மே தின பேரணிகள் மீதான பிரெஞ்சு பொலிஸ் அடக்குமுறை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஞாயிற்றுக்கிழமை, பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் இறுதிச் சுற்றில் இமானுவல் மக்ரோன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்னர், நாடு முழுவதும் மேதின அணிவகுப்புகள் நடந்தன. 2017 ஆம் ஆண்டைப் போலவே, தேர்தலில் நவ-பாசிச வேட்பாளர் மரின் லு பென்னை தவிர்ப்பதற்காகவே வேறுவழியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவரான ‘பணக்காரர்களின் ஜனாதிபதி,’ மக்ரோன், எதிர்ப்பாளர்களை அச்சுறுத்தவும் வன்முறையாகத் தாக்கவும் கலகத் தடுப்பு பொலிஸின் பெரும் பிரிவுகளை அனுப்பினார்.

ஒரு ‘புதிய முறைக்கு’ திரும்புவதாகவும், மக்களுக்கு செவிசாய்க்க தொடங்குவதாகவும் அளிக்கப்பட்ட மக்ரோனின் தேர்தல் இரவு வாக்குறுதிகள் ஒரு முழுமையான மோசடி என்பதற்கு இது ஒரு தெளிவான சமிக்ஞையாகும். ரஷ்யாவை குறிவைக்கும் பொறுப்பற்ற நேட்டோ இராணுவ விரிவாக்கத்தின் மத்தியில் இராணுவத்திற்குள் பில்லியன்களை பாய்ச்சி, ஓய்வூதியங்களை குறைக்கவும், சமூக நலன்கள் பெறுபவர்களை (RSA) அதற்காக வேலை செய்ய வைக்கவும், வேலையின்மை காப்பீட்டை குறைக்கவும், பல்கலைக்கழக மாணவர்கள் மீது பாரிய பதிவுக் கட்டணங்கள் அதிகரிக்கவும், கோவிட்-19 க்கு எதிரான அனைத்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நிரந்தரமாக நீக்கவும் அவர் திட்டமிடுகிறார். மக்ரோனுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஒரு கசப்பான மோதல் தயாராகி வருவதை தொழிலாளர்கள் பரந்த அளவில் உணரத் தொடங்கியுள்ளனர்.

மே 1, 2022, ஞாயிற்றுக்கிழமை, பிரான்சின் பாரிஸில், Republique சதுக்கத்தில் இருந்து Bastille to Nation நிலையத்திற்கு நடந்த மே தின ஆர்ப்பாட்ட அணிவகுப்பின் போது கலகத் தடுப்பு பொலீசார் ஒரு ஆர்ப்பாட்டக்காரரைக் கைது செய்தனர். [AP Photo/Lewis Joly] [AP Photo/Lewis Joly]

நாடு முழுவதும் உள்ள நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றனர், மார்சையில் 16,000 பேரும், லியோன், லீல், ஸ்ட்ராஸ்பேர்க், துலூஸ், போர்தோ, நாந்த் மற்றும் ரென் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானவர்களும் அணிவகுத்துச் சென்றனர். அணிவகுப்பின்போது, எதிர்ப்பாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வன்முறை மோதல்கள் ஏற்பட்டன, குறிப்பாக நாந்த் மற்றும் ரென் பகுதிகளில் எதிர்ப்பாளர்கள் மீது பொலீசார் உணர்ச்சிகளை மழுங்கச் செய்யும் பல கையெறி குண்டுகளை வீசித் தாக்கினர். ஒட்டுமொத்தமாக, நூறாயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்துச் சென்றனர், இந்த ஆர்ப்பாட்டங்களில் 106,000 பேர் கலந்துகொண்டதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

பாரிஸில் பல்லாயிரக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றனர், அவர்கள் மக்ரோனையும் பாசிசத்தின் ஆபத்தையும் விமர்சிக்கும் பல பதாகைகளை காட்டியவாறு சென்றனர். போராட்ட அணிவகுப்பு பொலீசாரால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டது, மேலும் ஆர்ப்பாட்ட இறுதியில் எதிர்ப்பாளர்களை சுரங்கப் பாதையூடாக கலைந்து செல்ல அனுமதிக்குமுன், Nation சதுக்கத்தில் பல ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கி கைதுசெய்தனர். தீவிர வலதுசாரி Action française குழுவின் அனுதாபியான உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மானன், தனது கலகத்தடுப்பு பொலீசார் போராட்டத்தில் 45 பேரை கைது செய்ததாகவும், எதிர்ப்பாளர்கள் மீது ‘ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறை’ குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உண்மையில், பொலீசார் வழமை போல் போராட்டக்காரர்களை வன்முறையாக தாக்கினர். பரவலாகப் பார்க்கப்பட்ட ஒரு ட்வீட், கலகப் பிரிவு பொலிசாரால் ஒரு பாதுகாப்பற்ற இளம் பெண் தாக்கப்பட்டு, அவரது மண்டை உடைந்த காட்சிகளைக் காட்டியது, அதேவேளை அப்பெண் அருகே நின்றிருந்த மற்றொரு பெண் “அவள் எதுவும் செய்யவில்லை!” என்று கூச்சலிடுகிறார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

மக்ரோன்-லு பென் இரண்டாம் சுற்று தேர்தலை புறக்கணிப்பதற்காகவும், மக்ரோன் மற்றும் லு பென் இருவருக்கும் எதிராக ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தை கட்டமைக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காகவும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சுப் பிரிவான பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுத்திருந்த பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் தலையிட்டு தொழிலாளர்களுடன் உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) நிருபர்கள் கலந்துரையாடினர்.

பாரிஸில் பல அணிவகுப்பாளர்கள், மிகுந்த இடதுசாரி கொள்கையை பெறுவதற்கான நம்பிக்கையில், தேர்தலின் முதல் சுற்றில், அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சியின் ஜோன் லூக் மெலோன்சோனுக்கு வாக்களித்தனர். இளைஞர்களின் வாக்குகளையும், முக்கிய நகரங்களின் தொழிலாள வர்க்க மாவட்டங்களின் ஆதரவையும் மெலோன்சோன் கொண்டிருந்தாலும், மே தினத்தில் அணிதிரளுமாறு தனது வாக்காளர்களிடம் எந்த ஒரு பரந்த வேண்டுகோளையும் அவர் முன்வைக்கவில்லை. அவருக்கு 22 சதவீதம் அல்லது கிட்டத்தட்ட 8 மில்லியன் வாக்காளர்கள் இருந்தபோதிலும், அவர் மதிப்பிழந்த பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS) உடனான தேர்தல் கூட்டணிக்கு முயன்று வருவதுடன், மக்ரோனின் கீழ் பிரதம மந்திரியாக பணியாற்ற தான் தயாராக இருப்பதாக வலியுறுத்துகிறார்.

சில சந்தேகங்கள் இருந்தாலும், மெலோன்சோன் முற்போக்கான மாற்றத்தைத் தூண்டுவார் என்று தான் இன்னும் நம்புவதாக கூறிய ஒரு மெலோன்சோன் வாக்காளரான ஜோர்ஜ் உடன் WSWS நிருபர்கள் பேசினர். “அவர் எங்களை முட்டுச்சந்துக்குள் கொண்டு செல்ல முடியும், அந்த விஷயத்தில் நான் உங்கள் கருத்தை நிராகரிக்கவில்லை. ஆனால் அவருக்கும் மக்ரோனுடனான மற்ற கட்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகப்பெரியது,” என்று ஜோர்ஜ் கூறினார்.

மெலோன்சோன் முன்னாள் PS செனட்டர் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட மந்திரி என்பதை WSWS செய்தியாளர்கள் சுட்டிக்காட்டிய போது, மெலோன்சோன் உண்மையில் மக்ரோனுக்கு எதிரான சமூக கோபத்தை முறைப்படுத்த முயற்சிக்கிறார், ஆனால் தொழிலாளர்கள் நம்பிக்கையுடன் அந்த தடையை கடக்க முடியும் என்று ஜோர்ஜ் கூறினார். மேலும், “இங்கு அபரிமிதமான கோபம் இருப்பதால், அவர் கூட அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அவர் அதை வழமையான வழிகளுக்குள் தள்ள முயற்சிக்கிறார், ஆனால் அது வேலை செய்யாது. மாறாக, மற்ற சாத்தியங்களும், மற்றொரு ஆழமான மாற்றமும் இங்கு தேவை. எவ்வாறாயினும், தொழிலாளர்களின் விடுதலைக்காகப் போராடுவதே தொழிலாளர்களின் பணியாகும்” என்றார்.

WSWS நிருபர்கள் ரொமான் என்பவரிடமும் பேசினர், அவர் இவ்வாறு கூறினார்: “மெலோன்சோனின் அனைத்து யோசனைகளிலும் நான் உடன்படவில்லை, ஆனால் இடதுசாரிகள் இரண்டாவது சுற்றுக்கு வருவதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நான் நினைத்தேன். இரண்டாவது சுற்றில் நான் மக்ரோனுக்கு வாக்களித்தேன். என்னால் உறுதியாக சொல்ல முடியாது; இதற்கு நான் வருந்தலாம். எப்படியும் எனக்கு திருப்தி இல்லை.” ரொமான் மேலும், மெலோன்சோன் “சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைக்கு இடதுபுறம் இருக்கிறார், நான் பார்ப்பது போல் அவர்கள் பாதுகாக்க வேண்டிய கம்யூனிசக் கருத்துக்களை இது பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” என்றார்.

ரொமான் பொதுவாக PES இன் புறக்கணிப்பு அழைப்பை ஏற்றுக்கொண்டதாகவும், அது தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர இயக்கம் எதிர்கொள்ளும் தடைகளை சுட்டிக்காட்டியதாகவும் கூறினார். மேலும், ‘இடதுசாரி’ கட்சிகளாக ஊடகங்கள் ஊக்குவிக்கும் LFI, ஸ்ராலினிச PCF அல்லது பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) போன்றவை, 2018 இல் மக்ரோனுக்கு எதிராக வெடித்த சமூக சமத்துவமின்மைக்கு எதிரான பெரிதும் பிரபலமான ‘மஞ்சள் சீருடை’ எதிர்ப்புக்களை ஆதரிக்க மறுத்துவிட்டன.

ரொமான் மேலும், “‘மஞ்சள் சீருடை’ இயக்கத்தின் போது, ஆரம்பம் முதலே, ஊடக இயந்திரம் இயக்கத்தை அவமதிக்க முயன்றது. இடதுசாரி கட்சிகள் கூட, தேர்தல் கணக்கீடுகளால் இயக்கத்தை ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்ளவில்லை, அது பிரபலமாகும் என்றும் அவர்கள் நினைக்கவில்லை. அப்போது, அவர்கள் சமூக இயக்கத்தின் பக்கம், தொழிலாளர்களின் பக்கம், மாத இறுதிக்கு போராடும் மக்கள் பக்கம் தாம் நிற்பதாக கூறியிருக்க வேண்டும்” என்றும் கூறினார்.

ஸ்ராலினிசத்துடன் தொடர்புடைய தொழிற்சங்கமான தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பை (General Confederation of Labor-CGT) விட்டு வெளியேறிய தபால்காரரும், ‘மஞ்சள் சீருடை’ எதிர்ப்பாளருமான கிறிஸ்தோப் உடனும் WSWS பேசியது. அவர் தான் மெலோன்சோனுக்கு வாக்களித்தது பற்றி விளக்கி, “மக்ரோனும் லு பென்னும் நரகத்திற்குச் செல்லலாம்” என்றார்.

ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போர் உந்துதலைப் பற்றி தான் கவலைப்படுவதாகவும், ரஷ்யாவிற்கு எதிராக ஜனநாயகம் அல்லது உக்ரேனைப் பாதுகாப்பதாக பிரெஞ்சு அரசாங்கமோ அல்லது அதன் நேட்டோ கூட்டாளிகளோ கூறுவதை தான் நம்பவில்லை என்றும் கூறினார். மேலும், நேட்டோ சக்திகள் “உலகின் மிகப்பெரிய கொள்ளையர்கள் ஆவர். அவர்கள் எதையாவது செய்கிறார்கள் என்றால், அது பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் மட்டும் தான்” என்றும் அவர் கூறினார்.

மெலோன்சோன் பாரிஸ் அணிவகுப்பில் இருந்தார், மற்றும் PS கட்சியின் செயலர் Olivier Faure உடன் கைகுலுக்கினார், அப்போது ஜூன் மாத சட்டமன்றத் தேர்தல்களில் LFI உம் PS உம் ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுக்க பேச்சுவார்த்தை நடத்துகின்றன. “நம் அனைவரும் எமக்கிடையே இடையே ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதில் இருந்து சில மில்லிமீட்டர் தொலைவில் நாம் உள்ளோம்” என்று மெலோன்சோன் கூறினார், மேலும், PS, PCF மற்றும் பசுமைக் கட்சி உட்பட அதன் அனைத்து பேச்சுவார்த்தை பங்காளிகளுக்கும் “அவர்கள் தேசிய சட்டமன்றத்தில் ஒரு நாடாளுமன்றக் குழுவை அமைப்பார்கள்” என்று LFI உத்தரவாதம் அளித்துள்ளது என்று வலியுறுத்துகிறார்.

மெலோன்சோன் இந்த மதிப்பிழந்த முதலாளித்துவ சார்பு கட்சிகளுக்கு வாழ்வு அளித்து தக்கவைத்துக்கொள்ள தீவிரமாக முயற்சிக்கிறார். ஜனாதிபதி தேர்தல்களில் பசுமைக் கட்சியும் PCF உம் 5 சதவீதத்திற்கு குறைவாகவும், PS 2 சதவீதத்திற்கு குறைவாகவும் வாக்குகளை பெற்றுள்ள நிலையில், அவை அனைத்தும் சட்டமன்றத் தேர்தல்களில் முற்றிலும் துடைத்தெறியப்படும் நிலையை எதிர்கொள்கின்றன. மெலோன்சோனின் பதில், மக்ரோனை வீழ்த்துவதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு இயக்கத்தை வளர்த்தெடுக்க முயலவில்லை, மாறாக இந்த மதிப்பிழந்த கட்சிகள் தேசிய சட்டமன்றத்தில் போதுமான இருக்கைகளைப் பெறுவதற்கே முயற்சிக்கின்றன, அப்போதுதான் சட்டமன்றத்தில் பாராளுமன்ற குழுக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிதியை தொடர்ந்து அணுகுவதை உறுதி செய்ய முடியும்.

மக்ரோன்-லு பென் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க தொழிலாளர்களுக்கு PES விடுத்த அழைப்பானது, இரு வேட்பாளர்களையும் நிராகரித்து, சமரசமின்றி எதிர்ப்பதன் மூலம், வரவிருக்கும் போராட்டங்களுக்கு தொழிலாளர்களை வலுவாக தயார்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. மக்ரோனின் தேர்தலும் மற்றும் தீவிர வலதுசாரி வேலைத்திட்டத்தை அவர் பின்பற்றுவதும் PES இன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. மக்ரோனின் போர்க் கொள்கைகள், கோவிட்-19 ஆல் ஏற்பட்ட பாரிய நோய்தொற்று, மற்றும் கொடூரமான சமூக சிக்கன நடவடிக்கை ஆகியவற்றுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை, மெலோன்சோனின் தேர்தல் சூழ்ச்சிகள், அவரது அரசியல் உத்திகள் அல்லது அதிகாரத்தில் இருந்தபோது கிட்டத்தட்ட மக்ரோனின் திட்டநிரலை ஒத்த திட்டநிரலைப் பின்பற்றிய PS உடன் பிணைக்க முடியாது.

தொழிலாளர்களும் இளைஞர்களும் எதிர்கொள்ளும் தீர்க்கமான பிரச்சினை என்னவென்றால், மக்ரோனின் கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை அணிதிரட்டுவதற்கு தேசிய அடிப்படையிலான தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குதும், மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மத்தியில் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ச்சியடைந்து வரும் இயக்கத்துடன் அவற்றை இணைப்பதும் ஆகும்; மேலும் LFI போன்ற வசதியான நடுத்தர வர்க்கத்தின் போலி-இடது கட்சிகளுக்கான ட்ரொட்ஸ்கிச மாற்றாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டமைக்க வேண்டும்.

Loading