நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி நியூ யோர்க்கில் தாக்கப்பட்டார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளியன்று, மேற்கு நியூ யோர்க் மாநிலத்தில் உள்ள செட்டோகுவா என்ற இடத்தில் ஒரு இலக்கிய கலந்துரையாடலில் பங்கேற்க தயாராகிக்கொண்டிருந்த இந்திய-பிரிட்டிஷ் எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை ஒரு நபர் மேடைக்கு விரைந்து வந்து கத்தியால் குத்தினார்.

ருஷ்டி பலமுறை கத்தியால் குத்தப்பட்டார். அவரது கழுத்தில் உயிருக்கு ஆபத்தான காயங்கள் மற்றும் கல்லீரலிலும் கைகளிலும் சேதம் ஏற்பட்டது. எழுத்தாளர் பல நாட்கள் மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியுடன் இணைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவை சமீபத்தில் அகற்றப்பட்டு மருத்துவமனை ஊழியர்களிடம் பேசுவதாக கூறப்படுகிறது. அவர் ஒரு கண்ணை இழக்க நேரிடும் என்றாலும், அவர் உயிருடன் வாழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2018 இல் சல்மான் ருஷ்டி (Photo credit–ActuaLitté)

75 வயதான முக்கிய எழுத்தாளர் மீது இழிவான தாக்குதல் நிகழ்ந்தது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் ருஷ்டி, இஸ்லாத்தின் நிறுவனர், முகமது நபி மற்றும் பிசாசின் அவரது சோதனையைப் பற்றிய The Satanic Verses (சாத்தானின் வசனங்கள் 1988) புத்தகத்தை எழுதியவர். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்த நாவலை இறை பழிப்பாக கருதுகின்றனர். அதன் வெளியீட்டிற்குப் பின்னர், 1979 புரட்சியின் பின்னர் ஈரானின் தலைவரான ஷியா மதகுரு அயத்துல்லா ருஹொல்லா கொமேய்னி, ஃபத்வா எனப்படும் ஒரு மத தீர்ப்பை வெளியிட்டார். அது அவரது உயிரை எடுக்க முஸ்லிம்களை ஊக்குவித்தது.

தாக்குதல் நடத்தியவர் நியூ ஜேர்சியில் வசிக்கும் அமெரிக்க குடியுரிமை பெற்ற ஹாடி மட்டார் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டை முன்கூட்டியே வாங்கி, அந்த இடத்திற்கு பேருந்தில் செல்வதன் மூலம் மட்டார் தனது தாக்குதலைத் திட்டமிட்டார்.

24 வயதான மட்டார் லெபனானிலிருந்து குடியேறியவர்களின் மகனாவார். ஊடக தகவல்களின்படி, அவர் ஒரு முகநூல் பக்கத்தைக் கொண்டிருந்தார், அது கொமேய்னி உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாத தலைவர்களின் படங்களால் அலங்கரிக்கப்பட்டது. கொலை முயற்சி மற்றும் பிற குற்றங்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மட்டார், சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

கொமேய்னியின் ஃபத்வா வெளியிடப்பட்டபோது, அது மிகப்பெரிய சர்வதேச தாக்கத்தை ஏற்படுத்தியது. சாத்தானிய வசனங்களை (The Satanic Verses) வெளியிடுவதற்கு எதிராக ஈரானிலும் பாகிஸ்தானிலும் இலட்சக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ருஷ்டியின் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர் 1991 இல் கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டில் அவரது இத்தாலிய மொழிபெயர்ப்பாளர் பலத்த காயமடைந்தார். 1993 ஆம் ஆண்டில், அவரது நோர்வே வெளியீட்டாளர் மூன்று முறை சுடப்பட்டார் மற்றும் ருஷ்டியின் துருக்கிய மொழிபெயர்ப்பாளரின் உயிருக்கு பாதிப்புவிளைவிக்கும் முயற்சியின் விளைவாக, மத்திய துருக்கியில் உள்ள சிவாஸில் உள்ள ஒரு உல்லாசவிடுதியில் 37 அலேவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இது ஒரு படுகொலை அலேவி மக்களால் இன்னும் நினைவுகூரப்படுகிறது.

பெரிய அமெரிக்க புத்தக விற்பனையாளர்கள் இந்த நாவலை அமெரிக்காவில் விநியோகிக்க திறம்பட தடை விதித்தனர். முஸ்லீம்-விரோத பேரினவாதத்தின் தீப்பிழம்புகளையும் ஈரானுக்கு எதிரான போர் திட்டங்களையும் தூண்டிவிட ஏகாதிபத்திய சக்திகள் இந்த சம்பவங்களைப் பயன்படுத்தின.

ருஷ்டி தலைமறைவாக இருக்கத்தள்ளப்பட்டு பல ஆண்டுகளாக அரை இரகசிய வாழ்க்கை வாழ்ந்தார். மிக சமீபத்தில் அவர், நியூயோர்க் நகரில் இலக்கிய வட்டத்தில் காணப்படும் நபராகவும், துன்புறுத்தப்பட்ட எழுத்தாளர்களின் செய்தித் தொடர்பாளராகவும் மாறினார். செட்டோகுவாவில் நடந்த நிகழ்ச்சியில் ருஷ்டியை பாதுகாக்க மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இருக்கவில்லை.

தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய ஆட்சி, ஏகாதிபத்திய சக்திகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்த கடந்த தசாப்தத்தில் அவர் மீதான தீர்ப்பை ஆபத்தற்றதாக காட்டியிருந்தாலும், ஃபத்வாவை ஒருபோதும் இரத்து செய்யவில்லை.

எவ்வாறாயினும், ருஷ்டியின் துன்புறுத்தலுக்குப் பின்னால் உள்ள முக்கிய அரசியல் பிரச்சினைகள் மீண்டும் உயிர்ப்பித்துள்ளன. ஈரானிலும் மத்திய கிழக்கிலும் உள்ள மக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர். 1991 வளைகுடாப் போர், 2003 ஈராக் போர், நாட்டின் சமூக மற்றும் உள்கட்டமைப்பை அழித்த 2011 லிபியா மீதான குண்டுவீச்சு உட்பட, 1989 முதல் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி மற்றும் பிற சக்திகளிடமிருந்து எண்ணற்ற அழிவுகளை அவர்கள் சந்தித்துள்ளனர். 2014 க்குப் பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாத கிளர்ச்சியாளர்களின் பக்கத்தில் நின்று சிரிய உள்நாட்டுப் போரில் தலையிட்டு நாட்டை இஸ்லாமிய ஆயுதக்குழுக்களின் பக்கம் திருப்பியது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள முஸ்லிம்கள் தொடர்ந்து பாகுபாடு மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நியூயோர்க் நகரில் அதிருப்தி ஊடகவியலாளர் மசிஹ் அலினெஜாட் மற்றும் ஏகாதிபத்திய போர்வெறியாளர் ஜோன் போல்டனின் உயிர்கள் மீது ஈரானிய தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சமீபத்திய ஊடகத் தகவல், தற்போதுள்ள பெரும் பதட்டங்களை இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. மேலும் அமெரிக்கா இன்னும் ஈரானை அப்பிராந்தியத்தில் ஒரு தடையாக பார்ப்பதுடன், ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான அதன் உந்துதலில் தடையாக கருதுகிறது.

எவ்வாறாயினும், ருஷ்டி மீதான கோழைத்தனமான தாக்குதல், எந்த வகையிலும் தொழிலாள வர்க்கம் அல்லது மத்திய கிழக்கு அல்லது ஈரானில் உள்ள கிராமப்புற ஏழைகள் அல்லது வட அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் குடியேறியவர்களின் நலன்களை முன்னேற்றப்போவதில்லை. ஈரானிய ஆட்சி ஒரு பிற்போக்கு முதலாளித்துவ அரசாகவே உள்ளது. இது தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமானதும், பிராந்தியத்தில் உள்ள மற்ற அரசுகளைப் போலவே, ஒவ்வொரு திருப்பத்திலும் ஏகாதிபத்திய சக்திகளுடன் சமரசம் கோருகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தலைவர்களால் உலகில் எல்லா இடங்களிலும் மத-வகுப்புவாத வழிகளில் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது.

1989ல் சாத்தானிய வசனங்களுக்கு (The Satanic Verses) எதிரான வெகுஜன எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும், கொமேய்னி வெளியிட்ட ஃபத்வாவைத் தொடர்ந்தும், அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக்கின், புல்லட்டின் பத்திரிகை (உலக சோசலிச வலைத் தளத்தின் அச்சு முன்னோடிகளில் ஒன்று) ஃபத்வாவை எதிர்த்து ருஷ்டியைப் பாதுகாக்கும் அறிக்கையை வெளியிட்டது. அது பின்வருமாறு குறிப்பிட்டது:

'புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் வாழ்க்கைக்கு எதிராக ஈரானில் கொமேய்னி ஆட்சியால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை வேர்க்கர்ஸ் லீக் உறுதியாகக் கண்டிக்கிறது. நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ தேசியவாத ஆட்சியால் படுகொலை செய்ய கோரப்பட்ட ருஷ்டிக்கு ஒற்றுமையை வழங்குமாறு சர்வதேச தொழிலாளர் இயக்கத்திற்கு அழைப்பு விடுக்கிறோம்…

'புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் மூலோபாய நலன்களையும், ஈரானுக்குள் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்திய ஆத்திரமூட்டலுக்கு எதிராக ஈரானைப் பாதுகாப்பதும், தொடர்ந்து பாதுகாப்பதும் கொமேய்னியின் கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதைக் குறிக்கவில்லை அல்லது அவ்வாறானதாக குறைக்கமுடியாது. அவரது ஆட்சியின் பொருளாதார அடித்தளங்கள் முற்றிலும் முதலாளித்துவமானது மட்டுமல்லாது, மேலும் இறையாட்சி ஆட்சியாளர்களின் கொள்கைகள் சாராம்சத்தில் ஈரானிய முதலாளித்துவத்தின் நலன்களுக்கு சேவை செய்கின்றன.

அன்று போல் இப்போதும், ஏகாதிபத்தியத் தலைவர்கள் எழுத்தாளர்கள் துன்புறுத்தப்படுவதைக் கண்டு புலம்பி, கருத்துச் சுதந்திரத்தின் பாதுகாவலர்களாக காட்டிக் கொள்ள முற்பட்டுள்ளனர். பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், அவரது அரசாங்கம் ஜனநாயக விரோத, புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு சட்டத்திற்கு நிதியுதவி செய்கிறது மற்றும் இஸ்லாமிய மதகுரு ஹசன் இக்வியூசனை துன்புறுத்துகிறது மற்றும் ஆயிரக்கணக்கானோர் கோவிட் நோயால் இறந்ததில் பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் முழுக்கைகளும் மூழ்கியுள்ளது. இவர்களை போன்றவர்கள் ஒவ்வொருவரும் ருஷ்டிக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இன்னமும் பரவலாக வெறுக்கப்படும் ஜோன்சன், ருஷ்டி தாக்கப்பட்டதைக் கண்டு தான் 'திகைத்துப் போனேன்', “அதே நேரத்தில் நாம் மீண்டும் மீண்டும் பாதுகாக்கவேண்டிய ஒரு உரிமையை பிரயோகிப்பதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது” என்று கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ருஷ்டியுடன் நிற்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவர் 'அச்சுறுத்தப்படுவதை அல்லது மௌனமாக்கப்படுவதை மறுப்பதன் மூலம் அத்தியாவசிய, உலகளாவிய கொள்கைகளான உண்மை, தைரியம், விரிதிறன் ஆகியவற்றிற்கு ஆதரவாக நிற்கிறார்' என்றார்.

இதைவிட பாசாங்குத்தனத்தின் மிகவும் மோசமான காட்சியை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியாது. பைடென், ஜோன்சன் மற்றும் குழுவினர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜ் க்கு எதிராக தங்கள் சொந்த ஃபத்வாவை வெளியிட்டுள்ளனர். அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்காக பெல்மார்ஷ் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலையீட்டின் கொலைகாரத் தன்மை பற்றிய உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தும் அவரது சொந்த அசாதாரண துணிச்சலுக்காக அமெரிக்க அதிகாரிகள் அவரை விசாரணைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

Loading