ஐரோப்பிய அரசாங்கங்கள் கோவிட்-19 தொற்று மற்றும் இறப்புக்களின் மூன்றாவது குளிர்காலத்திற்குத் தயாராகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐரோப்பிய அரசியல் ஸ்தாபகம் மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் பிரச்சாரத்திற்கு முற்றிலும் மாறாக கோவிட்-19 நோய்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. வைரஸ், புதிய குளிர்கால நோய்தொற்று எழுச்சி, அத்துடன் மற்ற சுவாச நோய்கள், அதிகரித்து வரும் வறுமை ஆகியவற்றால் ஐரோப்பா முழுவதும் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து இறக்கின்றனர், இது கண்டத்தில் இலட்சக்கணக்கான அதிகப்படியான இறப்புக்களுக்கு வழிவகுக்கும்.

கொரோனா வைரஸ் நோய்தொற்று வெடிப்பு தொடங்கியதிலிருந்து இங்கிலாந்தின் மூன்றாவது தேசிய பூட்டுதலின் போது, ஜனவரி 12, 2021, செவ்வாய்க்கிழமை, கிழக்கு இலண்டனில் உள்ள ராயல் இலண்டன் மருத்துவமனைக்கு வெளியே ஒரு நோயாளி தள்ளுவண்டியில் வைத்து கொண்டு செல்லப்படுகிறார். 81,000 க்கும் அதிகமானோர் இறந்த பிரிட்டன், ஐரோப்பாவில் கொடிய வைரஸ் நோய்தொற்றுக்களைக் கொண்டுள்ளது மற்றும் கோவிட்-19 நோயாளிகளால் நிரம்பிய மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கை அங்கு ஒரு மாதத்திற்கும் மேலாக சீராக உயர்ந்துள்ளது. [AP Photo/Matt Dunham]

பாரிய கோவிட்-19 நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களைக் கொண்ட மற்றொரு குளிர்காலம் என்பது, முதன்மையாக வைரஸை தடையின்றி மக்களிடையே பரவ அனுமதித்த ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் முடிவின் விளைவாகும். ‘தடுப்பூசி மட்டும்’ மூலோபாயம் பின்பற்றப்படுகின்ற மற்றும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் குறைந்தபட்ச தணிப்பு நடவடிக்கைகள் கூட மொத்தமாக கைவிடப்படுகின்ற நிலையில், இந்த குளிர்காலத்தில் இரண்டு புதிய தடுப்பூசி எதிர்ப்பு மாறுபாடுகளின் கொடிய தாக்கம் இருக்கும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களாக ஐரோப்பாவில் வைரஸின் எட்டாவது அலை மெதுவாக குறைந்து வருவதால் அங்கு நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. கடந்த ஏழு நாட்களில் ஐரோப்பா முழுவதும் 1 மில்லியனுக்கும் அதிகமான நோய்தொற்றுக்கள் பதிவாகியிருந்தன, அதற்கு முந்தைய வாரத்தில் இருந்த 1.5 மில்லியனுடன் ஒப்பிடுகையில் நோய்தொற்றுக்கள் குறைந்துள்ளன. மேலும், கடந்த வாரத்தில் 4,216 கோவிட்-19 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன, அதற்கு முந்தைய வாரத்தில் 5,449 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், ஐரோப்பாவில் நோயெதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கும் புதிய மாறுபாடுகளின் விரைவான பரவலானது, கடந்த குளிர்காலத்தில் வெடித்தெழுந்த ஓமிக்ரோன் அலையின் அளவை ஒத்த பாரிய வைரஸ் நோய்தொற்று அலை எழுச்சிக்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஓமிக்ரோன் மாறுபாடு முதன்முதலில் ஐரோப்பாவில் நவம்பர் 19, 2021 அன்று கண்டறியப்பட்டது, மேலும் அப்போதிருந்து அசல் மாறுபாடும் அதன் துணைமாறுபாடுகளும் 600,000 க்கும் அதிகமான ஐரோப்பிய கோவிட்-19 இறப்புக்களை விளைவித்தன.

வெள்ளிக்கிழமை, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான ஐரோப்பிய மையம் (ECDC), BQ.1.1 துணைமாறுபாட்டின் பரவலைப் பற்றி எச்சரித்தது, இது BA.5 துணைமாறுபாட்டை இலக்கு வைக்கும் நோய் எதிர்ப்பிகளின் (antibodies) நோயெதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறன் கொண்டது. BA.5, BA.4 துணைமாறுபாடுகள் ஐரோப்பா முழுவதும் கோவிட்-19 நோய்தொற்றின் கோடைக்கால அலைகளை உருவாக்கின.

BQ.1.1 துணைமாறுபாடு ஏற்கனவே பிரான்சில் ஆதிக்கம் செலுத்துகிறது, மேலும் இங்கிலாந்தின் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட நோய்தொற்றுக்களுக்கு அது காராணமாக உள்ளது. நவம்பர் நடுப்பகுதியில் இது கண்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் என்று ECDC முன்கணித்துள்ளது. BA.1, BA.4, BA.5 துணைமாறுபாடுகளிலிருந்து பாதுகாக்கும் புதிய ஈரிணைத் திறம் உடைய தடுப்பூசிகளை ஐரோப்பிய சந்தைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது அப்போதுதான். BQ.1 க்கு எதிரான இந்த ஈரிணைத் திறம் உடைய தடுப்பூசிகள் மற்றும் அவற்றின் பழைய இணை தடுப்பூசிகளின் செயல்திறன் குறைக்கப்படும், இருப்பினும் இது எந்த அளவிற்கு என்பது இன்னும் தெரியவில்லை.

அக்டோபர் 26 அன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஐரோப்பிய மருந்துகள் அமைப்பின் (European Medicines Agency-EMA) தடுப்பூசி மூலோபாயத்தின் தலைவர் மார்கோ கவலேரி (Marco Cavaleri), ஐரோப்பாவில் XBB மாறுபாட்டின் போக்கை EMA உம் கண்காணித்து வருவதாகக் கூறினார். இது அதிக எண்ணிக்கையிலான புரோட்டீன் ஸ்பைக் பிறழ்வுகளைக் கொண்டிருப்பதால், இது ‘கனவு மாறுபாடு’ என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது தற்போது சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் நோய்தொற்று எழுச்சியை ஏற்படுத்துகிறது. XBB தொடர்பான ஆரம்பகால ஆய்வுகள் தடுப்பூசிகளிலிருந்து குறிப்பிடத்தக்க நோயெதிர்ப்பு சக்தி தவிர்க்கப்படுவதை மற்றும் வைரஸ் எதிர்ப்பு சிகிச்சைகள் பயனற்றதாக்கப்படுவதைக் காட்டுகின்றன. ஒரு சீனா ஆய்வகத்தின் முந்தைய ஆய்வு, இந்த மாறுபாடு, “BA.5 ஐ விட மிகுந்த நோயெதிர்ப்பு-ஏய்ப்புத் திறன் கொண்டது” என்று விவரிக்கிறது.

தடுப்பூசி எதிர்ப்பு BQ.1.1 மற்றும் XBB மாறுபாடுகள் பின்னோக்கி அல்லது ஒரே நேரத்தில் நோய்தொற்று அலைகளை உருவாக்கும் சாத்தியம் உள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பாசல் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு கணக்கீட்டு உயிரியலாளர், கொர்னேலியஸ் ரோமர், Nature சஞ்சிகைக்கு, “இறுதியில் XBB உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவானால், ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் ஒருவித இரட்டை நோய்தொற்று அலையை நாம் காணலாம்” என்று கூறினார்.

BQ.1.1, XBB இரண்டு மாறுபாடுகளும் மரபணு ரீதியாக மிகவும் வேறுபட்டவை என்பதால், BQ.1.1 ஆல் வழங்கப்படும் தொற்று அடிப்படையிலான நோயெதிர்ப்பு சக்தி XBB ஆல் தவிர்க்கப்படும் மற்றும் எதிர்மாறாகவும் நடக்கலாம். இதற்கிடையில், தடுப்பூசியிலிருந்து கிடைத்த நோயெதிர்ப்பு சக்தியின் அளவு ஐரோப்பிய மக்களிடையே குறைந்து வருகிறது. புதிய தடுப்பூசி அளவுகள் முன்பை விட மிகக் குறைந்த விகிதத்தில் வழங்கப்படுகின்றன, மேலும் முந்தைய தடுப்பூசி அளவுகளிலிருந்து பெறப்பட்ட நோயெதிர்ப்பு சக்தியின் அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த காரணிகள் குளிர்காலத்தில் நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கும்.

பாரிய கோவிட்-19 நோய்தொற்று எழுச்சியின் போது, அதிலும் குளிர்காய்ச்சல் போன்ற பிற சுவாச தொற்றுநோய்கள் மற்றும் அதிகரித்த வறுமை மற்றும் அதிகளவு எரிசக்தி பற்றாக்குறை ஆகியவற்றின் விளைவுகளுடன், பல ஐரோப்பிய மருத்துவமனைகள் அவற்றின் திறனுக்கு கிட்டத்தட்ட நெருக்கமாக அல்லது திறனைத் தாண்டி இயங்குவதால், உள்வரும் நோயாளிகளின் எண்ணிக்கையால் அவை சரிவதற்கு வழிவகுக்கும்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து வைரஸின் ஆரம்ப அலை தணிக்கப்பட்டதன் பின்னர், இது வடக்கு அரைக்கோளத்தின் பாரிய நோய்தொற்று மற்றும் இறப்புக்கான மூன்றாவது குளிர்காலமாக இருக்கும், மற்றும் இது தடுப்பூசிகளின் வளர்ச்சிக்குப் பிந்தைய இரண்டாவது எழுச்சியாக இருக்கும்.

உண்மையில், கடந்த மூன்று ஆண்டுகளில், உயிர்காக்கும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், ஐரோப்பிய இறப்புக்களின் அளவு சீராகவே உள்ளது. மார்ச் 1, 2020 ஐ தொற்றுநோயின் தொடக்க நாளாக எடுத்துக் கொண்டால், முதல் 12 மாதங்களில், ஐரோப்பாவில் 845,000 பேர் இறந்துள்ளனர். தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டதன் பின்னர், அடுத்த ஆண்டில், மார்ச் 1, 2021 மற்றும் மார்ச் 1, 2022 க்கு இடையே, 905,000 ஐரோப்பியர்கள் இறந்துள்ளனர். மார்ச் 1, 2022 முதல், 220,000 பேர் இறந்துள்ளனர், இது குளிர்கால எழுச்சிக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது.

இந்த நிலையான இறப்பு அளவும், எப்போதும் நிலவும் நோய் அச்சுறுத்தலும், தொற்றுநோய்க்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் நடவடிக்கைகளின் குற்றவியல் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிரான்சில், இமானுவல் மக்ரோனின் முதல்முறை ஜனாதிபதி பதவியின் கீழ் முக்கிய பிரமுகர்களை உள்ளடக்கிய ஒரு விசாரணை, 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோவிட்-19 நோய்தொற்று பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதில் பிரெஞ்சு அரசாங்கம் சட்டத்தை மீறியதற்கான கணிசமான ஆதாரங்களை வெளிப்படுத்துகிறது. இந்தக் கொள்கை சீனாவைத் தவிர, ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் பிரதிபலித்தது.

இத்தாலியில் எழுந்த திடீர் வேலைநிறுத்தங்களின் அலையைத் தொடர்ந்து, உடனடியாக ஐரோப்பா முழுவதும் மற்றும் அமெரிக்காவிலும் வேலைநிறுத்தங்கள் உருவெடுத்த நிலையில், மார்ச் 2020 இல் அரசாங்கங்களால் தயக்கத்துடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எவ்வாறாயினும், அந்த நேரத்தில் முதலாளித்துவ அரசாங்கங்கள் வைரஸை அகற்றுதவதற்கு அல்லாமல், முடிந்த அளவு இலாபங்களை பிழிந்தெடுப்பதை மீண்டும் தொடங்குவதற்கு தொழிலாளர்களை பணியிடங்களுக்கு திரும்ப வலியுறுத்துவதில் தான் முனைப்பாக இருந்தன.

தடுப்பூசிகளின் வளர்ச்சிக்குப் பின்னர், அரசாங்கங்கள், தொழிலாள வர்க்கத்திற்கு அழிவைத் தரக்கூடியது என்று நிரூபிக்கப்பட்டுள்ள ‘தடுப்பூசி மட்டும்’ கொள்கையை பின்பற்றியுள்ளன. இந்த தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன மற்றும் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட அல்லது இறக்கும் அளவிற்கு பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விகிதத்தை வெகுவாகக் குறைத்துள்ளன. ஆனால் நோய்தொற்று விகிதங்கள் விண்ணைமுட்டும் அளவிற்கு அதிகரித்தன, அதனால் 2020 டிசம்பரில் ஐரோப்பாவில் முதல் உயிர்காக்கும் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்ட பின்னரும், ஆளும் வர்க்கத்தின் மோசமான அலட்சியத்தால் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ஐரோப்பியர்கள் கோவிட்-19 நோயால் இறந்தனர்.

இந்தக் கொள்கையின் கீழ், மக்கள் மீதான தொற்றுநோயின் தாக்கம் தணிக்கப்படவில்லை, மாறாக உண்மையில் இன்னும் நிலைமை மோசமாக அச்சுறுத்துகிறது. அதே அக்டோபர் 26 செய்தியாளர் கூட்டத்தில், தடுப்பூசிகள் உருவாக்கப்படுவதை விட வேகமாக புதிய கோவிட்-19 மாறுபாடுகள் உருவாகி வருகின்றன என்று கவலேரி எச்சரித்தார். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, இப்போது உலகம் முழுவதும் 300 ஓமிக்ரோன் துணைப் பரம்பரைகள் கண்காணிக்கப்படுகின்றன.

மேலும் மேலும் அதிகமான மாறுபாடுகள் தடையின்றி பரவுவதால், வைரஸின் பிறழ்வு விகிதம் அதிவேகமாக அதிகரித்து வருகிறது, இது மாறுபாடுகளைக் கண்காணிப்பதையும் அவற்றின் ஆபத்தைக் கண்டறிவதையும் கடினமாக்குகிறது, இந்த சூழ்நிலையை ‘variant soup’ என்று Nature இதழில் ஒரு கட்டுரை கூறுகிறது. இவ்வாறாக, ‘தடுப்பூசி மட்டும்’ மூலோபாயம், ஆண்டுதோறும் பாரிய நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களை மட்டுமே உறுதி செய்கிறது. மேலும், தொற்றுநோயியல் நிபுணர்களின் மாறுபாடுகளைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறன் கூட, ஐரோப்பிய அரசாங்கங்கள் தொற்றுநோய் முடிந்துவிட்டதாக அறிவித்ததிலிருந்து, பரிசோதனை உள்கட்டமைப்பு மற்றும் அறிக்கையிடலை குறைப்பதன் மூலம் முறையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மார்ச் 2020 இல் கொரோனா வைரஸ் குறித்த பிரெஞ்சு அரசாங்கத்தின் குற்றவியல் நடவடிக்கைகள் விதிவிலக்கானவை அல்ல, மாறாக ஐரோப்பா மூலமான தொற்றுநோய் நடவடிக்கைகளுக்கான விதியாக உள்ளது. சாத்தியமான ஒவ்வொரு தருணத்திலும், வைரஸ் பரவுவதைத் தடுக்க எஞ்சியிருந்த நடவடிக்கைகளை அரசாங்கங்கள் நீக்கியுள்ளன.

ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் உள்ள ஆளும் வர்க்கம், வைரஸைப் பற்றிய விஞ்ஞான அறிவையும் மனித உடலில் அது ஏற்படுத்தும் அழிவுகரமான தாக்கத்தையும் வெற்றிகரமாக அடக்கியதால் மட்டுமே இதை அடைய முடிந்தது. இது சீனாவின் பூஜ்ஜிய கோவிட் கொள்கை மீதான தொடர்ச்சியான கண்டனத்துடன் தொடர்கிறது, இந்தக் கொள்கை மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது, மற்றும் உலகளவில் வைரஸை முற்றிலும் அகற்றுவது சாத்தியம் என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ வர்க்கத்தின் குற்றவியல் மற்றும் விஞ்ஞான-விரோதக் கொள்கைக்கு எதிராக தொழிலாள வர்க்கம் தீவிரமாக போராட வேண்டும்.

இந்த எதிர்ப்பிற்கான வாகனம் என்பது தொற்றுநோய் பற்றிய உலகளாவிய தொழிலாளர்களின் விசாரணை ஆகும், இது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வைரஸ் பற்றிய விஞ்ஞான புரிதலை வழங்குவதற்கு உலக சோசலிச வலைத் தளத்தால் (WSWS) தொடங்கப்பட்டது, அதேவேளை தொற்றுநோய் காலம் முழுவதுமான முதலாளித்துவ அரசாங்கங்களின் குற்றவியல் பதிவுகளை அம்பலப்படுத்தியது. விசாரணைக்கு தங்கள் அனுபவங்களை அல்லது நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள விரும்பும் தொழிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இன்றே WSWS ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Loading