ஜனாதிபதி இராஜபக்ஷவின் அவசரகால நிலைக்கு எதிராக போராடுவது எப்படி என்பது பற்றி இலங்கை சோ.ச.க. இணையவழி கூட்டத்தை நடத்தவுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் இலங்கை ஜனாதிபதியின் புதிய ஒடுக்குமுறை அவசரகால சட்டங்களை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான வேலைத்திட்டத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்கு இணையவழி பொதுக் கூட்டமொன்றை நடத்த உள்ளனர்.

அக்டோபர் 10, ஞாயிற்றுக்கிழமை, மாலை 4 மணிக்கு ஸூம் வழியாக இந்த கூட்டம் நடைபெறுவதோடு கட்சியின் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படும். கூட்டத்தில் பங்குபற்ற இங்கே பதிவு செய்துகொள்ள முடியும்.

இந்த அவசரகால விதிமுறைகள், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவினால் ஆகஸ்ட் மாத இறுதியில் பிரகடனப்படுத்தப்பட்டதுடன் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பெரும்பான்மை ஆதரவுடனும் எதிர்க் கட்சிகளின் மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனத்துடனும் விரைந்து நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டம் 'பொது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், சமூக வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை பராமரிப்பதற்காகவும்' கொண்டுவரப்பட்டது என்று அரசாங்கம் கூறிக்கொண்டாலும், அதன் உண்மையான இலக்கு, தங்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளுமே ஆகும்.

இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன் இந்த நெருக்கடியின் முழு சுமையையும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை சுமக்க கட்டாயப்படுத்துகிறது. நேற்று, பெரு வணிகர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, கொரோனா வைரஸ் தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளை அரசாங்கம் நீக்கியது. இலாபம் ஈட்டும் நலன் கருதி, அனைவரையும் வேலைக்கு திரும்பச் செய்வதே அதன் குறிக்கோள் ஆகும்.

தொற்றுநோயை குற்றவியல்தனமாக தவறாக கையாள்வது குறித்து பொதுமக்களின் கோபம் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் துரிதமாக தொற்றும் டெல்டா மாறுபாட்டின் பரவலால் தொற்றாளர்களதும் மரணிப்போரதும் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், இராஜபக்ஷ ஆட்சி பலமுறை சுகாதார நிபுணர்களின் ஆலோசனையைப் புறக்கணித்து பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்த தவறிவிட்டது.

சிறைக் கைதிகள் மீதான தாக்குதலுக்குப் பின்னர், கொழும்பின் வடக்கே உள்ள மஹர பிரதேசத்தில் ரோந்து செல்லும் அதிரடிப்படை கமாண்டோக்கள் [Credit: Shehan Gunasekara]

அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள், தங்கள் சம்பள கோரிக்கையை முன்வைத்து மூன்று மாதங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் தேசிய அளவில் பல்லாயிரக்கணக்கான சுகாதார பணியாளர்களும் இணைந்து சிறந்த வேலை நிலைமைகள், தொற்றுநோய் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கொடுப்பனவுகளுக்காக வேலைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தீவு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை பாதுகாக்கவும் முன்கொண்டு செல்லவும் ஒரு சுயாதீன மற்றும் ஒன்றுபட்ட இயக்கத்தை உருவாக்க வேண்டிய அவசர தேவையை எதிர்கொள்கின்றனர். எவ்வாறாயினும், ஒவ்வொரு தொழிற்சங்கமும் புதிய அவசரகால சட்டங்களின் உண்மையான ஆபத்தை மூடிமறைக்க செயற்படுவதோடு இத்தகைய ஒருங்கிணைந்த இயக்கத்தைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளன.

இந்தச் சூழலில், சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) 'இலங்கை ஜனாதிபதியின் ஒடுக்குமுறை அவசர கால சட்டத்தை எதிர்த்திடு' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன் தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட பிரிவினர் மத்தியில் புதிய விதிமுறைகள் மூலம் வரவுள்ள ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தலையிடுகிறது. சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாளர்கள் அணிதிரட்டப்பட வேண்டும். இந்த முன்நோக்கைப் பற்றி வரவிருக்கும் சோ.ச.க. கூட்டத்தில் கலந்துரையாடப்படும்.

தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களையும் எமது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும், இந்த முக்கியமான கலந்துரையாடலில் பங்கேற்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: அக்டோபர் 10 ஞாயிறு

நேரம்: மாலை 4 மணி

கூட்டத்திற்கு தயவுசெய்து இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்.

Loading