முன்னோக்கு

அகதிகள் மீதான பைடென் நிர்வாகத்தின் போர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மக்கள் முதுகுக்குப் பின்னால், பைடென் நிர்வாகம் குடியேற்றக் கொள்கையில் ஓர் ஆபத்தான மற்றும் பிற்போக்குத்தனமான மாற்றத்தை நடைமுறைப்படுத்தி வருவதுடன், ஜனாதிபதியின் அதிகாரத்தைச் சர்வாதிகாரமாக விரிவாக்குவதன் மூலம் அதை அமலாக்கியும் வருகிறது.

பல தசாப்தங்களில் இல்லாதளவில் ஆட்கள் எல்லையைத் தாண்டி வரும் அளவை வேகமாகக் குறைப்பதும், அத்துடன் அமெரிக்க அரசியலமைப்புக்கு உட்பட்டு தஞ்சம் கோருவோர் அமெரிக்க மண்ணை வந்தடைவதைத் தடுப்பதுமே இந்த மாற்றத்திற்கான நோக்கமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் 'ஜனநாயகத்தின்' கலங்கரை விளக்கம் என்றும், ரஷ்யாவுக்கு எதிரான அதன் போர் 'மனித உரிமைகளுக்காக' நடத்தப்படுகிறது என்றும் கூறப்படும் வாதத்தை, இந்த வலதுசாரி மாற்றம், பொய் என அம்பலப்படுத்துகிறது.

'பயங்கரவாதம் மீதான போர்' என்ற சாக்கில் அரசாங்கம் நூற்றுக் கணக்கானவர்களைச் சிறையில் அடைத்து சித்திரவதை செய்துள்ள இராணுவச் சிறைக்குப் பக்கவாட்டில், குவாண்டனமோ வளைகுடாவில் ஹைட்டி புலம்பெயர்ந்தோரைத் தடுப்புக் காவலில் வைக்க, நிர்வாகப் பிரிவுக்கு அதிகாரம் வழங்கும் ஒரு கொள்கை ஆவணத்தைப் பைடென் நிர்வாகம் உருவாக்கி இருப்பதாக NBC News அக்டோபர் 30 இல் குறிப்பிட்டது.

இப்போது பைடென் நிர்வாகம், குவாண்டனமோவைப் புலம்பெயர்ந்தோருக்கான 'மேற்தளமாக' (lily pad) பயன்படுத்தலாம் என்று கூறுகிறது, ஆனால் 'சிறைச்சாலைக்கு ஒத்த தடுப்பு முகாம்' (internment camp) என்பதே அதற்குச் சரியான வார்த்தையாக இருக்கும். அமெரிக்க மண்ணை வந்தடைந்தால் அவர்கள் கையாளப்படும் விதம் அல்லது நாடு கடத்தப்படுவதை எதிர்த்து புலம்பெயர்ந்தோர் சவால் விடுக்க முடியும், ஆனால் அத்தகைய உரிமை எதுவும் இல்லாமல், அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைந்துள்ள சிறைகள் மற்றும் அடுக்குப் படுக்கைகளில் 400 ஹைட்டி புலம்பெயர்ந்தோரை வைக்க முதல் முன்மொழிவில் கூறப்பட்டது.

சில நாட்களுக்கு முன்னர், பாதுகாக்கப்பட்ட தற்காலிக அந்தஸ்து (Temporary Protected Status - TPS) பெறும் 300,000 க்கும் அதிகமானவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வழக்கறிஞர்களுடனான மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளில் இருந்து பைடென் நிர்வாகம் விலகியது, 2018 இல் 240,000 சால்வாடோரியர்கள், 77,000 ஹோண்டடூரனியர்கள், 14,000 நேபாளியர்கள் மற்றும் 4,000 நிக்கரகுவாவினருக்கு TPS அந்தஸ்தை திரும்ப பெற்றதற்காக ட்ரம்ப் நிர்வாகத்தை அவர்கள் சட்டரீதியாக எதிர்கொண்டார்கள். புலம்பெயர்ந்தோரின் இந்த சவாலை பைடென் நிர்வாகம் தொடர்ந்து எதிர்ப்பதுடன், TPS அந்தஸ்தை ட்ரம்ப் திரும்ப பெற்றதை அடிப்படையில் ஆதரிக்கிறது மற்றும் நூறாயிரக் கணக்கானவர்களை நாடுகடத்த அச்சுறுத்தி வருகிறது.

அமெரிக்க வரலாற்றிலேயே எந்த ஆண்டையும் விட அதிகமாக 2021 நிதியாண்டில் பைடென் நிர்வாகம் தான் 2.8 மில்லியன் புலம்பெயர்ந்தோரை அமெரிக்காவை விட்டு வெளியேற்றி இருப்பதாக, அக்டோபர் மாதத் தொடக்கத்தில், சுங்க மற்றும் எல்லை ரோந்துத் துறை (CBP) வெளியிட்ட புள்ளிவிபரங்கள் குறிப்பிட்டன.

மிக முக்கியமாக, 'பொது சுகாதார' அவசரநிலையைக் காரணம் காட்டி புலம்பெயர்ந்தோருக்கு அரசாங்கம் தடை விதிக்கும் ஜனநாயக விரோத வழிவகையான 'Title 42” என்பதன் கீழ் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டு இருப்பதை அந்தப் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தின. ட்ரம்ப் ஆரம்பத்தில் கோவிட்-19 பெருந்தொற்றை ஒரு போலி-சட்ட நியாயப்பாடாக மேற்கோளிட்டு Title 42 வழிவகையைப் பயன்படுத்தினார், பைடெனின் கீழ் நீதிமன்றங்கள் அதை தக்க வைத்துக் கொண்டுள்ளன. Title 42 இன் கீழ் அமெரிக்காவுக்குள் நுழைவதில் இருந்து தடுக்கப்பட்டவர்களுக்கு அரசியலமைப்பு உரிமைகளும் கிடைக்காது என்பதோடு, அகதிகளாகவும் விண்ணப்பிக்க முடியாது.

பத்து நூறாயிரக் கணக்கான புலம்பெயர்ந்தோர் வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைவதை Title 42 இன் கீழ் தடுக்கும் விதத்தில், பைடென் நிர்வாகம் அக்டோபர் 12 இல் மெக்சிகன் ஜனாதிபதி அந்திரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடருடன் (AMLO) கேவலமான ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. வெனிசுவேலாவாசிகளைக் கூடார நகரங்களில் வாழ விட AMLO ஒப்புக் கொண்டுள்ளார், அங்கே ஏகாதிபத்தியப் போர் மற்றும் முதலாளித்துவச் சுரண்டலால் சீரழிக்கப்பட்ட சமூகங்களில் இருந்து தப்பித்து வரும் புலம்பெயர்ந்தவர்கள் நோய்நொடிகளோடு அழுக்கடைந்த கூடாரங்களில் வாழ்கிறார்கள்.

கடந்த 200 ஆண்டுகளில் பாசாங்குத்தனம் மற்றும் எரிச்சலூட்டும்தன்மையின் கலவையை ஜனநாயகக் கட்சி செம்மைப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், பைடெனும் ஜனநாயகக் கட்சியினரும் தொடர்ந்து தங்களைப் புலம்பெயர்ந்தவர்களின் பாதுகாவலர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

புதிய அமெரிக்க குடிமக்களுக்கான சமீபத்திய நிகழ்வு ஒன்றில், பைடென் ஜனநாயகக் கட்சியின் அலுத்துப் புளித்துப் போன அதே முறையீட்டை மீண்டும் கூறினார்: 'உங்களைப் போன்ற புலம்பெயர்ந்தோரின் கனவுகள் தான் அமெரிக்காவைக் கட்டியெழுப்பியது,' என்றார். ஆனால் திங்கட்கிழமை, தஞ்சம் கோருவோர்களின் ஒரு குழு, “புலம்பெயர்ந்தவர்களாகிய நாங்கள் தான், அமெரிக்காவைக் கட்டமைக்கிறோம்,” என்று குறிப்பிட்ட ஒரு கொடியை ஏந்தி எல் பாசோவுக்கு அருகே ரியோ கிராண்டே வழியாக அணிவகுக்க முயன்ற போது, பைடெனின் CBP அவர்களின் தலையை நோக்கி மிளகு உருண்டைகளை வைத்துச் சுட்டது, அவர்கள் நதியைக் கடந்து மெக்சிகோவில் உள்ள அவர்களின் கூடார வீடுகளுக்கே திரும்ப ஓடினார்கள்.

இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தொழிலாள வர்க்கத்தை வறுமை மற்றும் பற்றாக்குறை நாசப்படுத்திக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் தான், புலம்பெயர்ந்தோர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது. உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க/நேட்டோ போரின் நீடிப்பும் இந்தப் பெருந்தொற்றும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் நூறு மில்லியன் கணக்கான மக்கள் மீது பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஹைட்டியில், காலரா பரவி வரும் நிலையில், உணவு மற்றும் எரிவாயு தீர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் பரந்த பகுதிகளை அடாவடித்தனமான கும்பல்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ள நிலையில், அந்தச் சமூகம் ஒரு தோல்வி நிலையில் உள்ளது. இருப்பினும், அபராதம் செலுத்தாவிட்டால் நாடுகடத்தப்பட்டவர்களை ஹைட்டி அரசாங்கம் சிறையில் அடைப்பதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்த போதினும் கூட, பைடென் நிர்வாகம் அந்த அகதிகளை மீண்டும் ஹைட்டிக்கே நாடு கடத்துகிறது.

அமெரிக்காவுக்கு வருபவர்கள் மிகக் கொடூரமாக நடத்தப்படுகிறார்கள். எல்லையில் கடந்த ஆண்டு பைடென் நிர்வாகத்தால் காவலில் வைக்கப்பட்ட ஓர் இளம் ஹைட்டிய தாயுடன் உலக சோசலிச வலைத் தளம் உரையாடியது, அவர் கூறினார்:

டெக்சாஸில் எனக்கு நடந்ததைப் பற்றி பேசுவது வேதனையாக இருக்கும். அதைப் பற்றி நான் பேசும் போது, யாரோ என் இதயத்தைக் கிழிப்பது போல உணர்கிறேன். நான் கைது செய்யப்பட்ட போது, பயங்கரமாக இருந்தது. முதலில், நான் என் குழந்தையோடு ஒரு பாலத்தின் கீழ் தூங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நீங்கள் செய்திகளில் பார்ப்பது போல, அந்தப் பாலத்தின் கீழ் சில காவலர்கள் எங்களை அடித்தார்கள். நாங்கள் சிறைக்கு அனுப்பப்பட்ட போது, விஷயங்கள் சற்று சரியாகி விடும் என்று நினைத்தேன், ஆனால் அப்படி ஆகவில்லை. சிறையில் என் குழந்தைக்கு இரத்தம் கசிந்து கொண்டிருந்த போதும் கூட, அவர்கள் குழந்தையின் மருந்துகளைப் பறித்துச் சென்றார்கள். அங்கே நான் நான்கு நாட்கள் இருந்தேன், அவர்கள் எங்களுக்கு உணவு கொடுக்கவில்லை, நாங்கள் வெறும் நொறுக்குத் தீனிகளை மட்டுந்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். குளிக்கவோ, பல் தேய்க்கவோ முடியவில்லை, தரையில் படுத்து தூங்க வேண்டியிருந்தது. குழந்தைகள் வறண்டு போனார்கள், அவர்களின் கண்கள் மயங்கி விழப் போவதைப் போல இருந்தன. “அம்மா, எனக்குப் பசிக்கிறது, பசிக்கிறது' என்று குழந்தை கூறும் போது ஒரு தாயாக என்ன செய்வது என்று ஒருவருக்குத் தெரியாது, ஆனால் எதுவும் செய்ய முடியாது. என் குழந்தைக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது, காலில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. நாங்கள் வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவதாக காவலர்கள் எங்களை கேலி செய்தார்கள்.

தற்போது பைடென் நிர்வாகம் முன்னெடுத்து வரும் இந்தக் கொள்கை, பாசிச அரசியல் வலதுக்கு ஒரு மிகப் பெரிய விட்டுக்கொடுப்பாகும்.

குடியரசுக் கட்சியின் இடைக்கால மூலோபாயம், வழக்கமான வலதுசாரி பேரினவாத மொழியைக் கடந்து சென்றுள்ளது. டெக்சாஸ் மற்றும் புளோரிடாவின் குடியரசுக் கட்சி ஆளுநர்கள் (கிரெக் அபோட் மற்றும் ரொன் டுசண்டிஸ்), புலம்பெயர்ந்தத் தொழிலாளர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதை நோக்கமாக கொண்ட பல சண்டைகளில், கடந்த பல மாதங்களாக 11,000 க்கும் அதிகமான புலம்பெயர்ந்தவர்களை ஜனநாயகக் கட்சியினர் ஆட்சி செலுத்தும் பெரும் நகரங்களுக்கு நகர்த்துவதிலும் விரட்டுவதிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இத்தகைய காட்சிகளுக்கு ஏற்ப ஜனநாயகக் கட்சியின் அரசியல் மூலோபாயம் வகுக்கப்படுகிறது. உதாரணமாக, ட்ரம்பை ஆதரிக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் Mehmet Oz உடனான பென்சில்வேனியா செனட் விவாதம் ஒன்றில், ஜனநாயகக் கட்சியின் ஜான் ஃபெட்டர்மேன் 'சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்களைக்' கண்டித்ததுடன், 'எல்லைகளைப் பாதுகாக்க' அழைப்பு விடுத்தார்.

அரசியல் ஸ்தாபகம் இந்த வலதுசாரி சூழலை ஊக்குவித்து வருவதற்கு மத்தியில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. செப்டம்பர் இறுதியில், டெக்சாஸின் சியரா பிளாங்காவில் உள்ள புலம்பெயர்வு தடுப்பு மையத்தின் காவல் அதிகாரி மைக்கேல் ஷெப்பர்ட், பாலைவனத்தில் தண்ணீர் குடிப்பதற்காக நின்றிருந்த ஒரு புலம்பெயர்ந்தோர் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார், அதில் 22 வயதான மெக்சிகன் அகதி Jesús Iván Sepúlveda Martínez கொல்லப்பட்டதுடன், 31 வயதான பிரெண்டா பெரெனிஸ் காசியாஸ் கரில்லோ கடுமையாகக் காயமடைந்தார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல் ஒரு சர்வதேச நிகழ்வுபோக்காக இருப்பதுடன், ஒட்டுமொத்தத் தொழிலாள வர்க்கத்திற்கும் ஓர் எச்சரிக்கையாகும். திங்கட்கிழமை, பிரிட்டிஷ் டோரி உள்துறை செயலர் சுயெல்லா பிரேவர்மேன் புலம்பெயர்வை 'கட்டுப்பாடு இல்லாத' ஒரு 'படையெடுப்பு' என்று கண்டித்தார். அதே நாளில், ஒரு வலதுசாரி நபர் கடலோர நகரமான டோவரில் புலம்பெயர்வு அகதிகள் மையத்தில் நெருப்பு குண்டுகளை வீசினார், அங்கே அரசாங்கம் அகதிகளை நெரிசலான தடுப்பு முகாம்களில் தடுத்து வைத்துள்ளதுடன், அவர்கள் அங்கே தரையில் படுத்து உறங்குகிறார்கள், தொண்டைக் கரப்பான் போன்ற நோய்கள் அவர்களுக்குத் தொற்றுகிறது.

இவை 'ஜனநாயக' ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பொருந்தும், அங்கே வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து தப்பியோடி வரும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஒவ்வொரு ஆண்டும் உள்நுழைவதற்கான முயற்சியில் கடலில் மூழ்கி இறக்கிறார்கள்.

நேற்றுத் தான், 68 அகதிகளை ஏற்றி வந்த ஒரு படகு எவியா கிரேக்கத் தீவில் மூழ்கியது. அக்டோபர் மாத ஆரம்பத்தில், மொராக்கோ, ஈரான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்த 92 புலம்பெயர்ந்தோர் ஆடையின்றி 'முற்றிலும் நிர்வாணமாக' “கைவிடப்பட்ட' நிலையில் கிரீஸில் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டனர். இத்தாலியில், செவ்வாய்கிழமை, பாசிச பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனி நாஜி அடையாளப்பட்டை அணிந்து புகைப்படத்தில் காட்சி அளிக்கும் ஒருவரை அவர் அரசாங்கத்தின் அமைச்சராக நியமித்தார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதலானது, ரஷ்யாவுக்கு எதிராக விரிவாக்கப்பட்டு வரும் போர் தர்க்கத்தால் உந்தப்படுகிறது. போர்க் காலங்களில், ஜனநாயக உரிமைகள் மீதான மிகவும் ஈரவிக்கமற்ற தாக்குதல்கள் எப்போதுமே புலம்பெயர்வு மீதான கட்டுப்பாடுகளுடனும் மற்றும் தேசிய அரசின் ஒடுக்குமுறை எந்திரத்தை வலுப்படுத்துவதுடனும் பிணைக்கப்பட்டு இருக்கும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் முதல் உலகப் போரில் நுழைந்த போது, வில்சன் நிர்வாகம் உளவுபார்ப்புச் சட்டத்தில் கையெழுத்திட்டது, போர்-எதிர்ப்பு பேச்சுக்கள் மற்றும் புலம்பெயர்வு இரண்டுக்கும் கட்டுப்பாடு விதித்த அந்தச் சட்டம், இப்போது ஜூலியன் அசான்ஜைத் துன்புறுத்துவதற்கான அடித்தளமாக சேவையாற்றுகிறது. அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் நுழையத் தயாராக இருந்த போது, ரூஸ்வெல்ட் நிர்வாகம் ஏலியன் பதிவு சட்டம் என்று அறியப்படும் ஸ்மித் சட்டத்தில் கையெழுத்திட்டது, போர்-எதிர்ப்பு பேச்சுக்களுக்குத் தடை விதித்த இந்தச் சட்டம், புலம்பெயர்வுக்கு தடை விதித்ததுடன், ஜப்பானிய தடுப்புக்காவலுக்கு உதவியது.

புலம்பெயர்ந்தோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமானது, ஏகாதிபத்தியப் போர், சமூக சமத்துவமின்மை மற்றும் அவற்றுக்கு மூலக்காரணமான இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி, Title 42 இன் கட்டுப்பாடுகளை நீக்கி, அமெரிக்காவுக்கு வர விரும்பும் புலம்பெயர்ந்தோர் அனைவருக்கும் சட்டபூர்வ அந்தஸ்து வழங்கவும், தேசியத்தை பொருட்படுத்தாமல் அனைவரும் எங்கே வேண்டுமானாலும் பயணிப்பதற்கான உரிமைக்கு உத்தரவாதம் வழங்கவும், CBP, ICE, DHS மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பைக் கலைக்கவும் கோருகிறது.

Loading