பிரிட்டனின் போரிஸ் ஜோன்சன் உக்ரேனின் "மிகச் சிறந்த தருணத்தை" பாராட்டுவதுடன், அதிக இராணுவ தளவாடங்கள் வழங்க உறுதியளிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன், சர்ச்சிலிய பாணியில் ரஷ்யாவுடனான போரை அந்நாட்டின் 'மிகச் சிறந்த தருணம்' என்று வர்ணித்ததார்.

பெப்ரவரியில் போர் தொடங்கியதற்குப் பின்னர் உக்ரேனிய சட்டசபையில் உரையாற்றிய முதல் உலகத் தலைவர் ஜோன்சன் ஆகிறார். அவரின் உரை காணொளி மூலமாக வழங்கப்பட்டது, இது கடந்த மாதம் கியேவில் உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியுடன் நடந்தவாறு பேசிச் சென்றதைத் தொடர்ந்து வருகிறது.

UK Prime Minister Boris Johnson addressing the Ukraine Parliament from Downing Street. 03/05/2022. (Credit: Picture by Andrew Parsons/Number 10 Downing Street/Flickr)

அமெரிக்காவுக்கு ஆதரவை ஒழுங்கு செய்வதற்காக, உக்ரேன் மீதான நேட்டோ-ரஷ்யா போரை விரிவாக்குவதில் ஐரோப்பாவில் முன்னணிக் குரலாக பிரிட்டன் தொடர்ந்து அதனை நிலைநிறுத்திக் கொள்கிறது. ஜேர்மனி எரிபொருளுக்காக ரஷ்யாவை நம்பியிருப்பது குறித்து ஜோன்சனும் பிரிட்டிஷ் பத்திரிகைகளும் பல மாதங்களாக குத்திக் காட்டி வந்த பின்னர், இந்தாண்டு இறுதிக்குள் படிப்படியாக ரஷ்ய எண்ணெய்க்குத் தடை விதிப்பது குறித்து முன்னதாக ஐரோப்பிய ஒன்றிய விவாதங்கள் நடந்திருந்தன, அதற்குப் பின்னர் மாலை ஜோன்சன் காட்சிக்கு வந்தார்.

ஜேர்மன் எதிர்க்கட்சித் தலைவரும், கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் தலைவருமான ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஜோன்சன் பேசிய போது உக்ரேனில் இருந்தார். போர் சம்பந்தமாக 'அலட்சியமாக, தயக்கமாக, நடுங்கி கொண்டிருப்பதாக' ஜேர்மன் சான்சிலர் ஓலஃப் ஷோல்ஸை அவர் குற்றஞ்சாட்டினார்.

'உக்ரேனிய நாட்டுப்பற்று மற்றும் தேசத்தின் மீதான அன்பின் அசைக்கவியலா தன்மையை' பாராட்டிய பிரிட்டிஷ் பிரதம மந்திரியின் உரை, தேசியவாத வாய்வீச்சால் நிரம்பி இருந்தது. 'புட்டினின் கொடுங்கோன்மைக்கு எதிராக உக்ரேனிய ஜனநாயகத்திற்கு' அவர் வீரவணக்கம் செலுத்தினார், செய்தி நிறுவனம் இன்டர்பேக்ஸ் செய்தியின்படி, அதே நாளில் அவர் பேசிக் கொண்டிருந்த அதே நாடாளுமன்றம் 'உக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவின் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும், அங்கீகரிக்கும் அல்லது மறுக்கும்' அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளுக்குத் தடைவிதித்தது.

'இது அவர்களின் மிகச்சிறந்த தருணம்' என்று சர்ச்சிலின் ஜூன் 1940 உரையிலிருந்து வார்த்தைகளைப் பயன்படுத்தி, பிரிட்டனின் இரண்டாம் உலகப் போர் வரலாற்றைக் காட்ட முயன்ற ஜோன்சன் நேட்டோ சக்திகளின் பரந்த பொய் சொல்லாடல்களை மீளவலியுறுத்துகிறார். ரஷ்யாவின் எல்லைகளில் நேட்டோ அத்துமீறல் அச்சுறுத்தலுக்கு ஒரு பிற்போக்குத்தனமான விடையிறுப்பாக ரஷ்யாவின் படையெடுப்பு நாஜி ஜேர்மனியின் இராணுவ நடவடிக்கைகளின் இருபத்தியோராம் நூற்றாண்டு பதிப்பாக உள்ளது என்பதே அவரின் உட்குறிப்பாக உள்ளது.

இரண்டு விதத்தில் இது வஞ்சகமானது.

முதலாவதாக, ரஷ்யப் படையெடுப்பை, மூன்றாம் ரைஹ்ஹின் இனப்படுகொலைத் தாக்குதலுடன் மிகத் தொலைவில் வைத்துக் கூட ஒப்பிட முடியாது. அதுபோன்ற எந்தவொரு குறிப்பும், கிழக்கில் நாஜி நிர்மூலமாக்கல் போரின் கொடூரங்களைக் குறைத்துக் காட்டவும், வெறித்தனமாக ரஷ்ய-விரோத விஷமப் பிரச்சாரத்தைத் தூண்டவும், மற்றும் சமீபத்திய தசாப்தங்களில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளின் போர்களால் நடத்தப்பட்ட சூறையாடல்களை மறைக்கவும் வடிவமைக்கப்படுகிறது.

இரண்டாவதாக, உக்ரேனுக்காக அணிசேர்ந்துள்ள நேட்டோ சக்திகள் அதை ஒரு பினாமியாக பயன்படுத்தி, ரஷ்யாவைத் துண்டாட மற்றும் சுற்றி வளைக்கும் நோக்கில், கிழக்கில் ஒரு பரந்த போருக்கு அழுத்தமளித்து வருகின்றன. இது முக்கியமாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர்கள் மற்றும் சபாநாயகரால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதுடன், “ரஷ்யாவைக் காலடியில் மண்டியிட செய்வது', இராணுவரீதியில் '[அதன்] முதுகெலும்பை முறிப்பது' மற்றும் 'ஜெயிக்கும் வரை' மோதலைத் தொடர்வது என்று வாஷிங்டனின் உத்தேசங்கள் பல்வேறு விதத்திலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2014 இல், 'உக்ரேனிடமிருந்து கிரிமியா பறிக்கப்பட்ட போது' எவ்வாறு நேட்டோ சக்திகள் 'அப்போதே நம்மிடம் இருந்த பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தவறின' என்று ஜோன்சன் வருத்தத்துடன் ஒரு குறிப்பை வழங்கினார். 'அதே தவறை நாம் மீண்டும் செய்ய முடியாது' என்றவர் உறுதியளித்தார்.

கடந்த புதன்கிழமை, பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலர் லிஸ் ட்ரஸ் கூறுகையில், பிரிட்டனும் அதன் நட்பு நாடுகளும் 'இரட்டிப்பாக்கி', 'ரஷ்யாவை மொத்தமாக உக்ரேனில் இருந்து வெளியேற்ற வேண்டும்' என்றார். ரஷ்யா இணைத்துக் கொண்ட மற்றும் அதன் பாதுகாப்புக்கு முக்கியமானதாகக் கருதப்படும் கிரிமியாவைக் கைப்பற்றுவதும் இதில் உள்ளடங்கும். அப்பெண்மணியின் நிலைப்பாட்டைப் பாதுகாப்புத்துறை செயலர் பென் வாலஸ் ஆதரித்தார்.

சாதம் ஹவுஸின் உக்ரேன் கலந்துரையாடல் மன்றத்தின் தலைவர் ஒரிசியா லுட்செவிச் கார்டியனில் திங்கட்கிழமை பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில், ட்ரஸைப் பாராட்டியதுடன், 'இப்போது வெற்றி என்பது உக்ரேனுக்கும் ஐரோப்பாவுக்கும் உண்மையில் எதை அர்த்தப்படுத்தும்?' என்று வினவிய போது, 'கிரிமியா மற்றும் டொன்பாஸைத் திரும்ப கியேவின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் [உக்ரேன்] மக்களிடையே ஒருமித்த கருத்து' இருப்பதாக கூறப்படுவதையும், “ஒரு கோட்பாடாக புட்டினிசத்தின் தோல்வி, கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவின் வேறு இடங்களில் பிராந்திய மேலாதிக்கத்திற்கான ரஷ்ய உரிமைகோரல்களை முடிவுக்குக் கொண்டு வருவதையும்' குறிப்பிட்டு, “எந்த முடிவும் தீர்க்கமாக இருக்க வேண்டும்,” என்றவர் பதிலளித்தார்.

உக்ரேனின் நோக்கங்கள் 'அதன் நட்பு நாடுகளுடன் ஒத்துப் போகின்றன' என்று லுட்செவிச் முடிக்கிறார்.

இதற்காக, அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும் உக்ரேனுக்குள் ஆயுதங்களை குவித்து வருகின்றன, அவற்றில் பல மரியுபோலின் முடக்கப்பட்ட அஜொவ்ஸ்டல் எஃகு பணிகளை ஆக்கிரமித்து வரும் அசொவ் ரெஜிமென்ட் உட்பட அதன் அதிவலது மற்றும் பாசிச இராணுவ அமைப்புகளுக்கு வழங்கப்படுகின்றன. ஜோன்சன் அவர் உரையின் போது, மின்னணு போர்முறை தளவாடங்கள், தடுக்கும் பேட்டரி ராடர் அமைப்புமுறை, ஜிபிஎஸ் செயல்பாட்டை முடக்கும் சாதனங்கள் மற்றும் ஆயிரக் கணக்கான இரவு கண்காணிப்பு சாதனங்கள் உட்பட கூடுதலாக 300 மில்லியன் பவுண்ட் பிரிட்டிஷ் இராணுவத் தளவாடங்களை அனுப்பப்படுமென அறிவித்தார்.

பிரிட்டன் ப்ரிம்ஸ்டோன் ஏவுகணைகள் மற்றும் ஸ்டோர்மர் வான்வழி பாதுகாப்பு வாகனங்களை உக்ரேனுக்கு அனுப்ப இருப்பதாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில், மேலும் வார்சோ கியேவுக்கு அன்பளிப்பாக வழங்கிய ஏனையவற்றைப் பிரதியீடு செய்ய போலாந்துக்கு சேலஞ்சர் 2 டாங்கிகளை அனுப்பவும் பரிசீலித்து வருகின்ற நிலையில், இது வருகிறது. நேட்டோ-உக்ரேன் போர் முயற்சியில் பிரிட்டன் ஏற்கனவே மிகப்பெரிய பங்களிப்பாளர்களில் ஒன்றாக உள்ளது, பத்து ஆயிரக் கணக்கான உக்ரேனிய சிப்பாய்களுக்குப் பயிற்சி அளித்து வருவதுடன், கிழக்கு ஐரோப்பாவில் ஆயிரக் கணக்கில் அதன் சொந்த துருப்புகள், டாங்கிகள், கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை நிலைநிறுத்தி, உக்ரேனுக்கு உள்ளேயே கூட சிறப்புப் படைகளை நிலைநிறுத்தி இருப்பதற்கு அப்பாற்பட்டு, இப்போது அது அரை பில்லியன் பவுண்ட் மதிப்பில் இராணுவத் தளவாடங்களையும் வழங்கி உள்ளது.

அமெரிக்கா இதுவரை அறிவிக்கப்பட்ட இராணுவ உதவியாக 3.7 பில்லியன் டாலர் வழங்கியுள்ளதுடன், இன்னும் 20 பில்லியன் டாலர் கூடுதலாக வழங்க உள்ளது.

இந்த போர்வெறிக்கு தொழிலாள வர்க்கம் விலை கொடுக்க செய்யப்படுகிறது. உக்ரேன் உரைக்கு முன்னதாக, ஜோன்சன் Good Morning Britain செய்தி நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்தார். மோசமடைந்து வரும் வாழ்வாதாரச் செலவு நெருக்கடியால் சவால்விடுக்கப்பட்டுள்ள பிரதம மந்திரி, குடும்பங்கள் வரலாற்றளவில் அவற்றின் வருவாய்கள் பொறிந்து வருவதை முகங்கொடுக்கையில் அவற்றுக்கு எந்த ஆதரவும் வழங்குவதை நிராகரித்ததுடன், ஒரு 'பணவீக்க சுழலை' எச்சரித்ததுடன், “[நாம்] விவேகத்துடன் இருக்க வேண்டும்,” என்று அறிவித்தார்.

ஜோன்சன் புகார் கூறினார், “அரசுக் கடனுக்கான செலவைச் சமாளிக்க நாங்கள் ஏற்கனவே ஆண்டுக்கு 83 பில்லியன் பவுண்டுகள் செலவிட்டு வருகிறோம்; அது மிகப் பெரிய தொகை, அது நாங்கள் பாதுகாப்புக்குச் செலவிடுவதை விட அதிகமாகும,' என்றார்.

'விதிவிலக்கான' எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாயை மேற்கோள் காட்டி, எரிசக்தி நிறுவனம் BP ஒரு தசாப்தத்தில் அதன் அதிகபட்ச காலாண்டு வருவாயை 6.2 பில்லியன் டாலராக அறிவித்த அதே நாளில் தான் இவர் இந்தக் கருத்துக்களைக் கூறினார், பத்தில் நான்கு பிரிட்டன்வாசிகள் எரிவாயு மற்றும் மின்சார கட்டணங்களைச் செலுத்த போராடி வருவதாகவும், உணவுகளைக் குறைத்துக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டு வருவதாகவும் தேசிய புள்ளிவிபரங்கள் அலுவலகம் வெளியிட்டது.

விலைவாசி உயர்வுகள், நடைமுறையளவில் சம்பள வெட்டுக்கள் மற்றும் அரசாங்க சிக்கன நடவடிக்கைகள், வாழ்க்கைத் தரங்களின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன என்பதோடு, உக்ரேன் சம்பந்தமாக அரசாங்கம் மற்றும் நேட்டோவினால் அறிவித்தப்பட்ட நோக்கங்கள் மீது ஆழ்ந்த சந்தேகம் கொண்டுள்ள தொழிலாள வர்க்கத்தில் பரந்த எதிர்ப்பைத் தூண்டிவிட்டு வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட பைனான்சியல் டைம்ஸில் ஐரோப்பிய பொருளாதார வர்ணனையாளர் மார்ட்டின் சாண்ட்புவின் கவலைக்குரிய ஒரு பகுதி எச்சரித்தது, 'அந்த வெளிப்பாடு அருவருப்பாக உள்ளது, அதன் உள்ளடக்கம் இன்னும் அதிக அருவருப்பாக உள்ளது, ஆனால் 'உக்ரேன் சோர்வு' என்பது மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் ஓர் உண்மையான ஆபத்து.' 'மேற்கத்தியத் தலைவர்கள் ஒரு போர்காலப் பொருளாதாரத்திற்கு மக்களைத் தயார்படுத்த வேண்டும்' என்ற தலைப்பின் கீழ், சாண்ட்பு அறிவிக்கையில், 'வாழ்க்கைச் செலவு நெருக்கடி மேம்படுவதற்கு முன்னர் இன்னும் மோசமாகி விட வாய்ப்புள்ளது' என்றார்.

மக்கள் உணர்வின் எந்தவொரு தடயமும் பிரதான அரசியலில் வெளிப்படுவதில்லை. செய்தித்தாள்கள், மிகவும் களிப்புடன் கார்டியன், ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சி 1990 களுக்குப் பிந்தைய மிக மோசமான அவர்களின் தேர்தல் முடிவாக உள்ளாட்சித் தேர்தலில் 500 உள்ளூர் இடங்களை இழக்கக்கூடும் என்று தெரிவித்து வருகின்றன. ஆனால் இது சிக்கனக் கொள்கைகள் நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பை டோரி கவுன்சிலர்களிடம் இருந்து அவர்களின் தொழிற்கட்சிக்கு மாற்றுவதைத் தவிர, சில இடங்களில் அவர்களின் சமபலங்களான தாராளவாத ஜனநாயக கட்சியினர் மற்றும் பசுமைக் கட்சியினருக்கு மாற்றுவதைத் தவிர, வேறு எதையும் செய்யப் போவதில்லை.

நாளை பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு, அதில் தொழிற்கட்சி வெற்றி பெற்றாலும் கூட, பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கையில் அதுவே தான் உண்மையாக இருக்கும். ஜோன்சனின் உரைக்கு விடையிறுத்து தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் கூறுகையில், 'இராணுவ தளவாடங்கள் வழங்குவதை நாங்கள் ஆதரிக்கிறோம்' என்றார். உள்ளாட்சித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்த அந்த அறிக்கையின் நேரத்தை கூட அவர் விமர்சிக்க மறுத்துவிட்டார், 'நேரம் பற்றிய எங்கள் வாதங்கள் பெரிதாக எதையும் மாற்றிவிடாது என்று நினைக்கிறேன்,” என்று கூறியதுடன், உக்ரேனை ஆதரிக்கும் விஷயத்தில் கட்சிகள் 'பிளவுபடுவதை' அவர் விரும்பவில்லை என்றார்.

அதிக இராணுவச் செலவினங்களைக் கோரிய பின்வரிசை டோரி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தன்னை இணைத்துக் கொண்ட ஸ்டார்மர் கூறுகையில், “அரசாங்கம் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்து, பாதுகாப்பு செலவினங்களைக் கவனிக்கும் என்று நான் நினைக்கவில்லை, கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அப்படி நினைக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்,” என்றார். அரசாங்கம் 'நம் ஆயுதப் படைச் சேவைகளில் இருந்து கூடுதலாக 10,000 [சிப்பாய்களை]” குறைக்கக் கூடாது என்றவர் கேட்டுக் கொண்டார்.

அனைத்து அடிப்படைக் கொள்கை புள்ளிகள் மீதும் டோரிகளுடன் தொழிற்கட்சி ஒருமித்த கருத்து கொண்டிருப்பது, 'பார்ட்டிகேட்' (partygate) ஊழலில் அது இடைவிடாத கவனம் செலுத்தி உள்ள நிலையில், அவற்றை நிறைவேற்றும் பணியில் ஜோன்சன் எதிர்பார்த்தளவு இல்லை என்பது மட்டுமே அவர் மீதான அதன் ஒரே விமர்சனம் என்பதை அர்த்தப்படுத்துகிறது. பிரிட்டனில் உத்தியோகபூர்வ அரசியல் விவாதத்தின் அபத்தமானது, Good Morning Britain நிகழ்ச்சி பேட்டியில் 'நீங்கள் நேர்மையானவரா?' என்று ஜோன்சனிடம் கேட்ட போது தொகுத்தளிக்கப்பட்டது. ஆனால் அந்த கேள்வி 'சில புவிசார் அரசியல் மாற்றங்களுக்காக' உக்ரேனில் பிரிட்டன் தலையிடவில்லை என்ற அவரின் அபத்தமான கூற்று சம்பந்தமாக கேட்கப்படவில்லை, மாறாக டவுனிங் வீதியில் சமூக அடைப்பு மது விருந்து சம்பந்தமாக இருந்தது.

Loading