பிரிட்டன் சான்சிலர் ஹன்ட் வர்க்கப் போர் வரவு-செலவு திட்டத்தை வெளியிடுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரிட்டனின் பழமைவாத அரசாங்கத்தின் வியாழக்கிழமை வரவு-செலவுத் திட்டக் கணக்கு உழைக்கும் மக்கள் மீதான ஒரு போர் பிரகடனமாக இருந்தது, சான்சிலர் ஜெர்மி ஹன்ட் 55 பில்லியன் பவுண்டு செலவினக் குறைப்புக்கள் மற்றும் வரி உயர்வுகளின் தொகுப்பை வெளியிட்டார்.

நிதிய சந்தைகளது கட்டளையின் கீழ் ஹன்ட் கடந்த மாதம் அரசாங்கத்திற்கு கொண்டு வரப்பட்டார், குறுகிய காலமே உயிர் வாழ்ந்த லிஸ் ட்ரஸ் அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யாமல் வழங்கிய வரிச் சலுகைகளுக்கு விடையிறுப்பாக சமீபத்தில் நிதிய சந்தைகள் பவுண்டு மதிப்பை வீழ்ச்சிக்கு உட்படுத்தி இருந்தன.

கருவூலத்தின் சான்சிலர் ஜெர்மி ஹன்ட் தனது இலையுதிர்கால அறிக்கையை நாடாளுமன்றத்தில் வழங்குவதற்கான வழியில் 11 டவுனிங் தெருவை விட்டு வெளியேறுகிறார் [Photo by HM Treasury/Flickr / CC BY-NC-ND 2.0]

ஹன்ட் அந்த வரவு-செலவுத் திட்டத்தை கிழித்தெறிந்து, 'கண்களைக் கலங்கடிக்கும்' கடுமையான வெட்டுக்களுக்கு உறுதியளித்து இருந்தார். அவ்வாறே, அவர் வார்த்தைகளுக்கு அவர் உண்மை உள்ளவராக இருந்தார். நிஜமான வரையறைகளில் முடக்கும் விதமான செலவின வெட்டுக்களின் அடிப்படையில், அவருடைய இந்த வரவு-செலவுத் திட்டக் கணக்கு, வரவிருக்கும் பல ஆண்டுகளுக்கு, கடுமையான சிக்கன நடவடிக்கைகளில் ஒருமுனைப்பட்டு இருந்தது. நிதித்துறையின் சொந்த பகுப்பாய்வின்படி, ஹன்டின் இந்த வரவு-செலவுத் திட்டம் சுமார் 55 சதவீத குடும்பங்களைப் படுமோசமாக பாதிக்கிறது.

சான்சிலர் மணிக்கணக்கில் அவருடைய நீண்ட உரையை வழங்கிய நிலையில், வரவு-செலவு திட்டக் கணக்கு அலுவலகம் (OBR) குறிப்பிடுகையில், வாழ்வாதாரச் செலவுக்கான உதவி ஒரு காரணியாக வைக்கப்பட்டிருந்தது என்றாலும் கூட, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குடும்பங்கள் அவற்றின் வரிப்பிடித்தம் போக மீத வருமானத்தில் மலைப்பூட்டும் அளவுக்கு 7.1 சதவீதத்தை இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டது. 2022-23 இல் வருமானத்தில் 4.3 சதவீத வீழ்ச்சி என்பது, 1956 இல் புள்ளிவிபரங்கள் பதிவு செய்யத் தொடங்கியதற்குப் பிந்தைய மிகப் பெரிய எண்ணிக்கை என்பதோடு, 2023-24 இன் இரண்டாவது பெரிய சரிவால் குடும்பங்கள் 2.8 சதவீதத்தை இழக்க நேரிடும். கடந்த எட்டு ஆண்டுகளில் வாழ்க்கைத் தரத்தில் என்ன வளர்ச்சி இருந்ததோ அது ஒரேயடியாக அழிக்கப்பட்டு வருகிறது. வேலையின்மை 500,000 ஆக உயரும் — அது 1.2 மில்லியனில் இருந்து 1.7 மில்லியனாக அதிகரித்து வருகிறது.

அற்ப ஊதிய தீர்வுகளும் மற்றும் நலன்புரிப் பலன்களுக்கான தொகைகளும் பணவீக்கத்தை விட வெகு குறைவாகத் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வருமானத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் மலைப்பூட்டும் அளவுக்கான வீழ்ச்சியோடு இதுவும் சேர்ந்து கொள்கிறது. இந்த அக்டோபரில், பணவீக்கம் மீதான CPI அளவீட்டின் கீழ்நிலை வரம்பும் கூட 41 ஆண்டுகளில் இல்லாத உயர்வை எட்டியது — அது முந்தைய மாதத்தின் 10.1 சதவீதத்தில் இருந்து 11.1 சதவீதமாக அதிகரித்தது. RPI பணவீக்கம் 14.2 சதவீதமாக உயர்ந்தது. OBR இன் தெளிவில்லாத மதிப்பீடு, இந்தாண்டு பணவீக்கம் உச்சத்தை எட்டும் என்றும் அடுத்தாண்டு 7.4 சதவீதமாக குறையும் என்றும் ஒப்பீட்டளவில் அதன் பூசிமொழுகிய முன்கணிப்பின் அடிப்படையில் இருந்தது.

வரவு-செலவுத் திட்டக் கணக்கை அறிமுகப்படுத்தி ஹன்ட் அறிவிக்கையில், 'உலகின் மூன்றில் ஒரு பங்கு பொருளாதாரம் இந்தாண்டு அல்லது அடுத்தாண்டு மந்தநிலையில் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது', ஆனால் 'மற்ற நாடுகளைப் போலவே பிரிட்டனும் இப்போது [ஏற்கனவே] மந்தநிலையில் உள்ளது என்று [OBR] தீர்மானிக்கிறது,” என்றார். அவர் குறிப்பிட்டார், “இந்த ஆண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.1 சதவீதம் அல்லது 177 பில்லியன் பவுண்டுகள் நாம் கடன் வாங்குவோம் என்று கணிக்கப்படுகிறது; அடுத்த ஆண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதம் அல்லது 140 பில்லியனாக கணிக்கப்படுகிறது. 2025-26 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 97.6% என்ற உச்சத்தில் இருந்து, ஆதாரக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தில் குறையத் தொடங்கும்,” என்றார்.

பின்னர் ஹன்ட் இரண்டு புதிய நிதித்துறை விதிமுறைகளை கோடிட்டுக் காட்டினார், 'நடப்பு ஐந்தாண்டு காலத்தின் ஐந்தாம் ஆண்டு வாக்கில் ஆதாரக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தில் குறைந்தே ஆக வேண்டும். இரண்டாவதாக, அதே காலகட்டத்தில், பெறப்படும் பொதுத்துறை கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.” அவர் எச்சரித்தார், 'கட்டாய விடுப்புத் திட்டம் (furlough scheme), தடுப்பூசி கொண்டு வருவது மற்றும் தேசிய சுகாதார சேவையின் (NHS) விடையிறுப்பு ஆகியவை நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளன — ஆனால் அவை அனைத்துக்கும் விலை கொடுத்தாக வேண்டும்.'

ஊடங்கள் இந்த வரவு-செலவுத் திட்டக் கணக்கை, முன்னாள் டோரி சான்சிலர் ஜோர்ஜ் ஓஸ்போர்னின் 2010-16 இன் கடுமையான சிக்கன செயல்திட்டத்தின் புதுப்பித்தலாகக் காட்டின. ஆனால் இது அதை விட மோசமானது. ஓஸ்போர்ன் சான்சிலராக இருந்த ஐந்து ஆண்டுகள் உட்பட, 2019 வரையிலான எட்டு ஆண்டுகளில், அரசாங்கம் மொத்தம் சுமார் 30 பில்லியன் பவுண்டுகளைச் செலவினக் குறைப்புக்களாகச் செய்தது. நேற்று ஹன்ட் ஒரே வரவு-செலவு திட்டக்கணக்கில் 35 பில்லியன் பவுண்டுகள் செலவுக் குறைப்புகளை அறிவித்திருந்தார்.

பணவீக்கம் 20 சதவீதத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற நிலையில், அடுத்த நாடாளுமன்றத்தில் பொதுச் செலவினங்கள் நிஜமான வரையறைகளில் வெறும் 1 சதவீதம் மட்டுமே உயர்த்தப்படும், இதன் மூலம் 21 பில்லியன் பவுண்டுகள் சேமிக்கப்படும், மேலும் மூலதனச் செலவுகள் ரொக்கப் பண வரையறைகளில் முடக்கப்படும் (14 பில்லியன் பவுண்டு சேமிப்பு கிடைக்கும்). 2024 இல் பொதுத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், சந்தைகள் கோரியவாறு, ஹன்ட் வரவிருக்கும் ஆண்டுகளுக்கான முக்கிய செலவின வெட்டுக்களைத் திட்டமிட்டுள்ளார். அடுத்தடுத்து ஒவ்வொரு ஆண்டும் வெட்டுக்களில் பெரும் அதிகரிப்புகள் உள்ளன.

தற்போதைய செலவுத் திட்டங்கள் ஏப்ரல் 2025 வரை இருக்கும் என்றாலும், 2025/26 இல் 11.6 பில்லியன் டாலர் வெட்டுக்களும், 2026/27 இல் 23.2 பில்லியன் பவுண்டு வெட்டுக்களும், முந்தைய திட்டங்களுடன் ஒப்பிட்டால் 2027/28 இல் 36.3 பில்லியன் பவுண்டு வெட்டுக்களும் தொடர்கின்றன.

125,000 பவுண்டுக்கு மேல் சம்பாதிப்பவர்களில் சுமார் 250,000 பேர் முதல் முறையாக உயர்மட்ட வருமான வரி (45 சதவீதம்) பிரிவில் கொண்டு வரப்படுவார்கள், அதேவேளையில் Mail பத்திரிகை குறிப்பிட்டவாறு, “தனிநபர் உதவித்தொகை, அடிப்படை வரம்புகள் மற்றும் உச்ச வரம்புகள் மீதான முடக்கம் ஆகியவை 2028 வரை நீடிக்கப்படுவதால், தொழிலாளர்கள் அனைவரும் அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும், இது 'திருட்டுத்தனமாக' இந்த முறைக்குள் மக்களை இன்னும் ஆழமாக இழுத்துச் செல்கிறது. இதன் விளைவாக, 3.2 மில்லியன் பேர் முதல் முறையாக வரி செலுத்தப் பொறுப்பாவார்கள், இன்னும் 2.6 மில்லியன் பேர் ஐந்தாண்டுகளில் அதிக விகிதத்தில் [வருமானத்தில் 50,271 பவுண்டுக்கும் அதிகமாக] வரி செலுத்துவார்கள்.”

தேசிய சுகாதார சேவை (NHS) மற்றும் கல்வித்துறை வரவு-செலவுத் திட்டக் கணக்கு ஒதுக்கீடு நிஜமான வரையறைகளில் ஒன்றுமில்லை என்றளவுக்கு உள்ளன. தேசிய சுகாதார சேவைக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, கூடுதலாக 6.6 பில்லியன் பவுண்டு அற்பதொகையை ஒதுக்கிய ஹன்ட், அது 'சிங்கப்பூர் செயல்திறன்' முறைகளில் செயல்பட வேண்டியிருக்கும் என்று கூறினார்.

14 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தனிநபர் சுகாதாரச் செலவினங்களுக்கு நிகராக இருக்க, பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைக்கான செலவினங்கள் கடந்த தசாப்தத்தில் ஆண்டுக்கு சராசரியாக 40 பில்லியன் பவுண்டு உயர்த்தி இருக்க வேண்டும் என்று ஹெல்த் ஃபவுண்டேஷன் அமைப்பு மதிப்பிடுகிறது. ஆதாரவளங்களுக்காகத் தவித்த தேசிய சுகாதார சேவை இனி அனைவருக்கும் இலவச மருத்துவக் கவனிப்பு வழங்க முடியாத நிலையில் உள்ளது, இப்போது உச்சபட்சமாக 7.1 மில்லியன் பேர் சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள், கிட்டத்தட்ட 50,000 செவிலியர் பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளன.

ஏற்கனவே உயிர் பிழைப்புக்கான நிதி நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கு இன்னும் குறைவாகவே கிடைக்கும், அது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் வெறும் 2.3 பில்லியன் பவுண்டுகள் மட்டுமே கூடுதலாக பெறும்.

கடந்தாண்டு பிரிட்டனில் வீட்டு எரிசக்திக்கான செலவுகள் இரட்டிப்பாகியுள்ளன, அடுத்த ஏப்ரலில் பொதுவாக ஒரு குடும்பத்திற்கு இன்னும் கூடுதலாக 500 பவுண்டு முதல் 3,000 பவுண்டு வரை மீண்டும் அதிகரிக்கும். இந்தச் செலவுகளைச் சமாளிக்க மிகவும் நலிந்த பிரிவினர்களுக்கு மட்டுமே எந்தவொரு மானியமும் கிடைக்கும்.

தொழிலாளர்களுக்கு மற்றொரு அழிவார்ந்த அடியாக, உள்ளாட்சி கவுன்சில்கள் அதிகபட்சமாக 5 சதவீதம் கவுன்சில் வரி விதிக்க அனுமதிப்பதென்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 95 சதவீத கவுன்சில்கள் —இவற்றில் பெரும்பான்மை தொழிற் கட்சியால் நிர்வகிக்கப்படுபவை— கட்டணங்களை அதிகபட்சமாக உயர்த்தும். நாட்டிங்ஹாம் போன்ற சில பகுதிகளில், சில குடும்பங்களுக்கு விதிக்கப்படும் வருடாந்தர கவுன்சில் வரி 2,500 பவுண்டை நெருங்கும். இது, உள்ளாட்சி நிர்வாகங்களின் ஒட்டுமொத்த பற்றாக்குறையாக மதிப்பிடப்படும் 2.4 பில்லியன் பவுண்டைச் சிறிதும் குறைக்கப் போவதில்லை, அது அடுத்து 3.4 பில்லியன் பவுண்டாக அதிகரிக்க உள்ளது.

சமூக வீட்டுவசதித் துறையில் நான்கு மில்லியன் கணக்கானவர்களின் வாடகைகள் அதிகரிக்க உள்ளன, வாடகைக்குக் குடியிருப்பவர்கள் 7 சதவீத அதிகரிப்பை முகங்கொடுப்பார்கள் என்று ஹன்ட் அறிவித்தார். ஆனால், தனிப்பட்ட வீட்டு உரிமையாளரிடம் வாடகைக்குச் செல்லும் 4.4 மில்லியன் பேர் (19 சதவீத குடும்பங்கள்) —இங்கே வாடகை மீது எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லை என்கின்ற நிலையில்—கைமாற்றிவிடப்பட்ட அடமானக் கடன் விகித அதிகரிப்புகள் மற்றும் சொத்துக்களின் பற்றாக்குறை காரணமாக, இன்னும் அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும். ஐந்து மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் இப்போதிருந்து 2024 இறுதிக்குள் அவர்களின் வருடாந்தர அடமானக் கடன் தொகைகளில் 5,100 பவுண்டு அதிகரிப்பைக் காண்பார்கள்.

ஏப்ரல் 2023 இல் இருந்து குறைந்தபட்ச கூலி ஒரு மணி நேரத்திற்கு வெறும் 92 பவுண்டுகள் அதிகரித்து, ஒரு மணி நேரத்திற்கு 9.50 பவுண்டில் இருந்து 10.42 சதம் வரை மட்டுமே அதிகரிப்பதால், 23 வயதுக்கு மேற்பட்ட மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் நிஜமான வரையறைகளில் மற்றொரு சம்பள வெட்டை அனுபவிக்கிறார்கள். இந்த 9.7 சதவீத உயர்வு ஏற்கனவே CPI பணவீக்கத்திற்குக் குறைவாக இருப்பதுடன், RPI பணவீக்கத்தை விட சுமார் நான்கு சதவீதம் குறைவாக உள்ளது. பெரும்பான்மை தொழிலாளர்கள் இந்தக் கூலியில் தான் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட உள்ளார்கள், அதேவேளையில் ஹன்ட் அறிவிக்கையில் அனைவருக்குமான கடன் உதவித்தொகை திட்டத்தில் 600,000 க்கும் அதிகமானவர்கள் அவர்களின் வேலை நேரங்களையோ அல்லது வருமானங்களையோ அதிகரிக்க ஒரு 'பணியிட பயிற்சியாளரை' (work coach) சந்திக்கக் கடமைப்பட்டு இருப்பார்கள் என்று தெரிவித்தார்.

மில்லியன் கணக்கான பொதுத்துறை பணியாளர்கள் 2023/24 இல் திட்டமிட்ட அரசு சம்பள பட்டுவாடாவில் வெறும் 2 சதவீதத்தை மட்டுமே முகங்கொடுப்பார்கள். தொழிற்சங்க காங்கிரஸ் தகவல்படி, இந்த அடிப்படையில் 'மருத்துவமனை சுமைதாங்கிகளின் நிஜமான சம்பளம் 1,000 பவுண்டு அளவுக்குக் குறையும்; மகப்பேறு உதவியாளர்களின் நிஜமான சம்பளம் 1,200 பவுண்டு அளவுக்குக் குறையும்; செவிலியர்களின் நிஜமான சம்பளம் 1,500 பவுண்டுகள் குறையும்; துணை மருத்துவ உதவியாளர்கள் மற்றும் தாதிமார்களின் நிஜமான சம்பளம் அண்மித்து 1,900 அளவுக்குக் குறையும்.”

நிஜமான வரையறைகளில் மற்றொரு வெட்டைத் திணித்ததன் மூலம், அரசு ஓய்வூதியங்கள், சலுகைகள் மற்றும் வரிச் சலுகைகளை (செப்டம்பரின் CPI பணவீக்க மட்டத்திற்கு) 10.1 சதவீதமாக அவர் உயர்த்தி இருந்ததை டோரிக்களின் 'கருணையாக' ஹன்ட் முழங்கினார், இது அடுத்த ஏப்ரலில் இருந்து தான் நடைமுறைக்கு வர உள்ளது.

பரவலாக வெறுக்கப்படும் இந்த அரசாங்கத்திற்குத் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் முட்டுக் கொடுக்காமல் இருந்தால், இந்த வாட்டிவதைக்கும் கொள்கையை முன்நகர்த்தி இருக்கவே முடியாது.

நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களை உள்ளடக்கிய பாரிய வேலைநிறுத்தங்களை நசுக்கவும் மற்றும் அவை ஒன்றுதிரளாமல் தடுக்கவும் தொழிற்சங்கங்கள் பல மாதங்களாக வெளிப்படையாக செயல்பட்டுள்ளன. சமீபத்திய வாரங்களில், தேசிய சுகாதார சேவை உட்பட பொதுத்துறையில் பல மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்குகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் தொழிற்சங்க அதிகாரத்துவமோ பொதுத் துறையில் ஒரேயொரு வேலைநிறுத்தத்தைக் கூட இதுவரை நடத்தவில்லை, அதேவேளையில் அவை பணவீக்கத்திற்குக் குறைவான மற்றொரு விற்றுத்தள்ளலைத் தொடர்வதற்காக, இந்தக் கட்டளைகளை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புவதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றன.

Loading