முன்னோடி ஆபிரிக்க-அமெரிக்க நடிகர் சிட்னி புவத்தியேர் 94 வயதில் காலமானார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அற்புதமான நடிகரும் முதல் ஆபிரிக்க அமெரிக்க திரைப்பட நட்சத்திரமுமான சிட்னி புவத்தியேர் ஜனவரி 6 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் 94 வயதில் காலமானார்.

அமெரிக்கத் திரைப்படங்களில் கறுப்பின மக்கள் சித்தரிக்கப்பட்ட விதத்தை மாற்றியமைத்ததில் புவத்தியேர் முக்கிய பங்கு வகித்தார். 1950கள் மற்றும் 1960 களில் முக்கிய ஹாலிவுட் தயாரிப்புகளில் அவர் முன்னணிப் பாத்திரங்களில் முன்னோடியாக இருந்தார். மேலும் அவரது கதாபாத்திரங்கள் கண்ணியம், தீவிரம் மற்றும் உறுதியை வெளிப்படுத்தின. அதே நேரத்தில் திரைப்படத் துறையில் ஆபிரிக்க-அமெரிக்க கலைஞர்களை ஒரே மாதிரியான வேலையாட்கள் மற்றும் பொழுதுபோக்காளர்களாக சித்தரித்துக்காட்டுவதை அவர் முற்றாக முடிவிற்கு கொண்டுவந்தார்.

1988 இன் நேர்காணலின் போது, நியூஸ்வீக் இதழுக்கு புவத்தியேர் கூறியது போல், “கறுப்பு நிறத்தில் காலணிகளை மெருகூட்டும் பையன்கள் மட்டுமே அங்கு இருந்தபோது நான் படங்களில் நடித்தேன். நான் நகரத்தில் ஒரு தனி மனிதனாக இருந்தேன்”.

1964 ஆம் ஆண்டு Lilies of the Field படத்திற்காக (Ralph Nelson) சிறந்த நடிகருக்கான அகாடமி விருதை புவத்தியேர் வென்றார். அதில் அவர் அரிசோனா பாலைவனத்தில் ஜேர்மன், ஆஸ்திரிய மற்றும் ஹங்கேரிய கன்னியாஸ்திரிகளின் குழுவை சந்திக்கும் ஒரு பயணத் தொழிலாளியாக நடித்தார். அவர் ஒரு புதிய தேவாலயத்தை உருவாக்க கடவுளால் அனுப்பப்பட்டவர் என அவர்கள் நம்பினார்கள்.

ஆஸ்கார் விருதை வெல்வதற்கு முன்பு, Stanley Kramer இன் The Defiant Ones (1958) படத்தில் Tony Curtis உடன் இணைந்து நடித்ததற்காக புவத்தியேர் சிறந்த நடிகருக்காக பரிந்துரைக்கப்பட்டார். புவத்தியேர் மற்றும் மேர்டிஸ் ஆகியோர் தப்பியோடிய குற்றவாளிகளாக நடிக்கின்றார்கள். அதில் ஒரு கறுப்பு மற்றும் ஒரு வெள்ளையினத்தவர்களான இருவரும் ஒன்றாகக் கட்டப்பட்டு உயிர்தப்பி ஓட ஒத்துழைக்க வேண்டியிருந்தது.

Sidney Poitier and Tony Curtis in The Defiant Ones (1958)

சிகாகோவில் உள்ள ஒரு ஆபிரிக்க-அமெரிக்க தொழிலாள வர்க்க குடும்பத்தைப் பற்றிய Lorraine Hansberry இன் நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட Daniel Petrie இன் A Raisin in the Sun (1961) படத்திற்காகவும் புவத்தியேர் நன்கு அறியப்படுகிறார். A Patch of Blue (Guy Green, 1965) ஒரு படித்த கறுப்பின மனிதனுக்கும் படிப்பறிவற்ற, பார்வையற்ற வெள்ளைப் பெண்ணுக்கும் இடையேயான நட்பு பற்றியும், Norman Jewison இன் In the Heat of the Night இல் (1967), சிறிய நகரமான மிசிசிப்பியில் நடந்த ஒரு கொலையை விசாரிக்கும் பிலடெல்பியா துப்பறியும் நபராக புவத்தியேர் நடிக்கிறார்.

Kramer இன் கலப்பு திருமணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் படங்களில் ஒன்றான Guess Who’s Coming to Dinner (1967) இலும், Raoul Walsh இனால் இயக்கப்பட்ட Band of Angels இல் (1957) உள்நாட்டுப் போருக்கு முன்னும் பின்னும் தெற்கில் அமைக்கப்பட்ட சுவாரசியமான படத்திலும் நடித்துள்ளார்.

புவத்தியேர் இன் தொழில் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில், பொருத்தமான பாத்திரங்களைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தபோது, கறுப்பின மனிதர்களை 'நாகரீகமான, கல்வியறிவுடனான மற்றும் திறமைகொண்டவர்களாக' சித்தரிக்கும் சிக்கலான கதாபாத்திரங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று நடிகர் வலியுறுத்தினார்.

ஹாலிவுட்டில் புவத்தியேரின் எழுச்சி, குடியுரிமைகள் இயக்கம் மற்றும் தெற்கு அமெரிக்காவில் ஜிம் க்ரோ பிரிவினைக்கு எதிரான போராட்டத்தால் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களுடன் இணைந்து செல்கிறது. அமெரிக்க வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் கலாச்சார மாற்றங்களைக் கொண்டு வந்த வெகுஜன இயக்கத்தின் போது அவரது மிகவும் வெற்றிகரமான சில படங்கள் எடுக்கப்பட்டன.

Diana Sands, Ruby Dee and Sidney Poitier in A Raisin in the Sun (1961)

Harry Belafonte, Lena Horne, Sammy Davis Jr., Marlon Brando, Paul Newman போன்ற ஹாலிவுட் பிரமுகர்களுடன் சேர்ந்து, 1963 இல் வாஷிங்டனில் வேலைகள் மற்றும் சுதந்திரத்திற்கான ஆர்ப்பாட்டத்தில் புவத்தியேர் பங்கேற்றார். அதில் மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் தனது “எனக்கு ஒரு கனவு இருக்கின்றது' என்ற தனது உரையை நிகழ்த்தினார். ஜூன் 1964 இல் குடிமை உரிமைப் செயற்பாட்டாளர்களான குட்மன், சானி மற்றும் ஷ்வெர்னர் (Goodman, Chaney, Schwerner) ஆகியோரின் கொலையைத் தொடர்ந்து புவத்தியேர், மிசிசிப்பியின் நெஷோபா கவுண்டிக்கும் பயணம் செய்தார்.

புவத்தியேர் பிப்ரவரி 27, 1927 அன்று புளோரிடாவின் மியாமியில் பஹாமாஸில் இருந்து குடிபெயர்ந்திருந்த ஒரு குடும்பத்தில் ஏழாவது குழந்தையாகப் பிறந்தார். தக்காளி விற்பதற்காகவும், விளைவிப்பதற்காகவும் அவரது பெற்றோர் அமெரிக்கா சென்றிருந்தபோது அவர் குறைப்பிரசவத்தில் பிறந்தார். அவர் கட் தீவிலும் பின்னர் பஹாமாஸில் நாசாவிலும் வறுமையுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் அவரது அமெரிக்க குடியுரிமை காரணமாக, 15 வயதில் தனது சகோதரருடன் வாழ மியாமிக்கு செல்ல முடிந்தது.

அடுத்த ஆண்டு, சிட்னி நியூ யோர்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தார். அவர் நகரின் உணவகத் துறையில் பாத்திரங்களை கழுவி வேலை செய்யும் போது எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க இராணுவத்தில் ஒரு வருடம் கழித்த அவர், மனநோயாளி போல் ஏமாற்றி நடித்து வெளியேறினார்.

புவத்தியேர் தனது நடிப்பு வாழ்க்கையை 1945 இல் ஹார்லெமில் உள்ள அமெரிக்கன் நீக்ரோ நாடகங்களில் நடித்தபோது தொடங்கினார். அவர் பாட முடியாததால் நாடகங்களில் போராடினார் (அவர் காது கேளாதவர்) மேலும் அவர் தனது பஹாமியன் உச்சரிப்பிலிருந்து விடுபட ஒரு வருடம் போராட வேண்டியிருந்தது. பிராட்வே தயாரிப்பில் மரபுவழி கிரேக்க நகைச்சுவையான Lysistrata வில்அவர் முன்னணிப் பாத்திரத்தில் நடித்தபோது அவர் பிரபல்யமடைய தொடங்கினார். பிராட்வேயுடன் அவர் இணைந்து செயற்பட்டமை ஹாலிவுட்டில் 20th Century-Fox உடன் தொடர்பு கொள்ள வழிவகுத்தது.

Sidney Poitier and Elizabeth Hartman in A Patch of Blue (1965)

புவத்தியேர் ஒரு நிர்மலமான, சிறந்த கறுப்பின மனிதராக நடித்ததற்காக சில சமயங்களில் விமர்சிக்கப்பட்டார் மற்றும் அவரது ஹாலிவுட் பாத்திரங்களுக்காக 'Uncle Tom' என்று பெயரிட்டார். Black நாடக ஆசிரியர் கிளிஃபோர்ட் மேசன், 1967 ஆம் ஆண்டு நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையில், “வெள்ளை அமெரிக்கா சிட்னி புவத்தியேரை ஏன் விரும்புகிறது?”, இந்த நடிகர் நடித்த படங்கள் “வரலாற்று உண்மையிலிருந்து ஒரு திட்டமிட்ட தப்பியோடல்” என்றும் புவத்தியேர் இந்த உலகம் ஏன் தவறானதாக இருக்கின்றது என்பது பற்றி வெள்ளை மனிதனின் உணர்வின் விளையாட்டு பொருளானார் என்று விவாதித்தார்.

திரைப்படத் துறையின் பனிப்போர் தாராளவாதம் அதன் கடுமையான தோல்விகளைக் கொண்டிருந்தது. ஆனால் மேசனின் வகைப்பட்ட தாக்குதல் ஒரு வலதுசாரி விமர்சனமாக இருந்தது. அவரது கருத்துக்கள் இனவாத அடையாள அரசியலின் இன்றைய ஆதரவாளர்களிடையே அனுதாபத்தைக் காணலாம். புவத்தியேர் பணிபுரிந்த தொழில்துறையின் வரம்புகள் இருந்தபோதிலும், அவர் சித்தரித்த பல பாத்திரங்கள் இனப்பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தின் போக்கில் தப்பெண்ணத்தை கடக்க மனிதர்களின் திறனைப் பற்றிய செய்திகளைத் தெரிவித்தன. கணிசமான அளவிற்கு, புவத்தியேரின் வலிமையான ஆளுமை மற்றும் புத்திசாலித்தனம் அவர் நடித்த பாத்திரங்களின் பல பலவீனங்களை தாண்டியது.

Sidney Poitier and Rod Steiger in In the Heat of the Night(1967)

அவர் கூடி பணிபுரிந்த இயக்குனர்களில் பின்வருவோர் அடங்குகின்றனர். Joseph L. Mankiewicz (No Way Out, 1950), Zoltan Korda (Cry the Beloved Country, 1951), Richard Brooks (The Blackboard Jungle, 1955, and Something of Value, 1957), William Wellman (Good-bye, My Lady, 1956), Martin Ritt (Edge of the City, 1957, and Paris Blues, 1961), Otto Preminger (Porgy and Bess, 1959), Hubert Cornfield (Pressure Point, 1962), Sydney Pollack (The Slender Thread, 1965) and Gordon Douglas (They Call Me Mister Tibbs!, 1970). 1972 க்கும் 1990 இடையில் புவத்தியேர் 8 ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார்.

Loading