இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் இனவாத நிலைப்பாட்டின் அடிப்படையில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்துக்கு கருங்காலி வேலை செய்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

இலங்கையில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் அக்டோபர் 12 ஆம் திகதி மூன்று மாதங்களை எட்டிய போதிலும், ஆசிரியர்கள் கோரிய ஊதிய உயர்வை நிராகரித்து வரும் அரசாங்கம், அதில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே இரண்டு கட்டங்களாக வழங்க முடியும் என்று வலியுறுத்தியது. மிகக் குறைந்த ஊதிய உயர்வை ஒப்புக் கொண்டு, வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிற்சங்கத் தலைவர்கள் முயற்சித்த போதிலும், ஆசிரியர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து வேலை நிறுத்தத்தை தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வேலைநிறுத்தத்தை கொடூரமாக ஒடுக்கவும், ஆசிரியர்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அரசாங்கம் தயாராகி வருகிறது. அந்த அரசியல் சவால்களை எதிர்கொள்ள எந்த வகையிலும் தயாராக இல்லாத தொழிற்சங்கங்கள், போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் விளிம்பில் உள்ளன.

இந்த தீர்க்கமான தருணத்தில், அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக ஏனைய தொழிலாளர்களின் போராட்டங்களுடன் இணைந்து, முதலாளித்துவ அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ முறைமை மீது அரசியல் எதிர்த் தாக்குதலை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை முன்கொண்டு செல்ல முடியும். இத்தகைய ஒருங்கிணைப்புக்கான தொழிலாள வர்க்கத்தின் புறநிலை நகர்வு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்படுகிறது.

அண்மைக் காலங்களில் இலங்கையில் எழுந்த ஒவ்வொரு வர்க்கப் போராட்டத்திலும், இன பாகுபாடுகளைக் கடந்து தொழிலாளர் வர்க்கம், தாங்கள் எதிர்கொள்ளும் கடினமான பொருளாதார மற்றும் வேலை நிலைமைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைந்தமை, ஒரு தனித்துவமான அம்சமாகும். அக்டோபர் 6 ஆசிரியர் போராட்ட பிரச்சாரத்தில் நாடு முழுவதும் உள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆசிரியர்கள் தமது வர்க்க ஒற்றுமையை வெளிப்படுத்தி ஆர்வத்துடன் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.

2021 அக்டோபர் 6 அன்று, நுவரெலியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் (Photo credit: Facebook/Malayagakuruvi)

வளர்ந்து வரும் வர்க்க ஒற்றுமைக்கு மத்தியில் திகைத்து நிற்கும் இராஜபக்ஷ அரசாங்கம் உட்பட முதலாளித்துவ ஆளும் வர்க்கமும், முதலாளித்துவத்தின் பாதுகாவலர்களான தொழிற்சங்க அதிகாரத்துவமும், அந்த ஐக்கியத்தை தகர்க்கும் நோக்கத்துடன் இனவாதம் மற்றும் தரப் பிரிவினைவாதத்தையும் தூண்டிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம், அதன் தமிழ் இன-தேசியவாத நிலைப்பாட்டின் அடிப்படையில், தற்போதைய ஆசிரியர்களின் போராட்டத்தில் அதன் உறுப்பினர்களை பங்கேற்க வேண்டாம் என்று உத்தரவிட்டது.

இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தின் இனவாத போக்கு

உலக சோசலிச வலைத் தள நிருபர் ஒருவர் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாரா புவனேஸ்வரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களின் பிற்போக்கு நிலைப்பாடு தொடர்பாக வினவினார். அவரது கருத்துக்கள் தொழிற்சங்கங்களின் சீரழிந்த தன்மையையும் தமிழ் தேசியவாத அரசியலின் பிற்போக்கு குணாம்சத்தையும் தெளிவாக .அம்பலப்படுத்தின.

சிங்கள-தமிழ் தொழிலாள வர்க்க ஒற்றுமைக்கு புவனேஸ்வரனின் எதிர்ப்பு எந்தளவிலானது என்பதை அவரது வார்த்தைகள் அம்பலப்படுத்தின. சிங்கள-தமிழ் ஆசிரியர்கள் “கூட்டாக” போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் கூறினார். வடக்கு மற்றும் கிழக்கில் ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் ஆசிரியர்கள் ஊதியப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் நிலையில், “எந்த தமிழ் ஆசிரியரும் பங்குபற்றவில்லை என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” என அப்பட்டமான பொய்யை கட்டவிழ்த்துவிட்டார்.

6 அக்டோபர் 2021 அன்று யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் (WSWS Media)

தமிழ் பேசும் முஸ்லிம் ஆசிரியர்களைக் கூட தனது தொழிற்சங்கத்தில் இணைத்துக்கொள்வதில்லை, என அதன் இனவாத அடிப்படையை புவனேஸ்வரன் மேலும் அம்பலப்படுத்தினார். அவர் தனது தொழிற்சங்கத்தின் அரசியல் அடிப்படை 'தமிழ் தேசியம்' என்றார். தமிழர் ஆசிரியர் சங்கம், 2020 பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிகாரப்பூர்வ ஆதரவை அறிவித்ததோடு புவனேஸ்வரனும் அந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டார்.

அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள் தமது பூகோள மூலோபாய தேவைகளுக்காக இலங்கை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கும் அழுத்தத்தில் தொங்கிக்கொண்டு, கொழும்புடனான கொடுக்கல் வாங்கல் மூலம் தங்கள் சலுகைகளை தக்கவைத்துக்கொள்வதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான தமிழ் தேசிய முதலாளித்துவக் கட்சிகளின் நோக்கமாகும். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, கொழும்பு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தந்திரமாக மட்டுமே, அவை தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சமூக ஜனநாயக பிரச்சனைகளில் பொய்யாக ஆர்வம் காட்டுகின்றன. இந்த முதலாளித்துவ தேசியவாதிகள், முதலாளித்துவ தாக்குதல்களுக்கு எதிராக சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கு குழி பறிக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர்.

ஆசிரியர் வேலைநிறுத்தத்திற்கு எதிரான அரசாங்கத்தின் பிரச்சாரத்துக்கு எண்ணெய் வார்த்தல்

தொற்றுநோயால் தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பில்லியன் கணக்கான நிவாரணப் பொதிகளை பெரு வணிகத்துக்கு வழங்கும் அரசாங்கம், நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்துகிறது. வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை கைவிட்டு, அந்த சுமையை எப்படியாவது “நாட்டுக்காக” சுமந்து செல்லுமாறு அச்சுறுத்துகிறது. முதலாளித்துவ அரசாங்கத்தின் இந்த பிற்போக்கு கொள்கையை ஊக்குவிக்கும் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர், இது “போராடுவதற்கோ ஊதிய உயர்வை கோருவதற்கோ காலம் அல்ல” என்றார்.

ஆசிரியர்களின் போராட்டத்திற்கு எதிராக அரசாங்கமும் ஊடகங்களும் முன்னெடுக்கும் ஆத்திரமூட்டும் பிரச்சாரத்துக்கு எண்ணெய் வார்க்கும் வகையில், “கற்பிக்காமல் பணம் வாங்குவது நல்லதல்ல. ... இந்த காலகட்டத்தில் பெற்றுக்கொண்ட சம்பளத்தைப் எடுத்துக்கொண்டால், அது சம்பள முரண்பாட்டுக்கு சரியாகிவிடும்,” என புவனேஸ்வரன் தெரிவித்தார்.

தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான பொது சுகாதார நடவடிக்கையாக, மூடப்படும் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு முழு ஊதியம் வழங்குவது அரசாங்கத்தின் கடமையாக இருப்பதோடு அத்தகைய ஊதியத்தைப் பெறுவது ஆசிரியர்களின் அடிப்படை உரிமையாகும். இருப்பினும், குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு இணைய அணுகலை வழங்கத் தவறியதன் மூலம், கல்வியை நாசப்படுத்தியது இராஜபக்ஷ அரசாங்கமே ஆகும், ஆசிரியர்கள் அல்ல.

சில நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் “கொரோனா வந்தவுடன் தங்கள் உறுப்பினர்களின் சம்பளத்தை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளன” என்றும் அவர் கூறினார். முதலாளித்துவ நெருக்கடிக்கு தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தை கூட தியாகம் செய்ய வேண்டும் என்ற முதலாளித்துவ ஆட்சியாளர்களின் பிரச்சாரத்தை அவர் ஊக்குவிக்கிறார். தொற்றுநோய்க்கு மத்தியில், தொழிற்சங்கங்களின் முழு ஆதரவுடன் இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள நாடுகளில் ஊதியங்கள் வெட்டப்படுகின்றன.

ஆசிரியர்களின் போராட்டமே தொற்றுநோய் பரவுவதற்கான காரணம் என்ற அரசாங்கத்தின் பொய்யான குற்றச்சாட்டையும் புவனேஸ்வரன் சுமத்தினார். அத்தியாவசியமற்ற உற்பத்திகளை மூடுவதற்கு நிபுணர்கள் பரிந்துரைத்த போதிலும், முதலாளித்துவ இலாபங்களுக்கு முன்னுரிமை அளித்து, பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களையும் திறந்த நிலையில் வைத்திருக்கும் இராஜபக்ஷ அரசின் கொள்கையே தொற்றுநோய் பரவுவதற்கு முக்கிய காரணம் ஆகும். ஆசிரியர் சங்கங்கள் உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும், தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளின் உயிர்களைப் பறித்த இந்தக் கொள்கையை ஆதரித்தன.

தெற்கிலும் வடக்கிலும் தொழிற்சங்கங்களின் ஒருமைப்பாடு

தெற்கில் உள்ள ஆசிரிய-அதிபர்கள் சங்கங்கள், அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ளவதாகவும் ஒரு “இறாத்தல் இறைச்சியையும்” கோரவில்ல என்றும் கூறி, அரசாங்கத்தின் அற்ப ஊதிய உயர்வை ஏற்றுக்கொண்டன. தொழிற்சங்க கூட்டணி சுற்றி வளைத்து செய்ததை தமிழர் ஆசிரியர் சங்கம் நேரடியாக செய்தது. இது மட்டுமே அவற்றுக்கு இடையிலான வேறுபாடு.

ஆசிரியர் சங்கங்கள் உட்பட தொழிற்சங்கங்கள் நீண்ட காலமாக, “இது போராடுவதற்கான தருணம் அல்ல” என்ற முதலாளித்துவ அரசாங்கங்களின் கூற்றுகளுடன் உடன்பட்டு வேலைநிறுத்தங்களை கைவிட்டன. இங்கு 2007-2008 ஆசிரியர் போராட்டத்தின் போது, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஆசிரியர் சங்கத் தலைவர்களை அழைத்து, “ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கத்திடம் பணம் இல்லை. வடக்கு கிழக்கில் இருந்து படைகளை திரும்பப் பெறுமாறு எங்களிடம் கோருகிறீர்களா? என வினவினார். அரசாங்கம் வீழ்ச்சியடைவதைக் காண விரும்பாத இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஊதியப் போராட்டத்தைக் கைவிட்டு இனவாதப் போருக்கும் சமூகத் தாக்குதலுக்கும் தனது ஆதரவைத் தெரிவித்தார். கலந்துரையாடலில் பங்கேற்ற மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், ஜே,வி,பி.யுடன் சேர்ந்து நேரடியாக யுத்த த்துக்காகப் பிரச்சாரம் செய்தது.

இந்த போராட்டங்களின் போது, வடக்கு மற்றும் கிழக்கில் யுத்த வலயங்களில் உள்ள ஆசிரியர்கள், நாடளாவிய ரீதியிலான ஆசிரியர் வேலைநிறுத்தங்களில் பங்கேற்பதை தமிழர் ஆசிரியர் சங்கம் தடுத்தது. சங்கத்தின் முன்னாள் தலைவர் டி. மகாசிவம் 'ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்காதபடி' வேலைநிறுத்த இயக்கத்தில் இணைவதில்லை எனக் கூறினார்.

தமிழர் ஆசிரியர் சங்கத்தின் செயற்பாடுகள், கொழும்பு முதலாளித்துவத்தின் இனவாத ஆத்திரமூட்டல்களுடன் நேருக்கு நேர் பொருந்துகிறது. அரசாங்கத்தின் ஊதுகுழலான தினமின பத்திரிகை, வடக்கு ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்குபற்றவில்லை என்ற பொய்யை கூறி இனவாதத்தை தூண்டிவிடும் நோக்கில், 'வணக்கம் யாழ்ப்பாண ஆசிரியர்களே” என்ற தலைப்பில் பிரசுரித்த ஆசிரியர் கருத்துரையில், “ஆசிரியர் வேலை நிறுத்தத்தினால் எதிர்வரும் சில வருடங்களில் தெற்கின் கல்வியில் வீழ்ச்சி ஏற்ப்படும். யாழ்ப்பாண பிள்ளைகள் மட்டும் அதற்கு அகப்படமாட்டார்கள்,” என கூறுகின்றது.

கொழும்பு அரசாங்கத்தின் இனவாதப் போர் மற்றும் சமூக தாக்குதலைத் தடுப்பதற்காக, தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு வேண்டுமென்றே இடையூறு செய்த இந்த தொழிற்சங்கங்கள், யுத்தத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கும் தற்போதைய சமூக பேரழிவுகளுக்கும் பொறுப்புக் கூறவேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் புறநிலை போக்கு

கொத்தலாவல பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதால்தான், ஆசிரியர்களின் போராட்டம் இந்த முறை தொடங்கியதாக குற்றம் சாட்டிய புவனேஸ்வரன், இதில் ஆசிரியர்களின் உண்மையான அபிலாசைகள் கிடையாது எனக் காட்டமுனைந்தார். இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் விளக்கப்பட்டது போல், பல தசாப்தங்களாக தமது ஊதிய கோரிக்கை வழங்கப்படாமையாலும் அதிக வேலையினால் களைப்படைந்த ஆசிரியர்களின் மன அழுத்தம் மற்றும் கோபத்தினாலுமே இந்த போராட்டம் வெடித்தது. புவனேஸ்வரனின் குதர்க்கத்துக்கு மாறாக, இந்த ஆசிரியர் போராட்டமானது ஆழ்ந்த வாழ்க்கைத் தேவைகளால் இயக்கப்படுகிறது.

தமது தொழிற்சங்கத்தின் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், தலைமையிலிருந்து தான் 'ராஜினாமா செய்வதாக அச்சுறுத்தியதாக' புவனேஸ்வரன் கூறினார். அந்த ஆசிரியர்கள் தமது வர்க்க தோழர்களுடன் போராட்டத்தில் ஒன்றிணைவதற்கு தயாராக இருந்ததாலேயே அவர் இத்தகைய அச்சுறுத்தல்களை செய்ய வேண்டியிருந்தது என்பது தெளிவாகிறது.

சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் புறநிலை திசையமைவு உலகளாவிய தொற்றினால் மேலும் அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ள தமது நிலைமைகளுக்கு மத்தியில், முதலாளித்துவ முறைமைக்கு எதிரான ஒரு சமூகப் போராட்டத்தை நோக்கியதாக உள்ளது. தொற்றுநோய்க்கு மத்தியில் பாடசாலைகளை திறப்பதற்கு எதிராக அக்டோபர் 1 அன்று பாடசாலைகளை பகிஷ்கரிக்குமாறு ஒரு பிரித்தானிய தாய் விடுத்த அழைப்புக்கு, சர்வதேச ஆதரவு கிடைத்திருப்பது இந்த போக்குக்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாகும்.

தொழிற்சங்க கூட்டமைப்பானது ஆசிரியர்கள் உட்பட உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான சமூக பிரச்சனைகளை அணுகாமல், ஆசிரியர்கள் போராட்டத்தை 'ஊதிய முரண்பாட்டை தீர்ப்பது' என்ற முழக்கத்திற்கு மட்டுப்படுத்தியது. இத்தகைய பரந்த அணுகுமுறையானது அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்துடன் ஆசிரியர்களின் போராட்டத்தையும் ஒன்றிணைப்பதை தடுக்கும் நோக்கிலேயே தொழிற்சங்கங்கள் அவ்வாறு செய்யவில்லை.

தொழிற்சங்கத் தலைமைத்துவம், வேலைநிறுத்தத்தின் தொடக்கத்தில் ஊதியக் கோரிக்கைக்கு மேலதிகமாக “தேசிய வருமானத்தில் 6 சதவிகிதத்தை கல்விக்கு ஒதுக்குதல்” மற்றும் “புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்தை உத்தரவாதம் செய்தல்” போன்ற கோரிக்கைகளை முன்வைத்தன. இத்தகைய கோரிக்கைகள் அவ்வாறான ஒன்றிணைந்த போராட்டத்துக்கு வழிவகுக்கும் என்பதால், அவற்றை கைவிட்டுவிட்டன.

வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்களை, முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் முதலாளித்துவ முறைமைக்கு எதிராக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் இயக்கமாக ஒன்றிணைத்து இயக்காமல் ஆசிரியர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது. தொழிற்சங்கங்கள், வடக்கிலோ தெற்கிலோ அல்லது உலகின் எந்த இடத்திலோ அத்தகைய போராட்டத்திற்கு முற்றிலும் எதிரானவையாக இருக்கின்றன.

ஆசிரியர்கள் உட்பட சகல தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களில் இருந்து விலகி, இந்த போராட்டத்தை தமது கையில் எடுக்க கூடிய, ஜனநாயக அமைப்பின் வடிவமாக, உடனடியாக தங்கள் வேலைத்தளங்களிலும் அவற்றை அண்மித்த பகுதிகளிலும் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப முன்வர வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) வழிகாட்டுதலின் கீழ் அமைக்கப்பட்ட ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்பு குழு, இதை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளது.

அவ்வாறான நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை உருவாக்க, சோசலிச சமத்துவக் கட்சியும், அதன் உலக இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் போராடுகின்றன. அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, உலக சோசலிச வலைத் தளம் மற்றும் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியும், கோவிட்-19 தொற்றுநோயை முற்றாக ஒழிக்க வேண்டிய அவசியத்தை கலந்துரையாடுவதற்காக, பிரபல விஞ்ஞானிகள் மற்றும் தொற்றுநோயியல் வல்லுநர்கள் அடங்கிய குழுவின் பங்கேற்புடன், அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமை இணையவழி கலந்துரையாடல் ஒன்றை நடத்துகிறது. ஆசிரியர்கள் அனைவரையும், ஏனைய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களையும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading