ஜேர்மன் ஜனாதிபதி ஸ்ரைன்மையர் நாட்டுக்கு போர் உரை ஆற்றுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளிக்கிழமை ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையரின் 'தேசத்திற்கான உரை' சோசலிச சமத்துவக் கட்சி நீண்டகாலமாக எச்சரித்து வருவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதாவது ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் உக்ரேனில் புட்டினின் பிற்போக்குத்தனமான படையெடுப்பை பயன்படுத்தி, 20 ஆம் நூற்றாண்டின் கொடூரமான குற்றங்கள் மற்றும் மக்கள் எதிர்ப்பிற்கு எதிராக அதன் போர் மற்றும் மறுஆயுதமமாக்கல் திட்டங்களை செயல்படுத்தியதற்குப் பின்னர் ஒரு ஆக்கிரோஷமான பெரும் அதிகாரக் கொள்கைக்கு திரும்புகிறது.

அழைக்கப்பட்ட படையினர், ஊடகவியலாளர்கள், சிந்தனைக் குழுப் பிரதிநிதிகள் மற்றும் முன்னணி அரசியல்வாதிகள் ஆகியோரின் பார்வையாளர்களுக்கு வழங்கிய ஸ்ரைன்மையரின் கருத்துக்கள், 'தேசத்திற்கான போர் உரை' என்று மட்டுமே விவரிக்கப்படமுடியும். ரஷ்யாவிற்கும் ரஷ்ய மக்களுக்கும் எதிரான ஒரு நடைமுறைப் போர் பிரகடனத்தின் மீது இது கவனம் செலுத்தியது. 'எங்கள் நாடுகள் இன்று ஒன்றுக்கொன்று எதிராக உள்ளன' எனக் கூறிய ஸ்ரைன்மையர், மாஸ்கோ 'தீமையானது', அதற்கு 'நல்ல நோக்கத்தை' காட்டுவது போதாது என்றார்.

அக்டோபர் 25, 202 செவ்வாய்கிழமை, உக்ரேனில்நடந்த சந்திப்பின் போது, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கியுடன் ஒரு கூட்டு செய்தி மாநாட்டில் பேசுகிறார் [AP Photo/Andrew Kravchenko]

உக்ரேனில் ரஷ்யாவின் முழுமையான தோல்வியை இறுதியில் கொண்டுவராத பேச்சுவார்த்தைகளை ஸ்ரைன்மையர் வெளிப்படையாக நிராகரித்தார். 'அத்தகைய செயலுக்கு வெகுமதி அளிக்கும் சமாதானம், புட்டினின் நில அபகரிப்பை உறுதிப்படுத்தும் அமைதி அல்ல' என்று அவர் வலியுறுத்தினார். இத்தகைய 'தவறான அமைதி' 'உக்ரேனில் பலருக்கு பயங்கர ஆட்சியாக' இருப்பதுடன் 'புட்டினின் பசியை அதிகரிக்கும்' என்றார்.

ரஷ்யா மீதான மொத்த வெற்றி என்ற முழக்கம் பேரழிவிற்கு வழிவகுக்கும் என்பதை ஸ்ரைன்மையர் அறிவார். 'போரின் விரிவாக்கம், அணுசக்தி விரிவாக்கம் கூட தடுக்கப்பட வேண்டும்' என்று அவர் ஒரு கட்டத்தில் வலியுறுத்தினார். ஆனால் பேர்லின் மற்றும் பிற முன்னணி நேட்டோ சக்திகளால் பின்பற்றப்படும் கொள்கைகள் அத்தகைய விரிவாக்கத்தை உருவாக்குகின்றன. கிரெம்ளின் கிரிமியா மற்றும் கிழக்கு உக்ரேனின் சில பகுதிகளை தனக்கு சொந்தமானது என்று கருதும் ரஷ்ய பிரதேசத்தை 'எங்கள் வசம் உள்ள எல்லா ஆயுத அமைப்புகளாலும்' பாதுகாக்கப்போவதாக மாஸ்கோ பலமுறை அச்சுறுத்தியுள்ளது.

ஆயினும்கூட, ஸ்ரைன்மையர் பேர்லினுக்கான புதிய உக்ரேனிய தூதுவரான ஓலேஸ்கி மாகேயேவ் இற்கு ரஷ்யா மீது வெற்றி பெறும் வரை கியேவில் உள்ள வலதுசாரி, மேற்கத்திய சார்பு ஆட்சிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். 'நாங்கள் அவர்களை இராணுவ ரீதியாக ஆதரிக்கிறோம் — உங்கள் ஜனாதிபதி [வோலாடிமியர் செலென்ஸ்கி] ஜேர்மன் வான் பாதுகாப்பு கருவிகள் எவ்வளவு உயிர்களை காக்கும் என்பதை என்னிடம் கூறினார். நாங்கள் அவர்களுக்கு நிதி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஆதரவளிக்கிறோம்,” என்று ஸ்ரைன்மையர் உறுதியளித்தார். தடைகள், 'தொடர்புகளை நிறுத்துதல்' மற்றும் ஆயுத விநியோகம் ஆகியவை அவசியமான 'மோதலுக்கான கருவிகள்' என்றார்.

ரஷ்யாவிற்கு எதிரான போர் பற்றிய இந்த வார்த்தையாடல், ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் எந்த பாரம்பரியத்துடன் மீண்டும் தன்னை இணைக்கிறது என்பதை தெளிவாக்குகிறது. 'சுதந்திரம்' மற்றும் 'ஜனநாயகம்' பற்றிய ஸ்ரைன்மையரின் வார்த்தைப்பிரயோகம், ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலுக்குப் பின்னால், சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான நாஜிகளின் அழிவுப் போரைத் தூண்டிய அதே ஏகாதிபத்திய நலன்களை போன்றே உள்ளன என்ற உண்மையை மறைக்க முடியாது. ஒரு கட்டத்தில், ஜேர்மனியை 'உலக அளவில் மிகச் சிறிய மற்றும் நடைமுறையில் அதன் சொந்த வளங்கள் மற்றும் கனிம வளங்கள் இல்லாத நாடு' என்று ஸ்ரைன்மையர் விவரித்தார்.

உண்மையில், பேர்லின் ரஷ்யாவின் பரந்த வளங்களுக்கான பசியால் மட்டுமல்ல, அதன் கடந்தகால இராணுவத் தோல்விகளுக்கு பழிவாங்கும் விருப்பத்தாலும் உந்தப்படுகிறது. இது ரஷ்யாவுடன் மட்டும் அல்ல. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களைப் போலவே, ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் இலட்சியங்கள் உக்ரேன் மற்றும் ரஷ்யாவிற்கு அப்பால் நீண்டுள்ளதுடன், அடிப்படையில் இது அதன் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எதிரான போர்ப் பிரகடனமாகும்.

அவரது உரையில், இராணுவ விவகாரங்கள் உட்பட, தலைமைக்கான ஜேர்மன் உரிமைகோரலைப் பற்றி ஸ்ரைன்மையர் எந்த சந்தேகத்தையும் விடவில்லை. ஜேர்மனிக்கு 'முதலில் ஒரு வலுவான மற்றும் நன்கு ஆயுதம்தரித்த Bundeswehr (ஜேர்மன் இராணுவம்) தேவை' என்று அவர் கூறினார். “ஐரோப்பாவின் மத்தியில் நாம் வலுவான நாடு. கூட்டணியைப் பாதுகாப்பதில் நமது பங்கைச் செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. மற்றவர்கள், குறிப்பாக அமெரிக்கா நம்மீது பாதுகாப்புக் கைகளை வைத்திருந்த காலகட்டத்தை விட இன்று அதிகம்.” ஜேர்மனி 'நேட்டோவில், ஐரோப்பாவில் அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டது' என்று ஜனாதிபதி தொடர்ந்தார்.

பேர்லினின் புதிய குறிக்கோள், அதன் முன்னையதைப் போலவே உலக வல்லரசாக ஆவதற்கு ஜேர்மனியின் தலைமையின் கீழ் ஐரோப்பாவை ஒழுங்கமைப்பதாகும். ஜேர்மனி 'ஐரோப்பாவின் தலைசிறந்த நாடுகளில் ஒன்று. ஐரோப்பாவின் நலன்களில் தலைமை, தலைமைத்துவத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று ஸ்ரைன்மையர் கூறினார். “பார்வையாளர்களின் கைதட்டல் தீர்க்கரமானதல்ல. ஐரோப்பாவை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது” என்றார்.

'நம்மைப் போன்ற ஒரு நாடு விமர்சனத்திற்கு உள்ளாகிறது' என்ற உண்மைக்கு ஜேர்மனி 'பழகிக் கொள்ள' வேண்டும். இந்த விஷயத்தில் ஸ்ரைன்மையரின் முன்மாதிரி அமெரிக்காவாகும். “அமெரிக்காவைப் பார்ப்போம். அவர்களுக்கு இதில் நிறைய பயிற்சி இருக்கிறது. அவர்கள் ஒரு உலகளாவிய தலைமை. அவர்கள் செய்வதையும், செய்யாததையும் விமர்சிக்கிறார்கள். நீங்கள் மற்றவர்களை சுட்டிக்காட்டவோ அல்லது அதற்கு மேலாக செய்யவோ அழைக்க முடியாது. அவர்கள் என்ன செய்கிறார்கள், ஏன் செய்கிறார்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்'.

ஸ்ரைன்மையர் இதுபற்றிய மேலதிக விவரங்களுக்கு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்தார். அதற்கு காரணங்கள் உண்டு. இல்லையெனில், உக்ரேன் மீதான தாக்குதலின் மூலம் 'ஐரோப்பிய பாதுகாப்பு ஒழுங்கை அழித்த' 'ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்' பற்றிய அவரது பிரச்சாரம் அட்டைகளினால் கட்டிய வீடு போல் சரிந்திருக்கும். உண்மையில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும்தான் 30 ஆண்டுகளாக கிட்டத்தட்ட இடைவிடாமல் போரை நடத்தி, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவை மட்டுமல்ல, ஐரோப்பாவின் சில பகுதிகளையும், முழு நாடுகளையும் அழித்தது.

ஜேர்மன் ஏகாதிபத்தியம் ஆரம்பத்திலிருந்தே இதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. 1990 களின் தொடக்கத்தில், குரோஷியா மற்றும் ஸ்லோவேனியாவின் சுதந்திரத்தை பேர்லின் அங்கீகரித்தது. ஆரம்பத்தில் முன்னாள் யூகோஸ்லாவியாவில் ஒரு கொலைகார உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. 1999 ஆம் ஆண்டில், சேர்பியா மீது நேட்டோ குண்டுவீச்சு தொடர்ந்தது. இது மற்றவற்றுடன், கொசோவோவின் வலுக்கட்டாயமாக பிரிந்து செல்வதை உருவாக்கும் நோக்கத்தை கொண்டிருந்தது. ரஷ்யாவிற்கும் மற்றும் பெருகிய முறையில் சீனாவுக்கும் எதிரான நேட்டோ தாக்குதல் இந்த போர் கொள்கையின் தொடர்ச்சியே ஆகும் .ஸ்ரைன்மையர் தனது உரையில் சீனாவின் 'பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகோரலையும்' தாக்கினார்.

போர்க் கொள்கையுடன், இராணுவவாதத்தின் வார்த்தைகளும் திரும்ப வருகின்றது. 'நாம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மோதலுக்கு திறன் கொண்டவர்களாக மாற வேண்டும்' என்று ஸ்ரைன்மையர் கோரினார். ஒருவருக்கு 'தன்னை உறுதிப்படுத்திக் கொள்ளும் விருப்பம்', 'எதிர்ப்பின் உந்துதல்' மற்றும் 'எதிர்ப்பதற்கான வலிமை' தேவை. இவை அனைத்தும் ஒரு புதிய போர் சகாப்தத்திற்கு மக்களை தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 'உலகம் மோதலின் ஒரு கட்டத்தில் உள்ளது' மற்றும் 'கடினமான ஆண்டுகள், கடுமையான ஆண்டுகள் எதிர்வரவுள்ளன. சமாதானத்தை வழங்கியது முடிவிற்கு வந்து விட்டது. ஜேர்மனியை பொறுத்தவரை, எதிர்தாக்குதலுக்கான சகாப்தம் தொடங்குகிறது” என்று அவர் கூறினார்.

இந்தப் போர்ப் பிரச்சாரம் மக்களிடையே பெரும் எதிர்ப்பைச் சந்திக்கும் என்பதை ஸ்ரைன்மையர் நன்கு அறிந்திருந்தார். இரண்டு உலகப் போர்கள் மற்றும் யூதப்படுகொலை ஆகியவற்றின் பயங்கரங்களுக்குப் பின்னர், தொழிலாளர்கள் மத்தியில் இராணுவவாதத்தை நிராகரிப்பது ஆழமாக வேரூன்றியுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மற்றும் உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவது ஆகியவை மக்களிடையே விரோதப் போக்கை சந்திக்கின்றன என்பதை மீண்டும் மீண்டும் ஸ்ரைன்மையர் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தேசத்தின் ஒற்றுமைக்காக இந்த எதிர்ப்பிற்கு எதிராக கூட்டாட்சி தலைவர் வேண்டுகோள் விடுத்தார். 'பணக்காரர்கள் மற்றும் ஏழைகள்' ஒற்றுமைக்கான அவரது அழைப்பு முன்னோடியில்லாத சமூக சமத்துவமின்மையின் பார்வையில் ஒரு மோசமான நகைச்சுவையாகும். சமீபத்திய ஆண்டுகளில் பணக்காரர்கள் அரசிடமிருந்து பில்லியன் கணக்கான பரிசுகளைப் பெற்றிருந்தாலும், தொழிலாளர்கள் பணவீக்கம் மற்றும் பாரிய பணிநீக்கங்களை எதிர்கொண்டாலும், இதற்கு எந்த எதிர்ப்பையும் 'ஒத்திசைவு' என்ற பெயரில் நசுக்க வேண்டும் என்கின்றார்.

ஜேர்மனி மறுஆயுதமயமாசக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல், 'உள்நாட்டில் மோதலுக்குத் தகுதியுடையதாக' மாற வேண்டும் என்ற உண்மையை பற்றி ஸ்ரைன்மையர் பேசும்போது இதுதான் அர்த்தம். குறிப்பாக, அவர் 'கட்டாய சமூக சேவை ஆற்றும் காலகட்டத்தை' முன்மொழிந்தார். இதில், முந்தைய நேர்காணல்களில் ஸ்ரைன்மையர் கூறியது போல், வெட்டுக்கள் மற்றும் பரிதாபகரமான பணிச்சூழல்களால் இத்துறையில் ஏற்படும் பேரழிவைக் குறைக்கவும் அதே நேரத்தில் மேலும் வழக்கமான வேலைகளை அழிக்கவும் இளைஞர்கள் இராணுவ சேவை அல்லது சமூக சேவைகளில் கட்டாய உழைப்பைச் செய்ய வேண்டும்.

ஸ்ரைன்மையரின் கூற்றுப்படி, இந்த போருக்கும், சமூக அழிவு நிகழ்ச்சி நிரலுக்கு எதிர்ப்பு இருக்கக்கூடாது. குடிமக்கள் நிச்சயமற்ற தன்மையை சகித்துக்கொள்ள வேண்டும் மற்றும் சில அரசியல் முடிவுகளை விமர்சிக்க வேண்டும். ஆனால் எந்த சூழ்நிலையிலும் அவர்கள் 'எங்கள் அரசியல் அமைப்பின் மீது பொதுவான தாக்குதலை நடத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்று ஸ்ரைன்மையர் கூறினார்.

ஜனநாயக உரிமைகள் மீதான இந்தத் தாக்குதல், ஸ்ரைன்மையரின் போர்வெறி மற்றும் பெரும் வல்லரசு கற்பனைகளைப் போலவே தற்போதுள்ள அரசியல் அமைப்பின் பிரதிநிதிகளிடையே ஆதரவைப் பெற்றது. விதிவிலக்கு இல்லாமல், அவர்கள் இப்பேச்சுக்கு எழுந்து நின்று கைதட்டி ஆதரித்தனர். இவர்களில் இராணுவத்தின் பிரதிநிதிகளான மார்க்கூஸ் லவ்பென்தால், செல்வாக்கு மிக்க ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக கட்சித் (CDU) தலைவர் பிரீடிறிஹ் மெர்ஸ் தாராளவான ஜனநாயக கட்சித்தலைவர் கிறிஸ்டியான் டூர் மற்றும் துரிங்கியாவின் மாநில தலைவர் போடோ ராமலோவ் (இடது கட்சி) உட்பட கட்சிகளின் பிரதிநிதிகளும் அடங்குவர்.

உரையைத் தொடர்ந்து, அது 'தெளிவான வழிகாட்டுதலை' வழங்கியதாக மெர்ஸ் கூறினார். 'இது அரசியல் பணிகளின் பட்டியல்,' என்று அவர் தொடர்ந்தார். கிறிஸ்தவ ஜனநாயக கட்சித் தலைவர் இப்போது இதை நடைமுறைப்படுத்துவது முக்கியம் என்றார்.

ஜனாதிபதியின் உரையையும், குறிப்பாக, தீமையை ஒருவர் நல்லெண்ணத்துடன் எதிர்த்துப் போராட முடியாது என்ற அறிக்கையையும் ராமலோ ஆதரித்தார். 'ஆக்கிரமிப்பு மற்றும் ஆக்கிரமிப்புப் போரை திரு. புட்டின் தொடங்கினார் என்ற உண்மையை புறக்கணித்து, அமைதிக்காக நிற்க விரும்புவதாகக் கூறும் மக்களால் துரிங்கியாவில் பல ரஷ்யக் கொடிகள் உயர்த்தப்படுவதைப் பார்த்து நான் வியப்படைகிறேன்' என்று ராமலோ கூறினார்.

இராணுவவாதம் மற்றும் சமூகத் தாக்குதல்களுக்கான அனைத்துக் கட்சிகளின் இந்த புலம்பல்கள், ஒரு அணுசக்தி உலகப் போரை 'அரசியல் அமைப்பின் மீதான பொதுவான தாக்குதலில்' மட்டுமே தடுக்க முடியும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் சகோதரக் கட்சிகளும் போர் மற்றும் அதன் மூலகாரணமான முதலாளித்துவத்திற்கு எதிராக, மக்களில் பெரும்பான்மையான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்திற்காகப் போராடுகின்றன. ஒரு சோசலிசத்திற்கான இந்த அவசியமான போராட்டத்தில் இணையுமாறு அனைத்து வாசகர்களையும் நாங்கள் அழைக்கிறோம்.

Loading