“உக்ரேனின் புனரமைப்பு” மாநாடு: கொள்ளையடிப்பது தொடர்பான சர்ச்சை தொடங்கியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

போர் இலாபத்திற்கு உறுதியளிக்கிறது. இது உக்ரேனியப் போருக்கும் பொருந்தும். சண்டை முடிவுக்கு வருவதற்கு முன்பே, கொள்ளைப் பொருட்களைப் பிரிப்பது குறித்த சர்ச்சை ஏற்கனவே தொடங்கிவிட்டது. செவ்வாயன்று பேர்லினில் ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லெயன் ஆகியோரின் ஆதரவின் கீழ் நடைபெற்ற “உக்ரேனின் புனரமைப்பு குறித்த நிபுணர் மாநாடு,” என்று அழைக்கப்படுவதன் முக்கியத்துவம் இதில் உள்ளது.

உக்ரேன் புனரமைப்பு மாநாட்டில் உக்ரேனிய பிரதமர் டெனிஸ் ஷ்மிஹாலை ஊர்சுலா வொன் டெர் லெயனும் ஓலாஃப் ஷோல்ஸூம் வரவேற்கின்றனர். [Photo by Bundesregierung/Hartmann]

பெரும் தொகைகள் ஆபத்தில் உள்ளன. ஜூலை தொடக்கத்தில், உக்ரேனிய பிரதம மந்திரி டெனிஸ் ஷ்மிஹால் நாட்டின் புனரமைப்புக்கு 750 பில்லியன் டாலர் நிதி தேவை என்று கூறினார், அதேவேளை உலக வங்கியும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையமும் செப்டம்பரில் அதற்கு 349 பில்லியன் டாலர் நிதி தேவை என்று குறிப்பிட்டன. போரின் முதல் மூன்று மாதங்களை மட்டுமே குறிக்கும் இந்த புள்ளிவிபரங்கள் தற்போது காலாவதியானதாகக் கருதப்படுகிறது. மேலும், உக்ரேனிய இராணுவத்திற்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பாவும் வழங்கிய பில்லியன்களை அவர்கள் இதில் சேர்க்கவில்லை.

இவ்வளவு பெரிய தொகைகளை எப்படித் திரட்டுவது, மேலும் அதிலிருந்து யார் பயனடைகிறார்கள் என்பது குறித்து கடும் சர்ச்சை நடந்து வருகிறது. இருப்பினும் ஒன்று நிச்சயம். உக்ரேனிய மக்களுக்கு இதனால் எதுவும் கிடைக்கப் போவதில்லை. என்ன நிதி வழங்கப்பட்டாலும், அது உக்ரேனிய தன்னலக்குழுக்கள் மற்றும் மேற்கத்திய பெருநிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் போய் சேரும். பிந்தையவர்கள் ‘புனரமைப்பிலிருந்து’ நல்ல வணிகத்தை மட்டுமல்ல உக்ரேனிய பொருளாதாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் செல்வாக்கையும் எதிர்பார்க்கிறார்கள். குறிப்பாக, ஜேர்மன் பெருநிறுவனங்கள், போரின் விளைவுகளிலிருந்து இலாபம் ஈட்டவும், எதிர்காலத்தில் உக்ரேனில் முன்னணிப் பாத்திரம் வகிக்கவும் துடிப்புடன் காத்திருக்கின்றனர்.

புனரமைப்பு மாநாட்டிற்கு முந்தைய நாளில், ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸூம் உக்ரேனிய பிரதம மந்திரி டெனிஸ் ஷிம்ஹாலும் 5வது ஜேர்மன்-உக்ரேனிய வணிக மன்றத்தைத் தொடங்கினர். கிழக்கு ஐரோப்பிய பொருளாதார உறவுகளுக்கான குழு (Ostausschuss der deutschen Wirtschaft), மற்ற வணிக சங்கங்கள் மற்றும் உக்ரேனிய அரசாங்கத்துடன் இணைந்து இந்த மன்றத்தை ஏற்பாடு செய்தது: “மாநாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொண்டது, புனரமைப்பில் ஈடுபடுவதில் ஜேர்மன் வணிகத்தின் பரந்த ஆர்வத்தைக் காட்டியது. போரின் தொடக்கத்திலிருந்து ஜேர்மனியில் இதுபோன்ற மாநாடு முதல் முறையாக நடைபெறுகிறது, அதே நேரத்தில் இன்றுவரை இதுபோன்ற மிக உயர்ந்த நிகழ்வு நடைபெறவில்லை.”

ஜேர்மன் நிறுவனங்கள் மற்றும் வணிக அமைப்புகளின் பணிக்குழுக்கள் 'உக்ரேனை மீண்டும் கட்டியெழுப்ப' மன்றத்திற்காக ஒரு ஆவணத்தை எழுதியிருந்தன, இது உக்ரேனிய அரசாங்கத்தை 'தனியார் துறைக்கு முதலீடு செய்வதற்கும் செல்வத்தை உருவாக்குவதற்கும் சலுகைகளை உருவாக்கும் வகையில் வழங்கப்பட்ட நிதி மற்றும் அரசியல் முடிவுகளை மூலோபாய ரீதியாகப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது'. இது ஏராளமான முதலீட்டு வாய்ப்புகளை விவரிக்கிறது மற்றும் அவற்றை கட்டுமானம், தளவாடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், எரிசக்தி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கிறது.

உக்ரேனிய வர்த்தக மந்திரி யூலியா ஸ்விரிடென்கோ, கூடியிருந்த வணிக பிரதிநிதிகளுக்கு தனியார்மயமாக்கல்கள் மூலம் அரசின் பங்கைக் குறைப்பதாக உறுதியளித்தார். ஜேர்மன் பொருளாதார மந்திரி ராபர்ட் ஹபெக் (கிரீன்ஸ்) அவர்களை இந்த வாய்ப்பால் கவர்ந்தார்: “உக்ரைன் மூலப்பொருட்கள், எரிசக்தி மற்றும் ஒரு விநியோகஸ்தராக மதிப்புள்ள வர்த்தக பங்காளியாகும். எனவே, உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்தின் உள் சந்தைக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான ஒவ்வொரு உறுதிப்பாடும் மதிப்புக்குரியது.”

அடுத்த நாள், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள் சந்தையில் ஒரு மூலப்பொருட்கள் விநியோகஸ்தர் மற்றும் துணை ஒப்பந்தக்காரராக உக்ரேனை ஒருங்கிணைக்க தேவைப்படும் பெரும் நிதியை திரட்டும் பணியை மாநாடு கையாண்டது.

*‘வரலாற்று ஒப்பீடுகளில் ஒருவர் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும் என்றாலும், இது 21 ஆம் நூற்றாண்டுக்கான புதிய மார்ஷல் திட்டத்தை உருவாக்குவதைக் காட்டிலும் குறைவானதல்ல.' என்று ஷோல்ஸூம் வொன் டெர் லெயனும் Frankfurter Allgemeine Zeitung செய்தியிதழுக்கான ஒரு கூட்டு விருந்தினர் கட்டுரையில் குறிப்பிட்டனர். மார்ஷல் திட்டத்தின் கீழ், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவம் மீண்டும் அதன் காலில் நிற்க அமெரிக்கா உதவியது.

“புனரமைப்பு என்பது ஒரு மிகப்பெரிய பணியாக இருக்கும்,” என்று ஷோல்ஸ் மேலும் கூறினார். “மேலும் அதைச் சிறப்பாகச் செய்ய நாம் அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். உக்ரேன் மட்டும் அதை தனியாக செய்ய முடியாது. ஐரோப்பிய ஒன்றியமும் தனியாக செய்ய முடியாது. ஒட்டுமொத்த உலக சமூகத்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும்” என்றும் கூறினார்.

வொன் டெர் லெயன் எந்த நாடும் அல்லது தொழிற்சங்கமும் மட்டும் தனியாக புனரமைப்பைக் கையாள முடியாது என்று வலியுறுத்தினார். அமெரிக்கா, கனடா, ஜப்பான், பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளின் வலுவான பங்காளிகளும், அத்துடன் உலக வங்கி போன்ற நிறுவனங்களும் தேவை. ஒவ்வொரு யூரோவும், ஒவ்வொரு டாலரும், ஒவ்வொரு பவுண்டும், ஒவ்வொரு யெனும் உக்ரேனுக்கான முதலீடாகும் என அவர் கூறினார்.

இருப்பினும், ஷோல்ஸின் 'உலக சமூகம்' 'புனரமைப்பு' இல் தொழிலாளர் பிரிவு குறித்து மிகவும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளது. வாஷிங்டன், புரூஸ்ஸெல்ஸ், பேர்லின் மற்றும் பிற ஐரோப்பிய தலைநகரங்கள் யார் பணம் செலுத்துகிறார்கள், யார் தீர்மானிக்கிறார்கள், யார் பயனடைகிறார்கள் என்பதைப் பற்றி கடுமையாக வாதிடுகின்றன.

வாஷிங்டனின் நிலைப்பாடு என்னவென்றால், அது பெரும்பகுதி இராணுவ ஆதரவை வழங்குவதால், ஐரோப்பா புனரமைப்பு பணியில் பெரும் பங்கேற்க வேண்டும் என்பதாகும். உக்ரேனில் முன்னணி பொருளாதார சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஜேர்மனியின் முயற்சி, அமெரிக்காவிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது. அதனால்தான் உக்ரேனின் ‘புனரமைப்பு’ தலைமையை புரூஸ்ஸெல்ஸ் அல்லது பேர்லினிடம் விட்டுவிட வாஷிங்டன் தயாராக இல்லை.

உக்ரேனை மானியங்களுடன் ஆதரிக்க வேண்டுமா அல்லது திருப்பிச் செலுத்தக்கூடிய கடன்களுடன் ஆதரிக்க வேண்டுமா என்ற கேள்வியிலும் மோதல்கள் உள்ளன. அமெரிக்காவும் ஜேர்மனியும் மானியங்களுக்கு ஆதரவாக உள்ளன, மற்ற பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கடன்களுக்கு ஆதரவாக உள்ளன.

பேர்லினில் நடந்த மாநாடு எந்த முடிவையும் எடுக்கவில்லை, மாறாக நாட்டை இலக்கு வைக்க நோக்கம் கொண்டிருந்தது. ஷோல்ஸூம் வொன் டெர் லெயனும், “எப்படி தொடர வேண்டும் என்பது குறித்த நிபுணர் பரிந்துரைகளை” வழங்குமாறு, உயர்மட்ட பொருளாதார நிபுணர்கள், அரசாங்கக் கொள்கை வகுப்பாளர்கள், சிந்தனைக் குழு உறுப்பினர்கள், மற்றும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தனர்.

ஜேர்மன் மார்ஷல் நிதியம் (GMF) என்ற சிந்தனைக் குழு உக்ரேனின் மறுசீரமைப்பு குறித்த விரிவான ஆய்வை முன்வைத்தது. அமெரிக்காவுடனான மோதலை தீவிரப்படுத்தாமல் இருக்க, தலைமைத்துவத்தை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அல்ல, ஏழு முன்னணி மேற்கத்திய தொழில்மய நாடுகளின் அமைப்பான G7 க்கு மாற்றுவதற்கு ஆதரவாக அது பரிந்துரைக்கிறது.

“பாதுகாப்பும் புனரமைப்பும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால், அவை மேற்கு நாடுகளின் கூட்டுப் பணியாக இருக்க வேண்டும்,” என்று GMF ஆய்வின் தலைவரான தோமஸ் கிளைன-புரோக்கோஃப், Tagesspiegel செய்தியிதழில் குறிப்பிட்டுள்ளார். “எந்த சூழ்நிலையிலும் அமெரிக்கா இராணுவ உதவியை எடுத்துக் கொண்டு புனரமைப்பை ஐரோப்பியர்கள் மற்றும் பிற நன்கொடையாளர்களிடம் விட்டுவிடக்கூடாது. பரஸ்பர விமர்சனம் முதல் நாளில் தொடங்குகிறது என்பதை அனுபவம் காட்டுகிறது.”

'உலகளாவிய நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு அமெரிக்கரை' சிறந்த ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டுமென ஆய்வு பரிந்துரைக்கிறது. அமெரிக்கா மட்டுமே 'தேவையான உலகளாவிய கூட்டணியை ஒன்றிணைத்து உக்ரேனின் பங்காளிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியும்'.

ஜேர்மன் மார்ஷல் நிதியத்தின் இயக்குநராகவும், கூட்டாட்சி ஜனாதிபதி ஜோஅஹிம் காவுக்கின் திட்டமிடல் ஊழியர்களின் தலைவராகவும் 2013/14 ஆம் ஆண்டில் உக்ரேனிய மோதலைத் தூண்டுவதில் கிளைன-புரோக்கோஃப் ஏற்கனவே முக்கிய பங்கு வகித்திருந்தார். இது குறித்து உலக சோசலிச வலைத் தளம் (WSWS) எழுதியுள்ளது.

உக்ரேன் மீதான எதிர்காலப் பொருளாதாரக் கட்டுப்பாட்டிற்கான போராட்டம் என்பது, இந்தப் போர் “ஜனநாயகத்தை” பாதுகாப்பதற்காக அல்ல, மாறாக ஏகாதிபத்திய நலன்களுக்கானது என்பதைக் காட்டும் ஒரு அம்சம் மட்டுமே. ஒரு 'புனரமைப்பு' க்குப் பின்னர், பேர்லின், புரூஸ்ஸெல்ஸ் மற்றும் வாஷிங்டன் கற்பனை செய்வது போல, உக்ரேன் ‘சுதந்திரமாக’ இருக்காது, மாறாக மேற்கத்திய சக்திகளின் அரை காலனியாக இருக்கும், அதாவது, மலிவான மூலப்பொருட்கள் மற்றும் மிக மலிவு-கூலி உழைப்புக்கான ஆதாரமாக இருக்கும்; இது நாஜி ஒத்துழைப்பாளர்களுக்கு மரியாதை செலுத்தும் ஒரு சர்வாதிகார தன்னலக்குழுவால் ஆட்சி செய்யப்படுகிறது, பத்திரிகைகளை தணிக்கை செய்கிறது மற்றும் போர் தொடங்கியதிலிருந்து ஒரு டஜன் அரசியல் கட்சிகளை தடை செய்துள்ளது.

ஆயினும் உக்ரேனைக் கட்டுப்படுத்துவது நேட்டோவின் இரண்டாம் நிலை இலக்கு மட்டுமே. அவர்களின் முக்கிய ஆர்வம் ரஷ்யா, அதன் பரந்த நிலப்பகுதி மற்றும் அளவிட முடியாத மூலப்பொருட்களாகும். ரஷ்யா மீது ஒரு இராணுவ தோல்வியை ஏற்படுத்தி, நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் அணுசக்தி பேரழிவுக்கான ஆபத்து உள்ளபோதிலும் போரை மேலும் மேலும் தீவிரப்படுத்தி வருகின்றன.

நேட்டோவையும் அதன் போர் நோக்கங்களையும் நிராகரிப்பது என்பது, புட்டின் ஆட்சியையும் உக்ரேன் மீதான அதன் பிற்போக்குத்தனமான தாக்குதலையும் ஆதரிப்பது என்று அர்த்தமல்ல. போர் மற்றும் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை, முதலாளித்துவத்தை அகற்றுவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் இணைக்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தாக்குதலால் மட்டுமே போரை நிறுத்த முடியும்.

Loading