அரசாங்கத்துக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட கும்பலின் தலைவர்களை கைது செய்ய இலங்கை சட்டமாதிபர் உத்தரவிட்டுள்ளார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சட்ட மா அதிபர் சஞ்சய் இராஜரட்னத்தின் உத்தரவின் பேரில், மே 9 அன்று அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களை கொடூரமாக தாக்கிய வன்முறை கும்பலின் சுமார் 22 தலைவர்களை இலங்கை பொலிஸ் கைது செய்யத் தொடங்கியுள்ளது.

22 பேரில் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளூர் தலைவர்களும் அடங்குவர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனையும் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதியும் அவரது அரசாங்கத்தினையும் இராஜினாமா செய்யுமாறு கோரியும், விலைவாசி உயர்வினாலும், அத்தியாவசியப் பொருட்களின் தீராத தட்டுப்பாட்டினாலும் ஏற்பட்ட சகிக்க முடியாத இன்னல்களுக்கு முடிவு கட்டுமாறு கோரியும் அரசாங்க எதிர்ப்புப் பிரச்சாரகர்கள் மத்திய கொழும்பில் காலி முகத்திடலை ஒரு மாதத்திற்கும் மேலாக ஆக்கிரமித்து போராடி வருகின்றனர். சில பிரச்சாரகர்கள் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே போராட்டத்தையும் ஆரம்பித்திருந்தனர்.

1,000 க்கும் மேற்பட்ட ஸ்ரீ,ல.பொ.ஜ.மு. குண்டர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்து பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பேருந்தில் கொண்டு செல்லப்பட்டு தாக்குதலுக்கு தூண்டிவிடப்பட்டனர். அவர்கள் முதலில் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கினர், பின்னர் காலி முகத்திடலில் எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அங்கு அவர்கள் தற்காலிக கூடாரங்களை அடித்து நொறுக்கி, ஆர்ப்பாட்டக்காரர்களை உடல் ரீதியாக தாக்கினர். நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காலி முகத்திடலில் உள்ள போராட்டக்காரர்களின் கூடாரங்கள் மீது வலதுசாரி குண்டர்கள் நடத்திய தாக்குதல் [Photo: Facebook]

காலி முகத்திடலில் கும்பல் சுதந்திரமாக வன்முறையில் ஈடுபட அனுமதித்து ஒதுங்கி நின்ற பொலிசார், பின்னர் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை மூலம் தாக்குதல் நடத்தியவர்களை கலைத்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

பதிலுக்கு, வெல்லமென பெருக்கடுத்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் ஏனையவர்களும் காலி முகத்திடலில் தாக்குதலை எதிர்த்து பொறுப்பானவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறும் கோரினர். சுகாதாரம், தபால் மற்றும் துறைமுகத் தொழிலாளர்கள் உடனடியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பல பிரிவினர் மறுநாள் பொது வேலைநிறுத்தத்தில் இணைந்தனர்.

அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் மீதான அப்பட்டமான தாக்குதல் தொடர்பாக யாரையும் கைது செய்து விசாரணை நடத்தத் தவறியதற்காக கடந்த வாரத்தில் பொதுமக்கள் மத்தியில் பரவலான சீற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

நடவடிக்கை எடுக்கத் தயங்கிக்கொண்டிருந்த சட்டமா அதிபர், இறுதியாக 22 பேரையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தினார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்னே மற்றும் மிலன் ஜயதிலக, மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ ஆகியோரும் தடுத்து வைக்கப்படவுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்த அதிருப்திக்கு பதிலளிக்கும் வகையில் பதவி விலகிய பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்டதாக லங்காதீப தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களைத் தூண்டிவிட்டதற்காக அவர் பரவலாக விமர்சிக்கப்பட்டார்.

கொழும்பில் உள்ள ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள், பிரதமரின் இல்லத்தில் கூட்டத்திற்குள் நுழைந்தவர்கள், “யாருடைய சக்தி? மஹிந்தவின் சக்தி! எனக் கோஷமிட்டதை தாம் கண்டதாக எழுதியிருந்தனர்.

ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, ஒரு காணொளியில், மஹிந்த இராஜபக்ஷ, தான் பதவி விலக வேண்டுமா என்று வாய்வீச்சுடன் கேட்கிறார். 'இல்லை' என்று பதில் வந்தது. 'அதாவது, நான் இராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை... நான் எப்போதும் நாட்டின் பக்கம் தான் இருக்கிறேன்... மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்' என்று அவர் கூறினார்.

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ, [Credit: Wikimedia Commons]

வீடியோவில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, “தயாராகுங்கள்.. போராதிட்டத்தை ஆரம்பிப்போம். ஜனாதிபதியால் முடியாவிட்டால்... அவர் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். நாங்கள் காலி முகத்தை சுத்தம் செய்வோம்,” என கூட்டத்தில் கூறினார்.

எவ்வாறாயினும், விசாரணைகள் தொடர்கின்றன என்று சட்டமா அதிபர் திணைக்களம் லங்காதீப பத்திரிகையிடம் கூறியது.

இதுவரை, சனத் நிஷாந்த மற்றும் மலித் ஜயதிலக்க ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் நேற்று நீதிமன்றத்தை எதிர்கொண்டு மே 25 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பட்டியலில் உள்ள மேலும் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ,ல.பொ.ஜ.மு. இன் உயர்மட்ட பிரமுகரான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த வாரம் பாராளுமன்ற அமர்வுகளில் கூட கலந்து கொண்டார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தென்னகோனிடம் எட்டு மணிநேரம் விசாரணை நடத்திய போதிலும், சட்டமா அதிபரின் உத்தரவை மீறி அவரைக் கைது செய்யாமல் இருக்கின்றனர்.

உயர்மட்ட அரசியல்வாதிகளுக்கும் பிற நபர்களுக்கும் எதிரான வழக்குகளை நசுக்குவதில் இலங்கை பொலிசும் அதிகாரிகளும் பேர் போனவர்கள். தங்கள் குற்றங்களை மூடிமறைக்க முடியாவிட்டால், உண்மையான குற்றவாளிகளை விடுவிக்க பலிகடாக்களை தேடிப் பிடிக்கின்றனர்.

அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல், வெகுஜன எதிர்ப்பு இயக்கத்தின் மீது பரவலான அரச அடக்குமுறைக்கான நிலைமைகளை உருவாக்கும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்ட ஆத்திரமூட்டலாகும்.

தீவு முழுவதும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் சிறு வியாபாரகளும் பங்குபற்றிய மே 6 அன்று நடந்த இரண்டாவது பொது வேலைநிறுத்தமும் ஹர்த்தாலும் பலம்வாய்ந்த முறையில் பொருளாதாரத்தை முடக்கியதை அடுத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. முந்தைய ஏப்ரல் 28 அன்று நடந்த ஒரு நாள் பொது வேலைநிறுத்தமும் பரவலாக ஆதரவை வென்றது.

தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் எழுச்சி, அரசாங்கத்திற்கு எதிரானது மாத்திரமன்றி, எதிர்க்கட்சிகள் மற்றும் அதற்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கங்கள் உட்பட முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும் எதிரானதாகும். மே 6 இரவு, ஜனாதிபதி அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி, இராணுவத்தை அணிதிரட்டுவது உட்பட, ஏற்கனவே தனது பரந்த அதிகாரங்களை மேலும் விரிவு படுத்தினார்.

மே 9 அன்று காலி முகத்திடலில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, தீவு முழுவதும் இராணுவம் மற்றும் பொலிஸாரை அணிதிரட்டி நாடு தழுவிய 24 மணி நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான சாக்குப்போக்காக, அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மீது நடத்தப்பட்ட எதிர் வன்முறையை ஜனாதிபதி பயன்படுத்திக்கொண்டார். சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவும், கலவரக்காரர்களையும் கொள்ளையர்களையும் கண்டவுடன் சுடவும் படையினருக்கு உத்தரவிடப்பட்டது. நாடு முழுவதும் இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எச்சரித்ததைப் போல, அரசாங்கப் பிரமுகர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களும் அவர்களது வீடுகளை எரிப்பதும் பிற்போக்குக்கே பயன்படுவதோடு அரச எந்திரத்தின் கைகளை பலப்படுத்தவும் மட்டுமே உதவும்.

ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. குண்டர்கள் மற்றும் அவர்களின் தலைவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை இழுத்தடிக்கப்பட்ட நிலையில், பழிவாங்கும் போராட்டங்களில் ஈடுபட்ட பலரை பொலிஸ் விரைவாக கைது செய்தது. சிசிடிவி காட்சிகள் மற்றும் முறையான புகார்களின் அடிப்படையில் இதுவரை 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகிந்த இராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகியது நாட்டை மேலும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியது. உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து அவசரகால நிதியைப் பெற ஆளும் வர்க்கம் அவநம்பிக்கையுடன் உள்ளது. எந்தவொரு பிணை எடுப்பும் தவிர்க்க முடியாமல் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை கொண்டு வரும், அது உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடியை ஆழமாக்கும்.

கடந்த வாரம் ஒரு அவநம்பிக்கையான நடவடிக்கையாக, ஜனாதிபதி இராஜபக்ஷ வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார். அவர் சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டளைகளை ஈவிரக்கமின்றி செயல்படுத்துவதிலும் வாஷிங்டனின் புவிசார் அரசியல் நலன்களுக்கு சேவை செய்வதிலும் பேர் போனவர். பல மாதங்களாக, சர்வதேச நாணய நிதியத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தாமைக்காக அவர் அரசாங்கத்தை விமர்சித்தார்.

மே 16 அன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அடுத்த சில மாதங்கள் எவரும் முன்னர் முகங்கொடுத்திராதளவு கடினமானதாக இருக்கும் என்று விக்கிரமசிங்க எச்சரித்தார். தவிர்க்க முடியாத கஷ்டங்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் மக்களை நெருக்கும் முயற்சியில் நாட்டின் நிதி நெருக்கடியின் அளவை அவர் குறிப்பிட்டார்.

ஐ.தே.க. பரவலாக மதிப்பிழந்துள்ளதோடு முன்னாள் பிரதமர் விக்கிரமசிங்க அதன் ஒரே பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியில் இருந்து சமீபத்தில் பிரிந்த 'சுயாதீன குழு' உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் விக்கிரமசிங்கவின் 'அபிவிருத்திப் பணிகளுக்கு' ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன.

தொழிற்சங்கங்களும் அந்த வழியை ஏற்றுக்கொண்டுள்ளன. ஜனாதிபதியும் அரசாங்கமும் இராஜினாமா செய்யாவிட்டால் காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என்று முன்னர் உறுதியளித்த சங்கங்கள், இப்போது அடையாளப் போராட்டங்களை நடத்துவதாக கூறி தங்கள் போலித் தோரணையைக் கைவிட்டுள்ளன. தொடக்கத்தில் இருந்தே அவற்றின் நோக்கம் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் எழும் கோபத்தையும் எதிர்ப்பையும் திசை திருப்புவதும் அடக்குவதுமே ஆகும்.

இலாப அமைப்பிலோ அல்லது இலங்கையின் தேசிய எல்லைகளிலோ உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடிக்கு தீர்வு கிடையாது என்று சோசலிச சமத்துவக் கட்சி மீண்டும் மீண்டும் விளக்கியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு குறிப்பாக முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியின் கூர்மையான வெளிப்பாடாகும்.

ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் பிரதமர் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை ஈவிரக்கமின்றி உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதுடன், எந்தவொரு எதிர்ப்பிற்கும் எதிராக பொலிஸ் அரச நடவடிக்கைகளை பயன்படுத்தவும் தயங்காது.

அவசரகாலச் சட்டம் இன்னும் அமுலில் உள்ளது. இரவு நேர ஊரடங்கு இன்னும் அமுலில் உள்ளது. நாட்டின் சுதந்திர வர்த்தக வலயங்கள் உட்பட நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சமூக ஊடகங்கள் மீதான அடக்குமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வேலைத் தளங்கள், தொழிற்சாலைகள், பெருந்தோட்டங்கள் மற்றும் அயல்புறங்களில் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதன் மூலம் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தை பிரச்சினைகளை அதன் சொந்தக் கைகளில் எடுத்துக் கொள்ளுமாறு சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்ய இந்தக் குழுக்கள் போராடக்கூடிய கொள்கைகளையும் அது கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

இத்தகைய போராட்ட அமைப்புகளைக் கட்டியெழுப்புவதன் மூலம், தொழிலாள வர்க்கம் ஏழைகளையும் ஒடுக்கப்பட்டவர்களையும் தன் பக்கம் அணிதிரட்டி, சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு அரசியல் போராட்டத்திற்கு அடித்தளம் அமைக்க முடியும். அத்தகைய போராட்டம், சோசலிச எதிர்காலத்திற்கான பொதுவான போராட்டத்தில் ஈடுபடுவதற்கு, சர்வதேச அளவில் இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்கின்ற குறிப்பாக இந்தியாவிலும் தெற்காசியாவிலும் உள்ள தொழிலாளர்களை நோக்கித் திரும்புவது அவசியமாகும்.

Loading