முன்னோக்கு

டீர் ஆலையில் 90 சதவீத "வேண்டாம்" வாக்குகளும், பெருநிறுவன தொழிற்சங்கங்களுக்கு எதிராக அதிகரித்து வரும் கிளர்ச்சியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிறன்று, விவசாய மற்றும் கட்டுமான உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான டீர் அண்ட் கோ நிறுவன தொழிலாளர்களில் 90 சதவீதத்தினர் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் (UAW) ஆதரித்த ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை நிராகரித்து வாக்களித்தனர்.

A worker inside a Deere plant (John Deere)

ஆறு ஆண்டுகால விட்டுக்கொடுப்பு ஒப்பந்தத்தைப் படிக்க தொழிலாளர்களுக்கு போதுமான அவகாசம் கூட கொடுக்காமல், 10,100 தொழிலாளர்களுக்கான அந்த ஒப்பந்தத்தை அவசர அவசரமாக முன்னுக்குத் தள்ள முயன்ற ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்திற்கு இந்த வாக்குகள் ஓர் அதிர்ச்சியூட்டும் கண்டனமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை தகவல் தொடர்பு கூட்டம் என்று அழைக்கப்பட்டதில், அந்த ஒப்பந்தத்தை விற்றுத் தள்ள முயன்றதாக தொழிற்சங்க அதிகாரிகளை தொழிலாளர்கள் கோபத்துடன் எதிர்கொண்டனர். 'டீர் ஆலையும் ஐக்கிய வாகனத்துறைத் தொழிலாளர் சங்கமும் அவசரகதியில் அதை திணிக்க முயன்றன, ஆனால் சாமானிய தொழிலாளர்கள் திருப்பி எதிர்த்தனர்,' என்று அயோவாவின் டூபுக் ஆலை தொழிலாளர் ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார்.

ஓர் ஆரம்ப நிலை கிளர்ச்சியை எதிர்கொண்ட ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம், புதன்கிழமை இரவு 11:59 வரையில் வேலைநிறுத்தத்திற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதாக அறிவித்தது, என்றாலும் திரைக்குப் பின்னால் UAW நிர்வாகிகள் ஒரு வேலைநிறுத்தத்தைத் தடுக்க அல்லது தனிமைப்படுத்த மற்றும் ஒருவேளை அதற்கு அழைப்பு விடுக்க அது நிர்பந்திக்கப்பட்டாலும் வெளிநடப்பைத் தோற்கடிக்க அனைத்தும் செய்து வருகின்றனர்.

35 ஆண்டுகளில் அந்நிறுவனத்தில் UAW சங்க ஆதரவு பெற்ற ஒப்பந்தத்தை முதல்முறையாக தோற்கடித்துள்ள டீர் ஆலை வாக்குகள், தொழிற்சங்க ஆதரவு பெற்ற ஒப்பந்தங்களுக்கு விடையிறுத்து அமெரிக்காவில் தொழிலாளர்கள் வழங்கிய தொடர்ச்சியான பல பெருவாரியான 'வேண்டாம்' வாக்குகளில் சமீபத்தியதாகும்:

• ஏப்ரல் 9 இல், மத்திய அலபாமாவில் 1,100 வோரியர் மெட் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், 2016 இல் ஐக்கிய அமெரிக்க சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம் ஏற்றுக் கொண்ட 6 டாலர் கூலி வெட்டை மீளமைக்க தவறிய ஒப்பந்தத்தை அச்சங்கம் முன்னுக்குத் தள்ளிய போது, அதை நிராகரித்து 1,006 க்கு 45 என்ற வித்தியாசத்தில் (96 சதவீதம்) வாக்களித்தனர்.

• வசந்தகால பிற்பகுதியிலும் கோடைகால தொடக்கத்திலும், வேர்ஜீனியாவின் டப்ளினில் 3,500 வொல்வோ டிரக்ஸ் ஆலை தொழிலாளர்கள், UAW ஆதரவு பெற்ற மூன்று ஒப்பந்தங்களைத் தொடர்ச்சியாக வாக்களிப்பில் நிராகரித்தனர், இதில் முதல் இரண்டு 90 சதவீதம் அல்லது அதற்கு அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தன. மூன்றாவதாக நிராகரிக்கப்பட்ட உடன்படிக்கை மீது மறுவாக்கெடுப்பு நடத்த நிர்பந்திக்கப்பட்டதன் மூலம் மட்டுமே UAW ஐந்து வாரகால வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர முடிந்தது, அது வெறும் 17 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டதாக அது வாதிட்டது.

• ஆகஸ்டிலும் மற்றும் செப்டம்பர் தொடக்கத்திலும், டீர் ஆலைக்கான முன்னணி உதிரிப் பாகங்கள் வினியோக நிறுவனம் டேனா இன்க் ஆலையில் வாகன உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் 3,500 தொழிலாளர்கள், UAW மற்றும் ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர்கள் சங்கம் முன்மொழிந்த ஐந்தாண்டு கால ஒப்பந்தம் ஒன்றை, ஓஹியோ, டொலிடோ ஆலை தொழிலாளர்களும் அந்த உடன்படிக்கைக்கு எதிராக ஒருமனதாக வாக்களித்த நிலையில், 90 சதவீதத்திற்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் நிராகரித்தனர். அந்த ஒப்பந்தம் தோல்வியடைந்து ஒரு மாதத்திற்கு மேல், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கமும், ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர்கள் சங்கமும் ஒவ்வொரு நாளாக ஒப்பந்தத்தை நீடித்து தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தி உதிரிப்பாகங்களைக் கையிருப்பில் சேமித்ததன் மூலம், வாகனத் தொழில்துறையையே உடனடியாக பாதிக்க இருந்த ஒரு வேலைநிறுத்தத்தை முடக்கின.

மேற்கு வாஷிங்டன் மாநிலத்தின் பன்னிரெண்டாயிரம் தச்சர்கள், அதிகபட்சமாக 76 சதவீத வாக்கு வித்தியாசத்ததில் வடமேற்கு பசிபிக் கார்பென்டர்ஸ் சங்கம் (NWCU) முன்னுக்குத் தள்ளிய தொடர்ச்சியான நான்கு ஒப்பந்தங்களை நிராகரித்தனர். NWCU செப்டம்பர் 16 இல் ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது என்றாலும், அது 12,000 தச்சர்களில் 10,000 பேரை வேலையில் ஈடுபட செய்து, இறுதியில் ஐந்தாவது ஒப்பந்தத்தை முன்னுக்குத் தள்ளியது.

• கடந்த வாரயிறுதியில், ஃப்ளின்ட் மற்றும் ஏனைய நடுத்தர மிச்சிகன் நகரங்களில் உள்ள மெக்லாரன் ஹெல்த் செவிலியர் சேவைகள் மற்றும் பிற சேவைகள் வழங்கும் தொழிலாளர்கள், ஆபத்தான அளவுக்கு அதிக நோயாளிகள் விகிதங்கள் மற்றும் கையிருப்பில் இருந்து மருத்துவத்திற்காக செலவாகும் செலவுகளின் அதிகரிப்பு ஆகியவற்றுக்கான ஒரு வேலைநிறுத்தத்தை முடக்குவதற்காக ஒருங்கிணைந்த அமெரிக்க மாநில, உள்ளாட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் சங்கம் (AFSCME) ஒப்புக் கொண்ட ஓர் உடன்படிக்கையை மூன்றுக்கு ஒன்று என்ற வித்தியாசத்தில் நிராகரித்தனர்.

அந்த பாரியளவிலான, கிட்டத்தட்ட ஒருமனதான 'வேண்டாம்' வாக்குகள் இப்போது வழக்கமானதாகி ஆகி வருகின்றன என்பது தொழிலாளர்களிடையே நிலவும் கோபத்திற்கும் மற்றும் போராடுவதற்கான அவர்களின் பெரும் விருப்பத்திற்கும் வெளிப்பாடாக உள்ளன. “கணிசமான ஆதாயங்களை' வெல்வது அல்லது 'உங்களுக்கு மிகச் சிறந்த ஒப்பந்தம் கிடைக்கப் போகிறது' என்ற பொய்கள் மூலமாகவோ அல்லது தொழிலாளர்களைக் கடுஞ்சொற்களால் பயமுறுத்த அச்சுறுத்தல்கள் மற்றும் பொருளாதார அழுத்தங்களைப் பயன்படுத்துவது என நிறுவனம்-சார்ந்த ஒப்பந்தங்களைத் திணிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சகாப்த கால பழமையான அணுகுமுறைகள், எதிர்ப்புச் சுவரை சந்தித்து வருகின்றன.

இது பல தலைமுறைகளில் அமெரிக்காவின் மிகப்பெரிய வேலைநிறுத்த இயக்க எழுச்சியின் பாகமாக உள்ளது. அக்டோபர் மாத முதல் ஐந்து நாட்களில், நியூ யோர்க்கின் பஃபலோவில் உள்ள மேர்சி மருத்துவமனையின் 2,500 செவிலியர்கள், மிச்சிகன் மற்றும் ஏனைய மாநிலங்களில் கெல்லோக் உணவுத் தயாரிப்பு நிறுவனத்தின் 1,400 தொழிலாளர்கள் உட்பட அமெரிக்காவில் 10 புதிய வேலைநிறுத்தங்கள் தொடங்கப்பட்டன. மேலும், 60,000 ஹாலிவுட் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொழிலாளர்கள், 35,000 Kaiser Permanente சுகாதார தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்திற்கு வாக்களித்துள்ளனர்.

'நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, இறுகி வரும் ஒரு பொருளாதாரத்தில் அவர்களின் அதிகரித்த பலத்தைக் காட்டி வருகின்றனர்,” என்று டைம்ஸ் இதழ் கடந்த வாரம் எழுதியது. “வெள்ளிக்கிழமையின் வேலைவாய்ப்பு அறிக்கையால் அமெரிக்க தொழிலாளர்களின் செல்வாக்கு தங்கள் சம்பளத்தில் கையெழுத்திடுவோர் மீது அதிகரித்துள்ளது. முதலாளிகள் செப்டம்பரில் தொழிலாளர்களை எதிர்பார்த்ததை விடவும் மிகக் குறைந்த விகிதத்தில் நியமித்திருந்தனர் என்பதை அது எடுத்துக் காட்டியது,” என்று எழுதிய டைம்ஸ், “முதலாளிகள் தொழிலாளர்களை நியமிக்கவும் தக்க வைத்துக் கொள்ளவும் பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருப்பதால் தொழில்துறைகள் எங்கிலும் கூலிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன,” என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.

ஒரு 'இந்த புதிய வேலையை ஏற்று-மனதளவில் ஆர்ப்பரியுங்கள்' என்பதை Philadelphia Inquirer பத்திரிகை சுட்டிக் காட்டியது, “வேலைச் சந்தையின் உறுதியற்ற தன்மை தொழிலாளர்களை மீண்டும் போராடுவதை நோக்கியும், முதலாளிமார்களின் அச்சுறுத்தல்கள் மீது அவர்களைக் கண்டிப்பதையும் நோக்கி கொண்டுச் சென்றுள்ளது...” என்று குறிப்பிட்டது.

இந்த வளர்ந்து வரும் இயக்கத்தின் சில குறிப்பிட்ட தன்மைகள் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

முதலாவதாக, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியானது தொழிலாளர்களை நேரடியாக இந்த பெருநிறுவனத் தொழிற்சங்கங்களுக்கு எதிராக நிறுத்தி வருகின்றன. டீர், வொல்வோ, டேனா மற்றும் வேறு நிறுவனங்களிலும் ஒப்பந்தத்தை நிராகரிக்கும் வாக்கு வித்தியாசம், 'தொழிற்சங்கங்கள்' என்று அழைக்கப்படுபவைக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உண்மையான உறவை வெளிப்படுத்துகின்றன.

நிர்வாகத்திற்கான தொழிலாளர் பொலிஸ் படையாக செயல்படும் இந்த அமைப்புக்கள், வருவாய் ஈட்டுவோரில் உயர்மட்ட 5 சதவீதத்தில் உள்ளவர்களின் வருமானத்தை விட அதிகமாக இல்லை என்றாலும் அவர்கள் அளவுக்கு வருவாய் ஈட்டும் தொழிற்சங்க நிர்வாகிகளால் நடத்தப்படுகின்றன, தொழிலாளர்களைப் 'பிரதிநிதித்துவம்' செய்வதாக பொய்யாக கூறும் இவர்கள் தொழிலாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு விரோதமாகவும் அவற்றிலிருந்து முற்றிலும் விலகியவர்களாக இருக்கிறார்கள். வெடிப்பார்ந்த சமூக கோபத்தின் நிலைமைகளின் கீழ், ஏதோவொரு விதத்தில் நிறுவனத்திற்கு ஆதாயமான உடன்படிக்கைகளைத் திணிப்பதன் மூலம் அரசுக்கும் நிர்வாகத்திற்கும் அவர்கள் பயனுள்ளதாக இருப்பதை நிரூபிப்பதே அவர்களின் பிரதான அக்கறையாக உள்ளது.

தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்குவதற்கும், சீனாவுடனான அதன் வர்த்தகப் போர் மற்றும் இராணுவ மோதலுக்கான திட்டங்களுக்குப் பின்னால் நிலவும் சமூக எதிர்ப்பை திசை திருப்புவதற்கும் பைடென் நிர்வாகம் தொழிற்சங்கங்களைத் தான் கருவிகளாக ஆக்கிரோஷமாக ஊக்குவித்து வருகிறது. கடந்த வாரம், தொழிற்சங்க-ஆதரவிலான வெள்ளை மாளிகையின் ஒரு 'செயற்குழு', உள்நாட்டு பாதுகாப்புச் செயலர் அலெஜாண்ட்ரோ மேயர்காஸ் மற்றும் வர்த்தகச் செயலர் ஜினா ரைமோண்டோ உள்ளடங்கலாக, உயர்மட்ட இராணுவ மற்றும் பொருளாதார மந்திரிசபை உறுப்பினர்களுடன், அதன் இரண்டாவது உத்தியோகபூர்வ கூட்டத்தை நடத்தி, தொழிற்சங்கங்களது விரிவாக்கத்தை ஊக்குவிக்க நிர்வாகம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஓர் அறிக்கையின் இறுதி தயாரிப்புகளை விவாதித்தனர்.

பைடென் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ள போலி-இடதுகளிடையே தொழிற்சங்கங்களின் அதிகாரத்தைப் பாதுகாப்பவர்கள், நாம் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்க அழைப்பு விடுப்பதால் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத்தளத்தை 'குறுங்குழுவாதமாக' குறிப்பிடுகின்றனர். ஆனால் தொழிலாள வர்க்க போராட்டத்தின் சுயாதீனமான அமைப்புகளை அபிவிருத்தி செய்வதற்காக WSWS தலைமையில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் பாரியளவில் விடையிறுப்பை வென்று வருகிறது என்பதே அவர்களின் பிரதான கவலையாக உள்ளது.

டீர் ஆலையில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் WSWS கட்டுரைகளை வாசித்துள்ளனர், அவர்கள் அவற்றை ஆலைகளில் வினியோகித்துள்ளதுடன் சமூக ஊடகங்களிலும் அவற்றைப் பகிர்ந்துள்ளனர். டேனா தொழிலாளர்கள் மற்றும் அவர்களுக்கு முன்னதாக வொல்வோ ட்ரக் தொழிலாளர்களிடையே செய்ததைப் போலவே, உலக சோசலிச வலைத் தளம் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதன் மூலம் டீர் ஆலை தொழிலாளர்களும் அவர்களின் சொந்த சுயாதீனமான முனைவை அபிவிருத்தி செய்ய உதவுவதையும் ஊக்குவிப்பதையும் மையத்தில் கொண்டுள்ளது.

இரண்டாவதாக, அமெரிக்காவில் தொழிலாள வர்க்க போராட்டங்களின் எழுச்சி ஒரு சர்வதேச நிகழ்ச்சிப்போக்கின் பாகமாகும். தென் ஆபிரிக்காவில் 150,000 உலோகத்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்; இலங்கையில் 90,000 சுகாதாரத் துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்; ஜேர்மனியில் சுகாதாரத் துறை, இரயில் மற்றும் விமான போக்குவரத்துத் துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்; மற்றும் கோவிட்-19 பரவலுக்கு எதிராக 'உலகளாவிய மறியல்' என்ற அக்டோபர் 1 பிரிட்டன் பெற்றோர் வேலைநிறுத்தம் ஆகியவை அதில் உள்ளடங்கும். 70 நாடுகளில் செயல்பாடுகளைக் கொண்டுள்ள டீர் போன்ற உலகளாவிய பெருநிறுவனங்களை எல்லா தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே எதிர்த்துப் போராட முடியும்.

மூன்றாவதாக, வர்க்கப் போராட்டத்தின் இந்த வளர்ச்சி, பிரிக்க முடியாதவாறு பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்துடன் பிணைந்துள்ளது. உணவு, எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் வேளையில் ஆளும் வர்க்கம் கூலிகளை நசுக்க முயன்று வருகிறது. அதேவேளையில், கோவிட்-தொற்றிய வேலையிடங்களில் மில்லியன் கணக்கானவர்கள் வேலை செய்ய மறுத்து வருவதால் ஏற்பட்டுள்ள உழைப்புசக்தி பற்றாக்குறையையும் உலகளாவிய வினியோகச் சங்கிலியையும் ஈடுகட்ட, அது அதன் விருப்பத்திற்கேற்ப முன்பினும் அதிக வேலை நேரங்களைத் திணித்து வருவதுடன், ஈவிரக்கமின்றி வேலை வேகப்படுத்தலைச் செய்து வருகிறது.

கடந்த 20 மாத கால பெருந்தொற்று காலத்தில், மில்லியன் கணக்கானவர்களின் உயிர்கள் பெருநிறுவன இலாபத்திற்காக தியாகம் செய்யப்பட்டுள்ளன, அதேவேளையில் உலக பில்லியனர்களின் செல்வ வளமோ 5.5 ட்ரில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. நோய் மற்றும் மரணத்தைத் தாங்கி சமாளித்துள்ள 'மாவீரர்களுக்கும்' மற்றும் 'அத்தியாவசிய துறை தொழிலாளர்களுக்கும்' எந்தவித விட்டுக்கொடுப்புகளும் வழங்குவதற்குப் பதிலாக, இந்த பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக் குழு இடைவிடாத சுரண்டலைப் 'புதிய வழமையாக' ஸ்தாபிக்க இந்த பெருந்தொற்றைச் சாதகமாக்கிக் கொள்ள தீர்மானித்துள்ளது. ஆனால் வேலைவாய்ப்பின்மை சலுகைகளை நீக்கியும், ஜப்தி நடவடிக்கைக்கான இடைநிறுத்த காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்தும், அவை உத்தேசித்த விளைவுகளைக் கொண்டு வர தவறியதால், தொழிலாளர்களைப் பாதுகாப்பற்ற வேலையிடங்களுக்குத் திரும்பி வர நிர்பந்திக்கும் முயற்சிகள் நடக்கும் நிலைமைகளின் கீழ், இவை அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் அதிகரித்தளவில் வேலைநிறுத்த அலையைத் தூண்டி வருகிறது.

மே 1 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), உயிர்களைக் காப்பாற்றுவதற்காக தொழிலாள வர்க்கத்தின் ஓர் உலகளாவிய விடையிறுப்பை ஒழுங்கமைக்க, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) உருவாக்க அழைப்பு விடுத்தது. அத்தியாவசியமற்ற பணியிடங்கள் மற்றும் பள்ளிகளை மூடுவது உள்ளடங்கலாக, இப்போது இந்த பெருந்தொற்றை முற்றிலுமாக ஒழிப்பதற்கான கொள்கைகளைக் கோரும் போராட்டம், முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக அதிகரித்து வரும் இயக்கத்துடன் ஒன்றிணைகிறது.

முன்னணி விஞ்ஞானிகளுடன் சேர்ந்து உலக சோசலி வலைத் தளமும் மற்றும் IWA-RFC உம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள, “இந்த பெருந்தொற்றுக்கு எவ்வாறு முற்றுப்புள்ளி வைப்பது: முற்றிலும் ஒழிப்பதற்கான வழி,” என்ற அக்டோபர் 24 இணையவழி கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள பதிவு செய்யுமாறு, நாங்கள், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் எல்லா பிரிவுகளையும் மற்றும் டீர் ஆலை தொழிலாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

Loading