முன்னோக்கு

ரோஜர் வாட்டர்ஸ் இசை நிகழ்ச்சியில்: நெருக்கடி காலகட்டத்தில் கலையும் அரசியலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புகழ்பெற்ற இசைக் கலைஞரும் சமூக ஆர்வலரும், 1968 இல் இருந்து 1984 வரைப் பிங்க் ஃபிளோய்ட் (Pink Floyd) குழு மற்றும் அதன் கற்பனை உந்துசக்தி பிரிவின் இணை நிறுவுனராக இருந்தவருமான ரோஜர் வாட்டர்ஸ், மல்டிமீடியா அமைப்புகளுடன் கூடிய அவர் இசை நிகழ்ச்சியான This Is Not a Drill நிகழ்ச்சிக்காக வட அமெரிக்கா முழுவதும் தற்போது சுற்றுப் பயணம் செய்து வருகிறார். இந்த இசை நிகழ்ச்சிகளில் குறைந்தபட்சம் ஒரு மில்லியன் பேராவது கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Roger Waters performing in 2018. (AP Photo/Silvia Izquierdo) [AP Photo/Silvia Izquierdo] [AP Photo/Silvia Izquierdo]

ஜூலை 23 இல் டெட்ராய்டில் நடந்த இசை நிகழ்ச்சி, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமான ஆளும் உயரடுக்குகளின் ஈவிரக்கமற்றத் தன்மையைக் கண்டிக்கும் வாட்டர்ஸின் பரந்த கலைத்துவ தொகுப்பைப் பயன்படுத்துகிறது. ஏகாதிபத்தியப் போர், பாசிசம், தேசியவாத விஷம், அகதிகளின் நிலைமை, அரசு ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்கள், உலகளாவிய வறுமை, சமூக சமத்துவமின்மை, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் அணு ஆயுத நிர்மூலமாக்கலின் அபாயம் என நடைமுறையளவில் ஒவ்வொரு பாடலும் நம் காலத்தின் அழுத்தமான பிரச்சினைகளை நோக்கி திரும்பி உள்ளது.

மிகவும் அசாதாரணமான மற்றும் முக்கியமான இத்தகைய ஒரு நிகழ்வு, சிறப்புக் கவனம் கோருகிறது, அனைத்திற்கும் மேலாக ஏனென்றால் இது முன்னோடி இல்லாத ஒரு நெருக்கடி காலகட்டத்தில் கலை மற்றும் அரசியலுக்கு இடையிலான சிக்கலான பிரச்சினையை, பெரும் எண்ணிக்கையிலான மக்களின் நிஜமான அனுபவத்தில், உயர்ந்த மட்டத்தில் அழுத்தமாக எழுப்புகிறது.

டெட்ராய்ட் இசை நிகழ்ச்சி ஒரு குறிப்பிடத்தக்க இசை அனுபவமாக, காட்சி மற்றும் அறிவுசார் அனுபவமாக இருந்தது. பிங்க் ஃபிளோய்ட் குழுவில் அப்போது வாட்டர்ஸ் தலைமைப் பொறுப்பில் இருந்த அந்த வேளையில் அக்குழுவில் இடம் பெற்ற பாடல் தொகுப்புகளில் இருந்து பல மறக்க முடியாத பாடல்களை இந்தThis Is Not a Drill நிகழ்ச்சி உள்ளடக்கி இருந்தது என்றாலும், இது நினைவுப் பாடல்களுக்கான சுற்றுப் பயணமாக இருக்கவில்லை. உண்மையில் சொல்லப் போனால், யாரும் 'சிறிது நேரம் கூட அவர்களின் பிரச்சினைகளை மறந்து விடுவதை' வாட்டர்ஸ் விரும்பவில்லை. அந்தப் பாடல்கள் தொடர்ந்து நடந்து வரும் சமூக மற்றும் அரசியல் அபிவிருத்திகளை வெளிப்படுத்துவதை உறுதி செய்வதே அந்த மாலை முழுவதும் அவரின் முக்கிய அக்கறையாக இருந்தது.

வாட்டர்ஸின் தனிப் படைப்பான 'தி பவர்ஸ் தட் பி' (1987 - The Powers That Be) இல் இருந்து அதிகம் அறியப்படாத ஒரு பாடல், பொலிஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவக் குண்டு வெடிப்பு காட்சிகளுக்கு எதிராக இடி முழங்கும் பாணியில் நிகழ்த்தப்பட்டது. அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் பொலிஸ் வன்முறையால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட இரண்டு டஜன் நபர்களுக்கான வார்த்தை அஞ்சலியோடு அந்தக் காட்சி முடிவடைகிறது. ஒவ்வொரு மரண அறிவிப்புக்கும் பார்வையாளர்களின் கோபமான எதிர்ப்புகள் அதிகரித்தன.

ஆழ்ந்த 1992 போர்-எதிர்ப்பு பாடலான 'The Bravery of Being Out of Range,' ரொனால்ட் ரீகனில் இருந்து ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியின் படங்களையும், அவர்கள் ஒவ்வொருவரின் மீதும் 'போர்க் குற்றவாளி' என்ற வார்த்தைகளை மேலே சேர்த்துக் காட்டியும், அவர்களின் கொலைபாதக வெளியுறவுக் கொள்கைகளின் விவரிப்புகளுடன் வாட்டர்ஸ் வழங்குகிறார். ஜோ பைடெனைப் பொறுத்த வரையில், அவர் 'இப்போது தான் தொடங்கி உள்ளார்' என்று வாட்டர்ஸ் குறிப்பிடுகிறார். “அனுபவஸ்தரே, அடுத்து யாரைக் கொல்லப் போகிறீர்?” என்ற மறக்க முடியாத வரிகளைக் கொண்ட அந்தப் பாடலின் உச்சத்தில் — ஓர் இராணுவ டிரோன் அல்லது போர் விமானம் சுட்டுத் தள்ளினால் எப்படி இருக்கும் என்ற உணர்வை வழங்கும் உத்தேசத்தில், திடீரெனப் பார்வையாளர்களை ஓர் இசைக் காட்சி ஒளி சூழ்கிறது.

1972 ஆம் ஆண்டின் பயங்கரமான 'Run Like Hell' பாடலின் முடிவில், அனிமேஷன் படமானது, அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று குடியிருப்பு அண்டைப் பகுதியில் ஏவுகணைகளை வீசும் காணொளி காட்சியாக மாறுகிறது. இது 2007 இல் ஈராக்கில் கொல்லப்பட்ட 10 அப்பாவி மக்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் உண்மையான காட்சிகள் என்று எழுத்து விளக்குகிறது. இந்தக் காணொளி 'துணிச்சலாக செல்சியா மானிங்கால் கசிய விடப்பட்டது' என்றும், 'ஜூலியன் அசான்ஜ் துணிச்சலாக வெளியிட்டது' என்றும் அது குறிப்பிடுகிறது. பின்னர் அந்தக் காட்சி அமைப்பில் 'ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்' என்றும் 'கொலைகாரர்களைச் சிறையில் அடை' என்றும் பொறிக்கப்படுகிறது, இது அந்த மாலை வேளையில் மிகவும் உரத்த ஆரவாரங்களை உருவாக்குகிறது.

அந்தப் பாடல், சிறப்பாக எழுதப்பட்ட, பெரிதும் கவலைப்படுத்தும் ஒரு குறிப்புடன் முடிவடைகிறது. வாட்டர்ஸின் இசைக்குழு முதலில் 1972 இல் புகழ் பெற்ற Dark Side of the Moon பாடல் தொகுப்பில் இருந்து, “Us and Them,” “Any Colour You Like” மற்றும் “Brain Damage” ஆகிய பாடல்களைக் கலவையாகப் பாடுகிறது. அந்த ஒவ்வொரு பாடலிலும் பாடகர்களின் ஒருமித்த குரல் ஒரே சீராக அதிகரிக்கிறது, அதற்கேற்ப உலகெங்கிலுமான மக்களின் உருவங்களும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கி, இறுதியில் நூற்றுக் கணக்கானவர்கள் பெருகுவதாக அமைக்கப்பட்டுள்ளது. இளம் வயதிலேயே போர்களால் பாதிக்கப்பட்டவர்கள், தொழில்துறைத் தொழிலாளர்கள், தாய்மார்கள், நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், வீடற்றவர்கள் எனப் பல தரப்பட்ட மனிதர்களின் உருவங்களை இது காட்டுகிறது. இது ஒரு மனிதாபிமானம் மிக்க ஒன்றிணைக்கும் கற்பனை, இது 'மூளைப் பாதிப்பு' என்ற முடிவுடன் அந்த பிரமாண்டமான திரையில் நிறைவடைகிறது. இந்த உலகில் எவ்வளவு இழக்க வேண்டி இருக்கிறது என்பதற்கு இது வாட்டர்ஸின் ஒரு நினைவூட்டலாக உள்ளது.

இந்தப் பாடல் கலவைத் தொடர்ந்து உடனடியாக, அதிகம் அறியப்படாத ஆனால் மிகவும் பலமான 'Two Suns in the Sunset” (1983) பாடல் வந்தது. அணு ஆயுதப் போரின் தற்போதைய அபாயங்கள் குறித்த குறிப்புகளுடன் வாட்டர்ஸ் இந்தப் பாடலை அறிமுகப்படுத்துகிறார், இது தெளிவாக உலகின் மிகப் பெரிய அணு ஆயுதச் சக்திகள் சம்பந்தப்பட்டுள்ள, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா/நேட்டோ தூண்டிவிட்ட போரைச் சுட்டிக் காட்டியது. முதலில் கிராமப்புறமும், கிராமப் புறத்தில் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் ஒருவரின் அனிமேஷன் செய்யப்பட்ட பிரகாசமான படமும் பயமுறுத்தும் வகையில் தன்மை மாறுகின்றன. ஓர் அணு குண்டின் புகை மேகத்தில் இருந்து வெளிப்படும் 'வெளிச்சம்' என்பதை நம்மால் உணர முடிகிறது, அந்தக் காட்சியில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சாம்பலாகிறார்கள்.

எண்ணற்ற இலக்கியம் மற்றும் இசை இதழ்கள் மூலம் வழங்கப்படும், ஒவ்வொரு கலை மற்றும் நாடகக் கல்லூரியிலும் கற்பிக்கப்படும், பாரம்பரிய ஞானம், எண்ணெய்யும் தண்ணீரும் போல, கலையையும் அரசியலையும் கலக்காமல் இருப்பது நல்லது என்கிறது. சமூக ஈடுபாடு முட்டாள்தனம் என்பதை இளம் கலைஞர்கள் மீது திணிக்க, அவர்களைப் பயமுறுத்த, கடந்த காலத்தில் இருந்து பல்வேறு எச்சரிக்கையூட்டும் எடுத்துக்காட்டுகள் வழமையாக உருவாக்கப்படுகின்றன. இன்னும் பொதுவாகவே கூட, அழகியல் வடிவங்களை உருவாக்கும் கலைஞரும் அதை இரசிக்கும் பார்வையாளர்களும் வெறும் வெற்று எந்திரங்கள் என்பதைப் போல, ஒருவர் வடிவத்தை உருவாக்குகிறார் மற்றவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப் போல, அழகியல் கூறுபாடு அதற்குள்ளேயே இருக்கும் ஒரு விஷயம், பெருந்திரளான மக்களின் வாழ்க்கை மற்றும் கவலைக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே மேலோங்கிய கருத்தாக உள்ளது.

கலைஞருக்கு வலுவான கண்ணோட்டங்கள் இருந்தால், அவர் ஆணோ அல்லது பெண்ணோ அவருக்கு உள்ளேயே வைத்துக் கொள்வது நல்லது என்று உத்தியோகபூர்வக் கருத்து இவ்வாறு செல்கிறது. பல கலைஞர்களும் மற்றும் இசைக் கலைஞர்கள், துரதிர்ஷ்டவசமாக, இந்தக் கருத்துக்களுக்கு ஏற்ப வாழ்கிறார்கள். ஆனால் வாட்டர்ஸ் அவர்களில் ஒருவர் இல்லை. இந்த மொத்த இசை நிகழ்ச்சிப் பயணமும் அத்தகைய கருத்துக்களைப் பெரும் பிரயத்தனத்தோடு நனவுபபூர்வமாக மறுப்பதாக உள்ளது. அந்த மல்டிமீடியா காட்சி அமைப்பின் ஒரு தொடக்கச் செய்தி இதைக் கூறுகிறது: ''நான் பிங்க் ஃபிளோய்ட்டை நேசிக்கிறேன், ஆனால் நான் ரோஜர் அரசியல் நபர்களுடன் நிற்க முடியாது,' என்பவர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், இப்போதே, இந்தத் தருணமே, இந்த இடத்தை விட்டு ஓடுவது உங்களுக்கு நல்லது.” எவ்வளவு பொருத்தமான வார்த்தைகள்! யதார்த்தத்தில், ஈடு இணையற்ற கொந்தளிப்பும் துன்பமும் நிறைந்த இந்த நம் காலத்தில் கலையில் எதிர்ப்பின் அம்சங்கள் இல்லாவிட்டால், அது எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க முடியும்? அதன் பார்வையாளர்களுக்கு அது என்ன கூறுவதாக இருக்கும்? கலைக்கும் அரசியலுக்கும் இடையே தொடர்பில்லை என்ற பொய்யான பாகுபாட்டை ஏற்கும் கலைஞர், அவர் ஆணோ அல்லது பெண்ணோ அவருக்கு 'உரிய இடத்தை' அறிந்திருந்தாலும், யாருக்கும் பெரிதாக அர்த்தம் இல்லாதவராக, நிச்சயமாக நிலைத்திருக்க முடியாதவராகவே இருப்பார்.

அதிகாரங்கள் அபாயத்தை உணர்கின்றன. This Is Not a Drill நிகழ்ச்சிக்குச் சில சாதகமான செய்திகளும் வந்தன என்றாலும், வெளிப்படையாக முக்கிய பத்திரிகைகளில் செய்தி வரவில்லை. டொரொன்டோவில் நடந்த வாட்டர்ஸின் இரண்டு இரவு நிகழ்ச்சிகளைக் குறித்து டொரோன்டோ ஊடகம் எந்த முக்கிய செய்தியும் வழங்க மறுத்ததற்காக, சமீபத்தில் வாட்டர்ஸ் அதற்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். விமர்சகர்கள் கோபமான முகச் சுழிப்பு இல்லாமல் அவர்களின் இசைக்கு முன்னுரிமை வழங்கி இருந்தனர்.

டொரோண்டோவில் வாட்டர்ஸின் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது என்ற முடிவு, உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கான அவர் எதிர்ப்போடு தொடர்புபடுத்த வேண்டி உள்ளது. அந்த மோதலில் இந்த இசைக் கலைஞர் ஒரு கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். பிற்போக்குத்தனமான ரஷ்யப் படையெடுப்பை உறுதியாக எதிர்க்கும் அதே வேளையில், 'உக்ரேனில் நீண்ட காலமாகத் திட்டமிடப்பட்டு வந்த கிளர்ச்சி வாஷிங்டனில் உள்ள போர்வெறி கொண்ட குண்டர்களுக்கு சிறப்பாக இருக்கும். இதைத் தான் அவர்கள் கனவு கண்டு வந்தார்கள்,” என்று வாட்டர்ஸ் தெரிவித்திருந்தார்.

வாட்டர்ஸின் சமூக ஈடுபாடு, வரலாற்றுத் தகவல்கள் பொதிந்த இசை நிகழ்ச்சி, ஆழமான கலைப் பணிகளுடன் கலந்த அருமையான அரசியல் பகுப்பாய்வு ஆகியவற்றால் ஆடிப் போய் விடுகிறோம். வாட்டர்ஸ் முறையாக அபிவிருத்தி செய்யப்பட்ட ஓர் அரசியல் முன்னோக்கை முன்வைக்கவில்லை, ஒரு குறிப்பிட்ட போக்கின் வேலைத்திட்டத்தையும் முன்வைக்கவில்லை. This is Not a Drill நிகழ்ச்சியில் என்ன வெளிப்படுகிறது என்றால் அநீதிக்கு எதிராக, போருக்கு எதிராக, உத்தியோகபூர்வ பாசாங்குத்தனத்திற்கு எதிராக மற்றும் பொய்களுக்கு எதிராக ஆழ்ந்த சீற்றம் வெளிப்படுகிறது.

78 வயதான வாட்டர்ஸ், அவரை விட பாதி வயதில் இருக்கும் ஒருவரின் ஆற்றலையும் உத்வேகத்தையும் கொண்டிருப்பதுடன், வெறுமனே நினைவு பாடல்கள் பாடும் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவில்லை. அவர் வயதில் உள்ள மற்ற இசைக் கலைஞர்கள் அவர்களின் பழைய பிரபலப் பாடல்களைப் பாடுவதற்காகத் தொடர்ந்து சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்கள், அனேகமாக வாழ்வதற்கான சம்பாத்தியத்திற்காக இருக்கலாம். அவர்களில் பரந்த பெரும்பான்மையினர் —குறிப்பாக 1960 களின் மக்கள் உரிமைப் போராட்டங்கள் மற்றும் வியட்நாம் போர் எதிர்ப்பு போராட்டங்களில் வேரூன்றிய கலையைக் கொண்டிருப்பவர்கள்— பல தசாப்தங்களுக்கு முன்னரே அவர்களின் கோபத்தைத் தொலைத்து விட்டார்கள். அவர்கள் சமூகத்துடன் அவர்களின் சமூக மற்றும் கலைத்துவ சமாதானத்தை உருவாக்கிக் கொண்டனர். அவர்களிடம் கூறுவதற்குப் புதிதாகவோ முக்கியமாகவோ எதுவும் இல்லை என்பதால் அவர்கள் தொடர்ந்து அவர்களின் பழைய தொகுப்புகளையே கச்சேரியில் காட்டி வருகிறார்கள். எல்லாவற்றையும் விட மோசமானது என்னவென்றால், இரத்தத்தில் ஊறிய அமெரிக்க ஜனாதிபதிகளின் கரங்களில் இருந்து பெற்ற வெட்கக் கேடான 'அகலமான வானவில் நிற பட்டை' அவர்கள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்க, அவர்கள் கென்னடி சென்டர் கவுரவத்தைக் கூட கொண்டிருக்கலாம்.

மறுபுறம், வாட்டர்ஸ் ஒரு 'புராணக்கதை' (legend) அல்ல, அதாவது நினைவுச்சின்னம் அல்ல. அவர் உயிர்ப்புடன், செயல்பட்டு வரும், ஒரு சிந்திக்கும் கலைஞராக வாழ்கிறார். அவர் இன்னமும் செயலூக்கத்துடன், முன்னோக்கி நகர்ந்து வருகிறார். அவரது படைப்பானது அவரது காலத்தின் நிலைமைகளுக்கு ஓர் ஆழ்ந்த கலைத்துவ விடையிறுப்பாக உள்ளது.

அந்த மூன்று மணி நேர நிகழ்ச்சியானது, மேதைமை பொருந்திய இசைக் கலைஞர்களின் பங்கேற்பை உள்ளடக்கிய ஒரு சிறப்பார்ந்தச் சுற்றுப் பயணமாக இருந்தது. வாட்டர்ஸ் அவரது சுற்றுப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், “யதார்த்தத்திற்கு எதிரான ஒரு போராட்டம்… எப்போதுமே நிஜமான படைப்பாற்றலின் பாகமாக இருக்கிறது என்ற லியோன் ட்ரொட்ஸ்கியின் முன்மொழிவை ஊர்ஜிதப்படுத்துகிறது, மேலும் கலையின் ஒவ்வொரு புதிய போக்கும் — நவீன அரங்க அமைப்புடன் கூடிய இதுபோன்றவொரு இசை நிகழ்ச்சி ஒரு 'புதிய போக்காக' கருதப்பட வேண்டும் என்கின்ற நிலையில் — 'கிளர்ச்சிகரமாகத் தொடங்கி உள்ளது.'

ஆகவே வாட்டர்ஸ் தீவிரச் சிந்தனையாளர் என்பதோடு, தயக்கமற்ற நேர்மையான ஒரு கலைஞர், உலகத்தைப் பற்றிய அவர் கருத்துகளில் தைரியமாக உள்ளார். அவரின் அதிர்வூட்டும் கலைப் பணியும், இப்போதைய இந்தச் சமூக அமைப்பு முறைக்கு அவரின் எதிர்ப்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பதோடு, ஒன்றை ஒன்று வளப்படுத்துகின்றன. ஏற்றுக் கொள்ளப்பட்ட வரம்புகளை மீறுவதை மிகக் கவனமாகத் தவிர்த்து விட்டு, இது மேலோட்டமாகத் திட்டம் தீட்டிப் பரப்பப்படும் 'இடதுவாத' கலைப் படைப்பு அல்ல. மிக நீண்ட காலத்திற்கு முன்னரே வாட்டர்ஸின் நாடி நரம்புகளில் 'கிளர்ச்சி' ஊறிப் போயிருந்தது, தொடர்ந்து அவர் அதையே சுவாசித்து உயிர் வாழ்கிறார். பார்வையாளர்கள் விமர்சனபூர்வமாகச் சிந்திப்பதற்கும், தற்போது என்ன இருக்கிறதோ அதற்கு எதிராகக் கோபத்தை உணரவும், ஒரு புதிய மற்றும் சிறந்த உலகத்தை உயிரோட்டமாகக் கொண்டு வர முடியும், கொண்டு வரப்பட வேண்டும் என்பதைப் பார்வையாளர்கள் உணர்வதற்கும் உத்வேகப்படுத்துகிறார்.

Loading