சமூக ஜனநாயக கட்சியும் பசுமைக் கட்சியும் ராக் இசைக்கலைஞர் ரோஜர் வாட்டர்ஸை மௌனமாக்கச் செய்ய முற்படுவதுடன், உக்ரேனில் நேட்டோவின் போர் பற்றிய விமர்சனத்தை மௌனமாக்க முனைகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சமூக ஜனநாயக கட்சி, பசுமைக் கட்சியின் கூட்டணியான முனிச் நகர சபையின் உறுப்பினர்கள், மே 21, 2023 அன்று நகரத்திற்கு சொந்தமான ஒலிம்பியாஹல்லில் தனது This Is Not a Drill (இது ஒரு பயிற்சியல்ல) என்ற இசை நிகழ்ச்சியை நடத்துவதிலிருந்து பிங்க் ஃபிளோய்ட் (Pink Floyd) இணை நிறுவனர் ரோஜர் வாட்டர்ஸைத் தடுக்க முயல்கின்றனர். இந்த இசை நிகழ்ச்சிக்கான அனுமதிச்சீட்டு விற்பனை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இசை நிகழ்ச்சிக்கான ரோஜர் வாட்டர்ஸின் விளம்பரப் படம் [Photo by Roger Waters / CC BY 4.0]

நகரத்திற்குச் சொந்தமான ஒலிம்பியா பார்க் நிறுவனம் அதன் மண்டபத்தை வாட்டர்ஸுக்கு வழங்கியதை அறிந்து மிகவும் எரிச்சலடைந்ததாக மூனிச் நகரசபைத் தலைவர் டீட்டர் ரைட்டர் (SPD) அறிவித்தார். மேலும் இந்த நடவடிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றார். ரைட்டர் நிறுவனத்திடம் தனது முடிவை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெறுமாறு அழைப்பு விடுத்தார். நகரத்தின் துணை மேயர்களான வெரேனா டீட்ல் (SPD) மற்றும் கேத்ரின் ஹபென்சாடன் (பசுமைக் கட்சி) ஆகியோர் இதே போன்ற கருத்துக்களை தெரிவித்தனர்.

15,000க்கும் மேற்பட்ட இருக்கைகளைக் கொண்ட மண்டபத்தை இரத்து செய்வது, இதற்கு ஒப்பிடக்கூடிய வசதிகள் எதுவும் கிடைக்காத நிலையில், இது மூனிச்சில் வாட்டர்ஸ் நிகழ்ச்சியை நடத்துவதைத் தடை செய்வதற்கு சமமாக இருக்கும். ஜேர்மனியில் ஆளும் உயரடுக்கின் நலன்களுக்கு எதிரான வாட்டர்ஸின் அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் மட்டுமே தணிக்கைக்கான இந்த அப்பட்டமான முயற்சி நியாயப்படுத்தப்படுகிறது.

ஜூலை மாதம் அமெரிக்காவில் தொடங்கிய வாட்டர்ஸின் இசை நிகழ்ச்சி சுற்றுப் பயணத்தைப் பற்றி WSWS எழுதியது போல், அவருடைய ஒவ்வொரு பாடல்களும் “நம் காலத்தின் அழுத்தமான பிரச்சினைகளான: ஏகாதிபத்தியப் போர், பாசிசம், தேசியவாதத்தின் விஷம், அகதிகளின் அவலநிலை, அரசு ஒடுக்குமுறை, உலகளாவிய வறுமை, சமூக சமத்துவமின்மை, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் அணு ஆயுத அழிப்பு அச்சுறுத்தல் ஆகியவற்றைக் கையாள்கின்றன.

சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைவாதிகளுடன் அத்துடன் மூனிச் நகரத்தில் ஆளும், இரு கட்சிகளும் கூட்டாட்சி அரசாங்கத்தின் பங்காளிகளும் இந்தப் பிரச்சினைகள் பற்றிய எந்த விவாதத்தையும் தடுப்பதில் முற்றிலும் உறுதியாக உள்ளன. மேலும் வாட்டர்ஸை இழிவுபடுத்துவதை தவிர வேறொன்றும் செய்மாட்டார்கள். அவர்கள் அவரை ஒரு யூத எதிர்ப்பாளர், புட்டினின் ஆதரவாளர் என்று கண்டனம் செய்கின்றனர். இருப்பினும் இத்தகைய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கும் வகையில் தவறானவை. பவேரியாவில் மாநிலத்தை ஆளும் பழமைவாத கிறிஸ்தவ சமூக ஒன்றியமும் (CSU) மற்றும் பெருநிறுவன ஊடகங்களும் வாட்டர்ஸுக்கு எதிரான பிரச்சாரத்தை ஆதரிக்கின்றன.

2018 ஆம் ஆண்டில், மூனிக் நகரம் ஒலிம்பியா மண்டபத்தில் வாட்டர்ஸின் இசை நிகழ்ச்சியைத் தடுக்க ஏற்கனவே முயற்சித்து, ஆனால் நீதிமன்றத்தில் அதன் வழக்கில் தோல்வியடைந்தது. இது முந்தைய ஆண்டின் ஒரு நகரசபை தீர்மானத்தை இதற்கு நம்பியிருந்தது. அதன் படி பாலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்யும் BDS இயக்கத்தை ஆதரிக்கும் நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் நகரமானது அதன் இடங்களை வழங்க மறுத்தது. அந்த நேரத்தில், மேயர் ரைட்டர், ஒலிம்பியா மண்டபத்தில் இனி வாட்டர்ஸின் இசை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படாது என்று அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஜனவரி 2022 இல், லைப்சிக் நகரில் உள்ள மத்திய நிர்வாக நீதிமன்றம் 2017 இல் மூனிச் நகர சபையால் நிறைவேற்றப்பட்ட BDS இற்கு எதிரான தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாக மற்றொரு வழக்கில் தீர்ப்பளித்தது. பொது இடங்களுக்கான அணுகல் சில நோக்கங்களுக்காக கட்டுப்படுத்தப்படலாம், ஆனால் விருப்பமற்ற கருத்துகளின் அடிப்படையில் அல்ல என அது குறிப்பிட்டது.

இந்தத் தீர்ப்பிற்கு பின்னர், முன்பு இதுபற்றிய எந்த முடிவையும் தாமதப்படுத்திய ஒலிம்பியா நிறுவனம் வாட்டர்ஸுக்கு மண்டபத்தை வழங்கியது. 'சட்டபூர்வமாக திகதியை வழங்காததற்கு இனி எந்த காரணமும் இல்லை' என்று நிர்வாக இயக்குனர் நில்ஸ் ஹோச் விளக்கினார். இருந்தபோதிலும், மூனிச் நகர சபை இப்போது இசை நிகழ்ச்சித் தடுக்க முயல்கிறது என்பது, கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அது கால்களின்கீழ் மிதித்துக் கொண்டிருக்கும் இரக்கமற்ற தன்மையை எடுத்துக் காட்டுகிறது.

சமூக ஜனநாயக கட்சியும் பசுமைக் கட்சியினரும் ரோஜர் வாட்டர்ஸை மௌனமாக்க செய்ய முயலும்போது, செல்வாக்கு குறைந்த கலைஞர்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு அவர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதை ஒருவர் கற்பனை செய்யலாம். சர்வதேச அளவில் புகழ்பெற்ற வாட்டர்ஸ் கடந்த 50 ஆண்டுகளில் மிகவும் வெற்றிகரமான இசைக்கலைஞர்களில் ஒருவராவார்.

அவர் தனது இசை படைப்பாற்றலுக்காக மட்டுமல்ல, அவரது அரசியல் செயல்பாட்டிற்காகவும் மதிக்கப்படுகிறார். அவரது தொழில் வாழ்க்கையில், குறிப்பாக கடந்த இரண்டு தசாப்தங்களில், அவர் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் செல்வாக்குமிக்க இசைக்கலைஞர்களில் ஒருவராக வெளிப்படுவதற்கு இந்த இரண்டு கூறுகளையும் இணைத்துள்ளார். வாட்டர்ஸின் இது ஒரு பயிற்சி அல்ல சுற்றுப் பயணமானது வட அமெரிக்காவில் மட்டும் 1 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலிய அரசாங்கத்தால் பாலஸ்தீனிய மக்கள் மீதான ஒடுக்குமுறையை பலமுறை கண்டித்தும், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜை அமைதிப்படுத்தி அழிக்க முற்படும் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளின் கும்பலுக்கு எதிராக சமரசமின்றி பாதுகாத்து வந்த சில கலைஞர்களில் இவரும் ஒருவராவர்.

2018 ஆம் ஆண்டில், வாட்டர்ஸை மௌனமாக்க முனையும் சமூக ஜனநாயக கட்சி-பசுமை பிரச்சாரமானது இஸ்ரேலிய அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு அவரது எதிர்ப்பை மையமாகக் கொண்டது. இப்போது, உக்ரேனில் நடந்த போருக்கான இசைக்கலைஞரின் வெளிப்படையான எதிர்ப்பு, அவர் மீதான தாக்குதலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. 'யூத-எதிர்ப்பு' குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக, வாட்டர்ஸ் இப்போது 'புட்டின் சார்பானவர்' மற்றும் ரஷ்ய ஆக்கிரமிப்பு போர் தொடர்பான 'சதி கட்டுக்கதைகளை' (மிரியம் ஹெய்கல், மூனிச் நகர ஜனநாயக அலுவலகத்தின் தலைவரின் படி) பரப்பியதாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

WSWS இல் முன்னர் குறிப்பிடப்பட்டதைப் போல, உக்ரேனில் போரைத் தூண்டுவதில் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் பங்கை வாட்டர்ஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார். அதே நேரத்தில் ரஷ்ய ஜனாதிபதிக்கு அவர் எந்த ஆதரவும் வழங்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.

உக்ரேனில் போருக்கு எதிரான எதிர்ப்பை முறியடிக்க முனிச்சில் உள்ள சமூக ஜனநாயக கட்சியினரினதும் பசுமைவாதிகளினதும் தீவிர முயற்சிகளுக்கு இலக்கானவர்களில் ராக் இசைக்கலைஞரான வாட்டர்ஸுடன் மட்டும் அல்ல. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை வெளிப்படையாகக் கண்டிக்காததற்காக, இந்த ஆண்டு மார்ச் மாதம் நகர சபை நகரின் மூனிச் பில்ஹார்மோனிக் இசைக்குழுவின் தலைமை நடத்துனரான வலேரி கெர்கீவை பதவி நீக்கம் செய்தது. மிக சமீபத்தில், நகர சபை அதே இசைக்குழுவின் முதல் வயலின் கலைஞரான Lorenz Nasturica-Herschcowici இனை மூனிச் பசுமைக் கட்சியின் உறுப்பினரான புளோரியான் ரோத் 'புட்டினின் பிரச்சார இயந்திரத்தின் ஒரு பகுதி' என்று கூறியதை அடுத்து, அவரை பதவிவிலக்கியது.

ரோஜர் வாட்டர்ஸை மௌனமாக்க முனையும் அரசியல் தாக்குதலுக்கு நாட்டின் முன்னணி ஊடகங்களின் ஆதரவும் உள்ளது. மூனிச்சில் இருந்து வெளியிடப்படும் Süddeutsche Zeitung நாளிதழ், மேயர் ரைட்டரின் அவதூறுகளை மீண்டும் மீண்டும் பல கட்டுரைகளில் வெளியிட்டு, வாட்டர்ஸ் 'புட்டினை ஆதரிக்கிறார்' என்ற கூற்றை எதிரொலிக்கிறது. அக்டோபர் 12 அன்று ஒரு கருத்துப்பக்கத்தில், Süddeutsche பத்திரிகையாளர் மோறிட்ஸ் பவும்ஸ்ரைகர், அமெரிக்க பாடகரும் ட்ரம்ப்பின் ஆதரவாளரான கன்யே வெஸ்ட் மற்றும் ஜேர்மன் பாடகரும் சதி கோட்பாடுகளின் வலதுசாரி ஆதரவாளருமான சேவியர் நாயுடு போன்ற பிற்போக்குத்தனமான நபர்களுடன் வாட்டர்ஸுக்கு இடையே ஒரு தொடர்பை உருவாக்கி அவதூறாக எழுதினார்.

2018 இல், Süddeutsche இதழ் வாட்டர்ஸுடனான பல பக்க நேர்காணலை வெளியிட்டது. அதில் அவர் இஸ்ரேலிய அரசாங்கத்தின் கொள்கையை நிராகரித்ததை நியாயப்படுத்தினார். 'BDS அமைப்பு இஸ்ரேலின் இருப்புக்கான உரிமையை மறுக்கவில்லை,' என்று அவர் கூறினார். இந்த அமைப்பு பின்வரும் மூன்று இலக்குகளை பின்பற்றுகிறது என்று அவர் கூறினார்: '1967 இல் தொடங்கிய ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் பாலஸ்தீனியர்கள் மீதான இராணுவ ஆட்சியின் முடிவு,' 'இஸ்ரேலின் பாலஸ்தீனிய குடிமக்களுக்கு முழு சமத்துவம்' மற்றும் 'இஸ்ரேல் உருவாக்கியதில் இருந்தும் அதற்கு பின்னரும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பாலஸ்தீனிய அகதிகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட திரும்பும் உரிமையை அமல்படுத்துதல்'. இன்று, ரஷ்யாவிற்கு எதிராக வளர்ந்து வரும் போர் வெறிக்கு மத்தியில், இந்த நேர்காணலை வெளியிடுவது நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கும்.

ஜேர்மனியின் முன்னணி வானொலி செய்தி நிலையமான Deutschlandfunk உம் இத்தாக்குதலில் இணைந்தது. அதன் வழக்கமான 'Corso' நிகழ்ச்சியில் Deutschlandfunk நிருபர் சுசான லுவர்வேக், வாட்டர்ஸ் யூத எதிர்ப்பாளர் மற்றும் ரஷ்ய சார்பானவர் என்ற கூற்றுக்களை திரும்பத் திரும்ப கூறினார். மேலும் வாட்டர்ஸை 'விரக்தியடைந்த வயதான வெள்ளையர்' என்று அவமானகரமான முறையில் விவரிக்கிறார்.

உக்ரேனில் நடக்கும் அமெரிக்க-நேட்டோ பினாமிப் போர் மூன்றாம் உலகப் போராக மாறும் அபாயம் குறித்து தொடர்ந்து தைரியமாக எச்சரித்த ஒரு கலைஞருக்கு ஜேர்மன் ஊடகங்களின் வெறித்தனமான எதிர்வினை வாட்டர்ஸின் சொந்த தீர்ப்பை முழுமையாக உறுதிப்படுத்துகிறது. இது இரத்துசெய்யப்பட்ட பின்னர் போலந்தில் 2 இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். வாட்டர்ஸ் எழுதினார்: 'அமெரிக்காவிற்கும் ரஷ்ய கூட்டமைப்பிற்கும் இடையே உக்ரேனில் பொங்கி எழும் பினாமி போர், அணு ஆபத்தான விளையாட்டாவதை பற்றி சிந்திக்கும் அளவிற்கு கூட இருக்கும்போது, பொது ஆதரவை ஊக்குவிப்பது மேற்கு நாடுகளில் உள்ள முக்கிய ஊடகங்களின் நோக்கமாக உள்ளது.'

குறிப்பிடத்தக்க வகையில், Deutschlandfunk அறிக்கை, வாட்டர்ஸுக்கு எதிரான அதன் தூற்றல்களை, உலகப் புகழ்பெற்ற Documenta கலைக் கண்காட்சியை மூடுவதற்கான சமீபத்திய பிரச்சாரத்துடன் இணைத்துள்ளது. அக்கலைக்கண்காட்சியில் காட்டப்பட்ட சில படங்கள் யூத விரோதமானது எனக் குறிப்பிடுகின்றன.

ஜேர்மனியில் கலை, கலாச்சாரம் மற்றும் மாறுபட்ட கருத்துக்கள் மீதான தாக்குதல்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நாட்டின் வரலாற்றில் காணப்படாத வடிவங்களை எடுக்கின்றன. ஜேர்மன் வரலாற்றை சுருக்கமாகப் பார்த்தால், புதிய போர்களுக்கு தயாராவதுடன் எதிர்த்தரப்பினர் மீதான தணிக்கை எப்போதும் ஒருங்கிணைந்ததாக இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது. மூனிச்சில், தேசிய சோசலிஸ்டுகளின் தூண்டுதலின் பேரில், மே 1933 இல் நகரின் மத்திய Königsplatz இல் முற்போக்கான மற்றும் போர் எதிர்ப்பு எழுத்தாளர்களின் புத்தக எரிப்பு நடந்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், போரை எதிர்த்த அனைத்து ஜேர்மன் கலைஞர்களையும் இழிவுபடுத்திய 'சிதைவுற்ற கலை' என்று அழைக்கப்படும் நாஜிகளின் கண்காட்சிக்கான அழைப்பின் முதல் இடம் மூனிச் நகரமாகும்.

2018 இல் Süddeutsche Zeitung இற்கு அளித்த நேர்காணலில், வாட்டர்ஸே அதே ஒப்பீட்டை எடுத்துக்காட்டினார்: “என்னை மௌனமாக்க விரும்ப, நகரதலைவர் தன்னால் முடிந்தால் அதைச் செய்திருப்பார். அது ஒரு புத்தகத்தை எரிப்பதற்கு சமம். கருத்துகளை அழிப்பதற்கும் ஆசிரியர்களைக் மௌனமாக்குவதற்கும் புத்தகங்கள் எரிக்கப்படுகின்றன”.

உக்ரேனில் போருக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் தணிக்கை செய்ய மூனிச்சில் சமூக ஜனநாயக கட்சியினரும் பசுமைவாதிகளும் எடுத்த முடிவுகள், நாட்டின் தலைநகரில் உள்ள அவர்களது கட்சி சகாக்களுடன் சந்தேகத்திற்கு இடமின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பேர்லினில், சான்சிலர் ஓலாப் ஷோல்ஸ் (SPD), துணை அதிபர் ரொபேர்ட் ஹேபெக் (பசுமைக்கட்சி) மற்றும் வெளியுறவு மந்திரி அன்னலெனா பெயபோக் (பசுமைக்கட்சி) தலைமையிலான கூட்டாட்சி கூட்டணி உக்ரேன் போரில் ஜேர்மனியின் தலையீட்டை பொறுப்பற்ற முறையில் முன்னெடுத்துச் செல்கிறது.

அக்டோபர் 12 அன்று கூட்டமைப்பு உக்ரேனுக்கு விமான எதிர்ப்பு பாதுகாப்பு உபகரணங்களை அனுப்பப்போவதாக அறிவித்தது. இது போரின் நேரடி பங்காளியாக அதன் விரைவான மாற்றத்தின் ஒரு பகுதியாகும். அதே நாளில், பேர்லினில் உள்ள நடுவர் நீதிமன்றம் உக்ரேனிய துருப்புக்களால் அழிக்கப்பட்ட ரஷ்ய டாங்கிகளின் அழிவுகள் பேர்லினில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முன் ஆத்திரமூட்டும் வகையில் வைக்கப்படலாம் என்று தீர்ப்பளித்ததாக ஜேர்மன் பத்திரிகைகள் தெரிவித்தன.

உக்ரேன் போருக்கான ஆதரவு, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டது என்ற கொடூரமான கூற்றையும் வாட்டர்ஸுக்கு எதிரான பிரச்சாரம் அம்பலப்படுத்துகிறது. ஜனாதிபதி புட்டின் கருத்து வேறுபாடுகளை அடக்குவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டாலும், அதே மாதிரியான அடக்குமுறைதான் இங்கும் நடைபெறுகிறது என்பதே உண்மை.

அதிகரித்துவரும் சமூக நெருக்கடி, உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் போருக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் பின்னணியில் சமூக ஜனநாயக கட்சியினரும் பசுமைக் கட்சியினரும் தங்கள் கொள்கைகள் மீதான அனைத்து விமர்சனங்களையும் மௌனமாக்குவதில் உறுதியாக உள்ளனர். இது ரோஜர் வாட்டர்ஸை மௌனமாக்குவதற்கான வெறித்தனமான முயற்சிகளுக்குப் பின்னால் உள்ளது. சமூக ஜனநாயக கட்சியினரினதும் பசுமைவாதிகளினதும் கலை மற்றும் கலாச்சாரத்தின் தணிக்கைக்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் புதிய போர்-எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு மத்திய அங்கமாக இருக்க வேண்டும்.

Loading