பாரிஸ் போக்குவரத்து வேலைநிறுத்தம்: சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்கி, வேலைநிறுத்தங்கள் மீதான தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் பிடியை உடைப்போம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நவம்பர் 10 அன்று, பிரெஞ்சு போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் கல்வித் தொழிலாளர்கள் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கும், பணவீக்கத்திற்கும் எதிராக வேலைநிறுத்தம் செய்தனர், இந்த வேலைநிறுத்தம், பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் ஆழ்ந்த சமூக கோபத்தை வெளிப்படுத்தியது.

நவம்பர் 10, 2022 அன்று பாரிஸ் போக்குவரத்து வேலைநிறுத்தத்தின் போது CGT ஆர்ப்பாட்டம்

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யா மீதான நேட்டோவின் போர் தொடங்கியதில் இருந்து, வங்கிகளால் பெரும் பணக்காரர்களின் பரந்த பிணை எடுப்புகளின் ஒருங்கிணைந்த தாக்கம் காரணமாக விலைகள் உயர்ந்து வருகின்றன. இது ஐரோப்பா முழுவதும் உள்ள அரசாங்கங்களை இழிவுபடுத்துவதோடு போராட்டங்களின் சர்வதேச எழுச்சியையும் தூண்டுகிறது. ஸ்பெயினில் லாரி ஓட்டுனர்களின் வேலைநிறுத்தம் வருகிறது, அதே நேரத்தில் பிரிட்டனில் துறைமுகம், போக்குவரத்து மற்றும் கல்வி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தொழிற்சங்க எந்திரங்களுக்கும் வெள்ளை மாளிகைக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட விற்பனை ஒப்பந்தத்திற்கு எதிராக அமெரிக்காவில் உள்ள இரயில் தொழிலாளர்கள் போராடுகின்றனர்.

ஆனால் உக்ரேனில் போருக்கு நிதியளிப்பதற்காக ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களைக் குறைக்கும் ஆளும் உயரடுக்கின் உந்துதல் ஆழ்ந்த தொழிலாள வர்க்க எதிர்ப்பைச் சந்திக்கும் அதே வேளையில், அது தொழிலாளர்களுக்கு பெரும் அரசியல் சவால்களையும் முன்வைக்கிறது. தேசிய தொழிற்சங்க கூட்டமைப்புகளால் தொழிலாளர்களின் போராட்டங்கள் பிளவுபடுவதையும் முடக்குவதையும் எதிர்கொள்ளும் நிலையில், தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே சாமானிய தொழிலாளர் குழுக்களில் சுயாதீனமாக ஒழுங்கமைக்க வேண்டும்.

பிரான்சில் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடனும் மற்றும் மக்ரோனுடனான அவர்களின் பேச்சு வார்த்தைகளுடனும் முறித்துக் கொள்வது மட்டுமே ஏகாதிபத்திய போர், தொற்றுநோயின் பேரழிவு மேலாண்மை மற்றும் வாழ்க்கைத் தரங்களை வெட்டுவதற்கு எதிரான ஒரு வெளிப்படையான போராட்டத்திற்கான நிலைமைகளை உருவாக்க முடியும். தொழிற்சங்க எந்திரத்தின் குறுகிய தேசிய கட்டமைப்பிற்குள் போரை எதிர்த்துப் போராடுவது மற்றும் தொற்றுநோயைக் கையாள்வது மட்டுமல்ல, ஊதியங்களைப் பாதுகாப்பதும் கூட சாத்தியமற்றது.

குறிப்பாக, பிரான்சில் செப்டம்பர் 27 முதல் நவம்பர் 8 வரை நடந்த சுத்திகரிப்பு ஆலை வேலைநிறுத்தத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய அரசியல் படப்பினைகள் உள்ளன. கடைசிவரை வேலைநிறுத்தத்தில் இருந்த Gonfreville-l'Orcher மற்றும் Feyzin ஆகிய சுத்திகரிப்பு நிலையங்கள் நவம்பர் 2 மற்றும் 8 தேதிகளில் பணிக்குத் திரும்பியது. முறையே. எவ்வாறாயினும், இந்த சக்திவாய்ந்த வேலைநிறுத்தம் பணவீக்கத்திற்கு மேல் அல்லது அதற்கு சமமான ஊதிய உயர்வில் முடிவடையவில்லை, ஆனால் உண்மையான ஊதியத்தை குறைக்கும் ஒப்பந்தத்தில் முடிவடைந்தது மற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் உண்மையான ஊதியத்தை குறைக்க வங்கிகளின் பரந்த முயற்சியின் முதல் படியைக் குறிக்கிறது.

சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததற்கான பொறுப்பு, தொழிலாளர்களின் பங்கில் உள்ள போராட்டக் குறைபாட்டினால் அல்ல, மாறாக தொழிற்சங்க எந்திரங்களால் இந்த இயக்கம் காட்டிக்கொடுக்கப்பட்டதன் காரணமாகும். உண்மையில், போக்குவரத்து மற்றும் பொதுச் சேவைகள் தொழிலாளர்களின் இன்றைய வேலைநிறுத்தம் மற்றும் மின்சாரம், கப்பல் போக்குவரத்து மற்றும் வாகனத் தொழிலாளர்கள் மத்தியில் கோபம் அதிகரித்துள்ள நிலையில் இன்று ஒரு வெளிப்படையான கேள்வி எழுகிறது,

வேலைநிறுத்தத்தை நிறுத்தாவிட்டால் 10,000 யூரோ அபராதமும் ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என அரசாங்கம் மிரட்டிய பின்பும், சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்களை பாதுகாக்க அனைத்து தொழிலாளர்களும் ஏன் அணிதிரட்டப்படவில்லை?

வேலைநிறுத்தம் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்தியது, மக்ரோனின் நிலையை பெரிதும் பலவீனப்படுத்தியது. மறுபுறம், சுத்திகரிப்பு தொழிலாளர்கள் வலுவான நிலையில் இருந்தனர். TotalEnergies கடந்த ஆண்டை விட ஒன்பது மாதங்களில் அதிக இலாபம் ஈட்டியதாக அறிவித்தது: 2021 இல் மொத்தம் 16 பில்லியன் டாலருடன் ஒப்பிடுகையில் 17.3 பில்லியன் டாலர்களாகும். மூன்றாம் காலாண்டில், அதன் இலாபம் 2021 ஆம் காலாண்டோடு ஒப்பிடும்போது 43 சதவீதம் அதிகரித்து 6.6 பில்லியன் டாலர்களை எட்டியது. 'நாங்கள் அமெரிக்காவிற்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் (LNG) மிகப்பெரிய ஏற்றுமதியாளர்' என்று தலைமை நிதி அதிகாரி ஜோன்-பியர் ஸ்பிரேர் கூறினார்.

எண்ணெய் சுத்திகரிப்பாளர்களுடன் ஒற்றுமைக்கான அழைப்புகள் துறைமுகங்களிலும் பிரெஞ்சுப் பொருளாதாரத்தின் பிற மூலோபாயத் துறைகளிலும் பரவின. தொழிலாளர் பொது கூட்டமைப்பு (CGT) தொழிற்சங்கம், குறிப்பாக, 700,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, அவர்கள் அணிதிரட்டப்பட்டால், சில வாரங்களிலே மக்ரோன் அரசாங்கத்தை வீழ்த்த முடியும்.

பிரெஞ்சு வரலாற்றில் எண்ணற்ற முறை நடந்துள்ளது போல், ஸ்ராலினிச CGT அதிகாரத்துவம், சுத்திகரிப்பு ஆலைகளில் வேலைநிறுத்தம் செய்பவர்கள் மீதான அரசின் பணித்துறை செயல்முறை ஆணைக்கு (requisition) தொழிலாளர்களின் எதிர்ப்பை அணிதிரட்டாததோடு, சுத்திகரிப்பு வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தி, நிதி அழுத்தங்கள் காரணமாக தொழிற்சங்கத்திலிருந்து எந்த நிதி உதவியும் பெறாத சுத்திகரிப்பு தொழிலாளர்களின் கழுத்தை நெரிக்க அனுமதித்தது. இதன் விளைவாக, சுத்திகரிப்பு நிலையங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செயல்படத் தொடங்கின. இது இறுதியில் பணவீக்கத்திற்குக் குறைவான ஊதிய உயர்வுடன் டோட்டல் மற்றும் எஸ்ஸோ உடன் ஒரு ஒப்பந்த உடன்படிக்கைக்கு வழிவகுத்தது, பணவீக்கம் ஏற்கனவே 7 சதவீதமாக உள்ளது மற்றும் அடுத்த ஆண்டு உயர உள்ளது, 2023ல் எரிசக்தி விலைகள் அதிகரிக்கும்.

CGT அதிகாரத்துவம் வேலைநிறுத்தம் முடிவடைவதாக அறிவித்த நாளில், இது சாமானிய தொழிலாளர்களின் கோபத்தால் மீறப்படலாம் என்ற அச்சத்தில், கோன்ஃப்ரெவில் (Gonfreville) சுத்திகரிப்பு ஆலையில் திட்டமிடப்பட்டிருந்த தொழிலாளர்களின் பொதுக் கூட்டத்தை இரத்து செய்தது.

குறைந்தபட்சம் இப்போதைக்கு, இந்த வேலைநிறுத்தம் திணறடிக்கப்பட்ட நிலையில், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் வேலைநிறுத்த நிதியைத் தயாரிக்காமல், மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதேவேளையில், ஆங்காங்கே சிதறிய முறையில் மற்ற தொழில்களை அணிதிரட்டுகின்றன. ஐரோப்பாவிலும் உலகிலும் உள்ள தொழிலாளர்கள் பெருகிவரும் போர், பாரிய தொற்றுநோய், இறப்பு மற்றும் அவர்களின் உண்மையான ஊதியங்களின் சரிவை எதிர்கொள்கையில், வேலைநிறுத்த அலைகளை அணிதிரட்டி கழுத்தை நெரிக்க அவர்கள் இப்படித்தான் செயற்படுகிறார்கள்.

வங்கிகள் மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களால் இயக்கத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று சமூக பிற்போக்குத்தனம் ஆத்திரமூட்டுவதாக உள்ளது மற்றும் தவிர்க்க முடியாமல் தொழிலாள வர்க்கத்தில் பரந்த, சர்வதேச போராட்டங்களைத் தூண்டிவிடுகிறது. ஆனால் இதை நடைமுறைப்படுத்த, ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் திணிக்கப்பட்ட தேசிய முதலாளித்துவ அரசாங்கங்களுடன் 'சமூக உரையாடல்' என்ற பெருநிறுவன கட்டுப்பாட்டை உடைக்க வேண்டியது அவசியம்.

பிரான்சிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பெரும் பணி, வர்க்கப் போராட்டம் மீதான அதிகாரத்துவங்களின் கட்டளைகளுக்கு எதிராக ஒரு அடிமட்ட கிளர்ச்சியைத் தயாரிப்பதாகும். மக்ரோன் அரசாங்கம் மற்றும் நிதியச் சந்தைகளுக்கு எதிராக தொழிலாளர்களின் போராட்டங்களை ஒழுங்கமைக்கவும் விரிவுபடுத்தவும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமான சாமானிய தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை உருவாக்குவது அவசியம்.

அவநம்பிக்கை என்பது, தொழிலாள வர்க்கத்தின் போராட்டத் திறனைப் பற்றி நியாயமானதோ அல்லது அனுமதிக்கப்படக்கூடியதோ அல்ல. தொழிலாளர்கள் தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்கும், அவர்கள் முன்வைக்கும் புரட்சிக்கான தடையை அடித்து நொறுக்குவதற்கும் உலகளாவிய நிலைமைகள் உருவாகி வருகின்றன.

1991ல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதில் இருந்து கடந்த 30 ஆண்டுகள் சமூக பிற்போக்குத்தனத்தின் காலகட்டமாக இருந்தது. ஏகாதிபத்திய சக்திகள் ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவில் மில்லியன் கணக்கான உயிர்களை பலிகொண்ட போர்களை நடத்தின. 1992 இல் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் இடைவிடாமல் சிக்கனக் கொள்கையை பின்பற்றி வருகிறது. இன்று இதன் விளைபொருளே சமூக நெருக்கடி, உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போர், மற்றும் ரஷ்ய எண்ணெய் வாங்க ஐரோப்பிய மறுப்பு ஆகியவை விண்ணை முட்டும் விலையேற்றத்திற்கு காரணமாக உள்ளன.

எவ்வாறாயினும், புறநிலையாக சமூக பின்னடைவுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு, ஸ்ராலினிசத்துடன் வரலாற்று ரீதியாக இணைக்கப்பட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சிகளின் அதிகாரத்துவ எந்திரங்களையும் விட வலிமையானது. ஒரு புரட்சிகர நெருக்கடி உருவாகிக் கொண்டிருக்கிறது. பிரான்சிலும் உலகெங்கிலும் உள்ள சமூக கோபம், தொழிலாளர்கள், தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து விலகி தங்கள் போராட்டங்களை ஒழுங்கமைத்து கட்டுப்படுத்துவதற்கும், சோசலிச புரட்சியின் பாதையில் செல்வதற்கும் பரந்த திறனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி இந்த முன்னோக்குடன் உடன்படும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தங்கள் ஆதரவை வழங்குமாறு அழைப்பு விடுக்கிறது.

Loading