முன்னோக்கு

உவால்டி படுகொலையும் அமெரிக்காவில் பள்ளி துப்பாக்கிச் சூடுகளின் துன்பியலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாயன்று, டெக்சாஸில் உள்ள உவால்டி நகரின் ரொப் (Robb) தொடக்கப் பள்ளியின் பெயர் மக்களின் கூட்டு நனவில் கொலம்பைன், நியூடவுன், பார்க்லாண்ட், பிளாக்ஸ்பேர்க் மற்றும் கடந்த 25 ஆண்டுகளில் பலவற்றுடன் வன்முறையாக பொறிக்கப்பட்ட பெயர்களின் நீண்ட பட்டியலில் சேர்ந்தது.

மே 25, 2022 புதன்கிழமை அன்று, டெக்சாஸில் உள்ள உவால்டி யில் உள்ள ரொப் தொடக்கப் பள்ளிக்கு வெளியே பூக்களும் மெழுகுவர்த்திகளும் வைக்கப்பட்டன. [AP Photo/Jae C. Hong] [AP Photo/Jae C. Hong]

ஒருபோதும் அறியப்படமுடியாத காரணங்களுக்காக, துப்பாக்கிச் சூடு நடத்திய 18 வயது உயர்நிலைப் பள்ளி மாணவன் சல்வடார் ராமோஸ், தொடக்கப் பள்ளிக்கு வாகனத்தில் செல்வதற்கு முன்பு முதலில் தனது பாட்டியை சுட்டுக் கொன்றான். கறுப்பு நிற உடையணிந்து, AR-15 தாக்குதல் துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியுடன் ஆயுதம் ஏந்திய ராமோஸ், பள்ளி மாவட்ட காவல்துறை அதிகாரியைக் கடந்து பள்ளிக்குள் நுழைந்தான். இரண்டு நிமிடங்களில், 19 குழந்தைகளும் இரண்டு ஆசிரியர்களும் இறந்தனர். இது டெக்சாஸ் வரலாற்றில் மிக மோசமான பள்ளி துப்பாக்கிச் சூடும் மற்றும் அமெரிக்காவில் பார்க்லேண்ட் மற்றும் கொலம்பைனை விஞ்சி மூன்றாவதானது. போலீசாருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராமோஸ் கொல்லப்பட்டான்.

துக்கமுற்ற பெற்றோர்கள், உள்ளூர் பொதுமக்கள் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்கள் மரபணு மாதிரி எடுக்கப்பட்டனர். ஏழு முதல் பத்து வயது வரை உள்ள குழந்தைகளின் உடல்கள், சில சமயங்களில் AR-15 தீயினால் சிதைக்கப்பட்ட நிலையில், மரபணு சோதனை மூலம் மட்டுமே அடையாளம் காணமுடியும்.

சில விவரங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஊடக அறிக்கைகளின்படி, வடக்கு டகோட்டாவில் பிறந்த ராமோஸ், பள்ளியிலேயே திக்கி பேசுதல் மற்றும் பேச்சு குறைபாடுகளுக்காக கொடுமைப்படுத்தப்பட்டான். அடிக்கடி வகுப்பு தோழர்களுடன் முஷ்டி சண்டையில் ஈடுபட்டான். அவர் வெளிப்படையாக சில நண்பர்களை கொண்டிருந்தான் மற்றும் தனித்திருந்ததுடன் மற்றும் அடிக்கடி வகுப்பை தவறவிட்டான். ரொப் பாலர்பள்ளி மீதான தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு அவன் சட்டபூர்வமாக வாங்கிய இரண்டு அரை தானியங்கி துப்பாக்கிகளின் படங்களை இடுகையிடுவது உட்பட துப்பாக்கிகள் பற்றி சமூக ஊடகங்களில் பதிவுகளை செய்தார்.

தனிப்பட்ட உளவியல் சிக்கல்கள் என்னவாக இருந்தாலும், அவை அமெரிக்க சமூகத்தை பாதிக்கும் பாரிய வன்முறையின் வழக்கமான வெடிப்புகளை விளக்கவில்லை. இங்குள்ள பிரச்சனையோ மிகவும் ஆழமானது.

பாலும் தேனும் பாயும் நாடு என்ற அமெரிக்காவின் பாசாங்குகள், இதுபோன்ற பயங்கரங்கள் வழக்கமாக எவ்வாறு நிகழ்கின்றன என்பதை கொஞ்சமும் வெளிப்படுத்தவில்லை. ரொப் பாலர் பள்ளியில் நடந்த படுகொலை இந்த ஆண்டு இதுவரை நடந்த 19வது பள்ளி துப்பாக்கிச் சூடு ஆகும். துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகத்தின்படி, இந்த ஆண்டு இதுவரை 17,000 க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சாவுகள் நடந்துள்ளன. இதில் பெரும்பாலானவை தற்கொலை மூலம் நிகழ்ந்துள்ளன. 213 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர். இவற்றில், நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ள 10 பாரிய படுகொலைகள் உள்ளன.

ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டிலும் உள்ள அரசியல்வாதிகளின் உவால்டி தொடர்பான வழக்கமான அற்பத்தனமான மற்றும் வெற்று வார்த்தைகள் எதையும் விளக்கவில்லை. ஜனாதிபதி ஜோ பைடென் செவ்வாயன்று இரவு ஒன்பது நிமிட உரையை நிகழ்த்தினார். அதில் அவர் துப்பாக்கி வைத்திருப்பதற்கு ஆதரவானவர்களுக்கு எதிராக காட்டிக்கொண்டார். அதே நேரத்தில் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு எதையும் செய்ய வேண்டாம் என்று நாட்டிற்கு அழைப்பு விடுத்தார். புதன்கிழமை, பைடென் துப்பாக்கி சட்டங்கள் தொடர்பான 'நடவடிக்கைக்கு' அழைப்பு விடுத்தார்.

புதனன்று, ஜனநாயகக் கட்சியின் செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷுமர், ஜனாதிபதியின் பாசாங்குகளை அமைதிப்படுத்தினார். ஜனநாயகக் கட்சியினர் காங்கிரஸின் இரு அவைகளையும் கட்டுப்படுத்தினாலும், புதிய கூட்டாட்சி துப்பாக்கிச் சட்டங்களுக்கான வாய்ப்பு 'மிகவும் குறைவானது' என்று குறிப்பிட்டார். மேலும் திகிலடைந்த அமெரிக்கர்கள் நவம்பர் இடைத்தேர்தலில் இதுபற்றி வாக்களிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

குடியரசுக் கட்சியினர் மனநலம் பற்றிய வெற்றுக் கவலைகளை முன்வைக்கும் அதே வேளையில், அதிக துப்பாக்கிகள் மற்றும் முரட்டுத்தனமான வன்முறைதான் தீர்வு என்று வலியுறுத்துகின்றனர். இதனால் 'நல்லவர்கள்' 'கெட்டவர்களை' தங்கள் தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு கொல்ல முடியும் என்றனர். கல்வி நிறுவனங்களை அதிகபட்ச பாதுகாப்பு சிறைகளுக்கு நிகரான ஆயுதமேந்திய காவலர்களை கொண்ட பள்ளிகளை மாற்றுவதற்கு அவர்கள் வாதிடுகின்றனர். இந்த பாசிச 'தீர்வுகள்' 'பயங்கரவாதத்தின் மீதான போர்' என்று அழைக்கப்படுவதன் வார்த்தையாடல்களினதும், நியாயப்படுத்தல்களினதும் விளைவாகும். இதன் விளைவாக சித்திரவதை அறைகள், ட்ரோன் படுகொலைகள் மூலம் மத்திய கிழக்கில் முழு சமூகங்களையும் அழிக்கப்பட்டமை சொந்த நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களுக்குள் இருந்து எங்கும் தனிநபர்களின் படுகொலை நடவடிக்கைகளில் வெளிப்பாட்டைக் காணும் அடிப்படையான சமூக மற்றும் அரசியல் நிலைமைகள் பற்றிய தீவிர ஆய்வு எதுவும் இல்லை. அமெரிக்க முதலாளித்துவம், உண்மையில், வன்முறையால் நிரம்பியுள்ளது. இது ஒரு ஆளும் வர்க்கத்தால் ஊக்குவிக்கப்படுவதுடன், இது மரணத்தை ஒரு இயல்பானதாக்கி மற்றும் உயிரை அற்பமானதாக்குகின்றது.

ஏப்ரல் 20, 1999 இல் கொலம்பைன் உயர்நிலைப் பள்ளி மீதான தாக்குதலில் எரிக் ஹாரிஸ் மற்றும் டிலான் க்ளெபோல்ட் ஆகியோர் அவர்களது 12ம் வகுப்பு தோழர்கள் மற்றும் ஒரு ஆசிரியரைக் கொன்றனர். இது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாகக் காணப்பட்டது. அந்த நேரத்தில், இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவில் நடந்த ஐந்தாவது கொடூரமான படுகொலைச் செயலாகும். அந்த நேரத்தில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் மூடிமறைக்கப்பட்ட சமூக காரணிகளைப்பற்றி WSWS பின்வருமாறு கவனத்தை ஈர்த்தது:

தனிப்பட்ட எச்சரிக்கை அறிகுறிகளில் கவனம் செலுத்துவது மேலும் துயரங்களைத் தடுப்பதற்கு சிறிது உதவுவதாக இருக்கலாம். மாறாக சமூக எச்சரிக்கை அறிகுறிகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதாவது கொலம்பைன் மேற்பள்ளி படுகொலை போன்ற நிகழ்வுகளை உருவாக்கும் சூழ்நிலைகளை உருவாக்கும் சமூக மற்றும் அரசியல் செயலிழப்புக்கான அறிகுறிகள் மற்றும் குறியீடுகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும். எதிர்வரவிருக்கும் பேரழிவின் முக்கிய குறிகாட்டிகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்: செல்வத்திற்கும் வறுமைக்கும் இடையே வளர்ந்து வரும் துருவமுனைப்படுதல்; உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி மற்றும் அவர்களின் வர்க்க அடையாளத்தை அடக்குதல்; இராணுவவாதம் மற்றும் போரினை மகிமைப்படுத்தல்; தீவிர சமூக விமர்சனம் மற்றும் அரசியல் விவாதம் இல்லாமை; பொதுக் கலாச்சாரத்தின் நிலையை இழிவுபடுத்துதல்; பங்குச் சந்தை வழிபாடு; தனிநபர் வெற்றி மற்றும் தனிப்பட்ட செல்வத்தின் கட்டுப்பாடற்ற கொண்டாட்டம்; சமூக முன்னேற்றம் மற்றும் சமத்துவத்தின் இலட்சியங்களை இழிவுபடுத்துதல்.

அப்போதிருந்து பாரிய துப்பாக்கிச் சூடு மிகவும் பொதுவானதாகவும், மிகவும் ஆபத்தானதாகவும் மாறிவிட்டது. கொலம்பைன் இப்போது அமெரிக்க வரலாற்றில் ஆறாவது மிக மோசமான பள்ளி துப்பாக்கிச் சூடாகும். அந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிய மாணவர்களுக்கு இப்போது சொந்த குழந்தைகள் உள்ளனர். அவர்கள் தாங்களாகவே பலியாகும் சாத்தியக்கூற்றை சமாளிக்க வேண்டும். நாடு முழுவதும் குழந்தைகள் 'சுடும் பயிற்சிகள்' மூலம் 'ஓடவும், மறையவும், சண்டையிடவும்' கற்பிக்கப்படுகிறார்கள்.

பள்ளி துப்பாக்கிச் சூடு உட்பட, மோசமான போக்குகளின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் சமூக, அரசியல் மற்றும் கலாச்சார காரணிகள் இன்னும் தீவிரமடைந்துள்ளன. சமூக சமத்துவமின்மை கிட்டத்தட்ட புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளது. 400 பணக்கார அமெரிக்கர்கள் 3 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களை கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் வயதானவர்களில் பாதிப் பேர் 400 டாலருடன் அவசர தேவைகளை ஈடுசெய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கின்றனர்.

ஆளும் வர்க்கத்தின் இரண்டு முக்கிய கட்சிகளில் ஒன்றான குடியரசுக் கட்சி, ஜனவரி 6, 2021 அன்று வன்முறைச் சதி மூலம் அரசியலமைப்பை கவிழ்க்க முயன்ற அரை-பாசிச அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. டெக்சாஸில் நடந்த படுகொலை, குடியரசுக் கட்சியின் கணிசமான பிரிவுகளால் ஊக்குவிக்கப்பட்ட பாசிசக் கருத்துக்களால் அரசியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் ஈர்க்கப்பட்ட துப்பாக்கிதாரி, நியூயோர்க்கில் உள்ள பவ்வலோவில் 10 பேரைக் கொன்ற 10 நாட்களுக்குப் பின்னர் நடந்துள்ளது.

பொதுவாக பள்ளி துப்பாக்கிச் சூடு மற்றும் பாரிய துப்பாக்கிச் சூடுகளின் அதிகரித்து வரும் நிகழ்வு அமெரிக்க சமூகத்தின் மேம்பட்ட சிதைவு மற்றும் நிலைமுறிவின் அறிகுறியாகும். முதலாளித்துவத்தின் கீழ் உயிர் மிகவும் பெறுமதியற்றதாகிவிட்டது.

ஏற்கனவே 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பலிவாங்கிய கோவிட்-19 தொற்றுநோயின் மூன்றாம் ஆண்டில் அமெரிக்கா இப்போது உள்ளது. குழந்தைகளும் கல்வியாளர்களும், நோயின் முதன்மை தொற்றுக்கான காரணிகளாக அறியப்படும் பள்ளிகளுக்கு திரும்ப தள்ளப்பட்டுள்ளனர். முதலில் ட்ரம்ப் மற்றும் இப்போது பைடெனால் பின்பற்றப்படும் கொலைவெறி 'சமூக நோயெதிர்ப்பு சக்தி' பெருக்கும் கொள்கையின் நேரடி விளைவாக 1,500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கோவிட்-19 இனால் இறந்துள்ளனர்.

அதே நேரத்தில், பைடென் நிர்வாகம் ஒரு பொறுப்பற்ற மற்றும் ஆக்கிரமிப்பு வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகிறது. இது உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு போரைத் திறந்து, பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் ஏவுகணைகளை அந்நாட்டிற்குள் கொட்டியது. செவ்வாயன்று பைடென் சீனாவிற்கு எதிராக போரை நடத்துவதாக அச்சுறுத்திய ஆசியாவிற்கான ஒரு பயணத்திலிருந்து திரும்பிய பின்னர் உவால்டி துப்பாக்கிச் சூடு பற்றிய தனது குறிப்புக்களை தெரிவித்தார். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு இடையே ஒரு நேரடி மோதல் தவிர்க்க முடியாமல் அணுசக்தி யுத்தத்தில் முடிவடைந்து, மில்லியன் கணக்கானவர்களை கொன்றுவிடும். இந்த வாய்ப்பை அமெரிக்க ஆளும் வர்க்கம் தெளிவாக ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளது.

இதற்கிடையில், பொலிசார் அமெரிக்காவின் தெருக்களில் சுற்றித் திரிந்து தண்டனையின்றி தொழிலாளர்களை துன்புறுத்துகிறார்கள், அடித்துக் கொல்கின்றனர். காவல்துறையினரால் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று பேர் கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 1,000 க்கும் அதிகமான இறப்புகள் இதனுடன் சேர்க்கப்படுகின்றன. இது மிகவும் கொடிய ஆண்டுகளில் நிகழ்ந்த பள்ளி துப்பாக்கிச் சூடுகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிகம்.

2018 ஆம் ஆண்டு புளோரிடா, பார்க்லாண்ட் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னர், பள்ளி துப்பாக்கிச் சூடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இலட்சக்கணக்கான மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் வெளிநடப்பு மற்றும் போராட்டங்களில் கலந்து கொண்டனர். எவ்வாறாயினும், இந்த வெகுஜன கோபம் மற்றும் உறுதிப்பாடு ஜனநாயகக் கட்சிக்கு அடிபணிந்தது மற்றும் March for Our Lives அமைப்பின் மூலம் துப்பாக்கிச் சீர்திருத்த சட்டத்தின் மாயைகளுக்கு அடிபணிந்தது. உவால்டி நிகழ்வுக்கு பின்னர் சமூக ஊடகங்களில் வேலைநிறுத்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் விவாதிக்கும் நிலையில், மில்லியன் கணக்கானவர்கள் முன்னோக்கி செல்லும் பாதையைத் தேடுகின்றனர்.

ஒரு தீர்வை கண்டறிவதற்கு, காரணத்தை அடையாளம் காண்பதில் இருந்து தொடங்க வேண்டும். ஆளும் வர்க்கம், அதன் அரசியல் தலைவர்கள், அதன் இராணுவ-பொலிஸ் எந்திரம், அதன் கொலைகாரக் கொள்கைகள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அது தலைமை தாங்கும் முதலாளித்துவத்தின் சமூக-பொருளாதார அமைப்பு ஆகியவற்றை குற்றம்சாட்டாத, ரொப் பாலர் பள்ளி படுகொலை பற்றிய வேறெந்த விளக்கமும் அடுத்த பயங்கரத்திற்கு வழியை தயார்ப்படுத்துவதை மூடிமறைப்பதை தவிர வேறொன்றுமில்லை.

Loading