மே தினம் 2022: ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கம் சீனாவுக்கு எதிரான பிரச்சாரத்தை ஊக்குவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் செரில் கிறிஸ்ப் வழங்கிய அறிக்கை இதுவாகும். கிறிஸ்ப் ஆஸ்திரேலியாவில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர். அனைத்து உரைகளையும் பார்க்க, wsws.org/mayday ஐப் பார்வையிடவும்.

Cheryl Crisp, National Secretary of the Socialist Equality Party (Australia)

2022 சர்வதேச மே தின இணையவழிப் பேரணிக்கு ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பாக அனைவரையும் வரவேற்கிறேன்.

தொழிலாள வர்க்கத்தின் இந்த சர்வதேச தினத்தை சென்றாண்டு நாம் கொண்டாடியதற்குப் பின்னர் ஏராளமான விடயங்கள் மாறியிருக்கின்றன.

சீனா தவிர்த்து, ஒவ்வொரு பிற நாட்டிலும் கோவிட்-19 இன் கடிவாளமற்ற பரவலானது, கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்களை அநாவசிய மரணத்திற்காய் சபித்திருக்கிறது. எப்படி ஒழிக்க வேண்டும் என விஞ்ஞான, மருத்துவ மற்றும் பொதுச் சுகாதார நிபுணர்கள் அறிந்த ஒரு வைரசானது, உற்பத்தி, இலாபம் மற்றும் செல்வத்திற்கான முன்னுரிமையளிப்பில் உலக மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.

ரஷ்யாவை சிதறடிப்பதற்கும் அழிப்பதற்கும் அமெரிக்க-ஏகாதிபத்தியம் நீண்டகாலம் கையில் கொண்டிருந்த திட்டங்களின் விளைவான உக்ரேனிலான போரானது மூன்றாம் உலகப் போரைக் கொண்டும் அணுஆயுதப் போரைக் கொண்டும் உலகை அச்சுறுத்துகிறது. ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ/அமெரிக்காவின் இந்த பினாமிப் போரானது உக்ரேனை அதன் போர்க்களமாகவும் அதன் மக்களை பீரங்கித் தீவனமாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரையில், பெருந்தொற்று மற்றும் போர் இரண்டின் விளைபயனாக, அதிகரித்துச் செல்லும் விலைவாசி, உணவுப் பற்றாக்குறைகள், பசிபட்டினி ஆகியவற்றில் விளைகின்ற மேற்சுழன்று செல்லும் பணவீக்கத்திற்கு முகம்கொடுத்திருக்கிறது.

விதிவிலக்குவாதம் மற்றும் அதிர்ஷ்ட நாடு ஆகிய வழமையான உச்சாடனங்கள் இருக்கவே செய்கின்றன எனும்போதிலும், ஆஸ்திரேலியாவிலான நிலைமை மாற்றமடைந்திருக்கிறது. அநேக மக்களின் விடயத்தில் போலவே இங்கிருக்கும் மக்களின் வாழ்க்கையும் வெறும் இரண்டாண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிட்டால் அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறிவிட்டிருக்கிறது.

சென்ற ஆண்டின் இதேநேரத்தில், ஆஸ்திரேலியா 30,000 தொற்றுக்களுக்கும் அதிகமாய் பதிவு செய்திருந்தது. இன்று அது கிட்டத்தட்ட 6 மில்லியனாக இருக்கிறது, அதில் 96 சதவீதம் கடந்த ஐந்து மாதங்களில் தொற்றியதாக உள்ளது. 2021 மேயில் உயிரிழப்பு எண்ணிக்கை 910 ஆக இருந்தது. இன்று அது 7,142 ஆக உள்ளது, 72 சதவீதம் 2021 டிசம்பர் 1க்குப் பின்னர் ஏற்பட்டிருப்பதாகும்.

ஆளும் ஸ்காட் மாரிசனின் கூட்டணி அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையில் கோவிட்டை குறிப்பிடுவதில்லை என்கிற சதி உடன்பாட்டுடன் நடைபெற்று வருகின்ற ஒரு தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில் நாடு இருக்கிறது. தொற்று எண்ணிக்கை, மருத்துவமனை அனுமதிகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்ற நிலையிலும், “பெருந்தொற்று முடிந்து விட்டது” என்பதே கதையாடலாக இருக்கிறது.

தொற்றுக்களையும் உயிரிழப்புகளையும் ஓரளவுக்கு குறைவாக வைத்திருந்த 2020 மார்ச்சில் அரசாங்கத்தால் வேண்டாவெறுப்புடன் அமலாக்கப்பட்ட நடவடிக்கைகள் அகற்றப்பட்டு விட்டதே இந்த நாசவிளைவுக்கான காரணமாய் உள்ளது. எல்லாமே அகற்றப்பட்டாகி விட்டது. கடைப்பூட்டல்கள், சோதிப்புகள், தனிமைப்படுத்தல்கள், தொடர்புகளின் தடமறிதல் மற்றும் சமூக இடைவெளி எதுவும் கிடையாது. அவற்றுடன் சேர்த்து பெருந்தொற்று குறித்து செய்தியளிப்பதும் கூட அகற்றப்பட்டு விட்டிருக்கிறது.

அதனிடத்தில் சீனாவுடன் இராணுவ மோதலுக்கு மக்களைத் தயார்படுத்துகிற நோக்கத்துடனான வெறிகொண்ட போர் வெறிக்கூச்சல் பிரதியிடப்பட்டிருக்கிறது. கூட்டணி மற்றும் தொழிற்கட்சி முன்னிலையில் ஒட்டுமொத்த அரசியல் உயரடுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு யார் சிறந்த முறையில் சேவை செய்வது, சீனாவுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களை யார் சிறப்பாக முன்னெடுப்பார்கள் என்று நிரூபிக்கும் முயற்சியில் தமது கொதிப்பூட்டும் சீன-விரோத கண்டனங்களில் ஒருவருடன் ஒருவர் போட்டி போடுகிறார்கள்.

நம்பமுடியாத விதத்தில், அமெரிக்காவானது, ரஷ்யாவுக்கு எதிராக போரை _இது ஐரோப்பாவிலும் இன்னும் விரிவிலும் ஒரு பெரும் பேரழிவுக்கு அச்சுறுத்துகிறது_ தூண்டிக் கொண்டிருக்கும் அதேவேளையில் சீனாவுக்கு எதிராகவும் போர் முனைப்பை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறது.

700,000க்கும் குறைவான மக்கள்தொகை கொண்டதும் ஆஸ்திரேலியா அமெரிக்கா இரண்டு நாடுகளில் இருந்தும் பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவிலும் இருக்கக் கூடிய ஒரு குட்டி நாடான சாலமன் தீவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு வாரத்திற்கு முன்பாக ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதற்கு ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளும் பைடென் நிர்வாகமும் வெறிகொண்ட பதிலிறுப்பு அளிக்கிறார்கள் என்றால் பசிபிக்கில் அமெரிக்காவின் _அதனை இது “அமெரிக்க ஏரி” என்றே குறிப்பிடுகிறது_ நீண்டகால மேலாதிக்கத்திற்கு அது ஒரு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது என்ற காரணத்தால் தான்.

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சரான டட்டன், ANZAC தினத்தன்று _முதலாம் உலகப் போர் படுகொலையை அமெரிக்க ஆளும் வர்க்கம் கொண்டாடுகின்ற தினம்_ “போருக்கு தயாரிப்பு செய்வதே அமைதியை தக்கவைப்பதற்கான வழி” என்று அறிவித்தார். பிரதமர் மாரிசன் விடுக்கிற அச்சுறுத்தலில், சீனா சாலமன் தீவுகளில் _இதனை அவர் ”ஆஸ்திரேலியாவின் வாசற்படி”யில் என்று விவரித்தார்_ ஒரு இராணுவப் பிரசன்னத்தை ஸ்தாபிக்குமானால், அது ஒரு ”சிவப்புக் கோடு” தாண்டப்படுவதைக் கொண்டதாயிருக்கும் என்றார், இராணுவத் தலையீடு குறித்த ஒரு அதிக மறைப்பில்லாத அச்சுறுத்தல்.

எனினும் தொழிற்கட்சியே இந்த ஒப்பந்தத்தை மிகவும் மூர்க்கமாக கிட்டத்தட்ட கடிவாளமற்ற கண்டனங்களுடன் எதிர்கொண்டதாயிருக்கிறது. அக்கட்சியின் நிழல் வெளியுறவு அமைச்சரான பென்னி வோங் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதைத் தடுக்கத் தவறிய அரசாங்கத்தின் தோல்வியானது, “இரண்டாம் உலகப் போர் முடிந்ததற்குப் பிந்தைய காலத்திலான மிக மோசமான வெளியுறவுக் கொள்கை பிழை” என்று வருணித்தார்.

அமெரிக்க பதிலிறுப்பின் _Honiara க்கு அனுப்பப்பட்ட வெள்ளை மாளிகையின் இந்தோ-பசிபிக் ஒருங்கிணைப்பாளரான கர்ட் கேம்பெல் ஒரு மாஃபியாவைப் போல “ஒரு அறிவிக்கப்படாத நிரந்தர [சீன] இராணுவ பிரசன்னத்தை, ஆற்றல்-வளர் திறன்களை அல்லது ஒரு இராணுவ நிறுவலை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால் அப்போது அமெரிக்காவுக்கு அதில் கணிசமான கவலைகள் உண்டு, தக்கவாறு அது பதிலிறுப்பு செய்யும்” என்று மிரட்டினார்_ பின்னால் தொழிற்கட்சி தன்னை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இராணுவ நடவடிக்கையும் ஆட்சி மாற்ற நடவடிக்கையும் பரிசீலிக்கப்படுகிறது என்பதற்கான இலேசான வாடைக்கும் அதிகமாய் அங்கே இருக்கிறது.

திகைக்க வைக்கும் கபடநாடகம் அனைவரும் காணக்கூடியதாய் இருக்கிறது. உக்ரேன் நேட்டோவில் இணைவதற்கு கொண்டிருக்கும் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக அளவில்லாத மரண ஆயுதங்கள், இராணுவப் பயிற்சி மற்றும் நிதியாதாரம் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் சாலமன் தீவுகள் சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு அது கொண்டுள்ள உரிமையைப் பிரயோகிக்கும்போது, அது உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவ தேசத்தால் அச்சுறுத்தப்படுகிறது, பசிபிக்கிலான அதன் துணை ஷெரீப், ஆஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் தொழிற்கட்சி அந்த அச்சுறுத்தலை ஆதரிக்கின்றனர்.

போருக்கான மூலவளமாய் இருக்கிற முதலாளித்துவத்திற்கு எதிரான பொதுவான போராட்டத்தில் சீன மற்றும் ஆஸ்திரேலியத் தொழிலாள வர்க்கங்களை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தையே SEP தனது தேர்தல் பிரச்சாரத்தின் மையமான அம்சமாக வைத்துள்ளது.

உண்மையில் போரிட வேண்டியிருக்கிற ஒரே போர் என்றால் அது கோவிட்டுக்கு எதிரான போர் மட்டுமே ஆகும், ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் உயரடுக்கானது அந்த போரில் சரணடைந்து விட்டிருக்கின்றன, சாதாரண மக்களும், ஏழைகளும் மற்றும் தொழிலாள வர்க்கமும் அதற்கான விலையை செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

சர்வதேச அளவில் காண்பதைப் போலவே, இந்த நாட்டிலும் தொழிலாள வர்க்கமே இந்த வைரசால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகும். கோவிட்-19 மரணங்களில் 36 சதவீதம் மிக அனுகூலமற்றதாய் இருக்கிற 20 சதவீத பகுதிகளில் நிகழ்ந்திருக்கிறது. 9.8 சதவீதம் மட்டுமே மிகவும் அனுகூலம் பெற்ற பகுதிகளில் நடந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்களைக் காட்டிலும் இரண்டரை மடங்குக்கும் அதிகமான விகிதத்தில் இங்கு புலம்பெயர்ந்தவர்கள் மரணமடைந்திருக்கின்றனர், மத்திய கிழக்கை சேர்ந்தவர்கள் சராசரி விகிதத்தினும் கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகமான விகிதத்தில் இறந்து கொண்டுள்ளனர். நெடுங்கோவிட் காரணத்திலான இறப்புகள் எச்சரிக்கையூட்டும் விகிதத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

பெருந்தொற்றும், இப்போது உக்ரேனிலான போரும், எரிபொருள் மற்றும் உணவுப்பொருள் விலையேற்றங்களின் காரணத்தினால் ஒரு பாரிய வாழ்க்கைச்செலவின அதிகரிப்புக்கு வழிவகுத்திருக்கின்றன. சென்ற காலாண்டில் ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் 5.1 சதவீதத்திற்குத் தாவியிருக்கிறது, 2000 இல் கொண்டுவரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை கணக்கில் கொள்ளாது பார்த்தால், இது கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலத்திலான மிகப்பெரும் அதிகரிப்பாகும். 2008 உலக நிதி நெருக்கடியைத் தொடர்ந்து வந்ததைக் காட்டிலும் அதிகமானதாய் இது இருக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் விடயத்தில் இது கிட்டத்தட்ட 7 சதவீதமாய் உள்ளது. எனினும் ஊதியங்கள், கிட்டத்தட்ட ஒரு தசாப்தமாய் தேக்கமடைந்த நிலையில் உள்ளன.

தலைக்கு மேல் ஒரு கூரை கொண்டிருப்பதற்கான உரிமை கடந்தகால விடயமாகி விட்டது. நாட்டின் வறுமைப்பட்ட வாக்காளர்களில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேர் 76 சதவீதம் வரை அடமான அழுத்தத்தில் உள்ளனர், அதுவும் உத்தேச வட்டி விகித அதிகரிப்புக்கு முன்னதாக, அநேகமாக அடுத்த வாரத்திலேயே அந்த அதிகரிப்பு நடக்கலாம். நாடெங்கிலும் உள்ள 46,000 வாடகைக் கட்டிடங்களில், 32 மட்டுமே வேலைவாய்ப்பற்றோர் நல உதவிகளில் வாழும் ஒருவருக்கு கட்டுப்படியாகக் கூடிய அளவில் இருக்கின்றன.

இந்த சகிக்க முடியாத நிலைமைகள் தான் தொழிலாளர்களை போராட்டத்திற்குள் செலுத்திக் கொண்டிருக்கிறது. முடக்கும் பணிச்சுமைகளுக்கும் தரக்குறைவான ஊதியங்களுக்கும் எதிராக செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள், மற்றும் இப்போது ஆசிரியர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையில் இறங்கிக் கொண்டுள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராகவும் அதன் கோரிக்கைகளைத் திணிக்கும் தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் ஒரு கலகம் அபிவிருத்தி கண்டு கொண்டிருக்கிறது.

முன்நிற்கும் இந்த அழிவுநிலைக்கு எதிரான தீர்வானது கட்சிகள், அரசாங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்களுக்கு அழுத்தமளிப்பதன் மூலமாகக் கிடைக்க முடியாது, மாறாக இந்தப் போராட்டங்களை நடத்துவதற்குத் தேவையான தலைமையையும் சோசலிச முன்னோக்கையும் வழங்கக் கூடிய சுதந்திரமான சாமானியத் தொழிலாளர் குழுக்களை தொழிற்சாலைகளில், பள்ளிகளில், மருத்துவமனைகளில் மற்றும் அண்டைஅருகாமைப் பகுதிகளில் உருவாக்குவதன் மூலமே கிடைக்க முடியும்.

நிறைவாக, இந்த மே தினத்தில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் மீது நாங்கள் குறிப்பாக வலியுறுத்துகிறோம். உலகின் மிகப்பெரியதான சீனத் தொழிலாள வர்க்கத்தை நோக்கி நாங்கள் குறிப்பாக நேசக்கரம் நீட்டுகிறோம். இங்கேயும் சரி சர்வதேச அளவிலும் சரி தொழிலாளர்களின் எதிரி சீன வெகுஜன மக்கள் அல்ல, மாறாக முதலாளித்துவ வர்க்கமே ஆகும். ஒரு சோசலிச வருங்காலத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் அத்தனை பிரிவுகளுடனும் ஐக்கியப்பட்டு நாம் ஒழுங்கமைந்து போராடியாக வேண்டும்.

நன்றி.

Loading