இலங்கை: காஜிமாவத்தை குடியிருப்பாளர்கள் வீட்டுவசதிக்காக போராட ஒரு சுயாதீன நடவடிக்கை குழுவை உருவாக்க வேண்டும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கொழும்பில் உள்ள காஜிமாவத்தையில் வசிக்கும் 214 வீடுகள் சமீபத்தில் தீயில் எரிந்து நாசமானதால், அரசாங்கத்திடம் இருந்து வீடு ஒன்றுக்கு விண்ணப்பிப்பதற்கான 'குறைந்தபட்ச தகுதிகளை கொண்டிருக்கவில்லை' என்று இலங்கை நகரசபை அதிகாரிகள் சமீபத்தில் அறிவித்தனர். இது, நகர்ப்புற ஏழைகள், குறிப்பாக, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதான ஆளும் வர்க்கத்தின் இழிவான அணுகுமுறையின் மற்றொரு நிரூபணமாகும்.

கொழும்பில் உள்ள கஜீமாவத்தை குடிசைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகள் நாசமாகியுள்ளன

அக்டோபர் 16 அன்று, நகர அபிவிருத்தி அதிகார சபை (ந.அ.அ.ச.), காஜிமாவத்தை தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் “நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டக்” கொள்கையின் கீழ் வீடுகளை வழங்க முடியாது என்று, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளரிடம் அறிவித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

20 குடும்பங்கள் வீடுகளைப் பெறுவதற்கான 'குறைந்தபட்ச தகுதிகளை' கொண்டிருந்தாலும், ந.அ.அ.ச. இன் படி, அவர்களின் 'குறைந்தபட்ச தகுதிகள்' குறித்த போதுமான விவரங்கள் இல்லை என்பதால் அவர்களுக்கும் வீடுகள் கிடைக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் முன்னாள் அரசாங்கத்தால், முந்தைய குடியிருப்புப் பகுதிகளிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, பல தசாப்தங்களாக கொழும்பின் குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் ஏராளமான குடும்பங்களுக்கு இந்த முத்திரை பயன்படுத்தப்படுகிறது. காஜிமாவத்தையில் மீள்குடியேற்றப்பட்ட பின்னர் அவர்களுக்கு வீடுகள் வழங்குவதாக பொய்யான வாக்குறுதி அளிக்கப்பட்டது.

முறையான வீட்டுவசதிக்கான அவர்களின் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டிருப்பது ஒரு புறம் இருக்க, இந்த 'தகுதியற்ற' குடியிருப்பாளர்கள் வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பல ஆண்டுகளாக மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்கள் மற்றும் வரிகளை செலுத்தி வந்துள்ளனர்.

இந்த கொடூரமான அரசாங்கக் கொள்கையை ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் கண்டிக்க வேண்டும். அனைத்து உழைக்கும் மக்களுடன் சேர்ந்து, காஜிமாவத்தை குடியிருப்பாளர்களும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு இணங்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் தினித்துள்ள வானளாவிய பணவீக்கம் மற்றும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றனர். பொது நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், பெரும்பான்மையான உழைக்கும் மக்களை உள்ளடக்கும் வகையில் வரி வலையை விரிவுபடுத்துதல், கொழும்பில் வர்த்தக ரீதியில் பெறுமதியான காணிகளை முதலீட்டுக்கும் இலாபத்திற்காகவும் விடுவித்தல் என்பன இதில் உள்ளடங்கும்.

குறைந்துவிட்ட வெளிநாட்டு நாணய இருப்புக்களை சமாளிக்கும் அவநம்பிக்கையான முயற்சியில், அரசாங்கம் அரச வீடுகளை விற்கவும் நடவடிக்கை எடுக்கின்றது. ந.அ.அ.ச.யினால் நிர்மாணிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடுகளை கொள்வனவு செய்வதற்கு அமெரிக்க டொலர்களை பயன்படுத்துவோருக்கு 10 வீத சலுகை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அமெரிக்க டொலர் மூலம் இந்த வீடுகளை கொள்வனவு செய்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக செப்டம்பர் 6 அன்று, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அருண நாளிதழுக்கு தெரிவித்தார்.

2014 முதல், அப்பல்வத்தை உட்பட கொழும்பின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் காஜிமாவத்தையில் மீள்குடியேற்றப்பட்டனர். மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இது தொடர்ந்தது.

இத்திட்டத்தின் கீழ் தமது காணிகளுக்கான பத்திரங்களை வழங்கிய பல குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்ட போதிலும், சுமார் 200 குடும்பங்கள் கடந்த 10 வருடங்களாக காஜிமாவத்தையில் தற்காலிக தரமற்ற வீடுகளில் வசித்து வருகின்றன.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானியான பேராசிரியர் சிறி ஹெட்டிகே 2014 இல் மிரர்சிடிசன் ஊடகத்திடம் கூறியது போல், கொழும்பு நகரத்தின் சனத்தொகையில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் ஆகும். 'இன்று நடப்பது அவர்களை பொருத்தமான வீடுகளில் குடியமர்த்தாமல், அவர்கள் கட்டிய வீடுகளை அழித்து வணிக ரீதியாக பெறுமதிமிக்க காணிகளை அபகரிப்பதே ஆகும்.'

2016 இல், மாற்றுக் கொள்கை மையம் கூறியபடி, 280,000 முதல் 500,000 குடியிருப்பாளர்கள் கொழும்பில் இருந்து 'நகர்ப்புற அபிவிருத்தி' திட்டங்களின் கீழ் வெளியேற்றப்பட உள்ளனர். 2016 மார்ச்சில், காஜிமாவத்தையில் சுமார் 200 வீடுகள் ந.அ.அ.ச.யினால் புல்டோசர் கொண்டு அகற்றப்பட்டன. இதன் போது தளபாடங்கள், பிள்ளைகளுக்கான புத்தகங்கள் மற்றும் சமையலறை பொருட்கள் கூட அழிக்கப்பட்டன.

இலங்கையில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக, நகர்ப்புற ஏழைகள் மீது அடுத்தடுத்த அரசாங்கங்கள் நடத்தி வரும் தாக்குதல்களை எதிர்த்தும் அம்பலப்படுத்தியும் டஜன் கணக்கான கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களுடன் கலந்துரையாடும் காஜிமாவத்தை குடியிருப்பாளர்கள்.

வீடுகளை இழந்த காஜிமாவத்தை குடியிருப்பாளர்கள் உலகசோசலிசவலைத்தளநிருபர்களிடம் பேசும் போது, 'குறைந்தபட்ச தேவைகளை' பூர்த்தி செய்யவில்லை என்ற அரசாங்கத்தின் கூற்றுக்களை கண்டனம் செய்தனர்.

ஒரு குடியிருப்பாளர் கோபத்துடன் கூறியதாவது: “நாங்கள் வாக்களிக்கிறோம், மதிப்பீட்டு வரிகள், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்கள் செலுத்துகிறோம், காஜிமாவத்தையில் உள்ள முகவரிகளுடன் கூடிய அடையாள அட்டைகள் எங்களிடம் உள்ளன. இந்த முகவரிகளுடன் எங்கள் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களும் எங்களிடம் உள்ளதுடன், அப்பகுதியில் உள்ள கிராம அலுவலரிடம் நற் சான்றிதழ்கள் பெற்றுள்ளோம். வேறு என்ன குறைந்தபட்ச தகுதிகள் தேவை? நாங்கள் இங்கிருந்து போகப் போவதில்லை. எங்களை பிள்ளைகளுடன் தெருவில் இறங்கச் சொல்கிறார்களா?

தான் வழங்கிய முக்கியமான தகவல்களை பல தொலைக்காட்சி நிலையங்கள் தணிக்கை செய்வதாக மற்றொரு குடியிருப்பாளர் குற்றம் சாட்டினார். தினக்கூலி தொழிலாளியான நவாஸ், “இலங்கையில் குடிமக்களாக வாழ முடியாவிட்டால், எங்களைக் கொன்றுவிடுங்கள். தகுதி என்பது என்ன? இதை நான் ஹிரு மற்றும் தெரண தொலைக்காட்சிக்கு தெரிவித்தேன். ஆனால் அவர்கள் அதை ஒளிபரப்பவில்லை.

அவர் மேலும் கூறியதாவது: “பிரிகேடியர் சமரசிங்க [ந.அ.அ.ச.யின் முன்னாள் அதிகாரி] எங்களிடையே [காஜிமாவத்தை குடியிருப்பாளர்களுக்கு] 57 வீடுகள் தருவதாகக் கூறி, குலுக்கள் நடத்தினார். எனக்கு பத்தாவது மாடியில் ஏழாவது எண் கிடைத்தது, ஆனால் அது இன்னும் மூடப்பட்டுள்ளது.எனக்கு இன்னும் சாவி கிடைக்கவில்லை. நாங்கள் ஏமாற்றப்பட்டோம். இது குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பது போல் இருந்தது.

20 வீடுகளை மட்டுமே வழங்க முன்மொழிந்ததன் மூலம் அப்பகுதியில் வசிப்பவர்கள் மத்தியில் பிளவை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக நவாஸ் குற்றம் சாட்டினார்.

தற்காலிக தங்குமிடத்தில் தங்கள் குழந்தைகளுடன் தாய்மார்கள்.

காஜிமாவத்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடுகளை இழந்த மக்கள் தற்போது ஒரு சிறிய களஞ்சியத்திலும், அருகில் உள்ள சனசமூக நிலையத்திலும் தங்களுடைய குழந்தைகளுடன் குளிர்ந்த சீமெந்து தரைகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த களஞ்சியசாலை 30 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் மற்றும் 4 மீட்டர் உயரமும் கூடியது. சுவரில் உள்ள பல சிறிய துளைகள் வழியாக மட்டுமே ஒளி மற்றும் காற்று கிடைக்கும்.

தற்போது குழந்தைகள் உட்பட 15 இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கும் அந்த அறை மனிதர்கள் வாழ்வதற்குப் பொருத்தமற்றது, பகலில் கூட குடியிருப்பாளர்கள் ஒருவரையொருவர் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருட்டாக உள்ளது.

பாயில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் தனது சிறிய பேத்தியை கவனித்துக் கொண்டிருக்கும் ஒரு பாட்டி ரூபா டயஸ் விளக்கியதாவது: “இது என் மகனின் இளைய மகள். இவரது மூத்த மகளுக்கு 12 வயது. [பள்ளி சீருடைகள் தீயில் எரிந்து நாசமானதால்] வண்ண உடை அணிந்து பள்ளிக்கு சென்றுள்ளார். எனது மகன் தினக்கூலியாக இருந்தாலும் தினமும் வேலை கிடைப்பதில்லை. எங்கள் வீடு முற்றிலும் சேதமடைந்தது. எல்லாம் எரிந்ததால் இப்போது எங்களிடம் எதுவும் இல்லை. இந்த ஆடைகள் அனைத்தும் எங்களுக்கு பிறரால் வழங்கப்பட்டவை.” தனது குடும்பம் காஜிமாவத்தையில் 10 வருடங்களாக வசித்து வருவதாக டயஸ் விளக்கினார்.

ரூபா டயஸ் தனது பேத்தியுடன்

மீன் சந்தையில் பணிபுரியும் ஜானகவும் இதே நிலையை எதிர்கொள்கிறார்: “எனது வீடு முழுவதும் எரிந்தது. எனக்கு 15, 11 மற்றும் 10 வயதுடைய மூன்று பள்ளிக் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் வண்ண ஆடைகளை அணிந்து பள்ளிக்கு செல்கின்றனர். வீடுகளை வழங்குவதற்கு அரசாங்கம் அறிவித்துள்ள 'குறைந்தபட்ச தகுதிகளை' கண்டித்த அவர், தான் ஒரு இலங்கை பிரஜை என்றும் கூறினார். வீடு பெறுவதற்கு வேறு என்ன “தகுதிகள்” வேண்டும் என்று அவர் கேட்டார்.

கட்டுமான நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும் வகையில், இலங்கை அரசாங்கம் வணிக ரீதியாக பெறுமதிமிக்க காணிகளை வறியவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக சுவீகரித்து வருவதாக WSWS செய்தியாளர்கள் விளக்கமளித்தனர். வீட்டுவசதிக்கான தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டம், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை உள்ளடக்கிய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமாகும் என்று அவர்கள் விளக்கினர். கஜிமாவத்தை குடியிருப்பாளர்கள், கண்ணியமான வீடுகள் மற்றும் பிற அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதற்கு அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவர்களின் அரசியல் தொண்டர்களிடம் இருந்து சுயாதீனமாக தங்களுடைய சொந்த நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று விளக்கினர்.

ஜானக

'சோசலிஸ்டுகள்' என்று கூறிக்கொண்டு. பின்னர் அரசாங்க அமைச்சர்களாக ஆன பல்வேறு அரசியல்வாதிகளை ஜானக குறிப்பிட்டார்,. நவ சம சமாஜக் கட்சியின் (ந.ச.ச.க.) முன்னாள் தலைவர் வாசுதேவ நாணயக்கார, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டியூ குணசேகர மற்றும் லங்கா சம சமாஜக் கட்சியின் (ல.ச.ச.க.) திஸ்ஸ விதாரண ஆகியோரை அவர் குறிப்பிட்டார்.

“தொழிலாளர்களுக்காக பேசுகிறோம் என்று காட்டிவிட்டு, இந்த அரசியல்வாதிகள் பாராளுமன்றம் சென்றனர். ஆனால் தொழிலாளர்களுக்கு என்ன செய்தார்கள்? ஜே.வி.பி.யையும் எடுத்துக்கொள்வோம். 1994ஆம் ஆண்டு பாராளுமன்றம் சென்று மஹிந்த இராஜபக்ஷவுடன் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தனர். அவர்கள் 2004 இல் சந்திரிகா [குமாரதுங்க] அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் எங்களுக்காக என்ன செய்தார்கள்?' என அவர் கேட்டார்.

1964 இல் லங்கா சமசமாஜக் கட்சி முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தில் இணைந்து தொழிலாள வர்க்கத்தின் வர்க்க சுதந்திரத்தை காட்டிக் கொடுத்தது பற்றி உலகசோசலிசவலைத்தள செய்தியாளர்கள் கலந்துரையாடினர்.

விதாரன போன்ற 'இடது' தலைவர்கள் இந்த காட்டிக்கொடுப்பை முழுமையாக ஆதரித்தனர் என்று உலகசோசலிசவலைத்தள செய்தியாளர்கள் தெரிவித்தனர். லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) தலையீட்டைத் தொடர்ந்து, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (சோ.ச.க. முன்னோடி) அரசியல் தோற்றம் மற்றும் ஸ்தாபகத்தை அவர்கள் விளக்கினர். அவர்கள் ஜே.வி.பி.யின் அரசியல் பதிவையும் மதிப்பாய்வு செய்து, தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கை ரீதியான போராட்டத்தை கோடிட்டுக் காட்டினார்கள்.

வீடற்ற காஜிமாவத்தை குடும்பங்கள் மற்றும் வெளியேற்றும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள ஏனைய கொழும்பில் வசிப்பவர்கள் கண்ணியமான வீடமைப்புக்கான அடிப்படை சமூக உரிமைக்காக போராடுவதற்கு நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும். கொழும்பு நகரம் முழுவதும் சொகுசு வீட்டுத் திட்டங்கள் கட்டப்பட்டு வருகின்றன, செல்வந்தர்கள் ஒரு வீட்டுக்கு 50 மில்லியன் ரூபாய் அல்லது அதற்கு மேல் செலுத்துகிறார்கள். முறையான வீடுகள் உட்பட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான வளங்கள் உள்ளன, ஆனால் அவை ஒரு சில செல்வந்தர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதை இந்த முன்னேற்றங்கள் நிரூபிக்கின்றன.

இந்த சமூக செல்வம் பெரும் பணக்காரர்களின் கையில் ஏகபோகமாக இருக்கும் போது, பெரும்பான்மையான தொழிலாள வர்க்கத்தின் சமூக அல்லது பொருளாதார உரிமைகளை வென்றெடுக்க முடியாது. அதனால்தான் சோசலிச சமத்துவக் கட்சி இந்த போராட்டம் ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தின் அடிப்படையாகக் கொண்டிருப்பதோடு, வங்கிகள் மற்றும் வீட்டுவசதி உட்பட பெரும் தொழில்களை தேசியமயமாக்கும் மற்றும் அவற்றை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. .

இதற்கு தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகள் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்பி, ஜனநாயகம் மற்றும் சோசலிசத்துக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டைக் கூட்ட வேண்டும். தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளை சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறும், இந்தப் போராட்டத்தை வழிநடத்த வெகுஜனப் புரட்சிகரக் கட்சியாக அதைக் கட்டியெழுப்புமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading