ரோஜர் வாட்டர்ஸ் CNN நேர்காணலிலும், போருக்கு அப்பாலான உலகம் இணையவழி கலந்துரையாடலிலும் அமெரிக்க போர் பிரச்சாரத்தை நிராகரித்தார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இங்கிலாந்தில் பிறந்த இசைக்கலைஞர்-இசையமைப்பாளரும் ஆர்வலருமான ரோஜர் வாட்டர்ஸ் ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான போரில் அமெரிக்க அரசாங்கத்தின் பங்கைக் கண்டித்து, சனிக்கிழமையும் திங்கட்கிழமையும் இடம்பெற்ற இரண்டு பொது நிகழ்வுகளிலும் ஏனைய சமகால அரசியல் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்தார்.

தற்போது வட அமெரிக்காவில் “This is Not a Drill” (இது ஒரு இராணுவ பயிற்சி அல்ல) என்ற தலைப்பில் 38 நாள் இசைநிகழ்ச்சி சுற்றுப்பயணத்தில் உள்ள வாட்டர்ஸ், மைக்கல் ஸ்மெர்கோனிஷ் உடன் CNN இல் ஒரு குறுகிய நேர்காணலில் சனிக்கிழமை காலை தோன்றினார். மேலும் திங்களன்று போருக்கு அப்பாலான உலகம் நடத்திய 90 நிமிட இணையவழி கலந்துரையாடலில் கலந்துகொண்டார் இடம்பெற்றார்.

ரோஜர் வாட்டர்ஸ் போருக்கு அப்பாலான உலகம் கலந்துரையாடலில்

இந்த நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவையும் தகவலளிக்ககூடியதுமாகும். ஏனென்றால் அமெரிக்க ஊடகங்கள் பல சர்வாதிகார ஆட்சிகளின் கீழ் இருப்பதைப் போலவே அதிகாரிகளுக்கு அடிபணிந்து பொதுவாக கடுமையாக தணிக்கை செய்யப்படுகின்றன. ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ போருக்கு எதிர்ப்பு மற்றும்/அல்லது சீனாவை பேய்த்தனமாக சித்தரிக்கும் பிரச்சாரம் அமெரிக்க தொலைக்காட்சியிலோ அல்லது தினசரி செய்தித்தாள்களின் பக்கங்களிலோ எதிர்க்கப்படுவதில்லை.

CNN நேர்காணலின் போது, வாட்டர்ஸ் தனது இசைநிகழ்ச்சிகளின் போது, ரொனால்ட் றேகன் ஜனாதிபதியாக இருந்ததிலிருந்து ஏனைய ஒவ்வொருரையும் போல ஒரு நீண்ட பட்டியலில் “இப்பொழுதான் ஆரம்பித்துள்ள” ஜோ பைடெனை ஏன் ஒரு 'போர்க் குற்றவாளியாக' இணைத்துள்ளார் என்பதை விளக்குவதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தினார்.

பைடெனின் குணாதிசயத்தைத் தூண்டிய உண்மைகளை மதிப்பாய்வு செய்கையில், வாட்டர்ஸ் தன் வாராந்திர CNN நிகழ்ச்சியிலும் மற்ற பத்திரிகை வெளியீடுகளிலும் ஒரு 'சமநிலை' வர்ணனையாளராக தன்னை முன்னிறுத்தும் ஸ்மெர்கோனிஷ் இனை அமெரிக்க பிரச்சாரத்திற்கான மற்றொரு ஊதுகுழல் என்று எடுத்துக்காட்டினார்.

பைடென் 'உக்ரேனில் தீயை எரியூட்டுகிறார் என்று வாட்டர்ஸ் விளக்கத் தொடங்கினார். அது மிகப் பெரிய குற்றம்” என்றார். இது ரஷ்யாவுடனான 'பயங்கரமான மற்றும் அழிவுகரமான போர்' என்று இசைக்கலைஞர் குறிப்பிட்டபோது, ஸ்மெர்கோனிஷ் குறுக்கிட்டு, 'ஆனால் நீங்கள் படையெடுக்கப்பட்ட தரப்பைக் குற்றம் சாட்டுகிறீர்கள். நீங்கள் அதை மாறி புரிந்துகொண்டுவிட்டீர்கள்' என்றார்.

வாட்டர்ஸ் அதற்கு 'அடிப்படையில் நேட்டோவை ரஷ்ய எல்லை வரை தள்ளும் நடவடிக்கை மற்றும் எதிர்வினை பற்றியது. மிகையில் கோர்பச்சேவ் சோவியத் ஒன்றியத்தை முழு கிழக்குப் ஐரோப்பிய பகுதியிலிருந்தும் பின்வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியபோது தாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம் என்று உறுதியளித்தனர்' என பதிலளித்தார்.

குறிப்பிடத்தக்க வகையில், நேர்காணலின் எழுத்துப்பதிவை வலைத் தளத்தில் வெளியிடப்பட்டபோது, வாட்டர்ஸின் கருத்துகளில் ஒரு பகுதியை CNN தயாரிப்பாளர்கள் நீக்கிவிட்டனர் என்பது தெளிவாகியது. உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமியர் செலென்ஸ்கியைப் பற்றிப் பேசுகையில், வாட்டர்ஸ் 'யாரோ ஒருவர் செலென்ஸ்கியின் காதில் கிசுகிசுத்துவிட்டார்கள் அல்லது டொன்பாஸில் சமாதானம் செய்வது மற்றும் மின்ஸ்க் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவது மற்றும் அவர்களின் ரஷ்ய அண்டை நாடுகளுடன் சமாதானம் செய்வது பற்றி அவர் தனது கருத்தை போருக்காக முழுவதுமாக மாற்றிக்கொண்டார்' என்று கருத்துரைத்தார்.

ஸ்மெர்கோனிஷ், 'விடுதலையாளர்களாக நமது பங்கு என்ன?' என்று கேட்டார். அதற்கு வாட்டர்ஸ், 'விடுதலையாளர்களாக இருப்பதற்கும் உங்களுக்கும் எந்தப் பங்கும் இல்லை' என்று பதிலளித்தார். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க தலையீட்டை ஸ்மெர்கோனிஷ் சுட்டிக்காட்டியபோது, வாட்டர்ஸ் “கடவுளுக்கு நன்றி, ரஷ்யர்கள் ஏற்கனவே இரத்தக்களரியான போரில் வெற்றி பெற்றிருந்தனர். உங்களையும் என்னையும் நாஜி அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற 23 மில்லியன் ரஷ்யர்கள் இறந்ததை மறந்துவிடாதீர்கள் எனக் குறிப்பிட்டார்.

இது ரஷ்யா 'போரில் இருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்' என்றும் 'உக்ரேன் மீது படையெடுத்திருக்கக்கூடாது' என்றும் ஸ்மெர்கோனிஷை வலியுறுத்தத் தூண்டியது. வாட்டர்ஸ் CNN வர்ணனையாளரிடம் 'மைக்கல், நீங்கள் போய் இன்னும் கொஞ்சம் படித்துவிட்டு, சீனர்கள் அணு ஆயுத ஏவுகணைகளை மெக்சிகோவிலும் கனடாவிலும் நிறுத்தினால் அமெரிக்கா என்ன செய்யும் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சியுங்கள் என்று கூறினார்.

'நாங்கள் பேசுவது போல், தைவானைச் சுற்றி வளைப்பதில் சீனர்கள் மிகவும் தீவிரமாக உள்ளனர்' என்று ஸ்மெர்கோனிஷ் மழுப்பினார். வாட்டர்ஸ் மேலும் ஊக்கமுற்றவராக, “அவர்கள் தைவானை சுற்றி வளைக்கவில்லை. தைவான் சீனாவின் ஒரு பகுதி. அது 1948 ஆம் ஆண்டு முதல் அனைத்து சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உங்களுக்குத் அதுபற்றி தெரியாவிட்டால், நீங்கள் போதுமான அளவு வாசித்திருக்க்கவில்லை” என்றார்.

அவர்களின் உரையாடல் எதையாவது தீர்த்துவைத்ததா என்று ஸ்மர்கோனிஷ் அவரிடம் கேட்டபோது, வாட்டர்ஸ் அப்பட்டமாகப் பேசினார்: “இல்லை... ஏனென்றால் நீங்கள் உங்கள் தரப்பின் பிரச்சாரத்தை நம்புகிறீர்கள். நீங்கள் மனித உரிமைகளைப் பற்றி உரையாட முடியாது. உண்மையில் எதையும் வாசிக்காமல் தைவானைப் பற்றி உரையாட முடியாது என்றார்.

வெட்கப்படாமல், ஸ்மெர்கோனிஷ் மேலும் சீன எதிர்ப்பு பிரச்சாரத்தை இருமடங்காக தூண்டினார்: 'நீங்கள் மனித உரிமைகள் பற்றி பேசுகிறீர்கள் என்றால், குற்றவாளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் சீனர்கள்' என்றார். இதற்கு வாட்டர்ஸ் 'சீனர்கள் ஈராக்கை ஆக்கிரமித்து 2003 இல் ஒரு மில்லியன் மக்களைக் கொல்லவில்லை. உண்மையில், எனக்கு நினைவிருக்கும் வரை - ஒரு நிமிடம் பொறுங்கள் நீங்கள் தான் சீனர்களை ஆக்கிரமித்து கொலை செய்து, படுகொலை செய்தீர்கள்?' என பதிலளித்தார்.

ஸ்மெர்கோனிஷ், 'அவர்களின் சொந்த மக்களை' என்று ஆத்திரமூட்டும் வகையில் பதிலளித்தபோது, வாட்டர்ஸ் அப்பட்டமாக 'முட்டாள்த்தனம். அது முழுமையாக அர்த்தமற்றது. நீங்கள் போய் வாசிக்க வேண்டும்' எனப் பதிலளித்தார்.

திங்கட்கிழமை மதியம், ஒரு உலகளாவிய சமாதானத்திற்கான அமைப்பான போருக்கு அப்பாலான உலகம்(World Beyond War) என்பதன் டோட் பியர்ஸ் மற்றும் டேவிட் ஸ்வான்சன் ஆகியோரால் நடத்தப்பட்ட ஒரு விரிவாக்கப்பட்ட இணைய கலந்துரையாடலில் வாட்டர்ஸ் பங்கேற்றார். இந்த இணைய மன்றத்தில், இசைக்கலைஞர் அறிமுகக் கருத்துகளைத் தெரிவித்து, பின்னர் மிகுதி நேரம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களினதும் நேரலை பார்வையாளர்களினதும் கேள்விகளுக்கு பதிலளிக்க அர்ப்பணிக்கப்பட்டது.

90 நிமிட நிகழ்ச்சி முழுவதும், வாட்டர்ஸ் வரலாற்று மற்றும் சமகால சர்வதேச அரசியலில் அவரது கணிசமான அறிவை வெளிப்படுத்தினார். காசா மீதான சமீபத்திய இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல், கியூபா மீதான அமெரிக்கத் தடை மற்றும் 2018 இல் சிரியா மீதான நேட்டோ தாக்குதல், அசாத் ஆட்சி இரசாயனத் தாக்குதலை நடத்தியதாக தவறான கூற்றுகளால் தூண்டப்பட்ட பிரச்சினைகளில் அவர் விவாதித்த விஷயங்களில் அடங்கும்.

பிங்க் பிளோய்ட் மற்றும் அவரது தனி இசை படைப்புகள் பற்றிய கேள்விகளுக்கும் வாட்டர்ஸ் பதிலளித்தார். அவரது பதில்களில், தனக்கும் குழுவில் உள்ள மற்றவர்களுக்கும் இடையே பல தசாப்தங்களாக கலை மற்றும் அரசியல் பற்றிய உராய்வுகள் இருந்தபோதிலும், அவர் தனது சக பிங்க் பிளோய்ட் இசைக்குழு உறுப்பினர்களின் பங்களிப்புகளைப் பற்றி புறநிலைரீதியான ஒரு நிலைப்பாட்டில் இருக்க முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.

அவரது தற்போதைய சுற்றுப்பயணத்தைப் பற்றி வாட்டர்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் நான் செய்த மற்ற நிகழ்ச்சிகளைப் போலல்லாமல், இந்த முறை ஒரு விதமான இயக்கமாக மாறுவதைப் போன்ற ஒரு வித்தியாசமான உணர்வை நான் பெறுகிறேன். நான் ஒரு இயக்கத்தை வழிநடத்துகிறேன் என்று சொல்லவில்லை, ஆனால் நான் சொல்வது என்னவென்றால், நான் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன் மற்றும் பார்வையாளர்களில் பலர் அதில் ஒரு பகுதியாக உள்ளனர் அல்லது அதன் ஒரு பகுதியாக மாறும் திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். நாங்கள் உண்மையில் ஒன்றாக இருப்பதைப் போலவும், நாங்கள் உண்மையில் ஒருவருக்கொருவர் பேசுவதைப் போலவும் உள்ளது' என்றார். இது ஒரு குறிப்பிடத்தக்க உட்பார்வையும் மற்றும் உலகளாவிய தீவிரமயமாக்கல் நிகழ்வதையும் சுட்டிக்காட்டுகிறது.

போருக்கு அப்பாலான உலகம்இணைய கலந்துரையாடலின் நன்மைகளில் ஒன்று, வாட்டர்ஸ் CNN இல் பேசிய சில விஷயங்களை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியது.

வாட்டர்ஸ் தனது “This is Not a Drill” (இது ஒரு இராணுவ பயிற்சி அல்ல) இசைநிகழ்ச்சி சுற்றுப்பயணத்தின் உட்கருத்து, 'அது ஒரு பயிற்சியின் மற்றும் அவர்கள் 'நீங்கள் ஒரு அணுசக்தி போரில் இறக்கப் போகிறீர்கள்' என்று அவர்கள் கூறும் போது அவர்கள் செய்யும் அந்த முட்டாள்த்தனமான அறிவிப்புக்கு ஒரு பிரதிபலிப்பாக உருவானது என்று விளக்கினார். இது ஒரு பயிற்சி அல்ல.’ ... இந்த வழியில் இது ஒரு பயிற்சி என்றும் அது உண்மையானது அல்ல என்றும் அவர்கள் உங்களுக்குச் சொல்கிறார்கள்”.

'உலகத்தை இயக்கும் கும்பல் முட்டாள்கள்' அணு ஆயுதப் போரைக் கொண்டு வருவதற்கு 'இந்த நேரத்தில் ... என் வாழ்நாளில் எந்த நேரத்திலும் இல்லாததைக் காட்டிலும்' அதிகம் செய்கிறார்கள் என்று அவர் கூறினார். வாட்டர்ஸ் பின்னர் இன்றைய நாளை 1962 கியூபா ஏவுகணை நெருக்கடியுடன் ஒப்பிட்டு விளக்கினார், 'குறைந்தபட்சம் ஜோன் எவ். கெனடியும் நிகிதா குருஷ்சேவ்வும் ஒருவருக்கொருவர் விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.'

தற்போதைய நெருக்கடியில், வாட்டர்ஸ், 'அமெரிக்கப் பேரரசின் புதிய முதன்மை எதிரியாக ரஷ்யா வரையறுக்கப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டார். பைடென் மற்றும் வெளியுறவுச் செயலர் அண்டனி பிளிங்கென் 'மற்றும் அந்த பரிதாபகரமான குழுவினர் (இன்னும் பரிதாபகரமான எதிர்க் கட்சியை பற்றி குறிப்பிடத்தேவையில்லை) போன்றவர்கள் 'ரஷ்யர்களிடம் பேசவில்லை.'

'சீனா உலகைக் கைப்பற்ற முயல்கிறது' என்ற பொய்யை வாட்டர்ஸ் மறுத்தார். சீனர்களுக்கு அந்த இலட்சியம் இருந்தால், 'அவர்கள் ஏன் இராணுவத்திற்காக அதிக பணத்தை செலவிடுவதில்லை? அவர்கள் உலகின் இராணுவ செலவினங்களில் 3.1 சதவிகிதத்தை மட்டுமே கொண்டுள்ளனர். அதே சமயம் அமெரிக்கா 39 சதவிகிதத்தை கொண்டுள்ளது”.

ஒரு நீட்டிக்கப்பட்ட கருத்துரையில், மூத்த இசைக்கலைஞர் உண்மையில், அமெரிக்கா 'உலகை ஆள முயற்சிக்கிறது' என்று சுட்டிக்காட்டினார். மேலும் 'அதனால்தான் அவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ தளங்களைக் கொண்டுள்ளனர்; அதனால்தான் அவர்கள் சீனாவைச் சுற்றி வளைக்கிறார்கள்; அதனால்தான் அவர்கள் தினமும் பெரிய குண்டாந்தடியை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்; அதனால்தான் அவர்கள் தினமும் ஒரு குச்சியால் இந்த ஆபத்தான கரடியின் கண்ணில் குத்துகிறார்கள்; அதனால்தான் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவிரும்பவில்லை; அதனால்தான் அவர்கள் மின்ஸ்க் ஒப்பந்தங்களை ஆதரிக்கவில்லை; அதனால்தான் அவர்கள் நேட்டோவை ரஷ்யாவின் எல்லைவரை மட்டுமல்லாது தென் சீனக்கடல் வரை விரிவாக்க முயற்சிக்கிறார்கள். பெயரளவில் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என்று அழைக்கப்படும் ஒன்றின் ஒரு பகுதியாக தென் சீனக் கடல் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். தென் சீனக் கடலுக்கும் வடக்கு அட்லாண்டிக்கிற்கும் என்ன தொடர்பு? நானும் தெரிந்து கொள்ள விரும்பும் கேள்வி இது. அந்த கேள்விக்கான பதில் அங்குள்ள யாருக்காவது தெரிந்தால், நான் அதை அறிய விரும்புகிறேன்' என்றார்.

அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்தில் உள்ள பெருநிறுவன ஊடகங்களால் வாட்டர்ஸ் தாக்குதலுக்கு உள்ளானதில் ஆச்சரியமில்லை. The Hill திங்கட்கிழமை ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதன் தலைப்பில் “பிங்க் பிளோய்டின் வாட்டர்ஸ் ரஷ்யாவை ஆதரிக்கின்றார், பைடெனை ஒரு போர்க்குற்றவாளி என்று அழைக்கின்றார்” என்ற வெளிப்படையான பொய்யான தலைப்பு உள்ளது. புட்டின் ஆட்சியால் உக்ரேன் மீதான பெப்ரவரி ஆக்கிரமிப்புக்குப் பின்னர் வாட்டர்ஸ் என்ன சொல்லி வருகிறார் என்பதை கவனிக்கும் எவருக்கும் அவர் ரஷ்ய நடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை என்பது தெரியும்.

உக்ரேனிய பாசிசக் கூறுகளுடன் நெருங்கிய தொடர்புடைய ஆளும் உயரடுக்கைக் கொண்ட ஒரு நாட்டில் வெளியிடப்படும் கனடாவின் Globe and Mail, வாட்டர்ஸின் அரசியலைப் பொருட்படுத்தாத அதிருப்தி ரசிகர்களால் ட்விட்டர் இடுகைகளில் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்டவற்றால் ஒரு கட்டுரையை இணைத்துள்ளது. அந்தக் கட்டுரை அதன் வாசகர்களிடம் “ரசிகர்கள் ரோஜர் வாட்டர்ஸை அவதூறாகப் பேசுகிறார்கள் மற்றும் உக்ரேன் தொட்டர்பாக ஜோ பைடெனை ‘போர்க்குற்றவாளி’ என்று முத்திரை குத்திய பிறகு அவருடைய ‘“This is Not a Drill” நிகழ்ச்சிக்கு வாங்கிய நுழைவுச்சீட்டுகளை விற்கப் போவதாக மிரட்டி, ‘உனக்கு எது நன்றாக இருக்கிறதோ அதையே கடைப்பிடிக்க வேண்டும்’ என்று அவரிடம் சொல்கிறார்கள். வாட்டர்ஸ் பற்றிய ட்விட்டர் கருத்திடுகைகளின் ஆய்வு, அவரது கருத்துகளை ஆதரிப்பவர்கள் பெரும்பான்மையாக இருப்பதை நிரூபிக்கிறது. Globe and Mail ஒரு பாரம்பரியமான கம்யூனிச எதிர்ப்பு புலம்பலாகும்.

பிரித்தானியாவின் The Independent இணைய தளம், “பைடெனை உக்ரேன் தொடர்பாக ‘போர்க் குற்றவாளி’ என்று கூறியதற்கும், தைவான் சீனாவின் ஒரு பகுதி என்று கூறியதற்குமாக வாட்டர்ஸ் ஒரு பின்னடைவை எதிர்கொள்கிறார் என்று வலியுறுத்தியது. மீண்டும், இந்த வகையான தவறான தகவல்களின் நோக்கம், தாங்கள் 'அறிவிப்பதாக' கூறும் இந்த பின்னடைவைத் தூண்டுவதாகும். இந்த முட்டாள்தனமான மற்றும் வெளிப்படையாக CIA இனாலும், வெளிவிவகாரத்துறையினாலும் தூண்டப்பட்ட தந்திரோபாயங்களால் வாட்டர்ஸ் திகைப்படைய வாய்ப்பில்லை.

Loading