மங்கள சமரவீர (1956 - 2021): ஏகாதிபத்தியத்தினதும் நிதி மூலதனத்தினத்தினதும் கீழ்ப்படிந்த சேவகன்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

பல முதலாளித்துவ அரசாங்கங்களில் முன்னணி அமைச்சராக இருந்த மங்கள சமரவீர, கொவிட்-19 தொற்றுநோய் சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆகஸ்ட் 24 அன்று இறந்தார். அவரது மரணச் செய்தியைத் தொடர்ந்து, கொழும்பு முதலாளித்துவ ஸ்தாபனத்தின் பிரதான தலைவர்கள் மற்றும் ஏகாதிபத்திய பிரதிநிதிகளும் அவருக்காக இரங்கல் செய்திகளை வெளியிட்டனர்.

மங்கள சமரவீர

இராஜபக்ஷ அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் விசாரணை ஆணைக்குழுவின் பிரதான இலக்காக அவர் இருந்தபோதிலும், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ இருவரும் சமரவீரவின் மரணத்தால் அதிர்ச்சியடைந்தனர். 'அவர் இலங்கை அரசியல் பயணத்தில் முக்கியமான மாற்றங்களை ஆரம்பித்து, இலங்கையர்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்த ஒரு மரியாதைக்குரிய அரசியல்வாதி ஆவார்' என்று ஜனாதிபதி இராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அவரது நண்பரும் சகாவுமான மங்கள சமரவீரவின் “அகால மரணத்தால் மிகவும் வருத்தமடைந்த” மகிந்த ராஜபக்ச, 'இன்று நாம் ஒரு சிறந்த தலைவரை, நம் தேசத்தை நேசித்த ஒரு மனிதரை இழந்துவிட்டோம்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியை 2015 பிப்ரவரி 12, அன்று வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவுத் திணைக்களத்தில் சந்தித்தார். [State Department Photo/Public Domain]

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்கவும் மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் வெளியிட்ட தங்களது இரங்கல் செய்தியில், சமரவீரவை நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கான போராளி என்றும், சிறந்த அரசியல் பிரமுகர் எனவும் புகழ்ந்தனர்.

'தமிழ் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வுக்காக பிரச்சாரம் செய்த அவர், வெண் தாமரை இயக்கத்தை முன்னெடுத்து அதற்கு தலைமை தாங்கினார். அவர் இறக்கும் வரை இனவெறிக்கு எதிரான தனது நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தார். அவருடைய மறைவு நம் அனைவருக்கும் பெரும் இழப்பாகும்,' என தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தனது இரங்கல் செய்தியில் இவ்வாறு கூறியது: 'அரசியலில் சுதந்திரமான நிலைப்பாட்டினை கொண்டிருந்த அவர் தனக்கு அரசியல் ரீதியாக சாதகமற்ற சூழ்நிலைகளிலும் கூட, தனது கொள்கையில் திடமாக நிற்பத்தில் வெற்றி கண்டார். நாட்டின் சில முக்கியமான அரசியல் தருணங்களில், அவர் எப்படி எங்களுடன் நெருக்கமாக பணியாற்றினார் என்பதையும் இத் தருணத்தில் நினைவுபடுத்வேண்டியுள்ளது.”

பராக் ஒபாமா நிர்வாகத்தின் போது, வெள்ளை மாளிகையின் ஆலோசகராக பணியாற்றிய, தற்போது USAID இன் தலைவராக செயற்படும் ஒரு உயர்மட்ட அமெரிக்க இராஜதந்திரி சமந்தா பவர், 'மங்கள நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காக போராடினார்' என எழுதினார். இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது சர்வதேச அமைதிக்கான இலங்கையின் சிறப்புப் பிரதிநிதியாக பணியாற்றிய முன்னாள் நோர்வே அமைச்சரான எரிக் சொல்ஹெய்ம், 'எப்போதும் சமாதானத்திற்காக பாடுபட்ட அவரது தலைமுறையின் மிகவும் நாகரிகமான அரசியல்வாதி' என மங்கள சமரவீராவை அறிமுகம் செய்தார்.

.இதை தொடர்ந்து, இலத்திறனியல், அச்சு மற்றும் சமூக ஊடகங்களில், அவருக்காக ஒரு தொகை கட்டுரைகள் மற்றும் நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டன. 'நம் காலத்தின் தூய அரசியல்வாதி' என்ற தலைப்பில் லங்கதீப பத்திரிகை அவருடனான கடந்த கால நேர்காணலை மீண்டும் வெளியிட்டது.

மங்கள சமரவீரவின் முழு அரசியல் வாழ்க்கையையும் புறநிலையாக ஆராயும் எவருக்கும் இலங்கையின் முதலாளித்துவ வர்க்க ஆட்சி நெருக்கடிக்கு உள்ளான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவர் அதை பாதுகாப்பதில் நன்கு வெளிப்படும் வகிபாகத்தை ஆற்றியவர் என்ற வகையில், முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவும் அதற்காக அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

சமரவீரவின் அரசியல் வருகை

இளைஞரான சமரவீர 1983 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) மாத்தறை அமைப்பாளராக அரசியலில் நுழைந்தார். ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.) அரசாங்கமும், ஒட்டுமொத்த இலங்கைய முதலாளித்துவ வர்க்கமும் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருந்த சமயத்திலேயே, அவர் 1989 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1983 இல் தொடங்கிய கொடூரமான இனவாதப் போரை முதன்மையாக கொண்டு ஜயவர்த்தனவின் தொடர்ச்சியான தாக்குதல்களின் விளைவாக, சிங்கள மற்றும் தமிழ் பேசும் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் அவரது அரசாங்கத்திற்கு கடுமையான எதிர்ப்பு வளர்ந்து வந்தது.

இதன் ஒரு பகுதியாக, வேலையின்மைக்கும் வறுமைக்கும் எதிராக வளர்ந்து வந்த இளைஞர்களின் தீவிரமயமாதலின் மத்தியில், ஜயவர்த்தனாவினதும் அவரை அடுத்து வந்த ஆர். பிரேமதாசாவினதும் அரசாங்கங்கள் 1988-89 காலத்தில் கட்டவிழ்த்து விட்ட கொடூரமான அடக்குமுறையில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமப்புற இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலைகளின் காரணமாக வெடித்துச் சிதறும் அளவுக்கு வளர்ச்சியடைந்த வெகுஜன எதிர்ப்புகளை, முதலாளித்துவ அரசு மற்றும் முதலாளித்துவ முறைமைக்கு எதிரான வெகுஜன இயக்கமாக வளரவிடாமல் தடுக்கவும், அந்த எதிர்ப்பை சுரண்டிக்கொண்டு ஸ்ரீ.ல.சு.க.வை புதுப்பிக்கவும், கொல்லப்பட்ட இளைஞர்களின் தாய்மார்களை மையப்படுத்தி, 1990 இல் “தாய்மார் முன்னணி” எனும் அமைப்பை கட்டியெழுப்ப சமரவீரவும் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான மஹிந்த இராஜபக்ஷவும் முக்கிய பங்கு வகித்தனர்.

1990 களின் முற்பகுதியில் சந்திரிகா குமாரதுங்கவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவதிலும், 1994 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான பொதுஜன முன்னணியின் வேட்பாளராக களமிறக்குவதிலும் சமரவீர முக்கிய பங்கு வகித்தார். குமாரதுங்கவை “சமாதானத்தின் தூதுவராக” சித்தரித்த சமரவீரவும் அவரது பரிவாரங்களும், அவரது தலைமையிலான ஒரு அரசாங்கம் “மனிதாபிமான முகத்துடனான முதலாளித்துவ” கொள்கையைப் பின்பற்றும் என்று பொதுமக்களிடம் கூறினார்.

ஒரு கூர்மையான அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி குமாரதுங்கவின் பொதுஜன முன்னணி அரசாங்கம், தங்களது ஆட்சியை ஸ்திரப்படுத்திக்கொள்ளும் சூழ்ச்சியாக, 1995 ஜனவரியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒரு 'சமாதான உடன்படிக்கைக்கு' சென்றது. ஆனால் குமாரதுங்க மூன்று மாதங்கள் ஆவதற்கு முன்னரே போர் நிறுத்தத்தை முறித்துக்கொண்டு, சமரவீரவின் முழு ஆதரவுடன் போரை மீண்டும் தொடங்கினார்.

இனவாத போரின் முழு பாதுகாவலராக

சமரவீர வெண் தாமரை இயக்கத்தை “தமிழ் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காக” வழிநடத்தினார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவது முற்றிலும் பொய்யானதாகும். 1997-98 இல் தொடங்கப்பட்ட 'வெண் தாமரை இயக்கத்தின்' முக்கிய நோக்கம், போரை வெல்வதற்கான ஒரு 'அத்தியாவசிய' உத்தியாக, வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடமிருந்து புலிகளை தனிமைப்படுத்துவதாகும்.

2000 ஆம் ஆண்டில் ஆனையிறவு புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, தொடர்ச்சியான இராணுவத் தோல்விகளுக்கு மத்தியில், சமரவீர ஊடக அமைச்சராக, போர் பற்றிய அனைத்து செய்திகளையும் தணிக்கை செய்ய நடவடிக்கை எடுத்தார். சமரவீர தனது அரசாங்கத்திற்கு எதிராக செய்தி வெளியிடும் ஊடகவியலாளர்களை உடல் ரீதியாக தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. 1999 ஆம் ஆண்டு ஐ.தே.க. நடத்திய பேரணியில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டமை அதில் பிரசித்தமான சம்பவமாகும்.

குமாரதுங்க அரசுக்கு எதிராக வளர்ச்சியடைந்த மக்கள் எதிர்ப்பின் மத்தியில், 2001 தேர்தலில் ஆட்சிக்கு வந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐ.தே.க. அரசாங்கத்தின் பல முக்கிய அமைச்சுக்களை, 2003 இல் ஜனாதிபதி குமாரதுங்க தனது நிர்வாக அதிகாரங்களைப் பயன்படுத்தி கைப்பற்றினார். இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு சமரவீர தனது முழு ஆதரவை வழங்கினார். இந்த அமைச்சுக்களை கைப்பற்றிய சம்பவம், விடுதலைப் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் இராணுவத்தின் தூண்டுதலின் பேரில் நடந்தன.

குமாரதுங்க முகாமில் சிங்களப் பேரினவாதப் போர் பிரச்சாரத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தைப் பெறவும் சர்வதேச நாணய நிதியத்தின் தாக்குதல்களை முன்னெடுத்துச் செல்லும்போது கவசமாக பயன்படுத்திக்கொள்ளும் உபாயமாக, ஜே.வி.பி.யை இணைத்துக்கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை உருவாக்கவும், அதற்கூடாக சந்திரிகாவின் தலைமையின் கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர சமரவீர செயற்பட்டார்.

விடுதலைப் புலிகளுடனான யுஎன்பியின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை கிழித்து போரை இராணுவ ரீதியாக முடிவுக்குக் கொண்டுவருவதே ஐ.ம.சு.கூ. அரசாங்கத்தின் பிரதான முழக்கமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து, 2005 ஜனாதிபதித் தேர்தலுக்காக மஹிந்த ராஜபக்ஷவை பரிந்துரைப்பதற்கும் அவரது வெற்றிக்காகவும் சமரவீர முன்னிலை வகித்தார்.

ஏகாதிபத்தியம் மற்றும் நிதி மூலதனத்தின் நலன்களின் அடிப்படையில் கிடைத்த ஒத்துழைப்புடன், புலிகளை இராணுவரீதியாக முடிவுக்கு கொண்டுவருவதற்காக ராஜபக்ஷ 2006 இல் மீண்டும் போரைத் தொடங்கினார். இந்தப் போரில் ஏகாதிபத்தியவாதிகளின் ஆதரவைப் பெறவும், மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக ஒரு முன்னணிப் பாத்திரத்தை சமரவீர வகித்தார்.

2007 பெப்ரவரியில், தனது சிறுபான்மை அரசாங்கத்தை நிலைநிறுத்த ஐ.தே.க. குழுவொன்றை அமைச்சரவையில் இணைத்து கொள்ளவதற்காக, மஹிந்த இராஜபக்ஷவின் வியூகத்தினால் உருவான சர்ச்சைக்கு மத்தியில் ஸ்ரீ.ல.சு.க. இல் இருந்து சமரவீர வெளியேற்றப்பட்டார். போருக்கு எதிரான நல்லிணக்கத்திற்கு, மனித உரிமைகளுக்கு மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான போராளியாக மாறுவேடமிட்ட சமரவீர, ஸ்ரீ.ல.சு.க. மக்கள் பகுதி என்ற அரசியல் கட்சியை உருவாக்கிக் கொண்டு ஐ.தே.க. கூட்டாளியாக செயற்பட்டார்.

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போரில் இராணுவத்தை வழிநடத்திய சரத் பொன்சேகாவை 2010 ஜனாதிபதித் தேர்தலில் 'எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக' நிறுத்துவதில் சரமரவீர முக்கிய பங்கு வகித்தார். அந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தவுடன், அவர் தனது கட்சியை கலைத்துவிட்டு ஐ.தே.க. உறுப்பினர் ஆனார்.

அமெரிக்க நட்பு வெளியுறவுக் கொள்கை

2015 ஆம் ஆண்டு, வாஷிங்டன் தீட்டிய கொழும்பில் நடந்த ஆட்சி மாற்ற சதித் திட்டத்தின் பிரதான சூழ்ச்சியாளர்களில் ஒருவராக இருந்து, சமந்தா பவர் உள்ளிட்ட அமெரிக்க ஏகாதிபத்திய முகவர்களின் மரியாதையைப் பெற்றார். இராஜபக்ச ஆட்சி பெய்ஜிங்கிற்கு நெருக்கமாக இருப்பது, சீனாவுக்கு எதிரான அதன் மூலோபாய திட்டங்களுக்கு தடையாக இருப்பதாக வாஷிங்டன் கண்டுகொண்டது.

ஆட்சிக் கவிழ்ப்பு வெற்றிகரமாக அமைய ஆரம்பித்ததிலிருந்தே அமெரிக்க இராஜதந்திரிகளுடன் நெருக்கமாக பணியாற்றிய சமரவீர, ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் 'எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக' ஸ்ரீல.சு.க. பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை அந்த கட்சியிலிருந்து வெளியேற்ற குமாரதுங்கவுடன் இணைந்து செயற்பட்டார்.

ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட “நல்லாட்சி” பற்றி பொய்யான வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்த சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், அதற்கு நேர் எதிராக, நிதி மூலதனத்தின் உத்தரவின் பேரில் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கியது. இதன்போது சமரவீர 2015-2017 வரை வெளியுறவு அமைச்சராகவும் பின்னர் நிதி அமைச்சராகவும் பிரதான வகிபாகம் ஆற்றினார்.

வெளிவிவகார அமைச்சராக அவர் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை விளைபயனுடன் வாஷிங்டனுக்கு சாதகமாக மாற்றியமைத்து. ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் தமிழ் உயரடுக்குடன் இணைந்து, இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றங்களை மூடிமறைக்கும் நடவடிக்கைகளில் ஒத்துழைத்தார்,

மார்க்சிய எதிர்ப்பு

சமரவீர மார்க்சிசதினதும் சோசலிசத்தினதும் வாழ்நாள் எதிரி ஆவார். ஆழ்மடைந்து வரும் முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், கூர்மையடைந்து வரும் வர்க்கப் போராட்டம் ஒரு சோசலிச இயக்கமாக வளரும் என்று அவர் பீதியடைந்திருந்தார். 2018 இல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 'இலங்கைக்கு கேடு சோசலிசமே' என்றும் அதை 'நசுக்கி அழிக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டார்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு, சர்வதேச அளவில் பரப்பப்பட்ட, மார்க்சிசத்துக்கு எதிரான -பின்-நவீனத்துவ கோட்பாடுகளை இலங்கையில் பரப்புவதற்கு சமரவீர அடிக்கடி அணுசரனை வழங்கினார். அந்த கருத்துக்களை இலங்கையில் பரப்புவதில் இழிபுகள் பெற்ற 'X' குழுவுக்கு 'ஊடக அனுசரணை வழங்கியவர்” சமரவீர ஆவார்.

அவர் மரணத்தை நெருங்குகையில் கூட, தொழிலாள வர்க்கம் அரசியல் களத்தில் நுழையக் கூடிய ஆபத்து பற்றி தமது முதலாளித்துவ ஆளும் கூட்டாளிகளுக்கு எச்சரிக்கை செய்து கொண்டிருந்தார். ஜூன் 2 அன்று “கடன் நெருக்கடியும் நாளைய தீர்வும்” என்ற தலைப்பில் இணையவழி விவாதமொன்றில் பங்குபற்றிய சமரவீர 'எதிர் கட்சி சரியாக இல்லாத வேளையில், பொருளாதாரம் சிதைவுறுமாக இருந்தால், உலகத்தில் தனிமைப்படுமாக இருந்தால், உண்மையிலேயே புதுமையான பயங்கரமான புரட்சிதான் இலங்கைக்கு கிடைக்க கூடும் என்பதையே வரலாறு காட்டுகிறது. அதுதான் என்னுடைய மிகப்பெரிய பயம்' என அவர் கூறினார்.

மார்க்சியத்தின் நனவான எதிரியும், ஏகாதிபத்தியம் மற்றும் நிதி மூலதனத்தின் கட்டளைகளுக்கு ஏற்ப தனது அரசியல் போக்கை மாற்றியமைத்த அரசியல் சதிகாரருமான சமரவீர, ஊடக சுதந்திரம், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கான போராளியாகவும், ஒரு தாராளவாத சிந்தனையாளராகவும் ஒரு தூய்மையான அரசியல்வாதியாகவும் வர்ணிக்கப்படுவதானது, இலங்கையின் முதலாளித்துவ வர்க்க ஆட்சிக்கும் பூகோள ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அவர் வழங்கிய சேவையின் நிமித்தமே ஆகும். இத்தகைய கட்டுரையின் இடக் கட்டுப்பாடுகள் காரணமாக, அவருடைய பிற்போக்குச் சேவைகளின் ஒரு துளி மட்டுமே இங்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

Loading