழுமூச்சான ஆதரவுடன், NDP தான் பொறுப்பாகிறது.

உலகெங்கிலுமான சமூக-ஜனநாயகக் கட்சிகள் போலவே, NDP உம் ஓர் ஏகாதிபத்திய கட்சியாகும். அது பதவியில் இருந்த போது முதலாளித்துவ சிக்கனத் திட்டங்களைத் திணித்ததுடன், மெய்யான முதலாளித்துவத்தை 'மனிதாபிமானப்படுத்த' முடியும் என்று ஒரு சமயம் அது தாங்கிப் பிடித்திருந்த பொதுச் சேவைகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட சமூக நல திட்டங்களைக் கலைப்பதில் ஓர் உள்ளார்ந்த பாத்திரம் வகித்தது. “பணக்காரர்கள் நியாயமாக அவர்களின் பங்கைச் செலுத்த செய்வதற்கான' சிங்கின் வாய்சவுடால், தொழிலாள வர்க்க எதிர்ப்பைக் கட்டுப்படுத்தி தணிக்க சேவையாற்றுவதிலும் மற்றும் நாடாளுமன்றத்திற்குள்ளும் போராட்ட அரசியலுக்குள்ளும் அதை அடைத்து வைக்க சேவையாற்றுவதிலும் 'இடது' குட்டி முதலாளித்துவத்தின் ஊதுகுழலாக மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒரு கருவியாக NDP வகித்த சிறப்பு பாத்திரத்துடன் முற்றிலும் இணக்கமாக உள்ளது.

பெருநிறுவன தொழிற்சங்கங்களும் வர்க்க போராட்டம் மீதான ஒடுக்குதலும்

தொழிற்சங்கங்கள், 1930 களின் பெருமந்தநிலைக்குப் பிந்தைய இந்த மிகப்பெரிய முதலாளித்துவ நெருக்கடிக்கு, பெருவணிகம் மற்றும் அரசுடனான அவற்றின் பெருநிறுவன கூட்டணியைப் பண்புரீதியில் புதிய மட்டங்களுக்கு எடுத்துச் சென்றதன் மூலம் விடையிறுத்துள்ளன. இந்த கூட்டணி நீண்ட காலமாக உருவாக்கப்பட்டு வந்துள்ளதுடன், உலகெங்கிலும் சமாந்தரமான அபிவிருத்திகள் உள்ளன. பூகோளமயப்பட்ட உற்பத்தி வளர்ச்சிக்கு முற்போக்காக விடையிறுக்க முடியாமல், தேசியரீதியில் அடிப்படையைக் கொண்ட முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்கள் வர்க்க போராட்டத்துடன் எந்த தொடர்பையும் நிராகரித்து, இன்னும் அதிக நேரடியாக ஒரு தொழில்துறைசார் பொலிஸ் படையாக மாறியுள்ளது.

வால்லே-ஜங்ஷன் (கியூபெக்) இல் உள்ள ஒலிமெல் பன்றி இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் வேலைநிறுத்தம் செய்பவர்கள் எக்செல்டர் கோழி ஆலையில் இருந்து தங்கள் வரும் உடன்பிறப்புகளுடன் ஜூன் 2 அன்று தங்கள் மறியல் வரிசையில் இணைகிறார்கள் (STOVJ பேஸ்புக் பக்கம்)

'கனேடிய' அல்லது 'கியூபெக் வேலைகளை' பாதுகாக்கும் பெயரில், தொழிற்சங்கங்கள் பல தசாப்தங்களாக அதிகளவில் சம்பள மற்றும் சலுகைகள் மீதான வெட்டுக்களையும், வேலைகளை அழித்த மறுசீரமைப்பு உடன்படிக்கைகளையும் திணித்துள்ளன. 1980 களின் தொடக்கத்தில் BC இன் Operation Solidarity முதல் 1990 களின் பிற்பகுதியில் ஒன்ராறியோவில் நடந்த பாரிய ஹாரீஸ்-எதிர்ப்பு இயக்கம் மற்றும் 2021 கியூபெக் மாணவர் நிறுத்தம் வரையில், ஆளும் வர்க்கத்தின் சிக்கன திட்டநிரலுக்கு எதிராக எப்போதெல்லாம் பாரியளவில் போராட்டங்கள் வெடித்துள்ளதோ, தொழிற்சங்கங்கள் அவற்றை நசுக்கி உள்ளன.

தொழிற்சங்கங்கள், இந்த பெருந்தொற்றுக்கு விடையிறுப்பதில், கனேடிய தொழிலாளர் சம்மேளனத்தின் (Canadian Labour Congress - CDC) முன்னாள் தலைவர் ஹாசன் யூசெஃப் எதை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பெருநிறுவன கனடாவுடனான 'கூட்டுறவு முன்னணி' என்று முத்திரை குத்தினாரோ அதை அபிவிருத்தி செய்துள்ளன. CLC முழுமையாக அதன் தேசியவாத மற்றும் பெருநிறுவன கண்ணோட்டத்திற்கு குரல் கொடுக்கும் விதமாக, அதன் வலைத்தளத்தின் தலைப்பில் இடம்பெற்றிருக்கும் ஒரு கோஷத்தில், “கனடாவில், நாங்கள் ஒருங்கிணைந்து ஒருவரை ஒருவர் ஆதரித்து இந்த பெருந்தொற்றை விரட்டியுள்ளோம்' என்று பிரகடனப்படுத்துகிறது.

தொழிற்சங்கங்கள் இந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் நிதிய தன்னலக்குழுக்களுடன் 'ஒட்டிக் கொண்டு', பெருவணிகம் தொடர்ந்து இலாபங்களைக் குவிக்கும் வகையில் மீண்டும் வேலைக்குத் திரும்ப செய்யும்/ மீண்டும் பள்ளிகளைத் திறக்கும் கொலைபாதக முனைவைச் செயல்படுத்த அவர்களுக்கு உதவி வருகின்றன. வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிலாளர் வேலை நடவடிக்கை சம்பந்தமான எல்லா பேச்சுக்களும் 'சட்டவிரோதமானவை' என்று கண்டிக்கின்ற அவை, வேலையிடங்களின் பாதுகாப்பற்ற செயல்பாடுகளுக்கும் பள்ளிகளை அபாயகரமாக மீண்டும் திறப்பதற்கும் வெளிப்படும் தொழிலாளர்களின் எல்லா எதிர்ப்பையும் நசுக்குகின்றன. ஆறு இலக்க சம்பளங்களைப் பெறும் உயர்மட்ட தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள், வர்க்க போராட்டத்தை மூச்சுத் திணறடிக்க வடிவமைக்கப்பட்டதும் மற்றும் சட்டப்பூர்வமான 'ஜனநாயக' “கூட்டு பேரம்பேசல்' போர்வையில் பெருவணிகங்களின் கட்டளைகளைத் திணிக்க அனுமதிக்கும் மாகாண தொழிலாளர் உறவு முறைகளை மதிப்பது அவர்களின் கடமை என்று தொழிலாளர்களுக்கு உபதேசிக்கின்றனர்.

தொழிலாளர் எதிர்ப்பை நசுக்குவதில் தொழிற்சங்கங்களின் சேவைகளை ஆளும் உயரடுக்கு எந்தளவுக்குப் பெரியளவில் மதிக்கின்றன என்பதை அடிக்கோடிடும் வகையில், ஹார்பர், ஹாரிஸ் மற்றும் ஹுடக் போன்ற கடந்த கால் நூற்றாண்டின் புதிய பழமைவாத வலது அரசியல்வாதிகள் தொழிற்சங்கங்களுக்குத் தொந்தரவு கொடுக்க கடைபிடித்த நடவடிக்கைகளைக் கூட உதறிவிடும் ஓ' டூலே, தன்னை 'தொழிற்சங்க ஆதரவாளராக' அறிவித்து, இன்னும் கூடுதலாக தொழிற்சங்க-நிர்வாக ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் முன்மொழிவுகளை முன்வைக்கிறார்.

கனடாவிலும், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள், தங்களைத் தொழிற்சங்கங்கள் என்று குறிப்பிடும் இந்த பெருநிறுவன அதிகார அமைப்புகளின் இடுக்கிப்பிடி கட்டுப்பாடுகளுக்கு எதிராக பகிரங்கமாகவே கிளர்ந்தெழ தொடங்கி உள்ளனர். இந்த போர்குணமிக்க தூண்டுதலை, அமைப்புரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தொழிற்சங்க எந்திரங்களில் இருந்து முறித்து, தொழிலாள வர்க்கத்தின் சமூக சக்தியை முறையாக அணித்திரட்ட நோக்குநிலை கொண்ட புதிய போராட்ட அமைப்புகளைக் கட்டமைத்து, இந்த நாடுகடந்த பெருநிறுவனங்கள் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அதன் சர்வதேச ஐக்கியத்தை ஏற்படுத்தி, ஒரு நனவுப்பூர்வமான அரசியல் மூலோபாயத்திற்குள் திருப்புவதே முக்கிய பணியாகும்.

அதிவலதை ஊக்குவிப்பதும், முதலாளித்துவ ஜனநாயகத்தின் முறிவும்

வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதில் தொழிற்சங்கங்கள் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியினரின் அசைக்க முடியாத விசுவாசத்தை ஆளும் வர்க்கம் சார்ந்திருக்க முடியும் என்றாலும், இந்த உயரடுக்கின் பெருவாரியான ஒரு பிரிவு பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பின் அச்சுறுத்தலை இன்னும் ஆக்கிரோஷமாக எதிர்கொள்ள அதிவலது சக்திகளை வளர்த்து ஊக்குவித்து வருகிறது.

வலதுசாரி தீவிரவாதிகள், தடுப்பூசியை எதிர்ப்பவர்கள் மற்றும் அப்பட்டமான பாசிசவாதிகள் என இவர்கள் தொடங்கிய பல கடுமையான அச்சுறுத்தும் போராட்டங்களை இந்த பெடரல் தேர்தல் பிரச்சாரம் கண்டுள்ளது. அவர்கள் ட்ரூடோ மற்றும் சுகாதார கவனிப்பு தொழிலாளர்கள் மற்றும் அமைப்புகள் நடத்திய பேரணிகளை இலக்கில் வைத்துள்ளனர். ஒரு சில நூறுக்கும் அதிகமான குண்டர்கள் மற்றும் பிற்போக்குத்தனமான கூறுபாடுகள் சம்பந்தப்பட்ட, ஊடகங்களால் மிகைப்படுத்தப்படும் இந்த நிகழ்வுகள் வெட்கமின்றி மக்களிடையே அதிவலது குறிப்பிடத்தக்க ஆதரவை பெற்றிருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன.

யதார்த்தத்தில் அதற்கு ஆதரவு உயர்மட்டத்தில் இருந்து வருகிறது, அரசியல் மற்றும் நிதிய உயரடுக்குகள் மற்றும் அரசு எந்திரத்திற்குள் உள்ள கூறுபாடுகள், ஜூலை 2020 இல் ட்ரூடோவைப் படுகொலை செய்ய முயன்ற இராணுவ இருப்புப் படை போன்றவர்களிடம் இருந்து வருகிறது. இதற்கும் கூடுதலாக, இராணுவவாதம், பேரினவாதம், இஸ்லாமியர் வெறுப்பு உட்பட ஆளும் வர்க்கம் நீண்டகாலமாக பிற்போக்குத்தனத்தை ஊக்குவித்து வந்துள்ளதாலும் மற்றும் இந்த பெருந்தொற்றின் போது குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களின் பாரிய மரணங்களுக்கு அது காட்டிய அலட்சியமும் அதிவலதைப் பலப்படுத்தி உள்ளது.

ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் இப்போது பழமைவாத கட்சியின் முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர் மாக்ஸிம் பெர்னியர் நிறுவிய அதிவலது கட்சியான கனடா மக்கள் கட்சி (PPC) அதிக பங்கு வகிக்க வேண்டுமென அதை வளர்த்தெடுக்கத் தொடங்கி உள்ளனர். தோல்வியுற்ற ஊடக ஜாம்பவான் கான்ரட் பிளாக், பெர்னியரை 'மிகவும் உத்வேகமான கட்சி தலைவர்' என்று புகழ்ந்துள்ளார், Globe and Mail இன் மூத்த கட்டுரையாளர் கூறுகையில், மற்ற நாடுகளின் சட்டமன்றங்களில் 'ஜனரஞ்சகவாத வலதுசாரி கட்சிகள் முக்கிய பிரதிநிதித்துவம் செய்கின்றன' என்பதால் வரும் திங்கட்கிழமை PPC வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

அதிவலதுகளை அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு சட்டபூர்வ பகுதி ஆக்குவதற்கான இந்த முயற்சி முதலாளித்துவ ஜனநாயகத்தின் சீரழிவு முதிர்ந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. கனடாவின் அரசாங்கங்கள் வழமையாக வேலைநிறுத்தங்களைக் குற்றமயமாக்குவதுடன், ஜனநாயக உரிமைகளைத் தாக்குவதற்கு அதிகரித்தளவில் ஜனநாயக-விரோத 'தாக்குப் பிடிக்க முடியாத' வழிவகைகளைப் பயன்படுத்தி வருகின்றன. உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் ஷரத்தைப் பாதுகாக்கும் ஒரு பாதுகாவலராக தன்னைக் காட்டிக்கொள்ளும் ட்ரூடோ, வலதுசாரி ஜனரஞ்சகவாதம் மற்றும் அதிவலதுக்கு எதிராக அவரின் தாராளவாதிகளை 'ஜனநாயகத்திற்கான' அரணாக காட்டுகிறார். ஆனால் அவர் அரசாங்கமோ, பாசிச சிந்தனை கொண்ட ட்ரம்புடன் ஒத்துழைத்தும், உலகெங்கிலும் ஈவிரக்கமின்றி கடிய ஏகாதிபத்திய நலன்களைப் பின்தொடர்ந்தும் கடந்த ஆறு ஆண்டுகளை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைத் துண்டாட செலவிட்டுள்ளது. அனைத்திற்கும் மேலாக, ஜேர்மனியில் மேர்க்கெல் மற்றும் பிரான்சில் மக்ரோன் போன்ற அவருடைய 'ஜனநாயக' சர்வதேச கூட்டாளிகள் என்றழைக்கப்படுபவர்களும் முக்கிய ஜனநாயக நெறிமுறைகளை முறித்து வருகிறார்கள். பாசிச கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) நாடாளுமன்றத்தில் உத்தியோகப்பூர்வ எதிர்கட்சியாக உயர்வதற்கு மேர்க்கெலின் மகா கூட்டணி உதவியது, அகதிகள் மற்றும் கொரோனா பெருந்தொற்று சம்பந்தமான அக்கட்சியின் முக்கிய கொள்கைகளையும் அது ஏற்றுக் கொண்டுள்ளது.

உலகெங்கிலும் முதலாளித்துவ வர்க்கம் அதிவலது ஆட்சி வடிவங்களுக்கு திரும்புவதில் இன்று வரையிலான உச்சபட்ச சம்பவம் அமெரிக்காவில் முயற்சிக்கப்பட்ட ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியாகும். ஜனாதிபதியாக பைடெனை அங்கீகரிப்பதைத் தடுக்க முனைந்த பாசிசவாத குண்டர்கள் தலைமை செயலகத்தை நொறுக்கியமை ட்ரம்பால் வழிநடத்தப்பட்டது, குடியரசுக் கட்சி தலைமையில் உள்ள பெரும்பான்மையினர் மற்றும் தேசிய பாதுகாப்பு எந்திரத்தின் பிரிவுகளால் அது ஆதரிக்கப்பட்டது. குடியரசுக் கட்சியினர் வகித்த பாத்திரத்தை மூடிமறைத்து விடையிறுத்த ஜனநாயகக் கட்சியினர், ஆட்சிக் கவிழ்ப்பு சதியாளர்களுடன் 'நல்லிணக்கத்திற்கு' அழைப்பு விடுத்தனர். ஜனவரி 6 க்கு முந்தைய மாதங்களில் ட்ரம்ப் பகிரங்கமாக ஆட்சிக்கவிழ்ப்புக்காக செய்த தயாரிப்புகளுக்கு கனடாவின் ஆளும் உயரடுக்கு மவுனமாக இருந்து விடையிறுத்தது, இது வாஷிங்டனில் ஒரு சர்வாதிகார ஆட்சியுடன் கூடி ஒத்துழைக்க ஒட்டாவாவுக்கு எந்த தயக்கமும் இல்லை என்பதற்கு ஒரு தெளிவான சமிக்ஞையாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது என்பது சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பாரிய அரசியல் அணிதிரட்டலைச் சார்ந்துள்ளது. தொழிற்சங்கங்களும் மற்றும் NDP உம் மற்றும் பெருவணிகத்தின் வர்க்க போர் தாக்குதலில் அவர்களுக்கு உடந்தையாய் இருப்பவர்களும் தொழிலாள வர்க்க போராட்டத்தை நசுக்குவது தான் அதிவலது பலம் பெறுவதற்குக் கதவைத் திறந்து விடுகிறது.

தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த கட்சி வேண்டும்

இந்த பெருந்தொற்றுக்கு ஆளும் உயரடுக்கின் கொலைபாதக விடையிறுப்பு, ஏகாதிபத்திய போருக்கான அதன் தயாரிப்புக்கள், அது சர்வாதிகார ஆட்சி வடிவங்கள் மற்றும் அதிவலது சக்திகளை நோக்கி திரும்புவது, மற்றும் வர்க்கப் போராட்டத்தைத் திணறடிக்க தொழிற்சங்கங்களைப் பயன்படுத்துவது என இவற்றை எதிர்க்க, தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்தக் கட்சி தேவைப்படுகிறது. இந்த கட்சி, ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் ஆளும் உயரடுக்கு ஊக்குவிக்கும் இனரீதியான, பிராந்தியரீதியான, மொழிரீதியான மற்றும் பிற செயற்கையான பிளவுகள் அனைத்தையும் கடந்து உழைக்கும் மக்களை அரசியல்ரீதியில் ஐக்கியப்படுத்த போராட வேண்டும். அது, நடுத்தர வர்க்கத்தின் ஒரு சிறிய தனிச்சலுகை பெற்ற அடுக்கின் நலன்களையும் மற்றும் கனடாவின் ஆளும் உயரடுக்கின் இரட்டை சித்தாந்தங்களான கனேடிய மற்றும் கியூபெக் தேசியவாதத்தின் நலன்களையும் வெளிப்படுத்தும் எல்லா வகையான அடையாள அரசியலையும் சமரசத்திற்கிடமின்றி நிராகரிக்க வேண்டும். அந்த கட்சி தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) கனேடிய பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (SEP) ஆகும்.

அமைப்புரீதியான வடிவங்களை உருவாக்கவும், வரவிருக்கும் போராட்டங்களுக்கு அரசியல் தலைமையை வழங்கவும் ஒவ்வொரு பணியிடத்திலும், அண்டைப் பகுதிகளிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. இத்தகைய போராட்டங்கள் தேசிய எல்லைகளைக் கடந்து, எந்தளவுக்கு தேசியவாத மற்றும் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களை நேரடியாக எதிர்த்து நிற்கின்றனவோ அந்தளவுக்கு மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதால், சோசலிச சமத்துவக் கட்சி சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியைக் (IWARFC) கட்டமைப்பதற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து தொழிலாளர்களையும் வலியுறுத்துகிறது.

இத்தகைய குழுக்களின் வலையமைப்பை நிலைநிறுத்துவதும், வெற்றிக்கான ஓர் அரசியல் முன்னோக்கு கொண்டு உழைக்கும் மக்களை ஆயுதபாணியாக்குவதும் தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு சோசலிச தலைமையைக் கட்டமைப்பதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும். இந்த தலையாய பணிக்காகவே SEP தன்னை அர்ப்பணித்துள்ளது. 1917 ரஷ்யப் புரட்சியையும் ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிராக லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பு முன்னெடுத்த போராட்டத்தையும் உள்ளீர்த்து, 1938இல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து அது பாதுகாத்து அபிவிருத்தி செய்துள்ள வேலைத்திட்டமான உலக சோசலிச புரட்சி வேலைத்திட்டத்திற்கு கனடா தொழிலாளர்களை வென்றெடுக்க சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. இந்த வேலைத்திட்டத்தின் நடைமுறை, சோசலிச கொள்கைகளுக்கும் ஐக்கிய வட அமெரிக்க சோசலிச அரசுகளுக்கும் பொறுப்பேற்ற தொழிலாளர்களின் அரசாங்கங்களை ஸ்தாபிக்கும் ஒரு பொதுவான போராட்டத்தில், அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள வர்க்க சகோதர சகோதரிகளுடன் கனடிய தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்த கோருகிறது.

Loading