பிளவுபட்ட ஜேர்மன் தேர்தல்களில் சமூக-ஜனநாயகவாதிகள் குறுகிய பெரும்பான்மையுடன் வென்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நேற்றைய ஜேர்மன் கூட்டாட்சித் தேர்தல் அனைத்து அரசியல் கட்சிகளிடமிருந்து மக்களின் ஆழமாக அந்நியப்படுதலையும் மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மை மற்றும் கூர்மையான வர்க்க மோதல்களை நோக்கிச்செல்லும் ஒரு காலகட்டத்தையும் பிரதிபலிக்கிறது.

பதவி விலகும் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் கிறிஸ்தவ ஜனநாயகவாதிகளும் (CDU) மற்றும் அவர்களின் வேட்பாளர் ஆர்மின் லாஷெட்டும் ஒரு வரலாற்றுச் சரிவைச் சந்தித்தனர். மேர்க்கெல் சான்சிலராக இருந்த 16 வருடங்களுக்குப் பின்னர், கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU) / கிறிஸ்தவ சமூக ஒன்றியமும் (CSU) 24.1 சதவிகிதத்துடன் பதிவான அனைத்து வாக்குகளிலும் நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே பெற்றுள்ளது. இது கடந்த 2017 தேர்தலின் (32.9 சதவீதம்) முந்தைய மோசமான முடிவுடன் ஒப்பிடுகையில் CDU/CSU எட்டு சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை இழந்தது. 2013 இல், கட்சியால் 41.5 சதவீத வாக்குகளை திரட்டக்கூடியதாக இருந்தது.

தேர்தலுக்குப் பின்னர் மாலையில் பேர்லினில் பிரதான வேட்பாளர்களின் வட்டமேசை (Screenshot)

'மக்கள் கட்சி' என்று அழைக்கப்படும் இரண்டாவது ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) 25.7 சதவிகிதத்தில் பதிவான அனைத்து வாக்குகளிலும் கிட்டத்தட்ட கால் பகுதியான வாக்குகளை பெற்றுள்ளது. சமூக-ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அவர்களின் அதிபர் வேட்பாளர் ஓலாப் ஷொல்ஸ், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு (20.5 சதவீதம்) அவர்களின் வரலாற்று ரீதியாக மிக மோசமான முடிவுகளுடன் ஒப்பிடும்போது தங்கள் வாக்குகளின் பங்கை மேம்படுத்த முடிந்தது. ஆனால் அவர்கள் வாக்களிக்காத தொழிலாளர்களின் அடுக்குகளை அவர்களால் வெல்லமுடியவில்லை. புதிதாக சமூக ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் (1.3 மில்லியன்) பெருமளவானவை முன்னாள் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய வாக்காளர்களிடமிருந்து வந்துள்ளன.

அதன் 'தேர்தல் வெற்றி' இருந்தபோதிலும், சமூக ஜனநாயகக் கட்சி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களால் வெறுக்கப்படுகிறது. ஹார்ட்ஸ் சமூகநல சீர்திருத்தங்கள், பெரும் பணக்காரர்களுக்கு வரி வழங்குதல் மற்றும் ஓய்வூதிய வயதை 67 ஆக அதிகரித்தல் ஆகியவற்றின் மூலமாக சமூக ஜனநாயகக் கட்சி ஜேர்மனியில் ஆழ்ந்த சமூக சமத்துவமின்மைக்கு முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளது. தற்போதைய நிதி அமைச்சரான ஷொல்ஸ், பெரிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு பில்லியன் கணக்கான யூரோக்கள் வழங்கியதற்கும் மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் பாரிய மறுஇராணுவமயமாக்கலின் உந்துதலுக்கான வடிவமைப்பாளர் ஆவார்.

சமூக ஜனநாயகக் கட்சியை விட இடது கட்சி மட்டுமே இன்னும் திவாலானது. 2017 இன் பெற்ற அதன் வாக்குகளில் கிட்டத்தட்ட பாதியை (-4.3 சதவீதம்) இழந்து அதன் மோசமான முடிவை எட்டியது. 4.9 சதவீதத்துடன், இறுதியில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கான 5 சதவிகித தடையை அது கடக்கவில்லை. இருப்பினும், ஏனெனில் அது மூன்று நேரடி அங்கத்தவர்களை வெல்ல முடிந்ததால் அடுத்த பாராளுமன்றத்தில் கட்சி இன்னும் பிரதிநிதித்துவம் செய்யப்படும். அதாவது 5 சதவிகிதம் தடை இனி பொருந்தாது.

இடது கட்சியின் தோல்விக்கான காரணம் தெளிவானது. தொற்றுநோய், பரவலான சமூக சமத்துவமின்மை மற்றும் அதிகரித்துவரும் போர் ஆபத்துக்கு மத்தியில், முன்னாள் ஸ்ராலினிஸ்டுகள், வெறுப்படைந்துபோன சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் போலி இடதுகள் பாரிய சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பு தொடர்பாக மக்களிடம் முறையிட விரும்பமோ அல்லது அதற்கான இயலுமையோ இல்லை.

இடது கட்சி ஏற்கனவே ஆட்சி செய்யும் மாநிலங்களில், அது சமூகச் செலவினங்களைக் குறைக்கிறது, அகதிகளை கொடூரமாக நாடு கடத்துகிறது, மற்றும் தொற்றுநோய்க்கு மத்தியில் பாரிய நோய்த்தொற்றிற்கான கொலைகார கொள்கையை பின்பற்றுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில், அவர்களின் வேட்பாளர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சமூக ஜனநாயகக் கட்சி/ பசுமைக்கட்சி/ இடது கட்சி கூட்டணிக்கு (சிவப்பு-சிவப்பு-பச்சை அரசாங்கம் என்று அழைக்கப்படுவதற்கு) ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். நேட்டோ மற்றும் ஆளும் வர்க்கத்திடம் ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

ஜேர்மனிக்கான் மாற்றீட்டு கட்சியின் (AfD) தேர்தல் முடிவு (10.3 சதவீதம்) முழு ஆளும் வர்க்கத்தின் வலதுசாரி அரசியலும் எவ்வளவு வெறுக்கப்படுகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வலதுசாரி தீவிரவாதிகள் தொடர்ந்து ஊடகங்களில் புகழப்பட்டாலும், ஸ்தாபகமயப்படுத்தப்பட்ட கட்சிகள் அவற்றை திட்டமிட்டு அரசியல் அமைப்பில் ஒருங்கிணைத்து அவர்களின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொண்டாலும், AfD வாக்குகளை இழந்தது. கூட்டாட்சி தேர்தலில் இரண்டு சதவிகித வாக்குகளையும் மெக்லன்பேர்க்-மேற்கு பொமரேனியாவிலலும் பேர்லினிலும் ஒரே நேரத்தில் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் இந்த தீவிர வலதுசாரி கட்சி 4 மற்றும் 6 சதவிகித வாக்குகளையும் இழந்தது.

இருப்பினும், இது தீவிர வலதுசாரிகளால் ஏற்படும் ஆபத்தை இல்ல்லாதொழிக்காது. மாறாக. முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி, பெரும் வல்லரசுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய வளர்ச்சி ஆகியவற்றினால் வலதுசாரி தீவிரவாதிகளின் வேலைத்திட்டத்தை இன்னும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதன் மூலம் ஆளும் வர்க்கம் அதற்கு எதிர்வினையாற்றுகிறது.

இது தற்போதைய தொற்றுநோய்களில் வெளிப்படையாகத் தெரிந்தது. குறிப்பிடத்தக்க வகையில், தேர்தலின் மாலையின்போது ஜேர்மனியில் மட்டும் கிட்டத்தட்ட 100,000 உயிர்களைக் கொன்ற கொரோனா வைரஸ் தொற்றுநோய் பற்றி ஒரு முன்னணி அரசியல்வாதி கூட ஒரு வார்த்தை கூட வெளிப்படுத்வில்லை. CDU/CSU முதல் இடது கட்சி வரை அனைத்துக் கட்சிகளும், வைரஸ் பரவுவதை அனுமதிக்கும் கொலைகார மீண்டும் திறக்கும் கொள்கையை ஆதரிக்கின்றன. இது உயிர்களுக்கு மேலாக இலாபத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்றன. மற்றும் இக்கொள்கையின் மையத்தில் AfD இன் கையொப்பம் உள்ளது.

வன்முறைமிக்க சமூகத் தாக்குதல்கள் மற்றும் வெளிநாடுகளில் இராணுவத்தை பாரியளவில் வலுப்படுத்தல் மற்றும் உள்நாட்டில் அடக்குமுறைமிக்க அரசு எந்திரம் ஆகியவற்றுடன் இணைந்த இந்த அரசியல் போக்கு இப்போது தொடரவும் தீவிரப்படுத்தப்படவும் உள்ளது. தேர்தலின் மாலையில் ஷொல்ஸ் மற்றும் லாஷெட் ஆகியோர் அடுத்த கூட்டாட்சி அரசாங்கத்தை வழிநடத்தவும், தாராளவாத சுதந்திர ஜனநாயகக் கட்சியினர் (FDP) மற்றும் பசுமைவாதிகளுடன் ஆராயவும் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை விரைவாகத் தொடங்கவும் போட்டியிடும் கோரிக்கைகளை வகுத்தனர். இருகட்சினரும் இத்தகைய பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளனர்.

கிட்டத்தட்ட 6 சதவிகிதம் அதிகம் பெற்று 14.6 சதவிகிதத்துடன் கூட்டாட்சித் தேர்தலில் தங்கள் சிறந்த முடிவை அடைந்த பசுமைக் கட்சியினர், அவர்கள் கூட்டணிக்குத் தயாராக இருப்பதாகத் தெளிவுபடுத்தினர். 'நாங்கள் ஆட்சி செய்ய விரும்புகிறோம்,' என்று பசுமையின் இணைத் தலைவர் ரோபேர்ட் ஹாபெக் கூறினார். 'தமக்கு சமூக ஜனநாயகக் கட்சி அருகில் உள்ளது' என்று ஹாபெக் கூறியபோதும், ஆனால் CDU/CSU தலைமையில் FDP உடனான கூட்டணியும் சாத்தியமாகும் என்றார்.

11.5 சதவிகிதம் (0.8 சதவிகிதம் அதிகமான) வாக்குகள் பெற்ற FDP இன் முன்னணி வேட்பாளரரும் மற்றும் தலைவருமான கிறிஸ்டியான் லிண்ட்னர், ZDF தொலைக்காட்சிக்கு CDU/CSU, FDP மற்றும் பசுமைக் கட்சி இணைந்த என்று அழைக்கப்படும் ஜமைக்கா கூட்டணியில் உள்ளடக்கத்தின் அடிப்படையில் மிகப் பெரிய உடன்பாட்டை கண்டதாக கூறினார். ஆனால் சமூக ஜனநாயகக் கட்சி உடனான பேச்சுவார்த்தையை லிண்ட்னர் நிராகரிக்கவில்லை. முன்னதாக மாலையில், அவர் 'பேர்லின் வட்ட மேசை' நிகழ்ச்சியில் அவர்கள் எவ்வாறு தொடர்ந்து செல்ல விரும்புகிறார்கள் என்பது பற்றி 'பசுமைக் கட்சி மற்றும்தாராளவாத சுதந்திர ஜனநாயகக் கட்சி முதலில் ஒருவரோடொருவர் பேசுவார்கள்' என்று அறிவித்தார்.

அனைத்து கட்சிகளும் அடிப்படை அரசியல் பிரச்சினைகளில் உடன்படுகின்றன மற்றும் நுண்ணிய விடயங்களில் மட்டுமே வேறுபடுகின்றன. ஆயினும்கூட, ஒரு அரசாங்கத்தை உருவாக்க முன்பு போலவே நான்கு மாதங்கள் ஆகலாம். எண்ணிக்கையின் அடிப்படையில், CDU-SPD பெரும் கூட்டணியின் தொடர்ச்சியும் சாத்தியமாகும். இருப்பினும், 1950களுக்குப் பின்னர் முதல்முறையாக ஜேர்மனி மூன்று கட்சி கூட்டணியால் ஆளப்படும் என்பதற்கான பல அறிகுறிகள் உள்ளன.

ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்கும் பிரச்சினைக்கு திரும்பிய ஷொல்ஸ், 'பேர்லின் வட்டமேசை' நிகழ்ச்சியில் பின்வருமாறு எச்சரித்தார். இப்போதே எல்லாம் செய்யப்பட வேண்டும் 'அதனால் நாங்கள் கிறிஸ்துமஸுக்கு முன் தயாராக இருக்கிறோம்.' அதற்கு “சற்று முன்பே ஒழுங்கிற்கு வந்தாலும் நன்றாக இருக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.

2022 ஆம் ஆண்டில் ஜேர்மனி G7 இன் தலைமையை கொண்டிருக்கும் என்று லாஷெட் சுட்டிக்காட்டினார். 'புதிய அரசாங்கம் மிக விரைவில் பதவியேற்க வேண்டும்' என்பதற்கு இதுவும் ஒரு காரணம் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் 'கண்டிப்பாக கிறிஸ்துமஸுக்கு முன்பாக முடிவடையும்' என்றார்.

இரண்டு முக்கிய நிகழ்வுகள் ஆளும் வர்க்கத்தை இயக்குகின்றன. ஒருபுறம், நீண்டகால அரசியல் ஸ்தரமற்றதன்மை தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் எதிர்ப்பைத் தூண்டும் என்று அது அஞ்சுகிறது. தேர்தல் பிரச்சாரம் ஏற்கெனவே அதிக சம்பளம் மற்றும் பாதுகாப்பான மற்றும் ஒழுக்கமான பணி நிலைமைகளுக்கான வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களால் சூழப்பட்டிருந்தது. இரயில் சாரதிகள், விநியோக ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை பராமரிப்பாளர்களின் வேலைநிறுத்தங்கள் ஆகியவை வர்க்கப் போராட்டத்தில் சர்வதேச எழுச்சியின் ஒரு பகுதியாகும்.

மறுபுறம், முதலாளித்துவ புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுக்கான தொடர்ச்சியான போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றது. நியூ யோர்க்கில் வெள்ளிக்கிழமை நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அவர் ஆற்றிய உரையில், கூட்டாட்சித் தலைவர் பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் (SPD) அடுத்த கூட்டாட்சி அரசாங்கத்தின் ஒரு முக்கிய பணியைத் தெளிவுபடுத்தினார். எக்கட்சி பதவிக்கு வந்தாலும் அது ஜேர்மனியின் ஆக்கிரமிப்பு மற்றும் பெரும் சக்திக்கான வெளியுறவுக் கொள்கைக்கு திரும்புவதை துரிதப்படுத்தும்.

ஆப்கானிஸ்தானில் ஏகாதிபத்திய தோல்விக்கு ஸ்ரைன்மையர் ஒரு சில முதலை கண்ணீர் வடித்தார். இதற்கு மத்தியிலும் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்று மற்றும் பலபத்து மில்லியன் மக்களை அகதிகளாக மாற்றிய முழு நாடுகளையும் அழித்த இராணுவ தலையீட்டு கொள்கை தொடரவேண்டும் என்று அறிவிக்கப்பட்ட வேண்டியிருந்தது. அவர் 'சோர்வடைவது தவறான கோட்பாடாகும். என் பார்வையில், புவிசார் அரசியல் அதிருப்தியின் இந்த தருணம் நமது வெளியுறவுக் கொள்கைக்கு மூன்று விஷயங்களைக் குறிக்கிறது: நாம் மிகவும் நேர்மையானவர்களாகவும், புத்திசாலிகளாகவும், வலிமையானவர்களாகவும் மாற வேண்டும்!” என நம்புவதாக கூறினார்.

இதன் மூலம் எல்லாவற்றிற்கும் மேலாக ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவ வலுப்படுத்துதல் பற்றியே ஸ்ரைன்மையர் கருதுகின்றார். ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கை' 'சரியாக இருப்பதுடனும், மற்றவர்களைக் கண்டிப்பதுடனும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. ஆனால் நாங்கள் இராஜதந்திர, இராணுவ, சிவில், மனிதாபிமானம் என்ற எங்கள் கருவிப்பெட்டியை விரிவுபடுத்த வேண்டும்” என்று அவர் விளக்கினார். 'எங்கள் சாத்தியக்கூறுகளில் நாம் வலுவாக இருக்க வேண்டும்.' அதனால்தான் ஜேர்மனியும் 'இந்த ஸ்திரமற்ற காலங்களில் தனது பாதுகாப்புத் திறன்களில் அதிகம் முதலீடு செய்கிறது” என்றார்.

ஜேர்மன் ஏகாதிபத்தியம் மற்றும் நிதி மூலதனத்தின் அடுத்த அரசாங்கத்தை நிறுவுவதற்கான சூழ்ச்சிகளுக்கு திரைக்கு பின்னால் கூடிவரும் போது தொழிலாள வர்க்கம் ஒன்றும் செய்யாமல் நிற்க முடியாது. அரசியல் நிகழ்வுகளில் அது சுயாதீனமாக தலையிட வேண்டும் மற்றும் ஆளும் வர்க்கத்தின் பிற்போக்குத் திட்டங்களை அதன் சொந்த வேலைத்திட்டத்தின் மூலம் எதிர்கொள்ள வேண்டும்.

இதுதான் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியத்துவமாகும். வலதுநோக்கிய திருப்பத்திற்கான எதிர்ப்பு, பாரிய தொற்று மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக குரல்கொடுக்கவும் மற்றும் சோசலிச முன்னோக்கை வழங்கவும் நாங்கள் தேர்தலில் பங்கேற்றோம். வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மற்றும் பேர்லினில் எங்கள் கட்சியின் மாநிலப் பட்டியல்களுக்காக 1,535 வாக்குகளைப் பெற்றோம். இது கடந்த கூட்டாட்சி தேர்தலை விட 250 அதிகமாகும்.

இந்த போராட்டம் இப்போது தொடரப்பட வேண்டும். தேர்தலுக்கு முன்னதாக எங்கள் அறிக்கையில் நாங்கள் பின்வருமாறு எழுதினோம்: 'இந்த சோசலிச முன்னோக்கிற்கான போராட்டம் செப்டம்பர் 26 ஆம் தேதியுடன் முடிவடையவில்லை. நாங்கள் ஒவ்வொரு வாக்கிற்குமாக போராடுகிறோம். ஏனென்றால் சோசலிச சமத்துவக் கட்சிக்கான ஒரு வலுவான ஆதரவு பாரிய தொற்று, சமத்துவமின்மை மற்றும் போருக்கு எதிரான வளர்ந்து வரும் எதிர்ப்பின் முக்கிய அறிகுறியாகும். ஆனால் முக்கியமான பணி என்னவெனில் எதிர்வரும் வர்க்கப் போராட்டங்களுக்கு தொழிலாளர்களை தயார்படுத்துவதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் புதிய சோசலிச தலைமையாக சோசலிச சமத்துவக் கட்சியையும் மற்றும் நான்காம் அகிலத்தையும் கட்டியெழுப்புவதாகும்.

Loading