AUKUS உடன்படிக்கைக்குப் பின்னர் சீனா தொடர்பான உறவில் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய விரிசல் விரிவடைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சமீபத்திய வாரங்களில் சீனாவின் தொடர்பாக வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம், ஆஸ்திரேலியா திடீரென 56 பில்லியன் யூரோ பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை நிராகரித்து, அதற்கு பதிலாக சீனாவை இலக்காகக் கொண்ட ஆஸ்திரேலியா-இங்கிலாந்து-அமெரிக்கா (AUKUS) கூட்டணியில் கையெழுத்திட்டது. மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீயெவா (Kristalina Georgieva) உத்தியோகபூர்வ அறிக்கைகளில் சீனாவை முறையற்றவகையில் ஊக்குவித்தார் என்ற அமெரிக்க குற்றச்சாட்டுகளை இந்த மாதம் ஐரோப்பிய நாடுகள் வெற்றிகரமாக நிராகரித்தன.

பிரெஞ்சு நிதியமைச்சர் புருனோ லு மேர் வாஷிங்டனில் இந்த வார ஜி-20 நிதியமைச்சர்கள் உச்சிமாநாட்டிற்காக அமெரிக்கா வந்தபோது, நியூ யோர்க் டைம்ஸ் அவரிடம் சீனா பற்றி அதிகம் கேட்டது. டைம்ஸ் அமெரிக்காவுக்கும் பிரான்சுக்கும் இடையேயான 'சீனா மற்றும் பிற பிரச்சினைகளில் கடுமையான வேறுபாடுகளை மறைப்பது' சாத்தியமற்றது என்று எழுதியது. சீனா மீதான அமெரிக்காவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் (EU) கொள்கைகள் அடிப்படையில் பொருந்தாது என்று லு மேர் வலியுறுத்தினார்.

அமெரிக்க கடற்படையால் பாதுகாக்கப்படும் ஏவுகணை கப்பல் USS Bunker Hill (CG-52) முன்னணியில் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் USS Barry (DDG-52) தெற்கு சீனக் கடலில் 18 ஏப்ரல் 2020 பயணம் செய்கின்றது (Wikimedia Commons)

'அமெரிக்கா சீனாவை எதிர்க்க விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது” என்று அவர் கூறினார். அவர் மேலும், வாஷிங்டன் சீனாவை ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கின்றதுடன் 'சில வருடங்கள் அல்லது தசாப்தங்களில் சீனா உலகின் முதல் வல்லரசாக மாற அது விரும்பவில்லை.' என்று கூறினார். இது அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான வேறுபாட்டை அர்த்தப்படுத்துகிறதா என கேட்டதற்கு, 'நாங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அவ்வாறாக இருக்கலாம்' என்று பதிலளித்தார். அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய மோதலைத் தவிர்ப்பதற்கு, அமெரிக்கா மற்றும் சீனாவுடன் சேர்ந்து '21 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவை உலகின் மூன்று வல்லரசுகளில் ஒன்றாக அங்கீகரிக்க' வாஷிங்டன் ஒப்புக்கொள்ள வேண்டும்” என்றார்.

தொழிலாளர்களுக்கு இதுபற்றி எச்சரிக்கை செய்ய வேண்டும்: உலகின் மிக சக்திவாய்ந்த ஏகாதிபத்திய அரசுகளுக்கு இடையே ஆழமான, வரலாற்று ரீதியாக வேரூன்றிய மோதல்கள் 20 ஆம் நூற்றாண்டில் இருமுறை உலகப் போருக்கு வழிவகுத்ததுடன் இது மீண்டும் வெடிக்கும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது. 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்ட பின்னர் நேட்டோ சக்திகள் ஒரு பொது எதிரியை இழந்து முப்பது வருடங்கள் ஆகிறது. இன்று, கோவிட்-19 தொற்றுநோயை குற்றம்மிக்க உத்தியோகபூர்வ கையாளலில் ஏற்படும் ஒரு பயங்கரமான சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பொருளாதார மற்றும் இராணுவ நலன்களின் மீதான ஆழ்ந்த மோதல்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் ஐரோப்பிய சக்திகளையும் பிரித்து செல்கிறது.

லு மேர் 'ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இப்போது முக்கிய கேள்வி' 'அமெரிக்காவிலிருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும். பொருளாதார அல்லது மூலோபாய நலன்களாக இருந்தாலும், அதன் சொந்த நலன்களைப் பாதுகாக்க கூடியதாக இருக்க வேண்டும்' என்றார். அவர் மேலும் 'அத்தகைய சுதந்திரம் பாதுகாப்பு மீது அதிக தகமைகளை உருவாக்க கூடியதாகவும், காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் அதன் சொந்தக் கண்ணோட்டத்தை பாதுகாக்க, அதன் சொந்த பொருளாதார ஆர்வத்தை பாதுகாக்க, முக்கிய தொழில்நுட்பங்களை அணுக அமெரிக்க தொழில்நுட்பங்கனை அதிகம் சார்ந்து இருக்கக்கூடாது' என்றார்.

லு மேர் மூலம் பாரிஸ், வாஷிங்டனுக்குதெரிவித்த கோரிக்கைகளை டைம்ஸ் பட்டியலிட்டது. அதில் ஒன்று, பைடென் நிர்வாகம் முந்தைய ட்ரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட எஃகு மற்றும் அலுமினிய கட்டணங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். டைம்ஸ் 'சுதந்திரமான ஐரோப்பிய பாதுகாப்பு அபிலாஷைகளுக்கு அதிக அமெரிக்க அர்ப்பணிப்பை பிரான்ஸ் வேண்டுகின்றது... அத்துடன் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஐரோப்பிய மூலோபாய இலட்சியங்களை அமெரிக்க மதிக்கவேண்டும் என்பதற்கான சான்றுகளையும் விரும்புகிறது' என எழுதியது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முதுகுக்கு பின்னே AUKUS இல் வாஷிங்டன் கையெழுத்திட்டது, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலட்சியங்களை மதிக்கும் அல்லது தனக்கு இணையான பாத்திரத்தை ஏற்றுக்கொள்ளும் என்ற எண்ணம் அதற்கு இல்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை பராமரிப்பது, உண்மையில் சோவியத்துக்கு பிந்தைய காலம் முழுவதும் அமெரிக்க கொள்கையாக இருந்தது. ஒரு 1992 பென்டகன் மூலோபாயக் கட்டுரை, அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அதன் சாத்தியமான போட்டியாளர்கள் 'ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கவேண்டும் என விரும்பத்தேவையில்லை” என்று வாஷிங்டனுக்கு நம்பச்செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. மேலும் 'எங்கள் தலைமைக்கு சவால் விடுவதிலிருந்தோ அல்லது ஸ்தாபிக்கப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார ஒழுங்கை முறியடிப்பது தொடர்பாக அவர்களை ஊக்கமிழக்கசெய்யவேண்டும்' என்று வலியுறுத்தியது.

ஏற்கனவே ட்ரம்பின் தேர்தலுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் மிகவும் முரண்பட்ட இராணுவ நிலைப்பாட்டை அடையாளம் காட்டின. 2017 ஆம் ஆண்டில், ஜேர்மனியின் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், ஜனாதிபதியாக ட்ரம்ப்பின் முதல் ஐரோப்பா சுற்றுப்பயணத்தின் போது 'எங்களுடைய சொந்த எதிர்காலத்திற்காக நாமே போராட வேண்டும்' என்று கருத்து தெரிவித்தார். சுயாதீன ஐரோப்பிய ஒன்றிய ஆயுதங்கள் மற்றும் ஆயுதப் படைகளுக்கான பல பில்லியன் யூரோ திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.

உலகளவில் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்ற கோவிட்-19 தொற்றுநோய்க்கு பேரழிவு தரும் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கைக்கு முன்னணியில் நின்றதாலும் மற்றும் காபூலில் ஆப்கானிஸ்தான் பொம்மை ஆட்சியின் இந்த கோடையில் அவமானகரமான சரிவினாலும் வாஷிங்டன் பலவீனமடைந்துள்ளது. அமெரிக்க டாலரை கையாள்வதில் நீண்டகால பிரெஞ்சு விமர்சனங்கள் உள்ளநிலையில், அமெரிக்க கொள்கையை விமர்சிப்பதில் பிரெஞ்சு நிதியமைச்சரின் பங்கு தற்செயலானது அல்ல. இந்த விமர்சனங்கள் கோவிட்-19 தொற்றுநோயால் இன்னும் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு, சர்வதேச நாணய நிதியம், வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான மோதலின் மையமாக மாறியது. ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச நாணய நிதியத்திடம் ஆபிரிக்காவில் தொற்றுநோயை சமாளிக்க மானியங்களைக் கோரியது. இதனை அமெரிக்க அதிகாரிகள் டாலர்களை அச்சிடும் அதன் ஏகபோகத்திற்கு அச்சுறுத்தலாக கருதி எதிர்த்தனர். ஜோர்ஜீயெவாவின் ஆதரவுடன், ஐரோப்பிய ஒன்றியமும் ஆபிரிக்க நாடுகளும் இறுதியில் அமெரிக்க எதிர்ப்பை வென்றன. இந்த மாதம், நைஜீரியா, எகிப்து, ஐவரி கோஸ்ட், செனகல் மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு உட்பட 15 ஆபிரிக்க அரசுகள், வாஷிங்டனுக்கு எதிராக ஜோர்ஜீயெவாவை ஆதரிக்கும் பாரிஸை தளமாகக் கொண்ட மாதாந்த வெளியீடான Jeune Afrique இல் வெளியிடப்பட்ட ஒருகடிதத்தில் கையெழுத்திட்டன.

அவரை 'விலைமதிப்பற்ற கூட்டாளி' என்று அழைத்த அவர்கள், 'ஜோர்ஜீயெவா முன்னோடியில்லாத வகையில் 650 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமான சிறப்பு பெறுதல் உரிமைகளை வழங்குவதில் தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்தார் என எழுதின. இது தேவைப்படும் பல நாடுகளுக்கு பணப்புழக்கம் மற்றும் பண சேமிப்பை வழங்குகிறது. பன்முகத்தன்மையை ஊக்குவிக்க அவர் போராடினார் ... ' என எழுதின.

சீனா, ஆபிரிக்கா மற்றும் அதற்கு அப்பால் எடுக்கப்படும் இலாபங்களுக்கான ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான போட்டிகள் இன்னும் தெளிவாக இராணுவ பரிமாணத்தைப் பெறுவதுடன், போரின் ஆபத்து வேகமாக வளர்ந்து வருகிறது. பிரான்சின் மூலோபாய ஆராய்ச்சிக்கான அறக்கட்டளை (Foundation for Strategic Research - FRS) சிந்தனைக் குழு, சமீபத்தில் AUKUS கூட்டணி மற்றும் இந்தோ-பசிபிக் பற்றிய அறிக்கையை வெளியிட்டது. வாஷிங்டன் ஒதுக்கிவைத்த ஐரோப்பா (பிரான்ஸ் மட்டுமல்ல) மீதான அவநம்பிக்கையை AUKUS நிரூபிக்கிறது என்று அது எழுதியது. குறிப்பாக ஐரோப்பா பெய்ஜிங்கிற்கு போதிய கடும்போக்கு எடுக்காததுடன், சீனச் சந்தையில் வணிக ரீதியாக போட்டியிட முனைகிறது”.

பிரான்சுடனான உறவுகளை சீர்செய்துகொள்ள முயலும் அமெரிக்க முயற்சிகளை அது நிராகரித்தது: “ஆஸ்திரேலிய அதிகாரிகளால் சூழப்பட்ட அமெரிக்க வெளியுறவு செயலர் அன்டனி பிளிங்கன், பிரெஞ்சு கோபத்தை அடக்க முயன்றார். ('பிரான்ஸ் ஒரு முக்கிய பங்குதாரர் ... இந்தோ-பசிபிக்கில் அத்திலாந்திற்கு இடையிலான கூட்டுறவை நடைமுறைப்படுத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்வோம்') என்பது யாரையும் முட்டாளாக்காது. இது ஐரோப்பிய ஒன்றியத்தை ஓரங்கட்டுவதை வலுப்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூலோபாய நிகழ்ச்சி நிரலின் நோக்கமாகும்.

'ஐரோப்பாவிடம் கையில் இருப்பவற்றிற்கும் அதன் இலட்சியங்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வை' குறிப்பிட்டு, FRS ஒரு இராணுவ கட்டமைப்பிற்கு பின்வருமாறு அழைப்புவிடுத்தது: 'பயனுள்ள மூலோபாய சுயாட்சியை ஊக்குவித்தல் (அத்திலாந்திற்கு இடையிலான ஒற்றுமையை பாதுகாக்கும் போது), அதன் பல்வேறு பரிமாணங்களில் ஐரோப்பிய இறையாண்மை மற்றும் பலம் ஆதிக்கம் செய்யும் ஒரு உலகில் அதிகாரத்திற்கான விருப்பம் இப்போது முற்றிலும் அவசரமானது. வார்த்தைகளால் தன்னை ஏமாற்றிக்கொள்வது பயனற்றது என்பதை நாங்கள் ஏற்கெனவே எமக்கு நிரூபித்தோம். பிரான்சுக்கு இந்தோ-பசிபிக் பகுதிக்கு மட்டும் அல்ல உலகளாவிய சீன மூலோபாயம் தேவை (அமைச்சர்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு இல்லாததால், 'புதிய பட்டுச் சாலை' திட்டத்தில் பாரிஸுக்கு தெளிவான பார்வை இல்லை).

இது ஐரோப்பாவிற்குள், குறிப்பாக பிரிட்டனுடன் அதிகரித்து வரும் மூலோபாய அழுத்தங்களை உள்ளடக்கியது என்பதை FRS தெளிவுபடுத்தியது. பிரெக்ஸிட்டுக்குப் பின்னர் ஐரோப்பா இன்னும் இங்கிலாந்தின் முன்னணி வர்த்தகப் பங்காளியாக இருக்கிறது என்று கற்பனை செய்வது என்பது, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது என்ற ஒரு மாயை (குறைந்தது ஓரளவிற்கு) அகற்றப்பட்டுள்ளது. AUKUS இல் இலண்டனின் பங்கு மற்றும் எதிர்கால ஆஸ்திரேலிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் அதன் தொழில்துறை பங்கேற்பு பிராங்கோ-பிரிட்டிஷ் மூலோபாய உறவுகளின் எதிர்காலத்தைப் பற்றிய விரிவான பிரதிபலிப்புக்கு வழிவகுக்க வேண்டும். இது இங்கிலாந்து-பிரெஞ்சு இராணுவ ஒத்துழைப்பு தொடர்பான '2010 லங்காஸ்டர் மாளிகை ஒப்பந்தங்களை பாதிக்கும்' என்று அது கூறியது.

உலக முதலாளித்துவத்தின் சர்வதேச அமைப்புகளின் உடைவிற்கு மாற்றாக உருவாகும் சக்தி, சர்வதேச தொழிலாள வர்க்கம். கோவிட் -19 தொற்றுநோய்க்கான உத்தியோகபூர்வ பதிலால் ஏற்பட்ட பாரிய தேவையற்ற மரணங்களுக்கும் மற்றும் தீவிர சுரண்டல், சமூக சமத்துவமின்மைக்கு எதிராக உலகெங்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், லு மேர் டைம்ஸிடம் 'சமத்துவமின்மை பிளவு' குறித்து அஞ்சுவதாகவும், 'ஒரு புதிய 'மஞ்சள் சீருடை' [எதிர்ப்பு] இயக்கம் ஐரோப்பாவில் எல்லா இடங்களிலும் சாத்தியம்' என்றும் எச்சரித்தார்.

தொழிலாளர்கள் தனிப்பட்ட அரசியல்வாதிகள் அல்லது அரசாங்கங்களினது மட்டுமல்லாது ஒரு முழு சமூக அமைப்பினதும் திவாலை எதிர்கொள்கிறார்கள். சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் அச்சுறுத்தல்கள் ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையின் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் பொறுப்பற்ற கூறுகளாக இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் அடிப்படையில் வேறுபட்டவை அல்ல. அவர்கள் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை ஆயுதத் திட்டங்கள், தொழிலாளர்கள் மீதான சமூகத் தாக்குதல்கள் மற்றும் FRS இன் வார்த்தைகளில் ஒரு இராணுவவாத 'அதிகாரத்திற்கான விருப்பத்தை' வளர்க்க திட்டமிட்டுள்ளனர்.

ஊதியங்கள் மற்றும் வேலைநிலைமைகள், தொற்றுநோய் மற்றும் போலீஸ்-அரசு கொள்கைகள் மீதான பிற்போக்குத்தனமான உத்தியோகபூர்வ கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கு அணிதிரளும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு முக்கிய பணி சர்வதேச, சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்தில் அவர்களின் போராட்டங்களை ஒருங்கிணைப்பதாகும்.

Loading