அணுவாயுதப் போருக்கு எதிராக இலங்கை சோ.ச.க./IYSSE பகிரங்க இணையவழி கூட்டமொன்றை நடத்த உள்ளன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் 'அணுவாயுத போர் ஆபத்தை தடுக்க சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தை கட்டியெழுப்பு!' என்ற தலைப்பில் நடைபெறும் இணையவழி கூட்டத்தில் பங்கேற்குமாறும் அதற்காக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களை இங்கு பதிவு செய்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கின்றன. இந்தக் கூட்டம் அக்டோபர் 16, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும்.

[Photo: WSWS]

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க/நேட்டோ போர் இப்போது உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களுக்கு அணுசக்தி பேரழிவின் உடனடி அச்சுறுத்தலை முன்வைக்கிறது. உக்ரேனின் கார்கிவ் பகுதியில் ரஷ்யாவிற்கு பெரும் இராணுவ தோல்வியைத் தொடர்ந்து, அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவிற்கு எதிரான தங்கள் போரை மேலும் தீவிரப்படுத்தி வருகின்றன.

அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் பாரிய தலையீட்டை எதிர்கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த வாரம், ரஷ்யா மீது நேட்டோ தாக்குதல் நடத்தினால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக எச்சரித்தார்.

இந்தியா மற்றும் இலங்கை உட்பட தெற்காசிய நாடுகளை ரஷ்யாவிற்கு எதிரான போரிலும், சீனாவிற்கு எதிரான அதன் போர் தயாரிப்புகளிலும் ஒருங்கிணைக்க அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. சீனாவிற்கு எதிரான இராணுவ-மூலோபாய பங்காளியான இந்தியா, ரஷ்யாவிற்கு எதிராகவும் அணிசேர்ந்து நிற்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. USAID தலைவர் சமந்தா பவர் சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ததை பயன்படுத்திக்கொண்ட வாஷிங்டன், அமெரிக்க போர் திட்டங்களில் கொழும்பின் நெருக்கமான ஈடுபாட்டிற்கு அழுத்தம் கொடுத்தது.

ஏகாதிபத்திய சக்திகளின் போர்வெறியையும் அதே போல் ரஷ்ய தன்னலக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புட்டின் ஆட்சியின் பிற்போக்கு பிரதிபலிப்பையும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே இந்த பூமியில் அணுவாயுத யுத்தத்தின் ஆபத்தை தடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தியாகும்.

ஏகாதிபத்திய சக்திகளும் அவற்றின் ஊடகங்களும், போலி-இடது அமைப்புகளின் ஆதரவுடன், அணுவாயுத யுத்த அச்சுறுத்தல் குறித்து தொழிலாள வர்க்கத்தை இருட்டில் வைத்துள்ளன. இதில் தெற்காசியாவில் உள்ள ஊடகங்களும் வேறுபட்டவை அல்ல.

ஏகாதிபத்திய சக்திகள் அணு ஆயுதப் போரை நாடாது என்று யாரும் நம்பக் கூடாது. பெருநிறுவன இலாபங்களைப் பாதுகாக்க, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் வைரஸை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை, மாறாக கோவிட்-19 தொற்றுநோய்க்கு மில்லியன் கணக்கான உயிர்களை தியாகம் செய்துள்ளன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளும், போரின் மூல காரணமான முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கான ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஒருங்கிணைந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப போராடுகின்றன.

அக்டோபர் 16 அன்று மாலை 4 மணிக்கு நடக்கவுள்ள சோ.ச.க./IYSSE கூட்டம். இந்தப் போராட்டத்தின் ஒரு பாகமாகும். கூட்டத்திற்கு இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்.

Loading