ஜேர்மனியின் இடது கட்சியின் வீழ்ச்சி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இடது கட்சியின் முன்னணி வேட்பாளரும் கட்சியின் தலைவருமான ஜனீன் விஸ்லர்

ஜேர்மனியின் செப்டம்பர் 26 கூட்டாட்சி தேர்தலில் இடது கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதில், பதவிலகிச்செல்லும் அதிபர் அங்கேலா மேர்க்கெலின், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) கட்சிகான வாக்குகள் வீழ்ச்சியடைந்துடன், தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டும்(AfD) இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை இழந்தது.

2017 கூட்டாட்சி தேர்தலுடன் ஒப்பிடும்போது, இடது கட்சியின் வாக்குகள் கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது. இது கடந்த தேர்தலைவிட 4.3 சதவிகிதத்தை இழந்து 4.9 சதவிகிதத்தை மட்டுமே பெற்றது. அதன் நாடாளுமன்ற இருக்கைகளின் எண்ணிக்கை 69 லிருந்து 39 ஆக சுருங்கி, இது 730 உறுப்பினர்களாக அதிகரித்துள்ள நாடாளுமன்றத்தில் உள்ள மிகச்சிறிய பாராளுமன்ற குழுவாக உள்ளது. அது பேர்லினில் இரண்டும் மற்றும் லைப்சிக்கில் ஒன்று என நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பிரதிநிதிகளை வெல்லாதிருந்திருந்தால் இனி புதிய நாடாளுமன்றத்தில் தனது பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கும். ஏனென்றால் விகிதாச்சார பிரதிநிதித்துவத்திற்கு தேவையான ஐந்து சதவிகித தடையை அது அடைய முடியவில்லை.

வாக்கு இழப்புகள் அனைத்து கூட்டாட்சி மாநிலங்களிலும் பரவி, இடது கட்சியின் அனைத்து அரசியல் பிரிவுகளையும் பாதிக்கிறது. கட்சியின் கிழக்கு கோட்டைகளான ஐந்து கிழக்கு மாநிலங்களில் அவை குறிப்பாக மோசமான முறையில் உள்ளன. இங்கே, அதன் சராசரி 9.8 சதவீதம் ஆகமட்டுமே இருந்தது. துரிங்கியா (11.4) மற்றும் மெக்லென்பேர்க்-மேற்கு பொமரேனியா (11.1) ஆகிய இடங்களில் மட்டுமே அது இன்னும் இரட்டை இலக்க முடிவுகளை அடைந்தது. இடது கட்சி போடோ ராமலோ ஏழு ஆண்டுகளாக மாநில முதல்வராக இருந்த துரிங்கியாவில், இது ஜேர்மனிக்கான மாற்றீடு (24), சமூக ஜனநாயகக் கட்சி (23.4) மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (16.9) ஆகியவற்றுக்கு பின்னால் நான்காவது கட்சியாகியுள்ளது.

இடது கட்சி மேற்கு மாநிலங்களிலும் பாரியளவில் தோற்றது. சாரா வாகென்கிநெக்ட் முன்னணி வேட்பாளராக இருந்த நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியாவில், 3.8 புள்ளிகளை இழந்து வெறும் 3.7 சதவீதத்தை பெற்றது. பேர்லின் மற்றும் மெக்லென்மேர்க்-மேற்கு பொமரேனியாவில் உள்ள மாநில பாராளுமன்றங்களுக்கான தேர்தல்களிலும் இடது கட்சி இழப்புகளை சந்தித்தது. இருப்பினும் தேசிய தேர்தலில் இழந்தளவிற்கு இல்லை. பேர்லினில், அதன் முடிவு 1.6 விகிதம் குறைந்து 14 சதவீதமாகவும், மெக்லன்பேர்க்-மேற்கு பொமரேனியாவில் 3.3 விகிதம் குறைந்து 9.9 சதவீதமாகவும் இருந்தது.

தேர்தலின்போது இருந்த சூழ்நிலை தெளிவாக இடது பக்கமாக இருக்கையில் இடது கட்சியின் வீழ்ச்சி மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இது கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், அதன் பவேரிய சகோதரக் கட்சியான கிறிஸ்தவ சமூக யூனியன் மற்றும் ஜேர்மனிக்கான மாற்றீடு ஆகியவற்றிடம் இழந்த பாரிய வாக்குகளால் மட்டுமல்ல, வாக்காளர்களை ஆதிக்கம் செலுத்திய முக்கிய பிரச்சினைகள் குறித்த கருத்துக் கணிப்புகளாலும் காட்டப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய், காலநிலை மாற்றம் மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகியவை தொடர்ந்து வாக்காளர்களை ஆதிக்கம் செலுத்திய பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.

பேர்லினில், தேர்தல்களுடன் இணைந்து நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் 56.4 சதவிகிதம் பெரிய தனியார் வீட்டு நிறுவனங்களை அபகரிப்பதற்கு ஆதரவாக இருந்தது. 39 சதவிகிதம் மட்டுமே எதிராக வாக்களித்தது. ஆனால், வாக்கெடுப்பைத் தொடங்கியவர்கள் இடது கட்சிக்கு நெருக்கமாக இருந்தாலும், அது பயனளிக்கவில்லை.

இடது கட்சியின் வீழ்ச்சிக்கான காரணம்

மேலோட்டமான ஊகங்களைத் தவிர, தேர்தலில் அதன் வீழ்ச்சிக்கு கட்சித் தலைமையிடம் எந்த விளக்கமும் இல்லை. ஆனாலும் இடது கட்சியின் வீழ்ச்சிக்கான காரணம் வெளிப்படையானது. அதன் வலதுசாரி, முதலாளித்துவக் கொள்கைகள்தான் இதற்குக் காரணம். அவற்றை இனிமேலும் இடதுசாரி சொற்றொடர்களால் மறைக்க முடியாது. அதன் பல வருடகாலமான அரசாங்கத்தில் பங்கெடுப்பபுடனான அனுபவத்திற்குப் பின்னர், ஏனைய முதலாளித்துவ கட்சிகளுக்கு இடது கட்சி ஒரு மாற்று என்று இனிமேலும் யாரும் உரிமை கோரமுடியாது.

ஏற்கனவே 2002 முதல் 2011 வரை, பேர்லினில் ஆட்சி செய்த சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இடது கட்சியின் கூட்டணி பொதுத்துறை வேலைகள் மற்றும் ஊதியங்களை குறைத்தல், மருத்துவமனைகளை தனியார்மயமாக்குதல் மற்றும் ஊக வணிகர்களுக்கு அரசாங்க வீடுகளை விற்பனை செய்வதில் நாடு தழுவியளவில் முன்னணியில் இருந்தது. தலைநகரில் உருவாகிய கூர்மையான சமூக முரண்பாடுகள் இந்தக் கொள்கைகளின் விளைவாகும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போது, இடது கட்சி பெரும் கூட்டணியின் 'உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை' கொள்கையை ஆதரித்தது. இது ஏற்கனவே 94,000 உயிர்களைக் கொன்றதுடன் இப்போது ஆபத்தான நான்காவது அலைக்கு வழிவகுக்கிறது. இடது கட்சி அரசாங்கத்திற்கு தலைமை வகிக்கும் ஒரே மாநிலமான துரிங்கியாவின் மாநிலதலைவரான போடோ ராமலோ, பலமுறை கட்டுப்பாடுகளை நீக்குவதை முன்னெடுத்துள்ளார். இதன் விளைவாக, துரிங்கியா ஜேர்மனியில் இரண்டாவது அதிக தொற்று விகிதத்தைக் கொண்டுள்ளது. அங்கு மொத்த மக்கள் தொகையில் 6.3 சதவீதம் பேர் இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அகதிகளை நாடு கடத்துவதிலும் இம்மாநிலமே முன்னணியில் உள்ளது. மேலும் இது ஜேர்மனிக்கான மாற்றீட்டின் கோட்டையாகும். இது துரிங்கியா பாசிசவாதி பிஜோர்ன் ஹொக்க இனால் தலைமை தாங்கப்படுவதுடன் மற்றும் இடது கட்சியால் சகித்துக்கொள்ளப்படுகின்றது. ஜேர்மனிக்கான மாற்றீடு, கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) கூட்டணி 2019 இல் ராமலோவை வீழ்த்தியபோதும் அவர் பொதுமக்களின் எதிர்ப்புகளால் மட்டுமே மீண்டும் அதிகாரத்திற்கு திரும்பினார். அவர் தனிப்பட்ட முறையில் ஜேர்மனிக்கான மாற்றீட்டின் வேட்பாளர் மைக்கேல் கஃவ்மானை தனது சொந்த வாக்கு மூலம் மாநில நாடாளுமன்றத்தின் துணைத் தலைவர் பதவிக்கு உதவினார்.

கூட்டாட்சி தேர்தலின் போது, இடது கட்சியின் வலதுசாரி தன்மை அனைவருக்கும் தெரிந்திருந்தது. அதன் முழு தேர்தல் பிரச்சாரமும் தன்னை போருக்கும் சமூக நலவெட்டுகளுக்கும் ஆதரவான சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி கூட்டணி பங்காளியாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில், அது நேட்டோவுக்கு முதல் முறையாக தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்ததுடன் மற்றும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் விடுதல் மற்றும் ஆதரவான பல வாக்குகள் மூலம் ஆப்கானிஸ்தானில் உள்ள ஆயுதப்படைகளின் போர் நடவடிக்கையை ஆதரித்தது.

தேர்தல் தேதிக்கு சற்று முன்பு, அது அதன் தேர்தல் வேலைத்திட்டத்தை ஒரு 'உடனடி வேலைத்திட்டம்' மூலம் மாற்றியது. இது சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சிவாதிகளின் நிலைப்பாடுகளுடன் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தது. பல வாக்காளர்கள் நகலுக்கு பதிலாக அசலுக்கு வாக்களிக்க விரும்பினர். ஒளிபரப்பு சேவையான ARD யின் பகுப்பாய்வின்படி, 590,000 இடது கட்சி வாக்காளர்கள் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் மற்றும் 470,000 பசுமைக் கட்சிக்கும் மாறிவிட்டனர். 520,000 வாக்களிக்கவே இல்லை.

இத்தேர்தல் தோல்விக்கு இடது கட்சி மேலும் வலதுபுறமான திருப்பத்துடன் பிரதிபலிப்பை காட்டுகின்றது. ராமலோவை தவிர, நாடாளுமன்றக் குழுவின் தலைவரான டீட்மார் பார்ட்ஷும் மற்றவர்களும் தேர்தலுக்குப் பின்னர் சாரா வாகென்கிநெக்டிற்கு மிக முக்கிய பாத்திரத்திற்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். ராமலோ Die Welt செய்தித்தாளில் பின்வருமாறு கூறினார்: 'நான் எப்போதும் சஹாரா வாகென்கிநெக்குடன் நல்ல உறவைக் கொண்டிருந்தேன். அவர் திரும்பி வருவது நல்லது என்று நான் நினைக்கிறேன்.'

தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு சற்று முன்பு வாகன்கிநெக்ட்டை சுய-நீதியுள்ளவர்கள் என்ற (Die Selbstgerechten) தனது புத்தகத்தை வெளியிட்டார். இது உலகளாவிய குடியுரிமை மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு எதிராகப் பாய்ந்து, பாதுகாப்புவாதம் மற்றும் ஒரு வலுவான அரசை ஊக்குவிக்கிறது. அத்துடன் குடியேறுவோரும் மற்றும் அகதிகளும் ஊதியத்தை குறைப்பதாக கண்டித்து, அவர்களை வேலைநிறுத்தத்தை உடைப்பவர்கள் மற்றும் ஜேர்மன் கலாச்சாரத்திற்கு அந்நியமானவர்கள் என்று குறிப்பிடுகின்றது.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு அதன் நாடாளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால், மத்திய அரசாங்கத்தில் பங்கேற்பது இப்போது இடது கட்சிக்கு ஒரு விருப்பமாக இல்லை. ஆனால் அது கூட்டாட்சி மாநிலங்களில் அரசாங்கத்தின் பங்கடுப்பதற்கு மிகவும் முனைப்புடன் இறங்கி உள்ளது. சமூக ஜனநாயகக் கட்சி முன்பு கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் உடன் ஆட்சி செய்த மெக்லென்பர்க்-மேற்கு பொமரேனியாவில் சமூக ஜனநாயகவாதிகள் பெரும்பான்மை பெற உதவுவதற்காக அது தேர்தல் இரவில் சமூக ஜனநாயக கட்சிக்கு தன்னை வழங்கியது. பேர்லினில், வலதுசாரி சமூக ஜனநாயகவாதி பிரான்சிஸ்கா ஹிவ்வையின் கீழ் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சிகளுடன் கூட்டணி தொடர விரும்புகிறது.

போலி-இடது மார்க்ஸ் 21 மற்றும் SAV இன் திவால்நிலை

இடது கட்சியின் சரிவு மார்க்ஸ் 21, சோசலிச மாற்றீடு (SAV) மற்றும் RIO போன்ற போலி-இடது அமைப்புகள் பற்றிய ஒரு மோசமான தீர்ப்பை வழங்குகிறது. இவை பல ஆண்டுகளாக இடது கட்சிக்கு உள்ளேயிருந்தும் வெளியேயிருந்தும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் ஒரு சோசலிஸ்ட் கட்சியாக மாற்ற முடியும் என்ற மாயையை தூண்டின.

உண்மையில், இடது கட்சி ஆரம்பத்தில் இருந்தே ஒரு முதலாளித்துவக் கட்சியாக இருந்தது. அதன் தோற்றம் சோசலிச ஐக்கிய கட்சி (SED), முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் ஸ்ராலினிச கட்சி, 1989 இல் ஜேர்மனியை முதலாளித்துவ அடிப்படையில் மீண்டும் இணைப்பதை ஆதரித்தது. அந்த நேரத்தில் அதன் முன்னோக்கு சோசலிச ஐக்கிய கட்சியின் கடைசி பிரதமரும் அதன் உடனடி வாரிசான PDS இன் நீண்டகால கௌரவத் தலைவரான ஹான்ஸ் மோட்ரோவால் பின்வருமாறு தொகுத்து கூறப்பட்டது: 'என் பார்வையில், ஐக்கியத்திற்கான பாதை தவிர்க்க முடியாதது மற்றும் உறுதியுடன் எடுக்கப்பட வேண்டும்” என்று அவர் தனது நினைவுகளில் எழுதினார்.

அப்போதிருந்து முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்கான இந்த தீர்மானத்தை PDS உறுதியாகப் பிடித்தது. முதலாளித்துவ மறுசீரமைப்பின் பேரழிவு தரும் சமூக விளைவுகளுக்கான எதிர்ப்பை அடக்கி, கிழக்கு ஜேர்மன் நகராட்சிகள் மற்றும் மாநிலங்களில் அது மீண்டும் ஒழுங்கை நிலைநிறுத்தும் காரணியாக மாறியது.

2007 இல், PDS வேலை மற்றும் சமூக நீதிக்கான மேற்கு ஜேர்மன் தேர்தல் மாற்றுடன் (WASG) இணைந்து இடது கட்சியை உருவாக்கியது. ஷ்ரோடர் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் 2010 (Agenda 2010) சமூகநல உதவிகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் மீது பாரிய தாக்குதல்களை அறிமுகப்படுத்திய பின்னர், சமூக ஜனநாயகக் கட்சியும் தொழிற்சங்கங்களும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தங்கள் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்று அஞ்சிய தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், சமூக ஜனநாயகக் கட்சி செயல்பாட்டாளர்கள் மற்றும் போலி இடதுசாரிகளுக்கு WASG ஒரு ஒன்றுகூடும் இடமாக இருந்தது.

இந்த புதிய கட்சியின் தலைவர்களாக PDS இன் நிறுவனர் கிரிகோர் கீசி உம் மற்றும் 40 வருடங்கள் சமூக ஜனநாயகக் கட்சியில் உயர்ந்த பதவிகள் மற்றும் மாநில அலுவலகங்களில் அனுபவம் பெற்ற ஒஸ்கார் லாபொன்டைன் தெரிந்தெடுக்கப்பட்டனர். மற்றயவற்றுடன், லாபொன்டைன் சார்புரூக்கன் நகர மேயராகவும், சார்லாந்து மாநிலத்தின் முதலமைச்சராகவும், மாநில மற்றும் மத்திய கூட்டாட்சி சமூக ஜனநாயகக் கட்சி தலைவராகவும், சான்சலருக்கான சமூக ஜனநாயகக் கட்சி வேட்பாளராகவும், ஷ்ரோடரின் கீழ் மத்திய நிதி அமைச்சராகவும் இருந்தார்.

இடது கட்சியில் உள்ள பழைய சோசலிச ஐக்கிய கட்சிகாரர்கள் (SED) தங்கள் வலதுசாரி மற்றும் பழமைவாத குணத்தை மறைக்க சிறிதளவு முயற்சி செய்தாலும், பல போலி-இடது போக்குகள் அதை இடதுசாரி, சோசலிச கட்சியாக முன்வைக்க முயற்சித்தன.

1990 களில், ஜேக்கப் மொனெட்டா, வின்பிரைட் வொவல்ப் மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேலின் பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் பிற முக்கிய பிரதிநிதிகள் PDS இல் சேர்ந்தனர். அங்கு அவர்கள் விரைவாக நிர்வாகக் குழுவிற்கு உயர்ந்தனர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆனார்கள். இடது கட்சியின் ஸ்தாபிதத்துடன் அவர்களைத் தொடர்ந்து டோனி கிளிஃவ் நிறுவிய 'அரச முதலாளித்துவ' போக்கு மற்றும் டெட் கிராண்டால் நிறுவப்பட்ட மிலிட்டன்ட் போக்கு ஆகியவற்றில் தமது சர்வதேச வேர்களை கொண்டுள்ள மார்க்ஸ் 21 மற்றும் SAV ஆகியவை சமூக ஜனநாயகக் கட்சியின் சுற்றுவட்டாரத்தினுள் சென்றனர்.

இந்த போலி இடதுசாரிகள் இக்கட்சியில் முன்னிலை வகிக்கின்றனர். மார்க்ஸ் 21 மற்றும் அதன் முன்னோடி அமைப்புகளில் 20 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்த ஜெனின் விஸ்லர், இடது கட்சியின் இணைத் தலைவராக இருந்து மற்றும் டீட்மார் பாட்ஸுடன் முன்னணி வேட்பாளராக இருந்து தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். அரசாங்கத்தில் பங்கேற்பு மற்றும் கட்சி நேட்டோவினை ஒப்புக்கொள்ளுதல் பற்றிய கட்சியின் நோக்குநிலையை அவர் பல கலந்துரையாடல் நிகழ்ச்சிகள், தேர்தல் பிரச்சார உரைகள் மற்றும் நேர்காணல்களில் பாதுகாத்துள்ளார்.

போலி இடதுசாரிகள் அவர்கள் வாக்குறுதியளித்தபடி இடது கட்சியை இடது பக்கம் நகர்த்தவில்லை. அவர்கள் அதனுடன் வலது பக்கம் சென்றனர். இதற்கு காரணம் இந்த போக்குகளின் வர்க்கப் பண்பாகும். அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை, ஆனால் வசதி படைத்த நடுத்தர வர்க்கத்தினரின் கல்வியாளர்கள், தொழிற்சங்கம் மற்றும் கட்சி அதிகாரிகள் போன்றோரின் சலுகைகளைப் பாதுகாப்பதற்காக இருக்கும் சமூக ஒழுங்கைப் பாதுகாக்கிறார்கள்.

இடது கட்சிக்கு அவர்களை ஈர்த்தது அதன் வெற்று சமூக வார்த்தையாடல்கள் அல்ல. மாறாக முதலாளித்துவ ஒழுங்கை பாதுகாப்பது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்ற சம்பளத்தினூடாகவும், தேர்தல் பிரச்சார செலவுகளை திரும்ப பெறுவதன் மூலமும் மற்றும் அவர்களின் ரோசா லுக்செம்பேர்க் அறக்கட்டளையின் மானியங்கள் மூலம் கட்சி கஜானாவுக்குள் நுழையும் மில்லியன் கணக்கானவை தொடர்பான அக்கறையாகும்.

போலி-இடதுகள் வலது பக்கம் திரும்புவது ஒரு சர்வதேச நிகழ்வாகும். கிரேக்கத்தில், 2015 இல் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன ஆணைகளுக்கு எதிரான அலையினால் ஆளும் கட்சியாக சிரிசா தேர்ந்தெடுக்கப்பட்டது. இது பின்னர் ஒரு மிருகத்தனமான சிக்கன திட்டத்தை செயல்படுத்தியது. ஸ்பெயினில், அரசாங்கத்தின் ஒரு பகுதியாக பொடேமோஸ், இரக்கமற்ற நோய்பரவும் கொள்கைகள், கட்டலோனிய பிரிவினைவாதிகளை குற்றவாளிகளாக்குவது மற்றும் மிருகத்தனமான சமூக தாக்குதல்களை ஆதரிக்கிறது. அமெரிக்காவில், அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) பைடென் நிர்வாகத்திற்கான இடதுசாரி மூடுதிரையாக செயல்படுகின்றனர்.

எனவே போலி இடதுசாரிகள் இடது கட்சியை ஒரு சோசலிச கட்சியாக மாற்ற முடியும் என்ற பொய்யை தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருப்பது இதனால் சரியானதே. 'இடது நோக்கி பார்க்கும் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் பசுமைவாதிகளுடன் இடது கட்சியின் 'சீர்திருத்த முகாம்' சாரா வாகன்கிநெக்ட் மற்றும் பலரை தேர்தல் தோல்விக்காக குற்றம்சாட்டி: 'தேர்தல் தோல்விக்கு பின்னர் என்ன செய்வது 'என்ற நீண்ட அறிக்கையை மார்க்ஸ் 21 வெளியிட்டுள்ளது. அத்துடன் எதிர்க் கட்சியாக இருந்து இடது கட்சிக்கு 'புதிய தொடக்கம்' தேவை என்கின்றது.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சிக்கான வாக்குகள் 'முற்போக்கான சமூக மற்றும் சுற்றுச்சூழல் கொள்கைகளுக்கான நம்பிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது' என்று மார்க்ஸ் 21 கூறுகிறது. 'அவர்கள் வழங்கவில்லை என்றால், வலுவான இடதுசாரிக்கு இன்னும் அவசர தேவை உள்ளது என்பது விரைவில் தெளிவாகிவிடும்.' அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பை அடக்குவதற்கான அவசர தேவை என்பதே இதில் அடங்கியிருக்கின்றது என்பதை சரியாக படிக்க வேண்டும். மார்க்ஸ் 21 இன் சொந்த தயாரிப்பான ஜெனின் விஸ்லர் பற்றி இந்த அறிக்கையில் ஒருமுறை குறிப்பிடப்படவில்லை. இதை விட கோழைத்தனமான முறையில் உங்கள் சொந்த தடங்களை நீங்கள் மறைக்க முடியாது.

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கு

போலி-இடது போலல்லாமல், சோசலிச சமத்துவக் கட்சி எப்போதுமே ஒரு சோசலிச இயக்கத்தை இடது கட்சி மற்றும் அது சார்ந்த முழு சமூக ஜனநாயக மற்றும் தொழிற்சங்க பிரிவினருக்கு எதிரான சமரசமற்ற அரசியல் போராட்டத்தில் மட்டுமே கட்டமைக்க முடியும் என்று வலியுறுத்தி வருகிறது.

மார்ச் 2, 1990 இல் PDS இன் கட்சி மாநாடு -அப்போது கிழக்கு ஜேர்மனியில்- வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து முதலாளித்துவ உரிமையை ஆதரிக்கும் ஒரு சமூக ஜனநாயகவாத வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொண்டபோது நாங்கள் எமது பத்திரிகையான தொழிலாளர் குரலில் பின்வருமாறு எழுதினோம்: 'தொழிலாள வர்க்கம் ஸ்ராலினிசத்திடமிருந்தும் மற்றும் அதன் புதிய வடிவத்திலான [முன்னாள் SED தலைவர்களான] ஹோனெக்கர் மற்றும் கிரென்ஸிடமிருந்தும் தீர்க்கரமாக உடைத்துக்கொள்ள வேண்டும். PDS தொழிலாள வர்க்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. ஆனால் இப்போது முதலாளித்துவத்தில் தமது நிலையை உயர்த்திக்கொள்ள விரும்பும் அதிகாரத்துவத்தின் சலுகை பெற்ற அடுக்காகும்'.

அப்போதிருந்து, சோசலிசத்திற்கான போராட்டம் ஏன் இடது கட்சிக்கு எதிராக மட்டுமே சாத்தியம் என்பதை விளக்கும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் மற்றும் அறிக்கைகளை நாங்கள் வெளியிட்டுள்ளோம். எனவே அதன் வீழ்ச்சி வரவேற்கத்தக்கது. இது ஒரு கூர்மையான வர்க்க துருவமுனைப்படுதலின் விளைவு ஆகும். மில்லியன் கணக்கான கொரோனா இறப்புகள், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே முன்னோடியில்லாத இடைவெளி, மற்றும் இராணுவவாதம், மறுஆயுதமயமாக்கல் மற்றும் போர் ஆகியவை உலகெங்கிலும் கடுமையான வர்க்கப் போராட்டங்களை நிகழ்ச்சி நிரலில் முன்வைக்கின்றன.

ஆளும் வர்க்கங்கள் தாம் ஒன்றுகூடிக்கொள்வதன் மூலம் இதற்கு பதிலளிக்கின்றன. மேலும் வலதுபுறம் நகர்ந்து, அரசு எந்திரத்தை ஆயுதமாக்கி, பாசிச சக்திகளை வலுப்படுத்துகின்றன. இது இடது கட்சிக்கும் பொருந்தும்.

தொழிலாள வர்க்கம் எதிர் திசையில் நகர்கிறது. உலகெங்கிலும் எதிர்ப்பின் அறிகுறிகள் பெருகி வருகின்றன. குறைந்த ஊதியம், தாங்கமுடியாத வேலை நிலைமைகள் மற்றும் பணிநீக்கங்கள், தொற்றுநோய்காலங்களில் சமூகநோய் பரப்பல் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள், அதிக வாடகை மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவற்றிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நிகழ்கின்றன.

இந்தப் போராட்டங்களுக்கு அடிப்படை அரசியல் மறுநோக்குநிலை தேவையாக உள்ளது. தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக, சர்வதேச அளவில் ஒன்றிணைந்து தொழிலாளர்களின் அரசாங்கங்களை நிறுவுதல், பெரிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை அபகரித்தல் மற்றும் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் உற்பத்தியை மறுசீரமைக்க சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei) மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் இந்த வேலைத்திட்டத்திற்காக போராடுகின்றன. முதலாளித்துவ அரசினுள் தம்மை மிகவும் ஆழமாக இணைத்துக்கொண்டுள்ள Marx 21மற்றும் SAV போன்றவற்றிற்கு எதிராக பல தசாப்தங்களாக புரட்சிகர சோசலிசத்தின் மார்க்சிச வேலைத்திட்டத்தை அனைத்துலகக் குழு பாதுகாத்து வருகிறது. இன்று, இது மட்டுமே இந்த பெயருக்கு தகுதியான ஒரே சோசலிசப் போக்காகும்.

Loading