பெருவின் ஆளும் உயரடுக்கு ஒளிரும் பாதை தலைவரின் மரணத்திற்கு பின்னர் கம்யூனிச எதிர்ப்பு விரோதத்தை கட்டவிழ்த்து விடுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செப்டம்பர் 11, மாவோவாத கெரில்லா குழுவான ஒளிரும் பாதை (Shining Path -Sendero Luminoso, SL) நிறுவனரும் தத்துவார்த்த தலைவருமான அபிமைல் குஸ்மான் (Abimael Guzmán) இன் மரணம், ஆளும் ஸ்தாபகம் மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்தின் வெறித்தனமான வெள்ளத்தை கட்டவிழ்த்துவிட்டது.

ஒளிரும் பாதை தலைவர் அபிமைல் குஸ்மான்

தலைவர் கோன்சாலோ என்ற அவரது புனைபயரால் நன்கு அறியப்பட்ட குஸ்மான், தீமையின் அவதாரமாக காட்டப்படுகின்றார். 1980 இல் ஒளிரும் பாதை தொடங்கிய இரத்தம் தோய்ந்த உள்நாட்டு ஆயுத மோதலில் சுமார் உயிரிழந்த 70,000 பெருவியர்களில் பாதிப் பேர் அரசாங்க பாதுகாப்புப் படைகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளால் கொல்லப்பட்டாலும் அவர்களின் இறப்புகளுக்கு அவர் ஒருவரே பொறுப்பாளராக சித்தரிக்கப்படுகிறார்.

குஸ்மானின் மரணம் குறித்து RPP ஊடக கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை இதற்கு ஒரு உதாரணமாக இருந்தது: “இரத்தவெறி, இரக்கமின்மை, கொடுமை. சென்டேரோ லுமினோசோ (ஒளிரும் பாதை) பயங்கரவாதக் குழுவின் தலைவரின் தீமையை வகைப்படுத்த துல்லியமான பெயரடை சொல் எதுவும் இல்லை ... ' என அது எழுதியது.

குஸ்மானின் மரணத்தைத் தொடர்ந்து வந்த நாட்களில், அவரது சடலத்தை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய சூடான மற்றும் இழிவான விவாதத்தால் நாட்டின் அரசியல் வாழ்க்கை ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

இறுதியாக செப்டம்பர் 17 அன்று, சமீபத்தில் பதவியேற்ற ஜனாதிபதி பெட்ரோ காஸ்டில்லோ, சட்டத்தில் கையெழுத்திட்டார். அதில் பெருவின் காங்கிரஸால் நிறைவேற்றப்பட்ட மசோதா, பயங்கரவாதம் அல்லது தேசத்துரோக குற்றவாளிகளின் கூட்டு தகனத்திற்கான அதிகாரத்தை வழங்குகிறது. அதன்படி நீதி அமைச்சகம் சாம்பலை எது பொருத்தமானது என்று கருதுகின்றதோ அதன்படி அப்புறப்படுத்துவதற்கு அதிகாரத்தை அளித்தது. அத்தகைய தனிநபர்களின் உடல்களை சாதாரணமாக அடக்கம் செய்வது 'தேசிய பாதுகாப்பு அல்லது உள் ஒழுங்கை ஆபத்திற்குள்ளாக்கலாம்' என்று புதிய சட்டம் எச்சரிக்கிறது.

கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த கடற்படை சிறையில் நிமோனியாவால் இறந்த 86 வயதான குஸ்மானின் உடல் பெருவின் அரசுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும் என்று எவரும் தீவிரமாக எடுக்கவில்லை. அவரது சமாதி, ஒளிரும் பாதை ஆதரவாளர்களின் கூடும் இடமாக மாறும் என்று வலதுசாரி சட்டமன்ற உறுப்பினர்கள் கூறுவது அபத்தமானது. பல தசாப்தங்களாக மாவோவாதக் குழு பெருவில் குறிப்பிடத்தக்க பிரசன்னத்தை காட்டவில்லை. அதன் எஞ்சியவர்கள் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் பணிபுரியும் குற்றக்குழுக்களாக தரமிறங்கியுள்ளனர்.

வயதான கைதியின் மரணத்திற்கு, பெரு முதலாளித்துவத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கம்யூனிச எதிர்ப்பு கண்டனங்கள் பல நோக்கங்களைக் கொண்டுள்ளது. முதலாவதாக, எந்தவொரு இடதுசாரி எதிர்ப்பையும் 'பயங்கரவாதி' என்று கொச்சைப்படுத்தும் நீண்டகால நடைமுறையை, கோவிட்-19 தொற்றுநோயின் கீழ் முன்னோடியில்லாத வகையில் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியின் கீழ், பெரு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை அச்சுறுத்துவதை தீவிரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பெருவில் தனிநபர் உயிர்களைக் கொன்றது

காஸ்டிலோ அரசாங்கத்தை வலப்புறம் தள்ளுதல்

இரண்டாவதாக, ஜூலை மாத இறுதியில் பதவியேற்ற முன்னாள் கிராமப்புற ஆசிரியர்களின் வேலைநிறுத்த தலைவரான பெருவியன் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டில்லோவை அச்சுறுத்துவதையும், மேலும் மேலும் வலதுபக்கம் தள்ளுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அவருக்கு எதிரான வலதுசாரிகள் மற்றும் பெரும்பாலான ஊடகங்கள் அவரையும் அவரது ஆதரவாளர்களையும் ஒளிரும் பாதையின் அனுதாபிகளாக காட்டி, அமைச்சரவை உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் அவரது அரசாங்கத்தை முழுவதுமாக அகற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும் எனக் கோருகின்றனர்.

தீவிர வலதுசாரி மக்கள் சக்தி கட்சியின் மூன்று முறை தோல்வியடைந்த ஜனாதிபதி வேட்பாளர் கெய்கோ ஃபுஜிமோரி, 'அவரது [குஸ்மான்] இரத்தக்களரி சித்தாந்தத்தை தடைசெய்தல் மற்றும் அதை ஊக்குவிப்பவர்கள், இன்று அரசாங்கத்தில் ஊடுருவி அதனை முன்னெடுக்க வருபவர்கள்” பற்றி பேசினார்.

குஸ்மான் 'எண்ணற்ற உயிர்களை' பலியெடுத்ததை கண்டித்து, தனது சொந்த கடமைப்பாடான அறிக்கையுடன், 'பயங்கரவாதத்தை கண்டிக்கும் எங்கள் நிலைப்பாடு உறுதியானது மற்றும் மாறாதது' என்று இதற்கு காஸ்டில்லோ பதிலளித்தார். காஜாமர்காவின் வடக்கு மலைப்பகுதிகளில் உள்ள rondas campesinas அல்லது விவசாயிகளின் தற்காப்புக் குழுக்களில் தான் பங்கேற்றதை கூறினார். ஒளிரும் பாதை கிளர்ச்சியை ஒடுக்குவதில், rondas குழுக்கள் பாதுகாப்புப் படைகளுடன் கூட்டணி வைத்திருந்ததுடன், மேலும் பல கொடூரங்களுக்கு அவர்களே பொறுப்பாவார்கள்.

பெரு ஜனாதிபதி, வோல் ஸ்ட்ரீட், பெரு நிறுவனங்கள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றிடம் தனது ஜனரஞ்சக வார்த்தையாடல்கள் பற்றி பயப்பட ஒன்றுமில்லை என்பதை நம்ப செய்வதற்காக தற்போது ஐந்து நாள் அமெரிக்க பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

இறுதியாக, குஸ்மானின் மரணம் குறித்து ஊக்குவிக்கப்பட்ட பரபரப்பானது, புதிய தலைமுறை பெருவியன் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் ஒளிரும் பாதையின் கசப்பான அனுபவத்தின் உண்மையான பாடங்கள் மற்றும் அதற்கு எதிராக பெரு அரசு நடத்திய இரத்தக்களரி போரைப்பற்றி அறிந்துகொள்வதை தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

பெருவியன் கம்யூனிஸ்ட் கட்சி - ஒளிரும் பாதை என அறியப்பட்டதன் தோற்றம் 1961 சீன-சோவியத் பிளவில் இருந்து உருவானது. சீனாவின் மாவோ சேதுங், நிகிடா குருஷ்சேவின் 1956 உரை ஸ்ராலினின் குற்றங்களையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான 'சமாதான சகவாழ்வு' என்ற மாஸ்கோவின் கொள்கைகளையும் அம்பலப்படுத்தியதால் சோவியத் ஒன்றியத்தின் தலைமையை 'திருத்தல்வாதி' மற்றும் 'துரோகிகள்' என்று கண்டனம் செய்தார். இரண்டு தேசியவாத அடிப்படையிலான ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் மாறுபட்ட நலன்களில் இந்த மோதல்கள் வேரூன்றியிருந்தன.

மாஸ்கோ-சார்பு கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகளுக்கு மிகவும் தீவிரமான ஒரு மாற்றீடாக தன்னை பொய்யாக காட்டி, மாவோயிசம் இலத்தீன் அமெரிக்காவில் போருக்குப் பிந்தைய சமூகப் போராட்டங்களின் அலையால் தீவிரப்படுத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளின் ஒரு அடுக்குக்கு அழைப்பு விடுத்தது. 1934 ஆம் ஆண்டில் அரேக்விபாவில் (Arequipa) ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த குஸ்மானின் நிலைமை இதுதான். அவர் பெருவின் உள் மோதலின் மையமாக இருக்கும் ஏழ்மையான ஆண்டியன் பிராந்தியங்களில் ஒன்றான அயகுச்சோவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் தத்துவ பேராசிரியராக ஆனார்.

'கலாச்சாரப்புரட்சி' மூலம் உந்துதலளிக்கப்பட்டது

1966-67 இன் 'கலாச்சாரப் புரட்சியின்' போது அவர் சீனாவுக்குப் பயணம் செய்தார். அங்கே மாவோ, மாணவர் இளைஞர்களையும், பின்னர் உதிரிப் பாட்டாளி வர்க்கம் மற்றும் ஏழை விவசாயிகளையும், செங்காவலர்கள் என்று அழைக்கப்பட்டு ஒருங்கிணைத்து, சீன ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினுள் இருந்த தனது போட்டியாளர்களுடன் கணக்குகளைத் தீர்த்துக் கொண்டார்.

குஸ்மான் இந்த பிற்போக்கு இயக்கத்திலிருந்தே உத்வேகம் பெற்றார். இவ் இயக்கமானது, விஞ்ஞானம், கலாச்சாரத்துடன் தொடர்புபட்ட கிட்டத்தட்ட அனைவரையும் மற்றும் அனைத்தையும் 'முதலாளித்துவம்' என்று கண்டனம் செய்தது. அதே நேரத்தில் மாவோவின் மோசமான 'சிறிய சிவப்பு புத்தகம்' ஒரு அரச மதமாக மாற்றப்பட்டது.

பெருவுக்குத் திரும்பிய குஸ்மான், பெருவின் உண்மையான மாவோவாத குழுவான பெரு கம்யூனிஸ்ட் கட்சி — செங்கொடி (Bandera Roja) இலிருந்து பிரிந்து ஒளிரும் பாதையை நிறுவினார், ஆயுதப் போராட்டம் மற்றும் 'மக்கள் போராட்டம்' ஆகியவற்றுக்கான உடனடி தயாரிப்புகளை வலியுறுத்தினார். புதிய அமைப்பின் மையமானது, குஸ்மானின் சக பேராசிரியர்கள் மற்றும் கிராமப்புற விவசாயப் பகுதிகளிலிருந்து வந்த அயகுச்சோவின் ஹுவமாங்கா பல்கலைக்கழக மாணவர்களை கொண்டிருந்தது.

1980 ஆம் ஆண்டில் தளபதிகளின் 12 வருட ஆட்சிக்குப் பின்னர் ஒரு பொதுமக்கள் அரசாங்கத்திற்கு அதிகாரத்தை விட்டுக்கொடுக்க பெருவிய இராணுவம் முடிவு செய்ததைத் தொடர்ந்து, அந்த ஆண்டே ஒளிரும் பாதை இந்த ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கும் தருணமாக தேர்ந்தெடுத்து. தேர்தலுக்கு முந்தைய நாள், ஒளிரும் பாதை உறுப்பினர்களின் ஒரு குழு, வாக்காளர் பதிவு அலுவலகத்தை தாக்கி, ஆயாகுச்சோவில் உள்ள சுஸ்சி நகரில் வாக்குப் பெட்டிகளை எரித்தது.

இராணுவ ஆட்சியின் முடிவு, தொழிலாள வர்க்கத்தின் பாரிய வேலைநிறுத்தங்களால் கட்டாயப்படுத்தப்பட்டதாகும். இராணுவ ஆட்சிக்கு எதிரான எழுச்சி, இடதுசாரி கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்கு வழிவகுத்து, அவை சட்டபூர்வமானதாக மாறி மேலும் மில்லியன் கணக்கான பெருவின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் தீவிரமயப்படுதலால் முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றீட்டை தேடினர்.

குஸ்மான் ஊக்குவித்த மாவோயிச சித்தாந்தம், அந்த இயக்கத்திற்கும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் விரோதமானது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அணிதிரட்டல் மற்றும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமைத்துவத்தை பயிற்றுவிப்பதற்கான போராட்டம் பற்றிய மார்க்சிச முன்னோக்கை அது நிராகரித்தது. அதற்கு பதிலாக, நகரங்களைச் சுற்றியுள்ள விவசாய அடிப்படையிலான இராணுவத்தின் நீடித்த போரின் அடிப்படையில் 'மக்கள் போராட்டம்' என்ற தீங்கான கோட்பாட்டை அது முன்னெடுத்தது. நடைமுறையில், இது பயங்கரவாதத் தாக்குதல்களாக மாற்றப்பட்டு, இதில் மக்கள் வெறும் பார்வையாளர்களின் பங்கு வகிக்கத் தள்ளப்பட்டனர்.

இந்த நோக்கத்திற்காக, அது இடதுசாரிகள், தொழிற்சங்க அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களின் கொலைகளை நடத்தியது. இது தொழிற்சாலைகளை தாக்கியது, இயந்திரங்களை அழித்தது மற்றும் சக்திவாய்ந்த மின்கம்பங்கள் மற்றும் சாலைகளை அழித்தது, நகரங்களுக்கு மின்சாரம் மற்றும் உணவு விநியோகத்தை நிறுத்தியது.

ஊழல் மற்றும் அடக்குமுறை அரசாங்க அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களைத் தாக்கி, குற்றவாளிகளுக்கு எதிராக விழிப்புணர்வான நீதியை முன்னெடுப்பதன் மூலம் தெற்கு பெருவில் உள்ள ஒடுக்கப்பட்ட க்வெச்சுவா (Quechua) மொழிபேசும் விவசாயிகளிடமிருந்து சில ஆதரவைப் பெற முடிந்தது. ஆயினும், 1983 ஆம் ஆண்டில் அயாகுச்சோவில் அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்து, கிளர்ச்சியை ஒடுக்க ஆயுதப்படைகளை ஒரு 'இரத்தக்களரி போருக்கு' அனுப்பிய பின்னர், கிராமப்புற மக்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் ஒளிரும் பாதை அதிகளவில் ஈடுபட்டது. விவசாயிகளை முன்னணி புரட்சிகர சக்தியாக காட்டும் மாவோவாத முன்னோக்குக்கு ஏற்ப, விவசாயிகள் மாற்றமடைவதில் தோல்வியடைந்ததற்கு ஒளிரும் பாதை வன்முறையுடன் பதிலளித்தது.

மாவோவாத கெரில்லாக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் அகப்பட்ட ஏழ்மையான விவசாயிகள் ஏதாவது தரப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பழிவாங்கல்கள் மற்றும் எதிர் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டனர். 2003 ஆம் ஆண்டு பெருவின் உண்மை ஆணைக்குழு (Truth Commission) வெளியிட்ட அறிக்கையில், உள்நாட்டு மோதலில் பாதிக்கப்பட்டவர்களில் 79 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிப்பதாகவும், 75 சதவீதம் பேர் 'க்வெச்சுவா அல்லது பிறமொழிகளை தங்கள் தாய் மொழியாக பேசுவதாகவும்” கண்டறிந்துள்ளது.

குஸ்மானின் கைதும் மற்றும் ஒளிரும் பாதையின் வீழ்ச்சியும்

செப்டம்பர் 1992 இல் லிமாவில் குஸ்மான் கைதுசெய்யப்பட்ட நேரத்தில், ஒளிரும் பாதை ஏற்கனவே இராணுவ அடக்குமுறை மற்றும் இரத்தக்களரி போரை ஒரு முடிவுக்கு கொண்டுவர விரும்பிய ரோண்டா விவசாயிகளை அரசாங்கம் ஆயுதமயமாக்கியதன் காரணமாக தெற்கு மற்றும் மத்திய மலைப்பகுதிகளில் செயல்படும் திறனை இழந்தது.

1992, 12 செப்டம்பரில் கைது செய்யப்பட்ட பின்னர் குஸ்மான்

இந்த இயக்கத்தின் தோல்வி, உலகளாவிய மாற்றங்களுடன் பிணைக்கப்பட்டிருந்தது. மிக முக்கியமாக ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை கலைத்ததுடனும் மற்றும் தேசிய வேலைத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்களின் பரந்த உடைவுடனும் தொடர்புபட்டிருந்தது. அதே காலகட்டத்தில் சாண்டினிஸ்டாக்கள் நிக்கராகுவாவின் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டதோடு, எல் சால்வடார் மற்றும் குவாத்தமாலாவில் கெரில்லா கிளர்ச்சிகள் முறியடிக்கப்பட்டன.

ஒளிரும் பாதையின் சித்தாந்தத்தின் ஒரு முக்கிய அம்சம் குஸ்மானைச் சுற்றியுள்ள தனிநபர் ஆளுமையின் வழிபாடாகும், அவர் மார்க்ஸ், லெனின் மற்றும் மாவோவுக்குப் பின்னர் 'மார்க்சிசத்தின் நான்காவது வாள்' என்று அறிவிக்கப்பட்டார். அவருடைய எழுத்துக்கள் 'கோன்சலோவின் சிந்தனை' என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. பல முன்னணி உறுப்பினர்களுடன் அவரைக் கைதுசெய்ததன் பின்னர் இந்த மாவோவாதக் குழுவின் செயல்பாடுகளை வழிநடத்த அரசியல் தலைமை இருக்கவில்லை.

கைப்பற்றப்பட்ட சிறிது நேரத்திற்குப் பின்னர், குஸ்மான் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு, பெருவிய அரசிடம் முறையாக சரணடைந்தார். ஒளிரும் பாதை வேகமாக சரிந்தது. அதன் முக்கியத்துவமற்ற எச்சசொச்சங்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் கூட்டில் தொடர்ந்து இயங்குகின்றன.

குஸ்மானின் மரணத்தைச் சுற்றியுள்ள கம்யூனிச எதிர்ப்பு எழுச்சியுடன், பாதுகாப்புப் படைகளை புகழவதும் சேர்ந்துள்ளது. அவை பெருவிய 'ஜனநாயகத்தின்' மீட்பர்களாக, எண்ணற்ற படுகொலைகள், மரணதண்டனைகள், சித்திரவதை, கற்பழிப்பு மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பாக உள்ளன.

உண்மையில், குஸ்மான் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து நடந்தது ஜனநாயகத்தின் மலர்ச்சி அல்ல. மாறாக ஜனாதிபதி ஆல்பர்டோ புஜிமோரியால் நடத்தப்பட்ட சுய-சதி (self-coup) மூலம் சுமத்தப்பட்ட சர்வாதிகாரம், 1992 இல் பாராளுமன்றத்தை கலைத்து நீதி அமைப்பை இயங்காது செய்து, ஆணைப்படி ஆட்சி செய்யும் உரிமையை தனக்குத்தானே எடுத்துக்கொண்டார். ஆட்சியை அல்லது பாதுகாப்புப் படைகளை 'பயங்கரவாத அனுதாபிகள்' என்று விமர்சிக்கத் துணிந்த எவரையும் கடுமையாக ஒடுக்குவதோடு, அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகள் மூலம் அரசு வன்முறை தீவிரமடைந்தது.

இன்று புஜிமோரி, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகவும் மற்றும் ஊழலுக்காகவும் 25 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அதே நேரத்தில் அவரது முக்கிய கூட்டாளியான, மோசமான உளவுத்துறை தலைவர் மற்றும் சிஐஏ இன் 'கையாளுமான' விளாடிமிரோ மொன்டிசினோஸ், குஸ்மான் இறந்த அதே கடற்படை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெருவின் தொழிலாள வர்க்கம், முதலாளித்துவத்தின் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்தை அவமதிப்புடன் நிராகரிக்க வேண்டும், அதே நேரத்தில் முதலாளித்துவ தேசியவாதம், விவசாய தீவிரவாதம் மற்றும் ஸ்ராலினிசத்தின் கலவையான ஒரு போக்கான மாவோயிசத்தினால், உண்மையான பாட்டாளி வர்க்க புரட்சிக் கட்சிகளை கட்டுவதை தடுப்பதற்காக கொடுக்கப்பட்ட கசப்பான விலையின் படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இலத்தீன் அமெரிக்காவில், தொழிலாள வர்க்கத்தில் சோசலிச நனவின் வளர்ச்சிக்காக போராடுவதில் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர பங்கு மற்றும் புரட்சிகர கட்சியின் மிக முக்கியமான பணி ஆகிய இரண்டையும் நிராகரித்த பப்லோவாத திருத்தல் போக்கால் மாவோயிசம் செல்வாக்கு பெறுவது இலகுவாக்கப்பட்டது. அதற்கு பதிலாக, ஸ்ராலினிசம், முதலாளித்துவ தேசியவாதம், குட்டி முதலாளித்துவ கெரில்லாவாதம் மற்றும் மாவோயிசத்தினுள் நான்காம் அகிலத்தின் காரியாளர்களை கலைக்க பப்லோவாதிகள் முயன்றனர்.

முதலாளித்துவ கட்சிகளும் ஊடகங்களும் கம்யூனிச எதிர்ப்பை ஊக்குவிக்கவும் பாதுகாப்புப் படைகளை உயர்த்தவும் குஸ்மானின் மரணத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதில் மிகவும் ஆர்வமாக இருப்பது ஏனெனில், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் ஒருங்கிணைந்த தாக்கத்தினால் பெருந்திரளான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் நிலைமைகள் சகிக்க முடியாததாக மாறிவிட்ட நாட்டில் புரட்சிகர போராட்டங்கள் அடிவானத்தில் இருப்பதை அவர்கள் அறிந்திருப்பதால்தான். இங்குள்ள தீர்க்கமான கேள்வி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பெருவின் பிரிவாக ஒரு புதிய புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதாகும்.

Loading