கோரிக்கைய நிறைவேற்றுவதாக முகாமைத்துவம் “உறுதியளித்த” பின்னர் வடகடல் நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டுள்ளனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

ஏப்ரல் 19 அன்று, குருநகரில் உள்ள வடகடல் தொழிற்சாலைத் தொழிலாளர்கள், தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தொழிற்சாலை நிர்வாகம் உறுதியளித்ததை அடுத்து தமது 11 நாள் நீண்ட வேலை நிறுத்தத்தை நிறுத்தியுள்ளனர். அரசாங்கத்துக்கு சொந்தமான, முன்னர் சி-நோர் என்று அழைக்கப்பட்ட, இப்போது நோர்த் சீ என பெயரிடப்பட்டுள்ள வடகடல் தொழிற்சாலையானது மீன்பிடி வலைகளைத் தயாரிக்கின்றது.

எவ்வாறாயினும், வழங்கிய உறுதிகளை நிறைவேற்றாவிடில் மீண்டும் வேலை நிறுத்தத்தை ஆரம்பிப்போம் எனத் தெரிவிக்கும் ஒரு எச்சரிக்கைக் கடிதத்தை முகாமைத்துவத்துக்கு வழங்கியுள்ளதாக தொழிலாளர்கள் உலச சோசலிச வலைத் தள செய்தியாளர்களுக்குத் தெரிவித்தனர்.

உலக சோசலிச வலைத் தளம் அறியக் கிடைத்த வகையில், நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஏற்கனவே மீறப்பட்டுள்ளன. ஏப்பிரல் 25 அன்று வழங்கப்பட வேண்டிய சம்பளமானது மே மாதம் 20 ஆம் திகதி வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே ஒரு மாத சம்பள நிலுவைத் தொகையை வழங்க உள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். அதுவரை எப்படியாவது வாழ்க்கைச் செலவை சரிசெய்து கொள்ளுமாறு நிர்வாகம் அவர்களுக்குத் தெரிவித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ள சூழ்நிலையிலேயே இது நடந்துள்ளது. இம்முறை தொழிலாளர்களுக்கு புத்தாண்டு கொடுப்பனவுகள் எதுவும் கிடைக்கவில்லை. இது தொழிலாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தை தொழிலாளர்களே சுயாதீனமாக தொடங்கினர். சில வருடங்களுக்கு முன்னர் அங்கு இலங்கை வர்த்தக கைத்தொழில் சங்கம் (CMU) இருந்த போதிலும், அது அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினதும் கருவியாகச் செயற்பட்டதால் தொழிலாளர்கள் அதைக் கைவிட்டனர்.

ஏப்ரல் 8 அன்று, அனைத்து 70 தொழிலாளர்களும் தங்களது ஊதியத்தை நிலுவையின்றி வழங்க வேண்டும், உற்பத்தியைத் தொடர போதுமான மூலப்பொருட்கள் இருக்க வேண்டும் மற்றும் தங்கள் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்த ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி பங்களிப்புகளை தங்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்றும் கோரி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சரவையில் இவற்றை சமர்ப்பிப்பதன் ஊடாக இரு வாரங்களுக்குள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என தெரிவித்த மீன்பிடி அமைச்சர், தனது வாக்குறுதியை மீறிய பின்னரே ஏப்ரல் 8 அன்று தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தனர். மார்ச் 11 அன்று தொழிலாளர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள அமைச்சரின் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று, தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை கையளித்த போதே அவர் தனது வாக்குறுதிகளை வழங்கினார்.

சி.எம்.யு., இந்த வேலை நிறுத்தம் பற்றி முற்றிலும் மௌனமாக இருந்ததுடன் வடகடல் தொழிலாளர்களைப் பாதுகாக்க தொழிற்சங்க அங்கத்தவர்களின் ஆதரவைத் திரட்ட மறுத்துள்ளது. கடந்த பல தசாப்தங்களாக அரசாங்கத்தின் கரங்களைப் பலப்படுத்தியும் தொழிலாளர் படையை கடுமையாக குறைக்கவும், அவர்களின் உரிமைகளை வெட்டவும் தொழிற்சாலை நிர்வாகத்துக்கு உதவியமையே சி.எம்.யு. வகித்த பாத்திரமாகும்.

தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற நிர்வாகத்தின் உறுதிமொழியாது இந்த வேலை நிறுத்தத்தை உடைப்பதற்கான நனவான முயற்சியாகும். தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கின்ற அதேவேளை, தொழிற்சாலை நட்டத்திலேயே இயங்குகின்றது என நிர்வாகம் கூறுகின்றது. அது சம்பள உயர்வுகள் வழங்கப்படமாட்டது என்பதையே வலியுறுத்துகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் தேசியவாதக் கட்சிகளும் இந்தத் தொழிலாளரக்ளின் நடவடிக்கை மற்றும் அவர்களின் துன்பங்கள் தொடர்பாக அமைதியாவே இருந்துள்ளன. தமிழ் கூட்டமைப்பு உட்பட இந்த தமிழ் கட்சிகள் தொழிலாளர் வர்க்கத்துக்கு விரோதமானவை ஆகும்.

லுனுவில மற்றும் வீரவில ஆகிய இடங்களில் இரு மீன்பிடி வலைகளைத் தயாரிக்கும் தெழிற்சாலைகளை சீநோர் கொண்டுள்ளது. லுனுவில தொழிற்சாலையானது மூடப்படவேண்டியுள்ளதோடு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைகளை இழப்பர் என பெப்ரவரி 3 அன்று லங்கா நியுஸ் வெப் செய்தி வெளியிட்டது.

குருநகர் தொழிற்சாலையும் 1991ல் மூடப்பட வேண்டியிருந்ததுடன் ஜனாதிபதி சந்திரிக்கா குமராதுங்க அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தின் பாகமாக 2001ல் இது தனியார்மயமாக்கப்பட்டது. இது, அரசாங்கத்துக்கு எதிராகவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை அரசாங்கத்தின் முடிவுகளுக்கு அடிபணியவைக்க முயற்சித்த சி.எம்.யு. இன் துரோக பாத்திரத்திற்கு எதிராகவும், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யுனிஸ்ட் கழகத்தால் (பு.க.க.) வழிநடத்தப்பட்ட தொழிலாளர்களின் தீர்க்கமான போராட்டத்தின் ஊடாகவே இது பாதுகாக்கப்பட்டது.

பின்னர், தொழிற்சாலையின் சி.எம்.யு. கிளைக்கு பு.க.க. / சோ.ச.க. தலைமைத்துவம் இல்லாமல் போனதுடனேயே தொழிற்சாலையின் சி.எம்.யு. கிளை நிர்வாகத்தின் கருவியாக மாறியது.

ஏப்ரல் 18 அன்று, வேலை நிறுத்தம் செய்யும் வடகடல் தொழிலாளர்களுக்கு மத்தியில் சக்திவாய்ந்த தலையீட்டை மேற்கொண்ட சோ.ச.க. உறுப்பினர்கள், தமது போராட்டத்தை தொடரவும் ஏனைய தொழிலாளர்களின் ஆதரவைத் திரட்டவும், தொழிற்சங்கத்திடம் இருந்து சுயாதீன நடவடிக்கைக் குழுவைக் கட்டியெழுப்புவதன் அவசியம் பற்றியும் அவர்களுடன் கலந்துரையாடினர்.

சோ.ச.க. உறுப்பினர்கள், நாட்டில் தற்போது கட்டவிழ்ந்து வருகின்ற சமூக பேரழிவுக்கு தீர்வுகாண்பதற்கு நடவடிக்கை குழுக்களின் வலையமைப்பைக் கட்டியெழுப்பவும், சோசலிசக் கொள்கைகளுக்காகப் போராடவும், தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுகின்ற ஏப்ரல் 7 அன்று வெளியான அறிக்கையை விநியோகித்தனர். ஏறத்தாழ அனைத்து தொழிலாளர்களும் ஒன்றுகூடி சோ.ச.க உறுப்பினர்கள் கூறியதை செவிமடுத்தனர்.

சோ.ச.க. அறிக்கையை அக்கறையுடன் வாசிக்கும் சீனோர் தொழிலாளர்கள் (Photo: WSWS media)

இந்த வடகடல் தொழிலாளர்களின் தொழிற்துறை நடவடிக்கையானது தாங்கமுடியாத வாழ்க்கைச் செலவுகள் மற்றும் எரிபொருள், சமையல் வாயு, பால்மா மற்றும் மருந்துகள் போன்றவற்றின் தட்டுப்பாடுகளுக்கு எதிராக ஏப்ரலின் ஆரம்பத்தில் வெடித்த வெகுஜன மற்றும் தொழிலாளர் போரட்டத்துடன் சமாந்தரமான வகையில் எழுந்துள்ளது.

கோவிட-19 தொற்று நோய் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான உக்ரேனில் நடந்து வரும் அமெரிக்க-நேடோ பினாமிப் போரால் ஆழமாக்கப்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் முழுச் சுமையையும், இராஜபக்ஷ அரசாங்கமும் முதலாளிமார்களும், தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களின் மீது கட்டவிழ்விட்டுள்ளனர்.

இராஜபக்ஷ அரசாங்கமானது, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வேலைத்திட்டத்தை ஈவிரக்கமற்ற முறையில் அமுல்படுத்துவதில் உறுதியாக உள்ளது. அதன்படி தனியார்மயமாக்கல் மறுசீரமைத்தல் அதன் பாகமாக தொழில் வெட்டும், வரிகளை உயர்துவதும், அரசுதுறை தொழிலாளர் படையை குறைத்தல் மற்றும் சமூக மானியங்களை வெட்டுதல் போன்றவற்றை துரிதப்படுத்த வேண்டியிருக்கும்.

சோ.ச.க. பிரச்சாரக்காரர்களுடன் பேசிய தொழிலாளர்கள், தமது பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வுக்காகப் போராட தாம் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தனர். “எமது வேலை நிலைமைகள், தொழில் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் லுனுவில தொழிற்சாலையில் உள்ள தோழர்களுடனும் ஏனைய சிங்கள மொழி பேசும் தொழிலாளர்களுடனும் இணைந்து போரட தயாராக உள்ளோம். எமக்கு ஏனைய சீநோர் தொழிற்சாலைகளுடன் கூட தொடர்புகள் எதுவும் இல்லை. ஒரு ஐக்கியப்பட்ட போராட்டமே முன்னோக்கான பாதை” என ஒரு தொழிலாளி கூறினார்.

தொழிலாளர்கள் தமது கடினமான நிலைமைகளையும் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலுவுகளை சமாளிக்க தமது வருமானம் போதாது எனவும் விளக்கினார்கள். தொழிலாளர்கள் ரூபா 28,000 அடிப்படை சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவுகளுடன் 38,000 ரூபாவையே மாதாந்த சம்பளமாகப் பெறுகின்றனர்.

“நான் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக உற்பத்தி துறை தொழிலாளியாக வேலை செய்கின்றேன். ஆனால், எனக்கு எவ்வித பதவி உயர்வுகளும் இங்கு கிடைக்கவில்லை. சர்வதிகார நிர்வாகமே இங்கு உள்ளது. அவர்கள் தொழிலார்களுக்கு எதிரானவர்கள் சரியான நேரத்தில் சம்பளத்தை தர மறுக்கின்றனர். ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றை எமது சம்பளத்தில் இருந்து வெட்டிக்கொண்டாலும் அவை எங்களது கணக்கில் சேர்க்கப்படுவதில்லை” என மற்றொரு தொழிலாளி தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தார்: “நாம் நிறுவனத்தின் வேலை மாற்ற அட்டவணையின் படியே வேலை செய்கின்றோம். எமது வேலை நேரம் முடிந்ததும், எமது குடும்பத்தைப் பேண பகுதி நேர வேலைக்குப் போக வேண்டியுள்ளது. பல தொழிலாளர்கள் பருத்தித்துறை, காங்கேசந்துறை மற்றும் காரைநகர் போன்ற தூர இடங்களில் இருந்து பயணம் செய்து இங்கு வருகின்றனர். அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் காரணமாக அவர்கள் பாரிய இன்னல்களை முகங்கொடுக்கின்றனர். எமக்கு பயணக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. நிறுவனம் எமக்கான பண்டிகைக் கொடுப்பனவுகளையும் நிறுத்தியுள்ளது.

“நாங்கள் எமது கோரிக்கைகளையும் ஜனநாயக உரிமைகளையும் கோரும் போது அவர்கள் அரசியல் ரீதியாக எம்மை பழிவாங்குகின்றனர்.”

நான்கு பிள்ளைகளின் தாயான இந்த வேலை நிறுத்தத்தில் பங்குபற்றிய ஒரு பெண் தொழிலாளி கூறியதாவது: “அனைத்தினதும் விலை உயர்வுக்கு மத்தியில் எமது சம்பளத்தை நம்பியே இருக்கிறோம். இந்த நிலைமையில், எமது முன்னைய மாதச் சம்பளம் தரப்படவில்லை. குறைப்புகளுக்கு பின்னராக மாதாந்த சம்பளமாக 36,000 ரூபாவைப் பெறுகின்றோம். ஆனால், இந்த விலைசவாசி உயர்வுடன் இந்த சொற்ப சம்பளத்தை வைத்து நாங்கள் எப்படி சமாளிப்பது? ஆகவேதான் எமது உரிமைக்காக போராட நாங்கள் உறுதியாக உள்ளோம்.”

எமது துன்பங்களை பற்றி நிர்வாகம் அக்கறைப்படுவதில்லை, என்று மற்றொரு தொழிலாளி கூறினார். “எமக்கு உற்பத்தி மூலப்பொருட்கள் வழங்கப்படுவதில்லை. ஆறு இயந்திரங்களை நிறுவனம் கொண்டிருந்தாலும் இப்பொது ஒரு இயந்திரம் மட்டும் தான இயங்குகின்றது. எமது தொழிற்சாலை செயலிழந்துள்ளது. இதை மாற்றுவதற்காகவே நாம் வேலை நிறுத்தத்தில் உள்ளோம். எம்முள் பலருக்கு வங்கிக் கடன் உள்ளது. அவற்றைச் செலுத்துவதற்கு முடியாதுள்ளது. வங்கியில் வட்டியையும் உயர்த்தியுள்ளனர்” என அவர் தெரிவித்தார்.

தமது வேலைகள் இழக்கப்படும் என்ற பயத்தில் உற்பத்தியைத் இடைவிடாது மேற்கொள்ள தொடர்ச்சியான மூலப்பொருட்களின் விநியோகத்தை தொழிலாளர்கள் கோருகின்றனர். எவ்வாறாயினும், முதலாளித்துவ அமைப்பு முறையின் கீழ் இவை எட்டப்பட முடியாதவை. நிர்வாகமானது குருநகர் தொழிற்சாலை உட்பட எஞ்சியுள்ள சி-நோர் துறைகளையும் கலைக்கவோ அல்லது தனியார்மயமாக்கவோ திட்டமட்ட வகையில் முயற்சிக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் அரசாங்கம், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களையும் தனியார்மயப்படுத்த, கூட்டுத்தாபனமயப்படுத்த அல்லது கலைப்பதற்கே தயாராகிக்கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே காட்டியவாறு, எந்தவொரு தொழிற்சங்கமும் இந்த தாக்குதல்களில் தொழிலாள வர்க்கத்தைப் பாதுகாக்கப் போவதில்லை, மாறாக போராட்டங்களைத் தடுக்கும். அதனாலேயே சோ.ச.க. உற்பத்திகளைத் தமது சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்ளப் போராடுவதற்கு, தமது சொந்த சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்புமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. இது சோசலிசக் கொள்கைகளுக்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Loading