பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலுக்கான கோலிச வேட்பாளர் அதி-வலதுசாரிகளின் "பெரிய மாற்றீடு" சதி தத்துவத்தை அங்கீகரிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஏப்ரல் 2022 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் கோலிச குடியரசுக் கட்சியின் (Les Républicains, LR) ஜனாதிபதி வேட்பாளரான வலேரி பெக்ரெஸ் (Valerie Pécresse), வன்முறையான நவ-பாசிச சதி தத்துவங்களைத் தூண்டி, தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய பின்னர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Valérie Pécresse in 2019 (Wikimedia Commons)

பிப்ரவரி 13 அன்று ஸெனித் ஸ்டேடியத்தில், தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர்: “பத்து ஆண்டுகளில், நாம் இன்னும் உலகின் ஏழாவது சக்தியாக இருப்போமா? நாம் இன்னும் ஒரு இறையாண்மை தேசமாகவோ அல்லது அமெரிக்காவின் துணை நாடாகவோ, சீனாவின் சிப்பாய்களாகவோ இருப்போமா? நாம் ஒன்றுபட்ட தேசமாக இருப்போமா, அல்லது பிரிந்து செல்வோமா? இந்த முக்கியமான கேள்விகளை எதிர்கொள்ளும்போது, குருட்டுத்தனமான விதிக்கு நாம் நம்மை விட்டுக்கொடுக்க மாட்டோம். ஒரு பெரிய மாற்றீட்டுக்காவோ அல்லது எங்கள் தரத்தை இழக்கவோ அல்ல. நான் உங்களை அவசர நடவடிக்கைக்கு அழைக்கிறேன்” எனக் கூறினார்.

பெக்ரெஸின் கருத்துக்கள் மீது பெருகிவரும் சர்ச்சைகளுக்கு மத்தியில், பெரிய மாற்றீடு பற்றிய தனது குறிப்பு நம்பமுடியாதளவுக்கு தவறாகக் கருதப்பட்டதாகக் கூறினார். இருப்பினும், அவரது உரையின் மற்ற பகுதிகளும் நாஜிசத்துடன் ஒத்துழைக்கும் மரபுகளுக்கு தெளிவான முறையீடுகளைக் கொண்டிருந்தன. அவர் கூறினார்: 'எனக்கு இதயத்திலிருந்து பிரெஞ்சு மக்கள் வேண்டும், காகிதத்தில் பிரெஞ்சு மக்கள் மட்டுமல்ல'. பெக்ரெஸ், பிரான்சின் பல மில்லியன் முஸ்லிம் சிறுபான்மையினரையும் இலக்காகக் கொண்டு, 'மரியான் [பிரான்ஸின் உருவகம்] ஒரு முக்காடு போட்ட பெண் அல்ல' என ஆத்திரமூட்டும் வகையில் அறிவித்தார்.

இவை இனவாத அரசியலுக்கான தெளிவான அழைப்புகள் ஆகும். 'பெரிய மாற்றீடு' தத்துவம் ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் தீவிர வலதுசாரிகளால் ஆதரிக்கப்படுகிறது. ஆபிரிக்க, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து குடியேற்றம் காரணமாக பெரும்பான்மையான வெள்ளைநிற மக்கள் 'இனப்படுகொலைக்கு' பலியாகின்றனர் என்று அது பொய்யாக வலியுறுத்துகிறது.

நியூசிலாந்தில் 2019 இல் கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாதத் தாக்குதலில் 49 முஸ்லிம்களைக் கொலை செய்வதற்கு முன், வெள்ளை மேலாதிக்கவாதியான பிரெண்டன் டாரன்ட் (Brendon Tarrant) ஒரு வெள்ளை மேலாதிக்க அறிக்கையை வெளியிட்டார், அதற்கு அவர் 'பெரிய மாற்றீடு' என்று தலைப்பிட்டார்.

'பெரிய மாற்றீடு' என்ற வார்த்தையின் தோற்றம் பிரெஞ்சு எழுத்தாளர் ரெனோ காமு (Renaud Camus) ஆல் கூறப்பட்டது. 2011 மற்றும் 2022 இல் இன வெறுப்பைத் தூண்டியதற்காகவும், 2018 இல் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டியதற்காகவும் தண்டிக்கப்பட்ட தீவிர வலதுசாரி ஜனாதிபதி வேட்பாளரான எரிக் செமூரின் ஆதரவாளராக காமு இப்போது உள்ளார். காமுஸின் தத்துவம் 'பதிலீட்டு உயரடுக்குகள்' என்று வலியுறுத்துகிறது. அவர்கள் பெரும்பாலும் யூதர்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள், வெள்ளை மக்களை ஆபிரிக்க மற்றும் அரேபிய குடியேறியவர்களைக் கொண்டு மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இந்த செயல்முறையை காமு 'இனப்படுகொலை பதிலீடு' என அழைக்கிறார்.

'காகித பிரெஞ்சு மக்கள்' மீதான பெக்ரெஸ்ஸின் தாக்குதல்கள், அவரது பிரச்சார சொல்லாட்சியை இனவெறி அரசியலுக்கான பாசிச அழைப்புகளின் மரபுகளில் சந்தேகத்திற்கு இடமின்றி வைக்கின்றன. 1894 இல் யூத அதிகாரி கேப்டன் ஆல்ஃபிரட் ட்ரேஃபூஸின் தவறான தண்டனையை ஆதரித்தவர்கள் முதல் இரண்டாம் உலகப் போரில் நாஜி-ஒத்துழைப்பு விச்சி பிரெஞ்சு ஆட்சியின் பாதுகாவலர்கள் வரை, யூத-விரோதிகளால் பயன்படுத்துவதில் இந்த வார்த்தை எப்போதும் தொடர்புடையது.

1894 இல், தீவிர வலதுசாரி எழுத்தாளர் சார்ல் மோராஸ் (Charles Maurras), 1944 இல் விச்சி பிரெஞ்சு சர்வாதிகாரி பிலிப் பெத்தனை ஆதரித்ததற்காக தேசத்துரோகக் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார், பிரெஞ்சு குடியுரிமை ஆவணங்களை 'ஒவ்வொரு காட்டுமிராண்டிக்கும் இரை' என்று கண்டித்தார்.

முதலாம் உலகப் போரை ஆதரிப்பதற்காக மோராசிய தீவிர வலதுசாரி தேசியவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளுக்கு இடையிலான இழிந்த புனிதக் கூட்டுக்குப் பின்னர் 'காகித பிரெஞ்சுக்காரர்கள்' என்ற வார்த்தை பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. ரஷ்யாவில் அக்டோபர் 1917 பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பின்னர் மற்றும் நேச நாடுகளின் வெற்றிக்குப் பின்னர் அல்சாஸை பிரெஞ்சு கைப்பற்றியதற்கு மத்தியில் ஜேர்மனியில், இந்த வார்த்தை பிரெஞ்சு தேசியவாதத்தைத் தூண்டி தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தும் முயற்சிகளுடன் தொடர்புடையது. 1922 ஆம் ஆண்டில், தேசியவாத செய்தித்தாள் லு ஜேர்னல் இயற்கையான அல்சாஷியர்களை 'ஜேர்மனியராக இதயம் கொண்ட” 'காகித பிரெஞ்சுக்காரர்கள்' என்று கண்டனம் செய்தது.

தேசிய பேரணி (RN) வேட்பாளர் மரின் லு பென்னின் தந்தையும் நவீன பிரெஞ்சு தீவிர வலதுசாரி இயக்கத்தின் நிறுவனருமான ஜோன் மரி லு பென் அடிக்கடி, 'உண்மையான பிரெஞ்சு மக்களை' 'வசதிக்கான குடியுரிமை' பெற்றவர்களுக்கு எதிராக நிறுத்தியுள்ளார்.

பெக்ரெஸ் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிற்போக்குத்தனமான சேவகி என்பது பிரான்சில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்காது. டிசம்பரில் கோலிச ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதற்கு முன்பு, அவர் 2007 மற்றும் 2009 க்கு இடையில் கல்வி அமைச்சராக இருந்தபோது, பல்கலைக்கழகங்களில் ஆழமான மானிய வெட்டுக்களுடன் அவர் தூண்டிய வெகுஜன மாணவர் போராட்டங்கள் மற்றும் ஊழியர்களின் வேலைநிறுத்தங்களால் முக்கியமாக அறியப்பட்டார். அவரது தேர்தல் வேலைத்திட்டம், வேலையின்மை காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் குறைந்தது 200,000 பொதுத்துறை வேலைகளை குறைப்பதன் மூலம் பொதுச் செலவினங்களை 45 பில்லியன் யூரோக்கள் குறைக்க அழைப்பு விடுக்கிறது.

தொற்றுநோய் பிரான்சில் ஒவ்வொரு நாளும் 200 க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றாலும், மற்ற முன்னணி வேட்பாளர்களைப் போலவே பெக்ரெஸ்ஸும் தனது பிரச்சாரத்தின் போது அதைப் பற்றி குறிப்பிடவில்லை. தொற்றுநோயால் இறந்த மில்லியன் கணக்கானவர்களைப் புறக்கணிப்பதை, ஒரு ஆக்கிரமிப்பு வெளியுறவுக் கொள்கைக்கான அழைப்புகளுடன் அவர் இணைக்கிறார். பிரான்ஸ்-கலாச்சாரம் உடனான ஒரு நேர்காணலில் தனது வெளியுறவுக் கொள்கையைப் பற்றி விவாதித்த அவர், மாலியில் இருந்து பிரான்சின் சமீபத்திய விலகல் மற்றும் ரஷ்யாவின் பங்கு போன்ற 'பின்னடைவுகளை' விமர்சித்து, 'உலகில் பிரான்சுக்கு அதன் செல்வாக்கைத் திரும்பக் கொடுப்பதாக' உறுதியளித்தார்.

ஆயினும்கூட, பெக்ரெஸின் 'பெரிய மாற்றீடு' மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு தீவிர வலதுசாரி தேசியவாதத்தின் மரபுகள் பற்றி கூச்சமில்லாமல் குறிப்பிடுவது முற்றிலும் தனிப்பட்ட முடிவு அல்ல, மாறாக ஐரோப்பிய முதலாளித்துவத்தின் வலதுசாரி இயக்கத்தில் ஒரு புதிய திருப்பத்தைக் குறிக்கிறது. உண்மையில், ஊடகங்கள் இதை பரவலாக ஒப்புக் கொண்டுள்ளன; முன்னாள் மாவோவாத நாளிதழான லிபரேஷன் எழுதியது, பெக்ரெஸ்ஸின் உரைக்குப் பின்னர், லு பென் மற்றும் செமூருக்குப் பிறகு பிரான்சில் இப்போது 'மூன்றாவது தீவிர வலதுசாரி வேட்பாளர்' இருக்கிறார்.

பிரான்சின் பாரம்பரிய வலதுசாரிக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் பாசிச முழக்கங்கள் தோன்றுவது, கோவிட்-19 தொற்றுநோய்க்கு விடையிறுக்கும் வகையில் முழு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் தீவிர வலதுசாரிகளின் வெடிக்கும் இயக்கத்தின் ஒரு பகுதியாகும். கடந்த மே மாதம், ஆயிரக்கணக்கான சுறுசுறுப்பான இராணுவத்தினர் மற்றும் 23 ஓய்வுபெற்ற பிரெஞ்சு ஜெனரல்கள் கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு விரோதமான தீவிர வலதுசாரி இதழான Valeurs Actuelles இல் வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டனர். அக் கடிதத்தில், அவர்கள் தீவிர வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் அதைத் தொடர்ந்து 'ஆயிரக்கணக்கில்' இறப்புகளுக்கு வழிவகுக்கும் உள்நாட்டுப் போருக்கான தங்கள் திட்டங்களை வகுத்திருந்னர்.

ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ சக்திகளின் போர் விரிவாக்கம், தீவிர வலது பக்கம் திரும்புவதுடன் அதனுடன் கைகோர்த்து செல்கிறது. ஜேர்மன் ஆளும் வர்க்கம் அதன் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை மூன்று மடங்காக உயர்த்தவும், இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்றியம் நாஜி ஜேர்மனியைத் தோற்கடித்த பின்னர் அது ஏற்றுக்கொண்ட இராணுவக் கட்டுப்பாட்டு கொள்கையை பகிரங்கமாக நிராகரிக்கவும் முடிவு செய்துள்ள நிலையில், பிரெஞ்சு முதலாளித்துவம் அதன் பங்கிற்கு, அரசியல் இனவெறியை நோக்கி தனது திருப்பத்தை தீவிரப்படுத்துகிறது.

இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), குறிப்பாக 2002 பிரெஞ்சு தேர்தல் நெருக்கடியின் போது முன்வைத்த நிலைப்பாட்டின் நீடித்த முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அந்த நேரத்தில், சமூக ஜனநாயகவாதிகளின் மதிப்பிழப்பானது, கோலிச பதவியில் இருந்த ஜாக் சிராக்கிற்கும் நவ-பாசிச ஜோன் மரி லு பென்னுக்கும் இடையே ஜனாதிபதித் தேர்தலுக்கு வழிவகுத்தது. புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம் (LCR) போன்ற குட்டி முதலாளித்துவ குழுக்கள், நவ-பாசிசத்தின் எழுச்சியை தடுப்பதற்காக சிராக்கிற்கு வாக்களிக்க அழைப்பு விடுத்தபோது, அனைத்துலகக் குழு இரு வேட்பாளர்களையும் எதிர்த்தது.

இரண்டு வேட்பாளர்களில் யார் வெற்றி பெற்றாலும் அதை எதிர்க்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி, ஒரு தீவிரமான புறக்கணிப்பு பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுத்து, அனைத்துலகக் குழு, போருக்கும் சர்வாதிகார ஆட்சிகளுக்கும் எதிரான போராட்டம் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலில் தங்கியுள்ளது என வலியுறுத்தியது.

கோலிசத்தின் திவால்நிலை பற்றிய அனைத்துலகக் குழுவின் இன் எச்சரிக்கைகள், அடுத்தடுத்த நிகழ்வுகளால் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 2019 இல் சிராக் இறந்த பின்னர் வெளியிடப்பட்ட ஒரு இரங்கலில், WSWS எழுதியது:

சிராக்கின் இரண்டாம் பதவிக்காலத்தில் அவரின் நடவடிக்கைகள், சிராக்கிற்கான வாக்குகள் நவபாசிசவாதம் மற்றும் போர் அதிகரிப்பதைத் தடுப்பதற்குச் சிறந்த வழி என்று வாதிட்ட குட்டி-முதலாளித்துவ போலி-இடது கட்சிகளுக்கு ICFI இன் எதிர்ப்பை ஊர்ஜிதப்படுத்தியது. … பாசிசவாத மற்றும் இராணுவவாத கொள்கைகளை நோக்கி தீவிரமாக திரும்பியதே, அவரின் இரண்டாவது பதவிக்காலத்தில் எழுந்த வர்க்கப் போராட்டத்திற்கு சிராக்கின் விடையிறுப்பாக இருந்தது. ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தை எதிர்கொண்ட அவர், தொழிலாளர்களை பிளவுபடுத்த முஸ்லீம்-விரோத இனவெறிக்கு அழைப்பு விடுத்து, 2004-ல் அரசுப் பள்ளிகளில் முஸ்லிம்கள் முக்காடு போடுவதை தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்றினார். அடிப்படை ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்திய மூன்று மாதகால அவசரகால நிலையை திணித்ததே, 2005 கலகங்களுக்கான அவரின் விடையிறுப்பாக இருந்தது.

'ஐரோப்பிய முதலாளித்துவத்தின் உலகளாவிய உந்துதலின் ஒரு பகுதியாக, பாசிச கொள்கைகளை சட்டப்பூர்வமாக்குவதற்கு முஸ்லீம்-எதிர்ப்பு உணர்வுக்கான அழைப்புகளை இயல்பாக்குவது, FN ஐ [இப்போது மரின் லு பென்னின் தேசிய பேரணியை] பிரதான முதலாளித்துவ அரசியலில் ஒருங்கிணைக்க ஆளும் உயரடுக்கிற்கு வழி வகுத்தது' என்று இரங்கல் குறிப்பிட்டது.

ரெனோ, காமு, செமூர் மற்றும் தரோன்ட் ஆகியோரின் எழுத்துக்களுக்கு பெக்ரெஸின் ஒப்புதல் இன்று மேலும் ஒரு அரசியல் எச்சரிக்கையாக அமைகிறது. முதலாளித்துவம் பாரியளவில் கோவிட்-19 தொற்றுகள் பரவுவதல் மற்றும் அணுவாயுத போர் ஆபத்துக்கொண்ட, ரஷ்யாவிற்கு எதிராக வேகமாக அதிகரித்து வரும் போர் உந்துதலுக்கான கொள்கைகளை பின்பற்றுவதால், தீவிர வலதுசாரி சர்வாதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பானது முதலாளித்துவக் கட்சிகளுக்கு ஆதரவின் வடிவத்தை எடுக்க முடியாது. போர் மற்றும் நவ-பாசிசத்தின் ஆபத்துக்கு எதிராக, ஏகாதிபத்திய போருக்கு எதிராகவும் சோசலிசத்திற்காகவும் போராடும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச இயக்கத்தை கட்டமைப்பதுதான் தீர்க்கமான கேள்வியாக உள்ளது.

Loading