முன்னோக்கு

ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ஆளும் உயரடுக்கு மக்களை கோவிட்-19 “உடன் வாழ" கோருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட் ஐ அகற்றுவதென்பது, முதலாளித்துவ இலாபத்திற்கு அல்ல, மாறாக சுகாதார மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் ஒரு விஞ்ஞானபூர்வ வேலைத்திட்டத்திற்காக போராடும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தின் அபிவிருத்தியைச் சார்ந்துள்ளது என்பதை ஆசிய-பசிபிக் அனுபவங்கள் எடுத்துக்காட்டி வருகின்றன. பெருந்தொற்றின் 'வெற்றிக் கதைகளை' கொண்டிருந்த நாடுகள், அசாதாரண வேகத்துடன், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கைவிட்டு வருவதுடன், சர்வதேச அளவில் பேரழிவுகளை ஏற்படுத்தி உள்ள 'அது பரவட்டும்' கொள்கைகளை அவை ஏற்று வருகின்றன.

Scott Morrison and Jacinda Ardern (Source: Scott Morrison Facebook)

இந்த வைரஸை மீண்டும் மீண்டும் அகற்றி உள்ள ஆஸ்திரேலியாவில், அந்நாட்டின் மிக மோசமான கோவிட் வெடிப்புக்கு மத்தியில் அரசாங்கங்கள் 'பொருளாதாரத்தை மீண்டும் திறந்து விட' முண்டியடித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த பெருந்தொற்று நெடுகிலும் அதை அகற்றும் மூலோபாயத்தைப் பின்பற்றிய ஒரு சில நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தில், பிரதம மந்திரி ஜசிண்டா அடெர்னா நேற்று அறிவிக்கையில், டெல்டா வகை வைரஸ் 'மாற்றத்திற்கான முக்கிய காரணி' என்ற உண்மையின் அடிப்படையில் அவர் அரசாங்கம் 'விஷயங்களை புது விதத்தில் செய்வதற்கு மாற' இருப்பதாக தெரிவித்தார்.

வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் சார்பில் பேசும் நியூ யோர்க் டைம்ஸ் உடனடியாக அந்த அறிவிப்பை வெளியிட்டு, பின்வருமாறு அறிவித்தது: 'ஒன்றரை ஆண்டுகளாக, நியூசிலாந்து, அதன் எல்லைகளை மூடியும், கொரோனா வைரஸைக் கட்டுக்குள் வைத்திருக்க வேகவேகமாக சமூக முடக்கங்களை அமல்படுத்தியும், 'பூஜ்ஜிய கோவிட்' மூலோபாயத்தைப் பின்பற்றுகிறது, மற்ற ஆசிய-பசிபிக் நாடுகள் வைரஸ் அச்சுறுத்தலுடன் இணைந்திருக்க மாறிய போதும் கூட நியூசிலாந்து இந்த கொள்கையைப் பின்பற்றியது. திங்களன்று, நியூசிலாந்து அதைக் கைவிட்டது.'

அது ஒரு பரந்த மாற்றத்தின் ஒரு பகுதி என்று டைம்ஸ் குறிப்பிட்டது, இது ஆஸ்திரேலியாவில் சமூக அடைப்புகளை முடிவுக்குக் கொண்டு வரும் முனைவையும், சிங்கப்பூரில் வைரஸை ஒடுக்கும் அரசாங்க மூலோபாயம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும் அங்கே ஒரு மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ள நிலைமையையும் சுட்டிக் காட்டுவதாக இருந்தது. 'சிங்கப்பூர் மற்றும் அப்பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளும் அவற்றின் மூலோபாயத்தை மாற்றிக் கொண்டுள்ளதால், அனேகமாக பூஜ்ஜிய-கோவிட் அணுகுமுறையைப் பின்தொடரும் கடைசி மிகப் பெரிய நாடாக அனேகமாக சீனா மட்டுமே உள்ளது,” என்றது குறிப்பிட்டது.

டைம்ஸ், தெளிவாக ஒரு வெற்றிப் பிரவாக களிப்புடன், இதே இலாப-வேட்கை கொள்கைகளை ஏற்றுள்ள நாடுகளில் உலகெங்கிலும் பாரிய நோய்தொற்றும் மரணமும் விளைந்துள்ளது என்ற உண்மையை பாதுகாத்து வந்துள்ளது.

கடந்த ஜூலை 'சுதந்திர தினத்துடன்' (freedom day) எல்லா தணிப்பு முயற்சிகளையும் கைவிட்டதில் இருந்து பிரிட்டனில் நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ளன, தற்போதைய இறப்பு விகிதங்கள், இந்த வைரஸால் ஆண்டுக்கு 50,000 உயிரிழப்புகளை 'ஏற்று' கொள்ளலாம் என்ற பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் அறிவிப்புடன் பொருந்தி நிற்கின்றன. அமெரிக்காவில், ஒவ்வொரு சில நாட்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், அதேவேளையில் ஒவ்வொரு வாரமும் 200,000 அல்லது அதற்கும் அதிகமான குழந்தைகளுக்கு நோய்தொற்று ஏற்படுவதால் மருத்துவமனைகளின் குழந்தை சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழிகின்றன, அவர்களில் பலர் உயிர்பறிக்கும் வைரஸ் வளர்ப்பு கொள்கலன்களாக விளங்கும் பள்ளிகள் மூலமாக வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள்.

சமீபத்தில் அவற்றின் கொள்கையை மாற்றிய ஆசிய-பசிபிக் நாடுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை மாறுபடுகின்றன. ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கான நடப்பு நோய்தொற்று நோயாளிகள் உள்ளனர், நியூசிலாந்திலோ, நூற்றுக் கணக்கில் மட்டுமே உள்ளனர். ஆனால், 'வைரஸுடன் வாழும்' கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன், பாரியளவில் பரவல், மருத்துவமனை அனுமதிகள் மற்றும் உயிரிழப்புகள் என பாதை என்னவோ அதே பாதையாக தான் இருக்கிறது.

இது ஏற்கனவே ஆஸ்திரேலிய அபிவிருத்திகளில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. அந்நாட்டின் அரசாங்கங்கள் ஒருபோதும் இந்த வைரஸை ஒழிக்க முயலவில்லை, அவை இந்த பெருந்தொற்றின் ஆரம்ப கட்டங்களில் அது மிகவும் செலவாகும் என்று அதை நிராகரித்தன. இருப்பினும், கடந்த 18 மாதங்களில், அவை மீண்டும் மீண்டும் அமைப்புகளை மூடவும் ஏனைய பாதுகாப்பு கட்டுப்பாடுகளைத் திணிக்கவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளன.

இது பெரும்பாலும் ஆசிரியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரின் கோரிக்கைகளின் விளைவாகவும், குறைந்த நிதி ஒதுக்கீட்டால் மருத்துவமனைகள் ஒரு சிறிய கோவிட் வெடிப்புக்கும் கூட தாக்குப்பிடிக்க முடியாத பரிதாபகரமான நிலைமையில் இருந்தன என்பதாலும் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அமைவிடரீதியில் குறிப்பிட்டளவு அது தனித்து இருப்பதாலும் மற்றும் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளாலும் அந்நாடு வைரஸ் பரவலில் இருந்து ஓரளவுக்குத் தடுக்கப்பட்டிருந்தது. மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்ததாலும் பொது சுகாதாரத்தை உறுதிப்படுத்த தியாகங்களைச் செய்ததாலும் வைரஸ் பரவல் மீண்டும் மீண்டும் தொடர்ந்து தடுக்கப்பட்டது.

மிகக் குறுகிய காலத்திற்குள், அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஜூன் தொடக்கத்தில் சமூக பரவல் இல்லை என்ற நிலையிலிருந்து அந்நாடு 447 இறப்புகளுடன், மூன்றரை மாதங்களில் 84,000 க்கும் அதிகமான நோயாளிகளைக் கொண்ட நாடாக ஆகிவிட்டது. அந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் கால்வாசிக்கும் அதிகமானவை ஆகஸ்ட் இறுதியில் இருந்து ஏற்பட்டுள்ளன.

இந்த அதிகரிப்பானது, “மறுதிறப்புக்கு' தயாரிப்பு செய்வதற்குப் பதிலாக, உரிய நேரத்தில் தொற்றுநோய் நிபுணர்கள் சமூக அடைப்புக்கு விடுத்த அழைப்பை எதிர்த்து, அரசாங்கங்கள், அதுவும் குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் எடுத்த விளைவால் ஏற்பட்டதாகும். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதும் கூட, பல வேலையிடங்கள் திறந்தே இருந்தன, இது சிட்னி மற்றும் மெல்போர்னின் தொழிலாள வர்க்க புறநகர்ப் பகுதிகளில் நோய்தொற்றுக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட இட்டுச் சென்றன.

முந்தைய வெடிப்புகளில் போது, சமூக பரவல் பூஜ்ஜியத்திற்கோ அல்லது அதற்கு நெருக்கமாகவோ குறையாத வரையில் சமூக அடைப்புகளை நிறுத்துவது பாதுகாப்பில்லை என்று அரசாங்கங்கள் கூறியுள்ளன. இப்போதோ, விஷயம் தலைகீழாக இருக்கிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூர் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் அதிகரிப்புகளைத் தடுக்கத் தவறிய அதே தடுப்பூசி மட்டங்களை அடிப்படையாக காட்டி, சமூக அடைப்புகளும் ஏனைய கட்டுப்பாடுகளும் சாத்தியமானளவுக்கு விரைவாக நீக்கப்படும் என்று அவை இன்னும் உறுதியாக வலியுறுத்துகின்றன.

பரந்தளவில் மறுதிறப்புக்கு முன்னோடியாக, திட்டமிட்டதை விட முன்னதாக, நவம்பரிலேயே சர்வதேச பயணம் மீண்டும் தொடங்கப்படும் என்று கடந்த வாரம் பிரதம மந்திரி ஸ்காட் மோரிசன் அறிவித்தார்.

'ஆஸ்திரேலிய அரசாங்கம் வரவிருக்கும் ஒரு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக விஞ்ஞானத்தை விட அரசியலை முன்நகர்த்துவதாக வியாபாரத்துறை தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்ற நிலையில், அது உலகிற்கு மீண்டும் திறந்து விடத் தவறுவதன் மூலம் 'பெரிய தவறுகளை' செய்து வருகிறது' என்று பிரிட்டிஷ் பைனான்சியல் டைம்ஸ் கட்டுரை அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நிதி மூலதனத்தின் அந்த முன்னணி ஊதுகுழல் வணிகத் தலைவர்களின் அறிக்கைகளை முன்னிலைப்படுத்தியது, அவர்கள் 'கோவிட்-19 அடைப்பு கொள்கைகளால் அதிகரித்தளவில் சோர்ந்து' போயிருந்தனர் என்பதோடு, 'பல நாடுகள் செய்ததைப் போல, இந்த நாடும் 'வைரஸுடன் வாழ' கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.'

இத்தகைய இலாப நலன்கள் தான் அரசாங்கக் கொள்கையைத் தீர்மானிக்கின்றன. நோய்தொற்று நாளொன்றுக்கு ஓராயிரத்தை நெருங்கி கொண்டிருக்கையில், நியூ சவுத் வேல்ஸில் அடுத்த திங்கட்கிழமை மட்டுப்படுத்தப்பட்ட அடைப்பையும் நீக்க உள்ளது. நவம்பர்-டிசம்பரில் மீண்டும் முழுமையாக திறந்து விட திட்டமிடப்பட்டுள்ளது. விக்டோரியாவின் தொழிற்கட்சி அரசாங்கம், அம்மாநிலத்தில் கடந்த வாரம் 24 மணி நேரத்தில் 50 சதவீதத்திற்குக் கூடுதலாக அதிகரித்தது உட்பட நாளொன்றுக்கு 1,700 க்கு அதிகமாக அதிகபட்ச எண்ணிக்கையை எட்டியுள்ள போதும் கூட, கிட்டத்தட்ட அதுவும் அதே 'பாதையை' ஏற்றுள்ளது.

சுகாதார அமைப்புமுறை ஏற்கனவே முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் இருக்கும் நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா அரசாங்கங்களின் உத்தியோகப்பூர்வ முன்வடிவம், இந்த மறுதிறப்பானது அவற்றின் மருத்துவமனைகளை அனேகமாக 'நிரப்பி விடும்' என்று அனுமானிக்கிறது. அவை 'அவசர உதவி முறையை' நடைமுறைப்படுத்த தயாராகி வருகின்றன, அதன் கீழ் மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலருக்குச் சிகிச்சை மறுக்கப்படும். அந்த நெறிமுறைகளின் கீழ் உயிரிழக்க விடப்படுபவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டால் அவர்கள் எண்பது சதவீதம் உயிர்பிழைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

பெரும்பாலான கல்வி இணையவழியில் நடத்திய போதே, நியூ சவுத் வேல்ஸின் மொத்த நோயாளிகளில் 30 சதவீதம் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் என்பதுடன் விக்டோரியாவில் ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டிருந்த நிலையிலும் கூட, இவ்விரு மாநிலங்களிலும் இம்மாதம் மொத்தமாக நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன.

சர்வதேசஅளவில் போலவே, இந்த வேலைத்திட்டம் பரந்த எதிர்ப்பை தூண்டிவிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் மாணவர்களும் சமூக ஊடகங்களில் இறங்கி, விண்ணப்பங்கள் செய்திருப்பதுடன், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுகாதாரத்துறை பணியாளர்கள் இந்த உத்தியோகப்பூர்வ கொள்கைகள் பாரிய உயிரிழப்பு நிலைமைகளை உருவாக்கி வருவதாக கண்டித்து பகிரங்க கடிதங்கள் எழுதி உள்ளனர்.

இந்த உணர்வுகளுக்கு எதிராக தான் பல்வேறு வணிகத் தலைவர்கள் சீறுகிறார்கள். நிதித்துறை சார்ந்த பத்திரிகைகள், கடந்த மாதம் எண்ணற்ற தலையங்கங்களில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே நிலவும் எதிர்ப்பை அரசாங்கங்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன. Australian பத்திரிகையின் ஒரு கருத்துரை, அவசியம் “ஆஸ்திரேலிய மனோபாவத்தை' மாற்றி, மக்கள் “அடைப்புக்கு அடிமையாவதை' முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கருத்துரைத்தது.

இதில், தொழிற்சங்கங்கள் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளன. இந்த பெருந்தொற்று நெடுகிலும் வேலையிடங்களைத் திறந்து வைத்திருப்பதை உறுதிப்படுத்த பெருநிறுவனங்களுடன் இணைந்துள்ள அவை, அடைப்பு நடவடிக்கைகளில் இருந்து 'அவர்கள்' தொழில்துறைக்கு விதிவிலக்கு அளிக்க இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளன, மேலும் அவை உத்தியோகப்பூர்வ பெருந்தொற்று கொள்கைகளுக்கு எதிரான எந்தவித அணிதிரள்வையும் ஒடுக்க கோரி வருகின்றன.

முக்கிய படிப்பினைகளை எடுத்தாக வேண்டும். ஏதோவொரு வடிவில், முதலாளித்துவ அரசாங்கங்கள் அனைத்தும் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கைகள் மற்றும் உயிரிழப்புகளை நோக்கி திரும்பி வருகின்றன. அந்த வைரஸை முற்றிலும் இல்லாதொழிக்க முயலாமல், அதன் பாதிப்புகளை மட்டும் குறைக்க நோக்கம் கொண்ட உத்தியோகப்பூர்வ மூலோபாயங்களின் திவால்நிலையையும், இந்த முதலாளித்துவ அமைப்புமுறை கட்டமைப்புக்குள் அதை அகற்றுவதற்கான ஒரு வேலைத்திட்டத்தைப் பேணுவதும் சாத்தியமில்லை என்பதையும் ஆசிய-பசிபிக் அபிவிருத்திகள் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டி வருகின்றன.

இந்த வைரஸை முற்றிலுமாக இல்லாதொழிப்பது சாத்தியமே என்றும் அவசியமானதும் என்றும் தொற்றுநோய் நிபுணர்கள் விளக்கி உள்ள நிலையில், அதற்கான போராட்டமானது, தனியார் இலாபத்தை விட ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்வை உள்ளடக்கிய மக்களின் சமூக உரிமைகளை வலியுறுத்தும் ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க இயக்கத்தின் அபிவிருத்தியைச் சார்ந்துள்ளது. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்ற, பிரிட்டனில் அக்டோபர் 1 பள்ளி வேலைநிறுத்தம், முன்னோக்கிய வழியைக் காட்டுகிறது.

“முற்றிலுமாக இல்லாதொழிக்கும் விஷயத்தை விவரிக்கவும் மற்றும் இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வந்து எதிர்காலத்தை மீளவலியுறுத்தவும் ஒரு பரந்த சர்வதேச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கு அவசியமான முக்கிய புரிதலைப் பொதுமக்களுக்கு வழங்கவும்' உலக சோசலிச வலைத் தளம், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னணி விஞ்ஞானிகள் மற்றும் தொழிலாளர்களைக் கொண்ட ஒரு சர்வதேச இணையவழி கலந்துரையாடலை அக்டோபர் 24 இல் ஏற்பாடு செய்துள்ளது.

Loading