இலங்கை: கொழும்பு, கஜீமாவத்தையில் உள்ள டசின் கணக்கான குடிசை வீடுகள் பாரிய தீயினால் அழிந்துள்ளன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

செவ்வாய்கிழமை மாலை, கொழும்பு வடக்கு, கஜீமாவத்தை என்ற இடத்தில் பாரிய தீ வெடித்துக் கிளம்பியதில், 60க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் நாசமானதுடன், நூற்றுக்கணக்கான மக்கள் வாழ இடமின்றி தவிக்கின்றனர். இலங்கையின் அரசாங்கங்கள், வறியவர்களுக்கு கண்ணியமான வீடுகள் வழங்குவதை தொடர்ச்சியாக மறுத்துவருவதை, இந்த அனர்த்தம் மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.

கொழும்பு கஜீமாவத்தையில் எரிந்துபோன குடிசைகள்

தீ பரவத் தொடங்கிய அரை மணி நேரத்திற்குப் பின்னர், தீயணைப்பு வாகனங்கள் வந்தன, மேலும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, தண்ணீர் முடிவடைந்ததால் தீயை அணைப்பதில் இடையூறு ஏற்பட்டது. பன்னிரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பில் ஈடுபட்டிருந்தபோதிலும், அதில் இரண்டு மட்டுமே சரியான வகையில் இயங்கியதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து, கடந்த 18 மாதங்களில் நடந்த மூன்றாவது விபத்தாகும்: 2021 ஏப்ரல் மாதத்தில் முதலாவது சம்பவமும், இந்த வருடம் மார்ச் மாத்தில் இரண்டாவது சம்பவமும் நடந்தன.

இந்தப் பிரதேசத்தில் பல சிங்கள, முஸ்லீம் மற்றும் தமிழ் மக்களில் பலர் தினக்கூலிகளாக, முச்சக்கர வண்டி சாரதிகளாக, வீதி வியாபாரிகளாகவும் இருக்கின்றனர், அல்லது மீன் மற்றும் காய்கறி சந்தைகளிலும் வேலை செய்கின்றனர். செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீயில் உயிர் பிழைத்தவர்கள் தங்கள் உடைமைகளில் பெரும்பாலானவற்றை இழந்ததுடன் அன்று இரவு உணவு அல்லது மறுநாளுக்கான காலை உணவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

உலகசோசலிசவலைத்தள நிருபர்கள், தீயில் இருந்து தப்பிய சிலருடன் உரையாடினார்கள். அவர்கள் அந்தப் பேரழிவு மற்றும் அதன் பின்விளைவுகளை பற்றி விளக்கினர்.

68 வயதான ஜூலியட் புஷ்பராணி, தனது கணவர் மற்றும் மகன் குடும்பத்துடன் வசித்து வந்த அவரது வீடு முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் மொத்தமாக ஏழு பேர் இருந்தனர்.

நாளொன்றுக்கு 2,000–2,500 ரூபாய் ($US6–7) சம்பளத்துக்கு ஒரு சிமெந்து களஞ்சியசாலையில் தொழிலாளியாக வேலை செய்யும் அவரது மகன் மட்டுமே, குடும்பத்தினைப் பராமரிக்கும் ஒரேயொரு நபராகும். பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் பிற முக்கிய ஆவணங்கள் உட்பட அனைத்து சொத்துகளையும் இந்தக் குடும்பம் இழந்துள்ளது.

ஜூலியட் புஷ்பராணி எமது நிருபர்களுடன் உரையாடுகின்றார்

[வீட்டின்] பின் பக்கத்திலிருந்து தீ தோன்றியது. என் மருமகள், அவளுடைய இரண்டு பிள்ளைகள் மற்றும் நான் மட்டும்தான் அங்கே இருந்தோம்’’ என்று புஷ்பராணி கண்ணீருடன் கூறினார்

எனது கைப்பையை மட்டுமே என்னால் எடுக்க முடிந்தது, தீயில் இருந்து தப்பிப்பதற்காக நாங்கள் அனைவரும் ஓடினோம். கைப்பைக்குள்ளே இருந்ததால் எனது அடையாள அட்டை பாதுகாக்கப்பட்டது. எங்கள் உடைகள் அனைத்தும் எரிந்துவிட்டன, எதுவுமே மிஞ்சவில்லை. அப்போது இறுதியாக, எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்தது

சரியான இருப்பிட வசதி வழங்காத அரசாங்கத்தைக் கண்டித்து, அவர் மேலும் கூறியதாவது: “நாங்கள் ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகிறோம், ஆனால் குடியிருப்பதற்கு ஆட்கள் இல்லாமல் ஏராளமான அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன. நாம் அங்கே வாழலாம். வேறு தீர்வு எங்களிடம் இல்லை.

மூன்று வருடங்களுக்கு முன்னர், நகர அபிவிருத்தி அதிகார சபை (ந.அ.அ.ச.) சில கஜீமாவத்தை குடிசைவாசிகளுக்கு தங்குமிட வசதி செய்து தரப்படும் என்று உறுதியளித்தது, ஆனால் எதுவும் நடக்கவில்லை.

33 வயதான பிரதீப் ஒரு கட்டிட தொழிலாளி ஆவார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன், 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு இவரது வீடு தீயில் எரிந்து நாசமானது. 'இந்த நரகம் போன்ற பகுதியை விட்டு வெளியேற மக்கள் விரும்புகிறார்கள்,' என்று கூறிய அவர், 'வேறு ஒரு இடத்தில் வீட்டைப் பெறவேண்டுமானால் நீங்கள் 100,000 ரூபாய் முற்பணம் பணம் செலுத்த வேண்டும், பின்னர் மாதாந்த வாடகையும் செலுத்த வேண்டும். இந்த பெரிய தொகையை செலுத்த முடியாத பலர் இங்கு உள்ளனர்,” என்றார்.

முஸம்மில் என்ற முச்சக்கர வண்டி சாரதிக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர் ஒன்பது வருடங்களுக்கு மேலாக கஜீமாவத்தையில் வசித்து வருகிறார். 'தீ விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் அறியப்படவில்லை, ஆனால் சுமார் 65 வீடுகள் அழிக்கப்பட்டதாக நான் நினைக்கிறேன்,' என அவர் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் இல்லாமல் செயற்பட்டதாலேயே அவரது வீடு அழிக்கப்பட்டதாக முஸம்மில் குறிப்பிட்டார்.

எல்லோரும் தீயில் இருந்து தப்பிக்க முடிந்தது, ஆனால் சிலர் மட்டுமே தங்கள் உடைமைகளில் சிலவற்றை எடுக்க முடிந்தது. எனது பிள்ளைகளின் உடைகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. சிலர் குழந்தைகளுடன் மட்டுமே ஓடிவிட்டனர்

12 வயதான துலாஜ் தர்ஷனா, அருகிலுள்ள மாவத்தை பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்கிறார். அவர் ஆறு குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். “எனது புத்தகங்கள் அனைத்தும் எரிந்துவிட்டன. எனது ஆடைகளை மட்டுமே என்னால் காப்பாற்ற முடிந்தது. நான் பாடசாலைக்குச் செல்வதற்கு, இரண்டு மாதங்கள் அல்லது அதற்கு கூடுதலாவும் ஆகும். எனது சகோதரிகளின் புத்தகங்களும் எரிந்துவிட்டன,” என்று தர்ஷனா கூறினார்.

40 வயதான கமல், திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன், 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருகிறார். அவர், ஒரு சிறிய நிறுவனத்தில் சாரதியாக வேலை செய்கிறார். தீ தனது வீட்டை அடையும் முன்னரே அணைக்கப்பட்டதாக கூறிய அவர், தீ விபத்தும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கமும் குடிசைவாசிகள் எதிர்கொள்ளும் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றார்.

“விலைவாசி உயர்வு அடிக்கடி நிகழ்ந்தாலும், எங்களின் சம்பளம் அதிகரிக்கவில்லை. நான் மாதம் 30,000-40,000 ரூபாய் சம்பாதிக்கிறேன் ஆனால், இது சாப்பாடு மற்றும் பள்ளிச் செலவுகளுக்குப் போதுமானதாக இல்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த விலை அதிகரிப்பால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். 5,000 - 7,000 ரூபாய்க்கு கொள்வனவு செய்த பொருட்களுக்கு இப்போது நாங்கள் 15,000 ரூபாய் கொடுக்கிறோம்.” என்றார்.

“நான் காலை உணவை சாப்பிடுகிறேன், இரவும்சாப்பிடுகின்றேன், ஆனால் மதிய உணவை நிறுத்தியுள்ளேன். அதன் மூலம், நான் 400 ரூபாய் சேமிக்கிறேன். நாங்கள், இப்போது ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் மட்டுமே சாப்பிடுகிறோம். முட்டையின் விலை அதிகமாக உள்ளது, வாரம் ஒருமுறை மட்டுமே மீன் சாப்பிடுவதால், குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க முடியாதுள்ளது. ஒரு கிலோ மாட்டிறைச்சி இப்போது 2,200 ரூபாயாக உள்ளது, எனவே 300 ரூபாய்க்கு சிறிய தொகையை மட்டுமே பெற முடியும்,” என்று அவர் கூறினார்.

அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் 1,200 வீடுகள் இருந்ததாக கஜீமாவத்தை குடியிருப்பாளர்கள் சுட்டிக்காட்டினர். சுமார் 400 வீடுகள் இன்னும் காலியாகவே உள்ளன. இந்த வீடுகளில் கஜீமாவத்தையைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு இடமளிக்கவில்லை என்று, ந.அ.அ.ச. மீது அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 2019 இல், அங்கு குடியிருப்பவர்களை மீள்குடியேற்றுவதாக ந.அ.அ.ச. உறுதியளித்தபோதிலும், குடிசைவாசிகளை 'சட்டவிரோதமாக குடியேறியவர்கள்' என்று அதிகாரிகள் முத்திரை குத்தி, தாங்கள் வீடுகளை வழங்காததை நியாயப்படுத்திக் கொண்டனர். கடந்த பொதுத் தேர்தலின் போதும் சில குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

கஜீமாவத்தை தீவிபத்தில் வீடுகளை இழந்த பெண்களும் சிறுவர்களும்

இந்த ஆண்டின் தொடக்கத்தில், குடியிருப்பாளர்களின் குழுவொன்று, ந.அ.அ.ச. க்கு ஆதரவளித்ததுடன், தாங்கள் வீட்டுவசதிக்கு உரிமையுள்ளவர்கள் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களை சமர்ப்பித்தது. ஆனால், அதிகாரிகள் அவர்களை அச்சுறுத்தி, அவர்கள் விரைவில் அந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவித்தனர்.

முந்தைய இரண்டு தீ விபத்துகளுக்குப் பின்னர், வீடற்ற குடும்பங்களுக்கு தங்குமிடத்தை வழங்குவதாக அரசியல்வாதிகள் பொய்யாக வாக்குறுதி அளித்ததாகவும், அதேபோன்ற வெற்று வாக்குறுதிகள் மீண்டும் வழங்கப்படும் என்றும் செவ்வாய் கிழமை தீயில் இருந்து தப்பியவர்கள் உலகசோசலிசவலைத்தள செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

கஜீமாவத்தை குடியிருப்பாளர்கள், ந.அ.அ.ச. மற்றும் பொலிசாரினாலும் தொடர்ச்சியாக துன்புறுத்தப்படுகின்றனர். 2016 பெப்ரவரியில், அரசாங்கம் சில வீடுகளுக்கான மின்சாரம் மற்றும் தண்ணீரின் இணைப்புக்களை துண்டித்து அவற்றை இடித்து தள்ளும் முயற்சியில் இறங்கியது. பொதுமக்களின் எதிர்ப்புகளை சந்தித்ததால், அரச அதிகாரிகள் இந்த திட்டங்களை கைவிட வேண்டியிருந்தது. சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்ததாகக் கூறி, மார்ச் மாதம் 128 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஏப்ரல் மாதம், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் மோசமான சமூக நிலைமைகளை எதிர்கொண்ட மில்லியன் கணக்கான இலங்கையர்கள், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை இராஜினாமா செய்யக் கோரி நடத்திய பாரிய ஆர்ப்பாட்டங்களில் கஜீமாவத்தை குடியிருப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இராஜபக்ஷ வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட அதேவேளை, போலி-இடது குழுக்களின் ஆதரவுடன் தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டங்களைக் காட்டிக்கொடுத்ததுடன், பரவலாக வெறுப்புக்குள்ளான ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாவதற்கும் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதற்கும் வழி திறந்துவிட்டன.

செவ்வாய்க்கிழமை தீ விபத்தைத் தொடர்ந்து, முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக டோக்கியோவில் தங்கியிருந்த விக்கிரமசிங்க, தீயில் இருந்து தப்பியவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக ஊடகங்கள் பரவலாக செய்தி வெளியிட்டன. இது போலியானதாகும்.

உண்மையில், கொழும்பின் குடிசைப் பகுதிகளை அகற்றி, நிலத்தை கட்டுமான நிறுவனங்களுக்கும், பெருவணிக முதலீட்டாளர்களுக்கும் வழங்குவதற்கான நீண்டகாலத் திட்டங்களின் ஒரு பகுதியாக, கஜீமாவத்தை குடியிருப்பாளர்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற அரசாங்கம் முயற்சி செய்துகொண்டிருக்கின்றது.

செவ்வாயன்று, குடியிருப்பாளர்களுக்கான “எதிர்காலத் திட்டங்கள்” பற்றி, பிரதமர் தினேஷ் குணவர்தன, சில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை நடத்தினார்.

'நிரந்தர குடியிருப்புகளை ஸ்தாபிப்பதற்காக காத்திருப்போருக்கு, இடைநிலைக் குடியேற்றமாக அந்த இடத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்து ந.அ.அ.ச.வை அகற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை' ஆராயுமாறு அதிகாரிகளுக்கு குணவர்தன உத்தரவிட்டார். 'சட்டவிரோத குடியேற்றங்கள்' குறித்து விசாரணை நடத்தவும், அவர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இதை எதிரொலித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதேபோல சட்டவிரோத குடியேற்றங்கள் என்று கூறப்படுவது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும், என்று கூறினார். குடியிருப்பாளர்களில் சிலர் பதுளையைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய அவர், அவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் வீடுகள் வழங்கப்பட வேண்டும், என்றார்.

“கொழும்பு மாவட்டத்தில் 68,000 குடிசை வாசிகளுக்கு வீடுகளை வழங்குவதற்கு ஒரு குழு செயற்பட்டு வருகிறது, [ஆனால்] இவ்வாறு வீடுகள் வழங்கப்பட வேண்டுமானால், குறைந்தது 200,000 தேவைப்படும். அது நடந்தால், ந.அ.அ.ச. நஷ்டமடையும் நிறுவனமாக மாறும்,' என ந.அ.அ.ச. பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர அறிவித்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அரசாங்க மற்றும் வீடமைப்பு அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடலானது, கஜீமாவத்தை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றியது அல்ல, மாறாக அவர்களையும் கொழும்பில் உள்ள மற்ற குடிசை வாசிகளையும் எவ்வாறு வெளியேற்றுவது என்பது பற்றியதாகவே இருக்கின்றது. முந்தைய அனைத்து 'சேரிகளை அகற்றுதல்' என்னும் திட்டங்களைப் போலவே, இதுவும் பொலிசாரால் வன்முறையில் மேற்கொள்ளப்படுகின்ற வலுக்கட்டாயமான வெளியேற்றங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

கொழும்பில் கஜீமாவத்தையில் தீயில் எரிந்துபோன வீடுகள்

இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தால், ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் வீட்டு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடியால் உக்கிரமடைந்த முன்னெப்போதுமில்லாத பொருளாதார சரிவை எதிர்கொண்டுள்ள விக்கிரமசிங்க ஆட்சியானது சர்வதேச நாணய நிதியத்தின் பக்கம் திரும்பி இந்த நெருக்கடியை வெகுஜனங்கள் மீது கொடூரமாக திணித்து வருகிறது.

மற்ற எல்லா சமூகப் பிரச்சினைகளைப் போலவே, வீட்டுப் பிரச்சினையும் இலாப முறையை ஒழிப்பதற்கும் சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குமான போராட்டத்தின் மூலம், பொருளாதாரத்தை ஒரு சில செல்வந்தர்களுக்காக அன்றி, பெரும்பான்மையினரின் நலனுக்காக தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் மறுசீரமைப்பதன் மூலமுமே தீர்க்க முடியும்.

Loading