இங்கிலாந்தும் பிரான்சும் புதிய அடக்குமுறை குடியேற்ற எதிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையிலான திருத்தப்பட்ட ஒப்பந்தத்துடன் அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோருக்கு எதிரான போர் இந்த வாரம் அதிகரித்துள்ளது, இது ஆயிரக்கணக்கான ஆற்றொணா நிலையில் உள்ள மக்கள் ஆங்கில கால்வாயை கடப்பதைத் தடுக்கும் நோக்கம் கொண்டது.

திங்களன்று, பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், இங்கிலாந்து உள்துறை செயலர் சுயேல்லா பிராவர்மன், அகதிகள் பிரிட்டனுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக ஆண்டுக்கு 55 மில்லியன் பவுண்டிலிருந்து 63 மில்லியனாக பவுண்டுகள் வரை கொடுப்பனவுகளை அதிகரிக்க ஒப்புதல் அளிக்க பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனனுடன் கையெழுத்திட்டார். இங்கிலாந்து வெளியுறவு செயலர் ஜேம்ஸ் க்ளெவர்லி, மற்றும் அவரது பிரெஞ்சு சமதரப்பான காத்தரின் கொலோனாவுக்கு இடையிலான இறுதி பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இது இறுதி செய்யப்பட்டது. இங்கிலாந்து கரையை அடையும் புலம்பெயர்ந்தோரைத் தடுப்பதற்காக இலண்டன் 2018 இல் பாரிஸுக்கு பணம் செலுத்தத் தொடங்கியதிலிருந்து, இங்கிலாந்திற்கான மொத்த செலவுகள் 200 மில்லியன் யூரோக்களை எட்டியுள்ளன.

புதிய குடியேற்ற எதிர்ப்பு ஒப்பந்தத்தில் இங்கிலாந்து உள்துறை செயலர் சுயெல்லா பிராவர்மன் மற்றும் பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானன் ஆகியோர் கையெழுத்திட்டனர் [Photo by UK Home Office / CC BY 2.0]

இந்த ஒப்பந்தம், பிரெஞ்சு கடற்கரைகளில் (200 முதல் 300 வரை) ரோந்து செல்லும் அதிகாரிகளின் எண்ணிக்கையில் 40 சதவீதம் அதிகரிப்பு மற்றும் ட்ரோன்கள் மற்றும் இரவு நேர பார்வை கேமராக்கள் போன்ற உயர் தொழில்நுட்ப உபகரணங்களை மேலும் பயன்படுத்த நிதியளிக்கிறது. கடப்பதை கண்டறிந்து தடுக்க உதவும் “அதிநவீன கண்காணிப்பு தொழில்நுட்பம், ட்ரோன்கள், கண்டறியும் நாய் குழுக்கள், சி.சி.டி.வி மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றில்' கூடுதல் முதலீட்டிற்கு நிதியளிப்பதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை, 'இந்த ஏற்பாடு, முதன்முறையாக, சிறப்பு இங்கிலாந்து அதிகாரிகளும் தங்கள் பிரெஞ்சு சகாக்களுடன் [பிரெஞ்சு கட்டுப்பாட்டு அறைகளில்] இணைக்கப்படுவார்கள், இது தகவல் பகிர்வை அதிகரிக்கும், அச்சுறுத்தலைப் பற்றிய புரிதலை மேம்படுத்தும், இங்கிலாந்து நிபுணத்துவத்தை உறுதி செய்யும் மற்றும் கடவைகளை சீர்குலைக்கும் ஆட்கடத்தல்காரர்களை இறுகப் பிடிக்கும் முயற்சிகள் மையத்தில் இருப்பதை உறுதி செய்யும். இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையில் பிரெஞ்சு-கட்டளை தலைமையகத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தை ஆதரிக்கும் கூட்டு இங்கிலாந்து-பிரான்ஸ் பகுப்பாய்வுக் குழுக்கள் உட்பட பலப்படுத்தப்பட்ட செயல்பாட்டு ஒத்துழைப்பும் அடங்கும்” என பெருமை பேசியது.

'இங்கிலாந்திற்கு பயணம் தடுக்கப்பட்ட புலம்பெயர்ந்தோருக்கு பிரான்சில் வரவேற்பு மற்றும் அகற்றும் மையங்களை' பிரிட்டன் ஆதரிக்கும், மேலும் கடக்க முயற்சிப்பதைத் தடுக்கும்.

புகலிடக் கோரிக்கையாளர்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நோக்கில் புதிய நிதியுதவியும் நடவடிக்கைகளும், ஏற்கனவே தடுக்கும் அடக்குமுறை எந்திரமும் இருந்தபோதிலும், இங்கிலாந்து உள்துறை அலுவலகம் பெருமையாகக் கூறியது போல், 'இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 30,000 க்கும் மேற்பட்ட சட்டவிரோத கடக்கும் முயற்சிகள் – கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 50% க்கும் அதிகமானவை.”

தயாரிப்பில் உள்ள அடக்குமுறையானது அபாயகரமான கடவைகளை மேற்கொள்ளும் மீதமுள்ள பல்லாயிரக்கணக்கானவர்களை முற்றிலுமாக நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏகாதிபத்திய போர்கள் மற்றும் பினாமி போர்களில் அழிக்கப்பட்ட தங்கள் தாயகங்களை விட்டு தப்பியோட முற்படும் மில்லியன் கணக்கான அகதிகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு இதுவரை பிரிட்டனை அடைந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 40,000 மட்டுமே.

கடக்க முயற்சிக்க பிரெஞ்சு கடற்கரையை அடைவதற்கு முன்பே, அகதிகள் பல எல்லைகளைக் கடந்து கடினமான பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இங்கிலாந்துக்கு வருபவர்களில் பலர் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து வருகிறார்கள். ஆனால் உக்ரேனில் நேட்டோவின் பினாமி போர் மேலும் மில்லியன் கணக்கான அகதிகளை உருவாக்கியுள்ளது.

மத்தியதரைக் கடல்/ஏஜியன் பகுதியில் அகதிகள் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போலவே, பிரிட்டனுக்குச் செல்லும் முயற்சியிலும் பலர் உயிர் பிழைக்கவில்லை. நவம்பர் 24, ஆங்கில கால்வாயில் காற்று ஊதப்பட்ட படகு கவிழ்ந்ததில் 27 அகதிகளின் கொடூரமான மரணங்களின் முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும். மேலும் இருவர் தப்பிப்பிழைத்து மீட்கப்பட்டனர், மற்றொருவர் இன்னும் காணவில்லை, இறந்துவிட்டதாக கருதப்படுகிறது.

பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் நெருக்கடி 2016ல் இருந்து முன்னோடியில்லாத வகையில் ஐந்து பிரதம மந்திரிகள் (2022 இல் மட்டும் மூன்று பேர்) மற்றும் ஆறு உள்துறை செயலாளர்கள் தேவை என்ற போதிலும், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான உணர்வைத் தூண்டிவிடுவது இன்னும் மூர்க்கமான நிலையில் உள்ளது.

பிரிட்டனில் ஆண்டுதோறும் சில ஆயிரம் புலம்பெயர்ந்தோரின் வருகை பெரும்பாலும் 'படையெடுப்பு' என்று குறிப்பிடப்படுகிறது, இது, கடுமையான ஒடுக்குமுறைகளைக் கோரும் ஒரு இனவெறி ஊடகங்களுக்கு ஆதரவளிப்பதோடு, பாசிஸ்டுகள் புகலிடம் கோருவோர் மீது தாக்குதல்களை ஏற்பாடு செய்யும் சூழலையும் உருவாக்குகிறது. கடந்த மாதம், ஒரு பாசிஸ்ட், தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு டோவரில் உள்ள Western Jet Foil புலம்பெயர்ந்தோர் செயலாக்க மையத்தை மூன்று தீக்குண்டுகளால் தாக்கினார்.

கையெழுத்தான சமீபத்திய ஒப்பந்தம், பிரெஞ்சு காவல்துறையினரிடம் புகலிடம் கோருவோர் என்ன எதிர்பார்க்கலாம் என்ற ஒரு மிருகத்தனமான காட்சியை முன்வைத்தது. சனிக்கிழமை காலை, ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கலக தடுப்பு பிரிவு போலீசார் கிராவ்லின் (Gravelines) இல் உள்ள ஒரு கடற்கரையில் CS ஸ்ப்ரேயுடன் அகதிகளைத் தாக்கினர். இதையடுத்து, கடப்பதற்கு தயாராக இருந்த பல இரப்பர் படகுகளை போலீசார் அறுத்து வீசினர்.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையில், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஆளும் வட்டங்கள் மற்றும் வலதுசாரி ஊடகங்களில், இது இன்னும் தளர்வாக இருப்பதாகவும், அகதிகள் இங்கிலாந்திற்கு வருவதைத் தடுக்காது என்றும் உடனடி புகார்கள் வந்தன.

டார்மானன், Voix du Nord செய்தித்தாளிடம் பேசுகையில், இங்கிலாந்தின் வேலைவாய்ப்புச் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்: “[பிரிட்டன்கள்] முதலில் தங்கள் தொழிலாளர் சந்தை விதிகளை மாற்ற வேண்டும், ஏனெனில் நீங்கள் இங்கிலாந்தில் ஆவணங்கள் இல்லாமல் வேலை முடியும்… அவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு சாதாரண உறவு, புலம்பெயர்ந்தோருக்கான நுழைவு விதிகளை தீர்மானிப்பதற்கான ஒரு ஒப்பந்தம் தேவை.”

கடந்த ஆண்டு, தீவிர வலதுசாரி Action française இயக்கத்தின் அனுதாபியான டார்மானன், பிரான்சில் உள்ள முஸ்லீம் அமைப்புகளின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் 'பிரிவினைவாத எதிர்ப்பு' சட்டத்தை முன்மொழிந்தார். இந்த மாதம், புகலிட உரிமையை கட்டுப்படுத்தும் அடுத்த ஆண்டுக்கான ஒரு பெரிய புதிய சட்டத்திற்கான திட்டங்களை அவர் அறிவித்தார். போதுமான தொழிலாளர்கள் இல்லாத 'பதட்டமான தொழில்களில்' புலம்பெயர்ந்தோர் பணிபுரிந்தால், பிரான்சில் தங்க அனுமதிக்கும் அதே வேளையில், இது எல்லாவற்றிற்கும் மேலாக புகலிடக் கோரிக்கையாளர்களை விரைவாக வெளியேற்ற அனுமதிக்கும் மற்றும் நாடு கடத்தல் உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான அவர்களின் உரிமையை கடுமையாக கட்டுப்படுத்தும்.

'பிரிட்டிஷ் தொழிற்சங்கங்கள், அரசியல்வாதிகள் மற்றும் இடம்பெயர்வு நிபுணர்களின்' கவலைகளை பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது, ஏனெனில் 'பிரிட்டனை அடையும் புலம்பெயர்ந்தோரை இங்கிலாந்து வழியாக அகற்றவோ அல்லது கடக்கும் நம்பிக்கையில் பிரெஞ்சு கடற்கரைக்கு பயணிப்பவர்களுக்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கவோ ஒப்பந்தத்தில் எந்த ஏற்பாடும் இல்லை.'

டோரி டோவர் பாராளுமன்ற உறுப்பினர் நத்தலி எல்பிக் இந்த ஒப்பந்தத்தை கண்டித்தார்: 'கூட்டு எல்லை ரோந்து மற்றும் கால்வாய் அளவிலான கூட்டு பாதுகாப்பு மண்டலத்துடன் அணுகுமுறையில் ஒரு படி-மாற்றம் தேவை. ஒரு சிறிய படகில் கால்வாயை வெற்றிகரமாக கடக்க முடியாது என்பதை புலம்பெயர்ந்தவர்களும் ஆட்கடத்தல்காரர்களும் அறிந்தால்தான் இந்த நெருக்கடிக்கு முடிவு வரும்.”

ஒப்பந்தத்திற்கு தொழிற்சங்கங்களின் எதிர்ப்பானது வலதுசாரி பண்புடன் இருந்தது, கென்டில் உள்ள எல்லைப் படை ஊழியர்களுக்கான பொது மற்றும் வணிகச் சேவை தொழிற்சங்கப் பிரதிநிதி கெவின் மில்ஸ் புகார் கூறினார், 'இந்த ஒப்பந்தம் போதுமானதாக இல்லை மற்றும் விவரம் இல்லாதது. நீங்கள் இன்று ஆயிரக்கணக்கானவர்களை கைது செய்து, அவர்களில் பெரும்பாலோரை விடுவித்தால், எத்தனை பேர் நாளை மீண்டும் முயற்சிக்கப் போகிறார்கள்?”

தொழிற்கட்சி பிரிட்டனின் எல்லைகளை 'சட்டவிரோத குடியேற்றத்திற்கு' சீல் வைப்பதில் உடன்பாட்டில் உள்ளது, தலைவர் சர் கீர் ஸ்டார்மர் இந்த ஒப்பந்தம் 'சரியான திசையில் ஒரு படி' என்று கூறினார். நிழல் குடிவரவு அமைச்சர் ஸ்டீபன் கின்னோக், கட்சியின் முன்னாள் தலைவர் நீல் கினோக்கின் மகன், 'எங்கள் எல்லைகளை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம் என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்க' அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த இங்கிலாந்துக்கு அழைப்பு விடுத்தார்.

பிரித்தானிய அரசாங்கம் கால்வாய் வழியாக வரும் அகதிகளை ஆபிரிக்காவில் 4,000 மைல் தொலைவில் உள்ள ருவாண்டாவிற்கு அனுப்பும் நோக்கத்தில் உள்ளது. முதல் முயற்சி ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பில் சட்டரீதியான சவால்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து அது நிறுத்தப்பட்டது. பிரான்சுடன் கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தம் குறித்த உள்துறை அலுவலக அறிக்கையில், 'ருவாண்டாவுடனான நமது உலகின் முன்னணி கூட்டாண்மை, இந்த தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளும் புலம்பெயர்ந்தோர் அங்கு இடமாற்றம் செய்யப்படுவதைக் காணும்' என்ற குறிப்பை உள்ளடக்கி இருந்தது.

வெறித்தனமான வலதுசாரி டெய்லி எக்ஸ்பிரஸின் கூற்றுப்படி, தென் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள பராகுவே உட்பட இதேபோன்ற கூட்டாண்மைகளை இணைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

தங்களின் வழக்கின் முடிவுக்காக காத்திருக்கும்போது, பயங்கரமான சூழ்நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களை மிருகத்தனமாக நடத்துவது மோசமாக உள்ளது. சண்டே டெலிகிராப்பில், குடிவரவு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக், ' 'ஹோட்டல் பிரிட்டனை' முடிவுக்கு கொண்டுவருவதற்கான பத்து-புள்ளி இடம்பெயர்வு திட்டத்தை' கோடிட்டுக் காட்டினார். புகலிடக் கோரிக்கையாளர்களை ஹோட்டல்களில் தங்க வைப்பதற்கான 'ஏற்றுக்கொள்ள முடியாத' செலவு ஒரு நாளைக்கு 5.6 மில்லியன் பவுண்டுகள் என்று அவர் கண்டித்தார். இது பிரிட்டனை 'தேர்ந்தெடுக்கும் இடமாக' பார்த்த 'அடைக்கல-கோரிக்கை' பொருளாதார புலம்பெயர்ந்தோரை ஊக்குவித்தது. ஜென்ரிக் அறிவித்தார், ''ஹோட்டல் பிரிட்டன்' முடிவுக்கு வர வேண்டும், மேலும் கூடுதல் இழுக்கும் காரணியை உருவாக்காத எளிய, செயல்பாட்டு தங்குமிடங்களுடன் மாற்றப்பட வேண்டும்.'

'உக்ரேனிய அகதிகளுக்கு ஸ்காட்டிஷ் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுவது போல, பயன்படுத்தப்படாத மாணவர் விடுதிகள், காலாவதியான அல்லது செயல்படாத விடுமுறை பூங்காக்கள் மற்றும் குறைந்தவிலை பயணக் கப்பல்கள் உள்ளிட்ட பெரிய மற்றும் குறைந்த ஆடம்பரமான தளங்களை அமைச்சர்கள் தேடுகிறார்கள்” என செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கம், ஆற்றொணா நிலையில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு எதிரான சூனிய வேட்டைத் தாக்குதலை எதிர்க்க வேண்டும். புலம்பெயர்ந்தோரின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல், அனைத்து தொழிலாளர்களுக்கும் எதிரான தாக்குதலுக்கு எப்போதும் முன்னோடியாக இருப்பதை வரலாறு காட்டுகிறது. இதனால்தான் எதேச்சாதிகார தேசியம் மற்றும் எல்லைகள் சட்டம் (Nationality and Borders Act ) நிறைவேற்றப்பட்டுள்ளது, இது விரைவில் பொது ஒழுங்கு குறித்த மசோதாவாக நிறைவேற்றப்பட உள்ளது.

Loading