துருக்கியில் தீ விபத்தில் ஒன்பது அகதிகள், பெரும்பாலும் குழந்தைகள் இறந்துள்ளனர்: இது ஒரு சமூகக் குற்றம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரம் துருக்கியின் பர்சா நகரில் தீ விபத்தில் எட்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் இறந்துவிட்டனர், ஏகாதிபத்தியப் போர்களின் பேரழிவில் இருந்து உயிர் தப்பி வரும் அகதிகள் எதிர்கொள்ளும் கண்டனத்துக்குரிய பயங்கரமான நிலைமைகளின் விளைவாக இந்த விபத்துகள் நிகழ்கின்றன.

துருக்கியின் பர்சா நகரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் [Photo: FİSA Çocuk Hakları Merkezi]

சிரியாவின் அலெப்போவில் நேட்டோ ஆதரவு ஆட்சி மாற்றப் போரில் இருந்து தப்பித்து, துருக்கியில் தஞ்சம் புகுந்த அமினா எல்டாஹா எல்முஸ், ஹூசைன் அல்ஜாசெம் மற்றும் அவர்களது குழந்தைகள் பர்சாவில் ‘தற்காலிக பாதுகாப்பில்’ வாழ்ந்து வந்தனர். நவம்பர் 9 ஆம் தேதி இரவு இவர்கள் வசித்து வந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது, இதில் தாய் அமினா எல்டாஹா எல்முஸ் மற்றும் தம்பதியரின் ஒரு வயது யாசிர், மூன்று வயது முஹம்மது, நான்கு வயது அகமது, ஒன்பது வயது மேரிம் மற்றும் 10 வயது அலி அல்ஜாசெம் ஆகியோர் பலியாகிவிட்டனர். இந்த தம்பதியின் மருமகன்களான 10 வயது அகமது மற்றும் 11 வயது அலி எல் செசிம் ஆகியோரும் தீயில் இறந்துவிட்டனர்.

தீயணைப்பு படையின் அறிக்கையின்படி, புகைபோக்கி தடுக்கப்பட்டதால் அடுப்பிலிருந்து வெளியேறிய புகை இந்த ஒன்பது பேர் தூங்கிக் கொண்டிருந்த அறையை நிரப்பியது. அப்போது அவர்கள் கார்பன் மோனாக்சைடு விஷ வாயுவை சுவாசித்தனர். அடுப்பு புகைபோக்கியில் இருந்து விழுந்த தீப்பொறி மரச்சாமான்களை பற்றவைத்ததால் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அறை முழுவதும் தீ ஜூவாலை மளமளவென பரவியதால், விஷ வாயுவை சுவாசித்து மயங்கி கிடந்த ஒன்பது பேரும் தப்பிக்க முடியாமல் தீயில் கருகிப் போயினர்.

குழந்தைகளின் உரிமைகளுக்கான FISA மையத்தின் அறிக்கையின்படி, “2022 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் குறைந்தது 17 குழந்தைகள் தங்கள் வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர். … குறைந்த வருமானம் கொண்ட மக்கள், புலம்பெயர்ந்தோர் அல்லது ரோமாக்கள் வசிக்கும் சுற்றுப்புறங்களில் தான் பெரும்பாலும் தீ அல்லது விஷ வாயு விபத்துகள் ஏற்படுவதை நாங்கள் காண்கிறோம்; அங்கு சேவைகளை அணுகுவதில் அத்துமீறல்கள் நடக்கின்றன. அதற்கான காரணங்களும் தெளிவாக உள்ளன: அவை வறுமை, சமத்துவமின்மை மற்றும் கட்டுப்பாடு இல்லாமை ஆகியவையே.”

துருக்கியில், அகதிகளும் புலம்பெயர்ந்தோரும் ஏற்கனவே மிகக் குறைந்த குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவான ஊதியத்திற்கான சட்ட உரிமைகள் இல்லாமல் கடுமையான நிலைமைகளின் கீழ் வேலை செய்கிறார்கள். அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினராக உள்ளனர், மற்றும் அவர்கள் நெரிசலான வீடுகளிலும் அடிப்படைத் தேவைகளைக் கூட பெற முடியாத இடங்களிலும் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.

மேலும், வெற்றிக் கட்சி (Victory Party) போன்ற தீவிர வலதுசாரி அரசியல் சக்திகள் தேசிய பேரினவாதத்தை ஊக்குவிக்க முயல்கின்றனர், மற்றும் அகதிகள் துருக்கிய அரசிடமிருந்து பண உதவி பெற்று நிம்மதியாக வாழ்கிறார்கள் என்ற பொய்யை மீண்டும் மீண்டும் கூறி தொழிலாளர்களை பிளவுபடுத்த முயல்கின்றனர். உண்மையில், துருக்கியில் உள்ள சிரியர்கள் (உத்தியோகபூர்வமாக சுமார் 3.7 மில்லியன் மக்கள்) சட்டப்பூர்வ புகலிடக் கோரிக்கையாளர்களாகக் கூட இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. புரூஸ்ஸெல்ஸ் மற்றும் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் அரசாங்கத்திற்கு இடையிலான மோசமான ஒப்பந்தத்தின்படி, சில நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்கள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து மிக சொற்பமான பண உதவியைப் பெறுகிறார்கள்.

உத்தியோகபூர்வ வருடாந்திர பணவீக்க விகிதம் 85 சதவீதத்தை எட்டியுள்ள துருக்கியில், 90 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அங்கு நிலவும் பாரிய சமூக அமைதியின்மை மற்றும் தொழிலாள வர்க்கத்தினரிடையே வளர்ந்து வரும் போர்க்குணத்துடன் சேர்ந்து இந்த நெருக்கடியும் உள்ளது. ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும் இந்த வளர்ந்து வரும் சமூக எதிர்ப்பை ஏதோ ஒரு வகையில் திசை திருப்புவதில் ஒன்றுபட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் முதல் ஈராக் மற்றும் சிரியா வரை நிகழ்த்தப்பட்ட அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் ஆட்சி மாற்றப் போர்களின் விளைவாக மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர், இதில் துருக்கிய ஆளும் உயரடுக்கு உடந்தையாக இருந்தது. இப்போது அகதிகள் முதலாளித்துவத்தின் சமூகப் பேரழிவிற்கு பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த குழந்தைகளில் இருவர் ஜவுளித் தொழிலாளர்கள் என்று DISK தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகி செயித் அஸ்லான் தெரிவித்தார். அஸ்லான் தனது அறிக்கையில், “பாதுகாப்பில் இருப்பதாகக் கூறப்படும் புலம்பெயர்ந்தோர், மிகக் கடுமையான முறையில் சுரண்டப்பட்டு, பணியிடங்களில் தங்கள் உயிரையே இழக்கின்றனர். இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பு? சந்தேகத்திற்கு இடமின்றி, சிரியாவில் நடந்து வரும் போரை ஆரம்பித்தவர்களும், மற்றும் இந்தப் போர் தொடர்வதற்கும் இந்தப் பிராந்தியம் இரத்தக்களரியாக மாறுவதற்கும் காரணமான ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களின் ஒத்துழைப்பாளர்களும் தான் இதற்கு பொறுப்பாளிகளாவர்” என்று கூறியுள்ளார்.

பிரதான முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் (CHP) பர்சா பாராளுமன்ற உறுப்பினர் ஆர்ஹன் சரிபால் (Orhan Saribal) கூட, “துருக்கியில் வறுமை ஒரு அடிப்படை பிரச்சினையாகவுள்ளது. ஆனால் சிரியர்கள் நடந்து கொண்டிருப்பது முற்றிலும் வேறுபட்டது. இது சிரியாவில் நடந்த போர் மற்றும் குடியேற்றத்துடன் இணைக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் அவர், “இந்த மக்கள் துருக்கியில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் மலிவு உழைப்பு தொழிலாளர்களாக வேலை வாங்கப்படுகிறார்கள். அவர்களின் உயிருக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. பணம் படைத்தவர்கள் மாளிகைகளில் வசிக்கும் அதேவேளை, இந்த ஏழைகள் இத்தகைய பாதுகாப்பற்ற இடங்களில் விரக்தியுடன் வாழ்கின்றனர். இறுதியில், இறந்தவர்கள் ஏற்கனவே இறந்தவர்களுடன் கைவிடப்படுகிறார்கள். வறுமை கொல்கிறது அவ்வளவுதான்” என்றும் கூறினார்.

இந்த அறிக்கைகள் பாசாங்குத்தனமானவை. உண்மையில், CHP, ஜனாதிபதி எர்டோகனின் நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சி (AKP) அரசாங்கத்தின் அகதிகள் கொள்கையை வலதுபுறத்தில் இருந்து தாக்குகிறது, மற்றும் ஒரு பேரினவாத சிரிய-விரோதக் கொள்கையை பின்பற்றுகிறது. அடுத்த ஆண்டு தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் அகதிகளை திருப்பி அனுப்புவதாக CHP உறுதியளிக்கிறது.

DISK ஐ பொறுத்தவரை, இது CHP க்கு ஆதரவான தொழிற்சங்கக் கூட்டமைப்பாகும், மற்றும் மற்ற அனைத்து பெருநிறுவன தொழிற்சங்கங்களைப் போலவே, தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைக்க முயற்சிப்பதைத் தவிர, தொழிலாளர்களின் நடவடிக்கைகளை இது குறைமதிப்பிற்கு உட்படுத்துவதுடன், விலைபேசப்பட்ட ஒப்பந்தங்களைத் திணிக்கிறது. இதுவரை, அகதிகள் மற்றும் குழுந்தைகள் இடைவிடாமல் சுரண்டப்படுவதற்கு எதிராக ஒரு சில மேம்போக்கான அறிக்கைகளை வெளியிட்டதைத் தவிர DISK எதையும் செய்யவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான அதன் மோசமான ஒப்பந்தத்தின்படி, அகதிகள் ஐரோப்பாவிற்குள் நுழைவதைத் தடுக்கும் பணியை எர்டோகன் அரசாங்கம் செய்கிறது. ஏதென்ஸ் உடனான அங்காராவின் பதட்டங்கள் அதிகரித்து வருவதானது, ஏஜியன் கடலைக் கடந்து கிரீஸூக்குச் செல்ல தீவிரமாக முயற்சிக்கும் அகதிகளின் குற்றவியல் கொள்கையை மட்டுமே தீவிரப்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய கோட்டை கொள்கை மத்தியதரைக் கடலை அகதிகளின் கல்லறையாக மாற்றியுள்ளது. உலகசோசலிசவலைத்தளம் சமீபத்தில் அறிக்கை செய்தபடி, “2021 ஆம் ஆண்டில் கடல் வழியாக ஐரோப்பாவை சென்றடைய முயன்றபோது 3,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இறந்துவிட்டனர், அல்லது காணாமல் போயுள்ளனர், அல்லது இறந்ததாகக் கருதப்படுகின்றனர்.” மேலும், “இதுவரை, ‘2022 இல், கிரீஸ் நோக்கிச் செல்லும் வழியில் 1,386 படகுகள் நிறுத்தப்பட்டன’, மற்றும் அதிர்ச்சியூட்டும் வகையில் ‘44,041 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.’”

எர்டோகனின் அரசாங்கம் அகதிகளை திருப்பி அனுப்பும் கொள்கையை அறிவித்து, துருக்கிய இராணுவம் மற்றும் அதன் இஸ்லாமிய ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சிரிய மாகாணமான இட்லிப்பில் உள்ள கட்டிடங்களை காலி செய்ய தொடங்கியுள்ளது. அகதிகளை திருப்பி அனுப்பும் கொள்கை CHP மற்றும் AKP, அல்லது தீவிர வலதுசாரி நடுத்தர வர்க்க வெற்றிக் கட்சி போன்ற முக்கிய முதலாளித்துவக் கட்சிகளால் மட்டும் பரிந்துரைக்கப்படவில்லை. CHP க்குப் பின்னால் அணிவகுத்து நிற்கும் போலி-இடது சக்திகளும் இந்தக் கொள்கையை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரிக்கின்றன.

உதாரணமாக, துருக்கியின் தொழிலாளர் கட்சி (TIP), “ஒரு வெளியுறவுக் கொள்கை மற்றும் இராஜதந்திர புரிந்துணர்வானது, நமது நாட்டில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் தாமே முன்வந்து அவர்கள் நாட்டிற்கு திரும்புவதை சாத்தியமாக்கும் மற்றும் துருக்கியில் வாழ்வது மட்டும் தான் ஒரே வழி என்பதையும் மாற்றும்” என்று கூறியுள்ளார். குர்திஷ் தேசியவாத மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையிலான ‘தொழிலாளர் மற்றும் சுதந்திரக் கூட்டணியின்’ ஒரு அங்கமான TIP, ஜனாதிபதி தேர்தலில் எர்டோகனுக்கு எதிராக CHP தலைமையிலான வலதுசாரி தேசிய கூட்டணியின் வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிலைமைகளின் கீழ், புகலிடக் கோரிக்கையாளர்கள் வலதுசாரி தீவிரவாதிகளின் சரீர ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள். அத்தகைய சமீபத்திய தாக்குதல் ஹடேயின் எர்சின் மாவட்டத்தில் நடந்துள்ளது. நவம்பர் 5 ஆம் தேதி, 14 வயது ஃபிடன் துன்ச் காணாமல் போனார், ஐந்து நாட்களுக்குப் பின்னர் அவரது உடல் ஒரு மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நபர் ஒரு சிரியர் என்று கூறப்படுவதால், மாவட்டத்தில் தீவிர வலதுசாரிகளால் தூண்டப்பட்ட ஒரு கும்பல் சிரியர்கள் வசிக்கும் வீடுகளைத் தாக்குவதற்கு ஏற்பாடு செய்தது, பல அகதிகளை அவர்களின் வீடுகளை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தியது.

அகதிகள் மீதான இந்த தாக்குதல் முதல் முறையானது அல்ல. ஆகஸ்ட் 2021 இல், அங்காராவின் அல்டின்டாக் மாவட்டத்தில் ஒரு தீவிர வலதுசாரி கும்பல் சிரிய-எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு வீதிகளில் இறங்கி சிரியர்கள் வசிக்கும் சுற்றுப்புறத்தை திடீர் சோதனையிட்டது. அதே ஆண்டு நவம்பரில், இஸ்மிரில் மூன்று சிரிய அகதிகள் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு மே 1 அன்று, அதானாவின் டோகன்கென்ட் பகுதியில், அகதிகளுக்கும் துருக்கிய குடிமக்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் பின்னர், சிரியர்களின் வீடுகள் தாக்கப்பட்டன.

இஸ்தான்புல்லில் ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதத் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் தீவிர வலதுசாரி சக்திகளால் அகதிகளுக்கு எதிரான பிரச்சாரம் தொடங்கப்பட்டது, பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு சிரியர் என்று அது அறிவித்தது.

அகதிகளும் தொழிலாள வர்க்கமும் ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ளும் நிலைமையானது, சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை ஏகாதிபத்தியப் போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்க முடியாது என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்நிலையில், அனைத்து வகையான பேரினவாதம் மற்றும் தேசியவாதத்தையும் நிராகரிக்கும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச சோசலிச ஐக்கியத்திற்கான போராட்டம் மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழியாகும்.

Loading