லொஹான் ரத்வத்த சிறைச்சாலைக்குள் பாய்ந்து தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுத்த மரண அச்சுறுத்தல் அரசாங்கத்தின் கொடூரமான முகத்தை வெளிப்படுத்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அனுராதபுரம் சிறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, தமிழ் அரசியல் கைதிகளை கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி ஒரு வாரம் கடந்துவிட்டது. ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் ஆட்சியிக்கு இந்த குற்றச் செயல்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில், இந்த சம்பவம் குறித்து அது இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

ஊடக அறிக்கையின்படி, குடிபோதையில் இருந்த அமைச்சர், ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கும்பலுடன், கைத்துப்பாக்கியை வைத்துக்கொண்டு ஹெலிஹொப்டரில் அனுராதபுரம் சிறைக்குச் சென்றார். சிறை விதிமுறைகளின்படி, யாரும் துப்பாக்கியுடன் சிறைக்குள் நுழைய முடியாது.

லொஹான் ரத்வத்த (Photo: Facebook)

கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், 13 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை கூடுகளுக்கு செல்லும் வழியில், அவர் சிறை அதிகாரிகளை மிரட்டியுள்ளார். அவர் கைதிகளை வெளியே எடுத்து அவர்களில் ஹட்டனில் வசிக்கும் கணேசன் தர்ஷன் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டம் நெல்லியடியைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன் ஆகியோரை மண்டியிட வைத்தார்.

மண்டியிடவைக்கப்பட்ட இருவரின் தலையிலும் துப்பாக்கியால் குறிவைத்த அமைச்சர், கொலை மிரட்டல் விடுத்து, 'உங்களை வெளியே அனுப்புவதை முடிவு செய்வது நாங்களே' என்று சத்தமிட்டதாக கைதிகள் கூறுகின்றனர்.

இனவாத வார்த்தைகளை கூறி கைதிகளை திட்டிய ரத்வத்த, அவர்களில் ஒருவரிடம் போரின் போது எத்தனை பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்று கேட்டார்.

அவர்கள் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் டசின் கணக்கான அரசியல் கைதிகளின் ஒரு பகுதியினராவர். சிலருக்கு குற்றச்சாட்டுகள் கூட கிடையாது.

அமைச்சரின் செயல் குற்றவியல் நடவடிக்கை மட்டுமன்றி, அது தமிழர் விரோத இனவெறி ஆத்திரமூட்டலாகும்.

ஆகஸ்ட் 5 அன்று, ரத்வத்த அவரது நண்பர்கள் குழுவினருடன், அவர்களுக்கு தூக்கு மேடையைக் காட்ட விரும்புவதாகக் கூறிக்கொண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள்ளும் இதேபோல் பாய்ந்தார்.

ரத்வத்தவின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியது. எவ்வாறாயினும், ஜனாதிபதி மூன்று நாட்கள் வெட்கமில்லாமல் மௌனம் காத்த பின்னர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு, புதன்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது. “வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் தன்னால் இழைக்கப்பட்ட சம்பவங்களுக்கு பொறுப்பேற்று, ரத்வத்தவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக” அந்த அறிக்கை கூறியது.

ரத்வத்தவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கைது செய்ய உத்தரவிட்டு சட்ட நடவடிக்கைக்கு அழைப்பு விடுப்பதற்கு பதிலாக, அவர் சிறைச்சாலை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை ஏற்றுக்கொண்டு, ரத்திணக்கல் ஆபரண இராஜாங்க அமைச்சராக வைத்துக்கொண்டார்.

அரசாங்கத்தின் சில பகுதியினர் மற்றும் தலைசாய்க்கும் ஊடகங்களும், இரத்வத்தவும் கூட, உண்மையான சம்பவத்தை தலைகீழாக மாற்றும் திசை திருப்பல் பொய்களை உருவாக்குகின்றன.

இந்த சம்பவத்தை விசாரிப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாசாங்கு செய்வதற்கு. வெள்ளிக்கிழமை, தி மார்னிங் பத்திரிகை, லொஹான் மூன்று முனை விசாரணையை எதிர்கொள்வதாக செய்தி வெளியிட்டது. இந்த விசாரணைகளில் ஒன்று இலங்கையின் இயலாமை கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவினதாகும். மற்றொன்று சிறைச்சாலை ஆணைக் குழுவிலும் மூன்றாவது பொலிசிலும் நடக்கும் விசாரணைகளாகும். எவ்வாறாயினும், இந்த ஆத்திரமூட்டும் செயலைச் சுற்றியுள்ள உண்மையான நிகழ்வுகளை மூடி மறைக்க திரைக்குப் பின்னால் என்ன நடக்கும் என்பதை இலங்கையில் உள்ள தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் நன்கு அறிவர்.

வெள்ளிக்கிழமை, டெய்லி மிரர் பத்திரிகை ரத்வத்த உடன் ஒரு நேர்காணலை வெளியிட்டது. ரத்வத்த தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். தான் சிறைக்கு துப்பாக்கிகளை எடுத்துச் செல்லவில்லை என்றும் தமிழ் கைதிகளை அச்சுறுத்தவில்லை என்றும் இழிந்த முறையில் கூறினார்.

'சிறைகளில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள கடுமையான அவசியம் இருந்த தாலேயே நான் யாரிடமும் சொல்லாமல் சென்றேன்' என்று அவர் கூறினார். ஒரு அமைச்சராக நான் எந்த நேரத்திலும் எந்த சிறைக்கும் செல்ல முடியும். இதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. பகல் அல்லது இரவின் எந்த நேரத்திலும் போகலாம்' என அவர் அங்கு கூறினார்.

சிறைச்சாலைகளுக்குள் ஏற்பாடு செய்யப்படும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் கொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 'தரப்படுத்தப்பட்ட சிறை வளாகத்தை' கட்டும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் ரத்வத்த மேலும் கூறினார். அவர் உண்மையில் என்ன செய்து கொண்டிருந்தார் என்றால், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிரான எதிர்கால அடக்குமுறை நடவடிக்கைகளுக்குத் தயாராகும் வகையில் ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் ஹொரணை பகுதியில் 100,000 பேரை தடுத்து வைக்க கூடிய சிறைச்சாலை வளாகத்தை நிர்மாணிக்கத் தொடங்குவதாகும்.

விசாரணைகள் என்று அழைக்கப்படுபவற்றின் பின்னர், கடைசியாக பின்னப்படக் கூடிய கதையின் நிழல்கள் இந்த திமிர்பிடித்த அறிக்கைகளில் காணப்படுகின்றன. அவர் அரசாங்கமே இதற்கு காட்டும் நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இத்தகைய கருத்துக்களைத் தெரிவிக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளார்.

பல அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சர் நாமல் இராஜபக்ஷ, வியாழக்கிழமை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றார். ஊடகங்களிடம் அவர் கூறுகையில், 'தேவையற்ற வதந்திகளை பரப்பாமல்' அரசாங்கத்தின் விசாரணையை எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டும். 'வதந்திகள்' என்னவென்று அவர் சொல்லவில்லை.

“எங்களது அரசியல் வரலாற்றில் மிகவும் அரிதான” இத்தகைய இராஜினாமா மூலம் 'மதிப்புமிக்க உதாரணத்தை' வழங்கியதாகக் கூறி, அமைச்சர் விமல் வீரவன்ச, சம்பவத்தை மூடி மறைக்கும் இயக்கத்துக்கு தனது பங்களிப்பை செய்தார்.

கடந்த ஆண்டு நவம்பரில் மஹார சிறையில் இரத்தக்களரி தாக்குதல் நடந்த பிறகு, அப்போதைய சிறைச்சாலைகள் அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லேவை அந்த பதவியில் இருந்து நீக்கி, ஜனாதிபதி இராஜபக்ஷ, ரத்வத்தவை அந்த பதவிக்கு நியமித்தார்.

கொடிய கோவிட்-19 வைரஸ் சிறைச்சாலைகளில் பரவியதால், மஹார கைதிகள், பிசிஆர் பரிசோதனைகளைக் கோரி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர். அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பதற்கு பதிலாக, சிறை அதிகாரிகளோ, பொலிஸ் விசேட அதிரடிப்படையை சிறைக்குள் அனுப்பி, ஆத்திரமூட்டலொன்றை கிளறிவிட்டு, 11 பேரை சுட்டுக் கொன்றதோடு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காயமேற்படுத்தினர். இந்த குற்றத்திற்கு காரணமானவர்கள், சுதந்திரமாக நடமாடும் போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை காரணமாக டசின் கணக்கான கைதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

ஆளும் கட்சியின் நீண்டகால பாராளுமன்ற உறுப்பினரான ரத்வத்த, இதற்கு முன்னர் 2001 டிசம்பர் பொதுத் தேர்தலின் போது, கண்டிக்கு அருகே உள்ள உடதலவின்னவில் 11 முஸ்லிம் இளைஞர்களைக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டார். ஆனால் அங்கு குற்றவாளியாக இருந்தாலும், அவர் அவரது தந்தை முன்னாள் அமைச்சர் அனுருத்த ரத்வத்த மற்றும் அவரது சகோதரருடன் 2006 இல் விடுவிக்கப்பட்டார். ஐந்து பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் 2009 இல் அவர்கள் உயர் நீதிமன்றத்தால் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

ரத்வத்தவின் குற்றச் செயல்கள் தனியான சம்பவங்கள் அல்ல. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு ஒரு அமைச்சர் அல்லது அவரது அதிகாரத்தில் உள்ள எவரும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது இலங்கையில் கட்டியெழுப் ப்படும் எதேச்சதிகார ஆட்சியின் தன்மையைக் குறிக்கிறது.

இலங்கையில் ஆளும் உயரடுக்கு முழுதும் அதன் சமூக விரோத கொள்கையை பிரதிபலிக்கும் வகையில், ஊழல், கொலை மற்றும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களால் நிரம்பியுள்ளது.

அவர் கடுமையான நெருக்கடியில் கிழிந்து போயிருந்த ஆளும் உயரடுக்கிற்கு 'வலுவான மற்றும் நிலையான ஆட்சியை' உறுதி செய்வதாக வாக்குறுதி கொடுத்தே ஜனாதிபதி இராஜபக்ஷ 2019 நவம்பரில் ஆட்சிக்கு வந்தார். சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாக வளர்ந்து வந்த மக்கள் எதிர்ப்பின் மத்தியில் முந்தைய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் கவிழ்ந்த து.

இராணுவத்திற்கு அழைப்பு விடுத்தல் மற்றும் அவர்களைச் சுற்றி உள்ள பேரினவாத சிங்கள-பௌத்த குழுக்களை ஒன்று திரட்டியே இராஜபக்ஷவும் அவரது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் அதிகாரத்திற்கு வர பிரச்சாரம் செய்தனர், மேலும், பொதுமக்களின் அதிருப்தியை சுரண்டிக்கொள்வதற்காக பொய்யான வாக்குறுதிகளை முன்வைத்தனர்.

ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவர் தனது நிர்வாகத்தை இராணுவ அதிகாரிகளால் நிரப்பி வரும் அதே வேளையில், போராடும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக தமிழ் மற்றும் முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரத்தை தூண்டினார். அதே நேரத்தில், குற்றங்களிலிருந்து இராணுவத்தை பாதுகாக்க குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதப் போரின்போது செய்யப்பட்ட குற்றங்களில் இருந்து விலக்களிப்பை பெற அரசாங்கம் முயல்கிறது.

தமிழ் பொதுமக்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகியோர் ஜனாதிபதியால் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர் என்பது சாதாரண விஷயமல்ல. இரண்டு வழக்குகளிலும், குற்றவாளிகளுக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

பூகோள தொற்றுநோய் இலங்கையில் முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார நெருக்கடியை தீவிரமாக்கியுள்ளது. வாழ்க்கைத் தரத்தின் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் பல பிரிவுகள் வளர்ந்து வரும் தொடர் போராட்டங்களில் இறங்குகின்றன. இதற்கு சமாந்தரமாக கிராமப்புறங்களில் பதட்டங்கள் அதிகரிப்பதால் அரசாங்கத்தின் நெருக்கடி மேலும் அதிகரிக்கின்றது.

ஆகஸ்ட் 30 அன்று, உணவுப் பொருட்கள் விநியோகத்தை பராமரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு ஜனாதிபதி அவசரகால நிலையை அறிவித்தார். மக்களின் ஜனநாயக உரிமைகளை மேலும் நசுக்குவதற்காக அவசரகாலத்தின் கீழ் எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய பாரதூரமான அதிகாரங்களை ஜனாதிபதி கையகப்படுத்தியுள்ளார். மே 17 முதல், அவர் பல அரச நிறுவனங்களில் தொழில்துறை நடவடிக்கைகளைத் தடை செய்யும் அத்தியாவசிய பொது சேவைகள் உத்தரவுகளை அமல்படுத்தினார்.

இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம், சர்வதேச மன்னிப்பு சபை, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பிரதிநிதி ஹன்னா சிங்கர் மற்றும் இலங்கை கைதிகள் உரிமை பாதுகாப்பு குழு ஆகியவை அமைச்சரின் செயல்களுக்கு கண்டனம் தெரிவித்தவற்றில் அடங்கும்.

எனினும், தனது அடக்குமுறை ஆட்சியை ஒருங்கிணைக்க முற்படும் அரசாங்கம், இந்த குற்றச் செயலை துடைத்துக் கட்டிவிடும்.

Loading